கால நதிக்கரையில்……(நாவல்)-12

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

வே.சபாநாயகம்


முதன்முதலாக கோவில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு அப்பாவிடமிருந்து கோவில் தஸ்தாவேஜுகளைப் பெற்றுக் கொண்டவர் மிகவும் இளைய வயதினர். வயது 25 தான். ஆள் நல்ல நிறத்தில் பளிச்சென்று களையாக இருந்தார். நெளிநெளியான மேல்தூக்கி வாரிய எண்ணெய் மினுங்கும் கரிய கிராப்; சிரித்த முகம். கையில் தோல் பை; வெள்ளை வெளேரென்ற முழுக்கைச் சட்டை; பூமியில் புரளும் வாயில் வேட்டி; கருப்பு பாலிஷ் பளபளப்பில் கட் ஷ¥; வெற்றிலை மெல்லும் சிவந்த வாய் – என்று பார்த்த யாரையும் வசீகரிக்கும் தோற்றம். இளைஞர்கள் எல்லோரும் உடனே அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளப் பிரியப்பட்டார்கள். அப்பாவுக்கு ஏனோ அவரிடம் எடுத்த எடுப்பிலேயே ஒரு திருப்தி ஏற்படவில்லை. ‘பரம்பரையாய் பழுத்த அனுபவமிக்க கவுரவமான உள்ளூர் பெரியவர்கள் நிர்வகித்த பொறுப்புக்கு இந்த சின்னப் பையனா?’ என்று ஒரு சுணக்கம் அப்பாவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே வந்த இளைஞர் அப்பாவிடம் பவ்யம் காட்டினாலும் அப்பா உற்சாகமாக அவரை எதிர் கொள்ளவில்லை.

பொறுப்பேற்றுக்கொண்ட உடனேயே அவர் தன் பணியைத் துவங்கி விட்டார். இதுவரை தர்மகர்த்தாக்களின் வீடே கோவில் அலுவலகமாயிருந்தது. இனி அவருக்கு ஒரு தனி அலுவலகம் வேண்டும். எனவே ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தினார். அதற்கு உடனே அலுவகத்துக்கு ஏற்றபடி சில மாற்றங்களைச் செய்து சுண்ணாம் படித்து, கதவு ஜன்னல்களுக்கு வண்ணம் பூச ஏற்பாடு செய்தார். மூன்று கோவில் களுக்கும் இதுவே அலுவலகம். ‘நிர்வாக அதிகாரி அலுவலகம்’ என்ற ஒரு பெரிய
போர்டு செய்து தொங்கவிடப்பட்டது. வெளியூர் கோவிலுக்குப் போய் வரவும் அலுவலக வேலையாய் அருகில் உள்ள நகரத்துக்குப் போய் வரவும் – பஸ் வசதியெல் லாம் அப்போது இல்லாததால் – டயர் போட்ட ஒரு புது வில் வண்டிக்கும்(பெட்டிவண்டி) ஒருஜோடி இளம் காளைகளுக்கும் ரூ.1000ல் உடனே வாங்க ஆர்டர் கொடுத்தார். உடன் வண்டியில் வரும் மெய்காவலுக்கு தாசில்தாருடன் வரும் டவாலி சேவகன் போல சீருடையும் டவாலி பட்டையும்கூட ஏற்பாடாயிற்று.

இதெல்லாம் கைக்கு வந்து, மெய்காவல் முன்புறம் வண்டிக்காரன் பக்கத்தில் அமர்ந்திருக்க நிர்வாக அதிகாரி, வழக்கமான பளிச்சென்ற வெள்ளை உடையில் கறுப்புக் கண்ணாடி அணிந்து புது வண்டியில் ‘ஜல் ஜல்’லென்று மாட்டுக் கழுத்துச் சதங்கை ஒலிக்கப் பவனி வந்தது – தாசில்தாருக்குக்கூட அந்தக் காலத்தில் இல்லாத தோற்றமும் பந்தாவுமாய் இளைஞர்களைப் புருவம் உயர்த்த வைத்தது.

அப்பாவுக்கு இந்த பந்தாவெல்லாம் அதிருப்தியை அளிப்பதாக இருந்தது. அதை அதிகாரியுடன் நெருக்கமாய் இருந்த இளைஞர்களிடம் சொல்லவும் செய்தார். ‘இளைஞர்- சென்னைக்காரர், அதற்கேற்றபடி நாமெல்லாம் அறியாத புதுமைககளைச் செய்வதில் தவறென்ன? நீங்கல்லாம் பழயகாலத்தவங்க, உங்களுக்குப் பிடிக்காது தான்’ என்று பதில் வந்தது. ‘அது சரி, ஆனால் வந்து ஒரு மாசத்துக்குள்ள நான் கருத்தாய் சேமித்து வைத்துக் கொடுத்த ரு.140000ல் இப்பவே பாதி காலியாகி விட்டது, கோவிலுக்கு எதுவும் புதுமை செய்யக் காணோம்’ என்று அப்பா புலம்பினார்கள். ஆனால் நேரே கேட்க முடியவில்லை. அப்பா வயதை ஒத்த பெரியவர்கள் ‘நீங்க தானே அரசுஅதிகாரியை நியமிக்கணும்னு விடாமே மனு எழுதி எல்லார்ட்டயும் கையெழுத்து வாங்கி கவர்மெண்டுக்கு அனுப்ப்¢ ஏற்பாடு பண்ணுனீங்க? இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்?’ என்றார்கள்.

அதிகாரியின் காதுக்கு அப்பாவின் அதிருப்தி எட்டியது. ‘இவ்வளவு பேர் நம்மைப் புதுமையாய்ப் பார்க்க இவர் மட்டும் எதிர்ப்புக் காட்டுவதா’ என்று அதிகாரிக்கு வீம்பு ஏற்பட்டது. எனவே தனக்குத் தாளம்போட சில இளைஞர்களைத்
தயார் செய்தார். மூன்று கோவில்களுக்கும், அதிகாரமில்லாத தர்மகர்த்தாக்களாக தன்னிடம் லயிப்பு உள்ள இளைஞர்களை நியமித்தார். அவர்களை வண்டியில் உடன் அழைத்துக் கொண்டு நகரத்துக்கு அழைத்துப்போய் சினிமா காட்டுவதும் ஓட்டலுக்கு அழைத்துப் போய் டிபன் வாங்கித் தருவதும் – எல்லாம் கோவில் செலவுதான் – அவர்களோடு சீட்டாடுவதுமாய் வசப்படுத்திக் கொண்டார். எப்போதும் அடியாட்கள் போல அவரது வெற்றிலைப் பெட்டியைச் சுமந்தபடி அவர்கள் அவரைச் சுற்றி வந்தார் கள்.

அப்பாவின் அதிருப்தியை அதிகப்படுத்தவென்றே செய்வது போல மேலும் மேலும் ஆடம்பரச் செலவுகள் செய்யப் பட்டன. ஒராண்டு முடிவதற்குள்ளேயே கஜானா காலி. அப்பா சேர்த்து வைத்திருந்த பெருமாள் கோவில் பணமும் மற்ற இரு கோவில்களின் வருமானமும் கரைந்து போயின. தணிக்கை செய்ய வந்தவர்களும் அவரது விருந்தோம்பலில், கையூட்டில் இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. யாரும் தட்டிக் கேட்க முடியாத கோவில்கா¨ளை போல ஆகிவிட்டார்.

விரைவில் கோவில்களின் நித்ய பூஜைக்குமே உபயதாரர்களைத் தேடும்படி ஆயிற்று. இரவில் ஏழு மணிக்கே கோவில்கள் சார்த்தப்பட்டன. அப்பா தினமும் இரவில் அனுஷ்டானம் செய்த பின் ஏழு மணிக்கு சிவன் கோவிலுக்குப் போய்த்
தரிசனம் செய்துவிட்டு வந்துதான் சாப்பிடுவார்கள். ஒருதடவை அப்படி ஏழு மணிக்குப் போனபோது மெய்காவல் கோவிலைப் பூட்டிக் கொண்டிருந்தார். அப்பா கேட்டதற்கு ‘அதிகாரி உத்தரவு. அதற்குமேல் விளக்கெரிக்க எண்ணெய் யார் தருவது?’ என்று கேட்பதாக மெய்காவல் சொன்னார். அப்பா போலவே தினமும் இரவில் தரிசனம் செய்ய வந்தவர்களும் மனக் குமுறலுடன் திரும்ப வேண்டியதாயிற்று. அதற்கு அப்புறம் கோவிலுக்குப் போவதையே அப்பா நிறுத்திவிட்டார்கள். கோவிலுக்கு வழக்கமாக
தினமும் வருகிறவர்களும் அருகிப் போனார்கள்.

அதுமட்டுமல்லாமல் அப்பாவை அதிகாரி வேறு ஒன்றிலும் பழிவாங்குவது போல நடந்து கொண்டார். கோவில் அம்மனுக்கு அப்பா பல ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளியில் கவசமும் கிரீடமும் செய்து கொடுத்திருந்தார்கள். பத்திரம் கருதி அவை எப்போதும் அப்பாவிடம் தான் இருக்கும். விசேஷ தினங்கள், திருவிழா சமயங்களில் மெய்காவல் வந்து வாங்கிப் போய் அம்மனுக்கு அவை சார்த்தப்படும். விழா முடிந்ததும் இரவு எவ்வளவு நேரமானாலும் திரும்ப அவைகள் மெய்காவலால் அப்பாவிடம்
மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாய் நடைமுறையில் இருந்த இந்த முறையை அதிகாரி மாற்ற முயன்றார். அம்மனது சாத்துபடி கவசங்கள் தனியாரிடம் இருக்கக் கூடாது என்றும் நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார். நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைத்தால் என்ன ஆகும்? வெகு விரைவிலேயே அதுவும் காணாமல் பொய்விடும். எனவே அப்பா ‘அது கோயில் சொத்தல்ல, எனவே ஒப்படைக்க முடியாது; வேண்டும்போது மட்டும் வங்கிச் சென்று திரும்ப இத்தனை காலமும் போல் ஒப்படைக்கவேண்டும்’ என்று சொல்லிவிட்டார்கள். ‘அப்படியானால் அவை வேண்டாம்’ என்று நிர்வாக அதிகாரி நிறுத்திவிட்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக ஊரில் அதிகாரியின் மவுசு குறைந்து புகார்கள் கிளம்பின. கோவில்களில் பூஜைகள் ஒழுங்காக நடைபெறவில்லை என்பதையும் ஊர் விடலைகள் நிர்வாக அதிகாரியின் சகவாசத்தால் சீரழிந்து வருவதையும் முதியவர்கள் கடிய ஆரம்பித்தார்கள். கண்டும் காணாததற்கு புதிதாக நிர்வாக அதிகாரியால் நியமிக்கப்பட்ட பெருமாள் கோவில் பட்டர் வேறு அவர்களின் அதிருப்தியை அதிகப் படுத்தினார்.

அதிகாரி பொறுப்பேற்ற போது ஒரு மிகவும் பழுத்த முதிய பட்டர் பூஜை செய்து வந்தார். உடலெங்கும் உரிய இடங்களில் திருமண் அணிந்து பளீரென்ற தோற்றத்துடன் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடத்தக்கவராய் அவர் எப்போதும் காட்சி யளிப்பார். அவர் எப்போதும் பெருமாள் கோவிலிலேயே இருப்பார். பூஜை மற்றும் நித்ய அனுஷ்டானங்களை குறைவில்லாமல் மிகவும் பக்தியோடு முறையாகச் செய்து வந்தார். அவர் இருந்தபோது கோயிலுக்கே ஒரு களை இருந்தது. புது அதிகாரி வந்ததும் மிகவும் வயதாகி விட்டதால் இனி அவர் கோவில் சேவைக்கு லாயக்கில்லை என்று சொல்லி அவரை நீக்கி விட்டு, இளைஞரான – தன்னைப் போலவே ஒரு ஷோக்குப் பேர்வழியை நியமித்தார். ஊர் மக்களுக்கு, புதிய பட்டரின் கிராப் தலையுடன் கூடிய நவ நாகரீகத் தோற்றம், ஆசாரமின்மை போன்றவை எடுத்த எடுப்பிலேயே முகம் சுளிக்க வைத்தன. அவர் தன் புது மனைவியுடன் நிர்வாக அலுவலகத்தின் பக்கத்திலேயே வீடமர்த்திக் கொண்டுவந்து விட்டார். அதிகாரிக்கு அவர் வீட்டிலேயே சாப்பாட்டுக்கும் எற்பாடாயிற்று. சுவாமிக்கான நைவேத்யம் வழக்கமாக கோவில் மடைப்பள்ளியில்தான் தயாராக வேண்டும். அப்படித்தான் இத்தனை நாளாய் பழைய பட்டர் செய்துவந்தார். ஆனால் புதியவர் தன் வ்£ட்டிலேயே மனைவி சமைக்கும் மத்தியான வீட்டுச் சமையலையே பெருமாளுக்கும் எடுத்துச் சென்று படைத்தார். இதை ஊர்மக்கள் அதிகாரியிடம் புகார் செய்தும் அவர் கண்டு கொள்ளவில்லை.

இளைஞர் சிலருக்கு அதிகாரியின் தான்தோன்றித்தனமான – ஊர்ப் பெரியவர் களை மதிக்காத நடவடிக்கைகளும், கோவில் பணத்தில் செய்யும் ஊதாரிச் செலவுகளும், அவருடன் சேர்ந்து கூத்தடிக்கும் இளம் தர்மகர்த்தாக்களின் பொறுப் பற்ற போக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் வெளிப்படையாகவே எதிர்ப்புக் காட்டத் தொடங்கினார்கள். புதிய பட்டரின் பூஜை நடைமுறைகளைக் கண்காணிக்க ஆரம்பித் தார்கள். அவர் தினமும் உண்மையில் நைவேத்தியம்தான் படைக்கிறாரா என்ற சந்தேகத்தில் ஒரு நாள் அவர் பூஜை செய்து விட்டு வெளியே வரும்போது வழிமறித்து நைவேத்தியத்தைத் திறந்து காட்டச் சொன்னார்கள். முதலில் மறுத்த பட்டர், பின்னர் இளைஞர்களின் மிரட்டலால் நைவேத்தியத்தைக் காட்டினார். அதில் அன்று உப்புமா இருந்தது. அப்படியே அவரைக் கையோடு கொண்டு போய் நிர்வாக அதிகாரி முன் நிறுத்தி நைவேத்தியத்தைக் காட்டியபோது, அவர் அதை வெகு அலட்சியமாய் ஒதுக்கி, ‘ஆமாம்! நைவேத்தியம் செய்ய கோவிலிலிருந்து கொடுக்க வசதியில்லை. அதனால் அவர் தன்னால் முடிந்ததைத்தான் செய்வார்’ என்று பட்டருக்குச் சாதகமாகப் பேசினார். இதனால் இளைஞர்களிடையே எதிர்ப்பு அத்¢கமாயிற்று. பட்டருக்கு ‘உப்புமா அய்யன்’ என்றும் பட்டப் பெயர் வழங்கலாயிற்று. உள்ளூரில் நடக்கும் கோடைத் தெருக் கூத்தில் பபூன் பாடுவதாக உப்புமா நைவேத்தியத்தைக் கேலி செய்து பாடலும் பாடப்பட்டது.

‘எது வேண்டும் கேள் பெருமாளே! – உனக்கு
எது வேண்டும் கேள் பெருமாளே!
இட்டிலி வேண்டுமா – உனக்குத்
தோசை வேண்டுமா – இல்லே
உப்புமா வேண்டுமா? – உனக்கு
எது வேண்டும் கேள் பெருமாளே!’

– என்று பபூன் பாடிய பாட்டு எல்லோர் நாவிலும் புரள ஆரம்பித்தது. அத்தோடு இதைத் தட்டிக்கேட்காத அதிகாரிக்கு, பட்டர் தன் மனைவியையே நைவேத்தியம் செய்வதாகவும் சுவர் விமர்சனங்கள் எழுந்தன.

நாளாக நாளாக நிர்வாக அதிகாரிக்கு சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரது எடுபிடிகளுக்கும் கண்டனம் அதிகமாகவே அவர்களாலும் அவருக்கு உதவ முடியவில்லை.

கடைசியில் ஒருநாள் இதற்கு விமோசனம் ஏற்பட்டது.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation