காட்சில்லா

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

வைகைச் செல்வி


சீறும் தொண்டையும்,
எருமைக் குரலும்
ஆளை மடக்கும்
அடக்கிப் போடும்.
நரியின் மூளை,
குரங்கின் இதயம்
யானைப் பலமிருந்தும்
வராகம் போலத்
தங்கித் தரிக்கும்
கழிவுச் சாக்கடையில்.
தோல் தடித்துக் கொம்பு முளைக்க
தொழுத கையுள் படையொடுங்க
ஊரார் பணத்தில் உண்டு கொழுக்கும்
ஊழல் பெருச்சாளி.
ஆனால்
மனிதனைப்போல
பேசும், சிரிக்கும்
உறங்க மட்டும் செய்யாது.
எந் நேரத்தில் என் செய்யும் ?
யாருக்கும் தெரியாது.
தோளில் தட்டும் தோழமையாய்
திரும்புவதற்குள் முதுகில் குத்தும்.
காலை வருடி…. காலை வாரும்.
கண்ணை மூடித் திறப்பதற்குள்
கட்சிமாறும் பச்சோந்தி
கூடும், குலவும்
கூட இருந்தே குழி பறிக்கும்.

உள்ளும் புறமும்
அண்டக் கறுப்பாய்
காக்கை தோற்றுப்போம்.
ஆனால்
முகம் மட்டும்….
கள்ளம் இல்லாக்
கபடம் இல்லாக்
கொஞ்சும் வெள்ளைப் புறா.
—-
vaigai_anne@yahoo.com

Series Navigation

வைகைச் செல்வி

வைகைச் செல்வி