காஞ்சி மடம் – க.நா.சு – பிலோ இருதயநாத் – மாலதி சந்தூரின் தெலுங்கு மிட்டாய் – வலம் போன நரி (அல்லது – மஞ்சரி 1955 தொகுப்பு)

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

இரா முருகன்


____

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய இன்னொரு பழைய புத்தகம் 1955-ம் ஆண்டு ‘மஞ்சரி ‘ இதழ்கள் தொகுப்பு.

1955 ஆவடியில் காங்கிரஸ் மாநாடு நடந்த ஆண்டு. மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் அரசு வலுவோடு இருந்த காலம் அது. எண்பது வயதில் வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமராக ஓய்வு பெற்றதும் அதே வருடம் தான்.

மஞ்சரி ஜனவரி 1955 பொங்கல் சிறப்பிதழ் விலை 12 அணா.

உள் அட்டையில் –

காலமென்னும் மண்மீது அடிச்சுவட்டைக் கண்டு

கடவுள் தந்த சடலமிதைப் பயன்படுத்திக் கொண்டு

ஞாலமிசை நல்லவராய் வாழ்ந்திடவே பண்டு

ஞான முனிவார்கள் எல்லாம் செய்தார்கள் தொண்டு.

இது திரைப்பட விளம்பரம். அந்த ஆண்டு பொங்கலன்று ‘மீண்டும் உங்களை மகிழ்விக்க ‘ சென்னை வெலிங்டன், பிரபாத், சரஸ்வதி தியேட்டர்களிலும் மற்றும் தமிழகமெங்கும் வெளியான ‘ஒளவையார் ‘ திரைப்பட விளம்பரம் இது. 1953-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘ஒளவையார் ‘ படத்தைத் திரும்ப இரண்டு வருடம் கழித்துத் தமிழகமெங்கும் மறு வெளியீடு செய்ய வேண்டிய காரணம் என்ன என்று தெரியவில்லை.

காளிதாசனின் குமாரசம்பவம் வடமொழிக் காவியத்திலிருந்து இமயமலை பற்றிய வர்ணனைப் பகுதியைத் தமிழில் தந்திருக்கிறார் ‘கின்னரன் ‘.

****

‘இமயத்தில் காணும் பூர்ச்சமரப் பட்டைகளில் சிந்துரம் முதலிய திரவங்கள் படிந்து எழுத்துகள் உருவாகியுள்ளன. அப்படி எழுதிய பகுதிகளில், யானைகளுடைய உடலில் தோன்றும் பத்மகம் என்பவை போன்ற செம்புள்ளிகள் பட்டிருக்கின்றன. வித்தியாதரப் பெண்கள் இந்தப் பூர்ச்ச பத்திரங்களைத் தங்கள் காதலை விளக்கும் கடிதங்களாகப் பயன்படுத்துகிறார்கள்.

கின்னரர்கள் தேவ சங்கீதத்தைப் பாடும்பொழுது, இந்த மலை தன் குகையாகிய முகத்திலிருந்து வேய்ங்குழல் தொளைகளில் காற்றை நிரப்புகிறது. தேவ கீதத்துக்குப் பின்னணியாக இது வேணுகானம் இசைக்க விரும்புகிறது போலும்!

கங்கை வெள்ளத்தின் திவலைகளையும் தேவதாரு மணத்தையும் ஏந்திச் செல்லும் மலைக்காற்று, வேடர்கள் இடுப்பில் கட்டியிருக்கும் தோகைகளைக் கலைக்கிறது. விலங்குகளைத் தேடித்தேடிக் களைத்துப்போன வேடர்கள் இந்தக் காற்றின் இன்பத்தை நுகர்கிறார்கள் ‘

****

காளிதாசனை மட்டும் படிக்கவாவது வடமொழி கற்க வேண்டும்.

தென்னாட்டுத் தத்துவதரிசிகள் என்ற தலைப்பில் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், சைவசித்தாந்தம் குறித்த கட்டுரைகள் பொங்கல் மலரில் சிறப்பு அம்சங்கள்.

அத்வைதம் பற்றி கி.பாலசுப்ரமணிய அய்யர் சொல்வதிலிருந்து –

****

‘ஸ்ரீ சங்கர பகவத்பாதர் அவர்களின் பிறந்த நாளைப் பற்றி அறிஞர்களின் ஆராய்ச்சிகளில் நிலைத்த தீர்மானம் ஏற்படவில்லை. பொதுவாகப் பெரும்பாலோர் ஒப்புக்கொண்ட காலம் கி.பி. 788.

உயர்ந்த உண்மைகளை நாடெங்கும் எல்லாக் காலங்களிலும் பரப்புவதற்கும், நம்

மக்களுக்கு வழிகாட்டுவதற்குமாக, பாரத நாட்டின் நான்கு திக்கிலும் மடம் என்ற ஸ்தாபனங்களைச் செய்து, தாம் வெகுநாள் வசித்த காஞ்சிபுரததில் ஒரு மடத்தையும் ஸ்தாபித்து, உலகத்தை விட்டு மறைந்தார் ஸ்ரீ சங்கரர் ‘.

****

ஆக, அய்யர் சொல்வது இரண்டாயிரம் வருடப் பழமையில்லை. ஆனால் 1200 வருடம்.

விஜயநகரப் பேரரசின் காலத்தில் (1336) மடம் நிறுவப்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் கருதுவதைப் பற்றி அவர் சொல்லாததற்குக் காரணம் இது அத்வைதம் பற்றி மட்டுமான கட்டுரை என்பதாக இருக்கலம்.

விமர்சகர் க.நா.சுப்ரமண்யம் அந்த நாளிலேயே (1954) ஐரோப்பா சுற்றுப் பயணம்

போய் அதைப் பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறார்.

அவருடைய ஐரோப்பா அநுபவம் கட்டுரை ஆங்கிலத்தில் ‘ஸ்வதந்த்ரா ‘ இதழில் (ராஜாஜி தன் சுதந்திரா கட்சியைத் தொடங்கியதும் நடத்திய பத்திரிகையா ?) எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் மஞ்சரி ஜனவரி 55ல் வெளியாகியுள்ளது. அதிலிருந்து –

****

நான் (பாரீஸில்) பார்த்த அநேகம் பேரில் கிரீக் எழுத்தாளர் ஒருவரைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியம். அவர் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. என் பெயர் அவர் வாயில் நுழையாதிருந்தது போல் எனக்கும் அவர் பெயரை உச்சரிக்க வரவில்லை. அவ்வளவு கஷ்டமான பெயர்.

நான் தங்கியிருந்த ஹோட்டலிலேயே அவரும் இருந்தார். பத்து நாளைக்கு மேல் அங்கே இருந்தேன். ஒவ்வொரு நாளும் காலைவேளை விநோத உருவில் அமைந்த அந்த ரொட்டியையும் காபியையும் சாப்பிடும்போது நாங்கள் பேசுவது வழக்கம்.

பாரீஸில் தஞ்சாவூர்க்காரர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் பேஷான காபி கிடைக்கிறது. நாங்கள் இருவரும் சூடான காபியைப் பருகிக் கொண்டே பெரும்பாலும் இலக்கிய சம்பந்தமான விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். சுமார் ஆறு அல்லது ஏழு நாவல் எழுதி வெளியிட்டிருக்கிறாராம் அவர். நானும் அதே எண்ணிக்கையில்தான் எழுதியிருக்கிறேன். அரசியல் சம்பந்தமற்ற இரண்டு பத்திரிகைகள் நடத்தியிருக்கிறாராம். பொதுவாக இருவரும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரிந்தது.

‘உங்கள் புஸ்தகம் ஏதாவது இங்கிலீஷில் ஆகியிருக்கிறதா ? ‘ என்று விசாரித்தேன்.

‘ஏன், நான் எழுதிய எல்லா எல்லா நாவல்களையும் இங்கிலீஷில் ஆக்கியிருக்கிறார்களே! இன்னும் சொல்லப் போனால், கிரீக் பாஷையில் எழுதினாலும், இரண்டொரு நாவலை முதலில் இங்கிலீஷில் வெளியிட்டேன். பின்னால்தான் கிரீக் பாஷையில் வெளியிட்டேன். பாஷாபிமானம் இல்லை என்று படலாம். இருந்தாலும், இந்த விஷயத்தை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்; இங்கிலீஷில் என் புஸ்தகங்கள் வெளியாகிற வரையில் நான் ஏதோ பெயருக்கு ஓர் எழுத்தாளனாக இருந்தேன். முதல் நாவல் இங்கிலீஷில் வெளியாயிற்றோ இல்லையோ, நான் கிரேக்க எழுத்தாளனாகப் பிரசித்தி பெற்றுவிட்டேன் ‘ என்றார். நம் நாட்டிலும் இதே நிலைதானே ! ஆகவே இரண்டுவித எழுத்தாளயிருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உடனே உணர்ந்து கொண்டேன்.

****

க.நா.சு இருமொழி எழுத்தாளர். அவருக்கு ஆனால் சர்வதேச அரங்கில் புகழ் கிட்டவில்லை. அவரைப் போல் இருமொழியிலும் எழுத்தாற்றலில் சிறந்த அசோகமித்திரனுக்கும் தான்.

அ.மிக்குத் தமிழிலேயே இன்னும் சரிவர மதிப்புக் கிடைக்கவில்லை என்பதை அண்மையில் அவர் ஒரு பத்திரிகை பேட்டியில் சொல்லியிருந்தார். இத்தனை ஆண்டு இலக்கிய வாழ்வில் அவருடைய ஒரு புத்தகத்துக்குக் கூட வெளியீட்டு விழா என்று நடந்ததில்லை என்ற குறை அவருக்கு இருப்பதைப் புரிந்து கொண்ட அசோகமித்திரனின் இலக்கிய மித்திரர்கள் அடுத்த மாதம் அவருக்கு ஓர் அருமையான விழா எடுத்துக் கவுரவிக்கப் போகிறார்கள் என்று பட்சி சொல்கிறது.

எந்தச் சிறப்பும் செய்யப்படாமல் இறந்துபோன தமிழ்க் கவிஞர்கள், கதாசிரியர்கள், கட்டுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் பட்டியல் நீண்டது. இதில் பிலோ இருதயநாத் பெயர் கட்டாயம் இடம் பெறும்.

பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்த இருதயநாத் வார விடுமுறையையையும், கால், அரை, முழுப் பரீட்சை லீவையும் எதிர்பார்த்திருந்தது டியூஷன் எடுத்து நாலு காசு பார்க்க இல்லை. காட்டைப் பார்க்க ஓட. ஹெர்குலீஸ் சைக்கிளை எனக்குத் தெரிந்து தூங்க உபயோகித்தவர் அவர்தான். காடு மேடெல்லாம் அந்த சைக்கிளில் பயணப்பட்டு, இருளரையும், பளிங்கரையும், தொதவரையும், குடவரையும் எல்லாம் தன் எழுத்து மூலமும், பழைய காமிரா வழியாகவும் தமிழ்நாட்டு சிரத்தையில் பதித்தவர் அவர்.

ஜனவரி 1955 மஞ்சரி இதழில் பிலோ இருதயநாத் எழுதிய ‘எங்கும் திரியும் குறவர் ‘ குருவிக்காரர்களான நரிக்குறவர்கள் பற்றியது. அதிலிருந்து –

****

ஒரு சமயம் குறவன் ஒருவன் கோணி ஊசிக்குத் துவாரம் அடித்துக் கொண்டிருந்தான். நான் அந்தச் சுத்தியையும் ஆணியையும் குடைக்கம்பியையும் வாங்கி, ‘நான் துவாரம் அடிக்கிறேன் ‘ என்று கூறி எல்லாவற்றையும் சரியாக வைத்து, சுத்தியை இறங்கி அடிப்பதற்காகப் பாதி தூரம் தான் இறங்கினேன். அதற்குள்ளேயே, ‘போச்சு ‘ என்று அவன் கூறினான். நான் அப்படியே நிறுத்திக்கொண்டு, ‘ அடிப்பதற்குள் ஊசியில் துவாரம் விழாது என்று உனக்கு எப்படித் தெரியும் ? ‘ என்றேன். ‘உங்கள் சுத்தியும் கையும் வரும் வேகத்தைப் பார்த்தாலே துவாரம் விழாது என்று எங்களுக்குத் தெரிந்து விட்டது ‘ என்று இரண்டு மூன்று குறவர்கள் சேர்ந்து சொன்னார்கள்….

பல தெய்வங்களை இவர்கள் வழிபடுகிறார்கள். மதுரை மீனாட்சி, பரவட்டைக் காளி, ஆட்டுக்கிடாச் சாமி, எருமைக்கடாக் காளி, காட்டேரி, முனி முத்தாயி, கறுப்பாயி ஆகியோர் முக்கியமான தெய்வங்கள். பெண் தெய்வத்துக்குத்தான் இவர்கள் அதிக மதிப்புக் கொடுக்கிறார்கள்…

திருவிழா நடத்துவதற்குச் சித்திரை மாதத்தில் பிறைக்குப்பின் ஒரு நாளைக் குறிப்பார்கள். அதிக ஜன நடமாட்டம் இல்லாத தோப்புகளில் ஏழு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இவர்கள் பொங்கலிடும் காட்சியைக் கட்டாயம் காணவேண்டும். தீ மூட்டி வெவ்வேறு பானைகளில் தனித்தனியே அரிசியும் மற்றப் பொருள்களும் இடுவார்கள். மேலே இருக்கும் பானைதான் முதன்முதலில் பொங்கி வழிய ஆரம்பிக்கும். அதை அகப்பையாலோ கரண்டியாலோ கிளறிக் கொடுத்தால் தேவதைக்குக் கோபம் உண்டாகுமாம். ஆகவே தெய்வ ஆவேசம் வந்த ஒருவன் தன் கையையே பொங்கும் பானைக்குள் அகப்பை போல் இட்டுக் கிளறிக் கொடுக்கிறான். இந்தக் காட்சியைக் காணும்போது நமக்கு உடல் சிலிர்க்கிறது….

பல நூற்றாண்டுகளுக்கு முன் இவர்கள் பல இடங்களுக்கும் நடந்தே குறுக்கு வழியில் போனதால், இவர்களிடம் அந்த அந்த நாட்டு மன்னர்கள் மற்ற மன்னர்களைப் பற்றிய தகவல்களும், காட்டு வழிகளும், குறுக்கு வழிகளும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். சேனை பலம் பற்றியும் இவர்கள் கூறியதால் சில மன்னர்கள் இவர்களை வேவுகாரர்களாகவும், தங்கள் சேனைக்கு வழிகாட்டிகளாகவும் அமர்த்திக் கொண்டார்கள். இந்தக் காரணத்தைக் கொண்டே இவர்களுக்குத் தெலுங்கு நாட்டில் ‘எருக்கலா ‘ என்ற பெயர் வந்தது. எருக்கலா என்பதற்கு அறிவு என்பது ஒரு பொருள். பழங்காலத்தில் குறவர்களைத் தமிழர் ‘கூறுவான் ‘ என்று வழங்கி இருக்கலாம். அது திரிந்து, குறவன் என்று ஆகியிருக்கலாம்.

****

இது புதிய செய்தியாகும். நான் ரகர றகர வேறுபாடு இல்லாமல், குரவர், குறவர் இரண்டுமே தலைவர் என்ற பொருள் தரும் என்று நினைத்திருந்தேன்.

சென்னை ஸ்கூல் அஃப் ஆர்ட்ஸ் ஹாலில் 1954 நவம்பரில் நடைபெற்ற தென்னிந்திய ஓவியர்களின் பதினான்காவது கண்காட்சி பற்றி மாத்ருபூமி கள்ளிக்கோட்டை பதிப்பில் வெளியான கட்டுரை மஞ்சரி ஜனவரி 1955ல் தமிழில் வந்திருக்கிறது. அந்தோணி தாஸின் எண்ணெய்ச் சித்திரம், ஜி.பி.பிள்ளையின் நிழல் சித்திரம், கிருஷ்ண ராவின் நீர் வண்ணச் சித்திரம், கே.எம்.வாசுதேவனின் நிலக்கரிச் சித்திரம், சி.வேணுகோபாலின் ‘கேரளக் கன்னிகையர் ‘, சாரங்கனின் சுவர்ச் சித்திரங்கள், பட்நாயக்கரின் சீலைப் படங்கள், முனிஸ்வாமியின் ஓவியங்கள், அருள்ராஜாவின் ‘தமிழ்க் கிராம ரங்கம் ‘ என்ற பழைய மரபில் வந்த நீர்ச்சாய ஓவியங்கள் என்று நுணுக்கமாக அதே நேரத்தில் எளிமையாகச் சொல்கிறது கட்டுரை.

ஐம்பது வருடத்துக்கு முன் தமிழ்ப் பத்திரிகை படித்தவர்களின் ரசனை நிச்சயம் நம்முடையதை விட மேம்பட்டுத்தான் இருந்திருக்கிறது.

எனக்குத் தெரிந்து இரண்டு பிரபல தெலுங்கு எழுத்தாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மதுராந்தகம் ராஜாராம். செங்கல்பட்டுப் பக்கம் மதுராந்தகத்தில் ஆசிரியராகப் பணி புரிந்த இவர் குறிப்பிடத் தகுந்த தெலுங்கு இலக்கியப் படைப்பாளி. முக்கியமாகச் சிறுகதையாளர். பணி ஓய்வு பெற்றபின்னர் தெலுகுதேசம் போன இவர் அங்கே காலமானார் என்று அறிகிறேன்.

பிரபலமான இன்னொரு தெலுங்கு எழுத்தாளர் மாலதி சந்தூர். ச்ிறுகதையாளர்; முப்பது வருடத்துக்கு மேலாக ஒரு தெலுங்குப் பத்திரிகையில் பெண்கள் பகுதியை எழுதி வருகிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட இவரை சுஜாதா பங்கு பெற்ற இலக்கியச் சிந்தனைக் கூட்டம் ஒன்றில் சந்தித்துமிருக்கிறேன்.

கூட்டத்தில் ஒரு மணி நேரம் ‘அரவத்தில் மாட்லாடிய ‘ மாலதி சந்தூர்

கிட்டத்தட்ட ஐம்பது வருடமாகச் சென்னையில் இருந்தாலும் இன்னும் அவர் தமிழ் சுந்தரத் தெலுங்கு மணக்கிற ஒன்று தான்.

தமிழ் நாட்டின் கலாச்சாரம் பற்றி, விழாக்கள் பற்றி, பொங்கலு, மாட்டுப் பொங்கலு, மஞ்சுலு விரட்டுலு பற்றி எல்லாம் அன்று அவர் பேசியதாக ஞாபகமு.

ஜனவரி 1955 மஞ்சரி இதழில் மாலதி சந்தூர் எழுதிய ‘லஸ் முனை ‘ தெலுங்குச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. சென்னையிலிருந்து வெளியாகும் (வெளியான ?) ‘பாரதி ‘ என்ற தெலுங்குப் பத்திரிகையிலிருந்து இதை சீதாதேவி (வாசிரெட்டி சீதாதேவி தான் இவர் என்று நினைக்கிறேன்) மொழிபெயர்த்திருக்கிறார்.

சென்னையில் தெலுங்குப் படங்கள் தயாராகிக் கொண்டிருந்த காலம் அது. என்.டி.ராமாராவ் தெலுகுதேசம் அமைத்து ஆட்சியைப் பிடிக்கும் சிந்தனை எதுவும் இல்லாமல் தேவுடா என்று சென்னையில் சுகவாசம் செய்து வந்தார். தெலுங்குப் படத்தில் தேவிகாவோடும், ஜமுனாவோடும் மரத்தைச் சுற்றி ஓடி ஃபுல் சூட்டும் கழுத்தில் டையுமாக டப்பாங்குத்து ஆடி, மிஞ்சிய நேரத்தில் தமிழில் சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணனாக சீர்காழி குரலில் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா ‘ என்று கர்ணன் சிவாஜியைப் பார்த்து உள்ளம் உருகப்பாடி (60கள்) , ‘கிருஷ்ணன் அச்சு அசலா என்.டி.ராமாராவ் மாதிரித்தான் இருந்தார் ‘ என்று வாலியின் வசனத்திலும், (கலியுகக் கண்ணன் – 70கள்) தென்னிந்திய மனங்களிலும் வெகுவாக இடம் பிடித்திருந்தார் அப்போதும் அதற்கப்பாலும்.

திருப்பதியில் வேங்கடமுடையானைத் தரிசித்து, மொட்டைத் தலையில் சந்தனம் உலரும் முன்னால் ராமாராவ்காருவின் தி.நகர் வீட்டில் பஸ்ஸோடு புகுந்து அவருடைய தரிசனமும் கொண்டு சராசரித் தெலுங்கர்கள் ஜன்ம சாபல்யம் அடைந்து திரும்பிப் போன காலம். ‘மதராஸ் மனதே ‘ என்று பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் நடத்தி உயிர்விட்டாலும், சென்னை தமிழகத்தில் முக்கியப் பகுதியாக, பெருந்தலைவர் காமராஜ் அமைச்சரவை ஆட்சி நடத்தும் தலைநகராக இருந்தது 1955-ல்.

மாலதி சந்தூரின் தெலுங்குச் சிறுகதை சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் ராத்திரி பத்து மணிக்குத் தொடங்குகிறது. சினிமா ஆசையால் பெஜவாடாவிலிருந்து கிளம்பி வந்த சியாமளா லஸ் கார்னரில் இருந்து பொதுத் தொலைபேசியில் முன்பின் தெரியாத சேகரைக் கூப்பிடுகிறாள். மிட்டாய்க் கலர் புடவையில் சியாமளா, மிட்டாய்க் கலர் சட்டையில் சேகர், மிட்டாய்க் கலர் அம்பாசிடர் கார் நிற்கும் மிட்டாய் வண்ண வீட்டு போர்ட்டிகோ என்று ரம்மியமான அந்தக்காலத்துப் படங்கள் பக்கத்துக்குப் பக்கம் கவனத்தை ஈர்க்க (ஓவியர் பெயர் மகான்), ஐந்தாவது பக்கத்தில் அப்பா வந்து சியாமளாவைத் திரும்ப பெஜவாடாவுக்குக் கூட்டிப் போவதற்குள் அவளுக்கும் சேகருக்கும் காதல் அரும்புகிறது. அப்பாவாக ரங்காராவ், கதாநாயகனாக நாகேஸ்வரராவ், நாயகியாக சாவித்திரி என்று கற்பனை செய்தபடி படிக்கப் படு சுகமாக இருக்கிறது.

மஞ்சரியில் பக்கக் கடைசியில் நிரப்ப இடும் துணுக்குகள் கூட சுவாரசியமாக இருந்திருக்கின்றன.

ஜனவரி 55 இதழில் பிலோ இருதயநாத் கட்டுரை முடியும் 77ம் பக்கத்தில் கீழ்ப்புறம் ஒரு துணுக்கு –

‘என் வேலையை இனி யார் ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் ? ‘ என்று கேட்டான் அஸ்தமிக்கும் சூரியன்.

உலகம் முழுவதும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்தது. அப்பொழுது ஒரு விளக்கு மிகவும் தயக்கத்தோடு, ‘என்னால் முடிந்த வரைக்கும் நான் அந்த வேலையைச் செய்கிறேன் ‘ என்று முன் வந்தது.

மஞ்சரி பத்திரிகையின் வெற்றிக்குக் காரணம் அதில் வெளிவந்த மொழிபெயர்ப்புகள். கொஞ்சமும் உறுத்தாத நடை. எளிமையான சொற்றொடர்கள். மொழிபெயர்ப்பு என்ற நினைவே எழாமல் படித்துப் போக வைக்கும் ஆற்றல் பெற்ற இந்த மொழிபெயர்ப்பாளர்கள் அமைதியாகத் தொண்டாற்றித் தமிழுக்குச் சேர்த்த வளம் அதிகம்.

கல்கத்தாவிலிருந்து ஆங்கிலத்தில் வெளியாகும் அமிர்தபஜார் பத்திரிகை 21.11.1954 இதழில் ‘குள்ள நரி ‘ பற்றி வான்ஸ் ஹோய்ட் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பிலிருந்து ஒரு பகுதி. மொழிபெயர்ப்பாளர் விவரம் தெரியாவிட்டாலும், நடையை வைத்து அவர் அந்தக்கால மஞ்சரி ஆசிரியர் தி.ஜ.ரங்கனாதனாகத்தான் இருக்கும் என்று ஊகிக்கலாம்.

****

எதிர்பாராதபடி குள்ளநரி நம் கண்ணில் தென்பட்டால் நாம்தான் திடுக்கிட்டுப் போய்விடுவோம். அது ஒரு காலைத் தூக்கிக் கொண்டு, கொத்தாக இருக்கும் தன் வாலை ஒருபுறமாக அழகாய் வளைத்தபடி நிற்கும். இந்த நிலையில் அதன் பழுப்புக் கண் கூர்ந்து நம்மை நேராக நோக்கும்போது ஏதோ நம் எண்ணத்தை அறிந்துகொண்டதுபோல் தோன்றும்; நாம் வியப்புற்று நிற்பதைக் கண்டு சிரிப்பதுபோல் நாக்கை நீட்டும்.

அப்போது அதன் துணிச்சலைப் பார்த்தால் நம் பாடு சங்கடமாகி விடும். ‘நமக்கு முன்னாலேயே இது நம்மைக் கவனித்திருக்கிறது பார் ‘ என்று எண்ணும்போது நமக்கே என்னவோ போல் இருக்கும். பொன் போல் ஒளிரும் அதன் கண்களில் துளிக்கூட வியப்பே இராது; இன்னும் கேட்டால், ஏதோ நம்மை ஏளனமாகவும், அருவருப்போடும் பார்ப்பது போலத்தான் இருக்கும். மறுபடியும் சர்வசகஜமாகவே நடந்துகொள்ளும். லேசாய்த் தலையை ஆட்டிவிட்டு நம்மைவிட ஏதோ உயர்ந்த பிராணி மாதிரி ஒரு பார்வை பார்க்கும். நாம் அசடு வழிய நிற்பதைப் பார்த்ததும் நம்மைத் துளியும் சட்டை செய்யாமல் மெதுவாகத் தாண்டிச் செல்லும்.

அது அவசரப்படுவதேயில்லை. சந்தேகமாகவோ, பயந்த மாதிரியோ கொஞ்சங்கூடக் காட்டிக்கொள்ளாமல் கம்பீரமாக நடந்து போகும். ஏன், நம்மை மறந்து விட்டமாதிரிக்கூடத் தோன்றும். ஆனால் கூர்ந்து கவனித்தால், அது நம்மைச் சுற்றி வளைத்துக்கொண்டு போகும்போது திருட்டுத்தனமாகப் பார்ப்பது நம் கண்ணில் படும். நாம் சற்றே அசைந்தோமானால் போதும்; நொடியில் எங்காவது மறைந்துவிடும்.

****

இடம் போனதோ வலம் போனதோ, அமிர்த பஜார் பத்திரிகையிலிருந்து மஞ்சரிக்குள் நுழைந்த இந்த நரி என்ன அழகாக நடந்து போயிருக்கிறது !

நரியோடு நவல் சங்கர் தேபாரும் அ.ப.பத்திரிகையிலிருந்து மஞ்சரிக்கு வந்திருக்கிறார். 1955 ஆவடி காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘செளராஷ்ட்ர முதல்மந்திரி ‘ (அந்தக்கால குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா) அவர்.

ஸ்ரீ உச்சரங்கராய் நவல் சங்கர் தேபார் பற்றிய கட்டுரையிலிருந்து –

****

கிராமங்களில் அதிகப் பள்ளிக்கூடங்களை நிறுவ வேண்டும் என்பதற்காக நகரத்துப் பள்ளிச் சம்பளங்களை அவர் உயர்த்தினார். இதை எதிர்த்துப் பெரிய கிளர்ச்சி நடத்த மாணவர்களை எதிர்க்கட்சிகள் தூண்டின. விற்பனை வரியால் ஆத்திரம் கொண்ட பெரிய வியாபாரிகள் கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்துகொண்டு சர்க்காரை எதிர்த்தார்கள். இவ்வளவு எதிர்ப்புகளையும் கண்டு கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் தேபார் உறுதியுடன் இருந்தார்…

சர்வதேச விவகாரங்களைப் பற்றி ஆராய இன்று பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆவலும் இல்லை. நேரமும் இல்லை. அதுவும் உலக நாடுகளுடன் உறவு எப்படி இருக்கவேண்டும் என்று நிர்ணயித்து அமைக்கும் சிற்பி ஜவாஹர் இருக்கும்போது அவர்களுக்கு என்ன கவலை ? மற்றத் தலைவர்களைப் போலவேதான் தேபாரும் இந்த விஷயத்தை ஆராய்ந்ததில்லை. ஆனால், அவரைக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுத்த செய்தி வெளியான அன்று மாலையிலேயே, இது பற்றி அக்கறை காட்டத் தொடங்கி விட்டார்.

சீனா, ஸோவியத் யூனியன் பற்றிய விவரங்களை எல்லாம் சமீபத்தில் சீனாவுக்குப் போய்வந்த ஒருவர் அப்போது தேபாருக்கு அலசி ஆராய்ந்து விளக்கலானார். நண்பர் சொல்லிய விவரங்களைக் கேட்டு முடித்ததும், கம்யூனிஸ்ட் ஆட்சியின் இன்றைய நிலை பற்றியும் வருங்கால வாழ்வு பற்றியும் தமக்குத் தோன்றிய அபிப்பிராயத்தைக் குறிப்பிடும் தோரணையில் ‘கிப்பன் எழுதிய ரோம ஏகாதிபத்தியத்தின் வலிவும் வீழ்ச்சியும் என்ற நூலைப் படித்துப் பாருங்கள் ‘ என்றார் நண்பரிடம்.

****

தோபாரு .. சந்தேகமேயில்லை. இது விழுந்து பிடுங்கியபடி வலம் போன நரிதான்.

ஐம்பத்தைந்தாம் வருடத்தில் கூட அணுசக்தியில் ஒரு மயக்கம் இந்தியாவில் இருந்திருக்கிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஓஃப் அமெரிக்கா இன்பர்மேஷன் சர்வீஸ் என்ற அமெரிக்கத் தகவல் சேவையினர் அளித்த கட்டுரையும் படங்களும் ஜனவரி 1955 மஞ்சரி பொங்கல் மலரில் இடம் பெற்றிருக்கின்றன. அதிலிருந்து இரண்டு செய்திகள்.

****

அணுசக்தியால் இயங்கும் ரெயில் வண்டி (பக்கத்தில் படம்). டாக்டர் லைல் பி. பார்ஸ்ட் என்ற விஞ்ஞானி இதைத் திட்டமிட்டிருக்கிறார். அணு உலை அல்லது ரியாக்டரின் அகலம் 2 அடி. உயரம் 3 அடி. நீளம் 3 அடி. இதில் 11 ராத்தல் யுரேனியம் போட்டால் அதைக் கொண்டு 7,000 குதிரைச் சக்தியோடு ஒரு வருடகாலம் வண்டி ஓடுமாம். செய்யும் செலவு 12 லட்சம் டாலர் ….

அணு சக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை அமெரிக்காவில் அமைக்க பிட்ஸ்பர்க் அண்டு வெஸ்டிங் கார்ப்பரேஷன், டுகுஸ்னெ லட்டிங் கம்பெனி என்ற இரண்டு தனிப்பட்ட கம்பெனிகளும் அணு சக்தி கமிஷனிடம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன. பென்ஸில்வேனியா மாகாணத்தில் ஷிப்பிங் போர்ட் என்ற இடத்தில் இந்த மின்சர உற்பத்தி நிலையம் அமைய இருக்கிறது.

****

NPTயில் கையொப்பமிடச் சொல்லித் தற்போது மற்ற நாடுகளை நச்சரிக்கும் அமெரிக்கா 11 ராத்தல் யுரேனியம் போட்டு நகரும் ரயில் வண்டி எதையும் உருவாக்கி ஓட்டவில்லை என்பது நிச்சயமாகத் தெரியும். பென்ஸில்வேனியா ஃபாஸ்ட் ப்ரீடர் ரியாக்டர் பற்றி கூகுளிக்க வேண்டும். அதற்கு முன் யாராவது விவரம் சொன்னால் ஒரு ராத்தல் யுரேனியம் அனுப்பிவைக்கப் பார்க்கிறேன்.

—-

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்