கவிதைப் பம்பரம் -கூ ற ா த து கூ ற ல் – 1

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



முன்னுரை
பட்டாம்பூச்சியின்
சவ ஊர்வலம்

1
நல்ல கவிதைகள் எழுதப்படக் காத்திருக்கின்றன
ஜன மொத்தமும் காத்திருக்கிறது
நானும்

நான் கவித்தாயை எத்துகிறேன்
தாயே தயை செய்
பால்குடிக்க அழுகிறேன்
மன்றாடுகிறேன்

உலகமே அழுகுகிறது
அழுகிறது

2
அகழ்வார் ‘பாதம் ‘ தாங்கும் பூமி என
எடுப்பு தந்த வள்ளுவர், இகழ்வார் பொறுத்தல்
‘தலை ‘ என முடிகிறார். முடிக்கிறார்.
சொல் சமத்காரம்.

வள்ளுவர் வாங்கித் தந்த
டாக்கடை டா

3
… அதிலும் கவிதைப் புத்தகத்துக்கு
முன்னுரை தகாது. கூடாது.
எழுதியவனே தருதல் அடாவடித்தனம்.
ஆள்வைத்து எழுதுவதோ அட்டூழியம்.

ஆகா என்றில்லை. இவை கவிதைகள் ஆகா…
என்ற ரமேஷுக்கு நன்றி. அவன் தந்த ஊக்கம்,
இந்த முன்னுரை.

இந்தப் புத்தகமும்.

4
ஒரு தீக்குச்சி கிழிபடுகிறது
ஒரு கவிதை பிறந்து விடுகிறது

காலம் அப்படி. வேகம் அப்படி.
என்றால் இவை வேணாவா ?
இவையாவது வேணும்.

பற்றியெரிந்தால் நிர்மூலம்
ஜோதியானால் தரிசனம்

5
ஒரு கிள்ளல். அ, திகட்டல்.
கண்ஜாடை. மேக இருட்டு. தலையாட்டல்.
ம், என கன்னச் சொரியல்.

நாளை அரிப்பு அதிகமாகி மருத்துவரிடம்
ஓடட்டுமே. நல்லதுதானே ?

அப்போது இத்தொகுப்பு பேன்டேஜ் துணிபோல்
கழற்றி எறியப்படட்டும்.

சீண்டுதல் சீண்டாமை இலான் என ஆனோர்க்கு
யாண்டும் இடும்பை.

சம்மதியேன் யான்.

நான் பொன்சுடும் நெருப்பு.
சம்மட்டி இரும்பு.

குனிந்து பார்க்கிறேன்
தரையெங்கும் சருகுகள்

நிமிர்ந்து பார்க்கிறேன்
மரமெங்கும் தளிர்கள்.

அவ்வண்ணமே ஆகுக.

—-
புத்தகத்தில் இருந்து சில அறிமுகக் கவிதைகள் அடுத்த இதழில்
/கூறாதது கூறல்/
கவிதைப் பம்பரம் – எஸ். ஷங்கரநாராயணன்
இருவாட்சி வெளியீடு
storysankar@rediffmail.co

Series Navigation