கழிப்பறை காதல்

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

கே ஆர் மணி


கழிவறை ஒரு கலாச்சாரத்தின், பொருளாதாரத்தின் பிரதிபிம்பம். என் கழிவறையை பார்க்கிறேன். எனக்கு சந்தோசமாய் இருக்கிறது. குளியலும், கழியலும் சேர்ந்தே செய்திருக்கிற டைல் பதித்த வெஷ்டர்ன் சொர்க்கம். ‘A CEO IN THINKING ‘ என்று எழுதி வைத்ததிற்கு வீட்டிற்குள் பயங்கர எதிர்ப்பு. சமாதன உடன்படிக்கையின் பேரில், அதை கிழித்துவிட்டேன். என் மனைவி பார்க்காத அசிங்கங்களை கூட அதற்கு தெரியும். என்ன, அது உயிரற்றது. அதற்குள் சின்னதாய் தற்காலிக லைப்ரரி வைத்திருக்கிறேன். அது பெரிதாய் வைப்பதற்கும் என் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

‘படிக்கிற சரஷ்வதியை எங்க வைப்பா ? ‘ அம்மா.

என் கழிவறையில் விவேகானந்தர், காந்தி, கா.மார்க்ஷ், நெப்போலியன் ஹீல், ஷோபாடே, ET, ஆ.வி, சி.கே.பிரகலாத், வெப் டெக்னாலாஜி 2.0 என பலதரப்பட்ட புத்தங்கள் பல்வேறு நேரங்களில்.. பிச்சைக்காரனின் வாந்தி போல இருக்கும். அவ்வப்போது தோன்றுவதை மூடுக்கேற்றவாறு படிப்பேன்.

அலங்காரமான அதீத ஒளி விளக்கு, காவிகலர் டை தரையிலும், வெளிர்கலர் டை சுவரிலும், வெள்ளைக் கதவுமாய் அந்த இடம் பூமியிலிருந்து வேறுபட்டது என்னை பொறுத்தவரையில். சின்ன கண்ணாடி அலமாரிக்குள் விலையுயர்ந்த டை, கோல்ட் ஷ்பைச், கில்லட், சின்ன கத்திரி என்ற என் அழகு சாதனம். பிசுபிசுக்காத மணக்கும் எண்ணெய், கலர் கலராய் சோப்புகள், உயர்தரமாய் என் மயிரை உறுதிப்படுத்தும் சாம்புகள், சிலைடிங் சன்னல் – தேவைக்கேற்ப ஒளியும், ஒலியும் அமைத்துதரும். ஒரோயொரு நெருடல் (சில சமயம், என் தலைக்குமேல் உள்ள இரண்டு புளோர்களிலும் யாரோ வந்து உட்காருவது போல பிம்பம் தோன்றும்போது மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கலைக்கவேண்டும்.

நான் கடந்து வந்த கழிப்பறை வரலாறுகள் சற்று பெரியது. ஒண்டுக்குடித்தனம், பேச்சிலர் ரூம், நட்சத்திர விடுதிகள், ஹாஷ்டல், கிராமத்து வயக்காட்டு ஒரம், வெளிநாட்டு கால் தெரியும் – கழிப்பறைகள் என என் பட்டியல் நீளும். எந்த புதுவீட்டிலும் புத்தக அறையும், கழிப்பறையும் தான் என் கவனம் கவரும். சுத்தம், கலை, மனம் – அங்குதான் நிதர்சனமாயிருக்கும் என்பது என் எண்ணம்.

கழிப்பறையின் மீது என் ‘பொசிவ்னஷ் ஜாஷ்தி’ என்ற என் குடும்ப குற்றச்சாட்டில் முழு உண்மையிருக்கிறது. என் சகோதரனிடம் கூட சின்ன சண்டை. ஆத்திர அவசரத்திற்கு மற்றொரு கழிவறையை நான் பயன்படுத்துவேன், மற்றவர்கள் எனது கழிப்பறையை பயன்படுத்தினால் அவர்களை தொழுநோயாளி போல பார்க்கிறேன் என்ற என் தம்பியின் கூறலில், கொஞ்சம் உண்மை உண்டு. என் நாலு வயது மகன் அதை பயன்படுத்தும் போது கூட நான் எரிந்து விழுகிறேன். ‘அதை கட்டிண்டு அழுங்கோ’ என்பது போல என் ஆணாதிக்க பார்வையை, மெளனமாய் எதிர்ப்பாள் என் மனைவி. ‘அம்மா – மத்த கழிப்பறையை யூஷ் பண்ணினா என்னா ‘ என்ற என் யோசனையை போன்ற கேள்வியில் கொதித்தெழுந்துவிட்டாள். ‘ வாட் நான்சென்ஷ் அது பம்பேய் டாய்லெட், இது வெஷ்ட்ர்ன் வித் ஷ்வர் .. அம்மா மஷ்ட் பீ பீலிங் கம்பெர்ட்..’ அட்லிஷ்ட் தட் மச் யூ ஷீட் டூ ‘ ஐந்து வருடமே பழக்கமான மாமியார் மீது அவளுக்கிருக்கும் பற்று கூட

மூப்பத்திரண்டு வருடமாய் வளர்த்த என் அம்மா மீது இல்லாது செய்துவிட்டது இந்த கழிப்பறை காதல். இந்த கழிப்பறையில் தான் நான் கால் உடைந்து கிடைந்த போது அம்மா என்னை கழுவினாள். சின்ன வயதிற்குபின்னும் என்னை அம்மணமாய் குளிப்பாட்டினாள். ஆனாலும் என் கழிப்பறை காதல் அளவுக்கதிகமாகவே என் கண்ணை மறக்கிறது. அது எனக்கே தெரிய வந்த போது ,கொஞ்சம் ஆச்சரியப்பட்டுத்தான் போனேன்.

‘தங்கித்தான் போங்கோளேன் ‘ – அம்மா.

‘ எங்களுக்கெல்லாம் கொஞ்சம் வசதிக்குறைவு ‘ என்ற என்சுற்றம் முகம் சுளிக்கும். அந்த ஒண்டுக்குடித்தன கழிப்பறையை நினைத்து முகம் சுளிக்கும். அப்போது புரியாவிட்டாலும் இப்போது புரிகிறது அவர்களின் அவக்ஷ்தை. அது கூடவே ஞாபகம் வருகிறது, அம்மாமையின் (பாட்டி) தியாகம். பெரிய கிராமத்து வீட்டில் வசதியாயிருந்த கழிப்பறையை விட்டுவிட்டு (என் தந்தை போனபின் ) எங்களோடு கக்ஷ்டப்பட சம்மதித்தது, தியாகம் தவிர வேறென்னயிருக்க முடியும். அப்படிப்பட்ட வழித்தோன்றலில் வந்த எனக்கு, ஏன் கழிப்பறை காதல் முற்றிப்போனது ? அம்மாவையும், பிள்ளையும் விட.

இந்த குற்ற உணர்ச்சிகள் என்னைத் தாக்கினாலும் என் கழிப்பறை காதலின் வீரியமும், கழியலும், குளியலும் தனி மனித தியானம் – என்கிற உலகார்ந்த (!) தத்துவமும் தொடர்கின்றன.கழிப்பறை தலைப்பில் நம் தேசப்பிதாவைத்தான் மறக்கமுடியுமா ? தமது கழிப்பறையை தானே சுமந்து சென்ற – அவர் நமக்கு சொன்ன செய்திதான் எவ்வளவு சுத்தமானது. நம் பொதுக்கழிப்பறைகளில் கிடைக்கிற எழுத்தும், வரைபடமும் நம் கலாச்சார அளவின், மனச்சிதைவின் – தெர்மாமீட்டர்.

ஏன் இந்த கருமாந்திர கழிப்பறை காதல்.. எதையும் தாண்டி புனிதமானது ..என்ற அளவுக்கு போகிறதே என்ற உங்கள் கவலை, முகச்சுழிப்பு புரிகிறது. நானும் புதிய மாதவியின் கவிதைத் தொகுப்பின் கழிப்பறை கவிதையை இவ்விதமே எதிர் நோக்கினேன். ஆழ்ந்து யோசிக்க கிடைத்ததே இந்த கட்டுரை. இது முழுக்க, முழுக்க கழிப்பறை கவிதைகளின் தொகுப்பு என தவறாய் கருதிவிட வேண்டாம். நிறைய கவிதைகள்.. பல தலைப்புகளில். சிவகாமியின் முன்னுரையில் கூட இந்த கழிப்பறை கவிதைகள் பற்றி, எந்தவித மேற்கோள்களுமில்லை. (மறந்திருப்பாரோ ?)

நிழல்களை தேடி – கவிதை தொகுப்பு

படைப்பாளி – புதியமாதவி ; விலை : ரூபாய் – 60

puthiyamaadhavi@hotmail.com

இது புதிய மாதவியின் கவிதை தொகுப்பின் விமர்சனமல்ல. ஒரு சில கவிதைகள், அதுவும் மும்பைசார் கவிதைகளின் வீச்சும், புன்புலமும், ஆழமும், அகலமும் அறிய முற்பட்ட ஒரு வாசகனின் அநுபவம் தான். கவிதைகள் வெறும் வார்த்தைகளல்ல என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவை வாசக இதயங்களில் சின்ன முடிச்சுகளை, சொடுக்குகளை தயாரிக்கிறது. என் நியூட்ரான்களின் படச்சுருள் போல் உங்களுள்ளும் எழலாம். கவி வார்த்தைகளும், அது உங்களின் அனுபவங்களோடு முயங்கி ஏற்படும் போதை கலவையும், கவலையும் தான் இந்த கட்டுரை, வாசகனுபவம்.

காலை வணக்கம் – மும்பையின் நிதர்சனம் காட்டும் கவிதை. ஒட்டுக்குடுத்தன(சால்) வீடுகளுக்கு கழிப்பறை ஒரு உல்லாசம். கீழ்தட்டு மனிதர்களின் நிலையிலிருந்து புனையப்பட்ட இந்த கவிதையின் ஊடான வலியும், வருத்தமும் – கவலையூட்டுவதாய கணக்கிறது.

‘மாப்பிள்ளை வீட்டில்

வசதியானவர்கள்’ என்றார் அப்பா.

‘அப்படி என்ன கொட்டிகிடக்கிறதாம்’

அலுத்துக்கொண்டாள் அம்மா.

‘அடப் போடீ வீட்டோ ட இருக்கே கக்கூசு ‘

இப்படி நீள்கிற கவிதை நம் கன்னத்தில் அறையும். அது முடிகிறது இப்படி.

‘நித்தமும் டப்பாவுடன் ஒடிக்கொண்ருக்கும்

அம்மாவும் அப்பாவும் எங்கள் சால்வீடுகளின்

காலைவணக்கம் கேட்டு

கண்விழிக்கிறது – கழிவறை சூரியன்.

கழிவறை சூரியனா ? – புது சொல்லம்பு. தைக்கிறது.

அவை வெறும் புலம் பெயர்ந்தவரின் கவிதை மட்டுமல்ல. நம் பொருளாதாரத்தை, நகர்புற நெருக்கடியை, மன அவலத்தை, மாற்றத்தை சொல்ல வேறெதுவும் வேண்டியதில்லை. அதுவும் மும்பையின் தண்டவாளங்களிலும், தாராவியின் சந்துகளிலும் அதன் மணம், குணம் சற்று தூக்கலாகவே தெரியவரும். என் நண்பன் சொல்வான், ‘ சென்னையிலிருந்து நான் முத தர மும்பாய் வரப்போ.. என்னை எழுப்பிவிட்டதே.. இந்த நாத்தம்தான்..’

அம்மாக்களின் அவஷ்தை –

இரண்டு நிமிஷத்திற்கு ஒரு இரயில்

அறிவித்தார் அமைச்சர்.

அச்சப்பட்டார்கள் – என் அம்மாக்கள்

அடிக்கடி எழுந்துநிற்கும்

அவஷ்தையை நினைத்து..

உண்மையில் என்னை அதிகமாய் சங்கடப்படுத்திய கவிதை இது தான். நினைத்து பார்க்கவே,

பயமுறுத்தும் அவர்களின் மனநிலை. மும்பை புறநகர் இரயில் பயணத்தின் தவிர்க்கமுடியாத காட்சியாய் இதுயிருக்கும். தூக்கிபிடித்த புடவை, அகண்ட கால்கள், உலகத்தையே புடிக்காது போல முகம் திருப்பல், அதிகமான வெறுப்பு ஆபத்து என உணர்ந்து வெறுப்பான நிலம் நோக்கிய சாக்கடை சிரிப்பு. நாற்றத்தில் பால் உறுப்பு தேடும் ரயில் பயண கனவான்கள்.

‘கழிவறை கட்டணம் இருந்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் ‘ என்கிறது, கழிவறையின் விலை – கவிதை

இன்னும் 5 லட்சத்துக்குமேல் மனிதர்கள், மனித மலம் தூக்கிறார்கள்.. என்கிறது ஒரு கணக்கு.

‘ஏதோததுக்கு மிஷின் பண்றீங்க.. இதுக்கு ஏதாவது.. பண்ணக்கூடாதாடா..’ என்ற விவேகமாய் கேட்கும் நகைச்சுவை நடிகரின் கூற்றில் தான் எவ்வளவு உண்மை. எண்ணெய் ஈராக்கிலிருந்து பத்திரப்படுத்தி பாகிஷ்தான் வழியாய் கொண்டுவரும் லாபகரமான அறிவியல் தொழில்நுட்பம், மலம் தூக்கும் நம் சகோதரர்களுக்கு உபயோகப்படுத்தக் கூடாதான்ன.. மும்பாயில், கழிவுகள் உடனுக்குடன் எரிவாயுவாய் தயாரிக்கப்பட்டு அந்த கட்டிடங்களுக்கே உபயோகப்படுத்தக்கூடிய தொழில் நுட்பம் வந்து விட்டன. காலப்போக்கில் இந்த கழிவுகள் கரையும், கறையும். கரைய வேண்டும்.

உங்கள் நினைவுக்கு: இந்தியாவில் முதன்முறையாய் இரயில் விட்டது மும்பையில்தான். அதுவும்

தானே- மும்பாய் வி.டி. பரப்புதான் (1885 -என்று ஞாபகம்) ரயில் கோடுகளால் இணைக்கப்பட்டது.

இத்தனை வருடங்களுக்கு பிறகும் ரயில் தண்டவாளங்களும், மனிதர்களும் அப்படியே. (?)

கழிவறை ஆவணம் – இது கவிதை தாண்டிய தலைமுறை படிமங்களை காட்டுவதாய் எனக்குப்படுகிறது

கழிவறை கட்ட

அடிக்கல் நாட்டியது அப்பா

கட்டியது நாங்கள்

திறந்து வைத்தவர் மகன்

தண்ணீரில்லாமல் சொறிநாய்களின்

சொர்க்கமாய் – ஒர் அரசியல் பரம்பரையின்

ஆவணமாய் – உடைந்த கதவுகளுடன்

இன்றும் எங்கள் கழிவறை.

கழிவறைப்பற்றி வலைமேய்ந்து கொண்டிருந்த போது படித்த செய்தி. டில்லியிலுள்ள ஒரு பொதுக்கழிப்பறை, அதை பராமரிப்பவர்கள் பிராமணர்கள் என்கிறது. டாக்டர். பட் என்பவர் அதை நடத்தி வருகிறார். தொழில் சார்ந்த சாதீய கட்டுமானம் நெகிழ்கிறாதா ? ஒடைகிறாதா ? இது ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமா? வெறும் விதிவிலக்கா.. காலம் பதில் சொல்லட்டும்.

இதைவிட்டு விட்டு, மும்பை கழிப்பறைக்கு போவோம். புறநகர் வண்டிகளில் பயணம் செய்யும்போது, காற்றுவாங்க உட்கார சோம்பல்பட்டு, அதன் வாயில் தொங்கிக்கொண்டு போகும்போது, கையில் சொம்புடன் தூக்கி பிடித்த கைலியோ, புடவையுடனோ தண்டவாளங்களின் ஒரங்களில் பார்க்கலாம். கூனிக்குறுகி போகும் பெண்களின் கண்கள், அவமானமாய் தொங்கும் ஆண்களின் தலைகள், அங்காங்கே அரைகுறையாய் தென்படுகிற நிர்வாணம் – சொல்லும் ஆயிரம் கவிதைகள். அது போக சாலில் ( நம்மூரு ஒண்டுக்குடித்தனம்) வாழும் மனிதர்களுக்கு எல்லாமே ( உணவு, உடுப்பு, கழிவு) ஒரே அறையில். டாப்பாவுடன் போட்டிபோடும் கழிவறைகள் என வசதிக்கேற்ப உல்லாசங்களை அவர்கள் துய்க்கமுடியும் (!)

என் கழிப்பறையை நான் வெறுக்க ஆரம்பித்தேன். அந்த கழிவறையை பார்த்தபின். அதை கழிவறை என்று சொல்வது சொல், பொருட் குற்றம். உல்லாச ஒய்வறை என்று சொல்லிக்கொள்ளலாம். மும்பையின் முக்கிய பத்து கம்பெனிகளில் ஒன்று அவருடையது. கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துவைத்திருப்பார். அவர் வீட்டிற்கு தொழில் நிமித்தமாய் போய்பேச வேண்டி வந்தது. அவருக்கு தனது சின்ன வீட்டை

( 14 புளோர், 47 அறைகள் ) கம்பியில்லா முறைமூலம் இணைத்து இணையம் மற்றும் சில தொழில்நுட்பம் பொருத்த வேண்டுமாம். வீட்டை பார்வையிட்டேன். அவரது மகளின் அறைக்கு கூட்டிச்சென்றார். கிட்டத்தட்ட 3000 அடி கொண்டது. கண்ணாடி கதவுகளாய் ஆனாது. அது கடல் மட்டத்துக்கு கீழேயிருந்தது. சுவர்களின் மீது அலைகள் மோதும். கார்பெட் போட்ட தரை, அந்த பெண்ணுக்கு என் வயசிருக்கும். அது முக்கியமில்லை. அந்த கழிப்பறை என் வீடு போலிருந்தது. அதற்குள், என் வரவேற்பறையைவிட பெரியதாயிருந்த லைப்ரரி, மடிக்கணணி ( Laptop ) உடற்பயிற்சி கருவிகள், எடைமிஷன் ஒரு தளம் அமர்ந்து கொண்டே கழிக்க, குளிக்க.. நான் அசந்துபோனேன். கழிப்பறைக்குள் அந்த பெண்ணுக்கு இணையம் வேணுமாம்..

என்னால் அந்த இரவு தூங்கமுடியவில்லை. அன்றிலிருந்து என் கழிவறைக் காதல் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்துவிட்டது. நான் புலம்ப ஆரம்பித்துவிட்டேன். ‘ நம்ப அடுத்த வீட்டில பெரிய.. அதுல..பாத்டாப்.. சூப்பர் ஆப்பிள் லேப்டாப்.. ”

நான் ஒரு நாள் ஞாயிறு உணவு வேளையின் போது சொல்ல, என் குடும்பம்

வழக்கம்போல சிரித்தது. அவர்களுக்கு தெரியாது. என் வலியும்..எதிர்பார்ப்பும்..

நான் ஒரு நாள் ஞாயிறு உணவு வேளையின் போது சொல்ல, என் குடும்பம்

வழக்கம்போல சிரித்தது. அவர்களுக்கு தெரியாது. என் வலியும்..எதிர்பார்ப்பும்..

“கீழே ஒரு ஷ்கேனர். வச்சுகிட்டா, அப்படி ஷ்கேன் பண்ணி ரிப்போர்ட்டும் டாக்டர்கிட்டே வயர்லெஷ்ல கொடுத்துடலாம்டா.. ” தம்பி கிண்டலடித்தான்.

” வாய பொத்துண்டு .. கிருஷ்ணா, ராமன்னு சாப்பிடுங்கோடா..” அம்மா.

எல்லோரும் வாய் பொத்தினோம். ‘தனி ஒருவனுக்கு கழி… றை.. இல்லையெயினில் ஜகத்தினை அழித்திடுவோம்..’ எனக்கும் வேண்டும் – Privatised, liberalised and globalised Toilet.. (PLG) கழிப்பறை.

மனசு மற்றும் சுழன்று கொண்டேயிருந்தது. மும்பையின் கழிப்பறை உலகம் சமுதாய அவலத்தின் அப்பட்டமான நிதர்சனம். புதிய மாதவியின் கழிப்பறை கவிதைகள் .. இவை வெறும் கவிதைகள் அல்ல. ஒரு முக்கியமான, அழுக்கான, தூர் நாற்றம் வீசும் ஆனால் உண்மையான பதிவுகள். இலக்கியம் மட்டும் காலத்தின் கண்ணாடிகள் அல்ல, கழிவறைகளும் தான்.


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி