கருணை மனு

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

ம.வே. சிவகுமார்


ம.வே. சிவகுமார், நாள்: 31.12.2006
‘ஞானானந்தா”,
41யு, 5-வது தெரு,
சுதர்சன் நகர்,
மாடம்பாக்கம்,
சென்னை – 600 073.
தொலைபேசி எண்.64503516

அன்புள்ள திரு…………………………………………………….. அவர்களுக்கு,

வணக்கம். என் பெயர் ம.வே. சிவகுமார். தமிழ் எழுத்தாளன். இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு பரிச்சயமான பெயர். தமிழில் நல்ல சிறுகதைகளும், நாவல்களும் எழுதி என் தனித்துவத்தை நிரூபணம் செய்திருக்கிறேன். இந்தக் கடிதம் என் வாழ்க்கையைப் பற்றியது. என்னை அறிந்தவர்கள் ஆயிரம் பேர் இந்தக் கதைக்கு சாட்சியாய் இருக்கிறார்கள். உண்மையில் நடந்த கதை. தன் திறமை மூலம் உலக அளவில் சாதிக்கப்புறப்பட்ட ஒரு கோமாளியின் சோகக்கதை.

நடுத்தர வர்க்கம். பாங்க் ஆப் பரோடாவில் கேஷியர் வேலை. அளவான சிறிய குடும்பம். ஆதரவாய் ஒரு மனைவி. வங்கிக் கடனில் சொந்த வீடு. இறைவன் நான் கேளாமலேயே எல்லா நலன்களையும் வாரி வழங்கினான்.

எனது முதல் சிறுகதை 1979-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘கணையாழி” இலக்கிய இதழில் பிரசுரமானது. சீக்கிரமே கல்கி, விகடன் உள்ளிட்ட எல்லா தமிழ் இதழ்களுமே என் சிறுகதைகளைப் பிரசுரிக்கத் தொடங்கின. எழுத்தில் ஆபாசத்தை தவிர்த்தேன். பணம் அல்ல, திறமை மூலம் நல்ல பெயர் சம்பாதிப்பதே என் நோக்கமாய் இருந்தது.

திரு.கஸ்து}ரி ரங்கன், திரு.ஜெயகாந்தன், திரு.அசோகமித்திரன், திரு.ஆதவன், திரு.சுப்ரமண்ய ராஜீ போன்ற தேர்ந்த இலக்கிய ரசிகர்களால் நான் கவனமாய் வார்க்கப்பட்டேன். நுழைந்த வேகத்திலேயே ஒரு தேர்ந்த எழுத்தாளனாய் பரவலாய் அங்கீகாரம் பெற்றேன்.

என் தேடலின் தொடர்ச்சியாக ‘பதேர் பாஞ்சாலி” உள்ளிட்ட வங்காள இயக்குனர் சத்யஜித்ரேயின் சில திரைப்படங்கள் காணக்கிடைத்தது. சாருலதா, ஜல்சாகர் போன்ற படங்கள் என்னுள் சினிமா ரசனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின. தமிழில் ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன். தொடர்வதாக மிருணாள் சென், ஷியாம் பெனேகல், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன். நிர்மால்யம், எலிப் பத்தாயம், முகா முகம் சோமன துடி, சம்ஸ்காரா போன்ற கலைப்படைப்புகளைப் பார்த்தபோது ஒரு இளம் படைப்பாளியாக களத்தில் குதித்து ஆட்டத்தில் நானும் பங்கேற்க விரும்பினேன்.

ஹிந்தியில் அமோல் பலேகர் போல் தமிழில் ஒரு பேரலல் சினிமாவுக்கு முயற்சி செய்ய தீர்மானித்தேன்.

கல்கத்தா அல்ல, சென்னையே இந்தியாவின் கலாச்சார தலைநகரமாய் திகழ வேண்டும். வங்காளிகளை விட தமிழனின் அலைவரிசை சிறந்து உயர வேண்டும். இதற்கு நான் உழைக்க வேண்டும். அடிப்படையில் சத்யஜித்ரே ஒரு சிறுகதை ஆசிரியர்தான். முயற்சி செய்தால் என் படைப்புகள் மூலம் குறைந்தபட்சம் நான் தமிழ்நாட்டின் கிhPஷ் கர்னாட் ஆக ஆகிவிடமுடியும் என்று என் உள்குரல் சொல்லிக் கொண்டேயிருந்தது.

இதே நேரத்தில் தொலைக்காட்சியில் தேசீய ஒளிபரப்பில் தொடர்களாய் வந்த ஏக் கஹானி, சந்தீப் ரே பிரஸெண்ட்ஸ், நுக்கட், மால்குடி டேஸ், தமஸ் போன்ற படைப்புகள் எனக்குள் உயர்ந்த இரசனையை தோற்றுவித்தன. தமிழில் இதுபோல் விதவிதமான தரமான படைப்புகளைத் தர வேண்டும் என்ற ஆவல் என் ஆழ்மனதில் வலுப்பெற்றது.

என் முதல் முயற்சியாய் பெரும் எதிர்பார்ப்புகளுடன் சில னுகுவு நண்பர்கள் துணை சேர்ந்து சென்னை தொலைக்காட்சியில் நான் சமர்ப்பித்த கணையாழியில் பரிசு பெற்ற எனது கடைசங்கம் குறுநாவல் தேர்வு செய்யாமல் நிராகரிக்கப்பட்டது (1986).

இதற்கிடையே தினமணிக்கதிரில் ‘வேடந்தாங்கல்” என்ற நாவலைத் தொடராக எழுதி அநேக இளம் வாசகர்களை என்பால் ஈர்த்தேன். (1983).

எனது முதல் சிறுகதைத் தொகுதி ‘அப்பாவும், இரண்டு ரிக்ஷாக்காரர்களும்” 1986-ம் ஆண்டு திரு.கி. கஸ்து}ரி ரங்கன் முன்னிலையில் திரு.த. ஜெயகாந்தன் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது.

வங்கி வேலையுடன் கூடுதலாய் நான் விரும்பிய படைப்புத் துறையில் ஒரு சமூக அங்கீகாரம் கிடைத்ததில் என் நடையில் கம்பீரம் கூடியது.

குமுதம் அரசு பதிலில் தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு வாசகர் கேள்விக்கு அமரர் திரு.எஸ்.ஏ.பி. அவர்கள் தன் பதிலில் என் பெயரை மட்டுமே குறிப்பிட்டு எனது சிறுகதைகளை வாசகர்களுக்கு சிபாரிசு செய்தார்.

தொடர்வதாக ‘நாயகன்” என்ற எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளியானது (1987).

என் சம கால எழுத்தாளர்கள் நடுவே எழுத்தில் சிறந்த Craftsman என்று நிரூபணம் செய்திருக்கிறேன். எனது இந்த திறமையை நம்பி தமிழ் திரையுலகில் ஒரு மறுமலர்ச்சிக்காக தொடர்ந்து முயற்சிகள் செய்து கொண்டிருந்தேன். எனது கதைகளை நானே இயக்கினால் மட்டுமே எனக்கு முழு திருப்தி கிடைக்கும் என உணர்ந்து ஒரு நல்ல இயக்குனரிடம் பயிற்சி பெற விரும்பினேன். அவ்விதமே இயக்குனர் சிகரம் திரு.மு. பாலசந்தரை சந்தித்தேன் (1987).

திரு.K.B.. என்னிடம் உடனடியாக ஒரு 13 வாரத் தொடருக்கான கதை சொல்லும்படி கேட்டார். ஒரு படைப்பாளியாக அவரை நான் வெகுவாக வசீகரித்தேன். ‘உன் observation-ம், Humour-ம், visual media-வுக்கு வந்தா நீ எங்கியோ போயிடுவே” என்று என்னைப் பற்றிய என் சுய கணிப்பை ஊர்ஜிதம் செய்தார். நான் சொன்ன ‘இரண்டாம் அத்தியாயம்” என்ற கதை அவருக்குப் பிடித்துவிட்டது. எனினும் பரஸ்பரம் வேறு காரணங்களால் அதற்கு மேல் எதுவும் அப்போது நடக்கவில்லை.

ஒரு அரசு நிறுவனத்தில் என் கதையை திரு.பாலசந்தர் சமர்ப்பித்தால் அது அங்கீகாரம் பெறும். அதே கதையை நான் என் பெயரில் சமர்ப்பித்தால் அது நிராகரிக்கப்படும். அன்றும், இன்றும் சென்னை தொலைக்காட்சியின் நிலை இதுதான். ‘‘Script approval” என்ற பெயரில் நடப்பதென்னவோ ‘producer approval” தான். இதைத்தான் ஒரு வாழ்நாள் காலமாக எதிர்த்து வந்திருக்கிறேன்.

‘நான் இல்லேன்னா வந்துடுவியா? கவிதாலயா பேனர் இல்லேன்னா வந்துடுவியா?” என்று திரு.மு.டீ. என்னிடம் ஆவேசமாய் மார் தட்டியபோது என் வாழ்நாளில் ஒரு இயக்குனராக அவர் முன்னால் வந்து காட்ட வேண்டும் எனத் தீர்மானித்தேன் (1988).

சென்னை தொலைக்காட்சி நிலையம் மீண்டும் 13 வாரத் தொடருக்கான கதைகளை வரவேற்றது. நான் திரு.பாலசந்தருக்காக யோசித்திருந்த ‘இரண்டாம் அத்தியாயம்” கதையை சமர்ப்பித்தேன். திரு.K.B.-யின் ‘இரயில் சினேஹம்” என்ற தொடர் அங்கீகாரம் பெற்றது. எனது ‘இரண்டாம் அத்தியாயம்” தொடர் நிராகரிக்கப்பட்டு இந்த நிமிடம் வரை என் தலையில் ஒரு பாரமாகவே இருக்கிறது.

திரு.முக்தா சீனிவாசன் அவர்களை சந்தித்து அவருடைய படக்கம்பெனியில் இயக்குனர் துறையில் ஒரு பயிற்சியாளனாய் பணியாற்ற அவருடைய சம்மதம் பெற்றேன்.

அவ்விதமே திரு.பாண்டியராஜன் நடித்த இரண்டு படங்களுக்கு பலவித கஷ்டங்களுக்கு நடுவே என் வங்கி வேலைக்கு விடுமுறை அறிவித்தும், சம்பளமே இல்லாத விடுப்பிலும் ஒரு சம்சாரியாக எனக்கு கடமைகள் இருந்தும் நஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் என்னை தயார் செய்து கொண்டேன் (1988 – 1990).

நடுவே எங்கள் வங்கியின் சார்பாக ஒவ்வொரு வருடமும், வௌ;வேறு மாநிலத்தில் நடத்தப்படும் அகில இந்திய நாடகப்போட்டிகளில் யு.பு.’ள ஆபீஸில் திரு.மு.டீ. போலவே தொடர்ந்து நான் பெற்ற வெற்றிகளும், பரிசுகளும் ஒரு படைப்பாளியாய் என் உத்வேகத்தை அதிகரித்தன.

இவ்வாறு பல முறை என் திறமையை எனக்கு நானே நிரூபணம் செய்து கொண்டேன்.

1990-ஆம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தியைத் தோற்கடித்து திரு.வி.பி. சிங் பிரதமரானார். தகவல், ஒலிபரப்பு அமைச்சர் திரு.P. உபேந்திரா. வி.பி.சிங் அரசு பதவியேற்றதும் முந்தைய ஆட்சியில் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்க அங்கீகாரம் வழங்குவதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், அவ்வாறு ஏற்கனவே வழங்கப்பட்ட அங்கீகாரங்களை புதிய அரசு மறு பரிசீலனை செய்யும் என்றும் அறிவிப்பு செய்தது.

இதை நம்பி என் தகுதிகளை வரிசைப்படுத்தி எனக்கு நியாயமாய் ஒரு வாய்ப்பு கேட்டு திரு.P. உபேந்திராவுக்கு 26.01.1990-ல் நான் எழுதிய கடிதமும், அதற்கு அவரிடமிருந்து வந்த வாழைப்பழ பதிலும் என் விரக்தியை மேலும் அதிகரிக்கச் செய்வதாய் இருந்தன.

ஆனால் அதே வருடம் என் கதைகளைப் படித்த திரு.கிரேஸி மோகன் மூலம் திரு.கமல்ஹாசன் என்னைப் பற்றி கேள்விப்பட்டு தன்னுடன் திரையுலகில் சேர்ந்து பணியாற்ற எனக்கு அழைப்பு விடுத்தார். எனது ‘வேடந்தாங்கல்” நாவல் திரு.கமல்ஹாசன் முன்னுரையுடன் வெளியானது (1991). என் ‘நவீன சிறுகதைகள்” என்ற சிறுகதை தொகுப்பை அவரே தலைமை தாங்கி வெளியிட்டார் (1992). ஒரு வார இதழின் கேள்வி பதிலில் படித்ததில் பிடித்தது ஆங்கிலத்தில் Jurasic Park. தமிழில் திரு.ம.வே. சிவகுமாரின் வேடந்தாங்கல் நாவல் என திரு.கமல்ஹாசன் பதில் எழுதியிருந்தார். அவர் விடுத்த அழைப்பை ஏற்று 1992-ல் வெளியான ‘தேவர் மகன்” திரைப்படத்தில் ஒரு உதவி இயக்குனராய் பங்கேற்றேன். மீண்டும் வங்கியில் சம்பளமில்லா விடுமுறை. மனதில் இலட்சிய வெறி உந்த கஷ்டங்களை கடன் வாங்கித் தாண்டினேன். எனினும் சோலையை நோக்கிய என் பாலைவனப்பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

‘தேவர் மகன்” வெளிவந்த அதே தீபாவளி நாளில் கல்கி சிறப்பிதழில் எனது ‘பாப்கார்ன் கனவுகள்” என்ற நாவல் தொடராக வெளிவரத் தொடங்கியது. வாசகர்களின் பரவலான பாராட்டையும் பெற்றது (1992).

அதில் வரும் லஷ்மி நாராயணன் கதாபாத்திரம் நான்தான். எனக்குள் ஒரு இயக்குனரும், ஒரு நடிகனும், ஒரு எழுத்தாளனும் புகுந்துகொண்டு ஒட்டு மொத்தமாய் வெளிப்பட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நினைத்த விதம் நான் வெளிப்பட்டால் நிச்சய வெற்றி. எதிலும், எப்போதும் நான் தோற்கிறவன் கிடையாது. இது நான் வாழ்ந்த சரித்திரம்.

எங்கேயோ நெய்வேலியில் பிறந்த நான் என் எண்ண வேகத்தாலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்ற இலட்சிய புருஷர்களிடையே சொற்ப காலம் ஒரு கோட்டில் இணைந்திருந்தேன். மறக்க முடியாத பல்வேறு அனுபவங்களை பொக்கிஷமாய் சேர்த்தேன். சிவாஜியிடம் பராசக்தி வசனம் பேசிக் காட்டினேன். ‘வாடா ஜீனியர்” என்று அனைவரின் முன் ஒரு முறை சிவாஜி அழைத்தார். அதையே ஆசியாகக் கொண்டு பெற்ற பயிற்சியையும், திறமையையும் நம்பி பண விஷயத்தில் நிராயுதபாணியாய் நண்பர்களின் வாக்குறுதிகளை நம்பி கலைஞர்களுக்கே உரிய முட்டாள் தைரியத்தில் எனது ‘பாப்கார்ன் கனவுகள்” நாவலை ‘உங்கள் ஜுனியர்” என்ற பெயரில் திரைப்படமாய் எடுக்கப் போவதாய் அறிவித்தேன்.

The beginning of my end.

துவக்க விழா தந்தி பேப்பர் விளம்பரம் பாடல் பதிவுடன் யுஏஆ ‘ஊ’ தியேட்டரில் நடந்தது. ரூ.10 இலட்சம் தருவதாகச் சொன்ன தொழிலதிபர் வாக்கு தவறினார். அறைகுறையாய் பாடல்கள் பதிவு செய்த காஸெட் ஒன்றும், சுமார் டூன்று லட்சம் கடனும்தான் மிஞ்சியது (1993).

எழுத்துலக தேடல்கள்;, அடிமாட்டு விலையில் பிரசுரம், சொந்தமாய் புத்தக பதிப்பு. தேர்ந்த தலைமையில் நானே நடத்திய வெளியீட்டு விழாக்கள், இலட்சியம் என்ற பெயரில் ஒரு இயக்குனராக வேண்டி அலுவலகத்தில் சம்பளமில்லாமல் நான் எடுத்த விடுப்புகள், பெரும் செலவை விழுங்கிய மேடை நாடகங்கள், தவிரவும் கூடுதலாய் ஒரு சராசரி குடும்பத் தலைவனின் சுமைகள். ஒரு மத்திய தர வர்க்கத்து இளைஞனால் எத்தனை பாரம் சுமக்க முடியும்?

கடன், வட்டி, மேலும் கடன், மேலும் வட்டி என்ற விஷ வட்டத்தில் ஒரு அசடனாக நானே வலியப்போய் சிக்கிக் கொண்டேன். பலு}ன் பெரிதாகிக் கொண்டிருந்தது. பாதியில் நிறுத்த முடியாமல் நான் ஊதிக்கொண்டே இருந்தேன். என்னை வைத்து கந்து வட்டிக்காரர்கள் சம்பாதித்தார்கள். ஒரு வங்கி ஊழியனாய் என் கௌரவத்தைக் காப்பாற்ற பணத்தைக் கொடுத்து பணத்தை வாங்கினேன். இறைவன் எனக்கான புதைகுழியை என் கையாலேயே தயார் செய்து கொண்டிருந்தான்.

நான் அணுகிய படாதிபதிகள் ராமராஜனுக்கு கதை கேட்டார்கள். ‡பைனான்ஷியர்கள் நான் சொன்ன கதையைக் கேட்டு எதுவும் பிடிபடாமல் ஏற இறங்கப் பார்த்தார்கள். வெறும் வர்த்தக சூழலில் தக்க பிடி கிடைக்காமல் நான் போராடிக் கொண்டிருந்தேன்.

1994-ஆம் வருடம் சென்னை தொலைக்காட்சி நிலையம் மீண்டும் 13 வாரத் தொடர்களுக்கான கதைகளை வரவேற்றது. இந்த முறை நான் பரிசீலனைக்காக எனது இரண்டு நாவல்களை சமர்ப்பித்தேன்.

அ) கமல்ஹாசன் முன்னுரையுடன் கூடிய எனது வேடந்தாங்கல் நாவல்.

அ) ஒரு திரைப்படமாய் நான் திட்டமிட்டு துவங்கி முடிக்க முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்த எனது ‘பாப்கார்ன் கனவுகள்” நாவல்.

இரண்டில் ஒன்று அங்கீகாரம் பெற்றாலும் கிளைமாக்ஸில் நான் ஜெயித்து விடுவேன் என்கிற நிலை. எங்கே என் படைப்புகள் இந்த முறையும் வழக்கம் போல் உரிய கவனம் பெறாமல் போய் விடுமோ என்ற பயத்தில் தக்க போலீஸ் முன் அனுமதி பெற்று என்னைப் போன்ற நடுத்தரவர்க்கத்து திறமைகளை கழித்துக் கட்ட து}ர்தர்ஷன் கடைசி நேரத்தில் Just before approval stage-ல் இரண்டு எபிசோடுகள் ஷீட் செய்து இணைக்கப்பட வேண்டும் என்று விதித்த புதிய நிபந்தனைக்கு எதிராக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தேன். ( )

விகடன் இதழில் ‘அனு, அக்கா, ஆண்ட்டி” பகுதியில் சிறிய புகைப்படத்துடன் என் உண்ணாவிரத செய்தியை வெளியிட்டார்கள்.

மொத்த மீடியாவிலும் ஒரு எழுத்தாளனின் நியாயமான போராட்டத்துக்கு கிடைத்த அற்ப இட ஒதுக்கீடு இவ்வளவுதான்.

உண்ணாவிரதம் இனிதே முடிந்தது. இந்த முறையும் நான் சமர்ப்பித்த தொடர்களை சர்வ அலட்சியமாய் சென்னை தொலைக்காட்சி நிலையம் நிராகரித்தது.

1995-ஆம் வருடம் திரு.பூர்ணம் விஸ்வநாதன் முன்னிலையில், குருகுலம் நண்பர்கள் ஆதரவில் எனது ‘பாப்கார்ன் கனவுகள்” நாவல் வெற்றிகரமாய் மேடையேறியது. என் 40-வது வயதில் ஒரு நடிகனாக ‘லஷ்மி நாராயணன்” கதாபாத்திரத்தில் முதன் முறையாய் மேடையேறி என் திறமையை உலகுக்கு மீண்டும் ஒரு முறை கோடி காட்டினேன்.

உலகத்தின் உதாசீனம் தொடர்ந்தது.

எனினும் என் விடா முயற்சிகளின் விளைவாக சென்னை தொலைக்காட்சி நிலையம் நான் எழுதி திரு.பூர்ணம் விஸ்வநாதன் நடித்த ஒரு அரைமணி நேர நாடகத்தை சொந்தமாய் தயாரித்து என் வாயை அடைத்தது. ஒளிபரப்பப்பட்ட நாள் முதலாய் இதுவரை நு}று முறைகளாவது மறு ஒளிபரப்பு செய்து நிலையம் என்னை வெறுப்பேற்றுகிறது.

1997-ஆம் வருடம் மூன்றே நாட்களில் ஒத்திகையேயில்லாமல், நான் ஜெய்ப்பூரில் அரங்கேற்றிய ‘விமோசனம்” நாடகம் அகில இந்திய அளவில் நடந்த வங்கி நாடகப்போட்டியில் எனக்கு சிறந்த கதை, சிறந்த நாடகம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என வெற்றிக் கோப்பைகளை அள்ளிக் கொடுத்தது.

கடவுள் என்னிடமிருந்த தங்கத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு பதிலுக்கு பித்தளை கோப்பைகளை எனக்கு பரிசாக அளித்தான்.

1999-ஆம் வருடம் ஹன்ஸாவிஷன் தயாரிப்பில் சன் டிவியில் என் கதை ‘ஆலயம்” யாரோ திரைக்கதை எழுதி, வேறு யாரோ வசனம் எழுதியும் வெற்றி பெற்றது.

அடுத்த வருடம் அரங்கேறிய எனது ‘ரங்கோலி” நாடகத்திற்காக மைலாப்பூர் அகாடமி வழங்கிய சிறந்த நடிகருக்கான பரிசும், கேடயமும் எனக்கு வழங்கப்பட்டது (2000).

இந்த ஆண்டுகளில் என் கடன் என்னும் விஷச்சுழல் வேகம் எடுத்து வங்கியில் செக்குகளுக்குப் பணம் புரட்டி கட்டுவது தவிர வேறு எதையும் நான் யோசிக்க முடியாத அளவுக்கு பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்தன.

நடுவே சென்னையில் அனைத்து வங்கிகளின் சார்பாக நடந்த போட்டியிலும் வெற்றிகள் தொடர்ந்தன.

ஒரு எரி நட்சத்திரத்தைப் போல நான் எரிந்து கொண்டே விழுந்து கொண்டிருந்தேன்.

ஒரு நு}ற்றாண்டு காலம் வெறும் முயற்சிகளில் முடிந்தே போனது.

27.03.2000 அன்று அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் திரு.மு. கருணாநிதி அவர்களுக்கு என் நிலையை விளக்கி எழுதி, திறமைகள் இருந்தும் சமூக அதர்மங்களால் வெளிப்பட முடியாத, வேறு வழியில்லாத நிலையில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் தொடர் அலட்சியப்போக்கை கண்டித்து 13.04.2000 தமிழ் புத்தாண்டு தினத்தன்று நிலையத்தின் முன் தீக்குளிக்கப் போவதாய் அறிவிப்பு செய்தேன்.

மத்தியில் வாஜ்பாய், மாநிலத்தில் கலைஞர். இப்போது போல் அப்போதும் கூட்டணி.

கலைஞர் நினைத்திருந்தால் ஒரு தொலைபேசியில் என் பிரச்சனையை சரி செய்திருக்கலாம்.

மாறன் இளவல் என்றால் தமிழினத் தலைவர் துடிதுடித்து ஏதேனும் செய்திருப்பார். கொண்ட கொள்கைக்காக தண்டவாளத்தில் படுத்தவருக்கு என் தாபம் புதியாதா என்ன? நான் கேவலம் தமிழ் எழுத்தாளன் தானே? எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார். ஒரு சக எழுத்தாளர் என்ற முறையில் டாக்டர் கலைஞரிடம் நான் கேட்ட நியாயம் இவ்விதமாய் எனக்கு கிடைக்காமலே போனது.

எனினும் சென்னை தொலைக்காட்சி நிலையம் மேற்படி கடிதம் பற்றி அறிந்து என்னை தந்தியடித்து வரவழைத்தது. போலியான குறைந்தபட்ச வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றை நம்பி நிலையத்தின் முன் தீக்குளிக்கும் முடிவை நான் கைவிட்ட அதே நேரத்தில் நிலையத்தாரும் தங்கள் போலி வாக்குறுதிகளைக் காற்றில் கரைய விட்டார்கள்.

ஜுனியர் விகடன் இதழில் ‘ஒரு எழுத்தாளனின் நெருப்புப் போராட்டம்” என்ற தலைப்பில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளனாய் இருந்தும் எனக்கு து}ர்தர்ஷனில் இழைக்கப்பட்ட அநீதிகளை விவரித்து இரண்டு பக்கங்களுக்கு என் புகைப்படத்துடன் கட்டுரை வெளியிடப்பட்டது.

திருமதி.இந்திரா காந்தி பிரதமாய் இருந்த காலம் தொடங்கி இன்று வரை நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் மாறியும் அரசு நிறுவனங்களில் நடைமுறைகள் மாறாததால் அவற்றின் மூலம் வெளிப்படும் என் முயற்சி கானல் நீராகவே இருக்கிறது.

நம் சமூகத்தைப் பீடித்திருப்பது வெறும் லஞ்ச லாவண்யம் மட்டுமல்ல – வெகு ஜன ரசனைக் குறைவு என்பது அதைக் காட்டிலும் மோசமான வியாதியாகும்.

தமிழ் வளர்ச்சி என்பது அசட்டு பட்டி மன்றங்களின் வளர்ச்சியில் இல்லை.

தமிழில் எழுத பேனாவைத் தொட்ட பாவத்துக்காக அடிப்படையில் ஒரு வங்கி ஊழியனாய் இருந்தும் என் தேடல்களிலும், முயற்சிகளிலும் அகாலமாய் தெருவுக்கு வந்தேன்.

தெருவுக்கு வந்தது நான் அல்ல.

தமிழ் எழுத்து.

நான் ஆசையாய் கட்டிய என் சொந்த வீட்டை கடன் விழுங்கியது (2000).

இறைவனின் துலாபாரம் மேலும் பலி கேட்டது.

மார்ச் 31, 2001.

பாங்க் ஆப் பரோடாவில் இருந்து விருப்பமில்லாமல் விருப்ப ஓய்வு திட்டத்தில் நான் வெளிவந்த நாள். கூடுதலாய் கிடைக்கும் என்ற ஆசையில் பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றை நானே கிழித்தேன். பென்ஷனும் கிடையாது. VRS சமயம் இன்னொரு Option வரும் என்று யூனியன்களால் ஏமாற்றப்பட்டு தொப்புள் கொடியை நாங்களே அறுத்துக் கொண்டோம். வங்கித் துறையில் நடந்த இந்த அநியாயங்களுக்கே தனியே ஒரு முறை தீக்குளிக்க வேண்டும்.

நான் தற்சமயம் ஒரு காசில்லா பக்கிரி. என் கவலை அது குறித்து இல்லை.

இந்த தேசத்தில் திறமைசாலி என்று தேர்ந்த இரசனையாளர்களால் தன் இளம் வயதிலேயே அங்கீகரிக்கப்பட்ட ஒருவன், ஒரு அரசு நிறுவனத்தின் நெளிவு, சுளிவுகள் தெரியாத காரணத்தால் நியாயமாய் பெற வேண்டிய ஒரு வாய்ப்பை – ஒரு வாழ்நாள் காலம் போராடியும், உண்ணாவிரதம் இருந்தும், தீக்குளிப்பேன் என்று தன் அறிவுக்கும், முதிர்ச்சிக்கும் மாறாக அறிவிப்பு செய்தும் பெறவில்லை என்றால் அது நியாயம் தானா?

Funded programme-களில் இது வரை து}ர்தர்ஷன் எத்தனை கோடிகளை இரைத்திருக்கும்?

எல்லாவற்றையும் இழந்தவன் இந்த தேசத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையையும் இழக்க வேண்டுமா?

இத்தனைக்கு பிறகும் ஜெயா டிவியில் அதே KB-யின் சார்பாக ‘வீட்டுக்கு வீடு லு}ட்டி” என்ற காமெடி மெகா தொடரின் பிரதான எழுத்தாளனாக 500 எபிசோடுகள் வரை சளைக்காமல் எழுதித் தள்ளினேன் (2002 – 2004).

எனது சிறுகதைத் தொகுப்பு ‘வாத்தியார்” கிழக்குப் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டது (2005).

எதை செய்தாலும் சரியாக செய்கிறவன் நான். பகைவர்களே பாராட்டும் திறமை கொண்டவன். என் வாழ்வின் கடைசி முயற்சியாக NFDC மூலம் ஒரு திரைப்படம் தயாரிக்க இந்த தேசம் எனக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எனக்கு யாசகம் எதுவும் தேவையில்லை. சாவதற்கு முன் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்ற வேண்டுகோளை முன் வைத்து ‘கருணை மனு” என்று தலைப்பிட்டு இந்தக் கடிதம் போலவே விரிவான ஒரு கடிதத்தை எழுதி, எனது புத்தகங்களை மாதிரிக்கு ஒன்றாய் இணைத்து நம் குடியரசுத்தலைவர் திரு.அப்துல்கலாம் அவர்களுக்கு 05.09.2005-ல் ஒரு கடிதம் அனுப்பித்து என் திறமைக்கு NFDC மூலம் ஒரு நியாயம் கேட்டு இத்தனை நாட்கள் பதிலுக்கு காத்திருந்தேன்.

Speed Post-ல் ரூ.85ஃ-க்கு தபால்தலை செலவில் அனுப்பப்பட்ட என் பார்சலுக்கு ஜனாதிபதி மாளிகையிலிருந்து கடந்த வருடத்தில் ஒரு அக்னாலெட்ஜ்மென்ட் கார்ட் கூட வரவில்லை. சுருக்கமாய் என் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்டது.

27.12.2006

தற்சமயம் என் குடும்பத்தக்கான கடமைகளை அநேகமாய் முடித்துவிட்டேன். மகன் ஆட்சிக்கு வந்துவிட்டான். ஒரே மகளின் திருமணமும் நல்லவிதம் முடித்துவிட்டேன்.

15.12.2006

என் வயது ஐம்பத்தி ஒன்று. முதல் மாரடைப்பு 02.12.2006-ல் மறவாமல் என் கதவைத் தட்டியது. நினைத்ததை சாதிப்பேன் என்ற நம்பிக்கையில்லாமல் இனி மேலும் ஒரே ஒரு நாள் கூட நான் வாழத் தயாராய் இல்லை.

என் தோல்வி எனக்கு ஏற்படுத்தக்கூடிய தனிப்பட்ட நஷ்டங்களை விட, நான் வெளிப்படாவிட்டால் இந்த சமுதாயம் அடையக்கூடிய நஷ்டம் அதிகமாய் இருக்கும் என்று நினைப்பதாலேயே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு எழுத்தாளன் என்ற முறையில் என்னை இந்த சடூகம் சகலவிதத்திலும் சீண்டி கூர் பார்த்திருக்கிறது.

தமிழில் நல்ல கதைகளைப் பிரசுரிக்க பத்திரிக்கைகள் இல்லை. என்னைப் போன்ற எழுத்தாளர்களைக் கொன்றுவிட்டு சிறுகதை செத்துவிட்டதாய் பிலாக்கணம் வைத்து அரைப்பத்தியில் அச்சு பிச்சு கதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை வருடங்களில் எனக்கு இதுவரை ஒரு சரியான பதிப்பாளர் அமையவில்லை. என் முந்தைய புத்தகங்கள் மறுபதிப்பு காணுமா? என்பது கேள்விக்குறி.

கோடிக்கணக்கில் சினிமாவுக்கு வரி விலக்கு கொடுக்கும் தமிழக அரசு நு}லகத்துறைக்கு எதுவும் செய்யாது. அதைவிட தமிழில் வாசகர்களே கிடையாது. ஆயிரம் புத்தகம் விற்க பதிப்பாளர் ஐந்து வருடம் தேவுடு காக்க வேண்டும். வீணாய் போன சினிமாவுக்கு கூட ஒன்றரை பக்கம் விமர்சனம் எழுதும் வார இதழ்களிலே என் சமீபத்திய ‘வாத்தியார்” புத்தகம் பற்றி நேர்மையாய் ஒரு வரி கூட விமர்சனம் கிடையாது. ஒரு வேளை அடுத்த மாரடைப்பில் நான் வீழ்ந்துவிட்டால் இப்படி ஒரு எழுத்தாளன் இருந்தான் என்று உரத்துச் சொல்லக்கூட ஒரு நாதி கிடையாது.

செம்மொழி செம்மொழி என்று கதைக்கிறீர்களே, இது தானடா உங்கள் செத்த மொழியின் அவலட்சணம்.

என்னை மதியாத சமுதாயத்தில் வெறுமனே உயிரோடிருப்பதில் எனக்கு சம்மதமில்லை. என் கடைசி காலத்தில் Nகுனுஊ மூலம் என் திறமையை நான் நிரூபிக்க ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை இறுதியாக உங்கள் முன் வைக்கிறேன்.

கோப்பெருஞ்சோழன் போல வடக்கிருந்து உயிர்நீக்க சித்தமாகிவிட்டேன்.

நான் சர்க்கரை நோயாளி. இந்தச் சமூகத்தில் வாழ்வதால் இரத்தக் கொதிப்பும் உண்டு. அல்சர் இருக்கிறது. வால்வுகளில் 63% அடைப்பு என டாக்டர்கள் உதடு பிதுக்கிய கேஸ். Chronic Smoker. அனைத்தையும்விட நினைத்ததை முடிக்காமல் வாழ விரும்பாதவன்.

‘ஆக்ரி ஜிஹாத்” என்று பெயரிடப்பட்ட எனது இந்த வடக்கிருந்து உயிர் நீக்கும் போராட்டத்தில் வரும் 26, ஜனவரி 2007 குடியரசு தினம் காலை பத்து மணியிலிருந்து அன்ன ஆகாரமின்றி வடக்கு திசை நோக்கி அமர்ந்து இறை சிந்தனையில் என் கடைசி நாட்களை கழிக்க முடிவு செய்துள்ளேன். என்னை உயிருடன் சந்தித்து அளவளாவ விரும்பும் ஃ ஆதரவு தெரிவிக்கும் பிசிராந்தையர்கள் (அப்படி எவரேனும் இருந்தால்) கீழ்க்கண்ட முகவரியில் என்னை சந்திக்கலாம்.

எனக்கு நேரக்கூடிய மரணம் உள்ளிட்ட எந்த முடிவுக்கும் நம் குடியரசுத்தலைவர் திரு.அப்துல் கலாமும், என் கடிதத்தை ஏற்கனவே அலட்சியம் செய்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரும்தான் பொறுப்பு.

சென்று வருகிறேன். ஜெய் பராசக்தி.

அன்புடன்,

ம.வே. சிவகுமார்

41யு, 5-வது தெரு,
சுதர்சன் நகர்,
மாடம்பாக்கம்,
சென்னை – 600 073.
தொலைபேசி எண்.64503516

(அன்புள்ள ம வே சிவகுமார்
வணக்கம். மகேஷ் அனுப்பித் தந்த இந்தக் கடிதம்.
உங்கள் நீண்ட கடிதம் திண்ணையில் பிரசுரமாகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களைச் சரிபார்த்து உண்மை என்று அறிந்து கொள்ள எங்களுக்கு வழியில்லை. அப்படி உண்மையாக இருந்தாலும் எம்மால் எதுவும் செய்வதற்கில்லை.

உங்கள் கடிதத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் வருத்தத்தை உருவாக்குகிறது. சமூகத்தின் மீது ஆத்திரம் வருகிறது. திறமையை மதிக்கத் தெரியாத உலகின் மீதும், ஊழல் நிரம்பிய நிறுவனங்கள் மீதும் கோபம் எழுகிறது. உங்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகள் பற்றிய அனுதாபம் எழுகிறது. உங்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கமும் எழுகிறது. ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழி சரியானதல்ல. உயிரைப் பணயம் வைத்துப் போராடத் தகுதியானது தானா உங்கள் லட்சியம் என்று சுயபரிசீலனை செய்து கொள்ளவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு.

உண்ணாவிரதம் என்ற போராட்ட வடிவம் காந்தி மேற்கொண்டபோது இருந்த ஒரு லட்சிய உருவகம் இன்று இல்லை. தன் மனசாட்சிக்கு இணங்கி தன்னைச் சுத்திகரித்துக் கொள்ள எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியாய்த்தான் அது அவரைப் பொருத்தவரையில் இருந்தது. அந்த முயற்சிக்கு வெற்றியூம் கிட்டியது என்றால், காந்தி என்ற ஆளுமையின் பேறு அது.

இப்படிப்பட்ட நிராகரிப்புகளுக்காக உயிரை விட முடிவு மேற்கொள்ளவெண்டுமெனில் உலகில் பெரும்பாலோர் உயிருடன் இருக்க மாட்டார்கள். சமூகத்திற்கு ஒரு ம வே சிவகுமார் தேவையில்லை. ஆனால் உங்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் நீங்கள் தேவை. நீங்கள் இந்த விபரீத முயற்சியைக் கைவிட்டுவிட்டு, உயிருடனிருந்து உங்கள் போராட்டத்தைத் தொடரும்படி கேட்டுக் கொள்ளத்தான் எங்களால் முடியும். – திண்ணை குழு)

Series Navigation

ம.வே. சிவகுமார்

ம.வே. சிவகுமார்