கயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

முடாஸர் ரிஜ்வி


(இந்திய பாகிஸ்தான் எல்லையில் வாகா என்ற இடத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் சாலை மீது இந்தியப் போர்வீரர்களும் பாகிஸ்தானியப் போர்வீரர்களும் கண்காணிக்கும் சாவடி ஒன்று உள்ளது. இந்த இடத்தில் வெகுகாலம் இந்திய சாமாதான விரும்பிகள் (முக்கியமாக குல்தீப் நய்யார் போன்றவர்கள்) வருடாவருடம் அமைதிப்பேரணி நடத்துவது வழக்கம். இந்த இடத்தில் சென்ற வாரம் பாகிஸ்தானிய அமைதிவிரும்பிகள் பேரணி நடத்தினார்கள். அந்த அமைதிப் பேரணியை பாகிஸ்தானிய போலீசும் ராணுவம் தடியடி அடித்து கலைத்தது. இது சம்பந்தமாக ஆஸியா டைம்ஸ் இதழில் வந்த கட்டுரை இது. அமைதிவிரும்பிகள் கூட எவ்வாறு வாய்விட்டு சொந்தக்கருத்தைச் சொல்ல முடியாத நிலையை பாகிஸ்தானிய ராணுவம் வெகுகாலம் உருவாக்கி வந்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சி இது. ‘சுதந்திரத்துக்குப் போராடும் ‘ தீவிரவாதக்குழுக்கள், சுதந்திரத்தை தம் மக்களுக்கே தரத்தயாராக இல்லை என்பதையும், மற்றவர்கள் கொடுக்கும் சுதந்திரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதையும் இது தெளிவு படுத்துகிறது

**

ஐஎஸ்ஐ என்பது பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனம். காஷ்மீர தீவிரவாதக்குழுக்களுக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதக்குழுக்களுக்கும் பணப்பட்டுவாடாவும் ஆயுதப்பட்டுவாடாவும் செய்யும் நிறுவனம் )

**

‘ஐஎஸ்ஐ- உன் வேலையைப் பார் ‘(mind your own business) என்ற கோஷம் எழுதிய அட்டையை பிடித்துக்கொண்டு ஒரு நபர், பாகிஸ்தானிய உளவு நிறுவனம் பக்கத்து நாடான இந்தியாவில் தீவிரவாத வேலைகள் செய்வதால் பிரச்னைகள் பெருகுவதிலிருந்து தடுக்க கோஷமெழுப்பிக்கொண்டு செல்கிறார்.

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்துக்கு அருகே இருக்கும் ராவல் பிண்டி நகரத்தில் பேரணியில் செல்லும் சுமார் 200 பாகிஸ்தானி அமைதி விரும்பிகளில் இவர் ஒருவர். இவர்கள் எல்லா தீவிரவாதங்களைக் கண்டித்தும், இந்தியாவும் பாகிஸ்தானும் பேசியே பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று கோரியும், இந்திய பாராளுமன்றத்தில் டிஸம்பர் 13ஆம் தேதி நடந்த தாக்குதலை கண்டித்தும் ஊர்வலம் செல்கிறார்கள்.

ராணுவ அரசாங்கம் எல்லா அரசியல் ஊர்வலங்களையும் நடத்த தடை விதித்திருப்பதற்கும் மத்தியில், பிராந்திய அதிகாரிகள் இந்த பேரணியை நடத்த ஒப்புக்கொண்டாலும், ஏராளமான போலீசும், வெள்ளையுடை உடுத்திய ராணுவ, உளவுத்துறை ஆட்களும் இந்த ஊர்வலத்தில் செல்பவர்களைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். அமைதியாகச் செல்லும் ஊர்வலக்காரர்களின் முகத்தில் இடிப்பது போல கேமராவை கொண்டுவந்து உளவுத்துறை ஆட்கள் படம் பிடிக்கிறார்கள். இது பாகிஸ்தானிய உளவுத்துறை தங்களுக்கு எதிரானவர்களை பயமுறுத்த செய்யும் வழக்கமான உபாயம்தான்.

இன்னொரு உளவுத்துறை ஆள் தன்னுடைய கொஞ்சம் நஞ்சம் இருக்கும் முகமூடியையும் கழற்றிவிட்டு, ‘காஷ்மீரில் குறுக்கீடு செய்யாதே ‘ என்று கோஷமெழுதப்பட்ட அட்டையை தாங்கிச் செல்லும் ஒருவரை ‘யார் நீ. உன் பெயர் என்ன ? ‘ என்று கேட்கிறார்.

இந்திய எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில், அதுவும் ராணுவம் தன் நலன்களுக்குப் பாதகமான எதையும் கேட்க விரும்பாத பாகிஸ்தானில், அமைதி இயக்கம் கத்தி நுனியில் தான் நடக்க வேண்டும்.

ஆகவே, இந்த இயக்கத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிக்காததுபோலவும் நடந்து கொள்வதாகக் காட்டிக்கொள்கிறார்கள். இந்தியா தன் பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையையே குற்றம் சாட்டி இருந்தது.

‘இது ரொம்பவும் கஷ்டமான நிலைமை ‘ என்று இந்த இயக்கத்திலுள்ள காகீஜ் ஜாஹ்ரா கூறுகிறார். ‘பாகிஸ்தானின் உள்ளே இருக்கும் தீவிரவாத இயக்கங்களை, அதனை உருவாக்கி வளர்த்த பாகிஸ்தானிய ராணுவ அமைப்புக்களை கைகாட்டாமல் எப்படித் திட்டுவது ? ‘ என்று கேட்கிறார். இவர் ஆஃப்கானிஸ்தான ஜிஹாத் இயக்கங்களையும், காஷ்மீர பாகிஸ்தானிய ஜிஹாத் இயக்கங்களையும் உருவாக்கி வளர்த்த ஐஎஸ்ஐ மற்றும் இதர பாகிஸ்தானிய ராணுவ அமைப்புக்களையே குறிப்பிடுகிறார்.

இதே தீவிரவாத இயக்கங்களே இந்தியப் பாராளுமன்றத்தில் டிஸம்பர் 13ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பு என்று இந்தியா குற்றம் சாட்டுகிறது. அந்த நாளிலிருந்து பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிரானது என்பதை, இந்த தீவிரவாத இயக்கங்களை மூடிவிட்டு, அந்த தீவிரவாதிகளை சிறைப்படுத்தி, நிருபிக்க வேண்டும் என்று கோரிவருகிறது.

இந்தியா சாலை மற்றும் ரயில்வண்டி தொடர்புகளைத் துண்டித்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய விண்வெளிக்குள் வரக்கூடாது என்றும் திட்டவட்டமாக அறிவித்து, ராஜீய உறவுகளையும் துண்டிக்க முனைந்து வருகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் தங்கள் துருப்புக்களை எல்லைக்கு கொண்டுவந்து இன்னொரு போர் நடத்த ஆயத்தங்களைச் செய்து வருகின்றன.

சமீபத்தில் பாகிஸ்தானிய அரசாங்கம், தீவிரவாத ஜிஹாத் குழுக்களை அடக்க வேண்டி பலரை கைது செய்து பல தீவிரவாதத் தலைவர்களை சிறைப்படுத்தி இருக்கிறது. இதில் லாஷ்கர்-ஈ-தொய்பா (கடவுளின் போர்வீரர்கள்), ஜெயீஷ்-ஈ-மொஹம்மது (மொஹம்மதுவின் ராணுவம்) போன்ற அமைப்புகள் சேர்த்தி. இவைகளையே இந்திய அரசாங்கம் டிஸம்பர் 13 தாக்குதலுக்கு காரணகர்த்தாவாக காண்கிறது. ஆனால் இவர்களை கைது செய்தது, சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்குக் காரணமாகவும், பாகிஸ்தான் அமெரிக்க உறவுக்கு பாதகமாகப் பேசினார்கள் என்பதாலும் தான்.

இந்தப் பின்னணியில், ராணுவ அரசாங்கம் தங்களை ஒன்றும் செய்துவிடக்கூடாது என்பதற்காக, அமைதி இயக்கத்தினர் பாகிஸ்தானிய ராணுவத்துக்கு சந்தோஷம் தரும்படிக்கு சமமாக இந்தியாவையும் திட்டிப் பேசவும், இந்திய பாகிஸ்தான் பிரச்னைக்கு சமச்சீரான நிலைப்பாட்டை எடுக்கவும் முயன்றுவருகிறார்கள்.

ஆகவே, தீவிரவாதத்தை எல்லா வடிவங்களிலும் எதிர்ப்பதாகவும், தீவிரவாதக்குழுக்களை எல்லா வடிவங்களிலும் எதிர்ப்பதாகவும் பேசுவதும், இந்தியா தனது தீவிரவாதச்செயல்களால், காஷ்மீர் பிரச்னைக்கு காரணமாகி விட்டது என்றும் இந்தியாவை குற்றம் சொல்லவேண்டிய கட்டாயம்.

பாகிஸ்தான் அமைதி கூட்டணி (Pakistan Peace Coalition (PPC)) என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘இந்திய ராணுவம் காஷ்மீரில் செய்யும் மனித உரிமை மறுப்புகளால், தீவிரவாதமும் தீவிரவாதப்பேச்சும் வளர்கிறது ‘ என்று இந்தியாவைக் குற்றம் சாட்டுகிறது (இந்தியக் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு இருக்கும் மனித உரிமைகள், இந்த பாகிஸ்தானிய அமைதி இயக்கத்தினருக்கு இல்லை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள் இவர்கள்)

1998இல் இந்தியா பாகிஸ்தான் தங்கள் அணுகுண்டுகளை வெடித்ததும், பாகிஸ்தான் நாடெங்கும் தோன்றிய அமைதி குழுக்களில் ஒன்று இது.

அதே நேரத்தில், இஸ்லாமிய அரசியல் கட்சிகளோடு நேரடியாக மோதுவதை இந்த அமைதி இயக்கத்தினர் தவிர்க்கிறார்கள். அவ்வாறு தவிர்ப்பதற்காக, காஷ்மீரையும் பாலஸ்தீனத்தையும் (இஸ்லாமிய அரசியல் கட்சிகள் செய்வது போலவே) ஒப்பிட்டு பேசவும் எழுதவும் செய்கிறார்கள்.

‘ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் இஸ்ராலி துருப்புகள் அப்பாவிகளை பயமுறுத்தியும் கொல்வதுவும் போலவே, காஷ்மீரிலும் நடக்கிறது. அரசு பயங்கரவாதம் மக்களுக்கு எதிராக செலுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் ‘ என்று கூறுகிறது இவர்கள் அறிக்கை. ‘காஷ்மீரி மக்களின் பிரதிநிதித்துவத்தோடு காஷ்மீர பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் ‘ என்றுகூறுகிறது. (பாகிஸ்தானிய அரசில் பாகிஸ்தானிய மக்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை என்பதும், காஷ்மீர மாநிலத்தில் பிரதிநிதித்துவ ஆட்சிதான் நடைபெறுகிறது என்பதும் இவர்கள் எழுத முடியாதது)

சில சிந்தனையாளர்கள் இந்த அமைதி இயக்கங்கள், ஒரு பக்கம் தீவிரவாதத்தை எதிர்த்துக்கொண்டும், மறு பக்கம் அதனை காஷ்மீரத்தில் இந்தியாவின் செயல்களால் உருவான நியாயமான விளைவு என்று நியாயப்படுத்திக்கொண்டும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றன என்று கூறுகிறார்கள். இந்தச் சிந்தனையாளர்கள் இதே முறையில்தான் ஜிஹாதி குழுக்கள் தங்களது செயல்களை நியாயப்படுத்துகின்றன என்று கூறுகிறார்கள்.

இஸ்லாமாபாத் பத்திரிக்கை ஒன்றில் எழுதிவரும் அரசியல் விமர்சகரான நஜம் முஷ்டாக் அவர்கள், ‘லாஷ்கார், ஜெயீஷ் போன்ற அமைப்புக்கள் ஆஃகானிய ஜிஹாத்தின் உற்பத்திகள். இவைகளுக்கும் இவைகளுக்கும் காஷ்மீருக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இவர்களது பெரும்பாலான படைகள் காஷ்மீரிகளே கிடையாது. அப்படி இருக்கையில், இந்திய ராணுவத்தின் செயல்களால்தான் இவர்கள் காஷ்மிரில் போராடப் போகிறார்கள் என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும் ‘ என்று கேட்கிறார்.

ஆனால், இயக்கதிலுள்ளவர்கள் தங்களது அமைதி கோரிக்கைகளுக்காக தாங்கள் வெகு ஜாக்கிரதையாக இருக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். பாகிஸ்தானின் அணுகுண்டு திட்டங்களை எதிர்த்தபோதும், இன்னும் பல அரசாங்க கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், இஸ்லாமிய தீவிரவாதிகளாலும், இஸ்லாமிய அரசியல் கட்சிகளாலும், அரசாங்கத்தாலும், ராணுவத்தாலும் பயமுறுத்தப்படவும், அடிக்கப்படவும், கொலை செய்யப்படவும் ஏதுவானார்கள்.

அமைதி இயக்கத்தில் ஒருவராக இருந்த பேராசிரியர் ஏ ஹெச் நய்யார் அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பத்திரிக்கையாளர் கூட்டத்திலேயே அடிக்கப்பட்டது எல்லோருக்கும் நன்றாக நினைவிருக்கிறது. சமீபத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளால், பாகிஸ்தானிய உள்துறை மந்திரியின் சகோதரர் கொலை செய்யப்பட்டதும் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கக் காரணம்.

‘பாகிஸ்தானிய மக்கள் அமைதி விரும்புகிறார்கள். இரண்டு அரசாங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். கட்டுக்கடங்காமல் நிலைமை போவதற்குள் உடனே பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இறைஞ்சுகிறார்கள் ‘ என்று பாகிஸ்தான் அமைதி கூட்டணியின் இஸ்லாமாபாத் பிரிவின் தலைவராக இருக்கும் மருத்துவரான நய்யார் கூறினார்.

‘ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் அரசாங்கம் எல்லா தீவிரவாதக்குழுக்களையும் தடை செய்ய வேண்டும் ‘ என்று கூறினாலும், அந்த தீவிரவாத இயக்கங்களின் பெயர்கள் என்ன என்று கேட்டால் அவர் சொல்வதில்லை. ‘இந்த தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் மட்டும் பிரச்னைகளை உருவாக்கிக்கொண்டிருப்பதில்லை. பாகிஸ்தானிலும் ஏராளமான பிரச்னைகளை உருவாக்கி வருகின்றன. நாங்கள் இவைகளால் நிறைய அனுபவித்துவிட்டோம். அரசாங்கம் இவைகளின் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘ என்று கூறுகிறார்.

***

Series Navigation