கயிறெடுத்தான் உயிரெடுக்க
கவிஞர் புகாரி

உயிரின் முடிச்சவிழ்க்க
கயிற்றில் முடிச்சிட்டான்
சாவைத் தேர்வு செய்ய
வாழ்வே விரட்டுகிறது
தேர்வுதானே வாழ்க்கை
சாவென்பதும்
வாழ்வென்ற அறிதலோடுதான்
கயிறெடுத்தான் உயிரெடுக்க
இவனைத் தடுக்கும்
மார்க்கமுண்டா உங்களிடம்
பாவச் செயல்
கோழையின் வழி
அவசர முடிவு
சட்டப்படி குற்றம்
நம்பிக்கை வேண்டும்
என்றெல்லாம்
அளந்துகொண்டே போகாதீர்கள்
இதோ கரமென்று
உயிர் காக்காத பூமியில்
இதோ வாழ்க்கை என்று
கயிறு சொல்வதில் தவறில்லை
இருப்பினும்
என்னிடம் இருக்கிறது
ஒரே ஒரு கேள்வி
நிலம் மாற்றி நட்டாயா
உன் நாற்றுகளை?
————————
buhari@gmail.com