கனேடியப் பருவமங்கை

This entry is part 3 of 8 in the series 20000103_Issue

பொன்

மார்கழி வெண்பனி சுற்றுப்புறம் சூழ்ந்து நிற்க
வெண்சேலை மங்கையவள் நெடுஞ்சாலை ஓரந்தனில்
பன்சாதிச் சாரதிகள் விழிகளின் பூரிப்பினில்
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

வைகாசி வசந்தத்தின் பூப்பினது அணைப்பினிலே
அம்மங்கை சேலையின் பசும்பச்சை நிறந்தன்னை
நெடுஞ்சாலைச் சாரதிகள் பார்வையினால் ரசித்திடவே
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

கோடையின் கொடையினால் கொண்டையில் பூச்சூடி
அங்கமெல்லாம் மலர்சூடிப் பூரித்து நின்றதனை
நெடுஞ்சாலை இளைஞர்கள் கண்குளிர ரசித்திடவெ
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

ஐப்பசி மாதம்தனில் குளிர்தென்றல் வீசிடவே
பலவர்ணச் சேலைகளை மங்கையவள் மாற்றிவிட
பல்சாதி வழிப்போக்கர் விழிபிதுங்கி வியந்திட
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

இலையுதிர் காலந்தனில் சருகுகள் புடைசூழ
சேலையின்றி நிர்வாணமாய்த் துனிந்தே நின்றுவிட
நெடுஞ்சாலைப் பயணிகள் கவனத்தைக் கவராது
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

Thinnai 2000 January 3

திண்ணை

Series Navigation<< வாருங்கள் கவிதையால் கடத்தப் படுவோம்.மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சினை >>

பொன்

பொன்