மணி வேலுப்பிள்ளை
பிற்பகல் 12:50 – 2:00
பதிவாளர்: (நீதிபதியை அழைத்து வருகிறார்). அமைதி! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்! (நீதிபதியைப் பார்த்து) கனம் நீதிபதி அவர்களே, வணக்கம்! (அவையோரைப் பார்த்து) வணக்கம்! எல்லோரும் அமர்ந்து கொள்ளுங்கள்!
நீதிபதி: வணக்கம்! திரு.ஜொனேதன்! உங்கள் குறுக்கு விசாரணையைத் தொடர ஆயத்தமாய் இருக்கிறீர்களா ?
சடத்தரணி: ஆமாம், கனம் நீதிபதி அவர்களே!
நீ: (அரச வழக்குத் தொடுநரிடம்) திரு.கானலி! எங்கே உங்கள் சாட்சியைக் காணோம்!
அரச வழக்குத் தொடுநர்: மன்னிக்கவும், கனம் நீதிபதி அவர்களே! (பதிவாளரிடம்) தயவு செய்து ஒலிபெருக்கியில் நாகம்மாவைக் கூப்பிடுங்கள்!
ப: (ஒலிபெருக்கியில்) நாகம்மா அவர்களை 409ம் இலக்க நீதிமன்றக் கூடத்துக்கு வரும்படி அழைக்கிறோம்.
நாகம்மா: (உள்ளே வருகிறார்).
நீ: வாருங்கள், அம்மா! இப்படி வந்து அமருங்கள், அம்மா!
நா: (சட்சிக் கூண்டில் ஏறி அமர்கிறார்).
நீ: சரிதானே, அம்மா ?
நா: சரி, ஐயா!
நீ: திரு.ஜொனேதன்!
ச.த: நன்றி, கனம் நீதிபதி அவர்களே! (சாட்சியிடம்) கடைசியாகக் கள்ள வானொலிப் பெட்டியைப் பற்றிச் சொன்னீர்கள், அம்மா!
நா: ஆமாம்.
ச.த: கள்ள வானொலிப் பெட்டி என்று தெரிந்ததும், என்ன செய்தீர்கள், அம்மா ?
நா: கள்ள வானொலிப் பெட்டியைத் திருப்பிக் கொடுத்துக் காசை வாங்கிக் கொண்டுபோய், நல்ல வானொலிப் பெட்டியாய் வாங்கி வரும்படி சொல்லிவிட்டேன்.
ச.த: யாரிடம் அம்மா, சொன்னீர்கள் ?
நா: கணவரிடம்.
ச.த: கணவர் அப்படிச் செய்தாரா, அம்மா ?
நா: இல்லை, அப்படிச் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.
ச.த: அப்புறம் நீங்கள் என்ன செய்தீர்கள் ?
நா: கள்ள வானொலிப் பெட்டி இங்கே இருக்கப்படாது. இருந்தால், குப்பைத் தொட்டிக்குள் போட்டு விடுவேன் என்று சொன்னேன்.
சத: அப்படியா ?
நா: ஆமாம். இவர் எங்கே போடு பார்ப்போம் என்றார். நான் போட்டு விட்டேன்.
ச.த: அப்புறம் கணவர் என்ன செய்தார் ?
நா: அதை ஏன் கேட்கிறீர்கள் ? அவருக்குக் கோபம் பற்றிவிட்டது. அதைத் தூக்கி என்னுடைய பெட்டி, நான் வைத்துப் பாவிக்கப் போகிறேன் என்று கத்தத் தொடங்கி விட்டார். ஒரு இடத்திலே நிற்கவில்லை. வெந்நீர்
ஊற்றுப்பட்ட நாய் மாதிரி குறுக்கும் மறுக்கும் ஓடினார்.
ச.த: அப்பொழுது நீங்கள் என்ன செய்தீர்கள், அம்மா ?
நா: நான் சொன்னேன்: இது என்னுடைய வீடு. இங்கே கள்ளச் சாமானுக்கு இடம் இல்லை என்று.
ச.த: சொல்லியதோடு நிறுத்திக்கொண்டார்களா, அம்மா ?
நா: சொல்லியதோடு அவருடைய கையிலே இருந்து வானொலிப் பெட்டியைப் பிடுங்கி எறியத் தெண்டித்தேன்.
ச.த: பிடுங்கி எறிந்து விட்டார்களா ?
நா: இல்லை, பிடுங்கி எறியத் தெண்டித்தேன்.
ச.த: அப்புறம் ?
நா: இரண்டு பேரும் இழுபறிப்பட்டோம்.
ச.த: இழுபறிப்பட்டபொழுது ?
நா: அவர் குடல் வெளியிலே வரத் தக்கதாகக் கத்திக்கொண்டு ஒரே இழுவையாய் இழுத்தார்.
ச.த: இழுத்தபொழுது ?
நா: வானொலிப் பெட்டி யன்னல் கண்ணாடியில் மோதுண்டது.
ச.த: மோதுண்டு ?
நா: யன்னல் கண்ணாடி தகர்ந்துவிட்டது!
ச.த: யன்னல் கண்ணாடி உடைந்தபொழுது நீங்கள் என்ன செய்தீர்கள் ?
நா: எனக்கும் கோபம் பற்றி, வானொலிப் பெட்டியை மறுபடியும் பிடித்து இழுத்தேன். அவரும் விடவில்லை. திரும்பவும் இழுபறிபட்டோம். எப்படியோ என்னை இடறிவிட்டு, வானொலிப் பெட்டியைப் பறித்துக்கேண்டு, வெளி மாடிக்கு ஓடிப்போய், என்னை உச்சி உச்சி யாடு பாய்ந்தார்.
ச.த: அக்கம் பக்கத்து ஆட்கள் வெருண்டோடியிருப்பார்களே ?
நா: அப்படித்தான் நினைக்கிறேன்.
ச.த: அப்புறம் என்னம்மா நடந்தது ?
நா: நான் படாரென்று கையை விட்டுவிட்டேன். அவர் போய்ச் சுவரிலே பிடரி அடிபட விழும்பொழுது வானொலி பெட்டியை நழுவ விட்டுவிட்டார். அது வெளியிலே போய்த் தொப்பென்று விழுந்து நொருங்கிவிட்டது.
ச.த: வானொலிப் பெட்டி எங்கே போய் விழுந்தது ?
நா: கீழே போய் விழுந்தது.
ச.த: நிலத்திலா ?
நா: கீழே நின்ற காருக்கு மேலே போய் விழுந்தது. அவர் அந்தக் காருக்கு என்று எறியவில்லை. வானொலிப் பெட்டியைக் கைவிட்டபடியால், அது கீழே போய் விழுந்தது. கீழே போய் விழும்பொழுது கார் கீழே நின்றது.
(நீதிபதியை விழித்து) அது அவருடைய குற்றமா, ஐயா ?
ச.த: (குறுக்கிட்டு) காரின் குற்றம் என்கிறீர்கள்!
(நீதிமன்றத்தில் சிரிப்பொலி).
நீ: (சிரிப்பை அடக்கி, சட்டத்தரணியைப் பார்க்கிறார்).
ச.த: காருக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டதா, அம்மா ?
நா: முகப்புக் கண்ணாடி உடைந்துவிட்டது.
ச.த: அக்கம் பக்கத்தவர்கள் இன்னும் பயந்திருப்பார்கள் ?
நா: அவர்கள் வெருண்டடித்து நாலா திக்கும் ஓடினார்கள். யாராவது பொலீசாருக்கு அறிவித்திருப்பார்கள்.
ச.த: உங்கள் கணவர் எப்பொழுதாவது உங்களுக்குக் கை ஓங்கியிருக்கிறாரா ?
நா: இல்லை. வயதுக்கு இளையோர் மூத்தவருக்குக் கை ஓங்கக்கூடாது, அல்லவா ?
ச.த: உங்கள் நியாயத்தைக் கணவர் ஏற்றுக்கொண்டாரா ?
நா: ஆமாம். அதனால்தான், அடிக்கடி என்னிடம் வயதுக்கு மூத்த பெண்ணாய் இருக்கிறாய், மற்றும்படி நடக்கிறது வேறு என்று மிரட்டுகிறார்.
ச.த: நன்றி, நாகம்மா! நீங்கள் அசாதாரணமான பெண், அம்மா. (நீதிபதியிடம்) நன்றி, கனம் நீதிபதி அவர்களே! இத்துடன் எனது குறுக்கு விசாரணையை முடித்துக் கொள்ளுகிறேன்.
நீ: நல்லது, திரு.ஜொனேதன்! (அ.வ.தொ.விடம்) திரு.கானலி! நீங்கள் திரும்பவும் நேர் விசாரணை செய்யப் போகிறீர்களா ?
அ.வ.தொ: ஆமாம், கனம் நீதிபதி அவர்களே! இரண்டொரு கேள்விகள் மாத்திரம் கேட்கலாம் என்று இருக்கிறேன். (சாட்சியிடம்) அம்மா, நாகம்மா! உங்கள் வீட்டு யன்னல் கண்ணாடி உங்களால் உடைந்ததா, அல்லது உங்கள் கணவரால் உடைந்ததா ?
நா: கணவரால்.
அ.வ.தொ: கீழே நிறுத்தப்பட்டிருந்த காரின் முகப்புக் கண்ணாடி உங்களால் உடைந்ததா, அல்லது உங்கள் கணவரால் உடைந்ததா ?
நா: கணவரால்.
அ.வ.தொ: அக்கம் பக்கத்து ஆட்கள் அச்சம் கொண்டது நீங்கள் போட்ட சத்தத்தினாலா, அல்லது உங்கள் கணவர் போட்ட சத்தத்தினாலா ?
நா: கணவர் போட்ட சத்தத்தினால்.
அ.வ.தொ: நன்றி, அம்மா! (நீதிபதியிடம்) கனம் நீதிபதி அவர்களே, இத்துடன் எனது நேர் விசாரணையை முடித்துக் கொள்ளுகிறேன்.
நீ: நல்லது, திரு.கானலி! (சட்டத்தரணியிடம்) திரு.ஜொனேதன்! நீங்கள் திரும்பவும் குறுக்கு விசாரணை செய்யப் போகிறீர்களா ?
ச.த: கனம் நீதிபதி அவர்களே! நானும் மூன்றே மூன்று கேள்விகள்தான் கேட்க விரும்புகிறேன். (சாட்சியிடம்) அம்மா, நாகம்மா! நீங்களும் உங்கள் கணவரும் இழுபறிப்பட்டபொழுது தானே உங்கள் வீட்டு யன்னல் கண்ணாடி உடைந்தது ?
நா: ஆமாம்.
ச.த: நீங்களும் உங்கள் கணவரும் இழுபறிப்பட்டபொழுது தானே அக்கம் பக்கத்து ஆட்கள் பயந்தோடினார்கள் ?
நா: ஆமாம்.
ச.த: நீங்களும் உங்கள் கணவரும் இழுபறிப்பட்டபொழுது தானே வனொலிப் பெட்டி கீழே நின்ற காருக்கு மேலே விழுந்தது ?
நா: ஆமாம்.
ச.த: நன்றி, அம்மா! (நீதிபதியிடம்) கனம் நீதிபதி அவர்களே, இத்துடன் எனது குறுக்கு விசாரணையை முடித்துக் கொள்ளுகிறேன்.
நீ: நல்லது, திரு.ஜொனேதன்! (சாட்சியிடம்) நன்றி, அம்மா, நாகம்மா! உக்கள் சாட்சியம் முடிந்துவிட்டது.
நீங்கள் சாட்சிக் கூண்டை விட்டு இறங்கலாம்.
நா: சரி, ஐயா! (அவையோருடன் சென்று அமர்கிறார்).
நீ: இது இடைவேளைக்குப் பொருத்தமான நேரமாகத் தெரிகிறது (எழுகின்றார்).
ப: அமைதி! எல்லோரும் எழுந்து நில்லுங்கள்!
நீ: (உள்ளே போகின்றார்).
ப: நீதிமன்றம் இப்பொழுது கலைந்து, மீண்டும் 4 மணிக்குக் கூடும்.
மாலை இடைவேளை
பிற்பகல் 3:45 – 4:00
பதிவாளர்: (நீதிபதியை அழைத்து வருகிறார்). அமைதி! எல்லோரும் எழுந்து நில்லுஙகள்! (நீதிபதியை நோக்கி) வணக்கம், கனம் நீதிபதி அவர்களே! (அவையோரை நோக்கி) எல்லோரும் அமர்ந்து கொள்ளுங்கள்!
நீதிபதி: (அரச வழக்குத் தொடுநரிடம்) திரு.கானலி, உங்கள் அடுத்த சாட்சியை விசாரிக்கலாமா ?
அரச வழக்குத் தொடுநர்: ஆமாம், கனம் நீதிபதி அவர்களே! (பதிவாளரிடம்) திரு.உபயத்துல்லா அவர்களை வரவழையுங்கள்! (நீதிபதியிடம்) அரச தரப்பின் இரண்டாவது சாட்சியாக, கங்காணி திரு.உபயத்துல்லா அவர்களை விசாரிக்க விரும்புகிறேன்.
ப: (ஒலிபெருக்கியில்) திரு.உபயத்துல்லா அவர்களை 409ம் இலக்க நீதிமன்றக் கூடத்துக்கு வரும்படி அழைக்கிறோம்.
(நாடகம் முடிவடைகிறது. வழக்குத் தொடர்கிறது).
HYPERLINK ‘mailto:manivel7@hotmail.com ‘ manivel7@hotmail.com
- கனடாவில் நாகம்மா- 3