கதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

தமிழில் : நாகூர் ரூமி


கதை 06

வஹீ எனும் இறைவெளிப்பாடு வரும்போதெல்லாம் பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லும் வசனங்களையெல்லாம் கவனமாக எழுதும் ஒரு தோழர் இருந்தார். பெருமானார் மீது பெய்த அந்த இறையொளியின் கிரணங்கள் அவ்வப்போது அவர்மீதும் பட்டுத் தெறித்தன. அதன் காரணமாக, தனக்கும் ஞானம் பொங்கக் கண்டார் அவர்.

சமயங்களில் பேரிறையின் பேச்சு பெருமானார் வாய்வழி வெளியாகி, அவர்களதை முடிக்கும் முன்பே அந்த வசனங்களை அத்தோழர் சொல்வதுண்டு. இதன் காரணமாக அவர் வழிகெட்டுப் போனார். பெருமானார் பகரும் பேருண்மை தனக்குள்ளிருந்தும் வெளிப்படுவதாக அவர் நம்பினார்.

அவரின் இந்த (தவறான) எண்ணத்தின் கீற்றைப் பெருமானார் புரிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் கோபம் உடனே அத்தோழரின் ஆத்மாவுக்குள் இறங்கியது.

‘பிடிவாதமாகத் தவறிழைக்கும் தோழரே! அந்த ஒளி உங்களுக்குள்ளே இருந்து வருவதாயின் ஏன் நீங்கள் (பாவத்தின் பொருட்டு) கருப்பாகி விட்டார்கள் ? ‘

‘வஹீ வெளிவரும் ஊற்றுக்கண்ணாக நீங்கள் இருப்பீரேயானால், எப்படி உங்களிடமிருந்து இவ்வளவு கறுப்பான நீர் வருகிறது ? ‘ என்றார்கள் பெருமானார்.

பின்னாளில், அய்யஹோ என அவர் அரற்றினாலும் வாளின் கூர்மைக்குத் தன் தலையைக் கொடுக்க வேண்டியிருந்தது.

தனக்கும் வஹீ வருவதாக பெருமையடித்த அந்த தோழருக்கு (அவரைப்போன்றவர்களுக்கு) தடைகளெல்லாம் திறந்த வெளியாகத் தோன்றும். அது அல்லாஹ் விதிப்படி என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.

புகழும் பெருமையும்தான் எத்தனையோ அவநம்பிக்கையாளர்களை ஓரிறையின்மீதான நம்பிக்கையின் பக்கம் வருவதிலிருந்து தடுக்கின்றன. அவையே அவர்களின் விலங்குச் சங்கிலி.

இரும்புச் சங்கிலியைவிட மோசமான அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துள்ளது. ஞானத்தின் பிரதிபலிப்பில் ஒரு துளி அந்த பரிதாபத்துக்குரியவரை வழிகெடுத்தது. பெருமை வேண்டாம். அது உங்களை மண்ணாக்கிவிடும்.

உங்கள்மீது வழிந்தோடுகின்ற ஞானமெல்லாம் இறைநேசர்களிடமிருந்து வருவதுதான். உங்களைப் பொறுத்தமட்டில் அது கடன் வாங்கப்பட்ட ஒன்று. உங்கள் இதயவீட்டில் ஒளி வீசினாலும் அது பக்கத்து வீட்டுக்காரர் ஏற்றியதே. அதற்காக நன்றி செலுத்துங்கள்.

இரும்புத் துண்டு சிவப்பாகிவிட்டிருந்தாலும் சிவப்பு நிறமானது இரும்பின் இயற்கை அல்ல. நெருப்பில் கிடந்ததன் விளைவே அது.

உங்கள் ஜன்னல்களும் வீடுகளும் வெளிச்சமாயிருந்தால் அதன் காரணம் சூரியனே அன்றி வேறெதுவுமில்லை.

‘நானே ஒளி ‘ என்று ஒவ்வொரு கதவும் சுவரும் சொல்கிறது.

‘நான் அஸ்தமிக்கும்போது, உங்கள் நம்பிக்கை பொய்த்துவிடும் ‘ என சூரியன் சொல்லும்.

‘நாங்கள் பச்சை நிறமானவர்கள் ‘ என்கின்றன தாவரங்கள்.

‘நான் போனபிறகு பாருங்கள் ‘ என்கிறது கோடைக்காலம்.

தன் அழகைப் பிரஸ்தாபிக்கிறது, பீற்றிக்கொள்கிறது இந்த உடம்பு.

‘அடக்கழிவே! யார் நீ ? என் கிரணங்களின் பொருட்டே நீ ஓரிரு நாட்களுக்கு உயிருடன் ஒளிர்கிறாய். நான் உன்னைவிட்டுப் பிரியும்போது பார். உன்னைப் பிரியமாக நேசித்தவர்களே உனக்கு குழியை வெட்டுவார்கள். உன்னை எறும்புகளுக்கும் பூச்சிகளுக்கும் உணவாக்குவார்கள். ‘

‘உனக்காக உயிரை விடுவேன் என்று சொன்னவர்களெல்லாம் உன் துர்நாற்றம் பொறுக்காமல் நாசிகளைப் பொத்திக் கொள்வார்கள் ‘ என்கிறது உயிர்.

உடலின்மீது உயிரின் கதிர்கள் படுவதுபோல, எனது ஆத்மாவின் மீதும் இறை நேசர்களின் ஒளி படுகிறது. அதற்கு அத்தாட்சியாக, என் தலையை நான் பணிவுடன் இந்த மண்ணில் வைக்கிறேன். தீர்ப்பு நாளில் அது சாட்சி சொல்லட்டும். நீர், நிலம் இவற்றின் பேச்சையெல்லாம் இறைநேசர்களின் இதயங்களை ஒத்த மனம் கொண்டவர்களே உணர்ந்து கொள்வார்கள். அன்றி, தத்துவவாதிகளோ தர்க்கவாதிகளோ அல்ல.

தத்துவவாதி என்பவர் யார் ? யாருடைய உள்ளத்தில் சந்தேகமும் குழப்பமும் உள்ளதோ அவரே தத்துவவாதியாவார். அவரது தத்துவமே அவரது முகத்தை ஒரு நாள் கறுப்பாக்கும்.

நம்பிக்கையாளர்களே, ஜாக்கிரதை! உங்களிடத்தும் தத்துவவாதியின் நரம்புண்டு. உங்களுக்குள்ளே எண்ணற்ற உலகங்களுண்டு. எழுபத்திரண்டு வகையான (வழிகெட்ட) குழுக்களும் உண்டு. அவைகளின் கை ஓங்குமானால் உங்களுக்கு நாசம்தான்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சபிக்கப்பட்ட இப்லீஸானவன் நம்பிக்கையாளர்களின் தலைவனாகவும் ஞானியாகவும்தான் இருந்தான். ஆனால் எப்போது பெருமையின் பொருட்டு ஆதத்தோடு மோத ஆரம்பித்தானோ அப்போதே அவமானப்பட்டுப் போனான்.

ஒரு செவிடன் தன் அண்டை வீட்டிலிருந்த நோய்வாய்ப்பட்டுக் கிடந்த ஒருவனைப் பார்க்க அனுப்பப் பட்டான்.

‘நான் டமாரச் செவிடாயிற்றே! அந்த நோயாளி சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது ? நோயின் பொருட்டு அவன் குரலும் பலவீனமாக இருக்கும். என்ன செய்வது, வேறு வழியில்லை, போய்த்தான் ஆகவேண்டும். ‘

‘அவன் வாயசைவுகளை வைத்து நான் வார்த்தைகளை அனுமானித்துக்கொள்வேன். ‘

‘எப்படி இருக்கிறீர்கள் நண்பரே இப்போது ? ‘ என்று கேட்பேன்.

‘நன்றாக உள்ளது அல்லது பரவாயில்லை ‘ என்று அவன் சொல்வான்.

‘அல்லாஹ்வுக்கே நன்றி உரித்தாகட்டும். என்ன குடித்தீர்கள் ? ‘ என்று கேட்பேன்.

‘ஏதாகிலும் ஷர்பத் ‘ என்று அவன் சொல்வான்.

‘உங்கள் ஆரோக்கியம் வாழட்டும். உங்கள் மருத்துவர் யார் ? ‘ என்று கேட்பேன். பேரைச்சொல்வான்.

‘ஓ அவரா ? ரொம்ப ராசியானவராயிற்றே! அவர் பார்த்தால் போதும். எல்லாம் சரியாகிவிடும் ‘ என்பேன்.

இவ்வாறாக எண்ணிச் சென்றான் செவிடன்.

அவர்கள் எப்படிப் பேசிக்கொண்டார்கள் தெரியுமா ? கேளுங்கள்.

‘எப்படியிருக்கிறீர்கள் ? ‘ — செவிடன்.

‘நான் இறப்பின் வாசலில் நின்றுகொண்டிருக்கிறேன் ‘ — நோயாளி.

‘அல்லாஹ்வுக்கு நன்றி உரித்தாகட்டும் ‘ — செவிடன்.

இதைக்கேட்டவுடன் வெகுண்ட நோயாளி, ‘நன்றி சொல்வதற்கு இதில் என்ன உள்ளது ? அல்லாஹ் எனக்கு எதிரியாகிவிட்டான் ‘ என்றான்.

ஏதோ தவறு நடந்துவிட்டது என்று புரிந்துகொண்ட செவிடன், ‘என்ன சாப்பிட்டார்கள் ? ‘ என்றான்.

‘விஷம் ‘ — நோயாளி.

‘உங்களுக்கு அது நல்லது செய்து ஆரோக்கியம் தரட்டும் ‘ என்றான் செவிடன்.

நோயாளியின் கோபம் அதிகரித்தது.

‘எந்த மருத்துவர் உங்களைப் பார்க்கிறார் ? ‘

‘இஸ்ராயீல் (உயிர் வாங்கும் பொறுப்பு தரப்பட்ட வானவர்) வருகிறார். நீ போய்த்தொலை ‘ என்றான் நோயாளி.

‘ஓ அவரா ? அவர் காலடி வைத்துவிட்டாலே போதுமே! இனிமேல் நீங்கள் சந்தோஷமுடன் இருங்கள். நீங்கள் குறிப்பிட்ட மருத்துவர் வருவது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம். இறைவனுக்கு அதற்காக நன்றி செலுத்துகிறேன். வருகிறேன் ‘ என்றான் செவிடன்.

‘இவன் என் ஜென்மப் பகைவன். இவ்வளவு மோசமானவன் என்று இத்தனை நாள் தெரியாமல் போனதே! ‘ என்று புலம்பினான் நோயாளி.

கெட்டுப்போன உணவை சாப்பிட்டவனுக்கு வாந்தி வரும். கோபத்தை அடக்குவதும் இப்படிப் பட்டதே. கோபத்தை வாந்தி எடுக்கவேண்டாம். அப்போதுதான் அதற்கு பதிலாக இனிமையான வார்த்தைகள் கிடைக்கும்.

எத்தனையோ பேர் பக்தியான செயல்பாடுகளில் ஈடுபட்டு (இருப்பதாக எண்ணிக்கொண்டு) அவற்றின் பலன்களை எதிர் நோக்கியவண்ணம் உள்ளார்கள். செவிடனின் விசாரிப்பைப் போல. அவர்களுடைய புண்ணியம் பாவமாகவும் அமுதம் விஷமாகவும் உள்ளதை அவர்கள் அறியவில்லை.

நான் என் மரியாதையைச் செலுத்திவிட்டேன். என் பக்கத்து வீட்டுக்காரனுக்கு நான் செய்யவேண்டிய கடமையை நிறைவேற்றிவிட்டேன் என்று எண்ணிக்கொண்டான் செவிடன்.

ஆனால் அவன் தனக்கெதிரான ஒரு நெருப்பைத்தான் தூண்டிவிட்டான் என்பதை உணரவில்லை.

‘தொழுங்கள், தோழர்களே! ஏனெனில் நீங்கள் (சரியாக) தொழவில்லை ‘ என்று பெருமானார் பாலவனத்து அரபியரிடம் சொன்னார்கள். இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றத்தான், ‘எங்களுக்கு வழிகாட்டுவாயாக ‘ என்ற வேண்டுகோள் ஒவ்வொரு தொழுகையிலும் வருகிறது. ‘இறைவா! தவறு செய்பவர்கள் மற்றும் நயவஞ்சகர்களுடைய தொழுகையோடு எங்களுடையதை சேர்த்துவிடாதே ‘ என்ற பொருளில்.

ஒப்பிட்டுப் பார்த்ததனால் ஒரு பத்து வருட நட்பையே செவிடன் அவனுக்கே தெரியாமல் முறித்துக்கொண்டான். குறிப்பாக, உங்களுடைய (கீழான) புலன்களின் தூண்டுதலின் பேரில் எல்லையற்ற வஹீயை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. வஹீயின் வார்த்தைகளை விளங்கிக்கொள்ளும் செவியானது அதன் அர்த்தங்களைப் பொறுத்தவரை செவிடுதான். விளங்கிக்கொள்ளுங்கள்.

இப்படி ஒப்பிட்டுத்தான் இப்லீஸ் கெட்டான். தான் நெருப்பென்றான். ஆதம் வெறும் மண்ணென்றான். மண்ணைவிட நெருப்பே உயர்ந்தது என்றும் வாதித்தான். தான் ஒளியென்றும் ஆதம் இருளென்றும் கூறினான். அல்லாஹ்வின் தராசு பற்றி அவன் அறியவில்லை.

அபூஜஹ்லின் மகன் நம்பிக்கைகொண்டு முஸ்லிமானான். நூஹு நபியின் மகனோ நம்பிக்கை கொள்ளாமல் வழிகெட்டான்.

மேகமூட்டமுள்ள இருண்ட நாட்களில் கிப்லாவின் திசையறிய அறிவைப் பயன்படுத்தலாம். தலைக்கு மேலே சூரியனும் கண்ணுக்கெதிரே கஅபாவும் இருக்கும்போது ஒப்பிடத் தேவையில்லை. செய்பவன் குருடன்.

வஹீ எழுதிக்கொண்டிருந்தவன் இறைவனின் பறவை பாடும் பாட்டு தன்னிடமிருந்தும் வருகிறது என்று எண்ணினான். பறவை தன் சிறகால் அடித்ததும் குருடாகிப் போனான். இருளில் மூழ்கினான்.

‘ரோ ‘ என்ற எழுத்திலிருந்தும் ‘ஜா ‘ என்ற எழுத்திலிருந்தும் ரோஜாவைப் பறிக்க முடியுமா என்ன ?

தொடரும்…

Series Navigation