கண்ணாடிக் கண்கள்

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

புதியமாதவி


‘விட்டுடப் போறேன் ‘

‘உண்மையாவா ? ‘

‘பின்னே என்ன ? எவ்வளவு நாளைக்குத்தான் இந்தக் கண்ராவியை எல்லாம்

கட்டி அழுதுக்கிட்டு பல்லைக் காட்டிக்கிட்டு வேலைக்கு வர்றது ? ‘

‘உன் ஹஸ்பண்ட் சரினு சொல்லுவாரா ? ‘

‘அய்யோ இங்கே நடக்கிறதெல்லாம் நான் அவர்க்கிட்டே ஒன்னுமே சொல்லலை.

சொன்னால் அவ்வளவுதான். பெரிய்ய தகராறு ஆயிடும். அவரு ரொம்ப பொஸஷிவ்

டைப் ‘

பெருமையுடன் சொல்லிக்கொண்டே டப்பாவேர் டப்பாவை தன் கைப்பையிலிருந்து

எடுத்து திறந்து சாப்பாடு மேசையில் வைத்தாள் லதா.

எல்லோரும் அவரவர் டப்பாவைத் திறந்தார்கள்.

‘அப்போ நீ சீக்கிரம் வேலையை விட்டுடப் போறேனு சொல்லு ‘

சேச்சியின் குரலில் ஒருவிதக் கிண்டல்.. என்ன இது சேச்சி எப்போதும் இப்படி

எல்லாம் பேசுவதில்லை. இன்னிக்கு சேச்சிக்கும் மற்றவர்கள் காற்று அடித்துவிட்டதா ?

லதா சேச்சியிடம் எதுவும் சொல்லவிரும்பவில்லை.

லதாவின் முகமாற்றத்தைக் கண்டு சேச்சி சொன்னாள்..

‘ஏய் லதா.. சும்மா சொன்னேம்மா.. ‘

அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். எல்லோரின்

முகத்திலும் கண்ணாடியில் ஒட்டிய தூசிகளாய் சின்ன சின்ன உறுத்தல்கள்.

கர்சீப்பால் துடைத்துக் கொண்டும் சிலர் துடைக்காமலும் கேண்டான்

மேசையில் அவரவர் லஞ்ச் டப்பாக்களுடன்..

வரிசையாக அவர்கள் 6 பேர்,. இன்று குப்தாமேடம் வரவில்லை. அவர்கள்

ஐந்து பேரும் ஒருத்தர் டப்பாவை மற்றவர்கள் பகிர்ந்து கொண்டு சாப்பிட

ஆரம்பித்தார்கள்.

அவர்கள் ஆறு பேரிலும் லதாதான் வயதிலும் அனுபவத்திலும் சின்னவள்.

ஆனால் அதிகம் படித்தவள். அவர்கள் எல்லோரும் இளங்கலை. இவள்தான்]

முதுகலை.

முதுகலை படித்து என்னபயன் ? அவளும் அவர்களைப் போல தான் வேலைப் பார்க்கிறாள்.

அதே லெவலில்தான். அதே சம்பளம்தான்.

ஆரம்பத்தில் கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது. ஆனால் அவள் கணவன்

இதுதான் நல்லது, குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் போய்வர

வசதியாக இருக்கும் என்று சொல்லிவிட்டான். அவன் சொல்வதிலும் அர்த்தமிருந்தது.

சரியாக மாலையில் 5 மணி ஆவதற்குள் கிளம்பிவிடுவாள். ஆபிஸரானால்

இப்போது டாண் என்று கிளம்பி போவது போல போகமுடியாதுதானே.

அன்றும் அவள் கிளம்பிப்போகும் போது அவள் ஆபிஸர் மிஸ்ரா அவளைக் கூப்பிட்டான்.

இது டேலி ஆக மாட்டேங்குது.. பிளீஸ் கால் அவுட் வித் மீ என்றான்.

இன்னும் பதினைந்து நிமிடங்கள் பாக்கியிருந்தது. அவளால் எதுவும் சொல்லமுடியவில்லை.

எனக்கு அவசரமாக வேலை இருக்கு என்றும் சொல்ல முடியாது. சனியம் பிடிச்சவன்

பார்க்கிற மாதிரி இனிமே ஹேண்ட்பேக்கை எடுக்கக்கூடாது என்று மனசில்

நினைத்துக்கொண்டாள்.

அவன் எதிரில் இருந்த சேரில் உட்கார்ந்தாள்.

தெர்ட்டி, நைண்டிபைஃவ், செவன்கன்றட் பாஃர்ட்டிசிக்ஸ்-

செவண்டி எய்டிபைஃவ் சிக்ஸ் கன்றட் டுவல்-

அவள் டேப்பை பார்த்து சொல்லிக்கொண்டே வந்தாள்.

அவன் ‘ம்ம் ‘ என்று பென்சிலால் டிக் அடித்துக் கொண்டே வந்தான்.

அவன் மூக்குக்கண்ணாடி அடிக்கடி சன்னல் திறந்து அவள் முன்பக்கமாக

இறக்கி தைக்கப்பட்டிருந்த கழுத்துப்பகுதியில் லேசர் கதிர்களைப் பாய்ச்சியது.

அவன் முன்னால் துப்பட்டாவை சரி செய்துகொண்டு கழுத்தைச் சுற்றிப் போட

வந்தக் கைகளை தன் அனிச்சை செயலைச் செய்யவிடாமல் பிடித்துவைத்துக் கொண்டாள்.

அப்படி மட்டும் அவன் முன்னால் துப்பட்டாவை எடுத்து மூடிக்கொண்டால்

அவன் ஒரு வெற்றிச்சிரிப்பு சிரிக்கிறமாதிரி அவளைப் பார்ப்பான்.

அப்போது அவளுக்கு ஓங்கி அவன் கன்னத்தில் இரண்டு விடலாம் போலிருக்கும்.

அப்படி எல்லாம் விடமுடியாதப் போது கோபமும் எரிச்சலும்தான் வரும்.

அவள் அவன் பார்வையைக் கண்டும் காணாமல் வேகமாக காலிங் அவுட்

செய்தாள்.அவன் அவள் வேகத்தைக் கண்டு பயப்படாமல் எப்போதுமே

என் கையில்தான் ரிமோட் என்கிறமாதிரி பட்டென்று சேரிலிருந்து எழுந்தான்.

அவள் குரலும் வேகமும் நின்றுபோனது.

இப்போது சேனலில் ஊமைப்படம் ஓடியது, அவன் எழுந்து நின்று சோம்பல் முறித்தான்.

தன் மூக்கு கண்ணாடியை எடுத்து துடைத்தான். பிஸ்லரி வாட்டர் பாட்டிலின்

மூடியைத் திறந்து மடக் மடக்குனு தண்ணிரைக் குடித்தான்.

கண்ணாடி இல்லாத அவன் கண்கள் பள்ளத்திற்குள் இருந்து அவளை ஊடுருவிப்

பார்ப்பது .. கும்மிருட்டில் திடிரென மின்சாரம் நின்றவுடன் யாராவது டார்ச் லைட்

அடித்து பார்ப்பது போலிருந்தது.

காலிங் அவுட் தொடர்ந்து செய்ததில் அவள் தொண்டை வறண்டிருந்தது.

அவன் பிஸ்லரி பாட்டிலை நீட்டியவுடன் அவள் சாதாரணமாக அதை வாங்கி

பாட்டிலின் வாய்ப்பகுதியை தன் உள்ளங்கையால் துடைத்துவிட்டு குடித்தாள்.

வறண்டு போன தொண்டைக்கு அவன் கொடுத்த பிஸ்லரி குளிர்ந்த தண்ணிர்

அந்த நேரத்தில் இதமாகவே இருந்தது. எவ்வளவுதான் கவனமாக அவள் பாட்டில்

தண்ணீரைக் குடித்தாலும் கொஞ்சமாகத் தண்ணீர் அவள் கழுத்துப்பகுதியில் சிந்தி

அவள் மார்பு பகுதியில் ஈரத்தில் ரங்கோலி வரைந்தது. இப்போது அவள் கைகள்

அவளுடைய துப்பட்டாவை எடுத்து அவள் கழுத்துப் பகுதியைச் சுற்றி

சுவரெழுப்பின.

மிஸ்ராவின் கண்ணாடிக்கண்கள் அவளை வெற்றி கொண்டுவிட்ட மமதையில்

குதித்து ஆடுவது அவள் கால்பதித்திருக்கும் மண்ணில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அப்படியே அவன் கண்ணாடிக் கண்கள்

உடைந்து சுக்குநூறாகச் சிதைந்து விழும்வரை தன் வலியக் கரங்களால்

‘கும் கும் ‘ என்று குத்துவிட வேண்டும் போலிருந்தது.

ஆனால் அப்படி எல்லாம் செய்ய முடியாது. அவள் அமைதியானாள்.

இப்படி அடக்கி அடக்கி வைத்தே அமைதியாகும் அவள் அமைதிப்பூங்காவில்

ஒருநாள் எல்லா சட்டத்திட்டங்களையும் உடைத்துக்கொண்டு அணுகுண்டுகள்

வெடித்துச் சிதறுமோ.. ? அந்தச் சிதறலில் அவளும் சிதைந்து போகக்கூடுமோ ?

அவளுக்குத் தலையை வலித்தது. அன்று புகைவண்டியில் வேறு கூட்டம் அதிகமாக

இருந்தது. எப்படியும் செம்பூர் வருவதற்குள் உட்கார இடம் கிடைக்கவேண்டும்.

நான்குமாதம் ஆகி இப்போது ஐந்தாவது மாதம். ரவி சொல்றமாதிரி இன்னும்

வயிறு தெரியவில்லை. நல்ல சாப்பிடனும். ஆனால் நல்ல சாப்பாடு இருக்கும்போது

வயிறு பசிப்பதில்லை. வயிறு பசிக்கிறபோது சாப்பிட எதுவுமே இருப்பதில்லை.

இப்போது அவளுக்குப் பசி வேறு சேர்ந்து கொண்டது. கீழே விழுந்துவிடுவோமோ

என்று பயமாக இருந்தது. எப்படி விழ முடியும் ? கீழே விழுவதற்க்கு இந்த

வண்டிக்கூட்டத்தில் எங்கே இடம் ? அவள்தன் தலைக்குமேல் ஆடிக்கொண்டிருக்கும்

கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

வண்டி குர்லா ஸ்டேஷனில். பாதிக்கூட்டம் இறங்கிவிட்டது. அப்பாடா அவளுக்கு

உட்கார இடம் கிடைத்தது. அதுவும் சன்னலோரம். உட்கார்ந்து முகத்தை துடைத்துக்

கொண்டாள். எதிரேயுள்ள ப்ளாட்பாரத்தில் வி.டி.க்கு செல்லும் வண்டி.

ஓர் ஆணும் பெண்ணும். அந்தக் கூட்டத்தில் அவள் மீது யாருடையக் கையும்

பட்டுவிடக்கூடாது யாரும் அவளைத் தொட்டுவிடக்கூடாது யாரும் அவளை இடித்துவிடக்

கூடாது என்று அந்த ஆண் தன் கைகள் இரண்டையும் வேலியாக்கி எல்லோருடைய

முண்டி அடித்துக்கொண்டு உள்ளே நுழையும் வேகத்தையும் இடிகளையும் தாங்கிக்கொண்டு

நின்றிருந்தான்.

எங்கெல்லாம் இவன் கைகள் இப்படி வேலியாக எப்போதும் தொடர முடியும் ?

அவளுக்கு ரவியின் நினைவு வந்தது, ரவியும் இப்படித்தான். ரவியுடன் கிளம்பினால்

லேடிஸ் டப்பாவிலும் ஏறவிட மாட்டான். அவனுடந்தான் ஏறவேண்டும். அவனும்

இப்படி அவளைச் சுற்றி வேலியாக நிற்பான். அவளுக்கு ஆரம்ப காலங்களில்

அதில் பெருமை இருந்தாலும் வரவர அவனுடைய அந்தச் செயல் எரிச்சலைத்தான்

தந்தது.

‘இதுதான் நான் சொன்னேன். நான் லேடிஸ்லே ஏறிக்கிறேனு ‘

‘ஏன் இப்போ என்ன ? ‘

‘இந்த வியர்வையும் நாத்தமும் .. வயித்தைக் குமட்டது.. இனிமே நீங்க சொல்றீங்கனு

உங்க கூட ஏறமாட்டேன் ‘

அவர்களுக்குள் எப்போதும் நடக்கும் விவாதம் நினைவுக்கு வந்தது. யார் கண்டது

அந்த எதிர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஆணும் பெண்ணும் கூட

இப்படி ஒரு விவாதம் செய்து கொண்டிருக்கலாம்.

திருமணம் ஆனவுடனேயே ரவியின் இந்தக் குணம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

‘ நீ கொடுத்துவச்சவாடா.. உம்மேலே உன் புருஷன் ஒரு தூசித் துரும்புகூட

தொட்டுவிட சம்மதிக்க மாட்டாரு.. உன்னை அப்படியே கண்ணுக்குள்

இருக்கிற கண்மணி மாதிரி வச்சிக்கப்போறாரு.. ‘

அக்கா, அண்ணி எல்லோரும் சொல்லும் போது அவளுக்கும் அதில் பெருமையாக

இருந்தது.

அவர்கள் திருமணம் நாகர்கோவிலில் நடந்தது. அப்போது திருமணம் ஆனவுடன் வீட்டில் எல்லோரும் முதலில்

கோவிலுக்குப் போய்வந்துவிடுங்கள்

என்றார்கள். ஆனால் ரவி சினிமாவுக்குப் போக டிக்கெட் எடுத்துவிட்டு வந்தாச்சுனு

எப்படி அவர்களிடம் சொல்வது ? அவள் தயங்கி தயங்கி அவனிடம் சொன்னாள்.

அவன் தான் அதனால் என்ன ? கொஞ்சம் சீக்கிரமா போவோம். முதலில் பெரியவுங்க

சொன்ன மாதிரி கோவிலுக்கு. அப்புறம் நம்ம பிளான்படி தியேட்டருக்கு. சரியா ?

என்று சொன்னவுடன் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

அந்த முதல் நாள் ரவியுடன் வெளியில் போய்வந்ததில் ரவியின் குணம் அவளுக்கு

நன்றாகவே புரிந்தது.

கோவில், தியேட்டர், ஹோட்டல் என்று அலைந்துவிட்டு நேரமாகிவிட்டது என்று

வேகமாக பஸ்ஸ்டாப் வந்து டவுண் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்கள் ஏறும்போது

கூட்டம் அவ்வளவாக இல்லை. உட்கார இடமில்லை என்றாலும் இருவரும்

ஜாலியாக கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் உரசியும் உரசாமலும்

நின்றுகொண்டு ஒருவர் கண்ணில் ஒருவர் பேசிக்கொண்டு பயணம் செய்தது

மறக்கமுடியாதுதான். அத்துடன் ரவியின் முரட்டுத்தனமும் மறக்கமுடியாதப் படி

இன்றும் நினைவில்.

சந்தை திருப்பத்தில் கூட்டம் நிறைய பஸ்ஸில் முட்டி மோதிக்கொண்டு.

பெரிய பெரிய நார்ப்பெட்டியுடன், வாழைக்குலையுடன், தேங்காய்ச்சாக்குடன்..

இதில் கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றும் போதாது என்று வயிற்றிலும் சுமந்து

கொண்டு ஒரு பெரிய்ய வொயர்கூடைப் பையையும் ஒரு கை மாற்றி ஒரு கையில்

பிடித்துக்கொண்டு ஒரு பெண் வேறு ..

டிரைவர் குளத்து மேட்டில் திருப்பத்தில் வளைத்து திருப்பினனார்.

அப்போதுதான் அது நடந்தது.

ரவி கோபத்தில் அந்தப் பெரியவரைப் பிடித்துக் கீழே தள்ளினான்.

‘ஏவ் கண்ணு முன்னாலே இருக்கா ? பின்னாலேயே…

எதிர்த்தாப்பிலே ஒரு பொண்ணு நிக்குனு தெரியலை. ‘

‘மன்னிச்சிடுங்க தம்பி ‘

‘உங்களை மாதிரி கூட்டத்தில் இண்டாசண்டா ப்ஃகேவ் பண்ர அயோக்கியப்பயலுகளை

எல்லாம் என்ன செய்யனும் தெரியுமா ‘ ?

ரவி தன் முஷ்டியை உயர்த்தினான்.

சட்டை அணியாத அந்தப் பெரிய்வரின் கறுத்த மேனி , உழைத்து முறுக்கேறிய

கைகள், ரவியின் கோபத்தில் அவருடைய தோள்களில் தொங்கும் துண்டைப்போல

கசங்கி கலங்கி கிழிந்து போனது.

ரவியின் கண்கள் சிவப்பாகி..காதுமடல்கள் சிவந்து..

ஒருநிமிடம் என்ன நடந்தது என்று அவள் நிதானிக்கும் முன்பே இவ்வளவும்

நடந்து முடிந்துவிட்டது.

‘சரி சரி விட்டுங்களேன். ப்ளீஸ்.. பஸ்ஸிலே எல்லொரும் நம்மளையே பாக்கறங்க ‘

அவன் லதாவைப் பார்த்து முறைத்தான்.

அந்த வயதானவர் மெதுவாக நகர்ந்து அந்தப் பிள்ளத்தாய்ச்சிப் பெண் அருகில் போய்

நின்று கொண்டார். அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு நின்ற அவளுடைய

குழந்தை இப்போது அவருடைய கையைப் பிடித்துக்கொண்டது.

அந்தப் பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணும் ஆதரவாக அவரைப் பார்த்து நடர்ந்துகொண்டு

அவர் நிற்பதற்கு இடம் கொடுத்தாள். அந்த வயதானவர் அவள் கைகளில் சுமந்து

கொண்டு நிற்கும் வொயர் பையை தன் கைகளில் வாங்கிக்கொண்டார்.

என்ன சத்தமிது என்று எட்டிப்பார்த்த கண்டக்டர் ரவியைப் பார்த்தவுடன் எதுவுமே

பேசாமல் ‘ரைட்.. ‘ என்று பஸ்ஸை எடுக்க சத்தம் கொடுத்தார்.

ரவியுடன் அதைப் பற்றி அவள் அதன்பின் எதுவுமே பேசவில்லை.

இந்தச் சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் அந்தப் பெரியவரின்

கண்ணாடி இல்லாதக் கண்கள் அவளிடம் எதுவோ சொல்வது போலிருக்கும்.

செம்பூர் வந்ததே தெரியவில்லை. வீட்டுக்குள் நுழைந்தவுடன் எதுவும் நினைக்க

நேரமில்லை. அவ்வளவு வேலைகள் .. வாஷிங் மிசினை ஆன் செய்துவிட்டு

சப்பாத்திக்கு மாவுப் பிசைந்தாள். அவசரம் அவசரமாக பீன்சை நறுக்கி

பாஜி செய்தாள். கொஞ்சம் டால், ரைஸ் .. சூடா அப்பளம்.

ரவி எட்டரைக்கு வந்தான்.

நல்ல மூடில் இருப்பது தெரிந்தது. அவள் பின்னாலேயே கிட்சன், பால்கனினு

அவளை சீண்டிக்கொண்டே இருந்தான்.

இன்னிக்கு நல்ல மூடிலே இருக்கார். எப்படியும் ஆபீஸ் பிரச்சனைகளைப் பக்குவமா

சொல்லிடனும். இந்த மெண்டல் டார்ச்சரைத் தாங்கிக்க முடியலை.. எப்படியும் ரவிக்கிட்டே

சொல்லிடனும்.

சாப்பிட்டு முடித்தவுடன் அவன் யாரிடமோ அவனுடைய செல்லில் பேசிக்கொண்டிருந்தான்.

கார் டாலராக இருக்கும். மாருதி, இண்டிகா, சேண்ட்ரோ, எக்ஸ் எல்,வேகன் ஆர்..

ஒவ்வொன்றாக என்ன ரேட், எவ்வளவு டிஸ்கவுண்ட், என்ன எக்ஸ்றா அட்டேச்மெண்ட்

என்று ஒரு பேப்பரில் கிறுக்கிக்கொண்டிருந்தான்.

அவன் பேசி முடித்தவுடன் அவள் மெதுவாக அவனருகில் உட்கார்ந்து அவன் கைகள்

இரண்டையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவன் கண்களைப் பார்க்காமல்

அவன் கைகளைப் பார்த்து எல்லாத்தையும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

மிஸ்ராவை, அவன் பார்வையை, அவன் இரட்டை அர்த்தம் தொனிக்கும் ஜோக்குகளை

எல்லாத்தையும் மெதுவாக.. அவனிடம் .

அவன் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான்.

அவன் கேட்டுக் கொண்டிருக்கிண்றான் என்பதே அந்த நிமிடத்தில் அவளுக்கு

ஆறுதலாக இருந்தது.

‘ சரி லதா.. இப்போ தூங்கு.. எல்லாம் சரியாயிடும் ‘

அவன் அமைதியாக அவளிடன் சொன்னான்.

அவள் நிம்மதியாகத் தூங்னினாள்.

மறுநாள் வழக்கம்போல அவள் பால்கனியில் வெளிச்சம். பால்கனியின்

கண்ணாடிக் கதவுகள் அவளைத் தட்டி எழுப்பியது.

அவள் நேரமாகிவிட்டதே என்று வேகமாக படுக்கையிலிருந்து எழுந்தாள்.

அவள் அருகில் ரவி நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தான்.

நேற்று தான் சொல்லியதற்கு ரவி என்ன சொல்லவான் என்று

யோசித்துக்கொண்டே லதா கிட்சனில் லஞ்சுக்கு சப்பாத்தி போட்டுக்கொண்டிருந்தாள்.

எப்போதும் போல ரவி எழுந்து வந்து அவளிடம் டா வாங்கிக்கொண்டு ஹாலில்

உட்கார்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தான்.

வாசிப்பதற்கு மட்டும் அவன் கண்ணாடி பயன்படுத்துவான்.

அவன் அருகில் வந்து பாம்பே டைம்ஸ் பக்கங்களைப் புரட்டுகின்ற சாக்கில்

அவன் பார்வையில் நின்றாள். அவன் கண்கள் கண்ணாடிக்குள்.

அந்த நேரத்தில் அவன் கண்ணாடிக் கண்கள் என்ன சொல்லப்போகிறது என்பதை ஊகிக்கவே

முடியாமல் லதா பாத்ரூமிற்குள் குளிக்கப் போனாள்.

9.05 செம்பூர் லோக்கலைப் பிடிக்க வேண்டும். இந்த மார்னிங் சிக்னஸ் வேறு

அவளைப் பாடாகப் படுத்தியது. அவள் அவசரமாக இரண்டு பேருக்கும் லஞ்ச்

டப்ப்பாவை பேக் செய்து கொண்டிருந்தாள். ரவி அவள் கிளம்பி போனபிந்தான்

குளித்து சாப்பிட்டு கிளம்புவான். அவன் வெளிநாட்டு கம்பேனியில் வேலை

செய்கிறான். அமெரிக்கன் சாப்ட்வேர் கம்பேனி. அமெரிக்கன் டைமிங்படி அவனுடைய

இந்திய நேரத்தை அட்ஜஸ்ட் செய்தாக வேண்டும்.

கிளம்பும்போது ரவியின் முகத்தைப் பார்த்தாள். இப்போது கண்ணாடி இல்லாத

அவன் கண்கள் அவளிடம் என்ன சொல்லப்போகிறது என்று ஆவலுடன்.

‘லதா.. உனக்கு கார் லோன் இன்ட் ரஸ்ட் 2% தானே. எனக்கு 8%.

நீ கார்லோன் போட் ரு. இன்னிக்கு ஆபிஸ்லெருந்து வரும்போது அதுக்குரிய

டாக்குமெண்ட் எல்லாம் மறக்காம வாங்கிட்டு வந்துடு.. ‘

சொல்லிக்கொண்டே அவன் எழுந்து குளிக்கப்போனான்.

லதா வேகமாக வீட்டிலிருந்து தன் லோக்கல் டிரெயினைப் பிடிக்கும் அவசரத்தில்

ரோட்டில் நடந்தாள்.ஒன்பது மணி ஆவதற்குள் வெயில் சுள்ளென்று முகத்தில்

அடித்தது. அவள் தன் கூலிங்கிளாஸ் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு

தன் கண்ணாடிக் கண்களின் குளிர்ச்சியுடன் அந்தக் கூட்டத்தில் அவளும் ஒருத்தியாக

..

எல்லோரும் கண்ணாடிக் கண்களுடன்.

சிலருக்கு எப்போதாவது கண்ணாடிக் கண்கள்.

சிலருக்கு எப்போதுமே கண்ணாடிக் கண்கள்..

டவுண் பஸ்ஸில் குளத்துமேட்டு திருப்பத்தில் அவள் மீது சரிந்துவிட்ட அந்தப்

பெரியவரின் கண்கள் மட்டும் கண்ணாடி இல்லாமல் அவளைத் துரத்திக்கொண்டே..

அவள் இப்போதெல்லாம் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தாள்..

—-

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை