கணேஸ்மாமா

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

சந்திரவதனா


பிச்சிப்பூ மரத்திலிருந்து ஒரு காகம் வாய் ஓயாது கத்திக் கொண்டே இருந்தது. ‘அப்பாச்சி….! இது அண்டங்காகமோ…. ? அரிசிக்காகமோ…. ? ‘ தவிடு பறக்க அரிசி பிடைத்துக் கொண்டிருந்த அப்பாச்சியைப் பார்த்துக் கேட்டேன்.

பிடைப்பதை நிறுக்திய அப்பாச்சி காகத்தைக் கூர்ந்து நோக்கி மீண்டும் சுளகு அரிசிக்குள் கவனத்தைச் செலுத்தி, அரிசிக்குள் நெல் ஒன்றைக் கண்டு அதை அவசரமாக எடுத்து எறிந்த படியே.. ‘சொல்லேலுதில்லை மேனை, பார்த்தால் அரிசிக்காகம் போலை இருக்கு. ஆனால் தொண்டையை விரிச்சுக் கத்துறதைப் பார்த்தால் ஏதோ ஒரு மாதிரி இருக்கு. ‘ என்றா.

எனக்கு ஆசை. அது அரிசிக்காகமாக இருக்கோணும். யேர்மனியில் இருந்து என் கணவரின் கடிதம் வரோணும் என்பதுதான். அதே நேரம் அது அண்டங்காகமாக இருந்து அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாதென்ற அங்கலாய்ப்பும் என்னுள் இருந்தது.

நேற்றும் இப்படித்தான் காகம் கத்திக் கொண்டே இருந்தது. ஆனால் அப்பாச்சி அடிச்சு வைச்சுச் சொல்லிவிட்டா. அது அரிசிக்காகம் என்றும், யாரோ வரப் போகிறார்கள் என்றும்.

அப்பாச்சி சொன்னது போலவே நேற்று கணேஸ்மாமா வந்தார். கணேஸ்மாமா எனக்கொன்றும் உறவு முறை மாமா இல்லை. ஊரே அவரைக் கூப்பிடுவது கணேஸ்மாமா என்றுதான். அவருக்கும் எங்களுக்கும் நட்பு வந்த கதையே சுவையானது.

வீட்டில் அவரது மனைவி எப்படித்தான் சுவை வகையாகச் சமைத்துப் போட்டாலும் பருத்தித்துறைத் தோசையைச் சுவைக்காமல் அவரால் இருக்க முடிவதில்லையாம். பருத்தித்துறைத் தோசைக்காகவே பொலிகண்டியிலிருந்து சைக்கிளை உழக்கிக் கொண்டு தினமும் பருத்தித்துறை ரவுண் வரை வந்து விடுவாராம்.

என் கணவரும் பருத்தித்துறைத் தோசைக்கு அடிமைதான். பல தடவைகள் நான் சமைத்து வைத்து விட்டுக் காத்திருக்க தோசை சாப்பிட்டு விட்டு வந்து என் கோபத்தைக் கிளறியிருக்கிறார்.

தோசை சுவைத்தவர்களுக்கிடையிலான பேச்சும் சுவைத்ததோ என்னவோ….!ஓடக்கரைத் தோசைக்கும், லாலாக்கடைக் கொத்து ரொட்டிக்கும் கூட்டாகவே போகுமளவுக்கு இருவரும் நண்பர்களாகி விட்டார்கள்.

நட்பு வீடு வரை வந்த போதுதான் தேநீர் கிளாசுடன் கணேஸ் மாமாவை முதன்முதலாகச் சந்தித்தேன். படங்களில் வரும் வில்லன் போல் ஒரு மல்லன் தோற்றம். பேச நா எழவில்லை. சிரிப்புக் கூட யதார்த்தமாக வரவில்லை. ஒப்புக்குச் சிரித்து விட்டு உள்ளே ஓடி விட்டேன். பின்னர் ‘நட்புக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா…. ? ‘ எனக் கணவரைக் கடிந்தேன்.

‘பொலிகண்டியார் அப்பிடித்தான். அவன் பார்ப்பதற்குத்தான் மல்லன். பழகுவதற்கு நல்லவன். ‘ என்றார் என் கணவர்.

அடுத்த முறை கணேஸ் மாமா வீட்டுக்கு வரும்போது எட்டு எவர்சில்வர் ரம்ளர்களும் ஒரு எவர்சில்வர் றேயும் கொண்டு வந்தார். பொலிகண்டியார் கிளாசில் தேநீர் அருந்துவதில்லையாம். ரம்ளரில்தான் அருந்துவார்களாம்.

நாங்கள் வெள்ளிக்கிழமைகளிலும் விரதநாட்களிலும்தான் சில்வர் பாத்திரங்களைப் பாவிப்போம் என்பதைச் சொல்ல நினைத்தும் சொல்லாது தவிர்த்தேன்.

கால ஓட்டத்தில் உயர்ந்த பருத்த முரட்டுத்தனமான அந்த உருவத்துள் ஒளிந்திருக்கும் நல்ல மனதைக் கண்டு நானும் நட்பாகி விட்டேன்.

தேநீருடன் எமது வீட்டுக்குள் ஆரம்பித்த அந்த நட்பு குடும்ப நட்பானது. கணேஸ் மாமாவின் மனைவி ராணி அக்காவும் குழந்தை மனம் கொண்டவதான். எண்ணெய் பூசி வாரி இழுத்துப் போட்ட பெரிய கொண்டையும், பளபளக்கும் முகமும், பெரிய குங்குமப் பொட்டும், கழுத்து நிறைய நகையும் பொலிகண்டியாருக்கே உரிய தனிக்களையாம் – அம்மா சொன்னா.

ராணி அக்கா முதன் முதல் எங்கள் வீட்டுக்கு வந்த போது கணேஸ் மாமாவுடன் ஒட்டி ஒட்டிக் கொண்டே நடந்தபடி கள்ளமற்ற சிரிப்புடன் என்னைக் கவர்ந்தா.கையிலுள்ள பெரிய பார்சலை என்னிடம் தந்து ‘இதுக்குள்ளை புண்ணாக்கு இருக்கு. எல்லாருமாச் சாப்பிடுங்கோ. ‘ என்றா.

எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. நாங்கள் பிண்ணாக்கை ஆட்டுக்குத்தான் வைப்போம். இவ எங்களைச் சாப்பிடச் சொல்கிறா. யோசனையுடன் அம்மாவிடம் கொண்டு போய்க் கொடுத்து ‘அம்மா….! புண்ணாக்காம், கொண்டு வந்திருக்கினம், சாப்பிடட்டாம். ‘ முகத்தையும் வாயையும் சுளித்த படியேதான் சொன்னேன்.

அம்மா சிரித்த படியே ‘பொலிகண்டியார் எள்ளுப்பாகுவைத்தான் புண்ணாக்கு என்பார்கள். சாப்பிட்டுப் பார். அவர்களின் எள்ளுப்பாகுவுக்குத் தனி ருசி. ‘ என்றா.

பொலிகண்டியும் பருத்தித்துறையிலுள்ள எனது ஆத்தியடியும் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கின்றன. ஆனால் பேச்சு வழக்கிலும் பழக்க வழக்கங்களிலும் இத்தனை வித்தியாசங்கள் எப்படி வந்தன ? மனசு வினாவியது.

அன்று அவர்களுக்கு எங்கள் வீட்டில் மதியச் சாப்பாடு. பின் றப்பில் இரண்டு சேவல்களைக் கட்டித் தூக்கி துடிப்பதை பெண்கள் யாரும் பார்க்காமல்…! மணக்க மணக்க கோழி இறைச்சி, உறைப்பில் மூக்கு நுனி வேர்க்க ஒரு பிடிபிடித்தோம். மச்சம் என்பதால் எங்கள் வழக்கப்படி சில்வர் பாத்திரங்களைத் தவிர்த்து, பீங்கான் கோப்பைகளில் சாப்பிட்டு, கிளாசில் தண்ணீர் குடித்தோம்.

அடுத்த முறை கணேஸ்மாமா எங்கள் வீட்டுக்கு வரும்போது, எங்களிடம் சில்வர் கோப்பைகளே இல்லையென நினைத்து பத்து சில்வர் கோப்பைகளும் ஒரு சில்வர் செம்பும் கொண்டு வந்து தந்தார். ‘பொலிகண்டியார் சொம்பிலைதான் தண்ணி குடிப்பினம். ‘ அப்பாச்சி சொன்னா. பொலிகண்டியாருடனான இந்த அனுபவம் எனக்கு சற்று வித்தியாசமாக ஆனால் சந்தோசமாக இருந்தது.

இந்த சந்தோசங்களில் யார் கண் பட்டதோ… ?நாமுண்டு, நம் சொந்தமுண்டு, கூடிக் குதூகலிக்க நட்பு உண்டு என்று சந்தோசித்து வாழ்ந்திருந்த எமக்கும், எம் மண்ணுக்கும் வந்ததே கேடு.

ஆர்ப்பரித்த பருத்தித்துறைக் கடலின் அலை ஓசை, சீறி வந்த பீரங்கிக் குண்டுகளுக்குள் அமிழ்ந்து போகத் தொடங்கியது. நெடிதுயர்ந்த பனை உதிர்த்த பனம்பூவை நுகர்ந்தபடி நாம் நடந்த பனங்கூடல் பாதைகளும், அரசு உதிர்த்த இலைகள் சரசரக்க நாம் நடந்த வீதிகளும் சிங்கள எதிரிகளின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபடத் தொடங்கின. கூடி வாழ்ந்த நாமெல்லாம் கல்லெறிபட்ட பறவைக் கூட்டங்களாய் சிதறத் தொடங்கினோம். பயமும் ஓட்டமும் வாழ்வாகிப் போக சிறகிழந்த பறவைகளின் சோகம் எங்கள் சொந்தமாகத் தொடங்கியது.

திக்கம், பொலிகண்டி மக்கள் எல்லோரும் அகதிகளாயினர். ஓடிய கணேஸ் மாமாவும், ராணி அக்காவும், பிள்ளைகளும் எம் வீட்டில் அடைக்கலமாயினர். அதுவும் எத்தனை காலம். எம் வீடும் இராணுவத்தின் கண்களுக்குள் வீழ்ந்தபோது அவர்கள் இடம்மாறி இடம்மாறி ஓடிக் கொண்டிருந்தார்கள். என் கணவரும் தன்னைக் காக்க வழி தெரியாது நாட்டை விட்டே ஓடிவிட்டார். அதன் பின் கணேஸ் மாமா, ராணி அக்கா அவர்களுடனான தொடர்பும் எனக்கு இல்லாது போனது.

மீண்டும் கணேஸ் மாமா எமது வீட்டுக்கு வந்தபோது, கிரனைட் நிறைந்த துணிப்பையை தோளில் கொழுவியிருந்தார். இடுப்பிலே கைக்கிளிப் சொருகியிருந்தார். தான் புலிகளின் படகோட்டியாகி விட்டதாகச் சொன்னார். ராணி அக்காவும் பிள்ளைகளும் ஏதோ வாழ்கிறார்கள் என்றார்.

நேற்றும் இப்படித்தான் துணிப்பையுடன் வந்தார். சைக்கிளை கேற் வாசலில் சாத்தும் போது தபால்காரன் என்றுதான் நினைத்தேன். கேற்றைத் திறந்து படிகளில் ஏறி அவர் வரும் போதுதான் கணேஸ்மாமா என்று கண்டேன். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாகப் புன்னகையுடன் வந்தார்.

‘வாங்கோ கணேஸ் மாமா! ‘ வரவேற்றேன்.

‘தங்கச்சி எப்பிடி இருக்கிறீங்கள் ? ‘ என்று தொடங்கியவர், நிறையக் கதைத்தார்.

இடையிலே ‘புட்டு இருக்கு. சாப்பிடுங்கோவன். ‘ என்றேன்.

‘வேண்டாம் தங்கச்சி. இண்டைக்கு இரவு நான் அங்காலை போறன். அதுதான் சொல்லிப் போட்டுப் போவமெண்டு வந்தனான். ‘ என்றார். அதற்கு அர்த்தம் பெடியளை (புலிகளை) பயிற்சிக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ படகில் இந்தியாவுக்குக் கூட்டிப் போகப் போகிறார் என்பதுதான்.

‘திரும்பி வந்து ராணி பிள்ளையளையும் அங்காலை கொண்டு போய் விடப்போறன். ‘ என்றார். எனக்கு ஏனோ கவலையாக இருந்தது. குசினிக்கு ஓடிப்போய் அம்மாவிடம் விடயத்தைச் சொன்னேன். அவர் பசியோடு இருக்கிறார் போலவே எனக்குத் தெரிந்தது.

வளவுத் தென்னையில் பிடுங்கிய இளவல் தேங்காய் போட்டு அவித்த பிட்டும், அதற்கு நேற்று பொன்னாத்தையிடம் வாங்கிய தம்பசிட்டித் தோட்டத்து கத்தரிக்காயில் வைத்த பிரட்டல் கறியும் காலையில் நாம் சாப்பிட்டது போக எஞ்சி இருந்தன. அம்மா அவசரமாய் முட்டையும் பொரித்துத் தரக் கொடுத்தேன். சுவைத்துச் சாப்பிட்டார்.

தான் காலையில் வேளைக்கே வெளிக்கிட்டு விட்டதால் ஒன்றுமே இன்னும் சாப்பிடவில்லையென்று சாப்பிடும் போதுதான் சொன்னார்.

சாப்பிட்டு முடித்ததும் நினைவாக அவர் தந்த செம்பிலேயே தண்ணீரைக் கொடுத்தேன். விறாந்தையில் நின்ற படியே கையை நீட்டி பிச்சி மரப் பாத்திக்குள் செம்பைச் சரித்து கையைக் கழுவியவர், நிமிர்ந்து அண்ணாந்து செம்புத் தண்ணீரைக் குடிக்கத் தொடங்கினார். ஒரு மிடறு தண்ணீர்தான் உள்ளே போயிருக்கும்.

கேற் திறந்த சத்தத்தைத் தொடர்ந்து தம்பி அவசரமாக ஓடி வந்தான். பாடசாலை போனவன் அரைகுறையில் பதட்டமாக ஓடி வருவது இப்போது சில நாட்களாகவே நடந்து கொண்டுதானிருக்கிறது.

கணேஸ்மாமாவைக் கண்ட அவன் முகத்தில் மெல்லிய சந்தோசம் மலர்ந்து உடனே கலக்கமாகி ‘கணேஸ்மாமா…! சந்தியெல்லாம் ஆமி. வீடு வீடாய்ப் புகுந்து பயங்கர செக்கிங் நடக்குது. எங்களையும் ஸ்கூலிலிருந்து அனுப்பி விட்டார்கள். ‘ என்றான்.

எனக்கு நெஞ்சு திக்கென்றது. கணேஸ்மாமா அப்படியே செம்பை என் கையில் தொப்பென்று போட்டு விட்டு ஓடினார். எங்கள் கேற்றிலிருந்து ஐந்து யார் தூரத்தில் சந்தி. கேற்றோடு ஒட்டியபடி இறங்கி, சைக்கிளில் ஏறி மறுபக்கத்தில் பறந்தார்.

எனக்கு வேர்த்துக் கொட்டியது. அம்மா அப்பாச்சி எல்லோரும் பதறிப்போய் செய்வதறியாது நின்றார்கள். இதற்குள் கச்சேரியில் வேலை செய்யும் தங்கையும் திரும்பி விட எங்கள் கவலை சென்றிக்கு நிற்கும் மற்றத் தம்பியிடமும் (மொறிஸ்) திரும்பியது.

அன்றைய பொழுது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. சென்றிக்கு நின்ற தம்பி பற்றியோ கணேஸ்மாமா பற்றியோ தகவலெதுவும் கிடைக்கவில்லை.

இரவெல்லாம் பருத்தித்துறைக் கடலில் ஒரே சத்தம். நித்திரையைத் தொலைத்த நிம்மதியற்ற நடு இரவில் கிரனைட் பையுடன் தம்பி வந்து போனான். தம்பிக்கு எதுவும் ஆகவில்லையென்ற நிம்மதியுடன் நடு இரவுக்குப் பின் தூங்கி…. எழுந்து விட்டேன்.

வழமைபோல் சூரியன் உதிக்க – எல்லாமே நடந்து கொண்டிருந்தன. காகம் விடாது கத்திக்கொண்டே இருந்தது. கலைத்தும் பார்த்தேன். கொப்புக்குக் கொப்பு தாவியதே தவிர, பிச்சிப்பூ மரத்தை விட்டுப்போக மனமின்றி கத்திக் கொண்டு நின்றது.

அம்மா சோறும் வடித்து விட்டா. கறிகளும் ஓரளவு முடிந்து விட்டன. தபால்காரன் இன்னுமா வரவில்லையென்று நான் கேற்றைப் பார்த்த போது யாரோ வருவது தெரிந்தது.

அட தேவியக்கா…! கணேஸ்மாமாவின் உறவுக் காரப் பெண். அவர் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான் அவவின் வீடு.

‘வாங்கோ தேவியக்கா! ‘ வரவேற்ற போதுதான் பார்த்தேன்.

என்ன கோலம் அது.! பொட்டு இல்லாமல், நகையில்லாமல், எண்ணெய் பூசி வாரி இழுத்துப் போட்ட கொண்டை இல்லாமல், பறந்த தலையுடன் மூளியாகத் தேவி அக்கா.

‘தேவி அக்கா என்ன.! என்ன இது கோலம். ? ‘ வினாவினேன்.

‘எல்லாம் முடிஞ்சிட்டுது தங்கைச்சி ‘ என்றா பதறியபடி.

எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. தேவிஅக்கா திடாரென்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறியழத் தொடங்கி விட்டா. அழுகையினூடே…. கணேஸ்மாமா நேற்றுப் போன படகு சிறீலங்கா கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகி, கணேஸ்மாமாவும் அவருடன் சென்ற பதினேழு பேர்களும் வீரச்சாவு அடைந்து விட்டார்கள். என்பதைச் சொன்னா.

உடலங்கள் கரையில் ஒதுங்கியதைச் சொல்லும் போது அவவிடம் இருந்து அழுகை பீரிட்டது. உண்மை தந்த அதிர்ச்சியில் நான் உறைந்து போய் உட்கார்ந்து விட்டேன்.

(14.04.1985 அன்று படகில் தமிழ்நாடு கெசல்கையில் சிறீலங்கா தடற்படை தாக்கி வீரச்சவை அடைந்த கணேஸ்மாமாவினதும், மற்றைய பதினேழு பேரினதும் நினைவாக.)

சந்திரவதனா

யேர்மனி

12.4.2000

பிரசுரம் – ஈழமுரசு (26ஏப்ரல்-02மே – 2001)

chandra1200@yahoo.de

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா