கணங்கள்

This entry is part 5 of 49 in the series 19991203_Issue

ராம்ஜி


 

‘ஹை ராபெர்ட்!அர்ச்சனா! ‘

‘ஹே! எங்கிருந்து ? ‘

‘டாக்சியில் ஏர்போர்ட் வந்துகொண்டிருக்கிறேன். உன் ப்ஃளைட் எப்பொழுது டல்லஸ் வந்தது ? ‘

‘இல்லை அர்ச்சி…. நான்….. ‘

‘ ? ? ‘

‘நான்…. இன்னும் LA யில் ( லாஸ் ஏஞ்ஜலஸ்) தான் இருக்கிறேன். வாஷிங்டனில் உன் கான்பிஃரன்ஸ் எப்படி.. ? ‘

‘ அதிருக்கட்டும் ராப். இன்னும் நாலு மணி நேரத்தில் நமக்கு டல்லஸ் ஏர்போர்டிலிருந்து ப்ஃளைட். நீ என்ன.. ? ‘

ஒரு தயக்கத் தொண்டைக் கனைப்பு… ‘ அர்ச்சி… அங்கு வரையாவது வந்து நோில் சொல்லவேண்டும் என்றுதான் நினைத்தேன்…. ‘

‘ஸ்டாப் இட். செல் போஃன் எதற்கு இருக்கிறது ? ‘

‘அர்ச்சி, நான் நிறைய யோசித்தேன்…. லீஸா….. ‘

‘ ஒரே ஒரு வினாடி ராப். டிஸ்கனெக்ட் செய்துவிட்டு என்னைக் கூப்பிடு. நான் எடுக்கமாட்டேன். சொல்லவேண்டியதை வாய்ஸ் மெயிலில் சொல்லிவிடு ‘

போஃனை பேகில் வைத்து ஸிப்பை மூடினாள். போன் மறுபடி அடிப்பது ஈனஸ்வரத்தில் கேட்டது. தொடர்ந்து நிசப்தமான நிராகாிப்பு ரெக்கார்ட் ஆகிக்கொண்டிருக்கும். மூன்றாவது நிராகாிப்பு. முதலில் சுந்தரத் தெலுங்கினில் ரமேஷ் ரெட்டி, பிறகு சேரநன்னாட்டு மாத்யூ, இப்பொழுது அமொிக்க ஆங்கிலத்தில் ராபெர்ட். தாய்மொழி தமிழும் தந்தை மொழி பெங்காலியும் சேர்த்து ஐந்து மொழிகளில் அவளுக்கு நல்ல பழக்கம் ஆகிவிட்டிருந்தது. அடுத்தது என்ன ஸ்பானிஷா என்று தனக்குள்ளேயே ஜோக்கடித்துப் புன்முறுவல் செய்தாள். வாய்விட்டு சிாிக்க வேண்டும் போல் இருந்தது. அடக்கிக்கொண்டாள். எங்கேயாவது தமிழ் சினிமா போல் சிாிப்பில் ஆரம்பித்து அழுகையில் முடியுமோ என்று பயம்.

‘ஏர்போர்ட் இன்னும் எவ்வளவு நேரம் ? ‘

‘ ஒரு மணி நேரம் ஆகும். ட்ராபிஃகை பொறுத்தது. இண்டியா போகிறீர்களா ? ‘

‘ம் ‘

‘ இண்டியன் விமன் ரொம்ப அழகு ‘

பேச்சில் ஸ்பானிஷ் கொச்சை(accent). மறுபடியும் புன்னகைத்தாள்.

‘நீ ரொம்ப அழகாகச் சிாிக்கிறாய் ‘ கண்ணாடியில் சைட் அடித்திருக்கிறான்.

மெளனம். ராபெர்ட்டும் இப்படித்தான் ஆரம்பித்தான்.

‘உன் பெயர்….. ‘

ஏதுடா இது ? ‘ அர்ச்சனா ராய் ‘

‘ ரைட்டர் அருந்ததி ராய்க்கு உறவா ? ‘

‘ இல்லை. ‘

‘ நீ அவளைவிட அழகு. ‘

‘தாங்க்ஸ் ‘

‘ என் பெயர் வில்லியம் கார்லோஸ். கார்லோஸ் என்றே கூப்பிடு. எனக்கு இண்டியா பார்க்க ரொம்ப ஆசை. ஆக்டேவியோ பாஸான் இன் லைட் ஆப்ஃ இண்டியா படித்திருக்கிறாயா ? ‘

பரவாயில்லையே! ‘ ஓ, அருமையான புக். ‘

‘நெருடா ? ‘

‘ ஓ யா! ப்ஃளைட்டில் கூட படிக்க வைத்திருக்கிறேன். ‘

‘ ஸ்பானிஷால் படிக்கவேண்டும். ஆ! உங்கள் டாகூர் எனக்கு மிக விருப்பம். ஒாிஜினல் பெங்காலியில் இன்னும் அழகாக இருக்க வேண்டும். உனக்கு பெங்காலி தொியுமா ? ‘

‘ஓ! என் தந்தை பெங்காலிதான். ‘

‘ அப்பொழுது நான் உனக்கு ஸ்பானிஷும் நீ எனக்கு பெங்காலியும் கற்றுக்கொடுக்கலாமே ? ‘ – அவளைத் திரும்பிப் பார்த்துச் சிாித்தான்.

‘நீ மணமானவளா ? ‘

‘ இல்லை ‘ நீ என்று கேட்க ஆரம்பித்தது தொண்டையில் நின்றது.

‘ என்னைப் பற்றி நீ ஒன்றுமே கேட்கவில்லை ‘.

‘ நீ எப்படி இவ்வளவு படித்து, அறிந்து ……

‘ இந்த டாக்சிக்குள் அல்லாமல் என்னை ஒரு சூழ்நிலையற்ற கார்லோஸாக சந்தித்திருந்தால் இப்படிக் கேட்டிருப்பாயா ?ா

வெட்கினாள். ‘ஸாாி…

‘அவசியமில்லை. எங்கள் ஊாில் நான் ப்ரொபஃசர் வார்கஸாக இருந்தேன். கம்யூனிசத்தையும் கேப்பிடலிசத்தையும் குழைத்து அதிலுள்ள அழுக்கையெல்லாம் வேதாந்த நீாில் கழுவி ஒரு அரசியல் ப்ளஸ் அன்மீக மாடல் தயாாிக்கவிருந்தேன். அதிலிருந்து இந்தக் கணம் வரையுள்ள கணங்களை நிரப்பிய அனுபவங்கள் பலப் பல – என் உயிாின் விலை ஏறி, நான் கடத்தப்பட்டு, உயிர் தப்பி ஓடி, பெயரை மாற்றி, ……. ‘ நிறுத்திவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்துச் சிாித்தான். சலனமற்ற முகம். பயங்கர அனுபங்களின் ரேகைகள் கூட இல்லை. குழந்தை போன்ற முக பாவம். அன்னியாிடம் சொல்லிவிட்டோமே என்ற கவலையே தொியவில்லை.

எப்படி ?

கேட்டாள்.

‘ இந்த ஒரு கணம் – ஒரு அழகான இந்தியப் பெண்ணுடன் டாக்ஸாயில் – இந்த ஒரு கணம் தான் உண்மை என்பதை உணர்கிறேன். சென்ற கணங்களை சுமப்பது பிணத்தை சுமப்பது போல். வெறும் அர்த்தமில்லாத கனம். வராத கணங்களை எதிர்பார்ப்பது பிறக்காத குழந்தைகளை வளர்ப்பது போல். பிறக்காவிட்டால் துன்பம். பிறந்தால் தொடர்ந்து எதிர்பார்ப்புகள். ‘

‘ ஜேகே படித்திருக்கிறாயா ? ‘ புன்முறுவலுடன் கேட்டாள்.

‘ ம்… படித்து மண்டை குழம்பி ஒரு நாள் ஜன்னல் வழியே விட்டெறிந்திருக்கிறேன். (சிாிப்பு) வாஷிங்க்டனில் ஒரு நாள் டாக்சிக்குள்ளிருந்து நாலு குழந்தைகள் சுடப்பட்டு மடிவதைப் பார்த்தேன். நான் படைத்த மாடலில் இது கிடையாது. அதில் ஊரெங்கும் ஊஞ்சல்கள். சந்தோஷத்தில் வீறிட்டுக் கத்திக் கொண்டு குழந்தைகள் மேலும் கீழும் ஆடி ஆடி … சில கீழே விழுந்து அடிபட்டு அழுது மருந்து போட்டுக்கொண்டு மறுபடியும் குஷாயாய்க் கத்திக்கொண்டு ஊஞசலில் ஏறி……..பிறக்காத குழந்தைகள்……. பிறந்து இறக்காத குழந்தைகள்…குழந்தைத்தனத்தை உள்ளத்திலும் உடலிலும் இழக்காத குழந்தைகள்.என்னுடைய மாடல் சொர்க்கத்தை மட்டுமே எதிர்நோக்கும் கனவு மாடல் என்று உணர்ந்தேன்……வீட்டிற்குச் சென்று மாடலை ஜன்னல் வழியே விட்டெறிந்தேன். ஒவ்வொரு கணமாக வாழ ஆரம்பித்தேன். ‘

வெகுநேரம் இருவரும் பேசவில்லை.

*******

எதிரே ஏர்போர்ட் தொிய ஆரம்பித்தது. மாற்றி மாற்றி மேலே போகும் கீழே இறங்கும் விமானங்கள். எதிர்பார்ப்புகளை ஏற்றிக்கொண்டு. உண்மைகளை இறக்கிக் கொண்டு.

டெலிபோஃன் அடித்தது. ஸிப்பைத் திறந்து வெளியே எடுத்து ஹலோ என்றாள்.

‘ அர்ச்சி! நான் தான். என் மெஸ்ஸேஜைக் கேட்டாயா ? ‘

‘ இல்லை ‘

‘ ப்ளீஸ் அதை அழித்துவிடு. அர்ச்சி நான்….. லீஸா என்னை நிராகாித்துவிட்டாள்…. எனக்கு ஒன்றுமே புாியவில்லை…. அர்ச்சி, நீதான் எனக்கு, அர்ச்சி நான் என்ன செய்யட்டும் ?….. வாஷிங்டன் டல்லஸ் டிக்கெட் இருக்கிறது. நான் அங்கு வருகிறேன். நம் இந்தியா டிக்கெட்டுகளை நாளைக்கு மாற்றி…..

‘ஸாாி ராப். நம் இந்தியப் பயணம் கிளம்பும் முன்னே முடிந்துவிட்டது. பிறக்கும் முன்பே இறந்த குழந்தை போல்.டிக்கெட்டை விட்டெறிந்துவிட்டு வாழ்க்கையைத் தொடரு. ‘

போஃனை அணைத்து பேகில் வைத்து மூடினாள்.

டாக்சி நின்றது.

பணத்தைக் கொடுத்து விட்டு இறங்கினாள். கார்லோஸ் அவளுடைய பெட்டியை வெளியே எடுத்து வைத்துவிட்டு அவள் அருகில் வந்து அவள் இதழ்களில் முத்தமிட்டான். தன்னை சுதாாித்துக் கொண்டு அவள் ‘ இதற்கு என்ன அர்த்தம் ? நான் வளர்ந்த முறையில் இது தவறு ‘ என்றாள்.

‘ இது தவறுக்கும் முறைக்கும் அப்பாற்பட்ட ஒரு கணம்.அழகும் அன்புமே ஆக்கிரமிக்கும் ஒரு கணம். இதை சுமக்காமல் பயணத்தைத் தொடரு ‘

அர்ச்சனாவின் காதுகளில் கவிதை ஒலித்தது.

‘ Out beyond ideas of right doing and wrong doing

there is a field. I will meet you there. ‘

‘ நான் மட்டும் கவி ரூமியைப் படித்திராவிட்டால் உன்னை அறைந்திருப்பேன் ‘ என்றாள் அர்ச்சனா சிாித்துக்கொண்டே.

‘ ரொம்ப தாங்க்ஸ் கார்லோஸ் ‘

பெட்டியை எடுத்துக்கொண்டு ஏர்ப்போர்டிற்குள் நுழைந்தாள். உள்ளே சென்றதும் தன்னறியாமல் திரும்பி கண்ணாடி வழியாக வெளியே பார்த்தாள். இன்னொரு பாஸஞ்சரை ஏற்றிக் கொண்டு கார்லோஸின் டாக்சி கிளம்பிப் போய்க்கொண்டிருந்தது.

*********

Thinnai, September 16, 1999

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல் >>

ராம்ஜி

ராம்ஜி