கடைசிப் பகுதி – கானல் நதிக்கரை நாகரிகம்

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


மணியிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டன. எதிர்பாராமல் அவன் தங்கைக்கு வேலை கிடைத்து விட்டது. ஸ்டேட் கவர்மென்ட். சுமதி நல்ல மதிப்பெண்கள் வாங்கினாள் என்று சொல்ல முடியாது. அவள் பிளஸ் டூ-தான். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்தாள். டிகிரி முடித்தவுடனே, அதுவும் எக்ஸ்சேஞ் உதவி இல்லாமலே அதுவும் மாநில அரசு உத்தியோகம் அதுவும் சென்னையிலேயே.

மணி… அவனுக்கு திடாரென்று பக்தி அதிகம் ஆகிவிட்டது. தினமும் காலை மாலை குளித்தான். தினசரி ஒரு வேளையே ஒழுங்காய்க் குளிக்காதவன். வெளியே போய்விட்டு வந்தால் கால்கூட அலம்ப மாட்டான்.

மணிக்கு என்ன ஆகி விட்டது ? திருநிறு பூசி சாமி படத்தின் எதிரில் உட்கார்ந்து டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு… லாலா லாலா லாலாவேசமும் லீலா லீலா லீலா விநோதமும்… என்று சஷ்டி கவசம் பாராயணம் செய்கிறான். லாலா லாலா லாலா மிட்டாய்க் கடை, லீலா லீலா என்றால் பக்கத்து வீட்டு லீலா என்று இருந்தவன்.

கோவிலுக்குத் தவறாமல் போனான். பிராகாரத்தில் உலக மகா பொறுமையும் கவனமுமாய்ச் சுற்றி வந்தான். கோவில் மணி. ஆனால் ஓசை இல்லாத மணி இது! அவன் போகும்போது கற்பூர ஆரத்தி காட்டினால் அடாடா என்ன சகுனம் என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறான். வாசல் பிச்சைக்காரர்கள் இப்படி சில சமயம் கயிற்றுச் சாட்டையால் தன்னைத் தானே அறைந்து கொள்வார்கள்.

அர்ச்சகருக்குத் தண்ணீர் இறைத்துக் கொடுத்தான். காதில் வில்வ இலையோ துளசியோ பூவோ சொருகிக் கொண்டான். பென்சில் செருகினால் ஹோட்டல் பட்லர், இது பட்டர் உபகாரி உத்தியோகம்.

ஒருநாள் சைக்கிளில் அவனைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சட்டென்று இறங்கினான். ஜுரத்துக்குப் பத்து போட்டாற் போல நெற்றி எங்கும் திருநீறு. பத்து அல்ல அது, பதினோன்று. நுாற்றிப் பதினோன்றை பக்கவாட்டில் போட்டாப் போல. எகிறிய கிரிக்கெட் விக்கெட்டுகள். இராம பிரான் அணில் முதுகில் தடவினாப் போல சிவ பெருமான் இவன் நெத்தியத் தடவிட்டாரா ?

‘என்னடா. ‘

‘இன்னிக்குப் பிரதோஷம் ‘ என்றான் மணி.

‘நீ பஞ்சகச்சம் கட்டிக்கலையா ? ‘ என்று கேட்டேன்.

ஒரு விரைப்புடன் என்னை முறைத்தான். ‘நீங்கல்லாம் பாவிகள். அதான் லோகம் இப்டி இருக்கு. பகவான் ராமகிருஷ்ணர்… ‘

‘கெய்ட்டில நல்ல படம் இவனே. டக்கர் சீன்ஸ் வரியா ? ‘

‘சிவ சிவா… ‘

‘அவம் போயி ஆச்சி ஒரு வாரம்… ‘

‘வரட்டா. ‘

‘எங்க போறே மணி ? ‘

‘ஆள்வார்ப்பேட்டுல… ‘

‘கோவிலா ? ‘

‘ம் – உனக்கும் சேத்து வேண்டிக்கறேன்… ‘ என்று மணி கிளம்பிப் போய்விட்டான்.

ரைட், மணி. நான் உனக்கும் சேர்த்து படம் பார்க்கிறேன்.

சிவா பிறகொருநாள் வந்து சேர்ந்தான். ஆள் சாதாரணமாகவே நோஞ்சான். இப்போது துவண்டிருந்தான். கண்கள் இப்போது விகாரமாய்த் தேவாங்கு மாதிரித் தெரிந்தன.

வீட்டை விட்டு ஓடிப் போனதும் சிவா நடந்தே விழுப்புரம் வரை போய்விட்டான். சோறு சரியில்லை. குடிக்க தண்ணி கிடையாது. குளியல் கிடையாது. சட்டையே பிசுக்கேறி நாறியது. நடை. ராப்பகலாய் நடை. எதுக்கு இப்டி நடக்கிறான். எங்க போயிச் சேரப் போறான். காரணம் அவனிடம் கிடையாது. பதில்களும் கிடையாது. பகலில் ஊருக்குள் எங்காவது சுற்ற வேண்டியது. இரவானால் நடை. பசி உடம்புக்குள் ஓட்டை போடுவதைப் போலக் குடைகிறது.

எங்கோ மயக்கம் போட்டு விழுந்திருக்கிறான். ராசப்பன் என்று ஒரு லாரி டிரைவர் பார்த்து இரக்கப் பட்டு சாப்பிட வாங்கித் தந்திருக்கிறான். ‘ ‘தம்பி பார்த்தாப் பெரிய வூட்டுப் பிள்ளை மாதிரிக் கீறே… எந்துாரு உனக்கு ? ‘ ‘ என்று விசாரித்துப் பார்த்தான். பையன் பதில் ஒன்றும் சொல்லவில்லை. ரொம்ப வற்புறுத்தவே தன் பேர் பாலாஜி என்றும் அப்பா பேர் சிவகுமார் என்றும் (இவன் பேர்தான்) – சொல்லி சிதம்பரத்தில் ஒரு வாய்க்கு வந்த முகவரி கொடுத்திருக்கிறான். அந்த முகவரிக்குப் போட்ட கடிதம் திரும்பி வந்து விட்டது. அப்புறம் மிரட்டி கிரட்டி கேட்டு கடைசியில்…

‘ஸ்ரீதர்… ‘ என்று சத்தம் கேட்டது வாசலில். என் அப்பா எட்டிப் பார்த்தார். முதலில் வியப்பும் பிறகு விசனமும் ஏற்பட்டன அவரிடம்.

‘வணக்கம் சார் ‘ என்றான் சிவா கூச்சத்துடன்.

‘அப்டியே இரு. ஆரத்தி எடுத்தப்பறம் உள்ளே வா ‘ என்றார் என் அப்பா.

சிவாவுக்குப் புரியவில்லை.

சிவா திரும்பி வந்தது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. நான் விறுவிறுவென்று சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்தேன். ‘இருடா காப்பி ? ‘ என்றாள் அம்மா உள்ளே யிருந்து.

‘ரெண்டு டம்ளர் ? ‘

‘பால் அவ்ளவுக்கு வராது ‘

‘சரி வேணாம் ‘

‘ஸ்ரீதர் ?… ‘

‘வேணாம்மா ‘ என நான் வெளியேறினேன்.

‘வரேன் சார் ‘ என சிவா எழுந்து கொண்டான்.

‘போம்போது எவ்ள பணம் எடுத்துண்டு போனே ?… ‘

‘ஐந்நுாறு ‘ என்று சிவா தயங்கினான்.

‘ஏது பணம் ? நீ சம்பாதிச்சதா அது… ‘

‘வாடா போலாம் ‘ என நான் அவன் கையைப் பிடித்து இழுத்தேன். சிவா திரும்பி வந்தது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. தோளில் கை போட்டு அணைத்தபடி தெருவைப் பற்றிக் கவலைப் படாமல் நடந்து போனோம். பழைய நினைவுகளை நினைவுகூர நான் விரும்பவில்லை.

‘வாடா மணியைப் பார்ப்போம் ‘

‘மணி இப்ப மாறிட்டாண்டா! ‘

‘ஏன் ? ‘

‘வா நீயே தெரிஞ்சுக்குவே ‘

மணி வீட்டில் இல்லை. எங்கே யென்று கேட்டபோது அவர்கள் வீட்டில் அவன் தங்கை சரியாய் பதில் சொல்லவில்லை. அவாள் வேலைக்குப் போறாளாம்ல. அவா தரத்துக்கு நாங்கள் இல்லை. கழுத்தை சுளுக்கிக் கொள்கிற அளவில் ஒரு விலுக்.

அயொடெக்ஸ் வாங்கி வெச்சிக்கம்மா. அவசரத்துக்கு உதவும்.

ஆனால் வாசலில் மணியின் சைக்கிள் இருந்தது. ஆக பக்கத்தில் எங்காவது போயிருப்பான் என நாங்கள் அனுமானித்தோம்.

‘பக்கத்து ஆஞ்சனேயர் கோவில் இல்ல ?… ‘

‘கோவில் இருக்குன்றியா இல்லைன்றியா ஸ்ரீதர்… ‘ என சிவா சிரிக்கிறான். பழைய சிவாவாய் ஆகி வருகிறான் சிவா…

‘கோவில்ல என்னடா வேலை ? எவளாவது அதே கோவிலுக்கு வராளா ? ‘

‘அதும் ஆஞ்சனேயர் கோவில்… ‘ என நான் சிரித்தேன்.

‘ஆஞ்சனேயர் என்ன வேலை கொடுப்பார் ? மரம் ஏறப் போறானா இவன் ? ‘ என்றான் சிவா.

அதற்குள் ‘சிவா ? ? ? ‘ என்று பரபரப்பான சத்தம் கேட்டது. மணி ஓடி வந்தான். மணி சிவாவை இறுக்கிக் கட்டிக் கொண்டான். அழுது விடுவான் போலிருந்தது.

‘கமான் ஸ்ரீதர் வி ஷுட் செலிப்ரேட் இட்… ‘

‘படத்துக்குப் போலாமா ? ‘ என்றான் சிவா.

‘என்ன படம் ? ‘

றான் சொன்னேன்… ‘Nothing but love ‘

‘எங்க ? ‘

‘நைட்டில. கூட பிட் ஓடினாலும் ஓடும்… ‘

‘நீ வருவியா மணி… ‘

‘வரேன்… ‘

‘அப்ப சாயந்தரம் கோவில் ? ‘

‘ச் ‘ என்றான் மணி.

—-

‘நீ என்ன ராசி சிவா ? ‘

‘சிம்மம் ‘

‘சனி. ஏழரை நாட்டுச் சனி இப்ப உனக்கு. அதான் இப்பிடிப் படுத்தறது ‘

‘போடா இவனொத்தம் பார் ‘ என்றான் மணி. ‘நம்ம நாட்ல எல்லா இளைஞர்களுக்குமே இருபதுலேர்ந்து முப்பது வரைக்கும் ஏழரைச் சனிதான்! ‘

‘அதாண்டா. ஜோசியர் இல்ல. அவரைப் பார்ப்பம்… ‘

‘பார்த்து ? ‘

‘என்ன ஏதுன்னு கேப்போம். சும்மா தெரிஞ்சிக்கலாமே… ‘

‘வேணாம் ஸ்ரீதர். நீ போயி -இந்த வேலை கிடைக்குமா-ன்னு கேப்பே. அவரு கிடைக்காதுன்னுட்டாருன்னு வெய்யி… ‘

‘ஒடனே அரண்டுருவாங்களா… ‘ என்று நான் சிரித்தேன்.

‘மணி, என்னைப் பத்தி நீ தெரிஞ்சண்டது அவ்ளதான்… ‘

‘போப்பா. போணுன்னா நீ போயிட்டு வா… நானும் சிவாவும் வர்ல. என்ன சிவா ? ‘ என்றான் மணி.

‘வர்லன்னா நீ வர்லன்னு சொல்லு. அவன் வர்லன்னு நீ ஏன் சொல்றே… ‘ என்றேன் நான்.

‘என்ன சிவா ? ‘

‘அவரை எங்கேன்னுடா தேடுவே… ‘ என்றான் சிவா.

‘மயிலாப்பூர் இல்ல… டேங்க் பக்கத்ல இருப்பாரு. ‘

‘உனக்கு எப்பிடித் தெரியும் ? ‘

‘நேத்து அங்கதான் இருந்தாரு. வா சிவா நீ. மணி வராட்டிப் போறான்… ‘

‘நீயும் வா இவனே ‘

‘அவன் வராட்டி விடுரா… ‘

‘அட சும்மா வாடா. நீ ஒண்ணும் நம்ப வேணாம். எங்க கூட வா போதும். ‘

‘என்னடா ? ‘

‘ம் ‘ என்றான் மணி.

நேற்று மயிலாப்பூர் குளக்கரையில் பார்த்தேன். தரையில் ஒரு பேனர் விரித்து, ஸ்டான்டில் ஒரு பேனர் மாட்டி உட்கார்ந்திருந்தார். தரை பேனரில் 1 2 என்று எண் போட்டு கேள்விகள் பெயின்டில் எழுதி யிருந்தன. நாம் கேட்கிற வரிசையைச் சொன்னால் கேள்வியை அவரே சட்டெனக் கண்டு பிடித்து பிறகு பதில் சொன்னார். தொங்க விட்டிருந்த பேனரில் ஜோதிஷ சாம்ராட் ஆஞ்சனேய தாஸன் விநாயகமூர்த்தி என எழுதியிருந்தது. கூடவே சுக்ரீவ ரேகை இருந்தால் இனாமாக பதில் சொல்லப் படும் என அறிவிப்பு… எத்தனை உத்திகள் கடைப் பிடிக்கிறார் மனுஷன். கேள்வியைக் கண்டு பிடிக்கிற கிளர்ச்சி ஒரு புறம். வர்றாள் சுக்ரீவ ரேகை இருக்கா எனப் பார்க்க ஆசைப் படுவான் என்று ஒரு கணக்கு. இருந்தாலும் இருக்கு என்று சொல்வாரா ? துட்டு போயிருமே!

சுக்ரீவ ரேகைன்னே ஒண்ணு இருக்கோ இல்லையோ!

தரை நிறைய புகைப்படங்கள். கருப்பு வெள்ளை – எம் ஆர் ராதாவுடன். எஸ் எஸ் ஆருடன். அஞ்சலி தேவி. பி எஸ் சரோஜா. பி எஸ் வீரப்பா. டி எஸ் பாலையா. கலைவாணர். சமீபத்திய ஜெய்சங்கர். ஸ்ரீகாந்த். பாலிதின் காகிதத்தில் மடித்து உள்வைத்த புகைப்படங்கள்.

ஓரளவு கூட்டம் இருந்தது அங்கே நேற்று. நான் என்னைக் காட்டிக் கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறாப் போல போய் நின்றேன். ஜோதிடம் பார்க்கிறவர்களை விட வேடிக்கை பார்க்கிற கூட்டம் அதிகம் இருந்தது.

‘எடு சாமி எல்லாத்தையும். இங்க கடை போடக் கூடாது ‘ என்றான் ஒரு போலிஸ்காரன் வந்து. காசு எதும் தேறுமா என்று பார்க்கிறான் பாவிப் பயல்!

‘நம்ப டி ஜி பி சார் எனக்கு சிநேகிதம்… பாருங்கோ ‘ என்று புகைப்படங்களில் ஒன்றைக் காட்டினார் அவர். அதில் அட, டி ஜி பி -யும் கைரேகை பார்க்கிறார்!

ஒருவன் வந்து கை நீட்டுகிறான். கூட்டமே பரபரப்பானது –

‘ஒனக்கு மொதல் பொண்டாட்டி செத்துட்டா. சரியா ? ‘

‘ஆமாஞ் சாமி ‘ என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தான் நீட்டியவன். இதில் சிரிக்க என்ன இருக்கிறது ?

‘இப்ப உனக்கு என்ன சிக்கல்னா… கோர்ட்ல உனக்கு ஒரு கேசு வாய்தா மேல வாய்தாவா இழுத்துக் கிட்டு கெடக்கு… ‘

அவனே பார்க்க ஆஸ்த்மா கண்டாப் போலத்தான் இருந்தான்!

‘ஆமாஞ் சாமி ‘ என்றான் அவன்.

அட மாமா அசத்தறார்டா! எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

‘எப்ப சாமி பைசலாகும் ? ‘

‘சொல்றேன். ஒரு அஞ்சு ரூவா எடுத்து வெய்யி ‘

‘அஞ்சு ரூவாயா ? ‘ அவன் முகத்தின் சிரிப்பு மறைந்தது.

‘ரொம்ப சிக்கலான கையிப்பா உன்னிது. கிட்டத்தட்ட எம்ஜியார் கை மாதிரி… ‘

‘அஞ்சி சாஸ்தி சாமி ‘

‘பலன் சொல்லணுமில்ல… ‘

‘ரெண்டு ‘

‘நெக்ஸ்ட் ‘ என்றார் அவர்.

‘இந்தாங்க மூணு. பொண்ணு கல்யாணம் வேற நிக்குது… ஜெயிச்சுக் கூடி வந்தாதான் தலை நிமிர முடியும்… ‘

‘புதன் மேடு நல்லாருக்கு. எல்லாம் நல்லபடியா முடியும் போ… ‘

‘எப்ப சாமி ? ‘

‘அதாஞ் சொல்லிட்டேன்ல… ‘

‘ஐப்பசிக்குள்ள தோதாவுமா சாமி… ‘

‘ஆகும் ஆகும். நெக்ஸ்ட் ‘ என்றார் அவர். எனக்குக் கையைக் காட்ட துடிப்பாய் இருந்தது. கையில் பணம் இல்லை. மசூதியில் பஸ் ஏறுவதை விட இங்கே பத்து காசு டிக்கெட் குறைவு என இதுவரை நடந்தே வந்திருந்தேன். அப்போதுதான் இவர் தட்டுப் பட்டார்.

பஸ்சில் இப்போது சிவாவே டிக்கெட் எடுத்தான். புது இருபது ரூபாய்த் தாளை அவன் மாற்றியது எனக்குத் திருப்தி அளித்தது. பஸ் திருவள்ளுவர் சிலையைத் தாண்டும்வரை மணி எங்களுடன் பேசவில்லை. நாங்கள் பைத்தியக்காரர்கள் என அவன் நினைத்திருக்கலாம்.

நாங்கள்லாம் ப ா வி க ள் மணி. உன் பாஷையில்! ச்சீ பாவம் கிண்டல் பண்ணாதே!

முன் சீட்டில் சிவா. அவனுடன் தோளணைத்து மணி. சிவா ‘ஒரு நல்ல ஜோசியர்னா நிகழ்காலம் இறந்தகாலம் எதிர்காலம் – மூணுத்தையும் புட்டு புட்டு வைக்க முடியும்டா. பெரும்பாலான ஜோசியர்ங்க இறந்த காலத்தை டக்கரா அடிப்பானுங்க. நிகழ்காலத்தைக் கூட ஓரளவு சொல்லிருவாங்க. ஆனா எதிர்காலம்… ‘

பஸ் ஒரு குலுக்கலுடன் நின்றது. எதிரே வரிசையாய் பஸ்கள் நின்றன. என்ன பிரச்னை என்று தெரியவில்லை. நாங்கள் மூவரும் இறங்கி ஓடினோம்.

காய்கறி வேன் ஒன்று வேகமாய்த் திரும்பும்போது பிளாட்பாரத்தில் ஏறி யிருந்தது.

கடை விரித்தபடி ஜோசியர் வெயிலுக்குப் படுத்திருந்திருக்கிறார்.

‘உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் ‘ என்று போட்ட பேனரில் ரத்தம் தெறித்திருந்தது.

‘மாப்ளே ? ‘ என பதறி மணி முன்னால் ஓடினான்.

நானும் சிவாவும் பின்னால் ஓடினோம்.

from the desk of storysankar@rediffmail.com

—-

எழுதியது 1999

நன்றி – எஸ் ஷ குறுநாவல்கள்/2 தொகுதி

வெளியீடு அலர்மேல்மங்கை சென்னை 83

டிசம்பர் 2004

Series Navigation