கடித இலக்கியம் – 32

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

வே.சபாநாயகம்


கடிதம் – 32
திருப்பத்தூர்.வ.ஆ.
24-7-85

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் கடிதம் கிடைத்தது. க்ஷண நேரத்தில் எந்தப் பழைய காலத்துக்கும் போய்விடுவது சாத்யந்தான் என்று இருந்தது அந்த அனுபவம்.

கையெழுத்தின் பழைய அழகேகூட, நடுவில் காணாமல் போயிருந்து – இப்போது காணப்படுவது, தங்கள் கடிதம் தன் பூர்வீக அழகுகள் பூராவும் பொருந்தி வந்திருப்பதற்குப் புலப்பாடு.

கடிதம் மிகவும் மகிழ்ச்சியளித்தது. கடிதம் பூராவையும் புன்சிரிப்புடன் படித்தேன். அதில் கண்டுள்ள நல்ல நல்ல விஷயங்களுக்கெல்லாம் மேலும் எங்கள் நல்வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் அழைப்பு touching ஆக இருந்தது. அது குறித்து என் பெருமையை – பெருமிதத்தை இவ்வªவு சுருக்கமாகத்தான் சொல்ல முடியும். குடும்பத்தோடு அங்கு வருவது எளிதில் சாத்தியப்படுகிற விஷயமா என்ன? திருப்பதி யாத்திரை போவது போன்றதோர் திட்டம் அது. எவ்வளவு சிரமம் இருந்தாலும் பக்தர்கள் அதை வெகு நாளைக்குத் தட்டிக்கழிப்பதில்லை. யாதும் எவ்வாறோ கூடும்!

– இவ்வாறு அந்த அழைப்பை மிகச் சிரத்தையுடன் கருதி, எடுத்து வைத்துக் கொள்கிறேன்.

பல நேரங்களில் என்னால் அகஸ்திய அவதாரம் எடுக்க முடிகிறது. எங்கோ இருந்து கொண்டு எதையெதையோ காண முடிகிறது. தங்களது மங்கள நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் அவ்வாறுதான் நான் கண்டு வருகிறேன். அத்தகைய நிகழ்ச்சிகள் அணி அணியாக வரட்டும். வாழ்க்கை ஆறு அழகாக ஓடட்டும்.
25-7-85

நல்ல மழை. ஆடி மாதத்தில் இம்மாதிரி பெய்து ஐந்தாறு வருஷமாயிற்று என்கிறார்கள். நமது கடிதங்கள் முன்பொரு முறை புனர்ஜன்மம் எடுத்தபோதும், இப்படித்தான் நல்ல மழை என்று எழுதியிருந்தீர்கள்.

நம்மிடையே நிலவிய மௌனத்தில், நான் துருப்பிடித்துப் போய் விட்டே னோ என்று நீங்கள் ஐயுற்றிருந்தாலும் நியாயமே! ஆனால் நன்கு துலங்கிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு உழைப்பு! பள்ளி, வீடு, ஆசிரியர் கூட்டணி, இலக்கிய வட்டங்கள், எழுத்தாளர் சம்மேளனம், மாட்டுத் தொழுவம், நாலைந்து நாட்களாய் மூன்று சிறுமிகளுக்கு ட்யூஷன் – என்று எல்லா அரங்குகளிலும்
அதிக பட்சம் உழைக்கிறேன். அதே நேரத்தில் என்னுள் இன்னும் ஒரு மாளாச் சோம்பல் இருக்கிற ரகசியத்தையும் அறிந்திருக்கிறேன். நகரத்துக்கு வந்து அலைச்சல் அதிகம் என்று பட்டாலும், நகரத்துக்கு வந்தது நல்லது என்றே தெரிகிறது. புதிய புதிய ரசிகர்கள், புதிய புதிய அறிமுகங்கள் போகிற இடமெல் லாம் கிடைக்கின்றன. அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம் – பொறிகளின் மீது தனியரசாணை மட்டும் இன்னும் மேலும் பழக வேண்டும். கருமயோகத்தில் நிலைத்திடல் என்பது இன்னும் கைவர வேண்டும். கோபத்தை அடக்கவும், அடக்கவியலாத போது அதை, சீறிப்பாயும் அழகிய வார்த்தைகளில் ஆற்றிக் கொள்ளவும் கற்று வருகிறேன்.

நாற்பதைக் கடந்த பிறகு “கடந்து செல்லுதல்” பற்றிய கருத்து நாட்டம் அதிகமாகிறது. இபோது எங்கள் பள்ளியின் குறிக்கோள்: குறைந்தபட்சம் அன்பு! அதிகபட்சம் அமரத்வம்! மனிதன் மீண்டும் திரும்பி வருகிற மார்க்கம், மார்க்ஸீயப் போதனைகளில்தான் எனக்கு ஸ்தூலமான நிஜமாகச் சுட்டிக் காட்டப் படுகிறது. அதுவே convince ஆகவும் இருக்கிறது. மரணத்திற்குப் பின்பு திரும்பி வருகிற கருத்தாக்கங்கள் முயற்சிகள் எல்லாம் போதிய பலன் தராதவையாகவும் பெரும்பாலும் பொய்யாகவும் உள்ளன.

தம்பி திருநாவுக்கரசுவின் கல்யாணத்தன்று மாலை பாப்பா விசேஷம் நேர்ந்தது. நான் கேள்விப்பட்ட தந்தைகள் எல்லாம் அத்தருணத்தில் ஒரு மறந்திருந்த விசனத்தை நினைவுகூர்ந்தவர்கள் போலும், வாழ்வில் இனிமேல் உஷராக இருக்க வேண்டும் என்று புதுத் தீர்மானம் கொள்கிறவர்கள் போலும் எனக்குத் தோற்றமளித்தார்கள். எனக்கு அது ஒரு இறக்கை கட்டிப் பறக்கிற அனுபவமாகவும் இருந்தது. திடீரென்று என் ஹிருதயம் அகண்டமாகிவிட்டது. வாழ்வில் தீர்ந்து விட்டது என்று சம்சயப்பட்ட அழகுகள் எல்லாம் மறு தலைமுறைக்கு மேலும் பல தலைமுறைக்கு முளைத்துத் துளிர்த்துத் தழைத்துப் பூத்தது போன்ற தரிசனம் நிகழ்ந்தது. நான் மிகவும் உன்னதமானவன் ஆனேன்.

இங்கே பெரியப்பா எங்கள் போஷிப்பில். அவரோடு பல சிலுவை யுத்தங்கள் நிகழ்த்தி, எனக்கு நானே ஞானம் புகட்டிக் கொண்டு, சினத்தின் தூண்டுதல் களுக்கு இரையாகாமல் சிறிது காலமாய் சாத்வீகம் காத்து வருகிறேன். அவர்
பிரக்ஞை வலியது. பேரன்தான் எல்லாம். உயிர் வாழ்வதே அவனுக்காகத்தான். இன்னும் கொஞ்சகாலம் இருந்தால் அவ்வப்பொழுது வரும் பென்ஷனை அவனுக்குச் செலவழிக்கலாம். வாழ்வில் எல்லாவற்றையும் இழந்துவிட்டது போன்ற ஒரு துயர் நிலையை – அதன் கொடுமை பூராவையும் – பேரன் நினைவில் சகித்துக் கொள்ள முடிகிறது போலும். அவருக்கும் உடம்பு மிகவும் தளர்ந்து விட்டது.

– வாருங்கள்! நீங்கள் இன்னொரு முறை வந்தால், பார்த்து மிகவும் மகிழ்வார். Slide projectorல், தாங்கள் எடுத்த ‘பெரியப்பா -பெரியம்மா’ போட்டோவை ஆளுயரத்துக்குச் சுவரில் போட்டுக் காட்டினால் – பெரியம்மா அசலாக எதிர் நிற்பது போன்ற அந்தக் காட்சி – இயலுமானால் – அவருக்கு வரப் பிரசாதம்.

தங்கள்- பி.ச.குப்புசாமி.


Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்