கடித இலக்கியம் – 28

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

வே.சபாநாயகம்


கடிதம் – 28

நாகராஜம்பட்டி
31-7-81

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

இன்று என் பிறந்த நாள். இரவு தூக்கம் வரும் முன், எவ்வளவு நேரம் எழுத முடியுமோ அவ்வளவு நேரம் தங்களுக்கு ஒதுக்கியிருக்கிறேன்.

தங்கள் அழைப்பு சம்பிரதாயமானதா அல்லவா என்று இனம் பிரித்துப் பார்க்கிற பேதம் நமக்குள் இருக்கிறதா என்ன? எங்கள் சௌகரியம் அசௌகரியம் முன்னிட்டே அந்த ஆனந்தமான புதுமையான அனுபவத்துக்கு எங்களை இன்னும் கொஞ்சம் தயாராக்கிக் கொண்டிருக்கிறோம். காலாண்டு விடுமுறை யின் போது வரப் பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ்! சிதம்பரம் கோயிலையும் அந்தப் பயணத்தில் சேர்க்க வேண்டும். நான் இன்னும் அந்த சபாநாயகத்தைத் தரிசித்ததில்லை.

நான் சென்ற 21, 28 தேதிகளில், அவலூர்ப்பேட்டைக்கு நான்கைந்து மைல்கள் தொலைவில் இருக்கிற இரண்டு ஊர் ஆசிரியச் சங்கங்களில் போய்ப் பேசினேன். பிள்ளகள் எங்களுடனே இருப்பது, மாடும் கன்றுகளும், மனைவியின் உடல்நலிவு – இவற்றிற்கிடையே, கூட்டங்களுக்காக மேற்கொள்ளுகிற சிறுசிறு பயணங்களில் மட்டுமே நான் சுதந்திரப்பட்டுச் சிறகை விரித்து உல்லாசமாகப் பறக்க ஆரம்பித்து விடுகிறேன். அல்லது, தங்களைப் போன்ற நண்பர்களுக்கு இந்த மாதிரி அத்யந்தமாகச் சாங்கோபாங்கமாக எழுத ஆரம்பித்து விட வேண்டும். இவ்வேளைகளில் எல்லாம், நமது பிறவி, தனித்த பொருளும் பயனும் உடையது போல் துலங்குகின்றது.

‘ஹெலன் கெல்லர்’ பற்றி நீங்கள் நூல் எழுதுவது நல்லதே. வாழ்வு எவருடையதானாலும் தமிழ் நம்முடையதாகையால், அதில் நாமும் கூட கரைந்து நின்று ஒரு தனியழகு காட்டலாம். அனாயசமாக அல்வா சாப்பிடுவது போலச் செய்யுங்கள். என்னிடம் ஹெலன் கெல்லர் சம்பந்தமாக எதுவும் இல்லை. எங்காவது இனிமேல் என் கண்ணில் பட்டால் உங்கள் கவனம் வரும்.

உங்கள் ‘ஸ்காலர்ஷிப்’ குறுநாவல் பற்றி நான் விரிவாக எதுவும் விமர்சனமாக எழுதவில்லை என்று ஞாபகம் வருகிறது. ஒரு காலத்தில் எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணிவேறாய்ப் பிரித்துப் போட்டுப் பரிசோதிப்பதும் பேசுவதும் ஒரு விளையாட்டுப் பையனின் நோக்கமற்ற குரூரம் போல் அவ்வப்போது பழக்கமாகத்தானிருந்தது. இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. நான் நினைத்த சட்டங்களுக்குள் இன்னொரு படைப்பு ஹிருதயத்தை நான் அடைக்கலாகாது. (இதில் என்ன வேடிக்கையெனில், எந்தச் சட்டங்களும் எனக்குச் சரியாகத் தெரியாது.) படித்ததும் உண்டாகும் விளைவு பற்றி மட்டுமே இனி நாம் பேசத்தகும். பேசுகின்ற பிற விஷயங்கள் எல்லாம், படைக்கப்பட்ட ஒன்றை எடுத்துக் கொண்டு, அது துணையாக நமது அறிவின் திறனை நாம் வெளிப் படுத்திக் கொள்வதேயாம். “உங்கள் ஸ்கேலைத்தான் என்னிடம் கொண்டு வருகிறீர்கள்!” என்று அதனால்தான் விமர்சகர்களை எச்சரித்தார் புதுமைப்பித்தன்.

‘ஸ்காலர்ஷிப்’ படித்த போது, இதைப் படைத்த மனம், எழுத்து கொண்டு என்னென்ன வெல்லாம் சித்தரிக்கிற ஆர்வத்தை இயல்பாகக் கொண்டிருக்கிறது என்பது நன்கு விளங்கிற்று. சம்பாஷணைக் கலை எனக்கு ரொம்ப ‘வீக்'(எழுத்தில்). தங்களுக்கு அதில் நல்ல தேர்ச்சி இருப்பதை இந்தக் கதையும் உணர்த்துகிறது. கதை பூராவும் முதலிலேயே விரைவில் சொல்லப்பட்டு விடுகிறது. ஒரு கதையின் கடைசியில், அதுகாறும் சொல்லப் படாத ஒரு புதிய விஷயம் மீந்து நிற்க வேண்டும். அதற்கு இடம் இல்லாமல், எவ்வளவு ஸ்காலர்ஷிப் வரப்போகிறது, என்னென்ன வெல்லாம் கஷ்டங்கள் படப் போகிறார் என்பதெல்லாம் முதலிலேயே, விளங்குமாறு தெரிவிக்கப்பட்டு விட்டது.

ஆனால் தங்கள் முயற்சிகள் எல்லாம் sincere ஆன முயற்சிகள். இது இக்கால எழுத்துலகில் நிறையப் பேருக்குத் தரத் தகாத ஒரு பெரிய பாராட்டு. எழுத்தை ஏதோ தவமென்றும் யோகமென்றும் உயர் புனிதப் பொருள் என்றும் மனமொப்பி ஏற்றுக் கொண்டுவிட்ட ஜாதி நாம்! நாம் எழுதுவதெல்லாம் எழுதத் தக்கனவே!

ஆடிப் பதினைந்தைப் பார்த்தால் முந்தாநாளும், அமாவாசையைப் பார்த்தால் நேற்றும், ஜூலை 31 ஐப் பார்த்தால் இன்றும் எனக்குப் பிறந்த நாள். “நேற்றும் இன்றும், நாளையும் – எல்லாக் காலங்களிலும் பிறப்பவன் நான்” என்று எழுதினேன். இது என்னைக் குறித்த சவடால் ஆகாது. மனிதகுல உறுப்பினனான ஒவ்வொருவனின் பெருமையும் ஆகும் இது.

தங்கள் புத்தகங்களை, நான் காலாண்டு விடுமுறையின்போது வருகிறபோது பார்க்கலாம் என்று நம்புகிறேன்.

இப்பொழுதெல்லாம் என் கடிதத் தாமதங்களுக்கு என் சோம்பல் காரணமில்லை. உழைப்பே காரணம். காலையில் கண் விழிப்பதிலிருந்து இரவு பத்தரை மணி பதினொன்றரை மணி வரைக்கும் ஓயாத உடல், மன வேலைகள். அமுதூறச் சுரக்கும் எண்ணங்களை எழுதுவதற்கான அவகாசமே கிடைப்பதில்லை. இரவெல்லாம் எழுதினால், உடல் தளர்ச்சியினூடே இரவுத் தூக்கமும் பாழ் என்னும் நிலைமை. அவ்வாறே அதைப் பொருட்படுத்தாது எழுதினாலும் ஒவ்வோர் இரவும் அவ்வாறே! ஆறுமுகத்துக்கு எழுதுவேன். ஆதிராஜுக்கு, ந்£லவனுக்கு, ருத்ராச்சாரிக்கு, தங்களுக்கு, என் மைத்துனருக்கு என்று எத்தனை பேருக்கு எழுதுவது? ஒரு சுற்றில் யாராவது ஒருவரைச் சிறிது காலம் காக்க வைக்க நேரும். அப்படி ஒரு கடித சர்வீஸ் செய்கிறேன் நான். ஆனால், வாழ்வையே கடிதங்களால் இட்டுப் பரப்பி இருப்பது போல் உணர்கிறேன். எனக்குப் பிறகு இந்தக் கடிதங்கள் படித்துப் பார்க்கப்பட வேண்டும் என்று ஏனோ ‘செண்டிமெண்ட’லாகத் தோன்றுகிறது. வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருக்கிறது. பல கஷ்டங்கள், பல பயங்கள் படுகிறோம். துணிந்து நின்று பார்க்கும் போது வாழ்க்கை நம்மை வளைய வந்து வாலைச் சுழற்றிக் கொண்டு, காலடிக் கிசை வாக கூட நடந்து வருவது போல் இதுக்கிறது. We are walking.

ஆபீஸ் வேலையைக் குறைத்துக் கொள்ளவே முடியாதா? வீட்டில் அதிக நேரம் தோய்ந்து இருந்து, Bliss என்பார்களே அப்படி மன நிலைகள் வாய்க்கப் பெற்று, நிறைய எழுதுகிற வேலையைக் கவனியுங்கள்.

– தங்கள் பி.ச.குப்புசாமி.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்