கடித இலக்கியம் – 14

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

வே. சபாநாயகம்


கடிதம் – 14

சாமியே சரணம் ஐயப்பா!

நாகராஜம்பட்டி
14- 12- 76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம். ரொம்ப நாட்களாகக் காஞ்சி ஸ்ரீசங்கராச்சார்ய ஸ்வாமிகளைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. JK வின் ‘ஜயஜய சங்கர’ கதை கிளறிவிட்டு விட்டது. இதற்கு முன்பு கூட எப்பொழுதுமே நான் ‘கல்கி’யில் அவர் பக்கத்தை மட்டும் கண்ணில் பட்டால் தவறாமல் படிப்பதுண்டு. சந்தையில் பொரி போட்டுக் தருகிற காகிதப் பைகளில் கூட ஓரிரு பக்கங்கள்
அகப்பட்டதுண்டு. படிப்பு என்றாலே லைப்ரரிகளைத் தேடிப் போகிற புத்தி போய் ரொம்ப நாளாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் இப்படித்தான் படிப்பு. அதிர்ஷ்டவசமாக முந்தா நாள் திருப்பத்தூரில் ஒரு பிராமண நண்பரிடம் ‘ஆசாரிய ஸ்வாமிகளின் உபந்நியாஸங்கள்’ என்கிற புஸ்தகங்கள் இரண்டு கிடைத்தன. பழைய கலைமகள் வெளியீடு.

அவரது தமிழைப் பற்றி ஏற்கனவே எனக்கிருந்த ருசிக்கு நல்ல பண்டம் கிடைத்தது. இவரும் ராஜாஜியும் எழுதுகிற தமிழ் நன்றாய் இருக்கும். எப்பொழுதாவது படித்துப் பாருங்கள்.

நான் சனிக்கிழமை, பாரதியின் ஆத்ம தினத்தன்று, சபரிமலைக்குப் போக வென மாலையணிந்து கொண்டேன். வைஷ்ணவி அணிவித்தாள். மூன்று நாட்களாக ரொம்ப நன்றாக இருக்கிறது. கோபிக்கக் கூடாது என்றிருக்கிறேன். அஞ்சாது இருக்கிறேன். ஏதோ ஓர் உயரமான சிகரத்தில் ஏறிக் கொண்டது போல் இருக்கிறது. என்ன நடந்தாலும், எதைப் பார்த்தாலும் மனசை ஒன்று கரகரவெனச் சுத்திகரிக்கிறது. ஆறு வருஷமாய்ப் போய்க் கொண்டிருக்கிற மாதிரியே தெரியவில்லை. பக்தியின் மீது, சந்ந்¢யாசத்தின் மீது, வாழ்வின் மீது, உலகின் மீது, என் பிறவியின் மீதும் மரணத்தின் மீதும் புதிது புதிதாய் மனம் படிகிறது. பக்திக்கு நான் முயற்சி செய்வதாக மட்டும்தான் சொல்லிக் கொள்ள முடியும். ஆனால் ஒன்று தெரியுமா? லலிதா நவரத்ன மாலையைச் சொல்லுகிற போது, மூடிக் கொண்டிருக்கிற கண்ணின் கடைக் கோடியில் கண்ணீர் ஒதுங்குகிறது. என்ன விநோதமான வாழ்க்கை! திருப்பத்தூரிலேயே இருக்கிற கம்யூனிஸ்ட் நண்பர்கள் “நாமெல்லாம் சேர்ந்து ஒரு இலக்கிய சங்கம் வைக்க வேண்டும்” என்கிறார்கள். இதோ நான் அவர்கள் எதிரே சபரிமலைக்கோலம் போட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கே என் அறையில் லலிதா நவரத்ன மாலை பாடுகிறேன். என் உணர்ச்சிகளுக்கு அறிவார்த்தமான வடிவம் கொடுத்து உதவு
கிறது JKவின் ‘காவியும் சிவப்பும்’ கட்டுரை. (இப்பொழுது இருந்தால் இன்னொரு முறை படிக்கலாம்).

காலையும் மாலையும் பச்சைத் தண்ணீரில் குளிக்கிறேன். முன்பெல்லாம் குளிர்கிறதே என்று அவசர அவசரமாய்க் குளித்து விடுவேன். இப்பொழுதோ, குளிரட்டும் என்று மனசைச் சூடாக்கிக் கொண்டவன் போல், நிதானமாக நின்று, நுரைக்கச் சோப்பு தேய்த்து நிறைய நேரம் குளிக்கிறேன். பூஜையறை ஊதுவத்தியின் மணமேறிக் கிடக்கிறது. வெள்ளையாகத் தும்பை மலர்களைக் கொட்டி மேலே ஒரு சிவப்பு செம்பருத்தியை வைத்து அழகு பார்க்கிறேன். அடுப்பங்கரை மணைக்கு மஞ்சள் பூசி அதையே ஐயப்பனின் பீடமாக்கி விட்டேன். முதல்நாள் சூட்டிய புஷ்பம் உலர்ந்து சருகான பின்னும் எடுக்க மனம் வரவில்லை. என்னமோ அதன் மீது ஒரு பந்தம். எடுத்துக் குப்பையில் போட மனமில்லாமலேயே எடுக்காமலிருக்கிறேன். காமம் வெறுப்பாயிருக்கிறது. ஆனால் பெண்களின் கண்களைச் சந்திக்காது இருக்கப் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது.

வாத்ய சங்கீதம் பிடிக்கிறது. சங்கீதம் மட்டும் தெரிந்தால் வாழ்க்கை மஹத்தான பொக்கிஷமாகிவிடும் போல் இருக்கிறது. புறத்தின் அலை ஒன்று போய், உள்ளே இருக்கும் சங்கீதத்தைத் தொடும் பாக்கியம் சிறிதளவு எப்போதேனும் கிடைக்கிறது.

– இதெல்லாம் எந்த நிலையில் தெரியுமா? குடும்பக் கட்டுப்பாட்டை நான் எதிர்த்துப் பேசி விட்டதாகவும், அதிகாரிகளிடம் மிரட்டும் தோரணையில் பேசியதாகவும், கேஸ் கொடுக்காத கடுப்பில், BDO ‘மெமோ’ அனுப்பியிருக்கிறான். அந்தச் சூழ்நிலையில்.

அதிசயம். ஐயப்ப விரதம் இருக்குங் காலை ‘இந்த மெமோ குறித்து நான் அலட்டிக் கொள்ள மாட்டேன்’ என்று இருந்தேன். இன்று பேப்பரில், குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமாக ஆசிரியர்களை அச்சுறுத்தும் சுற்றறிக்கைகளை வாபஸ்பெறச் சொல்லி தமிழ் நாடு அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது.

நிறைய வேலை. எனக்கு – போதகனுக்கு – சம்பந்தமேயில்லாத ரிக்கார்டுகளோடும் சாங்கியங்களோடும் அதிகாரிகளோடும் இவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருக்கிறதே, பிள்ளைகளிடம் நியாயமாக இன்னும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்? குறைந்த பட்சம் இன்னும் எவ்வளவு நிறைய பேச வேண்டும்? அவர்களையும் புறக்கணிப்பதில்லை. சொல்லப் போனால், ரொம்ப அன்யோன்யமான நேயமான சுகமான உறவு அவர்களிடத்தில் தான். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள். ‘அங்கம் குலைவது அறிவு’ என்பது மாதிரி அவர்களுக்குச் சில விஷயங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறேன். திருடக்கூடாது என்று தெரிந்தால் மட்டும் போதாது. திருடப் போனால் கையே, தேகாந்தமே நடுங்க வேண்டும். ‘கூழானாலும் குளித்துக் குடி’ சொன்னால் மட்டும் போதாது. குளிக்காவிட்டால், ஒரு நாளைக்கு என்றாலும் உடம்பு அரிப்பு எடுக்க வேண்டும் – இந்த மாதிரி.

சிலர் இன்னும் தான் திருடுகிறார்கள் போல் இருக்கிறது. சிலர் இன்னும் குளியலைத் தினசரிப் பழக்கமாகக் கொள்ளவில்லை.

ஆனால் என் பெண் குழந்தைகள் வெள்ளிக்கிழமையானால் வெகு அழகாகப் பள்ளிக்கு வருகின்றன. என்னிடம் புகழ்ச்சி பெறுவதற்கு அன்றைக்கு மஞ்சள் பூசிக் குளித்துவிட்டு வந்தால் போதும் என்கிற ரசியத்தைப் புரிந்துகொண்டார்கள் போல் இருக்கிறது.

ஒரு நாள் மங்கை என்கிற பெண் – கருமையும் மென்மையும் கலந்த தோற்றம் – அழகாக பேதை மாரியம்மன் போல் வந்தாள். அன்றைக்கு நான் வர்ணக் கலப்புகளைப் பற்றிப் பிள்ளைகளுக்கு ஒரு பாடம் சொன்னேன். அவள் கன்னத்தில் எனக்கொரு பசுமை தெரிந்தது. “கருமையும் மஞ்சளும் சிறிது கலந்தால் ஒரு பசுமை தெரியும் போலும். நீங்களெல்லாம் பெயிண்டிங்கையும் இப்பொழுதிருந்தே பழகுகிற மாதிரி நம் பள்ளிக்கூடம் இருந்தால் – இந்த இந்த வர்ணத்தோடு இது இது கலந்தால் இப்படி இப்படி ஆகும் என்று தெரிந்து கொள்வீர்கள் அல்லவா?” என்று இப்படிப் பாடம். நீலமும் பச்சையும் கலந்தாலும் இப்படிப் பச்சை வருமோ? நீங்கள் எனக்கு எழுதுங்கள் சபா.

உங்களுக்கு இப்பொழுது சில நாட்களாகத் தொடர்ச்சியாக எழுதாமல் என்ன செய்து கொண்டிருந்தேன்? இப்படித் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். வேலை தானே?

இன்றைக்கு இந்தக் கடிதத்தை ஆரம்பிப்பதற்குச் சற்று முன் கண்ணைச் சுழற்றியது. வரவரத் தூக்கத்தில் விருப்பம் விட்டுப் போகிறது – அதிகாலையில் தவிர. உங்களுக்கு எழுத ஆரம்பித்துவிட்டேன். என்னென்ன எழுதுவதோ, எப்படித் தூங்குவதோ?

நான் வேறு எதற்காகவும் எழுதவில்லை. எதை எழுதிப் போட்டாலும், இப்படித் தாங்கிக்கொள்வற்கு நீங்கள் இருக்கிறீர்களே, ஒரு பொருளுக்கு ஒரு இடத்தில் தீராத கிராக்கி இவ்வளவு இருக்கிறதே, என்னதான் அந்தப் பொருள் தன்னைத் தான் இளப்பமாக நினைத்தாலும் இந்தக் கிராக்கியைப் புறக்கணிக்கலாமா என்றெல்லாம் தான் எழுதுகிறேன். இது எனக்கு ஒரு ஆணவமாய்ப் போய் விடாமல் நான் தப்பிக்க வேண்டுமே. அதற்காகவே அவ்வப்பொழுது கொஞ்சம் வாலை மடக்கிக் கொள்ள வெண்டும் போல் இருக்கிறது. இன்னொன்றும் உண்மைதான். எனக்கும் சுகமாக இருப்பதனால் தான் எழுதுகிறேன்.

– இதிலே இலக்கியத்தை வேறு நினைத்துக் கொள்கிறோம். அந்தப் புண்ணியத்துக்கு நடையாவது நன்றாக வந்தால் சரி.

வேறேதாவது எழுதலாம் என்று நினைத்தால், சிதம்பரம் கோயிலுக்குப் போகவேண்டும் என்று இருக்கிற விருப்பம் நினைவுக்கு வருகிறது. பெரிய கோயிலாமே? உள்ளே போயிருக்கிறீர்களா? பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கிறீர்களா? சோழமண்டலக் கலாச்சாரம் மனசில் நிறைந்து நிற்க, ஒரு கொடி போல் உள்ளம் படபடவென்று பறக்குமே? அதுவும் உங்களுக்கெல்லாம் ரொம்ப நெருங்கிய கோயிலாயிற்றே?

***** ***** *****

15-12-76

மேற்கொண்டு என்ன எழுதுவது?

வீட்டிலனைவர்க்கும் குழந்தைகளுக்கும் என் அன்பைத் தெரிவியுங்கள்.

அப்பாவின் உடல்நிலை குறித்து ஒவ்வொரு கடிதத்திலும் உற்சாகமான செய்திகளை எதிர் பார்க்கிறேன்.

நமது கடிதங்களுக்கு முடிவு என்பது ஏது? இது, இடையில் ஒரு கையெழுத்துத்தான்.

– பி.ச.குப்புசாமி
15-12-76.

Series Navigation