கடித இலக்கியம் – 13

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

வே. சபாநாயகம்


(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் – 13

நாகராஜம்பட்டி வ.ஆ.
15-11-76

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

அடுத்தடுத்துத் தங்கள் பதில்கள் கிடைக்கப் பெற்றேன். சந்தோஷமாக இருந்தது. ஒருவகையில் சிரிப்புக் கூட வந்தது. தாங்கள் அதிசயப்படுவது போலவே நானும் ஓர் இடத்தில் அதிசயித்திருக்கிறேன். இது நம்மிடையே சகஜம். அதனால்தான் நாம் நண்பர்களாக இருக்கிறோம்.

– J.K. ஒருமுறை சொன்னார். சகோதரர்கள் – சக கோத்திரர்கள் என்பதாம். சஹிருதயர்கள் என்றும் உண்டாம். அது சக – ஹிருதயர்கள் என்று பொருள் படுமாம். இந்த சஹிருதயர்கள் சகோதரர்களைக் காட்டிலும் மேன்மையானவர்களாம்.

ஒரு விதத்தில் நீங்கள் என்னைக் கண்டு பொறாமைப் படலாம். ஆனால் நானும் பல அபத்தங்கள் பண்ணி இருக்கிறேன். தவறாக ஏதாவது செய்தாலும்தெளிந்த மனத்தோடு செய்கிறோமே என்றுதான் நினைத்தேன். அதே மாதிரி, எல்லாக் குழப்பங்களுக்கும் பிறகு ஒரு தெளிவு வந்திருப்பதாக நினைக்கிறேன்.

அன்பு கொண்டால் மனிதர்கள் எல்லாம் இவ்வளவு துன்பப்படுவார்களா?

வாழ்க்கை எவ்வளவு நாடகப் பாங்குடையதாய் இருக்கிறது!

குமுதத்துக்கு ஏதாவது நினைத்த பெயர்களில் எல்லாம் எழுதுவது. உஷாராகப் பெண்பாலார் பெயர்கள் வைத்துக் கொள்வதில்லை. சமீபத்தில், சிவகுமார் சொன்னான் என்று ‘சிம்ஹவிஷ்ணு’ என்று புனைபெயர் வைத்துக் கொண்டேன்.

ஒன்று தெரியுமா உங்களுக்கு? எனக்குக் குமுதத்தில் வரும்படியாகக் கதை எழுத உண்மையில் தெரியவில்லை. இந்தப் பத்திரிகைகளில் எல்லாம் என் எழுத்து ஏதோ ருசியற்ற வேதாந்த அவல் மாதிரித் தெரியும் போலிருக்கிறது. எல்லாவற்றையும் துறந்து நான் விரும்புகிற வண்ணமே எழுதுவதென்பதற்கும் எனக்கு இன்னும் சக்தி வரவில்லை. இதற்கிடையில் எப்பொழுதாவது கொஞ்சம் சில்லறை வருமே என்று மனம் சபலப்படுகிறோம். இந்த அசட்டுத்தனங்களைக் கம்பனின் மஹா சந்நிதானம் ஏற்குமா? கவி பாரதி பொறுப்பானா? JKவுக்கு
நாமும் ஒரு எழுத்தாளர்களா?

‘கண்ணதாசனி’ல் எழுதலாம். ஆனால் அங்கே எழுதப் பயமாயிருக்கிறது. எதை எழுதினாலும் போடுவார்கள் என்கிற வாய்ப்பு இருக்கையில் எழுதுவது சிலவேளைகளில் அபாயகரமானதாகும். ஒருவன் எழுதுவதை எல்லாம் போட்டுக் கூட அவனைக் கெடுத்து விடலாம். ‘பூவாடைக்காரி’க்கப்புறம் JK ஒருமுறை சொன்ன பாடம் இது.

சரி, என்ன இப்பொழுது? நான் எழுதாதது குறித்து எனக்கு உண்மையில் ரொம்ப வருத்தமெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒரு விதத்தில் நான் எழுதாதிருக்கிறேன் என்று கூட நான் உணரவில்லை. உங்கள் மாதிரி நண்பர்களுக்கும், நினைத்தால் அவ்வப்பொழுது டைரியிலும், பிள்ளைகளுக்கு ஏதாவது கட்டுரை வழங்கும்போதும் இப்படியெல்லாம் எழுதுகிறேனே, இதிலேயே அந்தக் குறை தீர்ந்து போகிறதோ என்னவோ?

ஆனால் சிருஷ்டியின்மேல் நமக்கு ஆசை இல்லையா? ஆசை வேண்டாமா?

நாம் நம் உள்நாடியில் அறிந்து, உலகின் ஆயிரம் உருக்களில் தேடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு ஒரு சித்திரம் தீட்டி ஒற்றைச் சிறுகதையிலாவது காலத்தை வென்று நிற்க வைத்துவிட வேண்டியதில்லையா? எப்பொழுதோ அந்தி சந்திகளில் அனுபவித்த அந்த உணர்ச்சிகளின் ஆழம் குறித்து வைக்க வேண்டாமா?

வேண்டும்தான். என்ன செய்வது? அதற்கு அலையாமலே இருக்கிறேன். ஏதாவது ஓர் ரூபத்தில் அதுவும் நானும் ஐக்கியமாகியே தீருவோம். அது என் விதி.

– (போகட்டும். ஆழமான சமாச்சாரம். எனக்கு நானே முரண்டுகிறேன் போல் இருக்கிறது.)

உங்களுக்கு விளையாட்டாக ஒரு கேள்வி கேட்கிறேன். நான் இந்த இந்த மாதிரி நிறைய நிறைய எழுதி அனுப்புகிறேனே இதை எல்லாம் என்ன செய்யப் போகிறீர்கள்? எனது மரணத்துக்குப் பிறகு ஒரு சிறு நினைவுப் பிரசுரமாகத் தொகுத்துப் போடுவதற்காவது இவற்றுள் ஏதாவது விஷயமிருக்கிறதா? இருந்தால் போதாதா, பிறந்த கடன் ஈடேறும். இனி என்ன கவலை? இலக்கிய ‘விசாரமே’ வேண்டாம். இலக்கிய சுகானுபவமே வேண்டப்படுவது.

ரொம்ப மகிழ்ந்து போகாதீர்கள். நான் ரொம்ப சோம்பேறி. திரும்பிப் படுப்பதையும் ஒரு சிரமம் என்று கருதுபவன். இரவில் மொட்டுமொட்டென்று விழித்து உட்கார்ந்து எழுத வேண்டுமே!

பேனா எதையாவது ருசியாக எழுதத் துடிக்கும் போதெல்லாம் உங்களுக்கு எழுதுவது என்று தான் தீர்மானித்திருக்கிறேன். தொடர்ந்து திடமாக எழுதுவேனா என்பதுதான் சோதனை.

எல்லாச் சோதனைகளிலும் தெளிந்து நிற்போம்.

சோதனை நம்மை மேலும் உயர்த்துவதாகவே இருக்கட்டும்.

நமக்கு எதையும் சோதிக்கும் விருப்பமில்லை. நாம் வழிபடுகிறோம். நம்புகிறோம். ஏமாந்து, அழாமல் சிரிக்கத் திடம் உள்ளோம். வாழ்க்கை நாடகத்தை அங்ஙனம் விளையாட்டாய்க் கற்றோம். சோதிப்பவனின் ஆவலாதிகளுக்குத் தீனி இல்லையேல் சோதனை தோல்வி. நமது விளையாட்டில் நமது தோல்வியும் நமக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தால் அதை ஏன் மறைக்க வேண்டும்?

J. கிருஷ்ணமூர்த்தியை நீங்கள் எப்போதாவது படித்ததுண்டா? நான் சரியாக அர்த்தம் புரியாமலே ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறேன். ஆனால் இப்போது அவரை நான் படிக்கவோ, புரிந்து கொள்ளவோ விரும்பவில்லை. அந்த முயற்சி – அவரைப் பின் தொடர்ந்து போவது – மஹா ஆயாஸம் மிக்கது. எனக்கு நம் பிரபந்தமே வழி காட்டப் போதுமானது. வானம் முழுக்க ஒன்றாக வருங்காலத்தில்
எனது பெயர் ஒன்றும் எழுதப்பட வேண்டாம்.

J. கிருஷ்ணமூர்த்தியைப் படித்தபோது அறிவு கொஞ்சம் துளிர்த்தது. அனுபவமோ நிர்க்கதியாயிருந்தது. அவரே சொல்வார், அவர் காட்டுகிற மாதிரி பார்க்க abundent strength வேண்டும் என்று. அதெல்லாம் நம்மிடமில்லை. நம்பிகையின் சக்தி அல்லால் வேறொன்றும் நம்மிடமில்லை. ஒதுங்கி விட்டேன்.

– இப்பொழுது ஏன் இவர் கவனம் வந்தது என்றால், நாம் நம் கடிதங்களில் இப்படியெல்லாம் வாழ்க்கை மற்றும் கலை, மனித உறவுத் தத்துவங்களை இப்படி மரக்கால் மரக்காலாக அளக்கிறோமே, இதையெல்லாம் J. கிருஷ்ண மூர்த்தி நோக்கில் கண்டால் அவருக்கு எப்பேர்ப்பட்ட specimen ஆக இருக்கும்!

***** ***** *****

16-11-76.

நமது JKவுக்கு எழுதியும் பார்த்தும் பேசியும் ரொம்ப நாளாயிற்று. ‘ஜயஜய சங்கர’விற்குப் பின்பு இன்னும் நான் பேச்சு மூச்சுக்கூட காட்டவில்லை. அவரை வரவழைத்து, ஒர் இரண்டு நாட்கள் ஜம்னாமரத்தூருக்குக் கொண்டு போய் விடலாமா என்று நானும் தண்டபாணியும் பேசிக் கொண்டோம். இல்லாவிட்டால் சென்னைக்காவது ஒரு சனி ஞாயிறில் போய் வர வேண்டும். முன்பு மாதிரி, நினைத்தபடி யெல்லாம் இப்போது திட்டங்கள் வகுக்க முடியவில்லை.

தாங்கள் வந்தால் தங்கள் சாக்கிலாவது ஜம்னாமரத்தூர் போகலாம். பள்ளிக்கூடம், வீடு எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி ஒரு சந்தோஷ வனாந்திரத்தில் நண்பர்களோடு சஞ்சரிக்க மனம் ஏங்குகிறது.

தாங்கள் புறப்படுவது பற்றி ஏதேனும் சகுனம் தெரிகிறதா?

தங்கள்,
பி.ச. குப்புசாமி
16 -11 76.

Series Navigation