கடிதம் – 29 ஏப்ரல்,2004

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ் – பிறைநதிபுரத்தான் – பி எஸ் ராஜேஷ் – கோச்சா – ராம. தமிழ்ச்செல்வன்


திண்ணை ஆசிரியருக்கு

திண்ணையில் வெளியாகும் பல கட்டுரைகள் நகைச்சுவையாகவும், வித்தியாசமாகவும் உள்ளதால்

அந்தப் பகுதியின் கீழ் கட்டுரைகள் அடிக்கடி வெளியாகாத குறையை சரி செய்துவிடுகின்றன.

ஜெயமோகனின் பல கட்டுரைகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். அதுவும் தன்னுடைய நூலை முன் வைத்து, ரயில் பயணமொன்றில் நடந்த நிகழ்ச்சியைப பற்றி எழுதியிருந்ததைப்(1) படித்து விட்டு பல முறை சிரித்தேன்.

தற் புகழ்ச்சியும், முட்டாள்த்தனமும் கொண்ட எழுத்தாளர் பாத்திரத்தை தொலைக்காட்சித் தொடரிலோ

அல்லது திரைப்படத்திலோ அல்லது நாடகத்திலோ சித்தரிக்க இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் எழுத்தாளர் பாத்திரத்தில் நாகேஷ் முதல் கருணாஸ் வரை ஒவ்வொரு நகைச்சுவை நடிகரும் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை கல்லூரி/பள்ளி மாணவர்கள் நடித்துக் காட்டலாம். கலை நிகழ்ச்சிகளில் இதைப் நிகழ்த்திக் காட்டலாம்.மிமிக்ரி கலைஞர்கள இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.கவுண்டமணியால் எழுத்தாளர் பாத்திரத்தை சிறப்பாகச் செய்ய முடியும்.கவுண்டமணியும், செந்திலும் முறையே எழுத்தாளர்-குரு, சிஷ்யர் பாத்திரத்தில் நடித்ததில்லை என்றே தோன்றுகிறது. இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய பாத்திரங்களை உருவாக்க முடியும்.

வாய்விட்டு சிரிக்கவைக்கும் கட்டுரைகளை (முரளி ஆனந்த், சோதிப்பிரகாசம் எழுதிய) சமீபத்தில்

படித்தேன். இந்தக் கட்டுரைகளை இப்படிப் படித்தால்தான் பொருள் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். சோதிப்பிரகாசத்தின் நடையும், தர்க்கமும் சிரிக்கவைப்பவை. இப்படிக் கூட ஒருவரால் எழுதமுடியுமா

என்று வியக்க வைப்பவை. இதற்கு பல்லாண்டு பயிற்சியும், உழைப்பும் தேவைப்பட்டிருக்கும். சோ எழுதியதை

விமர்சிப்பவர்கள் கூட சோதிப்பிரகாசம் எழுதிய கட்டுரையைப் படித்தால் சோவே பரவாயில்லை என்ற

முடிவிற்கு வந்துவிடுவார்கள்.

ஒரு நாவலைப் படித்துவிட்டு ஒரு வாரம் தூங்காத பாத்திரம் ஒன்றை உருவாக்கவும், அதனை வைத்து நகைச்சுவைக் காட்சிகளை அமைக்கவும் முரளி ஆனந்த் எழுதிய கட்டுரையை பயன்படுத்திக் கொள்ளமுடியும். திரைப்படமொன்றில் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் கவுண்டமணியை எழுப்பி செந்தில் ஒரு சந்தேகம் கேட்பார் – ஞானப்பழத்திறகு கொட்டை உண்டா ? என்று. அது போல் நாவலைப் படித்துவிட்டு தூங்காமல் அவஸ்தையில் புலம்பும்/உளறும் கவுண்டமணி, குறட்டை விட்டு நன்றாகத் தூங்கும் செந்தில் என இரு பாத்திரங்களை உருவாக்கவும், தூங்கும் செந்திலை எழுப்பி இலக்கியம் பேசும் கவுண்டமணி என்று காட்சி அமைக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


இந்துத்துவம் = சர்வ ஜாதி சமத்துவ சம்மதத்துவமா ?

பிறநதிபுரத்தான்

கட்டுக்கதைகளை மட்டும் அடிப்படையாக கொண்ட தங்களின் கட்டுரையை படித்தேன்.

‘எம்மதமும் சம்மதமே ‘ என்கிறார்களாம் இந்துக்கள். அவர்களிடம் ‘எச்சாதியும் சம்மதமா ? ‘என்று வினவினால், ‘இல்லவே இல்லை ‘ என்ற குரல்தானே ஒங்கி ஒலிக்கிறதே! தன்மதத்தை சார்ந்த பிற சாதியினரையே சம அங்கத்தினராக கருதாத ஹிந்துக்களால் எப்படி பெருந்தன்மையாக எம்மதமும் சம்மதம் என கூறமுடிகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத ‘எம்மதமும் சம்மதம் ‘ என்ற தொடர் எதுகை மோனைக்காக போட்டதா ?.

ஒரு வாதத்திற்காக ‘எம்மதமும் சம்மதம் ‘ என்று வைத்துக்கொண்டால் இஸ்லாமும் இந்துமதமும் ஒன்றா ? கடவுளுக்கு உருவம் கிடையாது, கடவுள் ஒருவரே, அவரை அரூபன் என்கிற ஒரே ஒரு கொள்கையில்தான் இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்கிறது. ஆனால் இந்து மதத்தால் போற்றப்படும் சாதி வேறுபாடு, மறு ஜென்மம், நடைமுறை பல உருவ வழிபாடு போன்றவைகளில் அனுவளவும் ஒற்றுமை கிடையதே!

அவ்வாறு முடிச்சுப்போடுவது பெருந்தன்மையினால் என்றால், சமீப காலத்தில் இந்தியாவில் இருக்கிற அனைவரும் (முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பிற மதத்தினர்) ‘ஹிந்துக்கள் ‘ என்று தங்களை அழைக்கவேண்டும் என்று ஒரு கும்பல் அடிக்கடி கூப்பாடு போட்டுவருகிறதே ? இந்த கோஷத்தை ‘இரும்பு மனிதர் அத்வானி ‘ ‘முகமூடி வாஜ்பாய் ‘ போன்றவர்களும் எதிரொளிக்கிறார்களே ?

‘வெறித்தனமான மதப்பற்று இந்துக்களிடம் கிடையாது என்பது வரலாற்று உண்மை ‘ என்று நரித்தனமாக இரண்டு அம்பட்டமான பொய்களை ஒரே வரியில் எழுதியிருக்கிரீர்களே! மதுரையில், மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில், ஜைன மதத்தை சார்ந்த ஏறக்குறைய 8000 பேர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே அது யாரால் ? (http://www.themronline.com/200403m1.html/ The Modern Rationalist, March 2004).

‘அதீத மதப்பற்றுள்ளவர்கள் ‘ என்ற அடைமொழியை யாருக்கு தந்திருக்கிறீர்கள் தெரியுமா ? பாதிரியார்களையும் பாலகர்களையும் கொன்ற கொடியவர்களுக்கும், கண்ணியஸ்த்ரிகளை மானப்பங்கம் செய்த கயவாலிகளுக்கும்.

தெரு முனைகளிலும் பஸ் நிறுத்தங்களிலும் நின்றுகொண்டு வாய்கிழிய கத்தி ‘பாவிகளை ‘ பரிசுத்தவான்களாக்கப் போவதாக ‘பூச்சாண்டி ‘ காட்டுகிறவர்களுக்கும் – தன் ஆதிக்கத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் அவர்களிடம் ஓடிப்போய்விட்டால் இந்து மதக் கூடாரமே காலியாகி விடுமே என்று அவசரமாய் ‘மதமாற்றத்தடை சட்டம் ‘ கொண்டு வந்தவர்களுக்கும் – அதை வரவேற்று அகில இந்தியாவிலும் அமல் படுத்த வேண்டுமென்று கூச்சல் போடுவபவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

பிற மதங்களை அவதூறாக பேசுவதோ, பழிப்பதோ கிண்டல் செய்வதோ இந்துக்களின் இரத்தத்தில் கிடையாதாம் – அப்படியென்றால், இந்துக்களில் பெரும்பான்மை பிரிவினரை ‘தீட்டுள்ளவர்களாக ‘ ‘தீண்டத்தகாதவர்களாக ‘ மதரீதியாக அறிவித்ததை எதில் சேர்ப்பது ? அன்று போட்ட விதைதானே 21 ஆம் நூற்றாண்டில் கூட கோவிலின் கருவறைக்குள் உயர்சாதியினரை தவிர பிற சாதியினர் நுழைய, பூசை செய்ய தடையாக உள்ளது. அரிஜனப்பிரிவை சார்ந்தவர்களும் அர்ச்சகராகலாம் என்று அரசு சட்டம் செய்தால் கூட அதற்கு இந்து தர்மம் (!) இடம் தரவில்லையென்ற சிறுபான்மை உயர்சாதியினரின் வாதம் வலிமையாக ஒலிக்கிறதே ?

வர்னாஷிரமத்தை ‘ஆக்சிஜனாக ‘க்கொண்டு ‘மாடு மேய்க்கிறவன் பரம்பரை மாடு (ஆடு மேய்க்கலாமா ?) மேய்த்துக்கொண்டிருக்கவேண்டும் அவர்கள் வேதம் ஓத வரவேக்கூடாது ‘ என்று இன்னும் சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு ‘ (http://www.thinnai.com/pl0415042.html) அபிஷாகம் செய்துவரும் அதிசயம் நடப்பது இந்த சனாதான மதத்தில்தானே!.

விலங்குகளின் சிறு நீருக்கும் சாணத்திற்கும் கொடுக்கும் மரியாதையை கூட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மனிதர்களுக்கு அளிக்காமல் அவர்களை தீட்டுள்ளவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் அழைத்துிவிட்டு! ‘பாவிகள் ‘ என்று பிறர் அழைத்ததற்காக பொங்கியெழுவது போல் நடித்து சிண்டு முடியும் உங்களை குழப்பவாதி என்று அழைப்பதுதான் தகும். பண்பாடு அற்றவர்கள் யார் ? கோடிக்கனக்கான பூர்வீககுடிமக்களை சூத்திரர்கள், சண்டாளர்கள் என்று அழைத்த ‘புனித பூநூலர்களா ‘ அல்லது ‘பாவிகள் ‘ என்று அழைப்பவர்களா ?

மற்ற மதங்களின் தொழுகைத்தளங்களில் திட்டம்போட்டு கள்ளத்தனமாக இரவோடிரவாக சிலைகளை புதைத்து வைத்துவிட்டு அந்த இடம் முன்னாள் இந்து வழிபாட்டிடம் தான் என்று ‘உயர் சாதியினரை ‘ முதலாளிகளாகவும், ஆசிரியர்களாகவும் கொண்ட பத்திரிக்கைகளிலும் இணையத்தளத்திலும் வதந்தீக்களை பரவவிட்டு பதட்டம் விளைவிப்பது யார் ?

சென்னை தியாகராய நகரில் பள்ளிவாசலுக்கான இடத்தில் திடார் பிள்ளையார் எவ்வாறு முளைத்ததோ அவ்வாறே பாப்ரி மஸ்ஜிதில் ‘ராமர் சிலை ‘ வந்தது. உண்மை தெரிந்து மூக்குடைப்பட்டு ‘பிள்ளையார் சிலையை ‘ தூக்கிக்கொண்டு ஓடியது போல், பாபர் மஸ்ஜிதிலிருந்து ‘ராமர் சிலையை ‘ தூக்கிக்கொண்டு ஒடும் காலம் வரும்.

இதே வழிமுறையில்தான் காசி, மதுரா மற்றும் ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்களை இந்திய முஸ்லிம்களிடமிருந்து அபகரிக்க RSS/VHP கும்பலால் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளை கண்டித்து எழுதினால் மட்டும் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணுவதுதான் உண்மையான இந்துத்துவத்தின் அடையாளமா ?

இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கும்போதே, ‘நடமாடும் தெய்வம் ‘ காஞ்சி சங்கரரை கொண்டு சமாதானம் முயற்சி செய்வதுபோல் பாவனை செய்வது, ‘இலவச சூலவழங்கிககள் ‘ மூலம் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று ‘சவடால்கள் ‘ விடுவதுதான் சனாதான தருமத்தின் லட்சனமா ?

விவேகனந்தரின் கருத்துக்களை பேசிய பிரதமர் வாஜ்பாயின் ‘அதே வாய் ‘ தான் கூட்டனி அறிக்கையில் விலங்குகளான பசுக்களுக்கு அளிக்கும் உத்திரவாதத்தை கூட கோடிக்கணக்கான இந்திய முஸ்லிம் சிறுபான்மையினர் அவர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் தனியார் சட்டத்தை பின்பற்றும் உரிமையை அளிக்க மறுக்கிறது. பொது சிவில் சட்டம் பற்றி வாயும், மற்றதும் கிழிய பேசிவருபவர்கள், முதலில் இந்துக்களுக்காக ‘பொதுப்பூனூல் சட்டம் ‘ கொண்டுவந்து இந்துக்களான ஆதி திராவிடர்களையும் அந்தனர்களையும் சமமாக்க வேண்டியதுதானே!

மன முதிர்ச்சியற்ற (!) கற்கால மனிதர்களுக்குக்காக சலுகை செய்தே குறுங் கடவுளர்களின் மற்றும் பெருங்கடவுளர்களின் எண்ணிக்கை இந்து மத வழிபாட்டில் மலிந்துவிட்டது என்ற தங்களின் உண்மை கூற்றை வரவேற்கிறேன். நீங்கள் வேண்டுமானால் ‘நட்ட கல்லெல்லாம் கடவுள்; இட்ட பெயரெல்லாம் அவைகளுக்கான பெயர்கள்; கடவுள் நம்பிக்கையுள்ள கதாசிரியர்களின் கதையெல்லாம் புராணங்கள்: புராணங்களில் வரும் பாத்திரங்கள் எல்லாம் தெய்வங்கள் ‘ என்ற கொள்கையை கடைபிடியுங்கள். அதற்காக உங்களால் வணங்கப்படும் அனைத்து ‘கற்பனை தெய்வங்களை ‘ நியாயப்படுத்துவதற்காக இந்திய இஸ்லாமியர்களுக்கு சொந்தமான இடங்களில் ‘ஜென்ம பூமிகளை ‘ உருவாக்க முயற்சிக்கிறீர்களே ?

‘எந்த பிற மதத்தவர் இதுவே எங்கள் கடவுள் என்று எதைகூறினாலும், இந்துக்கள் அதை மதித்து ஏற்பார்களாம் ‘ – பிறரின் கடவுள்களை மட்டும் ஏற்றுக்கொண்டு அந்த மதம் வலியுறுத்திய கொள்கைகளை விட்டுவிட்டு எம்மதமும் சம்மதம் என்று வெற்று வசனங்கள் பேசிப்பயன் என்ன ? உதாரணமாக, ஜாதி வேறுபாடு கூடாது..பிறப்பு அடிப்படையில் பேதம் காணக்கூடாது என்ற இஸ்லாமிய மதக்கொள்கைகளை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளாமல் ‘ஈஸ்வரையும் வணங்குவோம் அல்லாவையும் வணங்குவோம் ‘ என்று கூறுவது சரியா ?

‘முகலாயர்கள் இந்துக்களின் கோவில்களை இடித்தார்களாம்: கொள்ளையடித்தார்களாம் ‘ – கோவிலின் பெயரில் கொள்ளையடித்து பரம்பரை பரம்பரையாக வயிறு வளர்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிராமனர்கள்தான் என்பது ‘மன முதிர்ச்சியடைந்த ‘ அனைவருக்கும் தெரியும் ? மிகச்சமீபத்தில், புகழ்பெற்ற திருப்பதி வைனவ ஆலயத்தை சூரையாட திட்டம் திட்டியது ‘கஜினி முகம்மது ‘ அல்ல – சாட்சாத் காஞ்சி பெரியவர் சங்கரர்தான் என்பது ஜோதிர்லதா கிரிஜாவுக்கு தெரியுமா ? (இந்திய மக்களில் பெரும்பான்மையினரின் தரிசனத்து எட்டாத, பிறசாதி சாமான்யனுக்கு பிரசாதம் கூட கிட்டாத, உயர்சாதியினரின் ஆதிக்கத்தில் மட்டும் இருந்து, பிற சாதியினரின் வாயிலும் வயிற்றிலும் அடித்து குறிப்பிட்ட சாதியினருக்கு வருவாய் ஈட்டிதந்த கோயில்கள் இருந்தாலென்ன இடிந்தாலென்ன என்றுதான் முகலாயர்கள் இடிக்கும்போது பெரும்பான்மை இந்து மக்கள் அமைதியாக இருந்து விட்டார்கள் போலிருக்கிறது!)

கொள்ளையடிக்க வந்த முகலாய மன்னர்களுக்கு தன் மதத்தை சார்ந்த ராஜபுத்திர பென்களை ‘சானக்யத்தனத்தோடு ‘ திருமணம் செய்து வைத்ததோடல்லாமல் ‘மஹா ‘ என்ற பட்டத்தையும் அளித்து கெளரவித்தது மகிழ்ந்தது யார் ? முகலாயர்களிடம் நில மான்யங்களுக்காக அரசவை ஆலோசகர்களாக இருந்து ‘இந்து மதத்தை சார்ந்த பிராமனரல்லாத ‘ குறுநில மன்னர்களையெல்லாம் ‘போட்டுக்கொடுத்தும் ‘ ‘காட்டிக்கொடுத்தும் ‘ பதவி சுகமனுபவித்தது யார் ?

பாபர் காலத்திலிருந்து ஒளரங்கசீப் காலம் வரை அற்பக்கூலிக்காக அவர்களின் படைகளில் வீரர்களாக பனிபுரிந்து முகலாயர்கள் சார்பாக இந்து நாட்டின் மீதெல்லாம் படையெடுத்தது யார் ? நீங்கள் முதலில் செய்யவேண்டியது என்ன தெரியுமா ? முகலாயர் காலத்தில் ( ஏறத்தாழ 700 ஆண்டுகாலம்) அவர்களுக்கு ஆலோசகர்களாக பனிபுரிந்த ‘சாதியினரையும் ‘ மற்றும் அவர்களின் படைகளில் போர்வீரர்களாக பணிபுரிந்த ‘சாதியினரையும் ‘ அடையாளங்கண்டு ‘பழிவாங்குவதற்காக ‘ அந்த தேச துரோகிகளை முதலில் நாட்டைவிட்டு வெளியேற்றுங்கள்.

‘நீ ஒரு முறை ஏமாந்தால் ஏமாற்றியவன் குற்றம்; நீ அடுத்த முறை ஏமாந்தால் அது உன் குற்றம் ‘ என்பது முதுமொழி! கஜினி முகம்மதுவை 16 முறை படையெடுக்க விட்டது யார் குற்றம் ? சோமனாதபுரத்தில் இருந்த எல்லோருமே என்ன வாஜ்பாய்க்களா, கஜினிமுகம்மது ஒவ்வொருமுறையும் படையோடு வரும்போது கைக்கட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்க்க ?

தேசபக்தி

சுதந்திர போராட்டத்தில் அனுவளவுக்கூட பங்களிக்காமல், ஆங்கிலேயரிடம் சரனாகதி அடைந்து, எட்டப்பன் வேலைப்பார்த்த சங்பரிவார் கும்பல் இப்போது நாட்டுப்பற்றைப்பற்றி உரையாற்றுவது கேட்க காதுக்கே கூச்சமாக இருக்கிறது. வேடிக்கைதான்.

சிறுவராக இருக்கும்போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை கையைக்கட்டிக்கொண்டு நின்று வேடிக்கை பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட இந்திய பிரதமர், தான் சுதந்திர தாகம் கொண்டு பொங்கியெழுந்து இயக்கத்தில் பங்கெடுத்ததாக ஆற்றிய ‘வீராவேச ‘ உரையின் அடிப்படையை ஆராய்ந்த பிரபல செய்தி ஊடகம் வெளிக்கொணர்ந்த உண்மை என்ன தெரியுமா ? ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் நான் பங்கெடுக்கவில்லை ஓரத்தில் நின்று வேடிக்கைத்தான் (!) பார்த்தேன். அதனால் தயவு செய்து என்னை விடுதலை செய்துவிடுங்கள் என்று மன்னிப்பு கடித எழுதிக்கொடுத்த ‘ கடித நகலை வெளியிட்டவுடன் (http://www.flonnet.com/fl1503/15031150.htm) வாஜ்பாயும் அவரின் தொண்டரடி பொடிகளும் வாயை திறக்கவில்லையே! இந்த செய்தி சம்பந்தமாக மேலும் விவாதம் நடத்த வேண்டாம் என்று மேற்கண்ட பத்திரிக்கை நிறுவனத்தை வேண்டிக்கொண்டதும் ஜோதிர்லதா கிரிஜாவுக்கு தெரியாதா ? (கேட்டால் சானக்கியத்தனம் என்று காது குத்துவீர்கள் !)

இந்திய முஸ்லிம்கள், இந்துக்கள் பெருவாரியாக வாழும் இந்நாட்டில் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகளை எண்ணிப்பார்த்து இந்துக்களிடம் பெருந்தண்மையாக நடந்துக் கொள்ளவேண்டுமாம் – மதம் சாதி பெயரால் மக்களை மொட்டையடித்த பண்டாரங்களும் பரதேசிகளும் இந்திய முஸ்லிம்களுக்கு ‘அளித்த ‘ சலுகை பற்றி கூச்சலிடுகிறவர்கள், (அளித்த உருப்படியான சலுகைகளில் ஒன்றிரண்டையாவது ‘திண்ணை வாசகர்களுக்காக ‘ பட்டியலிட்டு காட்டுங்களேன்!). உங்களிடம் ‘சலுகை ‘ பிச்சை கேட்டு வாழ, இந்திய முஸ்லிம்களை ஏமாளி தலித்களாகவும் அல்லது பிற்படுத்தப்பட்டவர்களாகவும் கருதாதீர்கள்.

உரிமையோடும் சுயமரியாதையோடும் வாழ அனுமதியில்லை என்ற அறிந்ததும் கண்மூடித்தனமாக பின்பற்றி வந்த இந்து மதத்தையே வீசியெறிந்துவிட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்த முன்னோர்களின் வழியில் வந்த எங்களுக்கா – உரிமைகளுக்காக போராட தெரியாது ?

சொந்த நாட்டிலே, எங்களுக்கான உரிமைகளை ஜனநாயக முறையில் கேட்கவும், போராடவும் தெரியும். உரிமைகளை பெறும் வழிமுறையையும், அதை அடைவதற்கான தைரியத்தையும், போராட்டக்குணத்தையும் இஸ்லாம் தெளிவாக கூறியிருக்கிறது.

இந்திய முஸ்லிம்கள் யார் ?

‘முகலாயர்கள் செய்த அட்டூழியத்துக்காக முஸ்லிம்களை இந்துக்கள் பழி வாங்கியிருக்க முடியுமாம். இந்துக்களின் சகிப்பு தன்மையின் காரணமாக அவர்கள் பழிவாங்க வில்லையாம் ‘- முகலாயர்கள் செய்ததற்காக இந்திய முஸ்லிம்களை ஏன் பழிவாங்கவேண்டும் ? இந்திய முஸ்லிம்கள் யார் ? அவர்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா, அரபு நாடுகளிலிருந்தா இறக்குமதி செய்யப்பட்டவர்களா அல்லது முகலாயர்களுடன் படைவீரர்களாக வந்து இங்கேயே தங்கி விட்டவர்களா ?

உங்களுக்கு மட்டும் எளிதாக புரியும் வகையிலே ‘பிழைப்புக்காக ஆடு மாடுகளை ஒட்டிக்கொண்டு எந்த கணவாய் வழியாகவும் கள்ளத்தனமாக இந்தியாவில நுழைந்து, பூர்வீகக்குடிகளை மதம், சாதி பெயரில் கூறு போட்டு, அவர்களை அடிமையாக்கி அட்டூழியம் செய்து வரும் கயவர்கள் கூட்டம் அல்ல – இந்திய முஸ்லிம்கள் ‘ என்று சுருக்கென சொல்லிவிடலாம். ஆனால் மற்ற வாசகர்களுக்காக கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.

உங்களுக்கு அருகாமையில் வசிக்கும் முஸ்லிம்களின் உடல், நிறம், பழக்க வழக்கம், மொழி மற்றும் வாழ்க்கை முறையை சற்று உற்று நோக்குங்கள். உயர் சாதி இந்துக்களைப் போலல்லாமல் நீங்கள் அன்றாடம் சந்திக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மனிதர்களை அப்படியே பிரதிபலிப்பார்கள். ஏன் அப்படி ?

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களும் ‘தீண்டத்தகாதவர்களாக ‘ (உங்களால்) பிற்படுத்தப்பட்டவர்களாக ‘ (உங்களால்) மற்றும் ‘மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக ‘(உங்களால்) முத்திரைக்குத்தப்பட்டு சொந்த மண்ணிலேயே வந்தேறிகளான உயர் சாதியினரால் சுரண்டப்பட்ட முன்னால் இந்துக்கள்தான்.

கட்டு மீறி போகும் சாதி வெறி கொடுமை..சகிப்புத்தன்மையற்றவர்களின் வர்ணாஷிரமக்கொள்கை திணிப்பு இவைகளை விரும்பாத – சுமரியாதை, சுதந்திரம் வேண்டி- முன்னாளில் இஸ்லாத்துக்குள் நுழைந்தவர்கள்தான் இந்திய முஸ்லிம்களான நாங்கள்.

ஒரே மதத்தில் இருந்தும் குறிப்பிட்ட சாதியினரை மட்டும் ‘புனிதம் ‘ நிறைந்தவர்களாக்கி ‘பூ நூல் போட்டு ‘ பூசித்து மற்றவர்களை ‘மனிதக்கழிவுகளாக ‘ வருணித்து ‘அடிமை விலங்கு பூட்டி ‘ – சாதிக்கொரு நீதி பேசி வந்த (இன்னும் பேசி வரும்) உயர்சாதி வெறியர்களின், செருக்கர்களின் அட்டூழியத்திலிருந்து சமூக விடுதலைப்பெற – அந்நாளில் இஸ்லாத்துக்குள் ஓடி நுழைந்த – தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள்களின் வாரிசுகள்தான் இக்கால இந்திய முஸ்லிம்களான நாங்கள்.

‘அவாள்களின் ‘ ஆதிக்கத்தை எதிர்த்து இஸ்லாத்துக்குள் நுழைய எத்தனிக்கும் தலித்துக்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் சட்டத்தின் மூலம் எத்தனை நாட்களுக்கு கட்டிப்போடமுடியும். ஆதிக்கவாதிகளை எட்டி உதைத்து ‘முடிந்தால் பூனூல் போடு இல்லையென்றால் ‘தொப்பி ‘ போட்டுக்கொள்கிறோம் ‘ என்று இஸ்லாத்தை நோக்கி புறப்படும் சூழ்நிலை உருவாகும் அப்போது ஆயிரக்கணக்கான மீனாட்சிபுரங்கள் ரஹமத் நகர்களாக மாறும்.

பார்ப்பனர்களால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான ஏகலைவன்களுக்கும், நந்தன்களுக்கும், சம்பூகன்களுக்கும் அடைக்கலம் தந்ததுதான் முகலாயர்களால் இம்மண்ணிற்கு கொண்டுவரப்பட்ட இஸ்லாம் – அதனால்தான் முகலாயர்கள் சென்று பலநூறு ஆண்டுகள் ஆகியும் எங்கள் பாட்டன் முப்பாட்டன்கள் புகுந்த இஸ்லாத்தை விட்டு வெளியேறாமல் உறுதியான கொள்கைபிடிப்போடு இருக்கிறோம் – இருப்போம்.

பெருந்தன்மை யாருக்கு வேண்டும் ?

முஸ்லிம்கள் இந்துக்களிடம் பெருந்தன்மையாக நடந்துக்கொள்ள வேண்டுமாம். நேசத்துடனும் பாசத்துடனும் மாமன் மச்சானாக வாழ்ந்து வந்த இந்து-முஸ்லிம் உறவை கெடுத்தது இன்னும் கெடுத்துக்கொண்டிருப்பது யார் என்று ‘மனமுதிர்ச்சியுற்றவர்களுக்கு ‘ தெரியும்.

நண்றியுனர்வு யாருக்கு வேண்டும் தெரியுமா ? மனு போன்ற ‘அதீதசாதிப்பற்றுள்ளவர்களை ‘ தங்களின் மூதாதையர்களை கொண்டவர்களுக்கும் – கொண்டாடியவர்களுக்கும் – சங்கரர்களும், சரசுவதிகளும் (தயானந்த) சொல்கின்ற ‘சாதிப்பழிப்பு ‘ கருத்துக்களுக்கு இன்னும் சாமரம் வீசி வருபவர்களுக்குத்தான் நன்றியுனர்வு வேண்டும்.

மிதிக்கின்றவர்களை துதிக்கின்ற, குட்டி குட்டியே குனியவைத்தவர்களையே தங்களின் முதுகிலே சவாரி செய்ய அனுமதித்திருக்கும் ஏமாளிகளான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து சமூகத்தினருக்கு – மிதித்தவர்களும், குட்டியவர்களும்தான் நன்றி கூறவேண்டும்.

இந்திய முஸ்லிம்களின் நிலைப்பாடு

இந்திய முஸ்லிம்கள் ஏமாளிகளாக கோழைகளாக ‘சூல வழங்கிகள் ‘ விரட்ட விரட்ட ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்றோ, சூடு சொரனை வீரம் சுயமரியாதையெல்லாம் இழந்து அயோத்தி, மதுரா, காஷி என்று கேட்பதையெல்லாம் கொடுத்து தனித்துவத்தையும் இழந்து வாழவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

நாங்கள் அடைக்கலம் புகுந்த இஸ்லாம் அநீதியை எதிர்த்து போராடவும் அவசியமானால் போரிடவும் சொல்லியிருக்கிறது, ஆணவத்தோடு கன்னத்தில் அறைந்தவனுக்கு பதிலடி கொடுக்கும்படி இஸ்லாம் எங்களுக்கு சொல்லித்தந்திருக்கிறது.

இந்திய முஸ்லிம்களான நாங்கள் ஏமாற்றுப் பேர்வழிகளிடமும் குழப்பவாதிகளிடமும் ஒருபோதும் அடிபணிய மாட்டோம், மிரட்டலுக்கு இணங்கிப்போக மாட்டோம். நியாயம் எங்கள் பக்கத்தில் இருந்தால் இறுதி மூச்சு வரை போராடுவோம். அது பொது சிவில் சட்டமாகட்டும் இடிக்கப்பட்ட எங்களின் பாப்ரி மஸ்ஜிதாகட்டும்.

தங்களைப் போன்றவர்களுக்கு பொய்யைக்கூறி சிண்டு முடிக்க மட்டும்தான் தெரியும் ஆனால் உண்மையை இயம்பி உங்களின் சிண்டைப்பிடிக்க எங்களுக்கு தெரியும்.

அன்புடன்

ஷேக் அஹமது யாசீன் @ பிறைநதிபுரத்தான்

நன்றி:

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் வாஜ்பாய் பங்கு: http://www.flonnet.com/fl1503/15031150.ht

பற்றி மேலும் அறிய http://www.flonnet.com/fl1503/15031160.htm

say_tn@hotmail.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)


ஞாநிக்கு சில கேள்விகள்

திரு ஞாநி அவர்களுக்கு,

தேர்தல் சீர்திருத்தம் பற்றிய கட்டுரையில் உருப்படியாக ஏதாவது குறிப்பிட்டுஇருப்பீர்கள் என்று படித்து பார்த்தால் ஞாநிகளிடம் துறவிகளிடம் இருக்கின்ற ஞானம் உங்கள் கட்டுரையில் இல்லை.வெறுமனே பாஜக எதிர்ப்பு மட்டுமே பிரதானமாக உள்ளது.உங்களிடம் சில கேள்விகள்.

1 .மத்தியில் பாஜக–வை ஆதரிக்காத கட்சிகள் என்று குறிப்பிட்டுள்ள கம்யூனிஸ்ட்கள் 1989-ல் தேசிய முன்ணனி என்ற கூட்டணியில் பாரதிய ஜனதாவுடன் இருந்தது தங்களூக்கு மறந்து விட்டதா.. ?

2.பாரதீய ஜனதாவின் விஸ்வரூபம் தான் தங்களை தேர்தல் சீர்திருத்தம் பற்றி சிந்திக்க தூண்டியதா.. ?இதற்கு முன்னர் சீர்திருத்தம் பற்றி எந்த மேடையிலோ அல்லது பத்திரிக்கையிலோ குறிப்பிட்டு இருக்கின்றீர்களா.. ? ஆகா நாட்டை பற்றி சிந்தனை உங்களுக்கு வர கூட பாரதிய ஜனதா தான் காரணமா.. ? நல்லது.ஏன் சுத்தி வளைத்து பேச வேண்டும்…பாரதீய ஜனதாவை மட்டும் தடை பண்ணி விடலாமே.. ?

3.மதவாத பா.ஜ.க என்று சொல்லி உள்ளீர்கள்.எது மதவாதம்.. ?அனைவரும் சமம்.இமையம் முதல் குமரி வரை ஓரே நாடு,ஒரே மக்கள், ஓரே சட்டம் .இதில் எங்கே உள்ளது பாரபட்சம் ?அனைவருக்கும் ஒரே நீதி இது மதவாதமா.. ?காஷ்மீருக்கு மட்டும் பிரிவு370-ன்படிதனிச்சலுகை.இந்தியபிரதமரேநினைத்தாலும் ஒரு கிரவுண்ட் அல்ல ஒரு செண்டி மீட்டர் இடம் காஷ்மீரில் வாங்க முடியாது..காஷ்மீரில் மட்டும் தொழில் வரி,வீட்டு வரி,சொத்து வரி இல்லை.காஷ்மீரி பெண் இந்தியாவின் பிற மாநில ஆடவரை திருமணம் செய்தால் பொண்ணுக்கு குடும்ப சொத்தில் பங்கு இல்லை.காஷ்மீரில் மட்டும் ஒரு காலம் வரையில் முதல்வரை பிரதமர் என்று சொல்லும் நிலை..இதை எதிர்த்து ஒரு நாட்டுக்குள் இரு பிரதமரா.. ? என போராடி கொலை செய்யப்பட்டவர் பாரதிய ஜனசங்க தலைவர் ஷியாம பிரசாத் .காஷ்மீருக்குள் நுழைய பெர்மிட் வேண்டும் என்ற நிலையை எதிர்த்து போராட்டம் செய்தது யார்.. ? இதே இன்றைய பா.ஜ.க தான்…கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். மாஸ்கோவுக்கும் டில்லிக்கும் ரஷ்யா அரசு செலவில் சொகுசு பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்..பாரததுக்கும் சீனாவுக்கும் போர் நடந்த போது இந்தியாதான் தவறு செய்கிறது என்று சொல்லி பகிரங்கமாக சீனாவுக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியின் எல்லை தாண்டிய நேசக்காரர்களுக்கா நீங்கள் ஆதரவு தர சொல்கீறீர்கள்…முதலாளித்துவ ஆதிக்கத்திலிருந்து பாரத நாட்டை விடுதலை செய்ய சீன ராணுவம் வந்ததாக கூறியவர்கள் கம்யூனிஸ்ட்-ன் ஒரு பிரிவினர்..இது தான் தாங்கள் விரும்பும் தேசபக்தியா.. ?.. ?

4. எது மதவாதம் ?ஆப்கானில் அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த டில்லியின் இமாம் புகாரி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களிடம் என்ன பேசினார்… ‘அமெரிக்காவின் தாக்குதலை கண்டிக்க இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்னை தடுத்தால் அதுஎன் கால் தூசுக்கு சமம் என்ற போது பாஜக-வை தவிர வேறு எந்த கட்சிக்காவது கண்டிக்க தைரியம் இருந்ததா,, ?

5. பாரதத்தின் பாராளுமன்றத்தில் எம்.பி யாக அப்போதிருந்த இப்ராகிம் சுலைமான் சேட் பாகிஸ்தானில் போய் என்ன சொன்னார்..இந்தியாவில் முஸ்லீம் கொடுமைப்படுத்த படுகிறார்கள் என்று.. ‘ இதை ஏன் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் கட்சிகள் கண்டிக்கவில்லை.. ?

6. பாரதிய ஜனதாவில் இஸ்லாமியர்கள்,கிருஸ்தவர்கள் ,சீக்கியர்கள் பல பொறுப்புகளில் இருக்கின்றனர்.அது உங்கள் பார்வையில் மதவாத கட்சி. முஸ்லீம் லீக்கில் இந்துக்கள் இருக்கின்றனரா.. ?ஆனால் அதுமதசார்பற்ற கட்சி..முஸ்லீம்கள் மட்டுமே உறுப்பினராக உள்ள ,முஸ்லீம் நலனை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள தேசபிரிவினைக்கு காரணமான முஸ்லீம் லீக் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகள்தானே மதவாத கட்சியாகும்.. ?ஆகா குப்பைக்கு போகும் உங்கள் மதசார்பற்ற தன்மையை எப்படி பாராட்டுவது.. ?

எந்த நாட்டிலும் சிறுபான்மை மக்கள் எங்களுக்கு பெரும்பான்மை போன்று (சலுகைகள் அல்ல) உரிமைகள் கேட்டு போராடுவது வழக்கம்.ஆனால் பாரத நாட்டில் மட்டும்தான் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்கள் போன்று (ஹஜ் சலுகை,சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை,சர்ச்,மசூதிகள் போன்றவைகளில் அரசு தலையிடாமை) தங்களுக்கும் வேண்டும் என்று கேட்கிறார்கள்.அதாவது மத்த நாடுகளில் நாய் வாலை ஆட்டுகிறது ….இங்கு மட்டுமே வால் நாயை ஆட்டுகிறது.

7.ஆர் எஸ் எஸ் –ன் போலி தேசபக்தி என்று சொல்லி உள்ள ஞாநி அவர்களுக்கு, இன்றைய பாதியாவது காஷ்மீர் நம்மிடம் இருப்பதற்க்கு ஆர் எஸ் எஸ் -தான் காரணம். பாவம் உங்களுக்கு அந்த வரலாறு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை…நீங்கள் தான் பிரிவினை கேட்ட ஈரோட்டு பெரியாரின் கருத்துகளை மட்டுமே மனப்பாடம் செய்பவர் ஆயிற்றே..இந்தியாவுடன் இணைய தயக்கம் காட்டிய காஷ்மீர் மன்னர் ஹரிசிங்-குடன் பேசி சம்மதிக்க வைத்தவர் அப்போதைய ஆர் எஸ் எஸ் தலைவர் திரு.குருகோல்வால்கர் தான் .இந்திய படைகள் காஷ்மீர் வரும் முன்பே 1947 அக்-11 -ல் ஆக்கிரமித்த பாகிஸ்தான் படைகளுடன் உயிரை பணையம் வைத்து ஜம்முவை மீட்டு தாய் நாட்டின் பகுதியை காத்தவர்கள் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் .ஜம்மு விமான தளத்தை 500 ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் 7 நாட்கள் , 24 மணி நேரமும்

செப்பனிட்டு பாரத ராணுவத்தின் டெக்கோட்டா விமானங்கள் தரை இறங்க வழிஏற்படுத்தினர்.கோக்லியில் மலைசரிவில் ராணுவத்தின் 20 வெடி மருந்து பெட்டிகள் விழுந்த நிலையில் 20 தொண்டர்களுடன் அதை மீட்க போய் 6 பேர் உயிரிழந்து 17 பெட்டிகளை ராணுவத்திடம் ஒப்படைத்த ஆர் எஸ் எஸ் –ன் தேச பக்தி போலியானதா.. ? 1962 சீனப்படையெடுப்பின் போது ராணுவத்தின் பல நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் இருந்தனர்.இதனால் மனம் கவரப்பட்ட பண்டித நேரு 1963 ஜனவரி26-இல் குடியரசு தின அணிவகுப்பில் பங்கு கொள்ளுமாறு ஆர் எஸ் எஸ் -யை அழைத்து 3000 தொண்டர்கள் அணிவகுப்பில் பங்கேற்றது வரலாறு..1965 பாகிச்தான் போரின் போது போலீஸ் வேறு பணிகளுக்கு செல்ல டில்லியின் போக்குவரத்து பணிகளை 22 நாட்களும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள்தான் கவனித்தனர்.போரின் போது எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உதவிகள் செய்து தைரியமூட்டியது மற்றும் ராணுவத்திற்கு பல தகவல்களை உடனடியாக அளித்தது போன்ற வியத்தகு பணிகளை செய்தனர்.போர் முடிவடைந்த போது ஜெனரல் குல்வந்த் சிங் என்ற ராணுவ அதிகாரி சொன்னார் ‘பாரதத்தின் வாள் ஏந்திய கரம் பஞ்சாப் என்றால் பஞ்சாபின் வாள் ஏந்திய கரம் ஆர் எஸ் எஸ் ‘என்று…இன்னும் பல பல….தேசத்தின் தற்காப்புக்கு உடனடி தயார் நிலையில் இருப்பது ஆர் எஸ் எஸ்.புரிந்து கொள்ளூங்கள்.

பி எஸ் ராஜேஷ்

rajeshshree@yahoo.com


சோவின் கனவு:

—-

கோடங்கிகளின் கனவு பற்றி..!!!

1.பூணூல் அணிவதும் பஞ்சக்கச்சம் கட்டியும் சோ வயோதிக நாட்களிலும் இருக்கிறார்:

சோவின் இந்த நிலை ஆச்சரியமான் ஒன்று: கொஞ்சம் எதுகை மோனை தெரிந்து, Excuse Meயும், TANK you யும் சொல்லத் தெரிந்தவுடன் கோட், ஸீட் , டை கட்டும் நம் தமிழ் கலாச்சார தமிழர் தலைவர்களிடையே, வக்கீல் படிப்பு படித்தும், தென் இந்தியாவின் முதல் அரசியல் & புலனாய்வு பத்திரிக்கையை நடத்திய சோ அவரின் சமூக அடையாளங்களை விடாமல் தொடர்வது ஆச்சரியமாக இருக்கிறது.

2. இந்து மத பற்றாளராக தொடர்வது:

ஒரு தார திருமணத்தை தண்டனைக் குற்றமாக இந்து மதம் சொல்வதால், பல தார மணமும் , அதைத் தாண்டியும் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக , நாத்தியவாதியாகவோ இல்லை முஸ்லீம் மதமோ தழுவாமல், நடிகராக இருந்தும் மதம் மாறாதது ஆச்சரியம் தான்.

3. சோ எந்த நடிகரையும் , தலைவரையும் தேடி போனதில்லை. ஆனால், அவரையும் அவரது பத்திரிக்கையையும் தாக்கியவர்கள் வேண்டுமானால் அவரின் தயவுக்கு யாசகம் வேண்டி பதவிக்கு வந்துள்ளார்கள்.

4. சோ-சிற்கு கொள்கை கிடையாது என்பது பாமரத்தனம் என்பதால் விட்டு விடலாம். இவர்கள், கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களிப்பதால் மக்களையும் கொள்கை கிடையாது என்று சொல்லி விடுவார்கள்.

சோ மக்களின் எண்ணத்தின் பிரதிநிதி. அதனால் , அவர்து துக்ளக் இத்தனை வருடமாக நடத்த முடிகிறது – பதவியிலோ, நடிகையின் தொப்புள் படமோ இல்லாமல்.

5. கடவுளுக்கு மயிரைக் குடித்து, மக்களின் உயிரை எடுக்கும் கும்பல் இல்லை சோ. உழைத்த் சம்பாரித்த பணத்தில் வாழ்பவர். கட்டப் பஞ்சாயத்தும், கருப்புப் பணத்தையும் கட்சி நடத்துவதாகவோ, இயக்கம் நடத்துவதாகவோச் சொல்லி நடிகைகளிடம் தொலைப்பவரில்லை. அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி – மக்கள் பட்டினிக்கு சோறு போடுவது பற்றி..!!

6. மதவெறி பற்றிப் பேசும் அறிவு ஜீவிகள், இஸ்ரேல் – பாலஸ்தீனம், மலேசியா, இந்தோனேசியா, காஷ்மீர், பின்லேடன், பற்றி எழுதட்டும்.

7. கோவணம் – பண்ணையார் பற்றி சோ மரியாதை பற்றி பேசும் கூட்டம், சக மனிதனை மதிக்கும் அளவுகோல் பற்றி வரையறுக்கட்டும். ரெளடிகளைப் பார்த்து பயந்து எழுந்து மரியாதை செய்யும் கும்பல்களுக்கு இந்த வியாக்கியானம் தேவையற்ற ஒன்று…!

தனியார் துறையில் இட ஒதுக்கீடு பற்றி சோவைத் தாக்குபவர்கள், பில் கேட்ஸீக்கும், ஐ.பி.எம் க்கும் எழுதலாம். சீனர்-இந்தியர்-கறுப்பர்-வெளுப்பர் என எந்த சிந்தனையும் இல்லாமல், திறமைகளின் அடிப்படையிலேயே வேலை கிடைக்கும் காலம் இது. பெருவாரியாக பூணூல் கூட்டத்தால் தான் இந்தியத் திறமை உலக அரங்கில் உச்சம் கண்டது. இந்தியாவிற்கு இந்தக் கம்பெனிகள் போவது கண்டு மற்ற நாடுகள் வெறுப்பில் உள்ளன.

தனியார் கம்பெனிகளில் இடஒதுக்கீடு கொண்டு வரச் சொல்லி போராடினால் இந்தக் கம்பெனிகள் இந்தியாவை விட்டு ஓட வேண்டியது தான்.

கம்பெனிகள் சீனா, சிங்கப்பூருக்கு போகும் . அவர்களும் திறமையானவர்களை இந்தியாவிலிருந்து எடுத்துக் கொண்டு குடியுடிமையும் கொடுப்பார்கள்.

கோஷம் போடும் தலைவர்கள், இந்த மாதிரி ஐடியாக்களால் பயன் பெறும் நாடுகளிடம் காசு வாங்கிக் கொண்டு அடுத்து தன் மகன் , மகள் தலைவராகும் வழி பார்ப்பார்கள். பாதிக்கப் படப்போவது சாமான்ய மக்கள் தான்.

மக்கள் , இந்த மாதிரி விஷம் கக்கும் கவைக்குதவாத எண்ண விதைகளை , விஷச் செடிகள் என அறிவது நல்லது.

எதோ சொல்வதற்கு சோ- இன்னும் உயிருடன் உள்ளது நம் பாக்கியம்

கோச்சா

gocha2004@yahoo.com


நாகூர் ரூமி சூபியிசத்தில் நம்பிக்கையுடையவர் என்று சொன்னார்கள். இஸ்லாம் பற்றி எழுதுவது சரி. ஆனால், அவர் சொல்வது ஒரு மதப்பிரச்சாரகரின் குரல் போல ஒலிக்கிறது. திண்ணை இந்துத்துவத்தை ஆதரிக்கிறது என்கிற புகாருக்குப் பதிலாக இந்த மாதிரி இலவச விளம்பரங்களைப் பிரசுரிக்கிறதா ? அடுத்தபடியாக D.G.S. தினகரன், பால் தினகரன் புத்தகங்களைப் பற்றிய ஆராதனைகளையும் விளம்பரங்களையும் பிரசுரித்து நடுநிலைமையை நிலைநாட்ட வேண்டும். நாகூர் ரூமி, D.G.S. தினகரன், டில்லி இமாம், போப்பாண்டவர், ஜெயேந்திரர் போட்டோக்களையும் அட்டைப்படமாகப் போட்டு திண்ணை சிறப்பிக்க வேண்டும்.

ஜெயமோகனுக்கு ஜாக்கிரதையுணர்வா ? மத்தளராயன் எழுத்தைக் காணவில்லை என்று கவலைப்படுகிறார். பக்கம் பக்கமாக எழுத்தாளர்களைப் பற்றிப் புத்தகங்கள் எழுதுகிறார். ஆனால், மத்தளராயன் எழுத்தைப் பற்றி வாயே திறப்பதில்லை. இரா.முருகன் எழுத்துகளில் பாலியல் அழகியல் என்றோ அரசூர் வம்சத்தில் புனைவு உத்தியாக மட்டுமே மாந்தரீக யதார்த்தம் என்றோ அவரிடம் ஒரு கட்டுரை எதிர்பார்க்கிறோம்.

சோதிப் பிரகாசத்துக்கு என்ன ஆச்சு. சீரியஸாக எழுதிக் கொண்டிருந்தவர் ஒண்ணரைப் பக்க நாளேடு மாதிரியும் சொதப்பப்பா மாதிரியும் எழுதுகிறார். அவர் எழுதிய துக்ளக் சோவின் கனவு நையாண்டிக் கட்டுரையை சொதப்பப்பா பகுதியில் வெளியிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

திண்ணைக் கவிதைகள் ஒவ்வொன்றையும் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்ற விவரத்தை திண்ணை வெளியிட வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலுமே அந்தப் பக்கத்தை அதுவரை எத்தனைபேர் படித்திருக்கிறார்கள் (unique visitors) என்று சொல்கிற கவுண்டரை வைப்பது நலம். இது போலி இலக்கியத்தைக் குறைக்க உதவும். உவமைகளால் வாட்டி வதைக்கிறது கற்பகம் எழுதிய நீயும் புதுக்கவிதை. கவிதையை விட அருஞ்சொற்பொருள் அதிகமாகி ஆளை விரட்டுகிறது இராம.கி. எழுதிய எழில் எது மரபுக்கவிதை. இப்படிப்பட்ட கவிதைகளைப் பிரசுரிப்பதனால், கற்காலத்துக்கும் நவீன காலத்துக்கும் திண்ணை பாலம் அமைக்கிறது என்று சொல்லிக் கொள்ளலாம். தொடர்ந்து எழுதியும் எழுத்தில் முன்னேற்றம் காட்டாதக் கவிஞர்களின் கவிதைகளைப் பிரசுரிக்கக் கூடாது. கவிதைக்கு கடைசி ஆணி அடிக்கிற நோக்கம் எதுவும் திண்ணைக்கு இல்லை என்று நம்புகிறோம்.

ராம. தமிழ்ச்செல்வன்

சென்னை – 2

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)


Series Navigation