கடிதம் – ஜூன் 10,2004

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

பிறைநதிபுரத்தான்


RSS பொய்ப்பிரச்சாரம் : எதிர் வினை

(இது RSSன் இஸ்லாமிய-முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கான எதிர் வினையின் இறுதி பகுதி).

வந்தே மாதரம்:

பாராளுமன்ற தேர்தலில் மதவாத சங்பரிவாரத்துக்கும்-பா.ஜ.க.வுக்கும் இந்திய மக்கள் ‘ஜனகனமன ‘ பாடிவிட்டதால்; தங்களின் இருப்பை காட்டிக்கொள்வதற்காக இந்திய முஸ்லிம்கள் ‘வந்தேமாதரம் ‘ சொல்ல மறுக்கிறார்கள் என்று மீண்டும் பழைய கூப்பாடை போட ஆரம்பித்துவிட்டார்கள்.

‘வந்தே மாதரம் ‘ என்ன இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டதா ? அல்லது கட்டாயமாக பாடப்படவேண்டிய தேசிய கீதமா ? இவ்வளவு நாட்களும் அனைவரையும் போல இந்திய முஸ்லிம்கள் ‘தேசிய கீதம் ‘ பாடித்தானே வந்தார்கள்.

பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்த் மத் ‘ என்ற நாவலில் இடம்பெற்ற இப்பாடல் ரவீந்தரநாத் தாகூரால் இசையமைக்கப்பட்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அப்பாடலின் முக்கியத்துவத்தையும் தனித்தன்மையையும் தாகூர் போற்றிய போதிலும், நாவலின் பின்னனி இந்திய முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வண்ணம் உள்ளது என்று ஒப்புக்கொண்டார். முழுப்பாடலின் பாடலின் கருத்து மத ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பதாக இருந்ததால்தான் நேரு, தாகூர் போன்றவர்கள் ஐந்து பத்திகள் கொண்ட முழுப்பாடலில் பாடஅருகதை இல்லாத மூன்று பத்திகளை வெட்டி எறிந்தனர்.

‘ஆனந்த் மத் ‘ நாவலின் கரு இக்கால இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது. இந்து தெய்வங்களான காளியும் துர்கையும் இந்த போராட்டத்தில் முன்னிலைப் படுத்தப்படுவாரகள்- அதாவது இந்து மதச்சாயம் பூசப்பட்ட புரட்(டு)சி கதை. நாவலின் நாயகன், இந்தியாவில் முஸ்லிம்களே இருக்கக்கூடாது என்று காவிக்கொடியை தூக்கிக்கொண்டு (தேசியக்கொடி அல்ல) கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை படுகொலை செய்கிறான். குஜராத் கலவரத்தில் நடந்தது போல சன்னியாசிகளும்-துறவிகளும் படுகொலையில் ஈடுபடுவார்கள். எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இஸ்லாமியர்களை கொலை செய்த நாயகன் தன் குருவிடம் சென்று ‘பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தை எப்பொழுது துவங்குவது ? என்று கேட்கிறான் அதற்கு, தேசப்பற்றுள்ள(!) குரு கூறிய வார்த்தை என்ன தெரியுமா ? ‘பிரிட்டிஷார் நமது நன்பர்கள்; அவர்களே இந்தியாவை ஆளட்டும்; மேலும் நாம் அவர்களை வெற்றிக்கொள்ள முடியாது ‘ என்று கூறுவான்.

இந்திய முஸ்லிம்களை கோழைகளாகவும் கீழ்தரமாகவும் சித்தரித்த கதை பின்னனியில் இடம்பெற்றதுதான் வந்தே மாதரம் பாடல். இப்பாடலை அந்நாவலின் பின்னனியில் வைத்து இந்திய இஸ்லாமியர்கள் பார்க்கக்கூடாது என்று சிலர் கூறினாலும். நாவலின் முக்கிய அங்கமான ‘முஸ்லிம் படுகொலைகள் ‘ தற்பொழுது RSS/VHP/BJP யினரால் அரங்கேற்றப்படுவதால்தான் இந்திய முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாட மறுக்கிறார்கள்.

இந்திய விடுதலைப்போராட்டத்தில் தேசபக்தர்களுக்கு உத்வேகத்தை கொடுத்து, சாதி-மத வேறுபாடில்லாமல் மக்களனைவரையும் ஆங்கிலேயர்களை எதிர்க்க தூண்டிய எழுச்சி மிக்க வாசகமான ‘வந்தே மாதரம் ‘ என்ற சொற்றொடர்- இந்திய விடுதலை போராட்டத்திற்கு எவ்வித பங்களிப்பும் செய்யாத- ஆங்கிலேயரிடம் சரனாகதியடைந்த எட்டப்பன் கும்பலிடம்- மட்டிக்கொண்டு சின்னாபின்னப்படுகிறது. இதுவரை எந்த ஒரு இந்திய முஸ்லிமும் ஜனகன மன பாட மறுத்ததற்காகவோ அல்லது சாரே ஜஹான்சே அச்சா பாட மறுத்ததில்லை. (சங்பரிவாரம் பரப்பும் பொய் செய்திகளை தவிர).

இஸ்லாமியர்களின் சுயமரியாதியை பாதிக்கும் வந்தே மாதரத்தையும் மத உணர்வுகளை பாதிக்கும் சரஸ்வதி வந்தனத்தையும் இந்திய இஸ்லாமியர்களில் எவரும் பாட மாட்டோம். அனைத்து தரப்பு மக்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஸாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா பாடுவதில் பெருமைப்படுகிறோம். RSS ஷாகாக்களில் பாடுவதற்கு இதைவிட தகுதியான பாடல் கிடையாது என்பதால் தங்களுக்கு அதன் மொழிப்பெயர்ப்பையும் தருகிறேன். (கவிஞர் அல்லாமா இக்பால் சொன்ன ஹிந்துஸ்தானும் – சங்பரிவார் முன்வைக்கும் ஹிந்துஸ்தானும் முரன்பாடானது).

பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா எங்கள் இந்தியா-

இந்த இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்

அதன் மடியில் விளையாடும் ஆயிரமாயிரம் நதிகள்

இதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சை போன்றதாகும்

வானத்தின் நிழலாய் உன் கரையோரம் நாங்கள் நின்றோமே

அந்த நாளை எண்ணிப்பார் நீண்டு நிமிர்ந்த கங்கையே

எங்கள் பாரதம் தான் எங்கள் அரவனைப்பும் பாதுகாப்பும்

எங்களுக்கு இது எந்த பேதத்தையும் கற்பிப்பதில்லை

இங்கு வாழும் மனிதர்கள் நாங்கள்! எங்கள் நாடே இந்தியா

(ஸாரே ஜஹான் சே அச்சா- அல்லாமா இக்பால்- தமிழாக்கம் www.a1realism.com)

ஒளரங்கசீப் பற்றிய அவதூறு:

இந்தியாவில் முகலாயர்கள் ஆட்சியின்போது, ஒளரங்கசீப் காலத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான இந்துக்கள் மன்சப்தார்களாக நியமிக்கப்பட்டார்கள்- நீதி-நிர்வாக துறையில் பணியிலமர்த்தப்பட்டார்கள். அதிக எண்ணிகையில் இந்து வீரர்கள் முகலாய ரானுவத்தில் பணிபுரிந்ததும் ஒளரங்கசீப் காலத்தில்தான். இந்து படைவீரர்களின் உதவியோடுதான் ஒளரங்கசீப்பால் மராத்தியர்களோடும்-சீக்கியர்களோடும் போர்செய்ய முடிந்தது என்பதுதான் உண்மையான வரலாறு.

ஒளரங்கசீப் என்ற முகலாய மன்னன் யோக்கியன் என்று கூறவில்லை. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாக மண்ணுக்கும், பெண்ணுக்கும் ஆசைப்பட்ட மன்னர்கள் அந்நிய நாட்டின் மீது படையெடுத்து மக்களின் மீது கொடுமைகள் புரிந்தனர். தமிழகத்தின் குறு நில மன்னர்கள் கூட இத்தகைய கொடூர நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வரலாறு கூறுகின்றது. முகலாய மன்னர்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

ஆனால் புரட்டு வரலாற்று பிரியர்கள்தான் ஒளரங்கசீப் ‘சீக்கிய குருவை ‘ கொலைசெய்து அவரின் மகனை விட்டு பினத்தை தின்னச்சொன்னதாக ‘பேய் கதை மன்னன் பி.டி சாமி ‘ போல எழுதுகிறார்கள். வரலாறு படிப்பவர்களின் எண்ணத்தை பாழ்படுத்துவிதமாக புதிய கதை கூறுகிறார்கள். அடப்பாவிகளா! 21 ஆம் நூற்றாண்டில் வர்னாசிரம் வெறிபிடித்த சிலரால், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவரை ‘மலத்தை ‘ திண்ண வைத்த ‘மனிதாபிமான ‘ நிகழ்வும், செத்துபோன மாட்டு தோலையுரித்த தலித்துக்களை படுகொலை செய்த வட இந்திய நிகழ்வுகளையெல்லாம் மறந்துவிட்டு – எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நடக்காததையெல்லாம் நடந்ததாக சொல்லுகிறீர்களே! வரலாறுக்கும் புராணத்துக்கும் வித்தியாசம் தெரியாத உங்களிடம் இதை தவிர வேறு எதை எதிர்பார்க்கமுடியும்.

நன்பர் ஒருவர் கேட்டார் ‘இந்தியாவின் மீது படையெடுத்த பிரிட்டிஷாரை மட்டும் ‘ஆங்கிலேயர்களாக ‘ பார்க்கின்ற சங்பரிவாரத்தினர்; முகலாயர்களை மட்டும் ஏன் முஸ்லிம்களாக பார்க்கிறார்கள் ‘ (அதுதான் செலக்டிவ் அம்னீஷியா என்பதா ?).

ஷியா-சுன்னி முஸ்லிம் கலவரம்:

பாகிஸ்தானில் நடக்கிற ஷியா-சுன்னி முஸ்லிம் படுகொலைகளும், முன்னாளில் மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-ஜைன பிரிவினரிடையேயான மோதலும் அதைத்தொடர்ந்த கழுவிலேற்றி 8000 ஜைனர்கள் படுகொலை செய்யப்பட்டது போன்ற நிகழ்வுதான்.

இஸ்லாம் என்றால் என்ன ?

RSS நன்பர்களே! இஸ்லாம் என்பது ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும். இத்துனை சம்பிரதாய சடங்குகள் கொண்டதா இஸ்லாம் என்று அதனைப்பற்றி புரிந்து கொள்ள அஞ்சுபவர்களால் அதன் உள்புகுந்து அதன் உயர் நோக்கையறிய முனையாதவர்களால் இஸ்லாத்தை புரிந்துக்கொள்ளமுடியாது. பலாப்பழத்தின் மேலுள்ள முள் குத்துமே என்று அஞ்சுபவர்களால் அதன் உள்ளே உள்ள சுவையான கனிகளை உண்ணும் வாய்ப்பு எப்படி கிடைக்கும் ? அது போன்றே இஸ்லாம். தெரிந்துகொள்ளும் ஆவலுடன் உள் புகுந்து அறிந்தால், தோல் நீக்கிய கனி கிடைப்பதுபோல், நல்ல சுவையுள்ள கனி கிடைக்க்கும் சுந்தர மார்க்கம் இஸ்லாமாகும். (அறிஞர் அண்ணா: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பற்றி).

காஃபிர்கள் யார் ?

காஃபிர்கள் யார் தெரியுமா ? இறைவனே இல்லையென்று மறுப்பவர்களும், இறைவனுக்கு மனிதனால் படைக்கப்பட்டதை இணைவைத்து வழிபடுபவர்களும்தான் (ஆங்கிலத்தில் ‘ Kafir – a person who refuses to submit himself to Allah (God), a disbeliever in God.) காபிர்கள் என்றால் அழிக்கப்படவேண்டியவர்கள் என்று குரானிலோ அல்லது ஹதீசிலோ குறிப்பிடப்படவில்லை. இஸ்லாமிய பெயர் மட்டும் தாங்கி இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடிக்காத எவரும் முஸ்லிம்கள் அல்ல.

இஸ்லாமிய ஓரிறைக்கொள்கை:

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையான உருவமில்லா ஒரிறை வழிபாடு – சங்பரிவாரத்திற்கு மட்டும் முரன்பாடாக தோன்றலாம். ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரிறைக் கொள்கையை எத்தனையோ இந்து சமய பெரியார்கள் வலியுறுத்தியிருக்கின்றனர் (சொன்னதோடு சரி).

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் ‘ என்று திருமந்திரமும்

‘ஒருநாமம் ஒர் உருவம்

ஒன்றுமில்லாற்காயிரம்

திருநாமம் பாடி நாம்

தெள்ளேணம் கொட்டாமோ ‘ என்று மாணிக்கவாசகரும்

‘இப்படியன் இந்நிறத்தான் இவ்வண்ணத்தான்

இவனிறைவன் என்றெழுதிக் காட்டோணாதே ‘ என்று திருநாவுக்கரசரும் சொல்லியிருக்கிறார்.

இஸ்லாமிய எழுச்சி:

இஸ்லாமிய போராளிகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பெருக்கத்துக்கு காரணம் அமெரிக்க, பிரிட்டன் ஏகாதிபத்திய சக்திகள்தான் என்பது அடிப்படை அறிவுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும். இஸ்ரேல் உருவாகும் வரை, மேற்கு ஆசியா மற்றும் அய்ரோப்பிய உலகம் முழுவதும் அமைதியாகத்தான் இருந்தது. இஸ்லாமிய தீவிர வாதம் பற்றி மக்கள் யாரும் கேள்விபட்டதில்லை.

அரபு மக்களுக்கு சொந்தமான மண்ணில் ஏகாதிபத்திய சக்திகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியோடு ‘இஸ்ரேல் ‘ உருவான நாளிலிருந்துதான் இஸ்லாமிய போராளிகள் – எதிரிகளை அச்சுறுத்தி அவர்களின் அமைதியை குலைக்கும் -மனித வெடிகுண்டுகளாக அவதாரமெடுத்தனர்.

மண்ணின் மைந்தர்களை சொந்த நாட்டில் அனாதைகளாகவும், இரண்டாம் தர குடிமக்களாகவும், அகதிகளாகவும் மற்றும் அடிமைகளாகவும் மாற்றிய எதிரிகள் – அநீதியாளர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை உண்மையான முஸ்லிம் அமைதியாக வாழவிடமாட்டான். இத்தகைய இஸ்லாமிய எழுச்சியை தீவிரவாதம்-மதவாதம் என்று அந்நியசக்தியிடம் ‘மன்னிப்பு கடிதம் ‘ எழுதிக்கொடுத்த தலைவரின் வழி வந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் மட்டும்தான் குதர்க்கம் பேசுவார்கள்.

இஸ்லாமும் பென்னுரிமையும்:

பென்களை ‘தேவதாசி ‘ முத்திரைகுத்தி போகப்பொருளாக பாவிக்கப்படும் வழக்கம் இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாத்தில் பென்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளையும், மரியாதையையும் – புரிந்துக்கொள்ள சக்தியற்றவர்கள்தான் இஸ்லாத்தில் பென்னடிமை என்று விதண்டாவாதம் செய்கிறார்கள்.

பென்களை தெய்வங்களாக கருதுவதாக வெட்டிப்பேச்சு பேசும் இவர்களின் உதவியோடுதான் கற்புக்கரசி கண்னகியின் சிலை உடைக்கப்பட்டது – பத்தினிக்கு சிலை இருக்கக்கூடாதாம். செல்வி செயலலிதாவின் செயலுக்கு இந்திய கலாச்சாரம் பேசும் பா.ஜ.க.வோ, இந்து முன்னனியோ எதிர்பு தெரிவிக்க்கவில்லை. இந்த வேஷதாரிகளை பென்களை மதிப்பதாக மற்றவர்கள் எண்ணவேண்டுமாம் – ஏன் தெரியுமா ? குஷ்புவுக்கு கோவில் கட்டிவிட்டார்களாம் (!). (ரம்பாவுக்கும், சகிலாவுக்கும் கோவில் கட்ட எப்பொழுது கரசேவை ஆரம்பிக்கபோகிறீர்கள் ?)

காந்திக்கொலையும் சவர்க்காரும்:

பிப்ரவரி 27, 1948 அன்று துனைபிரதம மந்திரியாக இருந்த சர்தார் வல்லபபாய் பட்டேல், பிரதமர் ஜவஹர்லால் நேருக்கு எழுதிய கடிதத்தில் ‘ஹிந்து மஹா சபையின் தீவிரவாத பிரிவு, சவர்காரின் தலைமையில் சதிதிட்டம் தீட்டி மகாத்மாவின் கொலையை செயல்படுத்தியதாக ‘ தனக்கு கிடைத்த அதிகாரபூர்வமான புலனாய்வு தகவல்கள் அடிப்படையில் தெரிவித்தார்.

காந்திக்கொலை வழக்கில் சவர்கார் தண்டிக்கபடாததற்கு காரணம் என்ன தெரியுமா ? திகம்பர் பட்கே என்ற சதி திட்ட கும்பலின் உறுப்பினர் அரசு தரப்பு சாட்சியாக மாறி அளித்த வாக்குமூலத்தில் காந்தி படுகொலையில் சவர்கார் பங்கு பற்றி விரிவாக கூறினார். ஆனால் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கமுடியாமல் போனதால்தான் சவர்கார் விடுதலை செய்யப்பட்டார் (http://www.thehindu.com/ 2003/02/26/stories/2003022603861300.htm ) அதாவது RSS காரர்களுக்கு புரியும் வகையில் சொல்லவேண்டுமானால், செல்வி. செயலலிதா ஊழல் குற்றம்புரிந்தவர் என்று நீதி மன்றம் அறிந்திருந்தும், தகுந்த ஆதாரம் இல்லாததால் TANSI மற்றும் சொத்து குவிப்பு வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டாரே அது போலத்தான் சவர்காரும் விடுதலை செய்யப்பட்டார்.

சவர்காரும் தேசப்பிரிவினையும்:

இந்திய சுதந்திர போராட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு – தேசப்பிரிவினையை மனதார ஆதரித்தவர்தான் வீர் சவர்கார். ‘I have no quarrel with Mr. Jinnah ‘s two nation theory. We Hindus are a nation by ourselves and it is a historical fact that Hindus and Muslims are two nations. ‘(published in the Indian Annual register, Volume 10 of 1943).(இந்த ஆதாரத்தை படித்த பிறகும் சவர்கார், உத்தமர்தான், யோக்கியர்தான், விடுதலை வீரர்தான் என்று அடம்பிடிப்பீர்கள் என்பது தெரியும்).

சரனாகதியடைந்த சவர்க்காரை உண்மையான விடுதலை போராட்டவீரர்களான மகாத்மா, பகத்சிங், சுபாஷ் சந்திரபோஷ் போன்றவர்களோடு ஒப்பிடுவது யோக்கியத்தனமாம் ஆனால் பிரிவினைவாத கொள்கை கொண்ட இரட்டை சகோதரர்களான சவர்க்கார்- ஜின்னாவை ஒப்பிடுவது அயோக்கியத்தனமாம் (!).

பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றிய சிந்து மாகானத்தில், பேருக்காக கண்டன தீர்மாணம் நிறவேற்றிவிட்டு- மந்திரி சபையிலிருந்து ராஜினாமா செய்யாமல் – முஸ்லீம் லீகோடு ஆட்சியை பங்கு போட்டு பதவி சுகம் அனுபவித்தவர்கள் தான் இந்து மகாசபையை சார்ந்த தேசபக்தர்கள் (http://www.indian-express.com/columnists/full_column.php ?content_id=2638 ).

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாராம் அதிகமாகவே இருந்தது (குஷ்வந்த் சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29 டிசம்பர் 1975) என்பதை மறந்துவிடாதீர்கள்.

சங்பரிவார் இயக்கங்களின் காரணமாக இந்திய சிந்திய இரத்தமும், இழந்த உயிர்களும்-உடைமைகளும் போதும். நயவஞ்சகர்களின் பேச்சைக்கேட்டு நாடு ஒரு முறை துண்டாடப்பட்டது போதும். மத துவேஷத்தை வளர்த்து, இந்திய இந்துக்களையும்-இந்திய முஸ்லிம்களையும் எதிரிகளாக்கி இன்னொரு பிரிவினைக்கு வழி செய்யாதீர்கள்.

பிறைநதிபுரத்தான்

say_tn@hotmail.com

Series Navigation

author

பிறைநதிபுரத்தான்

பிறைநதிபுரத்தான்

Similar Posts