கடிதம் (ராமர் சேதுவும் கண்ணகி சிலையும்)

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

பாப்பாடு


வணக்கம். ராமர் சேது பற்றி பல கருத்துக்களும், கடிதங்களும் படித்தேன். பெரும்பாலும், மதசார்புடையோரே எழுதியிருந்தனர். நான் மதசார்பற்றவன் என்ற முறையில் எனது கருத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். ராமர் சேதுவையும், கண்ணகி சிலையையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போமா? இவன் ஏன் கண்ணகி சிலையை இழுக்கிறான்? என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது! எனது கருத்துப்படி, ராமர், கண்ணகி இருவருமே முன்காலத்தில் எழுதப்பட்ட இலக்கிய கதாபாத்திரங்கள். நாம் அறிந்த வரையில், ராமர் என்பவர் வால்மீகி அல்லது கம்பர் எழுதிய இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கதாபாத்திரம். அதேபோல, கண்ணகி என்பவள் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பட்ட ஒரு கதாபாத்திரம். ராமரையோ, கண்ணகியையோ நாம் யாரும் நேரில் கண்டதில்லை. ராமரும் கண்ணகியும் இருந்தார்களா, இல்லையா என்பது அவரவர் நம்பிக்கையைப் பொருத்தது, அதனால் மற்றொருவர் பாதிக்கப்படாத வரையில். இனி…

கடந்த ஆட்சியின்போது, மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டது; அதற்கு அப்போதைய காவல் துறை கூறிய காரணம், அச்சிலை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது என்பதாகும். அப்போது போராட்டம் நடத்திய இந்நாள் முதல்வர், கண்ணகி சிலையை அகற்றியது தமிழ் கலாச்சாரத்தின் மீதான போர் என்றும் தமிழின மக்களின் உணர்வுகளை பாதிப்பதாகவும் கூறினார். கண்ணகி வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரம் ஏதும் இருக்கிறதா? இல்லையே. கண்ணகி என்பவள் வெறும் கற்பனை கதாபாத்திரம் மட்டுமே. இருப்பினும், கண்ணகி தமிழினத்தின் கலாச்சார அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறாள். தமிழர்கள் கற்பின் சின்னமாக கண்ணகியைப் போற்றுகின்றனர். அதேபோல, ராமரை, இந்து மத நம்பிக்கை உடையோர் கடவுளின் அவதாரமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்; அவ்வளவே! ராமர் பொறியியல கல்லூரியில் படித்தாரா என்று கேள்வி கேட்பது இந்து மதத்தினரின் உணர்வுகளை பாதிக்கும் செயல். பயனுள்ள சேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் சேதுவை உடைப்பது சரியென்றால், போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்ததற்காக கண்ணகி சிலையை அகற்றியதும் சரி தான். எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க யாருக்கும் உரிமை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால், அது மற்றவர்களின் நம்பிக்கையை புண்படுத்தாமல் இருக்க வேண்டும். முதல்வர் இதை ஒன்றும் உணராதவரல்ல! ராமர் சேதுவுக்கு பாதிப்பேற்படாத வண்ணம் திட்டமிடுவதன் மூலமோ அல்லது குறைந்த பாதிப்புடன் நல்ல பயன் ஏற்படும் என்பதை மக்களுக்கு விளக்கியோ இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

-பாப்பாடு


senmail@yahoo.com

Series Navigation