கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

சோதிப் பிரகாசம்.


திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்!

முகமது பெருமானார் மட்டும்தாம் இறைவனின் இறுதித் தூதுவர் என்னும் ‘நம்பிக்கையை உலகின் மீது திணிப்பது வன்முறைக்கே வழிவகுக்கும் ‘ என்கின்ற நேச குமாரின் கூற்று யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

அவ்வக் காலங்களில் பல் வேறு அவதாரங்களை எடுத்துக் கொண்டு வந்து இருந்த சிவ பெருமானும் விண்ணவரும் இப் பொழுது எல்லாம் எந்த அவதாரங்களையும் எடுப்பது இல்லை; இதனைப் புரிந்து கொள்வதிலும் நமக்குச் சிக்கல் எதுவும் இல்லை.

ஏனென்றால், பல் வேறு அவதாரங்களை எடுத்துக் கொண்டு மண்ணுக்கு இறங்கி வந்து, மக்களுடன் மக்களாகக் கலந்து வாழ்ந்து கொண்டு வந்து இருந்து, மக்களுக்குக் கடவுள் வழி காட்டிக் கொண்டு வந்து இருந்த அந்தக் காலம் எப் பொழுதோ மலை ஏறிப் போய் விட்டது என்றுதான் இதற்குப் பொருள்; தங்களுக்குத் தேவையான அவதாரப் புருசர்களைத் தங்கள் இடையே இருந்து தாங்களாக மக்கள் தேர்ந்து எடுத்துக் கொள்வதைத் தவிர இன்று வேறு வழி இல்லை என்றும் இதற்குப் பொருள்.

இன்றைய முதலாண்மைப் பொது நாயக (டெமாக்ரட்டிக்)ச் சமுதாயத்தில் மக்களுக்கு இத் தகைய வாய்ப்புகள் கிடைத்திடாமலும் இல்லை. எனவேதான்—-முதலாண்மைச் சமுதாயத்தின் தோற்றத்திற்குப் பின்னர்தான்—-ஒரு மனிதனாக அவதாரம் எடுத்துக் கீழ் இறங்கி வந்திட வேண்டிய அவசியம் சிவ பெருமானுக்கும் விண்ணவருக்கும் ஏற்படாமல் போயிற்று எனலாம். இந்த வகையில்தான், சிவ பெருமானையும் விண்ணவரையும் பற்றிய புதிய இறை இயல் கொள்கைகள் வகுக்கப் பட்டும் வந்து இருக்கின்றன.

அதே நேரத்தில், மக்களாகத் தேர்ந்து எடுத்துக் கொள்கின்ற அரசியல் மற்றும் ஆன்மிக அவதாரங்களோ மக்களை ஏமாற்றி விடுகிறார்கள் என்பது வேறு விசயம்!

கடவுளின் ஒரே குமாரரான ஏசுவை நாம் எடுத்துக் கொள்வோம்.

மக்களால் ஒரு முறை கொல்லப் பட்டு, உயிர்த்து எழுந்து விண்ணுக்குத் தப்பிச் சென்று, பாது காப்பாகத் தமது தந்தையின் வலது பக்கத்தில் அவர் அமர்ந்து கொண்டதன் பின்னர், வேறு குமாரர்களை மண்ணுக்கு அனுப்பிட வேண்டும் என்று கடவுளுக்குத் தோன்றிட வில்லையே, ஏன் ?

ஏனென்றால், தாம் அனுப்பி இருந்த தமது குமாரனை அடித்துத் துரத்தி விட்டு இருந்த மக்கள், மீண்டும் அவர் அனுப்புகின்ற எந்தக் குமாரனையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

முதலாண்மைப் பொது நாயகச் சூழ் நிலைகளில், தங்கள் தவப் புதல்வர்களைத் தாங்களாக மக்கள் தேர்ந்து எடுத்துக் கொள்வார்கள் என்னும் தெளிவும் நம்பிக்கையும் கடவுளுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றுதான் இதற்குப் பொருள்; மக்களைக் கடவுள் கை விட்டு விட்டார் என்று அல்ல!

தாம் படைத்த மக்கள் மேல் கடவுளுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் இதனை நாம் பொருட் படுத்திக் கொள்ளலாம். மக்களுக்கு அறிவைக் கொடுத்து இருக்கின்ற கடவுள், அந்த அறிவின் மேல் நம்பிக்கை வைத்து இருப்பது ஒன்றும் வியப்பிற்கு உரியதும் அல்ல.

இதனால்தான், எந்த ஒரு மத நூலுக்கு உள்ளும் தங்கள் வாழ்க்கையை அடக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லாமல்—-விடுதலையாகத் தங்கள் வாழ்க்கையை மக்கள் அமைத்துக் கொள்கின்ற வகையில்—-ஏசுவைப் பற்றிய புதிய இறை இயல் கொள்கைகள் வகுக்கப் பட்டும் வந்து இருக்கின்றன.

இது போல, முகமது பெருமானார்தாம் இறைவனின் இறுதித் தூதர் என்னும் கொள்கைக்கும், இறைத் தூதர்களின் காலம் முடிந்து போயிற்று என்பதுதான் பொருள் ஆகும். வன் முறைக்கு இதில் எந்த வழியும் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை.

ஸ்ஜார தூஸ்த்ரர் கூட இறைவனின் தூதுவராக இருந்தவர்தாமே! ஆனால், ‘தூதர் ‘ என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபுதான் ‘தூஸ்த்ரா ‘ என்னும் சொல்!

அன்புடன்,

சோதிப் பிரகாசம்.

5-12-2004.

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்