கடிதம் ஜனவரி 27,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்!

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

சோதிப் பிரகாசம்


திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்!

ஆண்களைப் பற்றிய அச்சத்துடன்தான் தங்கள் உடைகளைப் பெண்கள் தேர்வு செய்திட வேண்டுமா ? என்று ஒரு கேள்வியை எழுப்பி, சட்டங்களை மீறிடாத வரை எந்த உடையையும் யாரும் தேர்வு செய்து கொள்ளலாம் என்று நான் கூறி இருந்த கருத்துகளைத் தமக்கே உரிய எழுச்சியுடன் எதிர் கொண்டு இருக்கிறார் நண்பர் ஜோதிர் லதா கிரிஜா! உடுப்பதில் ஒரு கண்ணியம் வேண்டும் என்பதையும் மிகவும் சரியாகவே அவர்

‘c5லியுறுத்தியும் இருக்கிறார். அவருக்கு நன்றி!

எனினும், உடைகளின் கண்ணியம் என்பது ஒரு பெண்ணின் விடுதலையான தேர்வின் அடிப்படையில் புரிந்து கொள்ளப் பட வேண்டுமா ? அல்லது ஆண்களது வக்கிரப் பார்வையின் அடிப்படையில் புரிந்து கொள்ளப் பட வேண்டுமா ? என்பதுதான் கேள்வி!

வக்கிரமான பார்வை என்பது கூட ஆண் ஆதிக்கத்தின் ஓர் அடக்கு முறைதானே!

‘ஓர் இந்துவாகப் பிறந்து தொலைத்து விட்டேனே ‘ என்று முன்னர் ஒரு முறை சலித்துக் கொண்டு இருந்த ஜோதிர் லதா கிரிஜா, சங்கர மடத்தின் தீண்டாமைக் கோட்பாடுகளைக் கண்டிக்கின்ற வகையில் தமது கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டு வருவது அவரது முற்போக்கு முயற்சியினைச் சுட்டிக் காட்டுகிறது என்பதில் ஐயம் இல்லை.

ஆனால், சங்கர மடத்தின் அதிபதிகளைப் பற்றியது அல்ல பிரச்சனை; மாறாக, சங்கர மடத்தின் சாதிய அடிப்படைகளைப் பற்றியது! சங்கர மடமோ ஒரே ஒரு சாதியினருக்கு மட்டும் உரிய ஒரு மடமாகத்தான் வளர்ந்து கொண்டும் வந்து இருக்கிறது.

எனவே, சங்கர மடத்தின் சாதிய அடிப்படைதான் அடிப்படையான இன்றைய கேள்வி என்பதை யாரும் மறுத்து விட முடியாது. அதே நேரத்தில், இந்து மதத்தைப் பொறுத்த வரை, இதுதான் முக்கியமான கேள்வியும் கூட! எனினும், ஜோதிர் லதா கிரிஜாவோ இந்தக் கேள்வியை எதிர் கொள்வதற்குத் தயங்குகிறார்.

ஆனால், ஏன் இந்தத் தயக்கம் ?

பரமணச் சாதியினருக்கு மட்டுமான ஒரு மடமாகத்தான் சங்கர மடம் நீடித்திட வேண்டும் என்று அவர் கருதுகிறாரா ? அல்லது சாதி இழிவுகளை அழித்து ஒழிக்கின்ற ஒரு மனித நேயமான மதமாக இந்து மதம் வளர்ந்திட வேண்டும் என்று அவர் கருதுகிறாரா ?

ஒரு வாசகன் என்கின்ற முறையில் அவரது தெளிவுகளை இதில் நான் எதிர் நோக்குகிறேன்.

ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்

பல தெய்வ வழிபாடுகளுக்கு எதிரான ‘ஓர் இறை ‘க் கொள்கைதான் இஸ்லாம் மதத்தின் இறை இயல் கொள்கை என்று விளக்கம் அளித்து இருக்கின்ற ஹமீத் ஜாஃபரின் கருத்துகள் அனைவரையும் கவர்ந்திடத் தக்கவை! இந்த ‘ஓர் இறைக் கொள்கை ‘யில் நம்பிக்கை உள்ள அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்றும் அவர் கூறுகிறார்.

மேற்கோளாக அவர் காட்டி இருக்கின்ற சம்ஸ்க்ருத வாசகம் எனக்குப் புரிய வில்லை என்ற போதிலும், ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன் ‘ என்று கூறிய திரு மூலரை நினைவு ஊட்டுகின்ற வகையில் அவரது கருத்துகள் அமைந்து இருக்கின்றன என்றால் அது பிழை ஆகாது. காலத்திற்கு ஏற்ற சீர்-திருத்தங்களை மேற் கொள்ளுவதற்கும் இஸ்லாத்தில் தடை ஏதும் இல்லை என்றும் அவர் வாதிடுகிறார்.

இது போன்ற விவாதங்கள் வரவேற்கப் பட வேண்டும் என்று ரஹ்மத் கபீர் கூறி இருப்பதனை யாரும் புறக் கணித்து விடுவதற்கு இல்லை. நேச குமார் மட்டும் இன்றி நாகூர் ரூமியும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விசயம் இது!

22-01-2005 அன்புடன்,

sothirpiragasam@yahoo.co.in சோதிப் பிரகாசம்

Series Navigation