கடிதம் ஜனவரி 20,2005 – ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரால் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிர்ப்பு… பணிந்தது இரான்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

ஆசாரகீனன்


தீவிர இஸ்லாமிய சட்டங்களைக் கடைபிடிக்கும் இரான், நைஜீரியா போன்ற அரசாங்கள், முறை தவறிய உறவு வைத்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டப்படும் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வது போன்ற கொடும் தண்டனைகளை வழங்குவது பற்றியும், இத்தகைய காட்டுமிராண்டித்தனங்களை தடுத்து நிறுத்த உதவுமாறும் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தேன். இரானைக் கண்டித்து ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தியையும் எழுதியிருந்தேன்.

முறை தவறிய உறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை விதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் இரான் நாட்டைச் சேர்ந்த ஹய்ஜெ எஸ்மாயில்வான்ட் (Haijeh Esmailvand) என்ற இளம்பெண். ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரால் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனைக்கு உலகெங்கும் எழுந்த எதிர்ப்பு காரணமாக, பின் விளைவுகளுக்கு அஞ்சி, இந்தப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதை இரான் அரசாங்கம் வேறு வழியின்றி தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

எனினும், உலகளாவிய எதிர்ப்புக்கு இரான் பணிந்துள்ளதைப் பாராட்டியே தீரவேண்டும். அதாவது, அரேபியர் அல்லாத பாரசீக இனத்தைச் சார்ந்த ஷியாக்கள் பெரும்பான்மையினராக விளங்கும் நாடான இரான் இன்னமும் உலகக் கருத்துக்கு மதிப்பு தருகிறது என்பதை நாம் பாராட்ட வேண்டும். வஹாபி இஸ்லாத்தைப் பின்பற்றும் அரபு இனவாத சவுதி அரேபியாவோ, மாஒயிச சீனாவோ அல்லது வட கொரியாவோ உலகின் கருத்துகளைச் சற்றும் மதிப்பதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.

இன்னொரு தளத்தில் அணு உலைகள், அணு வெடி பொருள் ஆகியவற்றைக் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த கண்டனங்களுக்கு இதே போல செவிமடுத்து ஓரளவு இறங்கி வந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க இரான் முன் வந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். இரான் உலக அரங்கில் தன்னைப் பொறுப்புள்ள அரசாங்கமாக காட்டிக் கொள்ள முயல்வதை இது சுட்டிக் காட்டுகிறது.

உலகெங்கும் பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட, வெகு தீவிரமாக நடத்தப்பட்ட பத்து நாள் போராட்டத்தின் காரணமாக இக் கொடுமை தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இப் போராட்ட முயற்சியைத் தொடங்கியவரும், ஒருங்கிணைத்தவருமான மினா அஹாதி (Mina Ahadi) இம் முயற்சியில் அயராமல் ஈடுபட்டுப் பணியாற்றி, இந்த மாபெரும் கொடுமையை நடக்க விடாமல் தடுத்த அனைவருக்கும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். ‘மனித உரிமைகளை சற்றும் மதிக்காத இத்தகைய கொடுமைகளை அனுமதிக்க முடியாது என பலரும் முடிவு செய்ததே நம் வெற்றிக்குக் காரணம் ‘ என்றும் அவர் தெரிவித்தார்.

ஹய்ஜாவின் தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நாளுக்கு முன்தினம் ஸ்டாக்ஹோம், கோடன்பர்க் (Gothenburg) மற்றும் கலோக்னே (Cologne) ஆகிய நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட எதிர்ப்புப் போராட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் பலரும் கலந்து கொண்டனர்.

உலக அளவில் பல செய்தி ஊடகங்களிலும், வெளிநாடுகளிலிருந்து வெளிவரும் இரானிய பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் இந்த எதிர்ப்புப் போராட்டம் பற்றிய செய்திகள் வெளிவந்தன. நியூ சானல் தொலைக்காட்சி ஒவ்வொரு நாளும் இது பற்றிய விவரங்களை ஒளிபரப்பியது. ஆம்னெஸ்டி சர்வதேச இயக்கம் இது தொடர்பான அவசர வேண்டுகோள்களை வெளியிட்டதுடன், சம்மந்தப்பட்ட தலைவர்களையும் அதிகாரிகளையும் வலியுறுத்தச் சொல்லி அதன் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தது.

உலக அளவில் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாகவே இரானிய அரசாங்கம் தன் முடிவிலிருந்து பின் வாங்க நேர்ந்தது என்று ஜோல்ஃபா நகர மக்கள் கருதுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நகரத்திலுள்ள சிறையில்தான் ஹய்ஜெ அடைக்கப்பட்டிருக்கிறார். ஹய்ஜெவையும் அவரைப் போலவே தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் லெய்லா (19 வயது), ஜிலா இஜாதி (14 வயது), கொப்ரா ரஹ்மான்பவுர், அஃப்ஸனேஹ் நொரோஜி உள்ளிட்ட பிறரையும் விடுவிக்கக் கோரும் போராட்டங்கள் தொடர்கின்றன.

மேலதிக விவரங்களுக்கு:

International Committee against Stoning

Organisation for Women ‘s Liberation

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்