கடிதங்கள் – டிசம்பர் 18, 2003

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

நாகூர் ரூமி – பி எஸ் நரேந்திரன் – கார்த்திக் – மயிலாடுதுறை சிவா – அரவிந்தன் நீலகண்டன் – ஞாநி


ஆசாரகீனனை முன்வைத்து : மலையடிவாரத்தில் பெற்ற ஞானோதயம்

====================================================

நாகூர் ரூமி

‘மருந்துக்குக்கூட கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திக ‘ நண்பர் ஆசாரகீனன் அவர்களுக்கு, நாகூர் ரூமியின் ஆத்திக வணக்கம். முஸ்லிம் பெயர்களை வைத்துக்கொண்டு அட்டூழியம் செய்யும் மனிதாபிமானமற்றவர்களைப் பற்றி நான் பேசவில்லை. முஸ்லிம் பெயரை வைத்துக்கொள்வது வேறு. முஸ்லிமாக இருப்பது வேறு. சரி அது போகட்டும். நீங்கள் நாத்திகராக இருப்பதால், இந்த வேறுபாட்டில் உள்ள நுட்பம் உங்களுக்கு இப்போது தேவையில்லை.

இஸ்லாமிய சட்டத்தை ‘புனிதமானது ‘ என்று ஒரு கவிதையில் ஒத்துக்கொள்ளும் ரசூல் வேறு கவிதைகளில் அதைக்குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கும் முரண்பாட்டையும் அபத்தத்தையும்தான் என் கட்டுரைமூலம் சுட்டிக்காட்டினேன். (புனித சட்டங்களை வளைத்து முதுகு சொறிந்து கொள்கிறாய் ‘ என்று அவருடைய நூலின் 30ம் பக்க கவிதை குறிப்பிடுகிறது). மைலாஞ்சியையும் என் விமர்சனத்தையும் மறுபடியும் ஊன்றி படித்துப்பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஒரு பொதுஇடத்தில் கூடுவதால் என்னென்ன தீமைகள் விளையும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா ?! பெண் போலீஸ் என்றாலும், டூட்டி முடிந்து வீட்டுக்குப் போகும்போது அவள் கணவன் வந்துதான் அழைத்துப் போகவேண்டியுள்ளது! இதுதான் நிதர்சனம். ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் கூடி ஒன்றாகவே ஒரு காரியத்ைதைச் செய்யலாம் என்பதற்குப் பெயர்தான் சமத்துவமா ?!

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழக்கூடாது என்பது இஸ்லாமிய சட்டம். அது பெண்களுக்கு தொழும் கடமையிலிருந்தும் ஓய்வு கொடுக்கிறதே ஒழிய எப்படி அவர்களைக் கீழ்மைப்படுத்துகிறது ?! ஆணும் பெண்ணும் எந்தக் காலத்திலும் சமமாக முடியாது. ஆணும் பெண்ணுமென்ன, ஆணும் ஆணும்கூட சமமில்லை. யாரும் யாருக்கும் சமமில்லை. உயர்வுமில்லை. தாழ்வுமில்லை. எல்லோரும் வித்தியாசமானவர்கள். எனவே இஸ்லாமிய சட்டங்களும் உடல் கூறின் இயற்கையை ஒட்டி அமைந்திருக்கிறது. இதை சமத்துவம் என்ற ஒரு முட்டாள்தனமாக கருத்தாக்கத்தோடு போட்டு குழப்பிக்கொள்வதால்தான் ஆசாரகீனமான கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன.

சமத்துவம் என்பது உரிமைகள் சம்மந்தப்பட்டது. இயற்கையான உடல் அமைப்பு சம்மந்தப்பட்டதல்ல. ஆண்களைவிட பெண்களே இஸ்லாமிய சட்டத்தினால் அதிகமான நன்மையடைகிறார்கள். சட்டம் அப்படி அமைந்திருக்கிறது. ஒரு சட்டத்தை மனிதன் எப்படி வேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்தலாம். அது எப்படி சட்டத்தின் குற்றமாகும் ?

பெண்கள் தொழுவதற்கென்றே தனியாக தமிழ் நாட்டின் கீழக்கரை போன்ற பல ஊர்களில் பள்ளிவாசல்கள் இருக்கத்தான் செய்கின்றன. பார்வை அலைந்தால் மனதும் அலையும். எந்த அளவுக்கு உடல் அசைவுகளை ‘மினிமைஸ் ‘ செய்கிறோமோ அந்த அளவுக்கு மனஒருமை கூடும். அதுசரி, மார்பின்மீது துணி போட்டு மூடாமலிருப்பதையே ஒரு ‘ஃபேஷன் ‘ என்று நினைத்துக்கொண்டு செயலாற்றிவரும் ‘நாணமிக்க ‘வர்களாக பெண்களே ஆகிவிட்ட இந்த காலத்தில் சட்டம் பேசினால் அது பிற்போக்காகத்தான் இருக்கும். முலையைக் காட்டுகின்ற முற்போக்குகளை, அதை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று துடிக்கிற சமத்துவ வக்கிரங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆசாரகீனரே, மன்னிக்கவும்.

உங்களுடைய தாயைப்பற்றி யாராவது தவறாக ஒரு வார்த்தை சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமல்லவா ? சல்மான் ரஷ்டிமீது முஸ்லிம் உலகுக்கு வந்ததும் அதே கோபம்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய மனைவிமார்கள் எங்களுக்கு அன்னையர். அவர்கள் பெயரில் விபச்சாரிகள் இருப்பதாக இஸ்லாமிய வரலாறு நன்றாக அறிந்த ரஷ்டி தனது ‘சாத்தானின் கவிதைகள் ‘ நாவலில் சொல்லிருக்கும் ஒரு விஷயமே போதும் அவன் ஒரு அயோக்கியன் என்பதை விளக்க. ஒருவன் சிறந்த எழுத்தாளனாக இருப்பது வேறு. பண்புள்ள மனிதனான இருப்பது வேறு. தாயைப்பழிப்பவனை வேறு என்ன சொல்வது ? அந்த நாவலில் இஸ்லாமிய வரலாறு எந்த அளவு நுட்பமாக கிண்டலடிக்கப்படுகிறது என்று இஸ்லாமிய வரலாறு அறிந்தவர்களுக்குத்தான் நன்கு விளங்கும். ஜிப்ரீல் ஃபரிஷ்தா என்ற பெயரே ஒரு கிண்டல்தான். அது உங்களுப் புரிந்திருக்க நியாயமில்லைதான்.

இஸ்லாமிய சட்டங்களைப்பற்றிப் பேசுகின்ற தகுதி அதைப்பற்றி ஆழமாக அறிந்தவர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஆரோக்கியமான ஒருவனை நோக்கி அழுகி நாறிக்கொண்டிருக்கின்ற ஒரு தொழுநோயாளியின் விரல் நீள்வது வேடிக்கையானது!

அதோடு, என் முதன்மையான வாதமே மைலாஞ்சியின் கவிதைகள், கவிதைகளாகப் பரிணமிப்பதை ரசூலின் அறைகுறையான சட்டம் சம்மந்தமான கேள்விகள் தடுத்துவிடுகின்றன என்பதுதான். சட்டம் சம்மந்தப்படாத அவருடைய வேறுகவிதைகள் எப்படிப் பிரம்மாதமாக வந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளேன்.

‘உலக இஸ்லாம் ‘ — அது என்ன இஸ்லாம் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை ஊருக்கு ஒரு இஸ்லாம் உலகத்துக்கு ஒரு இஸ்லாம் கிடையாது. 1425 ஆண்டுகளாக ஒரே இஸ்லாம்தான். ‘இஸ்லாம் ‘ என்று நண்பர் எதைச்சொல்கிறார் என்று தெரியவில்லை — எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகட்டும். ஆண்களும் பெண்களும் உடல் உறவு கொள்வதைப் பற்றி எவ்வளவு வெளிப்படையாக வேண்டுமானாலும் விவாதிக்கட்டும். வேண்டுமானால் செய்முறைப் பயிற்சிகளைக்கூட செய்து காட்டட்டும். அதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் என்ன சம்மந்தம் ?

என்னை ‘இஸ்லாமிய அறிஞர் ‘ என்றும் ‘விசுவாசமான நம்பிக்கையாளர் ‘ என்றும் கிண்டல் கூர்ந்து அழைத்ததற்கு நன்றி. உங்கள் நாத்திகம் போதுமான அளவுக்கு இன்னும் ஆழமாக எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

நட்புடன்

நாகூர் ரூமி

(நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன – திண்ணை குழு)


பொதுவாக ‘திண்ணை ‘யின் கடிதங்கள் பகுதியை நான் படிப்பதில்லை. ரோஷமுள்ள ‘மொத்துச் சண்டை ‘ நடக்கும் இடம் என்பதால். இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன் திரு. ரோசாவசந்த் என்பவர், என்னையும், திரு. பி.கே.சிவகுமார் அவர்களையும் ‘அசட்டுக் கட்டுரையாளர்கள் ‘ என்று விளித்து எழுதியதாகவும், அதற்கு நான் பதிலளித்தே தீர வேண்டும் என்றும் நண்பர் ஒருவர் இரண்டு முறை ஈ-மெயிலியிருந்தார்.

அவருக்காக, என் கொள்கையைத் தளர்த்தி, இதோ என் ‘லேட்டா வந்த லேட்டஸ்ட்டு ‘,

நண்ப.

நலங்கிள்ளி.

நாறும்பூ நாத.

நன்கு நவின்றனை ஐயா!

நன்றி.

வம்பு வளர்த்திட

வழிகள் பலவுண்டு.

அன்பு வளர்த்திடவும்

அங்ஙனமே!

என்பு தேய

எழுதிடுவோரை

பண்புடன் பரிகசித்தலே

பயனாம்.

பார்த்து எழுதிடுவீர்.

அன்புடன்,

நரேந்திரன்.

(நாறும்பூ = மணமுள்ள மலர்)

narenthiranps@yahoo.com


திண்ணைக்கு,

ரோசவின் கட்டுரை சிறப்பாக இருந்தது. அரவிந்தன் எழுதும் இது போன்ற(சமஸ்கிருதம் கணிணிக்கு ஏற்ற மொழி,இன்னும் சிலர் சொன்னது போல தேவ பாஷை) கருத்துக்களை படித்து விட்டு, யாரும் ஒன்றும் சொல்லாமல் இருந்தால் , இது போல இன்னும் என்ன என்ன

பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவாரோ ?

ஆனால் இவை ஏற்றுகொள்ளப்பட்டுவிட்டன என்று நினைக்க வேண்டாம்.

அவர் , அதற்கான தொரு சான்று கட்டுறையை திண்ணை அறிவியல் பகுதிக்கு அனுப்பியிருக்கலாமே!

இல்லை இனிமேலாவது செய்யட்டும்.

அது என்ன ஒரு மொழி மட்டும் கணிணிக்கு ஏற்ற மொழி, மற்றதெல்லாம் ஒவ்வாத மொழியோ ?

இதை ஒரு மொழியிலாளர் ஒத்து கொள்வாரா ?

அரவிந்தன் போன்றோருக்கு, தமிழில் மகா பக்தி காவியங்கள் படைத்த , அப்பர் , சுந்தரர், திருமூலர், இவர்கள் எல்லாம் எந்த வகையில் சேர்க்கிறார்கள் ? இவர்களுக்கெல்லாம் தமிழ் தேவபாசையில்லையா ?

கார்த்திக்

karthikramas@yahoo.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)


தமிழ் வரலாற்று நாயகன் கலைஞர் கருணாநிதி

— ஓர் பார்வை……..

அன்பு நண்பர் P.S நரேந்திரனின் எழுத்தக்களை வழக்கமாக வாசிக்கும் நபர்களில் நானும் ஒருவர். குறிப்பாக தமிழக பயணம் பற்றிய அவர் தொடர் கட்டுரை, பாபி ஜிண்டால் பற்றிய கட்டுரை என அவர் எழுத்துக்களை விரும்பி வாசித்தும் ரசித்தும் இருக்கிறேன். இதுபோல் அவர் நிறைய எழுதவேண்டும்.

ஆனால் திடாரென்று சந்தடி சாக்கில் பேரறிஞர் அண்ணாவையும் கலைஞர் கருணாநிதியையும் திட்டி எழுத ரம்பித்துவிட்டார். இது ஆரோக்கியமான செயலாக எனக்கு தோன்றவில்லை. அதன் விளைவே இக்கட்டுரை. ஏதாவது ஓர் சந்தர்ப்பத்தில் யாராவது பதில் சொல்வது நலம். நான் ஆரம்பித்து வைக்கப் பிரியப்படுகிறேன்.

சென்ற இதழ் திண்ணையில் நீங்கள் ‘மத நல்லிணக்கம் ‘ பற்றி எழுதியிருந்தார். கட்டுரை நன்றாக இருந்தது. ஆனால் முடிவில் கலைஞர் கருணாநிதியை ‘தொண்டு கிழம் ‘ என்றும் ‘மஞ்சள்துண்டு மகான் ‘ என்றும் ‘அரசியல் வியாபாரி ‘ என்றும் ஏளனமாக திட்டி எழுதியது கண்டு, சாரசரி தமிழன் என்ற முறையில் எனக்கு மனவருத்தமே, அதன் விளைவே இக்கட்டுரை.

முதலில் கலைஞர் கருணாநிதி பற்றி என்னுடைய சிற்றறிவுக்கு தெரிந்த சில விசயங்களை திண்ணை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளப் பிரியப்படுகிறேன்.

கலைஞர் கருணாநிதியைப்பற்றி நான் சொல்லி பிறர் அறிய வேண்டியதில்லை. நம் தமிழ் சமூகம் நன்கு அறியும்.

1. தமிழ் நாட்டில் உள்ள திருவாரூரில் உள்ள ஒர் சிறிய ஊரில் ‘திருக்குவளையில் ‘ பிறந்து தன்னுடைய அயராத உழைப்பால் தமிழகத்தை நான்கு முறை ஆண்டவர். 10ம் வகுப்புவரை மட்டுமே படித்து இருந்தாலும், நம் அன்னைத் தமிழில் தனக்கென்று ஒர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி! கிட்டதட்ட 15 வயது முதல் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டவர். கிட்டதட்ட 60 ண்டுகள் பொது வாழ்க்கையில். இந்திய அளவில் இப்படி ஒரு தமிழனை பார்த்ததுண்டா ? அதுவும் இந்த வயதில் ? இப்படி ஓரு உழைப்பை பார்த்ததுண்டா ? அல்லது கேட்டதுண்டா ? கிட்டத் தட்ட 79 வயதில் இன்னமும் அயராத உழைப்பு!!! எத்தனைப் போரட்டங்கள், இத்தனை சோதனைகள்!!! அனைத்தையும் தனது போராடும் குணத்தால், மிகுந்த தன்னைப்பிக்கையால், சோதனைகளை வெற்றிப் படிகட்டுகளாக மாற்றியதை தமிழ் சமுதாயம் மறுக்க முடியுமா ? அல்லது மறக்கதான் முடியுமா ?

அதொண்டு கிழம்அ என்று நக்கல்!! ஏன் உங்கள் அப்பா என்றும் அமார்க்கண்டையேரா ? வயது அனுபவத்தின், முதிர்ச்சியின், காலத்தின் ஒட்டம் அல்லவா ? அவர் வயதிற்க்கு ஓர் மதிப்பு, மரியாதை வேண்டாமா ?

2. கலைஞர் கருணாநிதி கறுப்புத் துண்டு அல்லது மஞ்சள் துண்டுப் போட்டால் என்ன ? இதனால் பிறருக்கு ஏதாவது தொல்லையா ? யார் கண்ணை உறுத்துகிறது ? அதே சமயத்தில் ெfயலலிதா பச்சை புடவை கட்டி கொண்டதை, இதனால் தமிழகம் முழுவதும் எங்கு சென்றாலும் பச்சை மயமாக காட்சி அளிப்பதை ஏன் யாரும் எதுவும் சொல்லவில்லை ? இதனால் எவ்வளவு பொதுச் சொத்து நாசம் ? என்னால் அடுக்கு அடுக்காக பல உதாரணங்களை கோடிட்டு காண்பிக்க முடியும்.

3. கலைஅர் வீட்டு பெண்கள் அஅடையாரு சிக்னல் மாதிரி (நீங்கள் சொல்லவிட்டாலும், மேற்கொள் காட்டியதால்..) என்ன ஓர் நாகரிகம் அற்ற மேற்கோள் காட்டுதல் ? உங்களது மனைவி, சகோதிரியை சொன்னால் பொறுத்துக் கொள்வீர்களா ?

4. உலக அளவில் யார்தான் அரசியல் வியாபாரி இல்லை ? அமெரிக்கா ஆரம்பித்து கன்னியாகுமரி வரை, அரசியல் வியாபாரி இல்லாதஅ ஓரே ஓர் நபர் சொல்லுங்கள் பார்ப்போம் ? இந்திய அளவில், நியாமான, சன நாயக நெறி முறைகளோடு ஓர் கட்டுகோப்பான கட்சி அதிராவிட முன்னேற்ற கழகம். இப்படி பட்ட வழக்கம், அதிமுகவிலோ, காங்கிரசிலோ, பாரதிய சனதாவிலோ உண்டா ?

5. ‘இந்து ‘ வை திட்டியபொழது எல்லா பத்திரிக்கைகளும் கலைஞர் கருணாநிதியை திட்டி எழுதின.ஆனால் யாராவது ‘இந்து ‘ என்று ஒரு வார்த்தை உள்ளதா ? அதன் வரலாறு என்ன ? அதன் அர்த்தம் என்ன ? என்று சொன்னார்களா ? ‘இந்து ‘வை விளக்க ஆரம்பித்தால் அது ‘வர்ணாசிரம ‘ தர்மத்தில் போய் நிற்குமே ? இதற்க்கு விளக்கம் அளிக்க எந்த இந்து தயார் ? கலைஞர் கருணாநிதி இSலாமியர்களுடன் கஞ்சி குடிப்பது ஒரு மனிதாபிமான, நட்பின் அடையாளம். அதே சமயத்தில் எந்த ஓரு இந்துமத தலைவர்களும் கலைஞர் கருணாநிதியை ‘கொழுக்கட்டை ‘ சாப்பிட கூப்பிடவும் இல்லை. கொழுக்கட்டையை சாப்பிட்டுவிட்டு பிள்ளையாரை கொண்டுப் போய் கடல் நீரில் கரைத்து நீரை மாசுபடுத்துவதை விட இSலாமிய சகோதரர்களோடு கஞ்சி குடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

6. பொது வாழ்க்கையில் ஈடுபட்ட யாரையும் விமர்சிக்க யாருக்கும் தாராளமாக உரிமை உண்டு. ஆனால் விமர்சிப்பதற்கு முன்பு, நாம் யாரை குறை சொல்லுகிறோம், அதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா என்பதை நன்கு யோசித்து செயல் படுவது நல்லது. அதுமட்டும் அல்ல, இதற்கு முன் நாம் வளர்ந்த சூழல் என்ன ? நாம் எங்கு பிறந்தோம் ? என்பதை சிந்தித்து பார்ப்பது நலம்.

7. அதாவது நாம் தமிழகத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, அங்கு அடிப்படை கல்வி படித்துவிட்டு, அமெரிக்கா வந்தவுடன், ஏதோ நாம் வேற்று கிரகத்திற்க்கு வந்துவிட்டதைப்போலவும், திடாரென்று அறிவாளி போல, நம்முடைய தமிழ் நாட்டைப் பற்றி ஏளனமாக பேசுவதும், நம் தமிழ் நாட்டுத் தலைவர்களை விமர்சிப்பதும் ஒர் புதுவித வழக்கமாக போய்விட்டது. ெfயகாந்தன், ெfயமோகன் இவர்கள் வழியில் அடுத்து நீங்கள் மற்றும் பலர் இப்பொழுது கிளம்பி விட்டார்கள்…

8. அதிண்ணைஅ ஓர் அரசியில், சமூக, பண்பாடு இணையப் பத்திரிக்கை, இதில் ‘தீப்பொறி ஆறுமுகம் ‘ போல, ‘வெற்றி கொண்டான் ‘ போல கீழ் தரமான (தொண்டு கிழம், மஞ்சள் துண்டு மகான், அரசியில் வியாபாரி) எழத்துகள் வேண்டாமே ?

9. கலைஞர் கருணாநிதியின் எழுதாற்றலை உலகு அறியும். பராசக்தியில் ‘ஏ பூசாரி! அம்பாள் என்றைக்கடா பேசினாள் ? அம்பாள் வெறும் கற்சிலை! என்ற வசனமும், மேலும் ‘தென்றலை பார்த்ததில்லை, ஆனால் தீயை தீண்டியிருக்கிறேன்! ‘ என்ற வசனமும் இன்னும் பல நூற்றாண்டுத் தலைமுறைக்கும் நீடிக்குமே!

10. தன்னுடைய 79ம் வயதில் இலக்கணத்துக்கு உறை எழுதிய ஒரே தமிழன் கலைஞர் கருணாநிதி. அந்த ‘தொல்காப்பிய பூங்கா ‘ பற்றி அறிஅர் பலர் அதனைப் பாராட்டிய விதம் உங்களுக்கு தெரியாதா ? உலகில் எத்தனையோ சிலைகள் இருந்தாலும், இலக்கியத்தில் நீங்கா இடம் பெற்றுள்ள ‘திருவள்ளுவருக்கு ‘ சிலையை குமரியில் நிறுவி தன் பெயரை வரலாற்றில் பதித்துக்கொண்டவர். உலகளவில் இப்படி ஓர் இலக்கிய ஆசானுக்கு வேறு யாரனும் சிலை வடித்ததுண்டா ?

11. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விசயங்கள் என்னென்ன ? தமிழ் ஆற்றல், எழுத்தாற்றல், தன்னம்பிக்கை, சாகும் வரை போரடும் குணம், திராவிட சிந்தனைகள், அயராத கடின உழைப்பு இப்படி பல பல.

12. நீங்கள் குறை சொல்லுவதாலோ, எழுதுவதாலோ அவர்களுடைய அருமை பெருமைகள் குறையப்போவதும் இல்லை, உங்களுக்கு எதிர்மறையான பிரபலமும் கிடைக்கப்போவதில்லை. நரேந்திரனைப் பொறுத்தவரை இவர்கள் சாதரண நபர்கள், ஆனால் தமிழகத்தில் உள்ள கோடன கோடி மக்கள் இவர்களை தலைவர்களாக அங்கீரத்து கொண்டார்கள்.

13. காலமும், வரலாறும் பெரியாரை, அண்ணாவை, கருணாநிதியை, வைகோவை என்றும் மறக்காது, மறக்கவும் முடியாது!

நன்றி ! வணக்கம் !

மயிலாடுதுறை சிவா

mpsiva23@yahoo.com


திரு.ரோஸா வசந்திற்கு விரிவான பதில்

திரு.ரோஸாவசந்த்: நீசபாஷை குறித்து யாரேனும் எதுவும் சொன்னால் இந்துத்வ சூத்திரனுக்கு கோபம் வருமா ? இந்துத்வத்தில் ‘சூத்திரனுக்கு ‘ தனது தாய்மொழிக்காக இவ்வளவு கோபம் வர உரிமை இருக்குமா ?…சமஸ்கிருதம் குறித்து மிகையாய் வைக்கப்படும் சில புருடாக்களுக்கு ஒருவர் பதில் அளித்தால் இந்துத்வ `சூத்திரனுக்கு ‘ ஏன் இத்தனை கோபம் வருகிறது ?

பதில்: நீசபாஷை என்று எதை கூறுகிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஹிந்துத்வ சூத்திரனுக்கு கட்டாயமாக எனது தாய்மொழியான தமிழை இழிவாக பேசினால் கட்டாயம் கோபம் வரும். உதாரணமாக, தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று கூறினால்/கூறியிருந்தால் பகுத்தறிவற்றவர் என்றே கருதுவேன். எந்த வித ஆதாரமும் இன்றி மூன்றாந்தர நபர்கள் கூறிய வதந்திகளை கொண்டு எவராவது தமிழை நீசபாஷை என்று கூறியதாக வதந்திகளை வைத்து பிழைப்பு நடத்தும் ஜென்மங்களை பார்த்தாலும் ‘… பிழைக்கும் இந்த பிழைப்பு ‘ என்று கூற தோன்றும். இதற்கு முந்தைய எதிர்வினையை படித்துப்பாருங்களய்யா. கோபம் எங்கே இருக்கிறது ? திரு.நாக இளங்கோவன் கூறியவற்றில் இரு முக்கிய விஷயங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

1. ஒரு நாசா அறிவியலாளர் சமஸ்கிருதத்தின் செயற்கைதன்மை அதனை செயற்கை அறிவுக்கு உகந்ததாக்குகிறது என்கிறார். இது 1985 இல். அதற்கு பிறகு நாம் அதில் என்ன சாதனையை செய்துள்ளோம் ?

2. ஒரு அறிவியல் விவாதப்பொருள் ஜனரஞ்சகப்படுத்தப்படுகையில் உள்ள பிரச்சனைகள்.

அதே வேளை ஆதாரமில்லாமல் ஏதோ ஒரு கூட்டம் மற்றவர்களை மந்தைகளாக்க வேண்டும் என்றே இத்தகைய பொய்களை உருவாக்குகிறது என்கிற ‘சதித்திட்ட ‘ அணுகுமுறை தேவையற்றது, உண்மையற்றது என்பதுதான் என் நிலைபாடு. சமஸ்கிருதமே ஒரு கூட்டம் மற்றவர்களை அடக்கியாள உருவாக்கியது என்பது போன்ற எண்ணங்கள்தான், ரோசா வசந்தின் மொழியில் சொன்னால் ‘புருடாக்கள் ‘ .

திரு.ரோஸாவசந்த்: இந்த ரிசர்ட் ப்ரிக்ஸை வைத்து மற்றவர்கள் அடிதத மட்டையடிகள்தான் கிடைத்ததே ஒழிய, ஒரிஜினல் கிடைக்கவில்லை. கொஞ்சம் எனக்கு அனுப்பிவைக்கமுடியுமா ? விஷயத்ததை பிட்டு பிட்டு வைக்க வசதியாய் இருக்கும். (நீங்கள் இளங்கோவனுக்கு எழுதியுள்ளதை படித்தால் இணையத்தில் கட்டுரை இருப்பது போல தோன்றுகிறது.)

பதில்: நிச்சயமாக இணையத்தில் pdf ஆக உள்ளது. என்னிடமும் உள்ளது. எனவே நீங்கள் Google இல் தேடி எடுத்துக் கொள்ளுங்கள். என்ற போதிலும் எனக்கு விளங்கியவரை விஷயத்தை சுருக்கமாகவும், முடிந்தவரை தெளிவாகவும் கூறிவிடுகிறேன். ரிச்சர்ட் ப்ரிக்ஸ் சமஸ்கிருத இலக்கண அடிப்படையில் வாக்கியங்களுக்கு semantic net பகுப்பாய்வு சித்திரங்களை உருவாக்குகிறார். அவை செயற்கை அறிவு இயக்கத்திற்கு தேவையான மென்பொருள் வாக்கியங்களில் வார்த்தைகளின் தொடர்பு அறிவினை பகுப்பாய்வு செய்ய உருவாக்கும் semantic net டினை ஒத்திருப்பதை காட்டுகிறார். எந்த அளவுக்கு ஒரு வாக்கியத்தின் இலக்கண விதிகளிலிருந்து உருவாக்கப்படும் semantic net இடியாப்ப குழப்பமாக உள்ளதோ அந்த அளவுக்கு அது செயற்கை தன்மையிலிருந்து விலகுவதாக இருக்கும். சமஸ்கிருத வாக்கியங்களுக்கான பாணினி இலக்கண அமைப்பிலிருந்து ப்ரிக்ஸ் semantic net ஐ உருவாக்குகிறார். அது செயற்கை மொழிக்கான தன்மையுடன் இருப்பதாக நிறுவுகிறார். ஒரு வேளை இந்த ரிச்சர்ட் ப்ரிக்ஸ், AI இதழ், இந்த நிறுவுதல் குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பாத மற்ற கணினி அறிஞர்கள் ஆகிய அனைவருமே ஹிந்துத்வ சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம். இது குறித்த திடுக்கிடும் தகவல்களை ரோசா வசந்த் ‘கொஞ்சம் குண்ட்ஸாக ‘வேனும் விரைவில் தருவார் என்பதில் எனக்கு ஐயமில்லை. ரிச்சர்ட் ப்ரிக்ஸை காக்கிநிக்கர், வெள்ளை சட்டை கருப்பு தொப்பியுடன் நிற்கும் ஒருவராக பாவித்து அதன் அடிப்படையில் அதற்காகவே அவரது ஆய்வுத்தாளை ரோசா ‘கிழிப்பார் ‘ என்பதிலும் எனக்கு ஐயமில்லை.

விஷயம் என்னவென்றால் திரு.நாக.இளங்கோவன் கட்டுரையில் சித்தரிக்கப்பட்ட மாதிரி ‘ஒரு கூட்டம் வேண்டுமென்றே ஒருவித ஆதாரமுமின்றி பொய்யாக ஒரு மோசடி வேலையாக கணினிக்கும் சமஸ்கிருதத்திற்கும் முடிச்சு போடுகிறது ‘ என்பது ஆதாரமற்றது என்பதுதான் என் நிலைபாடு. ஒருவேளை முடிச்சு போட்ட விதம் தவறாக இருக்கலாம் ஏன் அபத்த உளறலாகவே இருக்கலாம் – பல சமயங்களில் இருக்கிறது.அதனை கண்டிப்பதில் எனக்கு எப்போதும் தயக்கம் இருந்ததில்லை. இது தொடர்பான ரோசா வசந்தின் அடுத்த குற்றச்சாட்டிற்கே வந்துவிடுகிறேன்.

திரு.ரோசா வசந்த்: அப்பறம் ரொம்பதான் ஸயண்டிஃபிக்காத்தான் பேசறீர், ஆனா அதை இங்கே மட்டும்தான் செய்யறீர், கொஞ்சம் சமஸ்கிருதம் தேவ பாஷைன்னு சொலறவங்ககிட்டயும் இன்னும் என்னேன்னவோ அதைபத்தி புருடா விடும் இந்துதவ இணையதளத்தில் போய் பேசப்டாதோ! எத்தனையோ இணையதளங்கள்ளே என்னேன்னவோ பிதற்றறாளே! இந்துத்வத்தில் ‘சூத்திரனுக்கு ‘ அவ்வளவுதான் உரிமையோ! மத்தவா கூட சண்டை போடமட்டுத்தானா ?

பதில்: ஹிந்துத்வ மின்-அஞ்சல் விவாத குழுக்களில் பல சந்தர்ப்பங்களில் வாமதேவ சாஸ்திரியின்(டேவிட் ப்ராலி) ‘new age ‘ நிலைப்பாட்டினை வெளிப்படையாக எதிர்த்துள்ளேன். ‘ராமர் கட்டிய பாலத்தை நாஸா ‘ கண்டுபிடித்ததாக கூறப்பட்ட புரளிக்கு எதிராக நான் எழுதிய கட்டுரையை தாங்கள் மறந்துவிட்ட தங்கள் நேர்மையான ஞாபக மறதி அபரிமிதமானது ரோசா வசந்த். எனவே அந்த கட்டுரையிலிருந்து சில வாக்கியங்கள் – ஹிந்துத்வ சூத்திரனுக்கு இருக்கும் உரிமையை காட்டத்தான். ‘துரதிஷ்ட வசமாக இச் ‘செய்தி ‘யை இந்திய ஊடகங்கள் கேள்வியேதுமின்றி ஏற்றதும் மற்றும் சில மின் அஞ்சல் விவாத மற்றும் உரையாடல் குழுக்களில் இராமயணமே நாசாவால் மெய்ப்பிக்கப்பட்டிருப்பது போன்ற கருத்துகள் பரவியதும் நாம் எந்த அளவு தாழ்வு மனப்பான்மையில் மூழ்கியிருக்கிறோம் என்பதனை காட்டுகிறது…..இயற்கை உருவாக்கமான பாலத்தன்மை கொண்ட பவளத்தீவு தொடர்களை ‘பாலமா ‘க்கி நாஸா மூலம் இராமாயணத்திற்கு அறிவியல் சான்றிதழ் வாங்க முற்படுவது மிகத் தவறானது. இத்தகைய தன்மைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும்….இராம காதை இதிகாசமெனினும் அதன் புராண ,கவித்துவ மற்றும் அகவய கூறுகளை வரலாற்று உண்மைகளிலிருந்து பிரித்தறிவது அவசியம். இம்முறையில் ‘சீதாயாம் சரிதம் மகத் ‘ என வால்மீகி மகரிஷியால் அழைக்கப்பட்ட காவியமான இராமாயாணம் நம் ஆன்மீக மற்றும் சமுதாய உயர்வுக்கான பொக்கிஷமாகக்கூடும். மாறாக 1,750,000 வருடங்களுக்கு முன் வெறும் கற்கால கருவிகளை பயன்படுத்திய நம் குரங்கு-மானுட இன தொல் மூதாதைகளை இராமராக மாற்றும் வக்கிரம் தேவையற்றது. ‘முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் ‘. ‘ இது மட்டுமல்ல, அண்மையில் சில ஹிந்துத்வவாதிகள் ஏசுசபையினரின் இரகசிய பிரமாணம் என்கிற ஒன்றின் அடிப்படையில் அவர்களை பழித்தபோது அந்த பிரமாணம் உண்மையில் ஒரு மோசடியான போலி ஆவணம் என்பதை ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன். அதுவும் திண்ணையில் வெளியாகியுள்ளது. கட்டாயமாக தாங்கள் அதை படித்திருக்க மாட்டார்கள் ஏனெனில் ‘இந்துத்வத்தில் ‘சூத்திரனுக்கு ‘ அவ்வளவுதான் உரிமையோ! மத்தவா கூட சண்டை போடமட்டுத்தானா ? ‘ என்கிற தங்கள் rhetoric-க்கு அது உபயோகப்படாது அல்லவா ?

அடுத்ததாக திரு.ரோசா வசந்த் ‘அரை லூசாக ‘ சித்தரிக்கும் டேவிட்ஹாரிஸனுக்கு வருவோம். வசந்த்தின் புரட்டல் வேலைகள் இன்னமும் ஒருபடி கீழே போகின்றன. ஏதோ ஹிந்து மதத்திற்கும் க்வாண்டம் இயற்பியலுக்கும் முடிச்சு போட வேண்டுமென்றே மேற்கோளுக்காக அலைந்து திரிந்து கடைசியில் இந்த ஹாரிஸன் என்கிற ‘அரை லூஸை ‘ கண்டுபிடித்திருப்பதாக சித்தரிக்கிறார் வசந்த். ‘ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சிந்திக்க தெரியாதவர்கள்- அடியாட்களாக இருக்கத்தான் இலாயக்கு ‘ எனும் பொருள்படும் கருத்தை விவாத தளத்தில் முன்வைத்தவர் வசந்த் என்பதை வாசகர்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம். எனவேதான் அவருக்கு ‘ஹிந்துத்வ சூத்திரன் ‘ எனும் பதம் மிகவும் தைத்திருக்கும் என நினைக்கிறேன். இதன் நீட்சியாகவே க்வாண்டம் ஸ்டோசாஸ்டிக் கால்குலஸை நீலகண்டன் தெரிந்திருக்க முடியாது என்கிற அவரது ‘comment ‘. ஏனெனில் எனது கட்டுரைத்தொடரில் இதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயத்தை நான் கூறியிருக்கிறேன். க்வாண்டம் ஸ்டோசாஸ்டிக் கால்குலஸை எடுத்துக்கொள்ளலாம். ஹட்ஸன்- பார்த்தசாரதி சமன்பாடுகள் குறித்து அவரது பெயர் குறிப்பிடாமல் கூறும் வசந்த் அதில் வரும் ‘operators ‘ களுக்கு சிவன்-பிரம்மா-விஷ்ணு என பெயரிடப்பட்டதை கூறி இதனால் என்ன பெரிய விஷயம் என்கிறார். செவ்வாய்கிரக மலைமேட்டிற்கு கிரேக்க புராண பெயர் ஒன்றினை ஒரு வானவியலாளர் வைப்பதால் எப்படி கிரேக்க புராணம் எந்த முக்கியத்துவமும் அடைவதில்லையோ அதைப்போலத்தான் இதுவும். ஆனால் மேற்கத்திய தத்துவபடுகையில் வேரூன்றி நின்றிருந்த இயற்பியலின் அஸ்திவாரம் எவ்வாறு அதிலிருந்து நகர்ந்தது என்பதனை காட்டுகின்றது டேவிட் ஹாரிஸனின் பாடம். டேவிட் ஹாரிஸனின் பெயர் உலகின் பெரும் க்வாண்டம் இயற்பியலுக்கான ஆர்க்கைவில் இல்லை எனவே அவர் எந்த சாதனையும் நடத்தவில்லை என்கிறார் வசந்த். ஆனால் சாமர்த்தியமாக ஹாரிஸனின் இணைய தளத்தை குறித்து பேசுவதை தவிர்த்துவிடுகிறார். ஏனெனில் அந்த இணையதளம் கொடுக்கும் தகவலின் படி இந்த ‘அரைலூஸு ‘க்கு மூன்று முறை புகழ்பெற்ற கற்பித்தலில் உள்ள திறமைக்காக ‘டான் விருது ‘ வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 வருடங்களுக்காக அவரது ஆய்வு இயற்பியலை மாணவர்களுக்கு கற்பிப்பதில் ஆசிரியர்கள் நோக்கும் சவால்கள் என்பது குறித்ததாக உள்ளது. வசந்த் அவரது பாடத்தினை ‘கிழிப்பதில் ‘ வேண்டுமென்றே ஒரு தகவலை மறைக்கிறார். இந்த பாடம் ‘கணித அறிவற்ற கலை இலக்கிய துறை மாணவர்களுக்கு ‘ க்வாண்டம் அறிவியல் குறித்த அறிமுகமாக விளங்குகிறது. இங்கு ஹாரிஸன் முன்வைக்கும் சாங்கிய-பெளத்த தத்துவங்கள் இறைக்கோட்பாட்டினை குறித்தவை அல்ல. அவர் எந்த ஒரு சமய நம்பிக்கையையும் க்வாண்டம் இயற்பியல் மூலம் ‘நிறுவ ‘ முன்வரவில்லை. தன் நம்பிக்கையை (அப்படி அவருக்கு ஒரு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்) எதையும் அவர் முன்வைக்கவில்லை. க்வாண்டம் இயற்பியல் குறித்து அறிய விரும்பும் கலைத்துறை மாணவர்களுக்கு அவர் கூறியிருப்பது மிக முக்கியமானவையே. அடுத்ததாக வசந்த் கோடு கிழித்து ஆடுவதைப் போல கணிதத்திற்கும் இயற்கை மொழிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விவரம் தெரிந்தவர்கள் யாரும் கூறமாட்டார்கள். இயற்கை மொழியை ‘அறியும் ‘ மென்பொருளை உருவாக்க நாம் சந்திக்கும் பல சிக்கல்களை கணிதத்தை ‘அறியும் ‘ மென்பொருளை உருவாக்குவதிலும் நாம் சந்திக்கிறோம் என்பதே பல AI ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது. இதன் எளிமைப்படுத்தப்பட்ட உதாரணமே ஹாரிஸன் கொடுத்திருந்தது. கல்வி உளவியலில் ‘spiral educating ‘ உக்தி அறிந்த எவரும் இவ்வுதாரணத்தின் தளத்தை அறிந்து கொள்ளலாம். இது கணித அறிவு இல்லாத (இன்னமும் சொன்னால் கணிதத்தை கண்டு அச்சப்படுகிற) மாணவர்களுக்காக கொடுக்கப்பட்ட உதாரணம். ஆனால் தர்க்கத்தை மிகவும் சிலாகிக்கிற அல்லது ரோசாவசந்தின் ‘ஸ்டையிலில் ‘ சொல்வதென்றால் சிலாகிப்பதாக காட்டிக்கொள்கிற ஒருவரை பொறுத்தவரையில் ஒருவர் கூறும் ‘அ ‘ எனும் விஷயத்தை மறுதலிக்க (க்வாண்டம் இயற்பியலின் தத்துவ உள்ளீடு மற்றும் பாரத ஞான மரபிற்கான இணைத்தன்மை) அவர் கூறும் ‘ஆ ‘ என்கிற விஷயத்தை ‘கிழித்துவிட்டு ‘ (கணிதம் – இயற்கைமொழி ஒப்பீடு) -என்னைப் பொறுத்தவரையில் அதில் கிழிந்திருப்பது ஹாரிசன் அல்ல- அதனால் ‘அ ‘ வும் ‘ஆ ‘ போல தவறு என்கிற தர்க்கம் இருக்கிறதே, ரஸ்ஸல் தோற்றார் போங்கள்!

http://biome.utoronto.ca/profile/dharrison.htm

க்வாண்டம் இயற்பியல் மற்றும் பாரத தத்துவ மரபு குறித்த தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு தனி கட்டுரை எழுதிதான் நான் ‘மரியாதை ‘ செய்ய வேண்டும். செய்திருக்கிறேன்.

அன்புடன்

அரவிந்தன் நீலகண்டன்

பி.கு, திரு.ரோசாவசந்த் தங்கள் பதிவுகள் கருத்து கண்டேன். ஒரு சாதாரண மரியாதையை ‘குழைவு ‘ (எஜமானனிடம் நாய் வாலாட்டுவது போல ?) என்று கூறும் தங்கள் ‘திமிர் ‘ அபாரமானது.


dear editor

i wonder if we can describe bharathi ‘s birthday as ‘ninaivu naal ‘. it is customary only ro referto the day of death as nianivu naal. bharathi ‘s death day was september 11. birthday was december 11.

jnani


Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி