கடிதங்கள்- மே 20,2004

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

ஹுமாயுன் – பி.கே.சிவகுமார் -கோச்சா (எ) கோவிந்த் – ராஜேஷ் பி.எஸ் – மயிலாடுதுறை சிவா.


இந்தியா ஒளிர்கின்றது

மிக அருமையான முடிவு தமிழக மக்களிடமிருந்து கிடைத்திருக்கிறது. என்ன செய்தாலும் மக்கள்

மறந்துவிட்டு தனக்கே வாக்களிப்பார்கள் என இறுமாந்திருந்த கூட்டத்திற்கு சம்மட்டி அடி. அரசு ஊழியர்கள், விவசாயிகள் என கஷ்டப்படாதோர் யார் ? ஆணவத்தில் எடுத்த முடிவில் எத்தனை குடும்பங்களை பெரும் துயரில் ஆழ்த்தி வேடிக்கை பார்த்தார்கள். தேர்தல் நெருக்கத்தில் தோல்வி பயத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களுக்கு வேலை என்று அறிவித்தார்கள், ஆனால் போன உயிர்கள் திரும்பி வரவா போகிறது ? இதற்கெல்லாம் மிகச்சரியான பாடம் புகட்டிவிட்டனர் மக்கள்.

இந்திய அளவிலும் மக்களுடைய ஆதரவு அமைதியான ஒருமைப்பாட்டுடைய இந்தியா அமையவே கிடைத்திருக்கிறது. நமது நாட்டின் சிறப்பே பன்முகத்தன்மையும், வேற்றுமையில் ஒற்றுமையும் ஆகும், இதை அழிக்க நினைத்தவர்கள் நல்ல பாடம் படித்திறார்கள். வறுமையில் உழலும், அவர்களுடைய பெரிய

கவலையெல்லாம் அன்றாட பிழைப்பையும் அடுத்த வேளை கஞ்சியை குறிததாக இருக்கும், பெரும்பான்மை இந்திய மக்களுக்கு இவர்களில் பிடிமானமில்லாத, வோட்டையும், பதவியையும் மட்டுமே குறிவைக்கும், கற்பனை கொள்கைகளை புரிந்துக்கொள்ள ஏதையா நேரம் ?

ஆனால் இத்தனைக்குபிறகும் மீசையில் மண் ஒட்டவில்லை மாதிரி இவர்கள் தரும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை பேட்டிகளை பார்க்கும்போது இவர்கள் இன்னும் மக்களின் தெளிவான செய்தியை

புரிந்துக்கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.

இதில் மிகவும் பரிதாபம்…. ஜக்குபாய் மக்கு பாய் ஆனதுதான்.

ஆம் இந்தியா ஓளிரத்தான் செய்கின்றது…. ஒருமைப்பாட்டிலும், இந்நாட்டின் இறையாண்மையிலும் நம்பிக்கை வைத்திருக்கும் இந்தியர்களால். ஆனால் இதை அரசியல் சூதாக உபயோகித்தவர்கள்தான் அந்தோ பரிதாபம்… இருண்டு கிடக்கிறார்கள்.

ஹுமாயுன்

யு ஏ இ


‘அடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும் ‘ என்று மஞ்சுளா நவநீதன் எழுதிய கட்டுரையைத் திண்ணையில் படித்தேன். ஜனநாயக முறைகள் ஏதிலும் மஞ்சுளாவுக்குக் கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை என்பதையும், சோனியாகாந்தியோ காங்கிரஸைச் சார்ந்தவர்களோ பிரதமராவதில் மஞ்சுளாவுக்கு விருப்பமில்லை என்பதையும் இக்கட்டுரையின் அடிநாதமாகக் கொள்ளலாம். பா.ஜ.க. போன்ற கட்சிகள் தோற்றுப் போனதில் இருக்கிற தனிப்பட்ட வருத்தத்தை இப்படிப்பட்ட ‘குட்டையைக் குழப்புகிற கட்டுரைகள் ‘ எழுதித் தீர்த்துக் கொள்ள முடியும் என்று மஞ்சுளா விரும்பினால், திண்ணை அதைப் பிரசுரிப்பதில் தவறில்லை.

எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதபோது, குடியரசுத் தலைவர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளன. அவருக்கு ஆலோசனை சொல்ல அரசியல் சட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வழிமுறைகளில் ஒன்று, தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதும் அழைப்பதற்கு முன் ஆதரவு கட்சிகளின் கடிதங்கள் கேட்பதும். இத்தகைய ஜனநாயக மற்றும் தார்மீக முறைகள் எதிலும் மஞ்சுளா சொல்கிற வாதங்களை வைத்துப் பார்க்க முடியாது.

மஞ்சுளா சொல்கிறபடி பார்த்தால், காங்கிரஸ், பா.ஜ.க. இடது கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி என்று பல கட்சிகளைக் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க அழைத்தபின் அவர்களால் முடியாத பின்னரே, தி.மு.க.வை அழைக்க வேண்டியிருக்கும். இது நடைமுறையில் சாத்தியமில்லாத எட்டாக் கனவு. காங்கிரஸீக்குப் பதில் பாஜக இதே அளவு சீட்டுகளை வென்றிருந்தால் மஞ்சுளா இதைச் சொல்லியிருப்பாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

தி.மு.க. துணைப் பிரதமர் பதவிக்கோ முக்கியமான மந்திரிப் பதவிகளூக்கோ முயல வேண்டும் என்று மஞ்சுளா எழுதியிருந்தாலாவது மஞ்சுளாவுக்கு தி.மு.க.வின் மீதும் கருணாநிதியின் மீதும் அக்கறையிருக்கிறது எனலாம். ஆனால், சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்கிற தன் உள்ளக்கிடக்கையை வெளிச்சொல்ல இயலாமல் – காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், கம்யூனிஸ்ட்டுகள், சோனியாகாந்தி பிரதமராவது பிடிக்காத சரத்பவார், முலாயம்சிங் என்று அனைவரும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதில் இருக்கிற தார்மீக நியாயத்தை உணர்ந்திருக்கிற வேளையில் – தேச நலனைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் இப்படிப்பட்ட குழந்தைத்தனமான கணக்குகளை எடுத்துக் காட்டி, கருணாநிதியைப் பிரதமர் ஆகச் சொல்கிறார் மஞ்சுளா. இது குழப்பத்தை உண்டாக்க விரும்புகிற அவர் உள்ளக் கிடக்கையைக் காட்டுகிறது. தி.மு.க.வே தன் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சிக்காகவும், சோனியாகாந்தி பிரதமாரவதை எதிர்க்கவில்லை என்று சொல்லியும் வாக்கு கேட்டது மஞ்சுளாவுக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டது ஆச்சரியமில்லை.

சோனியாகாந்தி நரசிம்மராவுக்குக் கீழே பணிபுரிய விரும்பவில்லை என்றும், அதற்கு ஆணவம் காரணம் என்றும் சொல்கிறார்கள் என்று அடுத்த கதையை அவிழ்த்து விடுகிறார். 1991-ல் சோனியாகாந்தி விரும்பியிருந்தால் அவர் பிரதமராகி இருக்க முடியும் என்பதற்கு வரலாறு சாட்சி. தேடிவந்த கட்சித் தலைவர், அதனால் கிடைக்கக் கூடிய பிரதமர் பதவி ஆகியவற்றை வேண்டாம் என்று சொல்கிற பக்குவம் 1991ல் சோனியாகாந்திக்கு இருந்தது. அப்படி அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்த அவர், 1996ல் நரசிம்மராவின் தலைமையிலான காங்கிரஸின் தோல்விக்குப் பின்னர், காங்கிரஸ் பிழைக்குமோ பிழைக்காதோ என்று கடைசிப் படுக்கையில் இருந்தபோது, தன் குடும்பம் வளர்க்க உதவிய காங்கிரஸ் சிதைகிற காட்சியைக் காணப் பொறுக்காமல் அரசியலில் இறங்கினார். இதுவும் வரலாறு அறிந்தவர் அறிந்ததே. இதிலே, நரசிம்மராவ் சோனியாவை மந்திரி ஆகச் சொல்லி எங்கே கேட்டார், அவர் எங்கே மறுத்தார் ? மஞ்சுளாவுக்குக் கற்பனை வளம் அதிகம்தான்.

மஞ்சுளா தொலைகாட்சிகளிலும் ஊடகங்களிலும் ‘Spin Master ‘ வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அத்தகைய வேலைகளில்கூட இத்தகைய வாதங்கள் எடுபடாது என்பதை உணர வேண்டும்.

அன்புடன், பி.கே.சிவகுமார்


எங்கிருந்தோ வந்தாள்…!!!

— கோச்சா (எ) கோவிந்த —

—-

சோனியா – கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுப்படையாகவும், தனிப்பட்ட வகையிலும் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்ட அரசியல்வாதி.

இதோ, பல முறை பேட்டி கொடுத்து வந்ததை உண்மையாக்கிய புதிய அரசியல்வாதி.

நமது ஊர் தலைவர்களின் விலகல் நாடகங்களுக்கு மத்தியில் சத்திய வார்த்தைகளை சொன்னவர்.

காங்கிரஸில் கெளரவம் தரும் ஒரு தலைவி.

சேவைத் தோற்றம் , பின் அரசியல் தொடர்பு பின் பதவி என்று மூன்று கட்ட திட்டம் வைத்திருந்தோரிடை, பதவியை உதறி பளார் என்று பா.ஜ.க-விற்கு பதில் சொல்லிய அந்நியர்.

தாங்களின் எண்ணம் சேவை செய்யவே என்று பா.ஜ.க-வினர் நினைத்தால், இனி திட்ட வடிவுகள், எண்ணங்களை பாராளுமன்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கட்டும்.

ராமர் கோவிலும், மதுராவும் அரசியலில் கலக்க வேண்டாம்.

அதற்கு போராடுவதை தனியாக வைத்துக் கொள்ளட்டும்.

இதோ, எங்கிருந்தோ வந்தவர், இங்கிருந்தோருக்கு பாடம் நடத்தியுள்ளார்.

கட்சியும் ஆட்சியும் இரு அச்சாணிகள் என்று சொல்லப்படுவதற்கு ஏற்ப, நடந்து கொண்டுள்ளார்.

சோனியா அவர்களே, எங்களுக்கு ஒரு நல்ல அரசாங்கம் தர ஒரு நல்ல தலைவர் வேண்டும். மன்மோகன் சிங்கை காட்டியுள்ளீர்கள்.

அவர் அர்ச்சுனர் தான், நீங்கள் தான் சாரதி கிருஷ்ணர்.

அவர் அரசு எந்திரத்தை பார்க்கட்டும்.

நீங்கள் மக்கள் இதய வலிகளை, தேவைகளைப் பாருங்கள். அதை அறிஞர் குழுக்கள் கொண்டு ஆராய்ந்து மன்மோகன் சிங்கிற்கு சிபாரிசு செய்யுங்கள்.

அவர் யதார்த்த உண்மைகளின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தட்டும்.

மேலும், உங்களுக்குத் தெரியும் , தமிழகம் எப்படி சீரழிந்து கொண்டு இருக்கிறது என்று…!

வாருங்கள், தமிழக சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள்.

எங்களுக்கு உங்களைப் போல் திறந்த மனம் கொண்ட , அதே சமயம் போராடி ஜெயிக்கக் கூடிய மணம் கொண்ட வழிகாட்டி தேவை.

தமிழக பட்டி தொட்டிகளிலெல்லாம் நீங்கள் பயணம் கொண்டால், ஒரு புது மலர்ச்சி காண இயலும் தமிழகம்.

அறிவார்ந்த, இன, மத பேதமற்ற கட்சிகள் கொண்ட ஒரு கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் மலரச் செய்யுங்கள்.

எவன் இழப்பதற்கு தயங்கவில்லையோ, அவனே சாதிக்க முடியும்.

வாருங்கள் அத்தகைய நீங்கள் தமிழகத்திற்கு.

உங்கள் தலைமையில் ஒரு அரசு காண்போம் தமிழகத்திலும்.

அதற்கு முதல் ஆதாரமாக, தமிழக சுற்றுப்பயணம்.

பின் அது தரும் எழுச்சி. பின் கூட்டணி கட்சிகளிடம் பேச்சு.

உங்களுக்கு தெரியுமா, மரணங்கள் எப்படி தேர்தல் முடிவுகளை மாற்றிப் போட்டனவோ, அவற்றை விட சக்தி வாய்ந்தது நீங்கள் எடுத்துள்ள நிலைப்பாடு.

அதை மக்கள் மாற்றமாக நாங்கள் காணவேண்டும், புதிய ஆட்சி தமிழகத்தில் கண்டு.

பூக்காதா, காய்க்காதா எனக் கானல் நீர் போல் தோன்றும் தமிழகத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சி, நீங்கள் வந்தால், பூக்கும் , மணக்கும், காய்க்கும்.

புகுந்த வீட்டில் செருப்பாய் தேய்ந்தாலும், கடைசிவரை அந்நியராக பார்க்கப்படும் துர்ப்பாக்கிய இந்திய மருமகள் நிலை தான் உங்களுக்கும். ஆனால், மருமகள் தரும் விழுதுகள் தான் புகுந்த வீட்டின் அடிமர வேராகும்.

அத்தைகைய மருமகள் , மகளை விட உன்னதமாகிறாள்.

அது அறிவோம் நாங்கள். நீங்கள் ஒரு உன்னதமான மருமகள்.

வாருங்கள், தமிழகத்திற்கு – மாற்றம் தர.

வணக்கமுடன்

விழிகளில் ஏக்கமுடன் காத்திருக்கும் தமிழக வாக்காளன்.

gocha2004@yahoo.com


மாபெரும் தியாகம் – சோனியா காந்தி

மயிலாடுதுறை சிவா…

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உண்மையான வெற்றியாளர்கள் நம் இந்திய மக்கள். எந்த ஒருப்

பத்திரிக்கையும் கணிக்க முடியாதப்படி, தங்கள் மனதிற்கு ஏற்ப ‘காங்கிரஸுக்கு ‘ ஒர் மாபெரும் வெற்றியை

தேடி தந்துள்ளார்கள். வாழ்க சனநாயகம். மேலும் இந்த தேர்தலை சீரும் சிறப்புமாக தேர்தல் ஆணையம்

நடத்தியது மிகவும் பாரட்ட தக்கது. சிறு சிறு தவறுகள் நடந்தாலும் போக போக தவறுகளை திருத்திக்

கொள்வார்கள் என்று நம்புவோம்.

சோனியா காந்தி ‘வெளிநாட்டவர் ‘, ‘நிறைந்த அரசியல் ‘ அனுபவம் இல்லாதவர் என்ற குற்றச்சாட்டை மக்கள்

நிராகரித்து, நடப்பு நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிக்களுக்கு கிட்ட தட்ட 330

நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியும் வைத்து உள்ளார்கள்.

இப்படி பட்ட ஒர் அருமையான சந்தர்ப்பத்தில் ‘நான் பிரதமர் பதவிக்கு ஆசைப் படவில்லை!!! ‘ எனறு சோனியா

சொல்ல ஒட்டு மொத்த இந்தியாவும் ஆச்சரியப் பட்டு போனது. மேலும் சோனியா காந்தி மதசார்பற்ற அரசு நிறுவ

வேண்டும் என்பதற்குதான் நான் தேர்தலில் போட்டியிட்டேன் எனவும், எனக்கு துளிக்கூட பதவி மேல் ஆசை இல்லை

என்று சொன்னதும் மிகவும் பாராட்ட தக்கது. என் மனச் சாட்சிப் படியே நடக்க விரும்புகிறேன், என் உணர்வுகளை

புரிந்து கொள்ளுங்கள், என்று சொன்னதும் அவருடைய எண்ண அலைகளை உணர முடிகிறது.

தேர்தலுக்கு முன்பு சோனியாவை கட்சி தலைவியாக பார்த்த காங்கிரஸ் தலைவர்கள், மற்றும் பிற கட்சி தலைவர்கள்

அனைவரும் இப்பொழது சோனியாவை பார்க்கும் விதமே தலைகீழாக போய் விட்டது. சோனியாவை பிரதமர் ஆக்க

அடிதளத்தை இட்டு கொடுத்த மதசார்பற்ற கட்சிகளின் தலைவர் திரு கலைஞர் கருணாநிதி, முலாயம் சிங் யாதவ்,

லல்லு பிரசாத் யாதவ், சரத் பவார், ராம் விலாஸ் பஸ்வான், ஹர்கிசன்ச்ிங் சுர்ஸித் இப்படி அனைத்து தலைவர்களும்

மனதார ஆதரித்தும், மனம் மாறமல் சோனியா எடுத்த முடிவை நாடே பாராட்டுகிறது. எந்த சந்தர்ப்பத்திலும்

தன்னுடைய மகன் ராகுலை முன் நிறுத்தவும் இல்லை. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோனியாவை

வரிசையாக பாராட்டும் பொழது ராகுலும் வரிசையில் நின்று வாழ்த்தியது அனைவரக்கும் வியப்பாக இருந்தது.

நடக்கின்ற அனைத்தும் பார்ப்பதற்கு எளிமையாக உள்ளது, இதுவே தொடர்ந்தால் நலம்.

ஆட்சியை கைப்பற்றவும், பதவியை அனுபவிக்க துடிக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் சோனியா இப்படி தனித்து

முடிவு எடுத்து இருப்பதை மாபெரும் தியாகம் என்று சொன்னால் அது மிகையாகது. தன்னுடைய இந்த முடிவால் இந்திய

அளவில் சோனியா உயர்ந்து காணப் படுகிறார். இந்தியாவின் மிக பெரிய பதவி வீடு தேடி வந்த பொழதும் அதனை

பொறுமையாக மறுத்தது, அது மட்டும் அல்லாமல் பிரதமர் பதவிக்கு பொருளதார மேதை ‘திரு முனைவர் மன்மோகன்

சிங் ‘ பெயரை முன் மொழிந்ததும், சோனியாவின் இந்திய நாட்டு நலன் நன்கு புரிகிறது.

தேர்தலில் சோனியா காந்தியின் கடுமையான உழைப்பு இப்படி ஓர் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்ல பயன் பட்டது,

இதுவே என்றும் தொடர புதிய மதசார்பற்ற ஆட்சிக்கு நல் வாழ்த்துகள்!!! பொருளதார மேதை ‘திரு முனைவர்

மன்மோகன் சிங் ‘ இந்தியாவை உலக அரங்கில் முன்னுக்கு கொண்டு செல்வார் என்ற பரவலான கருத்து மக்களுக்கு

உள்ளது. பொறுத்து இருந்து பார்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இதுவரை எப்படியோ இனி வரும் காலங்களில்

‘இந்தியா ஓளிரும் ‘ என்று நம்புவோம்….

மயிலாடுதுறை சிவா

mpsiva23@yahoo.com


ஆர்.எஸ்.எஸ் , முஸ்லீம் மதவாதம் மற்றும் வீர தாமோதர சாவர்க்கர்—-சில விளக்கங்கள்.

ராஜேஷ் பி.எஸ்.

திண்ணையில் சில அன்பர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றிய சில தவறான கருத்துக்களை முன் வைக்கிறார்கள்..ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசபக்தி இயக்கம்.அது தனது தினசரி ஷாகா-க்களில் பாரத நாட்டின் பெருமைகளையும்,முன்னோர்களின் வீரம்,உயர்ந்த பண்புகளையும்,நமது மக்களிடையே இருக்க வேண்டிய ஒழுக்கம்,கட்டுப்பாடு போன்றவைகளையும் வ்லியுறுத்துகிறது.

இந்த வார துக்ளக்(9/5/04)இதழில் பத்திரிக்கையாளர் திரு.சோ.அவர்கள்ஒரு கேள்விக்கு பதில் பதில் அளித்துள்ளார்.

கேள்வி-ஆர்.எஸ்.எஸ் இல்லாத இந்தியா எப்படி இருக்கும். ?

பதில் -இன்றைய நிலையில் ஆர்.எஸ்.எஸ் இல்லையெனில் பல விஷயங்கள் பேசுவதற்கே வெட்கப்பட வேண்டிய விஷயங்களாகி விடும்.வேத காலத்தில் இருந்து , பாரதத்தில் இருந்து வருகிற கலாச்சாரம் பற்றியும் , இந்தியா வெவ்வேறு மக்களை கொண்டதல்ல-இங்குள்ளோர் ஒரு இனமே என்றும் ,பொருளாதார முன்னேற்றம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் , தேசிய ஒருமைப்பாட்டை காப்பது என்றும் மனித குலத்திற்கே வழிகாட்டகூடிய தத்துவங்களை உருவாக்கியவர்க்ள் இந்த பாரத தேசத்தினர்தான் என்பதையும் , மேலை நாடுகள் காட்டுமிரண்டிதனத்தை விட்டு முழுமையாக வெளியேறாத நிலையில் , பெரும் நாகரிக வளர்ச்சி கண்ட நாடு இது என்றும் பேச யாரும் இருக்க மாட்டார்கள்..அம்மாதிரி பேசுவது , பத்தாம்பசலிதனம் என்ற எண்ணமே தலைதூக்கும்.. நம்மை போன்ற இழிவான மக்களே கிடையாது; முகலாய மற்றும் பிரிட்டாஷ் ஆட்சிகள் வந்ததால்தான் நாம் மனிதர்களானோம் ‘ என்ற கருத்து ஏற்கப்பட்டு விடும்…இதுதான் சோ அவர்களின் பதில்….இதுதான் உண்மை நிலையும் கூட….

சில மாதங்களுக்கு முன் தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் (த.மு.மு.க ) பத்திரிக்கையான ‘உணர்வு ‘ படிக்க நேர்ந்தது.அதில் அவர்கள் முஸ்லீம்களிடம் அமெரிக்க நாட்டு பொருட்களை புறக்கணிக்க சொல்லி இருந்தரை¢.மேலும் எவை எவை அமெரிக்க நாட்டு தயாரிப்புகள் என்று பட்டியலிட்டிருந்தனர்.மிகுந்த மகிழ்ச்சியோடு படிக்க ஆரம்பித்தேன். என் மகிழ்ச்சிக்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை.பாரத நாடு அணுகுண்டு வெடித்து, தனது வல்லமையை அதிகரித்து கொண்டது.அதை பொறுக்க இயலாமல் அமெரிக்கா நமது நாட்டுக்கு பொருளாதார தடைவிதித்தது.இதற்காகவோ அல்லது காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவியும் பயிற்சியும் அளித்துவரும் பாகிஸ்தானின் வெளிப்படையான போக்கினை பாரத நாடு தக்க ஆதாரத்தோடு அமெரிக்கா நாட்டுக்கு அறிவித்தும் , அதைக்கண்டும் காணாமல் இருக்கும் அமெரிக்கா, தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உதவியளிக்கிறது.இதனால்தான் த.மு.மு.க-வினர் அமெரிக்க நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டாம் என்று கூறி இருக்கின்றனர் போலிருக்கிறது என நினைத்து படிக்க தொடங்கிய எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் சொல்லி இருந்த காரணம்தான் அதிர்ச்சியளித்தது.. ‘ ஆப்கானில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி அப்பாவி முஸ்லீம்களை கொல்வதை கண்டித்து இந்த நடவடிக்கை ‘ என தமுமுக விளக்கமளித்திருந்தது.அப்பாவிகள் என்று சொல்வது வெளி வேஷம்.சுருங்க சொன்னால் ஆப்கான் தீவிரவாதிகளை என்றே பொருள்..அந்த பத்திரிக்கை முழுவது தாலிபான் புகழ் பாடி இருந்தது.தாலிபான்கள் தோற்கமாட்டார்கள்.இறுதி வெற்றி அவர்களுக்கே….என்றெல்லாம் வேறு…யார் இந்த தாலிபான் தீவிரவாதிகள்.. ? இந்திய பயணிகள் விமானம் ஒன்று சில வருடங்களுக்கு முன் கடத்தப்பட்டு ஆப்கானின் காந்தகார் நகரில் காஷ்மீரி திவிரவாதிகளால் தரையிறக்கப்பட்டது நூற்றுக்கணக்கான பயணிகளை பணயக்கைதிகளாக வைத்து பாரத நாட்டு அரசாங்கத்தை மிரட்டி மசூத் அசார் போன்ற கொடிய திவிரவாதிகளை விடுதலை செய்ய கேட்டனர்..மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தும் பலனளிக்கவில்லை..கடைசி முயற்சியாக அதிரடி நடவடிக்கை எடுக்க நினைத்து அப்போது ஆப்கானில் ஆட்சி செய்த தாலிபான்களை அணுகியபோது அவர்கள் சொன்னது என்னது தெரியுமா.. ? ‘எங்கள் மண்ணில் இஸ்லாமிய ரத்தம் சிந்துவதை நாங்கள் விரும்பவில்லை… ‘ தீவிரவாதிகள் ஒரு தேசத்தின் நூற்றுக்கணக்கான உயிர்களோடு விளையாடும் போது அவர்களை இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கையில் கொல்ல நேர்ந்தால் அந்த திவிரவாதிகளின் இஸ்லாமிய ரத்தம் ஆப்கானில் சிந்தக்கூடாது என சொன்ன தாலிபான்கள் யார்.. ? பாரதத்தின் நண்பர்களா.. ?கடைசியில் என்ன நடந்தது….பல ஆயிரம் பேரை கொன்ற தீவிரவாதி மசூத் அசார் -போன்றோரை பாரத நாடு விடுதலைசெய்தது…அதுமட்டுமா…காஷ்மீர்

திவிரவாதிகளின் ஒரு பிரிவினருக்கு ஒரு காலம் வரையில் பயிற்சி அளித்தது தாலிபான்களும் தான்…அத்தகைய தாலிபான்களை அமெரிக்கா ஒடுக்குவது நமது நாட்டின் பாதுகாப்பிற்கும் நல்லது தானே…ஆனால் அந்த பாரத விரோத இஸ்லாமிய தாலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க வந்த அமெரிக்க படைகளை கண்டித்து இந்த தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் போன்ற முஸ்லீம் இயக்கங்கள் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க சொன்னனர்….சாதாரண முஸ்லீம்களை இந்த முஸ்லீம் இயக்கங்கள் எப்படி மாற்றுகின்றன பார்த்தீர்களா.. ? என்றைக்காவது ஒருநாள் காஷ்மீர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்படும் அப்பாவி காஷ்மீர் மக்களுக்காக தீவிரவாதிகளை எதிர்த்து போராட்டம் நடத்தியதுண்டா.. ?பிறைநந்தி புரத்தான்கள் போன்ற நண்பர்கள் சிந்திப்பீர்களா.. ?வேண்டுமானால் அவர்கள் பாரத ராணுவ நடவடிக்கையை கண்டித்து மனித உரிமை என்ற பெயரில் பாரதமெங்கும் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்…இதுதானே நிஜம்…

அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு பொருட்களை வாங்கக்கூடது என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது…சில வருடங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் -இயக்கம் நாடு தழுவிய முறையில் அன்னிய பொருட்களை வாங்ககூடாது என்று அறைகூவல் விடுத்து, 15 நாட்கள் நாடு தழுவிய சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்தியது…ஆர்.எஸ்.எஸ் -இயக்கத்தின் தன்னலமற்ற தொண்டர்கள் நாடு முழுவதும் கிராமம்,கிராமமாக சென்று பல கோடிக்கணக்கான மக்களை சந்தித்து பாரத நாட்டு பொருட்களை வாங்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்…இதுதான் ஆர்.எஸ்.எஸ்–க்கும் மற்ற இயக்கங்களுக்கும் உள்ள வித்தியாசம்…

எந்த நாட்டிலும் முஸ்லீம்கள் அவர்கள் அப்பாவிகளாகட்டும் அல்லது தீவிரவாதிகளாகட்டும் தாக்கப்பட்டால் மட்டும் ஏன் பாரதநாட்டு முஸ்லீம்கள் துடிக்க வேண்டும்….பிஜி தீவில் இந்தியர்கள் தாக்கப்பட்டதற்க்கு ஏன் குரல் கொடுக்கவில்லை.. ? இலங்கயில் இந்திய வம்சாவழி தமிழர்கள்,மலேசியா நாட்டில் ,பாரத நாட்டில் வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப்,அசாம்,ஆந்திரா (நக்சலைட்கள் தாக்குதல்),காஷ்மீரி மக்கள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுங்கள்…ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு நமக்கு ரத்த சம்பந்தம் இல்லாத நாட்டு மக்களுக்கு ஏன கண்ணீர் வடிக்கின்றனர்.. ?எல்லை தாண்டிய மனிதாபிமானம் தேவைதான் ஆனால் எல்லைதாண்டிய மதப்பற்று எங்கே போய்முடியும்.. ?அதிலும் பாரத நாட்டிற்க்கு பலவிதத்திலும் உதவும் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் இந்தியா வந்த போது கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தன..முதலிலும் தாய்நாடு, கடைசியிலும் தாய்நாடு .. நமது பாரதத்தின் வெளியுறவு கொள்கையை மதிக்க வேண்டும்..

திண்ணையில் பிறைநதிபுரத்தான் என்ற ஒரு நண்பர் ‘ பல வருடங்களுக்கு முன் முஸ்லீம் தெருக்களில் முஸ்லீம்களே பாகிஸ்தானுக்கு திரும்பி போய் விடுங்கள், இந்தியா இந்துக்களுக்கே மற்றும் முஸ்லீம் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள் என்றெல்லாம் சிலர் சொல்வதாக எழுதியிருந்தார்.சில வருடங்களுக்கு முன் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் முடிந்து பாகிஸ்தான் வெற்றி பெற்றால் பாரதத்தின் பல பகுதிகளில் முஸ்லீம் இளைஞர்கள் பலர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்…பிறந்தது இங்கு, வளர்ந்தது இங்கு ஆனால் பட்டாசு மட்டும் பாகிஸ்தானுக்கா.. ?தாயை விட தாய் நாடு உயர்ந்தது…எனவே தாய் நாட்டுக்கு துரோகம் செய்யும் சில எட்டப்பர்களை சில பகுதிகளில் மக்கள் பாகிஸ்தானுக்கு திரும்பி போய் விடுங்கள் என ஆவேசத்தில் சொல்லி இருந்தால் வியப்பில்லை….இது தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடும் இந்துக்களுக்கும் பொருந்தும்….முஸ்லீம் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள் என சில ஊர்களில் மக்கள் முடிவெடுத்தது உண்மை….ஆனால் அப்படிமுடிவெடுக்கப்பட்ட ஊர்களில் ஆர்.எஸ்.எஸ்- அமைப்பிற்கு கிளைகளே இல்லை…முற்றிலும் போலி மத சார்பற்ற கட்சிகளான தி.மு.க , கம்யூனிஸ்ட், அ.தி.மு.க,காங்கிரஸ் போன்றவைகளே உள்ளன..உதாரணத்திற்க்கு சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி என்ற, ஆர்.எஸ்.எஸ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடிய ஒரு கிராமத்தில் சாதாரண பொதுமக்கள் நடத்திய பங்குனி மாதத்தில் முருகன் கோவில் திருவிழா ஊர்வலம் ஆண்டாண்டு காலமாக செல்லக்கூடிய ஊர்வல பாதையில் சில வருடங்களுக்கு முன் கட்டப்பட்டமசூதி வழியாக செல்லும் போது முஸ்லீம் இளைஞர்கள் தடுக்க , மிகப்பெரிய கலவரத்தில் அதாவது துப்பாக்கி சூட்டில் முடிந்தது…அப்போது சுற்றிலும் உள்ள18 பட்டி மக்கள் அண்ணன் ,தம்பியா பழகி வருகிறோம்… ஆண்டாண்டு காலமாக செல்லக்கூடிய ஊர்வலப்பாதையில் செல்லக்கூடாது என்று இப்போது ஏன் தடுக்கிறார்கள் என்று கோபப்பட்டு சரி இனிமேல் முஸ்லீம் கடைகளில் பொருட்களை வாங்கக்கூடது , வேறுஎந்த விதத்திலும் அவர்களுடன் தொடர்பு இல்லை என்று முடிவுசெய்துசெயலிலும்செய்துகாட்டினர்….அதனால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் பின்வாங்கி குறிப்பிட்ட தெரு வழியாக ஊர்வலத்தை அனுமதித்தனர் …கிராம மக்களும் தங்கள் முஸ்லீம் எதிர்ப்பை கைவிட்டனர்….இந்துக்களின் கோவில் ஊர்வலங்களை முஸ்லீம் மசூதிவழியாக ஏன் அனுமதிப்பதில்லை….இந்துக்களின் கோவில் வழியாக பிற மத ஊர்வலங்கள் செல்லும் போது யாராவது ஒரு இந்து அது ஆர்.எஸ்.எஸ்காரன் ஆகட்டும் போகக்கூடது என்று சொல்வதில்லை….ஆனால் முஸ்லீம் மசூதி வழியாக மாடு போகலாம்….பன்றிபோகலாம்….சவஊர்வலம்போகலாம்..நாய்கள் ஊளையிடலாம்…. ஜாதி வெறியர்களின் ஊர்வலம் போகலாம்…. அரைகுறை சினிமாகாரர்களின் ஊர்வலம் போகலாம்…. கெட்ட வார்த்தைகளால் பிற கட்சிகளை அர்ச்சித்துக்கொண்டு போகும் கட்சிகளின் ஊர்வலம் போகலாம்…. ஆனால் வினாயகர்,முருகன் போன்ற கடவுள்களின் ஊர்வலம் மட்டும் போகக்கூடாது…. ?இது என்னநியாயம்…வினாயகர்,முருகன்என்னதீவிரவாதிகளா.. ? நாம் எந்த நாட்டில் இருக்கிறோம்.. ?அரபு நாட்டிலா.. ? இது என்ன மெக்காவா.. ? இந்த கேள்விசாதாரண மக்களிடம்எழுமாஇல்லையா.. ?பிறைநதிபுரத்தான் போன்றவர்கள் சிந்திப்பீர்களா.. ?

பாசத்துடன் மாமன் – மச்சானாக பழகியவர்களை ஆர்.எஸ்.எஸ் பிரிக்க நினைக்கிறது என பிறைநதிபுரத்தான் எழுதி இருந்தார்…மாமன் – மச்சானாக பழகியவர்கள் ஏன் பாகிஸ்தான் கேட்டனர்.. நீங்கள் வேறு நாங்கள் வேறு சேர்ந்து வாழவே முடியாது எனச் சொன்னது யார் ஆர்.எஸ்.எஸ்காரர்களா.. ? முகமது அலி ஜின்னா மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்கள் தானேபிரிவினையின் போது சொன்னார்கள்…ஒரு தாய் மக்கள் என காந்தியடிகள் எவ்வளவோ கெஞ்சினாரே…கேட்டார்களா இந்த முஸ்லீம் லீக் அன்பர்கள் ….முஸ்லீம்களை நம்பிதானே காந்தியடிகள் ஏமாந்து போனார்..பாகிஸ்தான் என்ற தனி நாடு வேண்டுமா என்று ஆங்கிலேய அரசு இந்திய முழுவதும் உள்ள மக்களிடம் ஒட்டெடுப்பு நடத்தாமல் முஸ்லீம்களிடம் மட்டும் வாக்கெடுப்பு நடத்திய போது, காந்தியடிகள் என்ன நினைத்தார்..பாரத முஸ்லீம்கள் பாகிஸ்தான் வேண்டாம் என்றே ஓட்டு போடுவார்கள் என்று தானே நினைத்தார்..காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் இந்தியா முழுவதும் முஸ்லீம்களிடம் சென்று நம்முடைய பிறைநதிபுரத்தான் அவர்கள் சொன்ன மாதிரி இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்று , மாமன் – மச்சான் சேர்ந்து வாழ்வோம் என பலவாறு சொன்னார்கள்…ஆனால் முஸ்லீம் லீக் என்ன செய்தது.. ? அவர்கள் வேறு. நாம் வேறு.சேர்ந்து வாழவே முடியாது என சொன்னார்கள் . காயிதே மில்லத் போன்ற தேச விரோத முஸ்லீம் தலைவர்க்ள் பாகிஸ்தான் வேண்டும் என்றுதானே பிரச்சாரம் செய்தனர்…முடிவில் என்ன ஆயிற்று.. ?

பெரும்பான்மையான முஸ்லீம்கள் (அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் தான் மிகப் பெரியளவில்) பாகிஸ்தான் வேண்டும் என்றே ஒட்டு போட்டனர்…. மகாத்மா காந்தி ஏமாற்றப்பட்டார்…இந்த பழம் பெரும் தேசம் மதத்தின் பெயரால் பிளக்கப்பட்டது…பாரத மாதாவின் கரங்கள் துண்டிக்கப்பட்டது….யாரால்.. ? முஸ்லிம் மதவாதம் தேசத்தை பிளந்தது.. ?மறுக்க முடியுமா.. ? ஆனால் அந்த பிரிவினைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த காயிதே மில்லத் பெயரில் தமிழகத்தில் மாவட்டம் வேறு … ?என்ன கொடுமை இது.. ?

பிறைநதிபுரத்தான் அவர்கள் சுதந்திரப்போராட்ட வீரர் வீர தாமோதர சாவர்க்கரை பற்றி குறிப்பிடும் போது சுதந்திரம் என்ற வார்த்தையே தன் வாயால் வராது என்றும்,தேசத்திற்காக தன் கொண்ட கொள்கையையே கைவிடுவதாக சரணாகதி சாசனம் எழுதி கொடுத்தவர் என அப்பட்டமான ஒரு பொய்யை கூறி உள்ளார்..தனது 27 வயதிலே 50 ஆண்டுகள் ஆங்கில அரசால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்…தனக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போது சாவர்க்கர் சிரித்து விட்டார்…உடனிருந்த காவலர் ஏன் ஜயா சிரிக்கின்றீர் என கேட்டபோது, 50 ஆண்டுகள் எனக்கு சிறைத்தண்டனை விதித்துள்ள இந்த அரசு இன்னும் சில வருடங்களில் அகற்றப்பட்டு விடும்…போயும் போயும் இவர்கள் எனக்கு 50 ஆண்டுகள் எனக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளனர், இதை நினைத்து பார்த்த போது சிரிப்புதான் வருகிறது என கேட்ட தியாகி அவர்….அந்தமானில் தனிமை சிறையில் (காலபாணி)அடைபட்ட சாவர்க்கர் சக கைதிகளை முஸ்லீமாக மாற்றும் நிலை கண்டு வெகுண்டு எழுந்து சுத்தி முறையில் தாய் மதம் மாற செய்தார்… 1924 ஜனவரி-6 அன்று விடுதலை செய்யப்பட்டபோது அரசியலில் ஈடுபடக்கூடாது மற்றும் ரத்னகிரியை (மகாராஷ்ட்ரா ) விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு 1924-37 வரை ஏறத்தாழ 13 1/2 வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.. அதிலிருந்து விடுதலையான சாவர்க்கார் ஹிந்து மகாசபை- என்ற கட்சியை ஆர்ம்பித்தார்..1943-இல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாவர்க்கரை சந்தித்த பின் சாவர்க்கரின் அறிவுரையின் பேரிலே இந்தியாவை விட்டு வெளியேறி இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார்…. தமிழில் வந்த மோகன் லால், பிரபு நடித்த ‘சிறைச்சாலை ‘ என்ற திரைப்படத்தில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு கதாபாதிரமாக சாவர்க்கரை சிறிது நேரம் காட்டியிருப்பர். முஸ்லீம்களை அளவுக்குஅதிகமாக திருப்தி செய்யும் போக்கினை மட்டுமே கண்டித்த சாவர்க்கார் கடைசி மூச்சுவரை தேச பக்தனாகவே வாழ்ந்தார்….1962 சீனா போரின் போது நமது நாடு தோல்வி அடைந்தது…அப்போது ஜெனரல் கரியப்பா சொன்னார் ‘ சாவர்க்கர் நமது நாட்டின் ராணுவத்தை நவீன மையமாக்க சொன்னார்,மேலும் சீனாவை சமாளிக்க நமது பாதுகாப்பை பலப்படுத்த அவர் சொன்ன யோசனைகளை கேட்டிருந்தால் இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது ‘ ஒரு அப்பழுக்கற்ற சுதந்திர போராட்ட வீரனாகவே வாழ்ந்த அவரின் உருவப்படம் பாராளுமன்றத்தில் திற்க்கப்பட்டது , காங்கிரஸ்காரர்களால் மறைக்கப்பட்ட அவரது வரலாற்றிற்க்கு காலம் கடந்த சிறிய அஞ்சலியாகவே இருக்கட்டும்…

ராஜேஷ் பி.எஸ்.

rajeshshree@yahoo.com


தலித் மக்களின் ஒரே பிரதி நிதி தொல் திருமா….

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பு அளித்துவிட்டாலும் சில விசயங்களை உற்று

நோக்கும் பொழது, தமிழ் நாடு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் ‘விடுதலைச் சிறுத்தைகளின் ‘

தலைவர் திருமா அவர்கள் கிட்ட தட்ட இரண்டரை லட்சம்(2,55,773) ஒட்டுகள் வாங்கியது மிகப்

பெரிய விசயம். அதுவும் திமுக/காங்கிரஸ், அதிமுக/பாசக வலுவான கூட்டணிகளை எதிர்த்து ஒர் தனி

மனிதனாக போராடி இவ்வளவு அதிகமான ஒட்டுகளை வாங்கியது மிக மிக பாராட்டப் பட வேண்டிய

மற்றும் உற்று நோக்கப் படவேண்டிய செயல். சமூகத்தில் சரிசமான உரிமைகள் மறுக்கப் பட்டு வரும்

தலித் மக்கள் ‘தொல் திருமாவை ‘ அங்கீரத்து விட்டது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. வடக்கே திரு ராம்விலாஸ் பஸ்வான் போல தெற்கே தொல் திருமா வளர்ச்சி கண் கூடாக தெரிகிறது….தலித் மக்களின் கரிசனமான மக்களின் ஒட்டு வங்கியை சேகரித்து வைத்து உள்ளதை மனதார பாராட்டி மேலும், மேலும்

மீண்டும் வளர தொல் திருமாவிற்கு வாழ்த்துகள்!!!வரும் 2006 சட்டமன்ற தேர்தலில் திரு கலைஞர் கருணாநிதி மீண்டும் தொல் திருமாவை சேர்த்துக் கொண்டு தலித் மக்களுக்கு குறைந்தது 10 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தால் மிக மிக பயனாக இருக்கும்…

மயிலாடுதுறை சிவா…

mpsiva23@yahoo.com


Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்