ஓவியத்தின் குறுக்கே கோடுகள்

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

வெங்கட் சாமிநாதன்


ஒரு புதிய அறிமுகம். ஓவியத்தின் குறுக்கே கோடுகள் என்பது புத்தகத்தின் தலைப்பு. நண்பர்கள் கொடுத்த நிர்ப்பந்தத்தின் பேரில் எழுதிய பெரும்பாலும் சின்ன, ஒரு சில நீண்ட குறிப்புகளின் தொகுப்பு. குறிப்புகள் ஒன்றும் ஏதோ பெரிய விஷயத்தைப் பற்றி எழுதுவதான தோரணையில் எழுதப்பட்டவை அல்ல. அவ்வப்போது மனதில் பட்டவை, தன்னைச் சுற்றி நிகழ்பவை பற்றியவை. தான் வேலை தேடி வந்து, இப்போது வாழும் அமெரிக்கா வாழ்வில், தான் விட்டு வந்த தன் ஊர், உறவினர் பற்றிய நினைவுகள் எல்லாம். பெயர் பாரி பூபாலன். ஈழத்தமிழரோ என்று யூகிக்கத் தோன்றியது. தவறு.

பெரிய புத்தகம் இல்லை. சின்னது தான். மொத்தமே 96 பக்கங்கள். ஒரு கவிதைத் தொகுப்பு வேண்டும் நீளமே. இதில் பூபாலனை எழுதத் தூண்டிய திண்ணை.காம் நண்பர், கோ.ராஜாராமின் பதிப்புரை, இந்திரா பார்த்தசாரதியின் முன்னுரை, திண்ணை.காமில் இவை வெளிவந்தபோது உடனுக்குடன் படித்து அவ்வப்போது உற்சாகப்படுத்திய கர்நாடகம் வாழ் தமிழர் (வேறு யார்!) நம்ம பாவண்ணனின் அணிந்துரை, ‘மனத்தை அசைக்கும் பதிவுகள்’, (எங்கு பார்த்தாலும் அங்கு பாவண்ணனின் பிரஸன்னம்! இவ்வளவும் அவரால் எப்படி சாத்தியமாகிறது!) பின் பாரி பூபாலனின் ‘என்னுரை’ ஆகியவையும் 96 பக்கங்களுள் அடங்கும்.

ஒவியத்தின் குறுக்கே கோடுகள் என்று புத்தகத்தின் தலைப்பிருந்தால், ஒவியத்தைப் பற்றித்தான் இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை. சிறு வயதில் தன்னை மற்ற சிறுவர் சிறுமியர் எதிரே தன் பலவீனத்தைச் சுட்டி சுற்றியிருந்தோர் முன்னே கேலிக்கிரையாக்கிய அண்ணனைப் பழிவாங்க அவன் வரைந்திருந்த ஒவியத்தின் குறுக்கே கோடுகள் தீற்றி பாழாக்கியதை இன்று நினைத்து, ‘என்ன சின்னத் தனம் செய்துவிட்டோம்’, என்ற பச்சாத்தாபம்; மகிழ்ச்சி எங்கே என்று தேடவேண்டியதில்லை, அது நம்மில் நாமே தேடிக்கொள்வது என்று கிடைத்த ஓய்வு நாட்களில் என்ன செய்வது என்று ஒருவர் புலம்புவதும், மற்றவர் செய்து மகிழ நிறையக் கொண்டிருப்பதும் அலுவலக நண்பர்களிடையே காண்பது தான். மழை பெய்து கொண்டிருக்கும்போது, தூர வெட்டவெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் காரின் டிக்கியை உடைத்து பெட்டியைத் திருடி கவலையற்றுத் தள்ளிக்கொண்டு போகும் திருடனை மாடி ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்வதறியாது திகைத்தது ஒரு நிகழ்ச்சி.

தினம் செய்தித்தாளை விட்டெறிந்து செல்பவன் ஒரு நாள் நன்றி சொல்லும் சீட்டொன்றும் மறுநாள் “நன்றி கொடுங்கள்” என்று ஒரு சீட்டும் வைத்ததற்கு 20 டாலர் செக் எழுதி உறையில் வைத்தது; (என் நண்பர் ஒருவர் லி·ப்ட் இயக்கும் பையனுக்கு ஒரு டாலர் கொடுக்க, அவனோ, “Oh, this is an Indian tip! thank you” என்று சொல்லி வாங்கிக் கொண்டானாம்- இது 1959 கதை) பணவீக்கம் 20 டாலராகியிருக்கிறது என்று நினைக்கிறேன். தினம் நியூ ஜெர்சியிலிருந்து நியூ யார்க்குக்கு ரயில் 3 மணி நேரம் பிரயாணம் செய்து அலுவலகம் செல்லவேண்டிய நிலையை நினைத்து ஒருவர் வருந்த இன்னொருவருக்கு அது போக வர தினம் 6 மணி நேரம் தனக்கு படிக்கக் கிடைக்கும் அவகாசமாகும் வேடிக்கை; டெல்லியிலிருக்கும் போது காஜியாபாதிலிருந்தும் ·பரீதாபாதிலிருந்தும் ரயிலில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பிரயாணம் செய்து பின் பஸ்ஸ¥க்குக் காத்திருந்து பயணம் செய்து அலுவலகம் வர காலை 7 மணிக்கு வீடு விட்டுக் கிளம்பி இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பும் அவஸ்தையைக் கண்டு நான் பரிதாபப்படுவதுண்டு. ஒவ்வொருவர் ஜாதகம் அப்படி இருந்தால் அமெரிக்கா போனாலும் ஜாதக கர்மாவிலிருந்து தப்பிக்க வழி இல்லை. அங்கும் இதே கூத்து தான் தொடரும் போலும்.

தமிழ் நாட்டில் எதற்கெடுத்தாலும் எங்கே போனாலும் லஞ்சம் கொடுக்கவேண்டியிருப்பதைச் சொல்லிக்கொண்டிருந்தவர் தனக்கு green card கிடைக்க பிறந்த தேதிச் சான்றை, என்ன செலவானாலும் வாங்கி அனுப்பச் சொல்லியிருக்கிறேன் என்கிறார். ஒரு கட்டுரையில் கோடை காலத்தில் ஒரு மணி நேரம் முன்னுக்குத் தள்ளியும் பனிக்காலத்தில் ஒரு மணி நேரம் பின்னுக்குத் தள்ளி வைப்பதால், எவ்வளவு பணம் மிச்சமாகிறது நாட்டின் பொருளாதாரத்திற்கு என்று ஒரு கணக்கு சொல்கிறார். பெஞ்சமின் ·ப்ராங்க்ளின் 215 ஆண்டுகளுக்கும் முன் கொணர்ந்த சீர்திருத்தம் என்கிறார். எனக்குப் புரிவது கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும் சுவாரஸ்யமான தகவல். புரிவதே இங்கு எனக்கு கஷ்டமாக இருக்கிறதே. இதை அனுசரித்து அமெரிக்காவில் வாழ்வதும் பொருள் சம்பாதிப்பதும் எவ்வளவு கஷ்டம்? லஞ்சமோ பஞ்சமோ, தமிழ் நாடே நிம்மதி என்று தோன்றுகிறது. அங்கே பேப்பர் போடுகிறவனே 20 டாலர் (இன்றைய ரேட்டில் ருபாய் 900) அதட்டி வாங்குகிறபோது, தமிழ் நாட்டில் லஞ்சம் வாங்கும் தமிழினத் தலைவர்களும் அதிகாரிகளும் ஈர நெஞ்சம் கொண்டவர்கள் என்று சொல்லத்தான் வேண்டும். இங்கே உள்ள ரேட் என்ன இருந்தாலும் கம்மி தான். ” ஏன்? நாங்க மனுஷங்க இல்லியா? அநியாயமா எதுவும் செய்யமாட்டோம்” என்று அவர்கள் சொல்லக்கூடும். வாங்கும் லஞ்சத்திலும் மனித நேயம் கொப்பளிக்கவில்லையா இங்கு!

மிகவும் மனத்தைப் பிழியும் ஒரு சம்பவம். விடி காலையில் குழந்தையைப் பாதி உறக்கத்தில் எழுப்பி பாலைக் கொடுத்து அதை குழந்தைப் பார்த்துக்கொள்ளும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் ஒரு இளம் தம்பதியினர். ஏனெனில் அவர்கள் இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். திரும்பி வர பத்து மணி நேரம் ஆகும். குழந்தையின் உறக்கத்தைக் கெடுத்து இப்படி வேலைக்கு விரைந்து சம்பாதிக்கவேண்டுமா? என்றும் மனத்தில் உளைச்சல். லாலி பாப் வாங்கி வருவதாகச் சொல்லி குழந்தையைச் சமாதானப்படுத்துகின்றனர். அவர்கள் சென்ற அலுவலகம் பயங்கர வாதிகளின் தாக்குதலுக்கு இரையாகி தரை மட்டமான உலக வர்த்தக மையம் கொண்டிருந்த இரட்டைக் கோபுரங்கள். அதில் உயிர் இழந்த மூவாயிரத்து சொச்ச மனிதர்களில் இந்த இளம் தம்பதியனர் இருவர். அன்று மாலை அக்குழந்தை, பகலில் நடந்ததையெல்லாம் சொல்லும் ஆர்வத்துடன் லாலிபாப்புடன் வரும் அப்பா அம்மாவுக்காக எவ்வளவு நேரம் எதிர்பார்ப்புடன் காத்திருந்திருக்கும்.

எழுத உட்கார்ந்தால், எந்நாட்டிலும், யாருக்கும் சொல்ல நிறையவே இந்த வாழ்க்கை அளிக்கும். சோகங்களும் மகிழ்ச்சியும், கணங்களின் அளவிலேயானாலும் நிறைய இருக்கும்.

வெங்கட் சாமிநாதன்/29.7.06
—————————————————————————————————————————–

ஒவியத்தின் குறுக்கே கோடுகள்: (கட்டுரைத் தொகுப்பு) பாரி பூபாலன்: எனி இந்தியன் பதிப்பகம்: 102, 57 P.M.G காம்ப்ளெக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி. நகர், சென்னை-17 விலை ரு: 40

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்