ஒளவை – பகுதிகள் (7,8)

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue

இன்குலாப்


ஐந்திணை அரங்கு

(அதியனின் அவையில் ஒரு கூத்தரங்கம். பார்வையாளர்களாக அதியன், அவன் துணைவி, அரசியல் சுற்றத்தினர். திரைச்சீலைக்குப் பின்னிருந்து ஒளவையின் குரல் ஒலிக்கிறது.)

ஒளவை : வாழிய அதியன்… வாழிய தகடூர்.

பாணர் குழு : குன்றுகள் ஏறிச் சமவெளி பாவும்

முகில்களோடு நாங்களும் நடந்தோம்

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்

பாலை எங்கும் பாடித் திரிந்தோம்

கூடி வாழ்ந்த தொன்மைக் குடிகள்

போரில் மோதிச் சிதைதல் கண்டோம்.

வாள்முனை சிவந்து வடுப்படும் வாழ்க்கை

காதல் சுனையில் வேட்கை தணிக்கும்.

வாழ்க்கை விரித்த வண்ணம் அனைத்தையும்

யாழில் குழலில் வார்த்துக் கொண்டோம்.

காந்தள் பூக்கள் வண்டுகள் இசைத்தது

யாழ் நரம்புகளில் மீண்டும் அதிரும் ‘

முல்லை முனைகளில் தும்பி ஊதியது

குழலின் துளைகளில் மீண்டும் உருகும் ‘

மருத நிழல்களில் குருகு கண்டது

முழவின் கண்ணில் மீண்டும் நடக்கும் ‘

திரும்பும் அலைகளில் தேம்பும் செய்தியை

நெய்தல் பறைகள் மீண்டும் நினைக்கும் ‘

பாலை வெளியில் கானல் பரப்பின்

ஓலம் … எம் தடாரி மீண்டும் ஒலிக்கும் ‘

குறிஞ்சி

தலைவன் : யார் கேட்பார் என் நெஞ்சின் குரலை ?

(இலைகள் அசைகின்றன)

என் துயர் கேட்க உங்கள் நெஞ்சில் அன்புண்டோ ?

பின்குரல் : (இலைகளின் சலசலப்புடன்)

அன்பில்லாமலா நாங்கள் பூக்கிறோம்.

காய்க்கிறோம்…. கனிகிறோம். மீண்டும் முளைக்கிறோம்.

எங்கள் நிழலின் ஈரத்தை, மிதித்து

அன்பிலை என்கிறாய் அடுக்குமா தலைவா ?

தலைவன் : இலைகளே, சற்று அமைதியாய் இருங்கள். எல்லோரும்

சலசலத்தால் எதை நான் கேட்பேன் ? அன்பில்லாமல்

போனார்கள் அனைவரும்….

பின்குரல் : என்னதான் நடந்தது எங்களிடம் சொல்லேன்.

தலைவன் : இரவுதோறும் இந்த மரத்தடியில் தானே

எங்களது சந்திப்பு எப்போதும் நடந்தது.

இனிமேல் என்னை அவள் சந்திக்க மாட்டாளாம்,

அடியில் கிடக்கும் சருகுகளோடு

சருகாய்க் கிடந்து சாக வேண்டியதுதான்,

எனது புலம்பலை யார் கேட்பார்கள் ?

பின்குரல் : புல்வெளி கேட்கும். ஏன் சந்திக்க மாட்டாளாம் ?

தலைவன் : சந்திப்புத் தொடர்வது தாய்க்குத் தெரிந்ததால்…

அஞ்சுகிறாளாம்… தோழி சொன்னாள்.

பச்சை மண்பானையில் மழை மொழிந்தது போலக்

கரைந்தேன்.

இந்த காதல் வெள்ளத்தை

எப்படி நீந்திக் கரைசேரப் போகிறேன் ?

இதோ, அந்த உச்சிக் கிளையில் உட்கார்ந்திருக்கும்

மந்தி, தன் குட்டியை மார்புற அணைக்கிறதே ‘

அப்படி என் நெஞ்சை ஆரத் தழுவி

என் குறை கேட்பார் இல்லாதபோது

எதற்காக நெஞ்சே ஆர்ப்பரிக்கிறாய் ?

பின்குரல் : அணைப்பு வேண்டுமா அன்பு வேண்டுமா ?

தலைவன் : இரண்டும் வேண்டும்….

(மரத்தின் பின்னிருந்து ஒளவை வருகிறாள்)

ஒளவை : என்றால்… இது கேள் ‘

வராதே என்றால் வராமல் போவாயோ ?

எதற்காக என்று கேட்கமாட்டாயோ ?

வேலிக்குப் பின் நிற்கும் வேங்கை மரத்தில்

இரவில் நிழலில் நீங்கள் இருந்ததைப்

பால்நிலா பார்க்குமே ‘

பார்த்த செய்தியை

மீன்களுக்கெல்லாம் விளம்பாமலா போகும் ?

இலைகள் கேட்குமே ‘ காற்றிடம் சொல்லுமே.

காற்று எல்லார் காதிலும் பேசுமே ‘

அதனால்

உன் நிலையில் நின்று உறவை வளர்க்காதே ‘

வேலியில் நிற்கும் அவள் நிலை நினைத்துப்பார்….

தலைவன் : மணந்து கொண்டால்…

ஒளவை : ஆமாம் அவளுக்கு அதுதான் நோக்கம்…

பெற்றோர் வேலி பழையதானது….

திருமணம் என்ற புதுவேலி… போடு.

முல்லை

(புல்லாங் குழலிசை மெல்ல ஒலிக்கத் தொடங்குகிறது. மழைத்துளி வீழும் ஒலி சிறியதாய்த் தொடங்கிப் பெரியதாய்ப் பரவுகிறது. மழை ஓசை அடங்கும்போது மீண்டும் குழலோசை)

பின்குரல் : காயாமரம் சூழ்ந்த கறுத்த குன்றில்

சரக்கொன்றை மலர்கள்

சரம் தொடுப்பது போல்

மலைதோறும் மின்னற் கொடிகள் இறங்கின.

தலைவி இருக்கும் தேயம் நோக்கி

முகில்கள் நகர்ந்தன… தன்னையே புதைத்துப்

பெய்யத் தொடங்கியது —- இதுவரை

பெய்யாத வானம்.

வளையலின் நிழற்கோடும் கையில் புலப்பட

மேனி மெலிந்தாள்… வளையல்களும் நழுவின.

அழத்தொடங்கினாள் தலைவி… எதிரொலி போல

குழல் ஊதினர் கோவலர்….

(குழலிசை…. தலையில் பனை ஓலைப் பறியை வைத்துக் கொண்டு தலைவி வருகிறாள்…. குழலிசை… சிறுமின்னல்கள்… சிறுசிறு இடி ஒலிகள்)

தலைவி : துளித்துளியாகத் தூவியவானம்

வெறிகொண்டதுபோல் வெள்ளமாய்க் கொட்ட

பின்குரல் : அதனால் என்ன ? அதனால் என்ன ?

கார்காலம் இது, மழைபெய்யாதோ ?

தலைவி : முகிலின் முதல் துளி மண்ணைத் தொடுமுன்

உன்னைத் தொடுவேன் என்று உறுதி தந்தார்.

பின்குரல் : காதல்தானே…. அந்த நேரத்தில் அப்படித்தான்

சொல்வான்.

தலைவி : பெய்த மழையிலே பெருகிய வெள்ளம்

காட்டாறாகிக் கரை புரண்டோடியது…

அவையில் இருந்து அதியமான் அஞ்சி

இரவலர்க்கு ஈந்து கொண்டிருப்பதுபோல்

பின்குரல் : இடையறாமல் ஆறு ஓடியதோ ?

தலைவி : ஆமாம். வழியில் காட்டாறு கரையை இடித்ததால்

மண்ணில் புதைந்த மாமரத்தின் வேர்களும்

வெளிப்பட நின்றது. வீசும் காற்றில்

அடிமரம் ஆடியது, கிளைகள் ஆடின,

பூந்தளிர் ஒன்றும் நடுங்கியது. அதுபோல

பின்குரல் : அதுபோல்

தலைவி : எனது நெஞ்சம் நடுங்கியது, பிரிவை

எப்படி ஆற்றி உயிர்தரித்திருப்பேன் ?

பிரிவால் நொந்தது உண்மை என்றால்

செத்திருக்க வேண்டும். சாகவில்லையே ‘

சாகாததனால்….. பிரிவால் நோகாமலேனும்

இருத்தல் வேண்டும்… உம் உம்… இல்லை.

பின்குரல் : சாகவும் இல்லை… உயிர்த்திருப்பதன்றி மகிழவும்

இல்லை….

தலைவி : வீசும் காற்றில் பசுந்தளிர் ஒன்று நடுங்குதல் போல…..

(மீண்டும் காற்று… மின்னல்… மழை… குழல் ஒலி.

ஒளவை வருகிறாள்)

ஒளவை : அழல் தொடங்கினளே ஆயிழை. அதன் எதிர்

குழல் தொடங்கினரே கோவலர்….

(மின்னல், மழை, இடி—குழலிசையோடு முடிகிறது )

மருதம்

(மருதப் பண் ஒலிக்கிறது. உழவு மாடுகள் கத்தும் ஓசை, பறவைகளின் ஒலி. கருக்கல்.

தள்ளாடியவனாய்த் தலைவன் நிற்கிறான். அவன் தோளைத் தொட்டுப் பெண்ணொருத்தி பிரிகிறாள். தலைவன் இரண்டடி முன் வைத்துத் திரும்புகிறான். அவளே மறுபுறம் திரும்பி வருவதுபோல் தோன்றுகிறது. தலைவன் உற்று நோக்குகிறான்.)

தலைவன் : யார் நீ பெண்ணே ‘ துணைவியா அவளா ?

பெண் : அதற்குள் உனக்குக் கண் அவிந்தா போனது ?

தலைவன் : இருளில் எனக்கு முகம் தெரியலையே.

எல்லா முகமும் ஒன்று போலவே ‘

(அருகில் வந்து ஒருபுறம் பார்த்து)

இப்படிப் பார்த்தால் அவளைப் போல.(அவள் மறுபுறம் திரும்ப)

ஓ… அப்படிப் பார்த்தால் துணைவியைப் போல. எப்படிப்

பார்த்தாலும் ஏதோ ஒரு பெண்ணைப் போல். ஓ..உறுதியாய்

நீ ஒரு பெண்தான்.

பெண் : அப்படியாகிலும் அடையாளம் கண்டாயே ‘

தலைவன் : ஓகோ நீயா ? என் அன்பே ‘ ஆருயிரே ‘

பெண் : ஆருயிர் நான் என்றால் அவள் உனக்கு யார் ?

உனது உடம்புக்கு எத்தனை உயிர்கள் ?

தலைவன் : (தனக்குள்) கள்ளின் மயக்கில், நட்டநடு யாமத்தில்

அவளையும் எனக்கு ஆருயிர் என்றேன் போலும்….

(வெளிப்படையாக)

ஆருயிர் ஒன்றுதான். அதுவும் நீதான்

பெண் : நன்றாய்ப் பார்த்துச் சொல்…உன் ஆருயிர் நானா ?

தலைவன் : ஆமாம்…ஆமாம்.

பெண் : இப்படிப் பார்த்துச் சொல் ‘ உன் அன்பே நானா ?

தலைவன் : ஆமாம்….ஆமாம்.

பெண் : இப்பொழுது சொல் உன் இல்லக்கிழத்தி நானா ?

தலைவன் : ஆமாம்…ஆமாம்.

பெண் : கண்ணை விரித்துச் சொல். உன் காமக் கிழத்தி நானா ?

தலைவன் : ஆமாம்….ஆமாம்.

(பெண் இப்புறமும் அப்புறமும் திரும்பத் திரும்ப தலைவன் சுற்றுகிறான். கீழே சாய்கிறான். பெண் சிரிக்கும் ஓசையும் விம்மும் ஓசையும் கேட்கிறது.

முதுகுடன் முதுகு சேர்த்து ஒரு பெண் இரண்டு முகத்துடன் காட்சி தந்தவர்கள் இப்பொழுது இரண்டு பெண்களாகவே பிரிகிறார்கள்)

பெண்-1 : என்று நான் மனைவி ஆனேன் ஆனேன்

பெண்-2 : அன்று நான் பரத்தையும் ஆனேன்…ஆனேன்..

பெண்-1 : ஒருத்திக்கு ஒருவன் ஆமாம் ஆமாம்

பெண்-2 : ஒருவனுக்கு ஒருத்தி இல்லை இல்லை

பெண்-1 : மனைவிக்குக் கற்பு வேண்டும் வேண்டும்

பெண்-2 : கணவனோ கற்பைத் தாண்டும் தாண்டும்….

பெண்-1 : மனைவிக்கு ஆடவர் உயிர்தான் உயிர்தான்….

பெண்-1 : ஆடவர்க்கு உயிரோ பொருள் தான் பொருள் தான்…

(கீழே சாய்ந்த தலைவன் எழுகிறான்)

தலைவன் : சற்றுக் கண்ணயர்ந்தால் தலைக்கு மேலே

ஆடுவீர்களோ ? நான் விடமாட்டேன்….

மாடுகள் நீங்கள்… வசக்கி நுகத்தடியில்

மாடுவேன்…என் ஆண்மை காட்டுவேன்.

பாருங்கள்….

(நுகத்தடியில் பூட்டிச் சாட்டையால் அடிப்பது போலப் பாவனை காட்டுகிறான்)

ஆமாம்…அப்படி வாருங்கள் வழிக்கு.

வழிக்கு என்றால் ஆடவர் வழிக்கு.

எனக்கு இன்பம் வேண்டும் என்றால்

மனையில் வைத்து உன்னைக் கொஞ்சுவேன்.

மனையில் இன்பம் தெவிட்டியது என்றால்

சேரிக்கு வருவேன். உன்னைத் தேடி.

மனையில் இருந்தாலும் தெருவுக்கு வந்தாலும்

என் தேவைக்கே நீங்கள் இருவரும்.

மாடுகளே ‘ உங்களை வசக்கி எடுப்பேன்….

(மாடுகள் போல் நடிக்கும் பெண்கள் தலைவனை நோக்கி முட்டுவதுபோல் பாய்கின்றனர்)

தலைவன் : என்னதான் உங்களுக்கு வாரி இறைத்தாலும்…நன்றி

மறந்து என் மேல் பாய்வீர்…

(ஒரு பெண்ணைப் பாய்ந்து பிடித்து நுகத்தடியில் மாட்டுகிறான். மற்றொரு பெண் தப்பி ஓடுகிறாள்)

ஓடுகாலி ஓடட்டும். மனைக்கு அடங்கிய மனைவியாய்

இருந்து என்னை மகிழ்வி… தேவைப்பட்டால் அவளைத்

தேடிப் பிடிப்பேன் ‘

பெண்-1 : எப்படிப் பொறுப்பேன். என் கணவர் அந்த

வம்பப் பரத்தையின் வலையில் கிடப்பதை.

அவளாய் அவரை அழைக்கவில்லையாம்…

அவர்தாம் அவள் பின் அலையாய் அலைகிறாராம் ‘

சந்தனம் தொட்ட கைகள்…மிதிபடும்

சேற்றை எடுத்துப் பூசிக் கொள்ளுமோ ?

பெண்-2 : என்னை மிதிபடும் சேறென்றாளாம்.

சந்தனம் அவளென்றால் தலையிலிருந்து

கால்வரை அவளையே தடவிக் கொள்ளட்டும்…

எதற்காகத் தலைவன் என்னிடம் வருகிறான் ?

துறையெல்லாம் வெள்ளை நுரைமலர் குவித்து

ஆற்றில் புது வெள்ளம் நேற்று வந்தது.

இடுப்பில் ஆம்பல் கொடியை உடுத்தித்

துறைக்கு வருவேன்… தலைவி அஞ்சினால்

ஆறு நடக்கும் வழியை அடைத்து

அதியன் காக்கும் ஆநிரை போலக்

காக்க ‘ கறைபடாது தன் கணவன் மார்பையே ‘

கிளையாரோடும் கணவனைக் காக்க காக்க.

நெய்தல்

(கடல் அலை புரளும் ஓசை..நெய்தற்பண்… ஐலசா பாட்டு.. மெல்ல இருள் கிழக்குத் திசையில் படிகிறது.. தேர் ஒன்று மணி ஒலிக்க நகரும் ஒலி. பெண் ஒருத்தி அலை ஓசையைக் கவனித்தவளாக நிற்கிறாள்.)

பெண் : ஆர்ப்பரிப்பது எது ? என் நெஞ்சா கடலா ?

பின்குரல் : கடல் அலை என்றால் காலை நனைக்கும்.

நெஞ்சில் அலை என்றால் கண்ணைக் கரிக்கும்.

நனைந்து போவது காலா ? கண்ணா ?

பெண் : உற்றுப்பார் என் உடம்பு முழுவதும்…

கண்ணீர்க் கோடுகள் ஈரப்படுத்தும்

பிரிவுப் பெருமூச்சு வெப்பப்படுத்தும்.

பின்குரல் : வழக்கம் போல் காதலர் வராமல் போனாரோ ?

பெண் : நிலத்தின் கண்கள் போல் நெய்தல் பூத்திருக்கப்

புன்னை நிழலில் தான் புகலிடம் தேடினோம்…

மேட்டுக்கரையில் மோதும் அலைகள்,

அவ்வப்பொழுது நுரைத்தலை உயர்த்திப்

பார்ப்பதும் மறைவதுமாய் நாழிகை கழிந்தது….

பின்குரல் : புன்னை நிழலில் புகலிடம் தேடியதை

அன்னையின் காதில் அலைகள் கூறினவோ ?

பெண் : ஆமாம்… அதனால் இல்லம் சிறையானது.

கப்பல்கள் அசையும் துறைமுக இல்லத்தில்…

கள்ளுள்ள சாடியாய்… என் காதலும் நானும்.

பின்குரல் : சாடியே அழகு ‘ கள்ளுள்ள சாடி

இன்னும் அழகு ‘ கண்ணுக்கு மயக்கம்…. ‘

நாட்பட நாட்பட கள்ளின் மயக்கம்

கூடுவது அன்றிக் குறைவதில்லை….

மூடப்பட்ட சாடியில் இருப்பதே

கள்ளுக்கும் நல்லது காதலுக்கும் நல்லது.

பெண் : அருந்தாத கள்.. அழகான சாடி…

இருந்தால் என்ன ? உடைந்தால் என்ன ?

(சற்றுத் தணிந்த குரலில்)

உனக்கொன்று சொல்வேன் ‘ ஒருவருக்கும்

சொல்லாதே ‘

சிறைகாக்கும் காவலை நாங்கள் மீறினோம்…

மாலையில் இந்தச்சோலையில் மயங்கினோம்.

பின்குரல் : ஒருவருக்கொருவர் கள்ளானீர் போலும்…

பெண் : ஆயினும் என்ன ? அவர் பிரிந்தாரே ‘

நெய்தல் கூம்பியது ‘ கிழக்கில் நிழல் ஒழுகியது.

மேலைத் திசையில் குன்றுகள் சிவந்தன…

வெப்பம் தணிந்தது பெருமணல் வெளியும் ‘

கடற்கரைச் சோலையில் ஒளிசெய்த கதிர்கள்

மறைந்தன.. பொலிவிழந்து போயின மலர்களும் ‘

உடலில் மலிந்த காதல் உணர்வும்

தணிந்திலேன்..காணாது தலைவர் செல்லும்

திசை நோக்கித் தொழுதேன்… மணி ஓசை மங்கத்

தேரும் மறைந்தது…

ஊர் என்னவாகும் ?

காதலரோடு களிநகை புரிந்து

ஆடிய சோலையும்

இனி

என்னவாகும் ?

பாலை

(பாலைப்பண்–தடாரிப்பறை–புலி உறுமும் ஒலி.

மேடைக்கு வெளிச்சம் வரும்போது புலி வேடமிட்டு ஒருவரும்

மான் வேடமிட்ட ஒருவரும் புலி–மானைத் துரத்துவது போல

நடிக்கின்றனர்.)

பின் குரல் : இந்தக் கானகத்தில் யார் போவார்கள் ?

எங்காகினும் ஒரு பசுந்தளிர் தென்பட்டாமல்

வேட்டையாடித் தீர்க்கும் வெறிகொண்ட ஞாயிறு.

பெருமலைச் சரிவில் பாறைப் பிளவில்

முணங்குவதென்ன ? ஓ…. புலிக்குட்டிகள்….

கண்ணாடித் தோலின் இளஞ்சிவப்புத் தசை தெரியும்…

வெள்ளைப் பிடவமும் சிவந்த வேங்கையும்

பின்னப்பட்டுக் கிடப்பது போல

பாலூட்டும் புலியின் பசியைப் புரிந்த

புள்ளி வாய்கொண்ட ஆண்புலி, மலையில்

கொம்புள்ள ஆண்மானின் குரல் கேட்டு நிற்கும்

கானகம் என்றாலும் காதலனைத் தேடிப்

புறப்பட்ட வெள்ளி வீதியைப் போல

நானும் புறப்படுவேன்…. வேறென்ன செய்வேன் ?

(புலி-மான் வேடமிட்ட பாணர் ஓடும் காட்சி)

(அரை வட்டமாகக் கொக்குக் கூட்டம் பறப்பதுபோல் பாணர்கள் நடிக்கின்றனர்)

பின்குரல் : விடியல் வானுக்குச் சூட்டிய மாலைபோல் வட்டமாய்

நகர்வதென்ன ? வெண்குருகுக் கூட்டமோ ?

(கொக்குக் கூட்டம் பறந்து தரையிலிறங்குவது போன்ற பாவனை)

பின்குரல் : கரையில் எந்தக் காட்சியை எதிர்பார்த்து

அரைவட்டமாக அமர்ந்தீர்கள் ?

அறுவடை தீர்ந்த வயல்களின் மீது

பனிமூட்டம் போடும் பருவத்தில், எந்தக்

காட்சியை எதிர்பார்த்துக் கரையில் அமர்ந்தீர்கள்…. ?

(குருகுகள் பறந்து செல்வது போல் பாவனை)

அந்த

வானம் முடியலாம்… கடலும் முடியலாம்…

வாட்டும், முடிவறியாத வாடைக் காற்று

வேட்கை வித்தின் மேல் வீசியதாலே….

முலைப் பாத்தியில் விழுந்து முளைத்தது.

வருந்தும் நெஞ்சில் கன்றாய் வளர்ந்தது.

ஊரார் பழிச்சொல் கிளையாய் விரிந்தது.

தீராக் காதல் தளிர்களாய்ப் பரந்தது,

புலவர் புகழும் நாணமில்லாத, காதல்

பெருமரம், மண்ணில் நிழலை விரித்தது…

அலர்கள் மலராய்ச் சொறிந்த போதும்

அவர் வரக் காணோம்… அந்தோ, மேனியின்

நலம் அழிந்துபோகப் பசலை நடந்தது

நம் துயரங்கள் தலைவர் அறிவாரோ ?

பொருள் ஒன்றே தேடிப் போனவர் நெஞ்சில்

நம் மனம் போன்ற மென்மை இன்மையின்

நம் உலகத்தை என்றேனும் நினைப்பாரோ….

கூறுங்கள் வெள்ளைக் குருகுக் கூட்டமே…

(மீண்டும் வெண்குருகுகள் பறப்பது போன்ற பாவனை)

(கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பாணர்கள் அரங்கிலிருந்து இறங்கி அதியன் அஞ்சியை வணங்கி நிற்கின்றனர்)

அதியன் அஞ்சி: ஒளவை உங்கள் கலைத்திறன் குறித்துக் கேள்விப்

பட்டிருக்கிறேன். இன்று தான் என் கண் குளிரக்

கண்டேன். ஐந்திணை நிலங்களின் மீதும் மக்களின்

மீதும் எமது ஆட்சி நடைபெறலாம். ஆனால்,

மக்களின் மனங்களை நீங்கள்தாம் ஆள்கிறீர்கள்.

ஒளவை : நன்றி அதியமான் அஞ்சி ‘ மற்ற நாடுகளுக்கு நீ சொல்வது

பொருந்தலாம். ஆனால், உன் தகடூருக்கு அது பொருந்தாது.

இந்த மகிழிருக்கையில் இருப்பதாக நீ கருதவேண்டாம்.

மக்களுடைய மன இருக்கையில் நீதான் இருக்கிறாய்….

பாணர்களாகிய நாம்தாம் உன் புகழ் பாடுகிறோம் என

நினைக்க வேண்டாம். மக்கள் உன் புகழ்தான் பாடுகிறார்கள்.

அதியன் அஞ்சி: அப்படியா ஒளவை ?

ஒளவை : மக்கள் உன்னை அஞ்சத் தகுந்த அரசனாகக் கருதவில்லை.

தமது சுற்றத்தில் ஒருவனாகவே கருதுகிறார்கள்… தமிழகம்

முழுவதையும் காலால் அளந்தோம். மக்கள் மனங்களை

யாழால் அளந்தோம். தம்மில் ஒருவனாகக் கருதப்படும்

தலைவன் இன்று தமிழகத்தில் உன்னைப்போல் ஒன்றிரண்டு

பேர் தாம் இருப்பார்கள். (அதியன் ஒளவையை உற்று

நோக்க) ஆமாம் அஞ்சி. தென் கோடியில் நாஞ்சில்

வள்ளுவன் என்றால் வடகோடியில் அதியமான் அஞ்சி.

ஆமாம்… இருவரும் முடியுடை மூவேந்தரில்லை. குறுநிலத்

தலைவர்கள். ஆனால், உங்களிடந்தாம் நம் முன்னோர்களின்

கூட்டுண்ணும் பண்பு இருக்கிறது. அதனால் நாஞ்சில்

வள்ளுவனை, உன்னை, தொலைவில் வைத்து வழிபாடு

செய்யப்படும் அரசர்களாக மக்கள் கருதவில்லை. அருகில்

வைத்துக் கொண்டாடும் தலைவர்களாகவே கருதுகிறார்கள்.

அதிலும் அஞ்சியே… உனக்காக உன் மக்கள் யாவரும்

எதையும் ஈவதற்கு அணியமாக உள்ளனர். இந்த நாடு

காக்கும் போரில் குடும்பத்துக்கு ஒருவர் களத்தில்

மடிவதற்கும் அஞ்சுவதில்லை.

அதியன் அஞ்சி: ஆமாம்…. இந்த மக்கள் என் மீது காட்டும் அன்பை

நான் நன்கறிவேன். எனது சுற்றம், நட்பு எல்லாம் என்

மக்கள் தாம்.. இந்த மண்ணைக் காப்பதற்காகத் தங்கள்

குடும்பத்தில் ஒருவரையேனும் அவர்கள் ஈந்திருக்கிறார்கள்

என்பதை நான் மறந்திடுவேனா… அவர்கள் கொண்டிருப்பது

எத்தகைய அன்பு ‘ இந்த மக்களுக்காக என் உயிரைத்

தருவதனால் மட்டுமே இந்த அன்பை நான் ஈடு செய்ய

முடியும்.

(ஒளவை திடுக்கிடுகிறாள்)

ஒளவை ‘ இதில் அஞ்சுவதற்கு என்ன இருக்கிறது ‘ மண்புலம்

காக்கும் நாங்கள் நோவில் சாக விரும்பவில்லை. போரில்

மடிவதையே புகழுக்குரியதாகக் கருதுகிறோம். எனது சாவும்

அப்படிப்பட்டதாகவே இருக்கும். அதை நீ இருந்து பாட

வேண்டும்… எனக்குள்ள ஒரே வருத்தம்.. அதை நான்

இருந்து கேட்க முடியாதே என்பது தான்… ஒளவை…

இன்றின் அரசியல் உனக்குத் தெரிந்திருக்கும். வரும்

வழியெல்லாம் போர் முகில்கள் தகடூரை முற்றுகை

இட்டிருப்பதை நீ பார்த்திருப்பாய். ஒன்று செய். நீ உன்

பாணர் கூட்டத்தோடு இங்கேயே தங்கி விடு. எம்

வீரர்களுக்கு உங்கள் யாழாலும் சொல்லாலும்

உணர்வூட்டுங்கள்.

ஒளவை : அதிய ‘ உன் போன்ற அருள் மறவனின் அருகிலிருப்பது

எப்பேர்ப்பட்ட பேறு. உன் அசைவு ஒவ்வொன்றும் எம்

யாழில் இசையாகும். உன் சொல் ஒவ்வொன்றும் எம் நாவில்

பாட்டாகும். ஆனாலும்… இந்தப் பாணர்களைப் பார்.

எங்கள் குழுவில் மூத்த இந்தப் பாணர் தம் அருமை

மனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வந்து

இருக்கிறார். மிக இனிமையாகப் பாடும் இவள் வேறொரு

குழுவில் பாடச் சென்ற தன் கணவனைச் சந்திக்க வேண்டும்

என்று பிதற்றிக் கொண்டிருக்கிறாள்.

இளைஞன் : நான்…நான்

ஒளவை : இவனுக்குக் கூட ஒரு காதலி இருப்பதாகச் சொல்லிக்

கொண்டிருக்கிறான். இவனை யார் காதலிக்கப்

போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.

இளைஞன் : அப்படியெல்லாம் சொல்லாதே ஒளவை…வழி நெடுக…

ஒளவை : வழி நெடுக உனக்குக் காதலியர்களா ?

இளைஞன் : வழிநெடுக என்னைக் காதலித்தவளும் இங்கிருக்கிறாள்…

ஒளவை : பிறகென்ன ? உனக்குப் பிரிவுத் துன்பமே இல்லை…

இளைஞன் : என் அன்னையிடம் கைநிறையப் பொருளோடும்…மனம்

: நிறைந்த காதலியோடும் வருவதாகச் சொல்லி வந்தேன்.

அதியன் : ஒளவை ‘ இவ்வளவு சொல்கிறாயே ‘ உனக்கு யாரும் உறவு

இல்லையா ?

ஒளவை : ஏனில்லை ? இவர்கள் எல்லாம் உறவுகள் தாம்…

இளைஞன் : காதலன் ?

ஒளவை : உன்னைக் காதலித்துவிட்டுப் போகிறேன். அஞ்சாதே. என்

காதல் எல்லாம் பாட்டும் பண்ணுந்தான்…. அதிய ‘ இப்படி

ஒவ்வொருவரும் தங்கள் உறவைக் காண வேண்டும் என்ற

தேட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும்

நீ வரிசை செய்தனுப்பு. மகிழ்ச்சியோடு செல்வோம்…

அதியன் : நீயும் சென்று விடுவாயா ?

ஒளவை : அதிய ‘ உன் அன்பின் பரப்பிலிருந்து விடுபடுவது

அவ்வளவு எளிதன்று ஆயினும்…என் பாண் சுற்றத்தோடு

சேர்ந்து திரும்புவதுதான் முறை. நான் போய் வலசை

போகும் பறவையைப் போல மீண்டும் திரும்புவேன்.

அதியன் : (சிறிது நேரம் சிந்தித்தவனாக) நல்லது மிகவிரைவில்

உங்களுக்கு உரிய வரிசை செய்து அனுப்புவேன்.

அது வரையிலும் எங்கள் விருந்தைஏற்றுப் பெருமை

சேர்க்கவேண்டும்.

ஒளவை : நன்றி அரசே ‘

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே ‘

காவலர்-1 : என்ன ? அந்தப் பாணர்கள் நேற்றும் அரசரைக் காண

வந்தார்களா ?

காவலர்-2 : ஆமாம். வந்து ஒரு திங்களாகப் போகிறது. அருமையான

கூத்துக்களையும் நிகழ்த்தி அரசரையும் மகிழ்வித்தார்கள்…

அரசர் வரிசை செய்து அனுப்புவார் என்று ஒவ்வொரு

நாளும் எதிர்பார்க்கிறார்கள். கூத்து நிகழ்ந்த அன்று மட்டுமே

அரசர் அவர்களுக்குக் காட்சி தந்திருந்தார். அதன் பிறகு

அவரைப் பார்ப்பதே அரிதாயிருக்கிறது.

காவலர்-1 : நம்மாலேயே காண முடியவில்லை. பல சமயங்களில்

காணாமலேயே போய்விடுகிறார்.

காவலர்-2 : முன்பொருமுறை கொல்லிமலைக் காடுகளில் ஒளிந்திருந்தார்.

நினைவிருக்கிறதா.

காவலர்-1 : அதை எப்படி மறக்க முடியும் ? அதியமான் அஞ்சி, அஞ்சி

ஓடிவிட்டதாகத் திருமுடிக்காரி கூட நினைத்திருந்தார்.

ஆனால் என்ன வியப்பு ‘ காட்டகத்திலிருந்து வேங்கை

புறப்பட்டுவந்தது போல் மன்னர் பெரும்படையோடு தகடூர்

திரும்பினார். பிறகுதான் தெரிந்தது போருக்கான

முன்னேற்பாடுகளை ஒளிவு மறைவாக அவர் செய்திருக்கிறார்

என்பது.

காவலர்-2 : அந்தச் சமயத்தில்தான் புலவர் பெருஞ்சித்திரனார் அரசரைக் காண

வந்தார். அவர் வந்த செய்தியறிந்த அரசர், போர் ஏற்பாடுகளில்

இருந்ததால், புலவரைக் காணாமலேயே வரிசை செய்து

அனுப்பினார்.

காவலர்-1 : ஆனால், புலவர் தன்மான மிக்கவர். காணாமல் தரப்பட்ட

இப்பரிசிலை ஏற்க மாட்டேன் என்று திரும்பிவிட்டர்.

காவலர்-2 : அரசர்தான் என்ன செய்வார் ? பாணர்களுக்கு வாரி வழங்கத்தான்

நினைக்கிறார். ஆனால் போர் முயற்சிகளிலேயே அவர் பொழுதும்

பொருளும் செலவாகிறது. இதில் முறையாகப் பாண் கடன்

தீர்ப்பது எப்படி ?

காவலர்-2 : ஆனாலும், நமது அரசர் இவ்வளவு காலம் நீட்டிக்கக் கூடாது.

காவலர்-1 : (மெல்லிய குரலில்) நமது அரசரிடம் பாணர்களுக்குக் கொடுக்கக்

போதிய பொருள் இல்லை.

காவலர்-1 : அவ்வளவு வறிய நிலையிலா அரசுள்ளது ?

காவலர்-2 : குரல் எடுத்துக் கூவாதே ‘ ஏதாவது ஒரு போரில் வெற்றி பெற்றால்

மட்டுந்தான் கருவூலம் நிறையும். இல்லை நம் பாடே

பெரும்பாடாகிவிடும். (அப்பொழுது இளைய பாணன் வருகிறான்)

இளைஞன் : ஒளவை அனுப்பினாள். இன்றாவது அரசரைக் காணமுடியுமா ?

காவலர்-1 : அட நீ வேறு ‘ நாங்கள் பார்த்தே இரண்டு கிழமை ஆகிறது.

இளைஞன் : உங்களுக்கும் எங்கள் நிலைதானோ ? உங்கள் அரசர் எங்களை

விரைவில் அனுப்புவதாகச் சொன்னாரே ‘

காவலர்-1 : அரசு விரைவில் என்று சொன்னால் அதற்கு ஆண்டுகள் நூறுகூட

ஆகலாம்.

இளைஞன் : அப்போ நாங்கள் காத்துக் கிடக்க வேண்டியது தானா ?

காவலர்-2 : காத்துக் கிடங்களேன். உங்களுக்கு என்ன குறை ?

காவலர்-1 : வயிறு முட்டச் சாப்பிடுகிறீர்கள் ‘

காவலர்-2 : மூக்கு முட்டக் குடிக்கிறீர்கள் ‘

காவலர்-1 : பாட்டாக உடுத்திக் கொண்டு பளபளக்கிறீர்கள்…

இளைஞன் : ஆனால், அரசர் இதற்கு மேலும் வரிசை தருவதாக உறுதி

சொன்னாரே ‘

காவலர்-2 : சொன்னார்…ஆனால் செய்வதற்குக் காலம்நேரம் வேண்டாமா ?

(அப்பொழுது ஒளவை ஏனைய பாணர்களோடு அங்கு வருகிறாள்)

ஒளவை : காவலா ‘ அதியனை இன்றும் காண முடியாதா ?

காவலர் : அரசர் ஏதோ அரசியல் பணியில் இருக்கிறார்….

ஒளவை : என் பாணர் குழுவை எவ்வளவு நாள் நான் தணிவுசெய்வேன் ?

பொறுமையின்றிக் கூவும் அவர்களுக்குச் சொன்னேன்…. ஒருநாள்

கழியலாம், பல நாள் கழியலாம். அதியனோ முதல் நாள் கண்ட

போது என்ன விருப்பத்தில் இருந்தானோ அந்த விருப்பத்தில்

இம்மியும் குறையாது இருப்பவன். அவன் பரிசில் தரும் காலம்

குறுகலாம். நீடிக்கவும் செய்யலாம்…. யானை, தன் வெண்

கோடுகளுக்கு இடையே வைத்த கவளம், எப்படித் தவறிக் கீழே

விழாதோ அது போல அவன் தரும் பரிசிலும் பொய்யாமற்

கிடைக்கும். இப்படியெல்லாம் ஆறுதல் சொன்னேன்.

காவலர்-1 : ஒளவையே ‘ உனக்குத்தான் நம்பிக்கையூட்டுவது போல் ஆறுதல்

சொல்லத்தெரிகிறதே. இன்னும் கொஞ்சம் சொல்லிப் பொறுமையாக

வைத்திருக்கக் கூடாதா ?

ஒளவை : வாயிலோயே ‘ என்ன விளையாடுகிறாயா ? அதியன் எங்களை

விரைவில் வழியனுப்புவதாகச் சொன்னான்.அவனைப் பார்க்கவிடு.

காவலர்-2 : அவரை நாங்களே பார்க்க முடியவில்லை ‘

ஒளவை : நீங்கள் பார்க்காமல் போகலாம்.நாங்கள் பாணர்கள். எங்களுக்கு

யாரும் தடையில்ல.

காவலர்-1 : அவருடைய அரசியல் உங்களைப் பார்ப்பதினும்

இன்றியமையாதது.

ஒளவை : புரியாமல் பேசுகிறாய். எங்களைப் பார்ப்பதால் அவனுடைய

அரசியல் பணியின் சுமையே குறையும்.

காவலர்-1 : நீங்கள் என்ன சொன்னாலும் அவரைக் காண நாங்கள் இன்று

ஒப்புதலளிக்கப் போவதில்லை ‘

ஒளவை : பழமரத்தில் தங்க வெளவால்களுக்கு யார் ஒப்புதல் அளிப்பார் ?

காவலர்-1 : தோட்டத்துக்குரியவன் வேட்டையாடுவான்.

ஒளவை : அதியன் வேலிகளுக்கு உட்பட்ட பழமரம் அல்லன்.

காவலர்-2 : நல்லது…நீங்கள் பழம் இருந்த காலத்தில் வந்திருந்தால் வேண்டிய

மட்டும் விருந்துண்ணலாம்.

காவலர்-1 : பழம் உதிர்ந்து ஓய்ந்துவிட்ட காலம்.

ஒளவை : அதை நாங்கள் பார்த்து முடிவு செய்கிறோம்….. நல்லது…… எம்

பெருமை குன்ற உன்னிடம் மன்றாடும் இரவலர்கள் அல்லர்

நாங்கள். உம் அரசனும் நெடுங்கதவடைப்போன் அல்லன். இந்தப்

பாடலை உன் அரசனிடம் சொல்.

வாயிலோயே ‘ வாயிலோயே

வள்ளல் செவிகளில் சொல்லை விதைப்போம்

நெஞ்சில் நினைத்ததை நிறையப் பெறுவோம்

வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கைப்

பாணர்கள் நாங்கள் ‘ வாயிலோயே ‘

பரிசிலர்க்கு இந்தக் கதவும் அடைபடுமோ ?

குதிரைவீரன் அதியன் அஞ்சி

தன்னை அறியானா ? என்னை அறியானா ?

அறிவும் புகழும் உடையோர் இல்லாமல்

அருமை உலகமும் வறுமை உறுமோ

இளைய பாணர்கள்… இதோ கிளம்பினர்….

கானகம் நுழைந்த தச்சச் சிறுவனுக்கு

வேண்டிய மரத்திற்குப் பஞ்சம் வருமோ ?

வாயிலோயே ‘ வாயிலோயே ‘

வெறுஞ் சோறன்று ‘ நாங்கள் வேண்டியது ‘

எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறுண்டு.

(ஒளவை சினத்துடன் திரும்ப, அதியமான் அஞ்சி நிற்கிறான்… காவலர் பரிசில் தட்டுடன் நிற்கிறார்கள்)

அதியன் : ஒளவையே ‘ என்ன சினம் இது ?

ஒளவை : உன்னைக் காணவும் முடியாது காலம் கழிந்தது.

அதியன் : அதனால் உம்மீது எனக்கு அன்பில்லாமல் போகுமா ? கருவில்

இருக்கும் குழந்தை தாய் முகம் கண்டா வளர்கிறது ?

ஒளவை : விரைவில் அனுப்புவதாகச் சொன்னாய் ‘

அதியன் : வெறுங்கையோடு அனுப்புவதாகவா சொன்னேன் ‘

ஒளவை : அதனால்….

அதியன் : அதனால் தான் எல்லாம்…வரவேண்டிய பொருள் எல்லாம் இன்று

தான் வந்தது. இதோ பொன்னால் ஆகிய மலர்… பாணர்க்கு.

பொன்னால் ஆகிய மாலை ஒளவைக்கு… உங்கள் வாழ்நாள்

முழுக்கப் போதுமான அளவுக்கு வழங்க நினைத்தேன்….

அதனால் சுணக்கம். எடுத்துக் கொள்ளுங்கள்…

ஒளவை : அதிய…

அதியன் : அந்த ஒரு சொல் போதும்…. இப்பொழுது நீங்கள் வருந்தியும்

சோர்ந்தும் போகவேண்டியதில்லை. ஆடியும் பாடியும்

செல்லுங்கள் ஒளவையே ‘ எங்கு சென்றாலும் என் கிளைக்குத்

திரும்பி வா…. உன்னைப் பிரிவது என் தகடூரைத் பிரிவது போல.

அருமைப் பாணர்களே ‘ போவதற்கு முன் அருமையான விருந்து.

வேண்டிய மட்டுக்கும் கள்ளும் புலாலும்…ஒளவையே ‘ உனக்கு

ஒன்று மறுப்பில்லையே.

இளைஞன் : இப்படி ஒரு விருந்துக்கு ஒளவையாவது மறுப்பதாவது. (அதியன்

ஒளவையின் அருகில் சென்று அவளது கூந்தலை வருடுகிறான்.

ஒளவை கண்கள் பனிக்க அதியனை நோக்குகிறாள்.)

**(தொடரும்)

Series Navigation