இன்குலாப்
என் இனம் மிஞ்சும்…. இந்த மண் மிஞ்சும்
(பாணர் கூட்டம் பயணம் செய்தபடி. ஊர்மன்றில் ஓய்வு கொள்கிறது)
பாடினி-1 : தெற்கிலிருந்து வெகு தொலைவு வந்து விட்டோம்.
பாடினி-2 : இருந்தாலும் இம்முறை நமக்குப் பசி தெரியவில்லை.
பாடினி-1 : எல்லாம் நாஞ்சில் வள்ளுவன் செய்த நன்மை.
இளைஞன் : நன்மைதான் செய்தான். இருந்தாலும் அந்த யானையை நமக்குத்
தந்திருக்கக் கூடாது.
பாடினி-1 : யானை ஆயிரம் பொன்பெறுமே….
இளைஞன் : அதைக் கட்டி வைத்து அதற்கு யார் தீனி போடுவார் ? யானை
முதுகு வழியவழிய அவரையும் துவரையும் அரிசியும் பொதி
பொதியாய்த் தந்தான். ஆனால், நாம் சாப்பிட வேண்டியதில்
பாதியை யானையே தின்றுவிட்டது.
பாடினி : இருந்தாலும் அந்த யானை உன்னோடு சமமாகச் சாப்பிட
முடியுமா ?
இளைஞன் : நீங்கள் என்ன குறைவாகவா சாப்பிடுகிறீர்கள் ? கடைசியில் அந்த யானையை ஒரு வழியாய்த் தள்ளி விட்டுவிட்டேன்….. அது தான் அந்த வணிகன் மிகக் குறைந்த விலைக்கு நம்மிடமிருந்து வாங்கிக் கொண்டான்.
பாணர் : தெரியும்… இப்பொழுது அந்த யானை விற்ற காசில்தான் இந்த
புதிய ஆடைகள்…..
இளைஞன் : இதற்கு முன்பு நாமெல்லாம் ஆடையா உடுத்தியிருந்தோம் ?
ஒட்டுப்போட்ட கந்தல்…. எது ஒட்டு எது ஆடை என்று
தெரியாதபடி ஒன்றை உடம்பில் போர்த்தியிருந்தோம்.
பாடினி : அந்த உடுப்பு இருந்த அழகில் உன் அருகில் வருவதற்கே ஒரு
துணிவு வேண்டும் (மூக்கைப் பிடித்துக் கொண்டு) அப்படி ஒரு
நறுமணம் உன் உடுப்பில் இருந்து வீசியது.
பாடினி-2 : அந்த உடுப்பை அவன் அணியாவிட்டாலும் அப்படி ஒரு
நறுமணம் அவனுக்கு இயற்கையாய் உண்டு. நீ வேண்டுமானால் அவன் அருகில் சென்று மோந்து பாரேன்.
பாடினி-1 : அந்த வேலையை எல்லாம் நீயே வைத்துக்கொள்…
இளைஞன் : நல்ல மோப்பம் பிடிக்கும் பிறவிகள் ?
பாடினி-2 : ஏய் என்ன சொன்னாய் ?
இளைஞன் : அதை விடுங்கள்…. இப்பொழுது வேறொரு நாற்றம் உங்கள்
மூக்கைத் தொடுகிறதா ?
பாடினி : ஆமாம்…. நுணா மலர்களிலிருந்து வரும் நாற்றம் போல்.
இளைஞன் : இது, கள்நாற்றம் என்பது உங்கள் மூக்குகளுக்குமா தெரியாமல்
போனது ? ஒளவை எங்கே (ஒளவை ஒரு மரத்தடியில் உட்கார்ந்து எதிரில் தெரியும் நடு கற்களை வெறித்தபடி இருக்கிறாள்)
இளைஞன் : ஒளவை ‘ எதை வெறித்தபடி இருக்கிறாய் ? ஏதாவது ஒரு
பாட்டுக்கு அடி அமைக்கிறாயா ?
ஒளவை : (நடுகற்களைக் காட்டியபடி) என்ன ?
இளைஞன் : நடுகற்கள்
ஒளவை : காடு, மேடு என்று எவ்வளவோ இடங்களைக் கடந்து
விட்டோம்…. எத்தனையோ நாடுகளை எதிர்கொண்டோம்.
எங்காகினும் இவ்வளவு மிகுதியான நடுகற்களைக் கண்டாயா ?
இளைஞன் : நடுகற்களைக் கண்டோம்…. இருந்தாலும் இங்கு அவற்றின்
தொகை மிகுதிதான்.
ஒளவை : இதிலிருந்து என்ன தெரிகிறது ? இந்த நாடு கடுமையான
அரசியல் பகைமையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அந்த
நடுகல்லைப் பார். எதிரிகளால் கவர்ந்து செல்லப்பட்ட மாடுகளை மீட்பதற்காக நடந்த கரந்தைப் போரில் மடிந்தவனுக்கு நடப்பட்ட கல் அது… இன்னும் அந்தக் கல்லுக்குச் சூட்டப்பட்ட
மாலையிலிருந்து பூக்கள் உதிரவில்லை.
பாணர் : ஆமாம்…. ஒளவை. பழையதும் புதியதுமாய் ஏராளமான
நடுகற்கள்.
ஒளவை : இந்தத் தகடூர் இப்பொழுது குருதிக் கொப்பளித்துக்
கொண்டிருக்கிறது. தகடூரின் அரசன் தனது இடம் சிறியது,
இதை விரிவு படுத்த வேண்டும் என்ற வெறியில் போர்
செய்பவனாக இருத்தல் வேண்டும். அல்லது இந்தப் பழங்குடியை அழித்து மூவேந்தர்கள் தமது புதிய அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டது என்பதை நிறுவ முயல வேண்டும்…. என்னவாய் இருந்தாலும் இந்த நடுகற்குழியைப் பார். மண்ணே
காயப்பட்டுவிட்டது போலச் சாவு வடுக்கள்…
பாணர் : என்ன ஒளவை ? போரே கூடாது என்று புது சமயத்தினர்
சொல்வது போல நீயும் பேசத் தொடங்கிவிட்டாய் ‘ நாம்
பாணர்கள்.. காவலர்கள் களத்தில் நிற்கும்போது… அவர்களுக்குப் போர் வெறியூட்டுவது தான்..நமது கடன்.
இளைஞன் : அப்பொழுதுதான் போரில் கொள்ளையடித்த பொருளில்
அரைக்கால் பகுதியாவது நமக்குக் கிட்டும்.
ஒளவை : (மீண்டும் நடுகற்களைப் பார்த்தபடி) அதோ பார். யாரோ ஒரு
மூதாட்டி நடுகற்களுக்கு நடுவில் எதைத் தேடுகிறாள் ?
இளைஞன் : நான் போய்ப் பார்த்து வரட்டுமா ?
ஒளவை : இல்லை…. நாம் எல்லோரும் போவோம். இந்த நடு கல்
ஒவ்வொன்றையும் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது.
(அனைவரும் அந்த மூதாட்டியை நோக்கி நடக்கிறார்கள்)
பாணர்-1 : பலர் கரந்தைப் போரில் மடிந்திருக்கிறார்கள்… சிலர் மண்
காக்கும் போரில் தும்பை சூடியும் வீழ்ந்திருக்கிறார்கள்….
பாண் மகள்-1 : இப்பொழுதுதான் மடிந்த வீரனின் குழி போலும் இது…. பீலி
சூட்டியபடி…. படைக்கப்பட்டவைகள் கூட அப்படியே
இருக்கிறது. (ஒளவை, மூதாட்டியை நெருங்கியபடி)
மூதாட்டி : முந்தாம்நாள் போரில் வீழ்ந்த என் மகனுக்கு நாட்டப்பட்ட
நடுகல்…. ஓ…. இதோ….
ஒளவை : இந்த வீரன் உனக்கு ஒரே மகனா ?
மூதாட்டி : ஆமாம்…. அவன் நான் பெற்ற பிள்ளை…. இதோ இவர்கள்
அனைவரும் (நடுகற்களைக் காட்டி) நான் பெறாத பிள்ளைகள்…. இவர்களைக் கருவுற்ற காலத்தில் மண் தின்றோம். இப்பொழுது மண் இவர்களைத் தின்றுகொண்டிருக்கிறது.
ஒளவை : அம்மா…. உன் ஒரே மகனைக் களப்பலி கொடுத்ததில் உனக்கு
வருத்தமில்லையா ?
மூதாட்டி : மக்களுடைய களச்சாவு எங்களை வருத்தப்படுத்துமோ ?
ஒளவை : இதோ பார் உன் மகன் இறந்த போது அவனுக்கு என்ன
அகவை…. ?
மூதாட்டி : அவன் அகவையெல்லாம் எனக்கு எங்கே
நினைவிருக்கப்போகிறது ? பிறந்தபோது இந்த மார்பகங்களில்
பால் குடித்துக் கொண்டிருந்தான். பிறகு பால் குடியை
மறந்தான்…. இப்பொழுது என் மார்பகங்களில் சுறந்த பால்
வற்றிவிட்டது. மார்பகங்களும் சுருங்கிப்போய் விட்டன.
அவனுடைய அகவை இப்படித்தான் எனக்குத் தெரியும்.
ஒளவை : இப்பொழுது இங்கு என்ன செய்கிறாய் ?
மூதாட்டி : அவனுக்குக் கள் படைக்கக்கொண்டு வந்தேன். (கலயத்தைக்
காட்டியவளாக) போருக்குப் புறப்படும்பொழுது படைத் தலைவன் வார்த்த கள்ளோடு போயிருப்பான்….. அவன் வேட்கை தணிய
வேண்டாமா ? (ஒளவையை உற்று நோக்கிவிட்டு) ஓ… நீ இன்னும் குழந்தைப் பேறடையாத குமரி. என் வயிற்றைப் பார்…. அந்தப் புலிக்குட்டி இருந்த குகை என்பதற்கான தடயங்கள் இந்தக்
கோடுகள். (பின்னணியாக போர் முரசு ஒலிக்கிறது) ஆமாம்…
அவன் ஓர் இளம்புலிதான்…. போரில் மீண்டு வந்த அவன்
தோழர்கள் சொன்னார்கள். கடல் கிளர்ந்தாற்போல படை
ஆர்த்ததாம். நெருப்பில் சிவந்து வடித்தெடுத்த வேலொடு என்
மகன் பகை நடுவில் நின்றானாம்…. தன் படை மறவர்கள்
முன்னேற வேல் வீசி வழி வகுத்தானாம். அம்போடும்
வில்லோடும் அலை அலையாய் முன்னேறிய பகைவர் படையை இரண்டாகப் பிளந்தானாம்… அந்த முயற்சியில் நான் பெற்ற
புலிக்குட்டி உடல் இரண்டு கூறுபட வீழ்ந்தானாம்…. தோழர்கள்
சொன்னார்கள்…. ஏய் இளம் பெண்ணே ‘ இச்செய்தி கேட்ட
எனக்கு என்ன நேர்ந்தது தெரியுமா ? எனது வாடு முலை
மீண்டும் ஊறிச் சுரந்தன….
ஒளவை : என்ன தாயம்மா நீ ? இதனால் உனக்கு என்ன மிஞ்சும் ?
மூதாட்டி : என் இனம் மிஞ்சும் இந்த மண் மிஞ்சும்…. நாங்கள் இறுதிவரை
போரிட்டு மடிந்தோம் என்கிற வரலாறு மிஞ்சும். எங்கள்
தலைவன் யார் முன்பும் தலை குனிந்து நிற்கவில்லை என்கிற
பெருமை மிஞ்சும்…
ஒளவை : கொஞ்சம் பொறுமையாக கேட்பாயா ? உன் இன மக்களோடு
போரிட்டு மடிந்தவர்களும் இப்படிப் பேசலாம் அல்லவா ?
மூதாட்டி : ஆமாம். அதை யார் தடுத்தல் கூடும் ? பெண்ணே ‘ ஒருவரோடு
ஒருவர் போர் செய்வதும், மடிவதும் புதுமையோ…. ? இன்றைய இயற்கை அதுதானே…. இல்லை. என் இளமை தொட்டுப் போர் முரசு என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த மண்ணைக் காப்பதற்காக என் மகன் இறந்தான்…. என் காதல் கொழுநன்
மாற்றார் மீது நடந்த படையெடுப்பில் மாண்டான். போர் என்று
வந்துவிட்ட பிறகு எது சரி ? எது தவறு ? பசு நிரை கவர்வதா ?
பசு நிரை மீட்பதா ? எல்லைகளைக் காப்பதா ? எல்லைகளை
விரிவுபடுத்துவதா ? எல்லாம் சரி. எல்லாம் தவறு. இல்லை….
நியாயம் பேசுவதற்கான நேரம் இதுஅன்று.
அதோ பார். அந்த நடுகல்லுக்கடியில் தூங்கும் சிறுவன் என் மகனைக் காட்டிலும் இளைஞன். அவன் தாய் அவன் மடிந்தபோது என்ன சொன்னாள் தெரியுமா ? போர் வீரர்கள்
வெள்ளாட்டுக்கிடாய்களைப் போலத் தலைவனை சூழ்ந்திருந்தனர். போருக்குப் புறப்படும் முன் மண்டைகளில் தலைவன்
கள்வார்த்தான். பலர் மண்டைகளை—கலயங்களை நீட்டியபடி
இருக்க… என் மகனுக்குத்தான் முதல் கள் வார்க்கப்பட்டது.
இப்படித் தலைவன் அன்பு செலுத்திய என் மகன் இப்படி கால்
இல்லாத கட்டிலில் கிடக்க அவன் மீது தூய வெள்ளாடை
போர்த்திச் சிறப்பிப்பதை விட வேறு என்ன சிறப்பு
வேண்டியிருக்கிறது என்றாள்… பெண்ணே இது வீரர்களின்
காலம்…. நாங்கள் போரில் மடிவதற்கென்றே புதல்வர்களைப்
பெறுகிறோம்.
ஒளவை : இப்படி உங்களையே ஈந்து மகிழ்கிறீர்களே ‘ உங்களை அரசன்
அதியமான் சந்திப்பதுண்டா ?
மூதாட்டி : அதியனைப் பற்றியா கேட்கிறாய் ? அவனை அரசன் என்று
நீங்கள் சொல்லலாம். எங்கள் எல்லோருக்கும் அவன்
தலைவன்…. அதோ அந்த குளத்தங்கரையில் என்ன நடக்கிறது
என்று பார்த்தாயா ?
(ஒளவை உட்பட அனைவரும் குளக்கரையை நோக்க )
இளைஞன் : ஒரு யானையை ஊர்க்குறுமாக்கள்—பயல்கள், குளிப்பாட்டிக்
கொண்டிருக்கிறார்கள்.
பாண் மகள்-1 : அந்தப்பயல் யானையின் வயிற்றின்மீது ஏறி நின்று
குளத்துநீரில் குளிக்கிறான்.
பாண் மகள்-2 : அடடா அந்தப்பயல் முறம்போன்ற யானையின் காதைப்
பிடித்து விசிற முயல்கிறான்.
இளைஞன் : இந்தப்பயலைப் பாரேன்…. அதனுடைய துடைப்பம் போன்ற
வாலை எடுத்து முதுகு தேய்த்துக் கொள்கிறான்.
மூதாட்டி : அதனுடைய வெண்மையான கோட்டை அந்தப் பயல்
கழுவுவதையும் பார்க்கலாமே.
ஒளவை : ஆமாம்…
மூதாட்டி : இது ஒரு போர் யானை என்று சொன்னால் நம்புவீர்களோ ?
அதனுடைய தூண் போன்ற கால்களில் பகைவர்களின் தலைகள் மிதிபட்டன… பயல்களின் தலைகளைப் போன்ற இளந்தலைகள்
அல்ல… அதனுடைய வெண்கோடுகள் கோட்டைக் கதவுகளைப் பிளந்தன…அதனுடைய வெறிகொண்ட பிளிறலில் எதிரிகளின்
செவிகள் செவிடாகிப் போயின. அந்த யானை இந்தப்
பயல்களின் கையில் ஒரு பூனைக்குட்டி போலக் கிடக்கிறது.
இப்படித்தான் எங்கள் தலைவன் அதியன் அஞ்சியும்.
எதிரிகளுக்கு மதம்பொழியும் யானை.. அரசன் என்பது வெறும்
பெயருக்கு. எங்களுக்கு மகன், தலைவன், காவலன் எல்லாம்
அதியன்தான்….
ஒளவை : அப்படியா ?
மூதாட்டி : என்ன அப்படியா.. (கூட இருப்பவர்களைப் பார்த்துவிட்டு) ஓ
நீங்கள் பாணர்களா ? இந்த யாழ், முழவு, பதலை எல்லாம்
எங்களுக்கும் பிடிக்கும். அதியனுக்கும் பிடிக்கும்…(பெரு
வங்கியம் ஒலிக்கிறது. குதிரைகளின் குளம்படிச் சத்தமும்
கேட்கிறது)
நல்லது. அதியன் தனது இல்லம் திரும்புகிறான் போலும்.. போய் அவனைப் பாருங்கள்.
(பாணர் கூட்டம் நகர, பின்னணியில் பாட்டு)
அவன் நிழல் தேடி
தோளில் ஆடும் காவடி முனையில்
பதலை ஒருபுறம்
முழவு மறுபுறம்
காட்டில் புலம்பும் கைவளை விறலியே ‘
உணவு காணாது கவிழ்ந்த உண்கலம்
ஈரப்பருக்கையால்
திரும்பி மலருமோ ?
வள்ளல் இருக்கும் வழிவரக் கூடுமோ ?
இங்கோ அங்கோ எங்கோ எங்கோ ?
அலைகிற இசையே ‘
களத்தில் நிற்கிறான் ‘
எங்கு நின்றாலும் இருகை நீளும் ‘
ஏந்தும் கலத்தில் உலராது ஈரம் ‘
மெழுகு அடைபோலக்
கொழுங்கறி நிரம்பும்
உலகம் வறண்டு உலர்ந்து போகலாம்..
அவன் நிழல் வறளுமோ ?
அதியன் வாழிய ‘
- கூட்டம்…
- மெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்
- இறால் பஜ்ஜி
- சிக்கன் ஃபிரைடு ரைஸ்
- தென்னாப்பிரிக்க மூலிகைச் செடி எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இருக்கிறது
- அதிவேகத்தில் அணுகுண்டுச் சோதனைகள் – கணினி மூலம்
- உதிர்ந்த இசைமலர்
- பொழுது சாயும் வேளை
- என்ன செய்யலாம் சக புலவீரே!
- கண்ணீர் முத்துக்கள்…
- ஆச்சியின் வீடு
- மொழிபெயர்த்த மெளனம்
- ஒரு பாளை கள்ளு..
- ‘ க்ராஃபிக்ஸ் ‘
- போடோவை முழுக்க நிராகரியுங்கள்
- இந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (மலிவு சாராயம், விலைவாசி, பெனசீர், ஆஃப்கானிஸ்தான்)
- காபூல் நாட்குறிப்பு – வாழ்க்கையே ஒரு திரைப்படம்
- இதுவும் சாத்தியம்தான்
- ஒளவை – 6
- நினைவலைகள்