ஒற்றை மரம்

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

மணிமொழி


என் வீட்டின் கண்ணெட்டிய தூரத்தில் ஒரு மலை இருக்கின்றது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தாலும், அது பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும். அதன் கம்பிரமான தோற்றமும் அசைக்க முடியாத நம்பிக்கையும் என்னை கவர்ந்திழுத்தது. மேகங்கள் அவ்வப்போது அந்த மலையை உரசிச் செல்லும் அழகை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. மலைக்கும் மேகத்திற்கும் அடிக்கடி ஊடல்கள் ஏற்பட்டு மேகங்கள் பிரிந்து சென்றுவிடும். மீண்டும் காற்று அவற்றைச் சேர்த்து வைக்கும்.

இதில் குருவிகள் வேறு. மலைகளின் தோல் பாரத்தை அதிகரிப்பதோடு அதை சீண்டிச் செல்வதில் அடங்கா மகிழ்ச்சி அவர்களுக்கு. மலையின் பொறுமையே பொறுமை. தான் பறவைகளைவிட பெரிய உருவமாக இருந்தாலும் அவற்றை அழிக்கும் எண்ணம் ஒருபோதும் அது கொண்டிருக்கவில்லை. மேகங்களின் அடியையும் உதையையும் இடிகளின் அதிர்வுகளையும் தாங்கிக் கொண்டு தன் சோக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டுதான் இருக்கின்றது மலை. அந்த சோக நினைவுகளை மழைத் துளிகள் கௌவ்விக் கொண்டு சென்று விடுவதே அந்த மலையின் ஒரே ஆறுதல்.

பாட்டி, வீட்டிற்கு வரும் போதெல்லாம் அப்பாவைத் திட்டிக் கொண்டிருப்பார்.

“உனக்கு வீடு வாங்க வேறு இடமே கிடைக்கலையாடா? மலை ஓரமாவா வீடு வாங்குவாங்க? ”

பாட்டி, மலையில் ஏதோ சத்தம் கேட்கிறதென்றும் இரவு நேரத்தில் கையில் விளக்குகள் ஏந்திக் கொண்டு சிலர் மலையில் நடமாடுகிறார்களென்றும் அடிக்கடி கூறுவார். பேய்களும் ஆவிகளும் உணவுகள் தேடி செல்லும் போது, மலையருகில் இருக்கும் வீடுகளில் புகுந்து தொந்தரவு செய்யுமாம். அவர் வாழ்ந்த எஸ்தேட்டிலுள்ள மலையிலும் இதுபோல்தான் நடக்குமென்பார். பாட்டி சொல்லும் கதைகள் கேட்டு அடிவயிறு கலக்கும். பயம் சூழ்ந்து கொள்ளும் போதெல்லாம் அப்பாவின் அருகில் ஓடி ஒளிந்து கொள்வேன். எதுவாகயிருப்பினும், அப்பா மலையின் ரசிகன். நானோ அந்த மலையை ஒட்டி நிற்கும் ஒற்றை மரத்தின் ரசிகை.

பச்சை இலைகளும் தடித்தக் கிளைகளும் நிறைந்து நிரம்பி இருக்கும் அந்த ஒற்றை மரம் என் கண்களுக்குத் தென்பட்டது என் பாக்கியம். வெயிலின் ஒளி படர்ந்து பளபளக்கும் அதன் மேனி… உலக அழகிற்குக்கூட இல்லை. யாருடைய பழிச் சொல்லுக்கும் ஆளாகாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருக்கும் அதன் தனிமைக் குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்லதை மட்டும் செய்ய விரும்பும் அந்த ஒற்றை மரம் குருவிகளின் தங்கும் விடுதியாகவும் பிரசவிக்கும் மருத்துவமனையாகவும், அதற்கு எந்தவொரு வாடகையும் கட்டணமும் வாங்காமல் சேவையளித்து வந்தது. இது நான் மட்டும் அறிந்த ரகசியம். தூரத்தில் இருந்தாலும், அதை எட்டி நின்று பார்ப்பதையே விரும்புவேன். இக்கறை மாட்டுக்கு அக்கறை பச்சையல்லவா… இப்பொழுதும் அதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என் கண்களுக்கெட்டிய தூரத்தில், விலகி நிற்கும் அந்த மரத்தை.

“கயல்… என்ன செய்யறே? உள்ளே வா…” என்றாள் அம்மா. காலையிலே அம்மாவின் கட்டளை வீட்டில் தூள் பரக்க ஆரம்பித்துவிடும். அவரால் தனியாக சமையலறையில் வேலை செய்ய இயலாதலால் துணைக்கு ஆள் சேர்த்துக் கொண்டே இருப்பார். சில சமயம் அம்மாவின் புலம்பல்கள், ஏசல்கள், கொஞ்சல்கள் வீட்டில் கேட்கவிட்டாலும் பிடிக்காது. வீடே மயான அமைதியில் நிசப்பதமாகிவிடும்.

எனக்கும் அந்த ஒற்றை மரத்திற்கும் உள்ள தொடர்பு அவருக்குத் தெரியாது. அம்மாவிடம் சொல்லக் கூடாத அதிரகசியமும் அது அல்ல. இருந்தாலும் அது ரகசியம் தான். எனக்கும் அந்த மரத்திற்கும் உள்ள கையெழுத்திடா ஒப்பந்த ரகசியம். சொன்னாலும் அம்மாவிற்கு எங்கள் உறவு புரியாது. “பைத்தியம் பிடிச்சிருச்சாடி உனக்கு” என்று கேட்பாளே தவிர “அப்படியா… உண்மையாகவா…” என்று கேட்க தோனாது. அம்மாவிற்கு மட்டுமல்ல. அனைவருக்கும் தோன்றும் ஒரே கேள்வி இது தான்.

காலையில் காய வைத்த துணிகளைக் கொடியிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தாள் அம்மா. அவரின் அன்றாட கடமைகளுள் இதுவும் ஒன்று. தன்னை தவிர வேறு யாராவது துவைத்தத் துணியில் கை வைத்தால் கோபம் வரும். அவரே துணிகளையும் மடித்து வைக்க வேண்டும்.

“ மணி அக்கா… மணி அக்கா”
அழைக்கும் குரல் கேட்டது. மணியம்மாள் என்ற அம்மாவின் பெயர் ‘மணி’ என்று சுருக்கமாக அழைப்பார் பக்கத்து வீட்டு டீச்சர் அக்கா.

“நம்ம வீட்டுக்கு முன்னால கொண்டோமினியம் கட்டப் போறாங்களாமே? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”

“தெரியாதே டீச்சர்”

“இப்பதான் அவரு சொன்னாரு. மலை மேட்டுல கட்டப்போறாங்களா…”

“ஒன்னு புக்கிங் போட போறேன். நீங்களும் வாங்க போறீங்களான்னு கேக்கத்தான்”
“இல்ல டீச்சர்…”
“இந்த வீட்டு பணத்தையே இன்னும் கட்டி முடிகல…. புகழ், படிச்சு வந்தப்புறம் பார்க்கலாம்.”

அம்மாவிற்கு சொத்து சேர்க்க மனதிற்குள் நிறைய ஆசைகள் இருக்கின்றன. அப்பாவிடம் சண்டைப் போட்டு, போன வருடம்தான் இந்த வீட்டை வாங்கினாங்க. இதே அவங்களுக்குப் பெரிய சொத்து.

மேலும், அம்மாவிற்கு நாட்டு நடப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் இல்லை. அப்பாதான் அவர் உலகம். தெரிந்ததெல்லாம் சமையல், சன் டீவி, ‘கல்கி’ சீரியல்.

அம்மாவும் டீச்சர் அக்காவும் பேசியதைக் கேட்டு, எனக்கும் அப்பாவிற்கும் அடி மனதில் ஏற்பட்ட இராசயணக் கலக்கம் சொல்லமுடியாத ஒன்று. இருவரும் ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளவில்லை. அப்பா மலை ரசிகன் என்று அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தி. என்னுடைய கதை அவருக்குக்குத் தெரியாது. அவர் மலையைப் பற்றி பேசும் தருணங்களிலெல்லாம், என் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள ஆசை இருந்தாலும்… நான் வெளிப்படுத்துவதில்லை. அப்பாவிற்கு, அம்மாவும் டீச்சரும் பேசிய செய்தி மிகவும் முக்கியமானதொன்று…

‘ஸ்தெண்டட்’ மயக்கத்தில் வாழும் ஒரு சிறிய கூட்டத்திற்கு இயற்கையை மலை மேட்டிலிருந்து இரசிப்பதுதான் ‘ஸ்தெண்டட்’ என்று நினைக்கிறார்கள். மனதிற்கு ஆறுதல் தேடுவதாக நினைப்பு. ‘ஸ்தெண்டட்டாக’ வீட்டிற்கு ஒரு குழந்தை. தமிழ்ப் பேசினால் ‘நோ ஸ்தெண்டட்’. புடவை உடுத்துவது ‘நோ ஸ்தெண்டட்’. தமிழ் நாளிதழைப் படிப்பதைவிட ஆங்கில நாளிதழ் படிப்பதுதான் ‘ஸ்தெண்டட்’. மலை மேட்டில் கட்டுகிற சொகுசு வீட்டில் வாழ்வதுதான் ‘ஸ்தெண்டட்’. இவர்கள் இயற்கை விரும்பிகள் அல்ல… சொகுசு விரும்பிகள். ஒரு கணத்தில் அப்பாவின் மனத்திற்குள் வெடித்தக் குமுறல்கள் இவை.

அப்பா கடந்து வந்த காலத்திலும் ‘ஸ்தெண்டட்’ விரும்பிகள் இருந்தார்களாம். ஆனால் அவர்கள் சிறுபான்மையோர். அந்தப் பண்பாடு இன்றைய புது வரவுகளால் ஆழமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வழக்கம் போல் நாட்கள் கழிந்தன. இப்பொழுதெல்லாம் வீட்டின் வாசல் கதவை திறக்கும் போதெல்லாம் என் ஒற்றை மரம் இருப்பதை உறுதி செய்து கொண்டிருக்கிறேன். மலையை அழித்தால் என் ஒற்றை மரமும் அழிக்கப்படுமே. பயம்… பயம். என் உடல் முழுவதும் பரவ ஆரம்பித்தது.
அந்த மரத்தை நான் வளர்க்கவில்லை. ஒரு நாளிலும் அதற்கு நீரோ உரமோ போட்டதில்லை. தொட்டு பார்த்ததில்லை. அதன் நிழலை உணர்ந்ததில்லை. ஆனால் ஏதோ ஒரு நட்பு எனக்கும் அந்த ஒற்றை மரத்திற்கும். அதற்கு நான் மட்டுமே உறவுக்காரன் போல் தோன்றுகிறது. நான் மட்டும்தான்…

இன்று காலை ஏன் விடிந்தது? என்னிடம் ஒரு மந்திரக் கோள் இருந்திருந்தால் சூரியனை ஒளித்து வைத்திருப்பேன்.

சன்னல் ஓரத்தில் அப்பா. கைவிரல்கள் சன்னல் கம்பிகளைப் பற்றியிருந்தன. நாளிதழையும் புரட்டவில்லை. முகம் வாடியிருந்தது. கண்கள் சிவந்து சோர்ந்து காணப்பட்டன. மனதில் குழப்பம்… புரியவில்லை. ஆனால் ஒன்று. உறுதி படுத்தி விட்டனர். அந்த மலை மேட்டில் 32 மாடி கொண்டோமினியம் கட்ட போவதாக.

மண் இயந்திர வண்டிகள் மலை ஓரத்தில் நிறுத்தப்பட்டியிருந்தன. இயந்திர சத்தம் பலரை அவரவர் வீட்டிற்கு முன் வேடிக்கை பார்க்க வைத்தது. குழந்தைகளுக்கு புரியாத மகிழ்ச்சி. சீன அங்கிள் பெரிய லோரிகளைப் பற்றியும் அதன் டண் அளவைப் பற்றியும் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார். இஞ்சினியர் நிலத்தை அளவு எடுத்துக் கொண்டிருந்தார். அவரின் இரண்டு உதவியாளர்கள் வெண்தாளில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர்.

மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. ஒவ்வொரு மரமும் தன் சுயசரிதையை முடித்துக் கொள்ளும் நேரம் அது.

அப்பாவும் பார்க்கிறார். கண்களைச் சிமிட்டி சிமிட்டி…

மண் கறடி மலையைக் கீறுகிறது…
“… …” நிசப்தம்

ஒவ்வொரு கீறல்களும் மனதின் பாரத்தை அதிகரிக்க வைத்தது. அப்பாவிற்கு மட்டுமல்ல … எனக்கும்…

“காப்பாற்று! என்னை. வலிக்கிறது…”
அந்த ஒற்றை மரத்தின் அழுக் குரல் எனக்கு கேட்கிறது.

கைகள் கட்டிய நிலையில் நான். உணர முடிகிறது; உணர்த்த முடியவில்லை. எனது கண்ணீர் மட்டுமே அதற்கு பதில்.

ஒற்றை மரத்தை இரம்பத்தை கொண்டு அறுகிறார்கள்.

“அத விட்டுருங்க…!” கத்துகிறேன். மனதிற்குள்ளே…

நான்கு பேர் மரத்தைச் சுற்றிக் கயிறு கட்டுகிறார்கள். மரத்தை முறிக்கப்போகிறார்கள்…

“மெதுவாக இழுங்க, அதுக்கு வலிக்கும்” மீண்டும் மனதிற்குள்ளே.

மரம் சாய்கிறது… என்னை திரும்பி பார்த்துக் கொண்டே… தொப்பென்று விழுந்தது. கண்களை இறுக்கிக் மூடிக் கொண்டேன். அதன் பார்வையை எதிர்க் கொள்ள மனவலிமை இல்லை. அதன் மரணம் மனதை வெகுவாக துளைத்தது.

குருவி கூட்டம் விழுந்த மரத்தைச் சுற்றிப் பறக்கின்றன. தன் குஞ்சுகளையும் கூடுகளையும் அலைந்து தேடிக்கொண்டு… சுற்றியிருப்பவர்களுக்குப் புரியாத மொழியில் கூவி அழைத்துக் கொண்டு தேடுகிறது… ஏமாற்றம்.

குஞ்சுகள் இறந்து விட்டன. கூடுகள் களைந்து விட்டன. சில பிஞ்சு குஞ்சுகளின் பிணங்கள் இலைகளால் மூடியிருந்தது. இன்னும் சில பிணங்கள் இயந்திர வண்டிகளின் டயர் அடியில்…

குருவிகள் சாபங்களை வாரியிரைத்தப்படி, மற்றொரு வாடகை வீட்டை தேடி செல்ல ஆயத்தமானது. புறப்படுவதற்கு முன் மீண்டும் அந்த ஒற்றை மரத்தைச் சுற்றி ஒரு உலா வருகின்றன. நன்றியுடன்…

ஒற்றை மரம் வாழ்ந்த இடத்தை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். நான் மட்டும் அல்ல என்னைப் போல் பலரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த உயர்ந்த கட்டிடத்தை…


குறிப்பு: இக்கதை நான் எழுதிய கதைகளிலே, வடிவம் பெற்ற ஒரு கதை.
1442007ல் இக்கதைக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. (தமிழர் திருநாள் விழா, கெடா)

moli143@yahoo.com

Series Navigation

மணிமொழி

மணிமொழி