ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – லினக்ஸ் இயக்குதளம் ஒரு அறிமுகமும் அழைப்பும்.

This entry is part [part not set] of 5 in the series 20000911_Issue

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com


அதிசயமாக இருக்கின்றதா ? நம்பமுடியவில்லையா ? நான் சொல்லும் பெங்குவின் எது என்று தெரிந்தால் பாதிப்பேருக்கு நம்பிக்கை உண்டாகும். அது அவ்வளவு புத்திசாலி. இது துருவப்பிரதேசங்களில் மாத்திரம் இரும்கும் பறக்கத் தெரியாத பறவையல்ல. இன்றைக்கு உலகம் முழுவதையும் தன் இறக்கைகளின் கீழ் கொண்டுவந்து கொண்டிருக்கும் பறவை. அன்பால் உலகை ஆளப் பல அறிவாளிகளுக்குக் கற்றுக்கொடுத்த பறவை.

இன்னும் பல பேருக்குக் குழப்பம் தீரவில்லை என நினைக்கிறேன். நான் சொல்வது லினக்ஸ் எனும் கணினி இயக்குதளத்தின் சின்னமான டக்ஸ் எனும் செல்லப் பெங்குவினைப் பற்றியது. லினக்ஸ் இயக்குதளம் (operating system) இப்பொழுது தமிழில் தயாராகி வருகின்றது. விரைவில் சராசரி பயனர்களுக்கு (இலவசமாகக்) கிடைக்கப்போகும் இது, இந்திய மொழிகளிலேயே முதன்முறையாக ஒரு முழுமையான இயக்குதளமாக இருக்கும். நீங்கள் ஒரு சராசரி கணினி பயனர் என்றால் லினக்ஸ் எனும் வார்த்தை பல இடங்களில் அடிபடுவதைக் கண்டிருப்பீர்கள். உலகின் பெரும்நிறுவனங்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட ஏகபோக உரிமை வழக்கைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இன்றைக்கு சுமார் 80-90% மேசைக்கணினிகளில் பயன்படுத்தப்படும் இயக்குதளமான விண்டோஸ் (95/98/2000) மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் எனும் செயலியையும் தயாரிக்கும் நிறுவனமான அதன்மீது விதிகளுக்குப் புறம்பாக மற்ற கணினி வன்கலன் (hardware) மற்றும் மென்கலன் (software) தயாரிப்பாளர்களின் கைகளைக் கட்டிப்போட்டு பெரும் இலாபம் சம்பாதித்ததாக அந்தக் குற்றச்சாட்டு. இது நாள் வரை மைக்ரோசாப்டுக்குப் போட்டி என்று சொல்லிக்கொள்ளும் அளவில் எந்த நிறுவனமும் இல்லை, அது தனிக்காட்டு இராஜாவாக இருந்தது. இப்பொழுது அதனுடைய நிலைமையில் சற்றே ஆட்டங்கானத் துவங்கியிருக்கின்றது. அது எந்த வணிக நிர்ப்பந்தங்களும் இல்லாமல் தன்னிச்சையாக முன்னேறிவரும் லினக்ஸ் இயக்குதளத்தால் அதன் வணிக ஆட்சி தடைபட்டிருக்கின்றது. இவையெல்லாம் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முதலில் லினக்ஸ் என்பது என்ன என்று கொஞ்சம் கதை கேட்கவேண்டியிருக்கின்றது.

அதிமேதாவிகளின் மொழியில் சொல்லப்போனால் இது ஒரு பல்பயனர், பல்செயலாக்க இலவச இயக்குதளம். இப்படியெல்லாம் சொல்லி உங்களை உடனடியாக இங்கிருந்து துரத்தும் எண்ணம் எனக்கு இல்லை; ஏனென்றால் நீங்களும் விரைவில் இந்த குட்டிப் பெங்குவினுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கப் போகின்றீர்கள். எனவே சாதாரண வார்த்தைகளால் இதை விளக்குகின்றேன். பல்பயனர் (multiuser) என்பது பலர் ஒரே சமயத்தில் ஒரே கணினியைப் பயன்படுத்துவது; நீங்கள் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்ய வரிசையில் நிற்கும் பொழுது பார்த்திருப்பீர்கள், எல்லா பதிவாளர்கள் முன்னும் ஒரு திரையும், ஒரு விசைப்பலகையும்தான் இருக்கும். எல்லோருக்குமான பொதுவான ஒற்றை மாபெரும் கணினி அடுத்த அறையில் ஒரு பெரிய அலமாரியைப்போல உட்கார்ந்து கொண்டிருக்கும், இவர்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் அந்தக் கணினியைப் பயன்படுத்திக்கொண்டு இருப்பார்கள். இது மிகவும் முக்கியம், ஏனென்றால் உங்களுக்குக் கொடுக்கப்படும் இருக்கையை வேறொருவருக்கு கொடுக்காமல் இருக்க அனைத்துத் தகவல்களும் பதிவுகளும் ஒரே கணினியில் இருப்பது நல்லது. அதை ஒருவர் பயன்படுத்தும் பொழுது மற்றவருக்கு இடைஞல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சொல்லப்போனால் ஒரே பதிவேடை இரண்டுபேர் ஒரே சமயத்தில் பயன்படுத்துவது ஒருவருக்கு ஒருவர் தெரியக்கூடாது. பல்செயலாக்கம் (multitasking) என்பது நீங்கள் இணையத்தை வலையும் அதே நேரத்தில் குறுவட்டில் (CD) இடப்பட்ட பாடலைப் பாடிக்கொண்டு, உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களையும் சேகரித்தல் எனக் கொள்ளலாம். இது பல செயல்களை ஒரே சமயத்தில் செய்வது. இவை மைக்ரோசாப்ட்டின் பெரும்பான்மையான இயக்குதளங்களில் இயலாதது, அதனால் ஒருவருடைய கட்டளையைத்தான் செயல்படுத்த இயலும். முற்றிலுமாக இயலாதது இல்லை, ஆனால் சில கட்டளைகளை அதனால் சரிவர நேரப்பங்கீடு செய்து முடிக்க இயலாது, உதாரணமாக உங்கள் நெகிழ் வட்டில் (floppy disk) எழுதும் அதே நேரத்தில் பிற செயல்களைச் செய்ய அது தினறுவதைக் காணலாம். சர்வர் சுந்தரம் படத்தில் வரும் நாகேஷ் மாதிரி மேசையைத் துடைத்துக்கொண்டு, சிரித்துப் பேசிக்கொண்டு, வாடிக்கையாளர்களுக்குப் பரிமாற அதனால் இயலாது.

லினக்ஸால் இது இரண்டும் முடியும். பொதுவில் போஸிக்ஸ் (Posix) என்று சொல்லப்படும் இயக்குதளங்களுக்கான நெறிமுறைகளின் படி அமைக்கப்பட்ட எல்லா இயக்குதளங்களாலும் இவை முடியும். எல்லாவகையான யுனிக்ஸ் இயக்குதளங்களும் (உதாரணமாக சிலிக்கன் கிராபிக்ஸின் ஐரிக்ஸ், சன் நிறுவனத்தின் சோலாரிஸ்), ஏன் மைக்ரோசாப்டின் விண்டோஸ் என்.டி மற்றும் 2000 இவைகளின் ஆதார இதயம் போஸிக்ஸ்தான். லினக்ஸ் இந்தப் போஸிக்ஸ் கோட்பாடுகளை 100% கடைபிடிக்கின்றது. சொல்லப்போனால் போஸிக்ஸ் அவ்வளவாக நெறிப்படுத்தாத கடினமான முறைகளையும் லினக்ஸ் கடைபிடிக்கின்றது. மைக்ரோஸாப்ட் விண்டோஸ் 95/98, ஆப்பிள் மக்கின்டோஸ் போன்றவை போஸிக்ஸின் அடிப்படையில் அமைந்தவை அல்ல.

லினக்ஸ் எங்கிருந்து வந்தது ? உலகின் வடமூலையிலிருக்கும் குளிர்நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டி ஹெல்சிங்கி பல்கலையின் பட்டப்படிப்பு மாணவரான லினஸ் டோர்வால்ட் என்பவர் மினிக்ஸ் என்ற பெயரில் வழங்கிவந்த ஒரு சோதனை இயக்குதள மாதிரியைக் (இது முழுமையான இயக்குதளமாக இருக்கவில்லை) குடைந்து அதைப் பிரபலமாகிவரும் விலைமலிந்த இண்டெலின் 386 குடும்பத்தைச் சேர்ந்த நுண்செயலியில் (microprocessor) செயல்படுவதாக மாற்றியமைத்தார். அதுவரை பல்பயனர், பல்செயலாக்கம் கொண்ட ஒரே இயக்குதளமான யுனிக்ஸ் (ஆமாம், இந்த -க்ஸ் என்று முடியும் எல்லாம் ஒரே பரம்பரை இரத்தம்தான், போஸிக்ஸின் நேரடி வாரிசுகள்) மாபெரும் செயல்திறன் கொண்ட நுண்செயலிகளில்தான் இயக்கமுடியும் என்று இருந்தது. இதை மாற்றி 386 நுண்செயலியில் இயக்க முடிவுசெய்தார். ஆகஸ்டு 91-ல் இயக்குதளங்களுக்கான இணையச் செய்திக்குழு ஒன்றில் இதை வெளிப்படுத்தினார். முதலில் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை, சில மாதங்களுக்குப் பின் அவர் இந்த மினிக்ஸ் மாற்று (இதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை) இப்பொழுது இன்னும் சில காரியங்களைச் செய்யவல்லது என அறிவித்தார். அதன்பின் இணையத்தின் வழியே சில அதிபுத்திசாலி கணினி நிரலர்கள் (programmers) இதை இன்னும் சக்தி வாய்ந்ததாக மாற்றத் தொடங்கினார்கள். இதற்கான முக்கிய காரணம், டோர்வால்ட் அதன் அடிப்படை ஆணைக்குறியீடுகளைத் தனக்குள்ளே இரகசியமாக வைத்துக்கொள்ளாமல், அல்லது அதற்குக் காப்புரிமை பெறாமல் இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கும்படி வெளியிட்டார். அதனால் கணினி ஈடுபாடு உள்ளவர்கள் எல்லோருக்கும் இது ஒரு திறந்த புத்தகமாக, தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ள, தங்கள் திறனை நிருபிக்க இதில் எந்தவிதமான சோதனைகளும் செய்யமுடியும் எனும் நம்பிக்கை உண்டானது.

விரைவில் இது கணினி படிக்கும் மாணவர்களிடையே காட்டுத்தீயைப்போல் பரவத் தொடங்கியது. பலரும் போட்டி போட்டுக்கொண்டு இதை மாற்றியமைக்கவும், இந்த இயக்குதளத்திற்குப் புதிய செயலிகளை வடிக்கவும் தொடங்கினார்கள். 14 மார்ச்சு 1994 ஆம் தினத்தன்று லினக்ஸ் நிலைஎண் 1.0 என்று பெயரிடப்பட்டு வெளிவந்தது. (பொதுவில் கணினி செயலிகளை வடிப்பவர்கள் அவர்கள் திருத்தும் ஒவ்வொருமுறையும் அதன் நிலைஎண்ணின் தசம இலக்கத்தை 0.1, 0.2, 0.22 என்று மாற்றிக் குறித்துக் கொள்ளுவார்கள், பொதுவில் வெளியிடத் தயாராகும்பொழுது அதற்கு 1.0 என்று பெயரிடுவார்கள், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 3.11 என்பதை உங்களில் பலர் பயன்படுத்தியிருப்பீர்கள்). 1.0 நிலைஎண் என்றவுடன் கணினி ஆணைநிரல்கள் எழுதத் தெரியாதவர்களுக்கும், இயக்குதளங்களைப் பற்றி தெரியாதவர்களுக்கும் கூட பயன்படுத்தத் தயார் நிலை என அறியலாம்.

1994 லிருந்து 2000 வரை – ஆறே ஆண்டுகள். லினக்ஸ் வெகுதூரம் பயணம் செய்திருக்கின்றது. அதன் பயணத்துடன் கணினி தொழில்நுட்ப வளர்ச்சியையும், கற்றோரிடையே கலாச்சார வளர்ச்சியையும் நடத்திக் காட்டியிருக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக இணையம் லினக்ஸாலும், லினக்ஸ் இணையத்தாலும் பெரும் பயன்களை இயைந்து அனுபவித்துள்ளன. ஒரு வகையில் சொல்லப்போனால் இணைய வளர்ச்சி பெரிதும் லினக்ஸின் முன்னேற்றத்தையே சார்ந்து இருந்திருக்கின்றது. இவை எல்லாவற்றையும் சத்தமில்லாமல் நிகழ்த்திக் காட்டி சந்தை வியாபாரிகளின் வயிற்றில் புளியைக் கரைத்து வருகின்றது.

இதனால் நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன இலாபம், இதை ஏன் தமிழில் மாற்றியமைக்க வேண்டும் ? முக்கிய காரணம் கணினியைப் பயன்படுத்த ஆங்கில அறிவு தேவை என்ற முறையில்லாத கட்டுப்பாட்டை மாற்றியமைக்க. இரயில் முன்பதிவு விண்ணப்பத்தைத் தமிழிலும் அச்சிடுவதைப்போல. இப்பொழுது பல முன்னேற்றங்களுக்குப் பின் கணினிகள் எல்லோராலும் எளிதில் பயன்படுத்த ஏற்றனவாக மாறிவருகின்றன, இதில் மொழிக்கட்டுப்பாட்டை நீக்குவது என்பது அடுத்த கட்டம். தமிழில் இலவச இயக்குதளமும் செயலிகளும் கிடைத்தால் பயன்படுத்துவோர் அதிகரிப்பர் – தொடர்பாக வணிகம், கல்வி, தகவல் பரிமாற்றம் இவை பெருகத் தொடங்கும்.

இதெல்லாம் சரி; சிலர் சொல்வதுபோல் இந்த லினக்ஸ் இயக்குதளம் பிரபலமாகக் காரணம் அது இலவசமாகக் கிடைப்பதுதானா ? இதை யார் நிர்வகிக்கின்றார்கள் ? இது எப்பொழுது தமிழில் வரும் ? தொடர்ந்து விரைவில் பார்ப்போம்.

தோக்கியோ

6 செப்டம்பர் 2000

 

 

  Thinnai 2000 September 11

திண்ணை

Series Navigation

Scroll to Top