சபா இராஜேந்திரன்
அன்றைய தினம் பார்க்க வேண்டிய வழக்குகள் இரண்டுதான் இருந்தன. இரண்டு வழக்குகளுமே காலையில் இருப்பதால் பலகாலமாகப் படிக்காமல் பின்போடப்பட்டுவந்த புத்தகம் ஒன்றை அன்று மாலை படித்து முடித்துவிடலாம் என்று தன் மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டு வழக்குகளின் விபரங்களைப் படிக்கத் தொடங்கினார். கீழ் நீதிமன்றத்திலே தீர்ப்புகள் வழங்கப்பட்டு, அவற்றிற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டிருந்ததால் அந்த இரு வழக்குகளும் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பிரகாசம் முன்னிலைக்கு வந்திருந்தன.
ஒரு வழக்கின் விபரம் அவரின் மனதை வாட்டியது. இப்படியான பல வழக்குகளை இதற்கு முன்பும் அவர் சந்தித்திருந்தபோதிலும், ஒவ்வொரு முறையும் இந்த வழக்குகள் அவரின் பதின்மவயது நண்பன் பாலுவின் பழையகால வாழ்க்கையை நினைவுபடுத்தி வாட்டிக்கொண்டேயிருந்தன.
இருபது வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்த தம்பதியினரது விவாகரத்து வழக்குத்தான் அவருக்குப் பழைய நினைவுகளைக் கிளப்பிவிட்டிருந்தது. தனது குடிகாரக் கணவனால் கொடுமைக்குள்ளான ஒரு பெண் விவாகரத்துக்கோரிச் செய்த வழக்கு. ஒரு விதமான நிரந்தர வருமானமும் இல்லாத ஒரு கணவன் தனது மனைவி கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் குடித்துவிட்டு தனது மனைவியையே அடித்துக் கொடுமைப்படுத்தும் கொடூரத்தைப் பொறுக்கமுடியாததால் மனைவி போட்ட வழக்கு.
அப்பொழுது இவருக்கும் பாலுவுக்கும் பதின்மூன்று வயது. ஒரே வகுப்பில் படித்தார்கள். வகுப்பில் யார் முதலாவதாக வருவதென்பதில் இருவருக்கும் போட்டி. படுக்கும் நேரம் தவிர இருவரும் பிரிவதேயில்லை. சிவப்பிரகாசத்தின் தாயாரும் பாலுவைத் தனது மகன் போலவே நினைத்தாள். மதியச் சாப்பாடும் பாடசாலை முடிந்ததும் தேநீரும் இருவரும் ஒன்றாகவே சாப்பிடுவார்கள். வசதியில் குறைந்திருந்தபோதிலும், இருவரிலும் அன்பு செலுத்துவதில் பாலுவின் தாயாரும் குறைந்தவரில்லை. தன்னால் முடியும்போதெல்லாம் சிவப்பிரகாசத்திற்கு விருப்பமான எள்ளுருண்டை செய்து கொடுத்து அவன் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்வாள். பாலுவிற்கு சிவப்பிரகாசம் போன்ற நண்பன் கிடைத்ததும் அவனது பெற்றோரும் பாலுவின்மேல் அன்பாய் இருப்பதுவும்தான் அவளுக்கு வாழ்க்கையில் கிடைத்த சந்தோஷம்.
பாலுவின் தகப்பன் குடியின் போதைக்கு அடிமையாயில்லாமலிருந்ததைச் சிவப்பிரகாசம் ஒருநாளுமே பார்த்ததில்லை. செய்வது கூலிவேலை. அதிலும் ஒழுங்கில்லை. ஆனால் நிறையக் குடிப்பதற்கு ஒவ்வொருநாளும் பணம் வேண்டும். அடித்துப் பறிப்பதற்கு வசதியாகப் பாலுவின் தாயார் அப்பம் சுட்டுவிற்று உழைத்துவந்தாள். அத்துடன் மிகவும் சாதுவானவளாகவும் இருந்தாள். குடிப்பதற்குப் பணம் கேட்டு அடிப்பான். குடித்துவிட்டு வந்து காரணமில்லாமல் அடிப்பான்.
ஒருநாள் பாலு பாடசாலைக்கு வராததால் அவனைப் பார்க்க அவன் வீட்டிற்குச் சென்ற சிவப்பிரகாசத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாலுவின் முகமெல்லாம் வீங்கியிருந்தது. அவனது தகப்பன் அவனுக்கு அப்படி அடித்திருந்தார். அதுவரை காலமும் தகப்பன் தாய்க்கு அடிக்கும்போதெல்லாம் அழுவதைத் தவிர வேறொன்றும் செய்திராத பாலு முதல்நாள் இரவு தாயின் வேதனையைத் தாங்கமுடியாமல், அதே நேரத்தில் தகப்பனையும் தடுத்து நிறுத்த வலிமை இல்லாமல், தாயைப் பார்த்துக் கேட்டான்,
“அம்மா! இந்த ஆள் எங்களுக்கு வேண்டாமம்மா. இவரை விவாகரத்துச் செய்துவிடுங்களேன்?”.
காரணமில்லாமலேயே அடிக்கும் தகப்பனைக் கேட்கவேண்டுமா?. மகன் கூறியதைக் கேட்டு ஒருகணம் நிலைதடுமாறினாலும், மறுகணமே தனது பலமெல்லாவற்றையும் பாவித்து பாலுவின் முகம், கை, கால், உடம்பு என்று பாராமல் எல்லாவிடமுமே அடித்துத் தள்ளிவிட்டான்.
விவாகரத்து என்பதைப்பற்றி பாலு எப்போது கேள்விப்பட்டான், சிந்தித்தான் என்பது சிவப்பிரகாசத்திற்குத் தெரியவில்லை. தாய் படுகின்ற சித்திரவதையைத் தினம்தினம் பார்ப்பதால் அவன் அப்படிச் சிந்தித்திருக்கவேண்டும்.
வழக்கறிஞராக, பின்பு நீதிபதியாக வருவானென்பதை அன்று தெரிந்திராத சிவப்பிரகாசம் விவாகரத்தைப்பற்றிப் பாலுவிற்கு அப்போது சொன்னது இன்றும் அவருக்கு நல்ல ஞாபகத்தில் இருந்தது.
“பாலு! கணவன் மனைவிக்கு இடையில் வரும் சண்டைக்கு விவாகரத்துத்தான் வழியென்றால், கல்யாணம் என்ற புனிதபந்தம் அதிக காலம் நிலைத்திருக்காது. படிப்பறிவில்லாத காரணத்தால்தான் இந்தமாதிரியாக மனைவியை அடிக்கும் மிருகத்தனமான குணங்கள் இருக்கின்றன. எமது சமூகத்தைச் சேர்ந்த மக்களைப் படிக்க வைக்கவேண்டும்”.
அன்று தான் கூறியதை நினைத்ததும் சிவப்பிரகாசத்திற்குச் சிரிப்புத்தான் வந்தது. இன்று நடைமுறையிலிருக்கும் ஏட்டுப்படிப்பினால் மனிதனிலுள்ள மிருகக்குணத்தைக் குறைக்கலாம் என்று தான் நினைத்தது எவ்வளவு முட்டாள்த்தனமானதென்று இப்பொழுது அவருக்குத் தெரிகிறது.
அன்றைய சம்பவத்திற்குப்பிற்கு பாலு பாடசாலைக்கு வராமலிருக்கும் நாட்களும் அதிகரித்துக்கொண்டே போயின. இரவுகளிலே தாய்க்கு அடிவிழும் போதெல்லாம் இடையிலே புகுந்து தானும் அடிவாங்கிக்கொண்டான்.
பாலுவின் கஷ்டத்தைப் பார்த்த சிவப்பிரகாசத்தின் தாயார் அவனை இனிமேல் தங்கள் வீட்டிலே படுக்குமாறு அன்பாய்க்கேட்டாள். அதற்குப் பதிலாகப் பாலு ஒன்றும் சொல்லவில்லை, அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான். அவளுக்கு அவனுடைய பார்வையின் அர்த்தம் புரிந்ததோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சிவப்பிரகாசத்திற்கு அதன் அர்த்தம் புரிந்தது.
“உங்களுக்கு இந்தமாதிரியான கொடுமைகள் நடக்கும்போது உங்கள் மகனை இப்படித்தான் ஓடி ஒளியச் சொல்வீர்களா? சொன்னாலும் ஓடி ஒளியும் கோழை நான் இல்லை”.
உண்மையில் பாலுவின் தாயாரும் அவனைத் தலையிட வேண்டாமென்றுதான் கூறிவந்தாள். தான் கஷ்டப்பட்டாலும் தனது மகனாவது நன்றாகப் படித்து முன்னேறவேண்டுமென்ற ஆசையைத் திரும்பத்திரும்ப பாலுவிற்குச் சொல்லிக்கொண்டே வந்தாள். ஆனால் பாலு கேட்பதாயில்லை.
நாட்கள் செல்லச்செல்லப் பாலு பாடசாலைக்கு வராத நாட்களும் அதிகரித்துக்கொண்டே போயின. அவனது உடம்பில் அடிவாங்கிய காயங்களும் அதிகரித்துக்கொண்டே போயின. அவனுடைய முகத்தையும் போக்கையும் பார்க்கையிலே அவனுடைய உள்ளத்திலே ஏற்பட்டுள்ள காயங்கள் அப்படியே பளீரெனச் சிவப்பிரகாசத்திற்குத் தெரிந்தது. பாலுவின் முகத்திலே சிரிப்பையே காணமுடியவில்லை. எந்நேரமும் ஏதாவது யோசித்துக் கொண்டேயிருப்பான். படிப்பை மறந்துவிட்டான் என்றே சொல்லலாம். பரீட்சையில் சில பாடங்களுக்கு மாத்திரமே வந்திருந்தான். ஆனால் எதுவும் எழுதியதுமாதிரித் தெரியவில்லை.
ஒருநாள் பாலுவின் தாயார் அழுதபடியே சிவப்பிரகாசம் வீட்டிற்கு ஓடிவந்தாள்.
“நாலு நாட்களாகப் பாலுவிற்கு ஒரே நெருப்புக் காய்ச்சல். வெப்பம் குறைவதாகத் தெரியவில்லை. புசத்தியபடியே இருக்கிறான். என்ன செய்வதென்றே தெரியவில்லை”
அழுதாள். உண்மையிலேயே அழுவதைத் தவிர வேறென்ன செய்வதென்பதே அவளுக்குத் தெரியவில்லை. சிவப்பிரகாசத்தின் தாயார் உடனடியாகக் காரில் சென்று பாலுவைப் பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிச்சென்றாள். பாலுவின் வெப்பம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. ஆனால் பாலுவின் புலம்பல் ஒரேமாதிரியாக இருந்தது.
“அம்மாவுக்கு அடிக்காதையுங்கோ! அம்மாவுக்கு அடிக்காதையுங்கோ!”
“அம்மா! வாங்கம்மா. நாங்கள் வேறே ஊருக்கு ஓடிப்போயிடுவோம்”
அவனுடைய புலம்பல் நின்றபோது அவனது மூச்சும் நின்றுவிட்டது.
சிலநாட்களின் பின்பு பாலுவின் தாயார் ஊரைவிட்டு எங்கேயோ கண்காணாத இடத்திற்குப் போய்விட்டாள். அதன்பிறகு சிவப்பிரகாசம் அவளைப்பற்றி ஒன்றுமே கேள்விப்படவில்லை.
பாலு கூறியதுமாதிரி அவனது தாயார் அவனோடு சிறிதுகாலத்திற்கு முன்பேயே ஊரைவிட்டு ஓடியிருந்தால் ஒருவேளை பாலு இப்போது உயிருடன் இருந்திருப்பான் என்ற எண்ணம் அடிக்கடி சிவப்பிரகாசம் மனதில் வந்துகொண்டேயிருந்தது.
இன்றும் அந்த விவாகரத்து வழக்கைப் பற்றிய விபரங்களை வாசிக்கையிலே அவருக்குப் பழைய நினைவுகள் வந்தன. வழக்கம்போல பாலுவின் நினைவுகள் இந்த வழக்கில் தான் எடுக்கப்போகும் முடிவைப் பாதிக்கக் கூடாதெனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.
விசாரணைக்கு வந்திருந்த வழக்கில் தம்பதிகள் ஒன்றாக 26 வருடங்கள் வாழ்ந்துள்ளனர். நிரந்தரமான வருமானம் இல்லாத கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியைக் கொடுமைப்படுத்துவதால் மனைவி தொடர்ந்த வழக்கு. கீழ்க்கோர்ட்டில் விவாகரத்து வழங்கியதை எதிர்த்து கணவன் அப்பீல் செய்திருந்தான்.
அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது கணவன் கோர்ட்டுக்கு வரவில்லை. அவன் சார்பில் மனுச் செய்திருந்த வக்கீல் தனது கட்சிக்காரரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று கூறினார். ஆகவே சிவப்பிரகாசம் மனுவைத் தள்ளுபடி செய்து விவாகரத்தை உறுதிபடுத்தித் தீர்ப்புக் கூறினார்.
அன்று மதிய உணவு சாப்பிடுவதற்காக வெளியே சென்றபோது கோர்ட்டு வாசலில் அந்தப் பெண் மிகுந்த சோகத்துடன் இருப்பதைச் சிவப்பிரகாசம் பார்த்தார். உணவருந்திவிட்டுத் திரும்பி வந்தபோதும் அந்தப் பெண் அதேயிடத்தில் சோகத்துடன் இருந்தாள். அவள் கண்கள் அழுததால் சிவந்து போயிருந்ததைக் கண்ட சிவப்பிரகாசத்திற்கு வியப்பாயிருந்தது.
அவள் கேட்டபடியே விவாகரத்துக் கிடைத்ததால் அவள் சந்தோஷமாகவல்லவா இருக்கவேண்டும்? விவாகரத்து எடுத்தது அந்தப்பெண்ணுக்கு விருப்பமில்லைப் போலுள்ளது என்று நினைத்துக் கொண்டே தனது அறைக்குச் சென்றார். அவரது மனத்தைவிட்டு அந்தப்பெண்ணின் சோகமான முகம் மறையவில்லை. தனது பியூனை அனுப்பி அவள் அங்கே இன்னமும் இருக்கிறாளா என்று பார்த்துவிட்டு வரும்படி அனுப்பினார். அதேயிடத்தில் அப்படியே அழுதபடி அவள் இருப்பதாகப் பியூன் சொன்னதும் தான் ஒருவேளை தப்பாக விவாகரத்துக் கொடுத்துவிட்டேனாவென்ற கேள்விக்குறி அவர் மனதிலே வந்தது.
அந்தப் பெண்ணையும் அவளது வக்கீலையும் உடனடியாகத் தனது அறைக்குக் கூட்டிவரும்படி பியூனை அனுப்பினார். அவர்கள் இருவரும் வந்ததும் அவர் கேட்டார்.
“அம்மா! நீங்கள் விரும்பியதுமாதிரியே உங்களுக்கு விவாகரத்து கிடைத்துவிட்டதுதானே? ஏன் இன்னும் அழுதுகொண்டே தெருவில் நிற்கிறீர்கள்?”
அவள் அழுதுகொண்டே சொன்னாள்.
“ஐயா! அந்த மனுசனைக் கலியாணம் செய்த இருபத்தியாறு வருசங்களிலே மொத்தமாய் இரண்டு மாசங்கள் கூட நான் சந்தோஷமாக இருந்ததில்லை. அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம். தாங்கமுடியாமல்தான் வழக்குப் போட்டேன்.”
“அதற்காக இப்போது வருத்தப்படுகிறீர்களா?”
“வருத்தப்படவில்லை ஐயா! தீர்ப்பிலே எனக்குச் சந்தோஷந்தானுங்கோ. ஆனால் என்னுடைய இருபத்தியாறு வருசக் கஷ்டக்கதையை நீங்கள் ஐந்து நிமிடத்திலே முடித்துவிட்டீர்களே! என்னுடைய கஷ்டங்களை, என்னுடைய நியாயங்களை வாய்விட்டுச் சொல்ல நீங்கள் விடவில்லையே! வாழ்ந்த வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டதே! நான் பட்ட கஷ்டங்களை, அந்த மனிசன் பண்ணின அநியாயங்களை உங்களை மாதிரிப் பெரிய மனுசன் கிட்ட வாய்விட்டுச் சொன்னால்தான் மனசுக்கு ஆறுதலாயிருக்கும். எவ்வளவோ சொல்லவேண்டுமென்றுதான் இன்றைக்கு வந்தேன். ஆனால் நீங்கதான் ஒன்றும் கேட்கலையே. நான் ஒண்ணும் சொல்லாமலேயே என்னுடைய வாழ்க்கை ஐந்து நிமிடத்திலே முடிவாகிவிட்டதுதான் ஐயா எனக்கு வருத்தம்”.
அவளுடைய ஆதங்கம் சிவப்பிரகாசத்திற்குப் புரிந்தது.
“அம்மா! உங்கள் வக்கீலிடம் நீங்கள் சொன்னதிலையிருந்து எனக்குக் கொஞ்சம் தெரியுமம்மா. முழுசா நீங்கள் எல்லாவற்றையும் இன்னுமொருமுறை எனக்குச் சொல்லுங்கள்”.
அடுத்த அரைமணிநேரம் அந்தம்மாள் கணவனால் தனக்கேற்பட்ட கஷ்டங்களை அடுக்கிக்கொண்டே போனாள்.
“ஐயா! இப்பத்தான் நிம்மதியாயிருக்கு. கடவுள் கிட்ட சொல்லி எனக்கு நியாயம் கிடைச்சமாதிரி இருக்கு”.
முடிவிலே சொல்வது மாத்திரம் தீர்ப்பல்ல, நீதிமன்ற வழிமுறைகள் எல்லாம் தீர்ப்பின் ஒரு பகுதிதான் என்பதைப் புரிந்துகொண்ட சிவப்பிரகாசம் கேட்டார்.
“அம்மா! விவாகரத்து எடுத்துவிட்டீர்கள். உங்களுக்குப் பிள்ளைகளும் இல்லை. தனியாக இருப்பது கஷ்டமாக இருக்காதா?”.
“ஐயா! நான் என்னுடைய தங்கை மகனைத் தத்தெடுக்கப்போகிறேன். அந்தப்பிள்ளையை இந்த மனிசன் அடிச்சுக் கொல்லக்கூடாதென்றுதான் முக்கியமாக நான் வழக்குப்போட்டேன்”.
சிவப்பிரகாசத்தால் பாலுவை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
asrajendran@hotmail.com
- க ண ப் பு
- வலைப்பூ இலக்கியத்தின் வளமை
- காதல் நாற்பது -17 முழுமைப் படுத்தும் என்னை !
- பெரியபுராணம்- 128 43. கழறிற்றறிவார் நாயனார் புராணம்
- அறிவிப்பு
- ஈவேரா- காந்தியடிகள் உரையாடல் – எழுப்பும் சில கேள்விகளும் வெளிப்படுத்தும் சில உண்மைகளும்
- கவிஞரை விட்டுக் கொடுக்காத கவிஞர் விவேக்
- கடிதம்
- அந்த நாள் ஞாபகம்…..
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 14 – சாகச ‘ வாலிபன் ‘ !
- நம் பெண்கவிஞர்கள் கேலிக்குறியவர்களா?
- நினைவுகள் மட்டும்…
- ஏகத்துவ அரசியல் மற்றும் சமய மரபுகளின் தோற்றுவாய்
- கவிதைகள்
- புத்தாண்டு வாழ்த்துக்கள்
- உறைந்த தேவதைகள்
- பயணமுகவர்கள்
- புதிய தொழிலாளி புலம்பெயர்வு வாழ்க்கை
- மருந்தின் விலை ரூ. 1,20,000 உயிர் குடிக்க வரும் நோவார்ட்டிஸ்
- இரு காந்தீயப் போராளிகள்
- மடியில் நெருப்பு – 33
- மாத்தாஹரி – அத்தியாயம் -5
- கால நதிக்கரையில்….. – அத்தியாயம் – 2
- ஒரு தீர்ப்பு முழுமையானது