ஒரு கோரிக்கை

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

நாஞ்சிலன்


கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதிய திண்ணை இதழில், ‘ இஸ்லாம் சம்மந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை’ என்று எச்.முஜீப் ரஹ்மான் எழுதியிருந்த கட்டுரை பற்றி “எழுத்தில் எளிமை வேண்டும்” என்று நான் அம்மாதம் 22 ஆம் தேதி விமர்சனக் கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். அதை எதிர் கொள்ளும் பக்குவமின்றி, என் பலவீனம் ஈனக் குரலாக ஒலித்திருப்பதாக எச்.முஜீப் ரஹ்மான் கேலி செய்துள்ளார்.(06/07/06 திண்ணை இதழ்) இது எளியவர்களை மிரட்டும் எழுத்து பிராமணீயம் ஆகும். (சொல் உபயம்: அவரே).
எனக்கு எழுதிய மறுப்பை ஓரளவு எளிய தமிழில் எழுத்தத் தெரிந்த முஜீப் – நான் என் கடிதத்தில் குறிப்பிட்டபடி – அவரது 08/06/2006 கட்டுரையில் வெறும் தத்துவ(?)ச் சொற்களை அடுக்கியுள்ளாரே தவிர அவற்றை எளிமைப் படுத்தி விளக்கவில்லை:
திண்ணையில் எழுதும் பழம் பெரும் எழுத்தாளர்களெல்லாம் இவர் படித்ததை விடவும் அதிகமான நூற்களைப் படித்து, உள்வாங்கி அவற்றின் கருத்துக்களை எளிமைப் படுத்தியே தம் நடையில் தருகின்றனர்: மாறாக இவரைப்போல் வெறுமனே பட்டியலிடுவதில்லை.
“தத்துவ செறிவுள்ள விஷயங்களை விவாதிக்கும்போது தத்துவ அடிப்படையிலே சொல்ல வேண்டியிருக்கிறது.எனவே தத்துவ சொல்லாடல்களை பயன்படுத்துகிறேன்.ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமும்,தத்துவசெறிவும்,ஆழ்ந்த பார்வையையும் கொண்டு தான் எதையும் நான் அணுகுவேன்” என்று சுய தம்பட்டம் வேறு அடித்துள்ளார் முஜீப்.
திண்ணை வாசகர்கள் மீண்டும் மேற்சொன்ன 08/06/06 கட்டுரையைப் படித்துப் பார்க்கட்டும். மேற்சொன்னபடிதான் உள்ளதா அல்லது வெறும் பட்டியல் மட்டும் உள்ளதா என எளிதில் விளங்கும்.
எளிமையாகச் சொல்லுங்கள் என்று கேட்டதற்குத் தாமதமின்றி, “பலவீனம், ஈனக்குரல், அபத்தம்” என்று “அர்த்தமும் தத்துவச் செறிவும் ஆழ்ந்த பார்வையும் கொண்டு” எனக்கு பதிலளித்துள்ள முஜீப்,. இவரது 14/04/2006 ஆம் தேதிய,”தவ்ஹீது பிராமணீயம்” என்ற கட்டுரைக்கு 20/04/2006 ஆம் நாள் “எதிர்மறைகள்” என்ற தலைப்பில் திண்ணையில் மறுப்பு எழுதிய வஹ்ஹாபிக்கு இன்றுவரை பதில் சொல்லவே இல்லை.
என்னைப்போல் எளியவர்களைப் புரியாத வார்த்தைகளால் மிரட்ட ஓடி வரும் முஜீப், தம் கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்ல வந்த வஹ்ஹாபியைக் கண்டு கொள்ளவே இல்லை.
முஜீப் முதலில் தமிழில் இலக்கணப் பிழையின்றி, ஒருமை பன்மை வேறுபாடு புரிந்து, வேற்றுமை உருபுகளை எழுதக் கற்றுக் கொள்ளட்டும்; பிறகு வேண்டுமானால் பெரிய பெரிய தத்துவச் சொற்களைப் போட்டு என்னைப்போன்ற சாதாரண வாசகனை மிரட்டட்டும்.
நன்றி.
naanjilan@gmail.com

Series Navigation