ஒரு காதலனின் டைாிக் குறிப்பு !

This entry is part [part not set] of 18 in the series 20010211_Issue

லாவண்யா


இன்றைக்காவது வந்திருக்குமா ?

அவளிடமிருந்து கடிதம் !

பழகிப் போன ஆஃபீஸ் !

பழகிப் போன அவமதிப்புகள் !

பழகிப் போன சின்னச் சின்ன தோல்விகள் !

என்ன செய்தாலும் தவறு சொல்லி பல்லிளிக்கிற முட்டாள் கம்ப்யூட்டர் !

நாள் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிற சக ஆஃபீஸ்வாசிகள் !

ஆளுக்கொரு தீவாய்

அஞ்சு மணி வரை உழைத்து விட்டு

‘ நாளைக்குப் பார்ப்போம் ‘

– சம்பிரதாயப் புன்னகையுடன் விடைபெற்று

நொிசலான தெருக்களிடை

வாகனப் புகை சுவாசிப்பிடை

வீடு நோக்கிப் பயணிக்கையில் தோன்றியது.,

இன்றைக்காவது வந்திருக்குமா ?

அவளிடமிருந்து கடிதம் !

வந்திருக்கும் !

– நினைப்பே மனசு நிறைத்தது !

ஆனால் நிஜமாய் வந்திருக்குமா ?

வந்திருக்கும் !

வந்திருக்க வேண்டும் !

வந்திருக்கலாம் !

பதில்களும் கேள்விகளாய்த் தோன்றினது

அபார்ட்மென்ட் என்கிற

சின்னச் சின்னக் கூண்டுகளை நெருங்கி

நிரம்புமுன் தபால் பெட்டி அடைந்தேன்

பதட்டத்தில் சாவி கூட தட்டுப்பட மறுத்தது.,

அவசரமாய் தேடி எடுத்துத் திறக்கையில்

மனசு பலமாய்த் துடித்தது உயிர் வரை கேட்டது !

ம்ஹூம்.,

தூசு நிரம்பின வெற்றுப் பெட்டி !

எழும்பின மனசு அடங்கினது.,

தன்னையே திட்டிக் கொண்டது.,

வராது.,

நாளைக்கும் வராது.,

நாளை மறுநாளும் வராது.,

உனக்கெல்லாம் லெட்டர் ஒரு கேடா ? ? ?

என்னைத் திட்டி அலுத்த மனசு

அடுத்து அவளைத் திட்டலானது !

என்ன செய்கிறாள் இவள் ?

எனக்கென சில நிமிடம் செலவழிக்கக் கூட மனமில்லையா ?

மூன்று கடிதங்களாய் பதில் இல்லை என்பதிற்கு என்ன அர்த்தம் ?

என்ன தப்பு செய்தேன் நான் ?

அல்லது அவள் வீட்டில் ஏதும் பிரச்சனையா ? ?

பொத்தி வைத்து வளர்த்த காதல் வெளிச்சமாய்ப் போனதோ ?

அச்சிலேறத் தகாத வார்த்தைகளில் அவளைத் துளைத்தார்களோ ?

வெளியுலகோடு தொடர்பே அனுமதியாது

ஒற்றை அறையில் வைத்துப் பூட்டப் பட்டாளோ ?

மனசு அத்தனை சாத்தியங்களும் யோசித்தது.,

உடனே அவளைப் பார்க்க வெண்டும் போலிருந்தது !

மனதிற்கென்ன.,

தூரங்கள்,

நேரங்கள்,

காத்திருக்கிற கடமைகள்,

இயல்பவை, இயலாதவைகள் என்கிற சாத்தியங்கள் என்று

எதுவும் புாியாத மனதிற்கென்ன ?

கோட்டைகள் கட்டி விடும் !

இயலாமை உணர்தலும்

அதனாலான குற்ற உணர்ச்சியும்

இன்னும் எத்தனை நாளோ தொியவில்லை !

வெறுமையாய்த் திரும்புகையில்தான் அந்த புறாவைப் பார்த்தேன்.

மூலையில் கிடந்து முனகினது !

அருகில் போய்ப் பார்த்த போது வழிந்த ரத்தம் நிலைமை சொன்னது !

என்னவாகியிருக்கும் ?

இறக்குமதிக் கார்களாய் போய்வருகிற இந்தப் பாதையில்

எங்கே அடிபட்டதோ இந்தப் புறா ?

பூவைக் காயம் செய்ய யாருக்கு முடிந்ததோ ?

அவசரமாய் ஏதேனும் செய்யத் துடித்தேன் !

பக்கத்துத் தெருவில் ஒரு பிராணிகள்டாக்டர் பலகை கண்டது ஞாபகம் வந்தது.

புறாவை அப்படியே அள்ளின போது அது லேசாய்த் துடித்தது.,

வண்டியில் முன்னால் அதை வைத்து அதிகம் அசைக்காமல் விரைந்தேன்.

என் நேரமோ, புறாவின் நேரமோ, டாக்டர் இருந்தார்.

நடுவிரலில் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி புறாவை ஆராய்ந்தார்.

‘ என்ன மேன் ?., உன் வண்டியாலே இடிச்சியா இதை ? ‘

‘ இல்லை டாக்டர் ‘

அவசரமாய்த் தலையாட்டினதை அவர் நம்பவில்லை.

சின்ன காயம்தான்.,

கால் மணி நேர வேலை.

காயத்தை சுத்தம் செய்து மருந்தமைத்து

சின்னதாய் ஒரு ப்ளாஸ்டர் போட்டபோது புறா சாியாய்ப் போனது.

பறக்கத் துடித்ததை கவனமாய்ப் பிடித்து என்னிடம் கொடுத்தார் டாக்டர்.

பணம் எடுத்துக் கொடுத்தேன்.

‘ இது உன் புறாவா மேன் ? ‘

‘ இல்லை டாக்டர் ‘

‘ அப்படான்னா நீ ஏன் மேன் பணம் தரணும் ?

உன்னைப் போலே நானும் சேவை செய்யக் கூடாதா ? ‘

வெள்ளையாய்ச் சிாித்தார்.

‘இந்த மாதிாி வைத்தியங்களுக்கு நான் பணம் வாங்கறதில்லை மேன்., போய் வா ‘

உலகில் எங்கேயும் மனிதர்கள்.,

தேடிப் பார்க்கத்தான் பொறுமை வேண்டும் !

யோசித்தபடி வெளியே வந்த போதுதான் அந்த யோசனை தோன்றினது.

இந்தப் புறாவை நானே வளர்த்தாலென்ன ?

மனசுக்குள் ஒரு காட்சி விாிந்தது.,

காலை எழுந்தவுடன் இது எனக்கு ‘குட்மார்னிங் ‘ சொல்வதாய்.,

ஆஃபீஸ் கிளம்புகையில் நானும் உடன்வருவேன் என

பிடிவாதமாய் என் தோள் சேர்வதாய்.,

நான் சாப்பிடுகையில் கூடே சோறுண்பதாய்.,

என் மானிட்டர் மேலமர்ந்து சமர்த்தாய் சூழல் ரசிப்பதாய்.,

இன்னும் காட்சிகள் கற்பனையில் உதயமாக உதயமாக

என் ஆசை கூடிக் கொண்டே போனது

மனசு சிலசமயம் நல்லதும் செய்யும்.,

கடைசியாய் அது ஒரு காட்சி விாித்தது –

ஒரு மரக்கிளையில் உட்கார்ந்த

இதன் இணைப் பறவை.,

தன்னந்தனியாய் இதனைத் தேடுவதாய்.,

வாடுவதாய்.,

அதன் கண்களில் நிரந்தர சோகம் குடி கொண்டதாய்.,

சோகத்தில் அதன் முகம்,

என்முகம் போலவே.,

ஒரு வினாடியில் பூட்டிக் கிடந்த இருதயம் திறந்து கொண்டது !

கைகளிடைத் துடித்த பறவையைப் பறக்க விட்டேன்

அவசரமாய்ச் சிறகு விாித்த அது முதலில் கீழே விழ இருந்தது.,

எந்த தடுமாற்றமும் சில காலம்தான்

பின் வெண்சிறகுகள் விாித்து சந்தோஷமாய்ப் பறந்தது.

திரும்பி நின்று எனக்கொரு நன்றி சொல்லிப் போவதாய் நினைத்துக் கொண்டேன்.

போகட்டும்.,

அதுவேனும் இணையுடன்

சந்தோஷமாயிருக்கட்டும் !

முன்னைவிட துள்ளலாய் நடந்தபோது

மனசு முதுகு தட்டிச் சொன்னது.,

‘ கவலைப் படாதே.,

நாளைக்கு நிச்சயம் அவளிடமிருந்து

கடிதம் வரும் ‘

நம்பிக்கை துளிர்த்தது

Series Navigation