ஒரு காடழிப்பு
பட்டுக்கோட்டை தமிழ்மதி

ஒரு தீவில்
மனிதர்களை விட
மரங்களே
உயர்ந்து தெரிகின்றன.
ஒரு பூங்காவில்
மனிதர் நெரிசலாய்
மரங்கள் நெருக்கமாய்.
மனிதனுக்கு
மனிதனே தடைக்கல்லாய் கிடக்க
நடை தொடர நதியின் குறுக்கே
பாலமாய் கிடக்கிறது
மரம்.
தான் வெயிலில் காய
தன்னிழலில் யாரென்று
போயென்று சொல்வதில்லை
வந்தாரை வாழவைக்கும்
மரம்.
ஆனாலும்
காடழிக்க வரும் கால்ககளை குத்த
முள்ளாகவும் முளைக்கிறது.
தன்னினம் தழைக்க
தனிமரம்
தோப்பாகப் பார்க்கிறது.
தோப்பை தனிமரமாக்க
வேரறுக்கிறது மனிதமனம்.
மரம்
வானை பொழியவைக்கிறது.
மனிதர்
கண்ணை சொட்ட வைப்பது
கண்ணீர் மழை.
தானசைந்த காற்றில்
மரம்
மூச்சு விடவைக்கிறது.
குரல்வளை நெரித்து
மனிதகரம்
மூச்சடக்கி விடுகிறது.
மனிதராயிருக்க
மரத்துக்கு தெரிகிறது
மனிதருக்கு தெரிகிறது
மரமாய்
மனிதர்களை வெட்டிச்சாய்க்க.
—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com