ஒன்று ! இரண்டு ! மூன்று !

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

சி. ஜெயபாரதன், கனடாஒன்றானது ! உலக முதலானது !
ஓம் ஆனது !
ஓம் என்ற மந்திரத்தின்
ஒலியானது !
அகர முதல எழுத்தானது !
ஆதி, அந்த மில்லாக்
கீதை யானது !
அணையாத சுடரானது !
சுடரின் ஒளியானது !
ஒளியின் மூலக் கனலானது !
நீக்கமற நிறைந்து
நெடுங் கால மானது !

அதனை நீ சிவமென்று
துதித்தா லென்ன ?
ஏசுவென நீ
நேசித்தா லென்ன ?
நபியென்று நீ
தொழுதா லென்ன ?
உலக மதங்கள்
நதிபோல
எப்புறம் நெளிந் தோடினும்
தப்பாமல் சேர்வது
ஒரு கடலில்தான் !

பிரபஞ்ச விசைகள்
இரண்டே !
ஈர்ப்பு விசை ! விலக்கு விசை !
ஆண், பெண் இனம் இரண்டே !
எதிரினம் ஈர்க்கும் ! நேரினம் விலக்கும் !
துருவங்கள் இரண்டே !
நேர்த் துருவங்கள் விலக்கும் !
எதிர்த் துருவங்கள் ஈர்க்கும் !
அண்டங்கள்
ஒன்றை ஒன்று ஈர்க்கும் !
பிரபஞ்சத்தின் விளிம்பு
உப்பி விரியும்
விலக்கு விசையால் !

ஆணும், பெண்ணும் ஒன்றாய்
வாழ்வார் !
ஆணும், ஆணும் ஒரு வீட்டில்
வாழ்வார் ! ஆனால்
தாயோ, மகளோ
தமக்கையோ, தோழியோ
நான்கு முலைகள்
சேரா தென்று கூறினாள்,,
கேரள
மூதாட்டி ஒருத்தி !

முக்கிய தொழில் உனக்கு
மூன்று.
ஆக்குவாய் ! அளிப்பாய் ! அழிப்பாய் !
உயிரினத்தை
யுக யுகமாய் உண்டாக்கினாய் !
உயிரனத்துக்குப்
பயிரினத்தைப் படைத்தாய் !
விலங்கினத்தை விருத்தி செய்தாய் !
மீன்வளத்தை வளர்த்தாய் !
காட்டி மிராண்டிகளாய்த்
திரிந்த
கற்கால மனிதரைக்
கலாச்சார, நாகரீக, பரிவுள்ள
மானிட ராக்கி
ஏனப்பா
உயிரினத்தை அழிக்கும் உன் வேலையை
வயிற்று வெடி மூர்க்கரின்
கையில் கொடுத்தாய் ?

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 7, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா