ஐ. சாந்தனின் இரு குறுங்கதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

ஐ. சாந்தன்



01 அலுமார்

>< சீனிச்சரை சுற்றிவந்த கடதாசி, எடுத்து விரித்துப் பார்த்தான். ஏதோ ஒரு பள்ளிக் கூடத்தின் பரீட்சைத் தாள் போலிருந்தது. சமயபாடம். நாலாம் வகுப்பு. பள்ளிக்கூடத்தின் பெயர் இருந்த இடம் கிழிந்துபோக, மூன்றாம் தவணை என்பது பாதி தெரிந்தது. பெயர் என்றிருந்த இடத்தில், க. சிவசுதன் என்று குழந்தை எழுத்துக்கள். வலு அக்கறை எடுத்து எழுதப்பட்டவை. ஐந்து வயது முடிய முதலாம் வகுப்பிற் சேர்ந்திருந்தாலும், இதை எழுதியபோது அந்தப் பிள்ளைக்குக் கிட்டத்தட்ட ஒன்பது வயதிருக்கும். ஒன்பது வயதில் ஒரு பிள்ளை எழுதிய பரீட்சையின் விடைத்தாள்... பெயருக்குப் பக்கத்தில் சிவப்பு வட்டத்திற்குள் ஒரு சிவப்பு முப்பது முழுசிக் கொண்டிருந்தது. கேள்வித்தாளிலேயே விடையும் எழுத வேண்டும். அச்சடித்த கேள்விகள். அருகில் விடை எழுத இடைவெளி. சுருக்கங்களை இழுத்துவிட்டு மேலோட்டமாகப் பார்த்தான். 'சரி'களிலும் அதிகமான 'பிழை' அடையாளங்கள். முதலாங் கேள்வி, தேவாரம். 'தோடுடைய செவிய'னை சிவசுதன் சரியாக எழுதியிருந்தான். பத்து மாக்ஸ். பிறகு அதிகமாக எல்லாம் ஒருசொல் விடைகளாக இருந்தன, கடைசிக் கேள்வியை விட. அதில் திருக்கோவிலில் செய்யத் தகாத ஐந்து குற்றங்களை எழுதும்படி கேட்டு, கீழே ஐந்து வரி விட்டிருந்தார்கள். கதைத்தல், துப்புதல் - என்ற இரண்டு சரி. மற்ற மூன்றும் வெறுமை. இடையில் ஓரிடத்தில் 'அலுமார்' என்றெழுதி அந்தப் பிள்ளை பிழை வாங்கியிருந்தது. கேள்வியைப் பார்த்தபோது - கீழக் காணுஞ் சொற்களுக்குப் பொருள் தருக. அந்தணர் - பிராமணர். சரி. அடுத்தது அமரர் - அதற்குத்தான், அலுமார். அமரருக்கும் அலுமாருக்கும் என்ன ஒற்றுமை அந்த மனதில் பட்டிருக்கும்? அநுமாரை 'அலுமார்' என்றெழுதிய அந்தப் பிஞ்சை ஒருதரம் பார்த்துக் கொஞ்ச, அவன் ஆவல் கொண்டான். --- நன்றி/மல்லிகை 1978 02 க வ லை


மகாதேவன் விஷயத்தைச் சொல்லியே நாலுநாளாகி விட்டது. போன புதன்கிழமையிலிருந்து செல்லத்துரையர் ஆஸ்பத்திரியிலாம்.

புதனோடு புதன், இன்று எட்டுநாள் – இன்னும் போய்ப்பார்க்க முடியவில்லை! என்ன மாதிரி மனுசன், எத்தனை உதவிகள் செய்தவர், உடனேயே போய்ப் பார்த்திருக்க வேணும்…

கமலம் அவனிடம் காலையிலும் சொன்னா. ”இண்டைக்காவது அவரை ஒருக்கா போய்ப் பார்த்திட்டு வாங்கோ…” அவள் சொல்லமலேகூட அவன் போகக் கூடியவன்தான், போக வேண்டியவன்தான். பஸ் காலை வாரி விடாமல் இருந்தால் முந்தநாளே கூடப் போய்ப் பார்த்திருக்கலாம். நேற்றெல்லாம் தலைது¡க்க முடியாமல் வேலை. விஷயத்தைச் சொன்ன மகாதேவன் இரண்டுநாள் முந்திச் சொல்லியிருக்கக் கூடாதா என்றிருந்தது.

இன்றைக்கும் மினைக்கெட்டுவிட்டு வீணாகத் திரும்பத்தான் வேணுமோ என்று சிவநாதன் யோசிக்கிறபோதே, து¡ரத்தில் பஸ் உறுமிக் கேட்டது.

பஸ் ஸ்ராண்டில் இறங்கி, கால் கிலோ முந்திரிகைப் பழமும், நல்லதாக ஒரு பிஸ்கோத்துப் பெட்டியும் வாங்கினான். அவர் கட்டாயம் ஏசுவார். ”இதெல்லாம் எதுக்கு வாங்கிக்கொண்டு வந்தநீ?” என்று. இருந்தாலும் வெறுங்கையோடு வருத்தம் பார்க்கப் போகக்கூடாது – அதுவும் அவரை. சொல்லி வைத்தாப்போல நேரம் சரியாக வந்திருக்கிறது. ஆஸ்பத்திரிக்கு வந்தபோது, திறந்த கேற்றின் வழியாக ஆட்கள் நெருக்கியடித்து நுழையத் தொடங்கியிருந்தார்கள். கொஞ்சம் ஒதுங்கிநின்று, நெரிசல் குறைய உள்ளே போனான்.

விபரமெல்லாம் அன்றைக்கே மகாதேவனிடம் வடிவாகக் கேட்டு அறிந்து வைத்திருந்தான். பதினெட்டாம் வாட். பதினாலாம் கட்டில்.

தன்னைக் கண்டவுடன் செல்லத்துரையர் என்ன கேட்பார் என்று நினைத்துப் பார்த்தான். ”ஆர் சொன்னது உனக்கு?” அல்லது ”ஏன் அவசரப்பட்டு ஓடி வந்தநீ?” எப்படியிருந்தாலும் தன் அன்பையும் நன்றியையும் இது காட்டும். படியேறி மேலே போனான்.

மூக்கைப் பொத்திக்கொண்டு அந்த நீண்ட நடைவழியைக் கடக்க நேர்ந்தது. அவரவர் அநுபவிக்கிற வியாதிக்காக மட்டுமல்லாமல் இந்த நாற்றத்தை சகித்துக் கொள்வதற்காகவும் சேர்த்து அந்த நோயாளிகளில் அநுதாபம் மிகுந்தது. பதினெட்டாம் வாடில் நழைந்தான். பதினாலாம் கட்டிலுக்கு நேரே போனான். ஆனால், அதிற் படுத்திருந்தவர் செல்லத்துரை யரல்லர். மகாதேவன் நம்பரை மறந்துபோய் மாறிச் சொல்லியிருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக்கொண்டே நீள நடந்து போனான். அவரைக் காணவில்லை.

”பதினெட்டாம் வாடில் ஏ – பி, என்று இரண்டு இருக்கு. இது ‘பி’ – ஏ போய்ப் பாருங்கோ…” என்று யாரோ சொன்னார்கள். அதுதானே, மகாதேவன் ஏ, என்றுசொல்ல மறந்து விட்டான்.

சிவநாதன் ‘பி’யைவிட்டு வெளியேறி ‘ஏ’க்குள் போனான். நாலு, ஏழு, எட்டு, பத்து, பதினாலு! படுத்திருந்தவர் போர்த்துக்கொண்டு மறுபுறம் திரும்பிக் கிடந்தார். தன்னைவிட வேறுயாரும் பார்க்க வரவில்லையா? இப்ப பன்னிரண்டு மணிதானே? கொஞ்சம் பிந்தித்தான் வருவார்கள் – அருகே போனான்.

பார்த்ததும் அவனுக்கு மகாதேவன் மேல் ஆத்திரமாய் வந்தது – அவரும் செல்லத்துரையரில்லை. திரும்பினான். பதினைந்தாம் கட்டிலில் எழும்பிச் சாய்ந்திருந்தவர், ”ஆரைத் தேடுகிறாய் தம்பி?” என்று கேட்டார்.

சொன்னான்.

”எடட, அவரோ? உந்தக் கட்டிலிலைதான் இருந்தவர். இப்ப நல்ல சுகம். நேற்று துண்டு வெட்டிக்கொண்டு வீட்டை போயிட்டார்…”

”சுகமோ? வீட்டைப் போயிட்டாரோ?… அட சே!” என்றான், சிவநாதன்
.
—-
1981

(எஸ் ஷங்கர நாராயணன் storysankar@gmail.com மூலம் பெறப்பட்டது)

Series Navigation