ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை ?

This entry is part [part not set] of 17 in the series 20010715_Issue

மார்வின் ஹாரிஸ்

(மிகச்சிறந்த மானுடவியலாளரான மார்வின் ஹாரிஸ், தனது புகழ் பெற்ற ‘பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ‘ என்று தலைப்பிட்ட புத்தகத்தின் முதல் அத்தியாயம் இந்தக் கட்டுரை. இந்தப் புத்தகம் கல்லூரி மானுடவியல் படிப்புக்கு பாடப்புத்தகமாக இருக்கிறது.)

நடைமுறையில் இருக்கும் சில விஷயங்கள் எப்படி நம் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பது பற்றி நான் பேசும்போதெல்லாம், யாராவது ஒருவராவது ‘இந்தியாவில் இருக்கும் பஞ்சத்தில் அடிப்பட்ட விவசாயிகள் ஏன் அங்கிருக்கும் பசுக்களைச் சாப்பிட மாட்டேன் என்கிறார்கள் ? ‘ என்று கேட்பது நிச்சயம். பஞ்சத்தில் அடிப்பட்ட வறுமை நிரம்பிய ஒரு விவசாயி, பக்கத்தில் கொழுத்த மாட்டை வைத்துக்கொண்டு, பசியால் இறப்பது என்பது மேற்கத்தியர்கள் கற்பனை செய்யும் மர்மம் நிரம்பிய காட்சிதான். பல இடங்களில் மேற்கோள் காட்டப்படும் இந்தக் காட்சி, கிழக்கத்தியர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது பற்றி நாம் கொண்டிருக்கும் உறுதியான எண்ணங்களை மேலும் உறுதிப்படுத்துகிறது. ‘எப்போதும் இங்கிலாந்து இருக்கும் ‘ என்பது போல, இந்தியாவில் மக்களின் உயிர்களை விட இந்தியாவின் ஆன்மீக விஷயங்கள் முக்கியமானவை என்ற நம் கருத்தாக்கம் நம் எண்ணங்களை சாந்தப்படுத்துகிறது. அதே நேரம் இது நம்மை வருத்தப்பட வைக்கிறது. நம்மை விட மிகவும் வித்தியாசமான மக்களை நாம் எப்படி புரிந்து கொள்வது என்றும் நம்மை வியக்க வைக்கிறது. இந்துக்கள் பசுக்களின் மீது அன்பு செலுத்துவதற்கு, ஏதேனும் நடைமுறை காரணங்கள் இருக்கும் என்பது, இந்துக்களைவிட, நம்மை மிகவும் காயப்படுத்துகிறது. இந்த புனிதப்பசு – வேறெப்படி சொல்வது – நமது புனிதப்பசுக்களில் ஒன்று.

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஆங்கிலத்தில் புனிதப்பசு sacred cow என்ற வார்த்தை கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டிய விஷயத்தை குறிக்க உபயோகப்படுகிறது. அதிலும் ஒரு விஷயத்தை விமரிசிக்க வேண்டுமென்றால் அதனை ‘புனிதப்பசு என்று இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்;அது தவறு ‘என்று தொனியில் உபயோகப்படுத்தப்படுகிறது. உதாரணமாக ‘ராணுவத்துக்கு நாடு நிறையச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை, அது என்ன புனிதப் பசுவா ? ‘ என்பது போல)

இந்துக்கள் பசுக்களை கும்பிடுவதற்குக் காரணம் பசு உயிர்வாழும் எல்லா விஷயங்களுக்கும் குறியீடாக இருப்பதால். மேரி கடவுளின் அம்மா என்று கிரிஸ்துவர்கள் பார்ப்பது போல, இந்துக்களுக்கு, பசு என்பது உயிர்வாழும் எல்லாவற்றும் தாய். ஆகவே ஒரு பசுவைக் கொல்வது போல பெரும் பாவம் இந்துவுக்குக் கிடையாது. ஒரு மனித உயிரை எடுப்பதற்குக்கூட, ஒரு பசுக்கொலைக்கு இருப்பது போல ஆழ்ந்த பொருளும், பெரும் பாவமும், மிகுந்த கீழ்த்தரமும் கிடையாது.

இந்தியாவின் பசிக்கும், வறுமைக்கும் முதலாவது காரணம் இந்த பசுவை வணங்குவதுதான் என்று பல நிபுணர்கள் கூறுகிறார்கள். பசுக்கொலை தவறு என்று கருதுவதால், சுமார் 10 கோடி உபயோகமில்லாத விலங்குகள் உயிரோடு வைத்திருக்கப்படுகின்றன என்று மேற்கத்திய விவசாய அறிஞர்கள் கூறுகிறார்கள். பசுவைக் கும்பிடும் இந்தப்பழக்கம், பாலுக்கோ மாமிசத்துக்கோ உதவாத இந்த விலங்குகளை உயிரோடு வைத்திருந்து, அவைகளை பிரயோசனமான மற்ற விலங்குகளோடும், மனிதர்களோடும் உணவுக்குப் போட்டிப் போட வைத்து இந்திய விவசாயத்தையே வீணடிக்கின்றன என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் கால்நடையில் சுமார் பாதிக்கும் மேற்பட்டவை உணவு உற்பத்திக்கு தேவையற்றவை என்று 1959இல் ஃபோர்ட் பெளண்டேஷன் உதவிய ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. 1971இல் பென்ஸில்வேனியா பல்கலைக்கழக பொருளாதார அறிஞர், இந்தியாவில் சுமார் 3 கோடி உதவாத பசுக்கள் இருக்கின்றன என்று சொன்னார்.

இவ்வளவு தேவையற்ற, பொருளாதாரத்துக்கு பயன்படாத பசுக்கள் அதிக அளவில் இருப்பதற்குக் காரணம் நேரடியாக மூடத்தனமான இந்துக் கொள்கைகள் மூலமே என்று தோன்றுகிறது. தெருவெங்கும் அலையும் இந்தப்பசுக்களுக்கு இருக்கும் சுதந்திரம் டெல்லி, கல்கத்தா, சென்னை, மும்பாய் போன்ற பெரு நகரங்களுக்கு வரும் உல்லாசப்பயணிகளுக்கு ஆச்சரியமாகவே இருக்கும். இந்த விலங்குகள் தெருவெங்கும் அலைகின்றன. கடைகளில் சுதந்திரமாகப் போய் தின்கின்றன. தனியார் தோட்டங்களுக்குள் உடைத்துக்கொண்டு செல்கின்றன. எல்லா நடைபாதைகளிலும் கழிந்து வைக்கின்றன. கார்கள் போகும் பெரும் தெருக்களின் நின்றுகொண்டு எந்தக்காரையும் போகவிடாமல் அமைதியாக அசை போட்டுக்கொண்டு நிற்கின்றன. கிராமப் புறங்களிலும், பசுக்கள் எல்லாத்தெருக்களிலும் நின்றுகொண்டு இருக்கின்றன. ரயில் தண்டவாளத்தின் அருகே மெதுவாக நடந்து போகின்றன.

பசுக்கள் மீது அன்பு செலுத்துவது வாழ்க்கையை பல விதங்களில் பாதிக்கின்றது. வயதாகிப் போன பசுக்கள் இருப்பதற்காக அரசாங்கம் தனி வாரியங்களையும் கூடாரங்களையும் கட்டுகின்றது. சென்னையில் தெருவில் அலையும் நோயுள்ள பசுக்களை வளைத்து அவைகளுக்கு சிகித்சை செய்து ஆரோக்கியமாக்கி அவைகளுக்கென்று தனி வயல்களைக் கொடுத்து மேய விடுகின்றது அரசாங்கம். விவசாயிகள், பசுக்களை, தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதுகிறார்கள். அவைகளுக்கு மாலைகள் போட்டு அலங்காரம் செய்கிறார்கள். அவைகள் நோயுற்றால் அவைகளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். புதிய கன்று பிறந்தால், பூசாரியையும், பக்கத்துவீட்டுக்காரர்களையும் கூப்பிட்டு கொண்டாடுகிறார்கள். அலங்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தலையுடன் பசுவின் உடலுடன் உள்ள ஒரு பெண்ணின் படத்தை இந்தியாவின் எல்லா இந்துக்களின் வீட்டிலும் காலண்டராகப் பார்க்கலாம். இந்தப்பசுவின் ஓவ்வொரு காம்பிலிருந்தும் பால் சொரிகிறது.

அழகான பெண்ணின் முகத்திலிருந்து ஆரம்பித்து, படத்தில் இருக்கும் கொழுத்தப்பசுவுக்கும், நிஜத்தில் பார்க்கும் பசுவுக்கும் அதிக ஒற்றுமைகள் இல்லை. நிஜப்பசுவுக்கு எலும்புகள்தான் பிரதானமான விஷயம். காம்பிலிருந்து பால் சொரிவது இருக்கட்டும், இந்தப்பசு ஒன்று தன் கன்றையே வளரும் வரைக்கும் பால் கொடுக்க இயலாது. இந்தியாவில் இருக்கும் ஜெபு பசு ஒன்று தரும் சராசரி பால், வருடத்துக்கு சுமார் 210 லிட்டருக்கும் குறைவு. சராசரி அமெரிக்க பசு ஒன்று சுமார் 2500 லிட்டர் பால் தருகிறது. சாம்பியன் பால் தரும் பசுக்கள், ஒரு வருடத்தில் சுமார் 10000 லிட்டர் வரைக்கும் தருவது சாதாரணம். ஆனால் இந்த ஒப்புமை முழுக்கதையையும் சொல்வதில்லை. எந்த வருடத்தை எடுத்தாலும், இந்தியாவின் ஜெபு பசுக்களில் பாதி, பாலே தருவதில்லை. ஒரு சொட்டுக்கூட தருவதில்லை.

விஷயங்களை மோசமாக்க வேண்டுமென்றால், இந்த பசுக்கள் மீது இருக்கும் அன்பு, மற்ற மனிதர்கள் மீது அன்பு தோன்றும் படி தூண்டுவதில்லை என்பதையும் பார்க்க வேண்டும். முஸ்லீம்கள் பன்றிக்கறியை வெறுப்பவர்களாக இருப்பதால், அவர்கள் மாட்டிறைச்சி உண்பதால், பல இந்துக்கள் அவர்களை பசுக்கொலைக்காரர்களாகப் பார்க்கிறார்கள். இந்தியப்பிரதேசம் பிரிந்து இந்தியாவாகவும், பாகிஸ்தானாகவும் பிரிவதற்கு முன்னால், முஸ்லீம்கள் பசுக்களை கொல்வதை தடுக்க வேண்டி வருடாவருடம் மதக்கலவரங்கள் நடந்து வந்திருக்கின்றன. 1917இல் பீகாரில் நடந்த பசுக்கலவரத்தில் சுமார் 30பேர் இறந்ததும், 170 முஸ்லீம் கிராமங்கள் கொளுத்தப்பட்டதும், இன்னும் இந்தியா பாகிஸ்தான் எதிர்ப்புணர்வுக்குக் காரணமாக இருக்கின்றன.

கலவரத்தை மிகவும் கண்டித்தாலும், மோகன் தாஸ் கே காந்தி மிகவும் தீவிரமாக பசுக்களின் மீது அன்பு செலுத்துபவராக இருந்தார். அவர் பசுக்கொலையை முழுமையாக தடுக்க வேண்டினார். இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது, பசுக்களுக்கு தனியாக உரிமைகளையும், பசுக்கொலையை தடுக்கவும் சட்டம் எழுதப்பட்டிருந்தது (கடைசியில் நிறைவேறவில்லை). சில மாநிலங்கள் பசுவதையை முழுமையாகத் தடைசெய்திருக்கின்றன. சில மாநிலங்கள் சில விலக்குகளை அளித்திருக்கின்றன.இந்த பசு சம்பந்தமான கேள்வி, இந்துக்களுக்கும், இந்தியாவில் மீதமிருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மட்டும் கலவரங்களையும், சண்டைகளையும் உருவாக்குவதில்லை. ஆளும்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும், தீவிரவாத இந்து குழுக்களுக்கும் இடையேயும் போராட்டங்களை தோற்றுவிக்கின்றன. 1966, நவம்பர் 7 ஆம் தேதி, மஞ்சள் பூக்கள் அணிந்து பசுசாண சாம்பலை உடல் முழுவதும் பூசிய நிர்வாணமான சாமியார்கள் தலைமை தாங்க, சுமார் 12000 பேர்கள், பசுக்கொலை தடைச்சட்டம் கோரி, இந்திய பாராளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்தினார்கள். அதற்கு அப்புறம் அங்கு நடந்த கலவரத்தில் 8 பேர்கள் இறந்தார்கள்; 48 பேர் காயமடைந்தார்கள். இதன் பின்னர் தேசம் முழுவதும் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, பசு பாதுகாப்பு பிரச்சார கமிட்டியின் தலைவரான முனி சுஷில் குமார் என்பவர் தலைமை தாங்கினார்.

நவீன தொழில்மயமான உபாயங்களைக் கையாளும் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் நன்கு அறிந்த மேற்கத்திய பார்வையாளர்களுக்கு, இது போன்ற பசுக்களின் மீது அன்பு, பொருளற்றதாகவும், ஏன் தற்கொலைக்கு ஒப்பானதாகவும்கூட தென்படும். இந்த நிபுணர்கள் இந்த உபயோகமில்லாத விலங்குகளை எல்லாம் பிடித்து அது போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு அனுப்பிவைக்க மிகவும் ஆசைப்படுவார்கள். இருப்பினும், பசுக்கள் மீது அன்புசெலுத்துவதை கண்டிப்பதில் சில முரண்பாடுகளைக் காணலாம். இந்த புனிதப்பசுவுக்கு ஏதேனும் நடைமுறைக்காரணம் இருக்குமா என நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வித்தியாசமான இந்திய அரசாங்க அறிக்கையைப் பார்க்க நேர்ந்தது. இந்தியாவில் பசுக்கள் தேவைக்கு அதிகமாக இருக்கின்றன ஆனால் காளைகள் தேவைக்குக் குறைவாக இருக்கின்றன என்று கூறுகிறது இந்த அறிக்கை. இவ்வளவு பசுக்கள் இருக்கும்போது எப்படி காளைகள் குறைவாக இருக்கும் ? காளைமாடுகளும், எருமைகளுமே இந்தியாவின் வயல்களை உழப் பயன்படுகின்றன. பத்து ஏக்கர் அல்லது குறைவாக இருக்கும் வயல்களுக்கு, இரண்டு காளைகளோ அல்லது இரண்டு எருமைகளோ போதுமானவை. உழுவதை மட்டுமே கணக்கெடுத்துப் பார்த்தால், உண்மையில் தேவைக்கும் குறைவாகவே காளை மாடுகள் இருக்கின்றன என்பது தெரியும். இந்தியாவில் சுமார் 6 கோடி பண்ணைகள் இருக்கின்றன. ஆனால் சுமார் 8 கோடி உழு மாடுகளே இருக்கின்றன. ஒவ்வொரு பண்ணைக்கும் சுமார் 2 உழுமாடு இருக்கும் பட்சத்தில், 12 கோடி உழுமாடுகள் அல்லவா இருக்க வேண்டும் ?

விவசாயிகள் உழுமாடுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்வதால், நிலைமை அவ்வளவு மோசமில்லை. இருப்பினும், சில நேரங்களில் நடைமுறைக்கு ஒத்துவராது. பருவ மழைக்கு தகுந்தாற்போல உழவேண்டும். சில நேரங்களில் உழும் நேரம் தப்பிவிட்டால், மாடு இருந்தும் பிரயோசனமில்லை. உழுவது முடிந்தாலும், தனது மாட்டு வண்டியை இழுக்க விவசாயிக்கு இரண்டு மாடுகள் வேண்டும். இந்தியாவில், மாட்டு வண்டியே பொருட்களை விநியோகம் செய்யும் முக்கியமான விஷயம். சிறிய பண்ணைகளும், கால்நடைகளும், ஏர்களும், மாட்டுவண்டிகளும் இந்திய விவசாயப் பொருளாதாரத்தைக் கீழே இழுக்கின்றனவாக இருக்கலாம், ஆனால் இவைகள் பசுவின் மீது அன்பு செலுத்துவதால் வந்தவை அல்ல.

இந்தியாவின் விவசாயக்குடும்பங்களின் மேல், இந்த உழவுமாடுகள் எண்ணிக்கைக் குறைபாடு ஒரு பெரும் பயமுறுத்தலாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு உழவு மாடு வியாதி வந்து இறந்தால், ஒரு ஏழை விவசாயி தன்னுடைய பண்ணையையே இழக்க வேண்டி வரும். அந்த மாட்டுக்கு பதிலாக இன்னொன்று இல்லையென்றால், இன்னொன்று வாங்க, பணம் கந்து வட்டியில் கடன் வாங்க வேண்டி வரும். இப்படிப்பட்ட கடன்களால் தாக்குண்ட பல குடும்பங்கள், தங்கள் நிலங்களை விற்றுவிட்டோ, அல்லது மற்றவர்களிடன் குத்தகைக்கு விட்டுவிட்டோ, தினக்கூலிகளாகவும் பஞ்சம் பிழைக்க நகரத்துக்கும் செல்கின்றன. வேலையற்றவர்களும், வீடற்றவர்களும் நிரம்பி வழியும் நகரங்களுக்கே ஏராளமான ஏழை விவசாயிகள் போகும்படிக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு அமெரிக்க விவசாயி தன்னுடைய டிராக்டரை மாற்றவோ அல்லது ரிப்பேர் செய்யவோ முடியாமல் இருப்பது போலத்தான், தன்னுடைய உழவு மாடு இழந்த ஒரு இந்திய விவசாயியின் நிலையும். ஆனால் இதில் முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. டிராக்டர்கள் தொழிற்சாலைகளில் செய்யப்படுகின்றன. காளை மாடுகள் பசுக்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. பசு வைத்திருக்கும் ஒரு விவசாயி தன்னுடன் காளை மாடு செய்யும் தொழிற்சாலையையே வைத்திருக்கிறான். பசுவின் மீது அன்பு இருக்கிறதோ இல்லையோ, இது ஒன்றே அவன் அந்தப் பசுவை மாட்டுக்கறி பண்ணாமல் இருப்பதற்கு போதுமான காரணம். 210 லிட்டர் பால் கொடுக்கும் பசுவின் மீது ஏன் ஒரு இந்திய விவசாயி அன்பு செலுத்துகிறான் என்பதை இப்போது ஒருவர் பார்க்க ஆரம்பிக்கலாம். காளை மாடுகளை உருவாக்குவதே பசுவின் முக்கிய பொருளாதார வேலையாக இருக்கும் பட்சத்தில் அதனை பால் கொடுப்பதற்காகவே வளர்க்கப்படும் அமெரிக்கப் பசுக்களோடு ஒப்பிடுவது சரியல்ல என்பதையும் பார்க்கலாம். இருப்பினும், ஜெபு பசு கொடுக்கும் பால் பெரும்பாலான ஏழைக்குடும்பங்களின் உணவு தேவையை முக்கியமான முறையில் தீர்க்கிறது. பசியின் மூலையில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு சிறிதளவு பால் கூட அவர்களது ஆரோக்கியத்துக்கு முக்கியமான விஷயம்.

இந்திய விவசாயிகளுக்கு பால் தேவைப்படும்போது அவர்கள் எருமையிடம் போய்விடுகிறார்கள். எருமை நீண்டகாலத்துக்கு பால் கொடுக்கும். அதன் பாலில் ஜெபு மாட்டுப் பாலைவிட அதிகம் கொழுப்பும் இருக்கும். வெள்ளம்போல இருக்கும் நெல்வயல்களில் ஆண் எருமை மாடுகளால் நன்றாக உழ முடியும். ஆனால், ஜெபு காளைமாடுகள் பல வேலைகள் செய்யக்கூடிய மாடுகள். அவை புஞ்சை நில விவசாயத்துக்கு மிகவும் ஏற்றவை. அதை விடவும் முக்கியம், ஜெபு மாடுகள் குறிப்பிடத்தக்க முறையில் நீண்ட வறட்சிக்காலங்களைத் தாங்கக்கூடியவை என்பது. இந்த நீண்ட வறட்சிக் காலங்கள் அடிக்கடி இந்தியாவின் பல பகுதிகைளைத் தாக்குவது அறிந்ததே.

விவசாயம் என்பது, மனிதர்களும், இயற்கையும், விலங்குகளும் உறவாடும் பெரும் அமைப்பின் பகுதி. அமெரிக்க விவசாயத்தை மட்டும் மனதில் கொண்டு, இதன் முழுமை புரியாமல், தனித்தனியாக விஷயங்களைப் பார்த்து முடிவுக்கு வருவது ஆபத்தானது. தொழில்மயப்படுத்தப்பட்ட, அதிக சக்தி உபயோகிக்கும் மேற்கத்திய நாடுகளின் பார்வையாளர்கள் பார்க்காமல் போய், கேவலப்படுத்தப்பட்டதையும் தாண்டி, இந்திய விவசாயத்தில் கால்நடைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உரமாக கால்நடைச்சாணம் இந்திய விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் இந்த இடத்தை முழுமையாக வேதிப்பொருட்கள் பிடித்துவிட்டன. அமெரிக்க விவசாயிகள் குதிரைகளையும் கோவேறுகழுதைகளையும் விட்டுவிட்டு டிராக்டருக்குச் சென்ற பின்னர் அவர்கள் முழுமையாக சாணத்தை உபயோகப்படுத்துவதையே நிறுத்திவிட்டனர். அதன் பிறகு, டிராக்டர்கள் உரத்துக்குப் பதிலாக விஷத்தை வெளியேற்றுவதால், விவசாயிகள் முழுமையாக வேதிப்பொருட்களை நம்பவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இன்று உலகம் முழுவதும், மிகப்பெரிய, பெட்ரோ கெமிக்கல், டிராக்டர்கள், டிரக் தொழிற்சாலைகள் பேரமைப்பு உருவாகி அது விவசாயத்துக்கு வேண்டிய இயந்திரங்களையும், பெட்ரோலையும், வேதி உரங்களையும், வேதி பூச்சிக்கொல்லிகளையும் உருவாக்குகிறது. இதுவே அதிக அளவில் உற்பத்தி செய்யும் விவசாய முறைக்கு அடித்தளமாக இருக்கிறது.

நல்லதற்கோ, கெட்டதற்கோ, இந்திய விவசாயிகள் இந்த பேரமைப்பில் பங்கு பெற முடியவில்லை. அதன் காரணம் அவர்கள் பசுக்களை நேசிப்பதல்ல. அவர்களால் டிராக்டர்களை வாங்கப் பணமில்லை என்பதால்தான். மற்ற வளரும் நாடுகளைப் போலவே, இந்தியாவால் வெளிநாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளைப் போல பெரும் தொழிற்சாலைகளைக் கட்ட முடியவில்லை. அந்தப் தொழிற்சாலைப் பொருட்களை இறக்குமதி செய்யத் தேவையான பணமும் இல்லை. விலங்குகளிடமிருந்தும், சாண உரத்திடமிருந்தும் டிராக்டர்களுக்கும், வேதி உரங்களுக்கும் இந்திய விவசாயத்தைக் கொண்டு செல்வதற்கு நம்பமுடியாத அளவுக்கு மூலதனம் வேண்டும். மேலும், விலையுயர்ந்த இயந்திரங்களை, விலைகுறைந்த மாடுகளுக்குப் பதிலாக பயன்படுத்துவதன் தவிர்க்க முடியாத விளைவு, விவசாயத்தை நம்பி வாழும் மனிதர்கள் வெகுவாகக் குறைவதும், ஒரு சராசரி பண்ணையின் அளவு அதிகரிப்பதும் தான். பெரும் அளவு தொழிற்சாலை முறைப்பட்ட விவசாயம் அமெரிக்காவில் வளர்ந்ததும், சிறு விவசாயப் பண்ணைகள் சுத்தமாக அழிக்கப்பட்டது நாம் அறிந்ததுதான். அமெரிக்க மக்களில் சுமார் 5சதவீதமே விவசாயப்பண்ணைகளில் வாழ்கிறார்கள். 100 வருடங்களுக்கு முன்னர் சுமார் 60 சதவீத அமெரிக்க மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தார்கள். இதே போல இந்தியாவிலும் விவசாயம் மாறியது என்றால், சுமார் 25 கோடி வேலை இழந்த விவசாயிகளுக்கு நகரங்களில் வேலைகளையும் அவர்கள் வசிப்பதற்கான வீடுகளையும் கட்ட வேண்டும். (மொ.கு. இந்தக்கட்டுரை 1974இல் எழுதப்பட்டது)

வேலையில்லாமையும், வீடற்ற நிலைமையும் பொங்கி வழியும் இந்திய நகரங்களில், இதன் மூலம் நகரத்து மக்கள் அதிகமாவது பெரும் போராட்டங்களையும் அழிவையுமே உருவாக்கும்.

இந்த விளைவுகள் நம் பார்வையில் இருந்தால், சிறு அளவுப் பண்ணை, குறைந்த சக்தி உபயோகிக்கும், விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய விவசாய முறையை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். நான் முன்னமேயே சொன்னது போல, பசுக்களும், காளை மாடுகளும், குறைந்த சக்தி உபயோகிக்கும் டிராக்டர்களாகவும் டிராக்டர் தொழிற்சாலைகளாகவும் இருக்கின்றன. அவைகள் ஒரு பெட்ரோகெமிக்கள் தொழிற்சாலை செய்யும் வேலையையும் செய்கின்றன. இந்தியாவின் கால்நடைகள் சுமார் 70 கோடி டன்கள் உரத்தை சாணமாகக் கொடுக்கின்றன. இதில் பாதி உரமாகவும், மற்றப்பாதி சமையல் எரிபொருளாகவும் பயன்படுகிறது. ஒரு இந்திய இல்லத்தரசியின் முக்கியமான எரிபொருளான இந்த வறட்டிகள் (காய்ந்த சாணம்) மூலம் வெளிப்படும் வெப்பத்தின் மொத்த அளவு சுமார் 2.7 கோடி டன் மண்ணெண்ணெய்க்கும், 3.5 கோடி டன் நிலக்கரிக்கும், 6.8 கோடி டன் விறகுக்கும் சமமானது. இந்தியாவில் பெட்ரோலும், நிலக்கரியும் மிகச்சிறிய அளவிலேயே கிடைப்பதாலும், ஏற்கெனவே இந்தியாவில் காடுகள் அழிப்பு ஒரு பிரச்னையாக இருப்பதாலும், மேற்கண்ட எந்த எரிபொருள்களும் நடைமுறையில் மாட்டுச்சாணத்து வறட்டியை ஈடுகட்ட முடியாது. ஒரு அமெரிக்கப் பெண், சாணத்தை எரிபொருளாக கருத முடியாமல் இருக்கலாம். ஆனால், ஒரு இந்தியப் பெண்ணுக்கு இந்திய உணவுவகைகளை சமைப்பதற்கு வறட்டி ஒரு அட்டகாசமான எரிபொருள். பெரும்பாலான இந்திய உணவுவகைகள் வெண்ணெயை உருக்கிச் செய்யும் நெய்மூலம் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு வறட்டியே சிறந்த எரிபொருள். ஏனெனில், வறட்டி மெதுவாக, சுத்தமாக நெடுநேரம் வெப்பத்தை வெளியிடுவதால், சாப்பாட்டை கரித்துவிடாது. இதனால், இந்திய இல்லத்தரசி சமையலை ஆரம்பித்துவிட்டு, அந்தச் சமையலைப் பார்க்க வேண்டிய அவசியமில்லாமல், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதும், வயலில் உதவி செய்வதும், மற்ற வேலைகளைச் செய்வதும் இயலும். அமெரிக்கப் பெண்கள், இதே விளைவை, சிக்கலான எலக்ட்ரானிக் சமாச்சாரங்களாலும், விலையுயர்ந்த லேட்டஸ்ட் மாடல் அடுப்புகளாலும் அடைகிறார்கள்.

மாட்டுச்சாணத்துக்கு இன்னொரு முக்கியப் பயனும் இருக்கிறது. இதை தண்ணீருடன் கலந்து பசைபோல ஆக்கி, தரையை மெழுகவும் பயன்படுகிறது. அழுக்கான தரையில் தடவப்பட்டு மென்மையான தரையாக காய்கிறது. இது புழுதிஇல்லாத துடைப்பத்தால் கூட்டக்கூடிய அழகான தரையாகவும் ஆகிறது.

கால்நடைகளின் சாணத்துக்கு இவ்வளவு பலவகைப்பட்ட பயன்கள் இருப்பதால், ஒவ்வொரு சிறு துண்டும் கவனமாக சேகரிக்கப்படுகிறது. கிராமத்துச் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் குடும்பத்து மாட்டின் பின்னேயே சென்று அதன் சாணத்தை சேகரித்து வீட்டுக்குக் கொண்டுவரும் வேலை கொடுக்கப்படுகிறது. நகரத்தில், தோட்டிகள் சாதியினர் இந்த சாணத்தை சேகரிக்கும் உரிமையை வைத்துக்கொண்டு அதனை சேகரித்து, மீண்டும் வீட்டுப்பெண்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துகிறார்கள்.

ஒரு விவசாயத்தொழில்சாலை பார்வையில், காய்ந்த, பிரயோசனமற்ற பசு ஒரு பொருளாதார வீண்செலவு. ஆனால் ஒரு கிராமத்து விவசாயியின் பார்வையில், அதே பசு கந்துவட்டிக்காரரிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் கடைசி ஆயுதம். எவ்வளவுதான் காய்ந்தபசுவாக இருந்தாலும், ஒரு நல்ல பருவமழைக்காலம் வந்தால், அதே பசு கொழுத்து, பழைய சக்தி பெற்று ஒரு கன்று ஈன்று பாலும் கொடுக்க ஆரம்பிக்கலாம். அதற்காகவே ஒரு விவசாயி பிரார்த்திக்கிறான். சில நேரங்களில் அந்தப் பிரார்த்தனைக்கும் பதில் கிடைத்து விடுகிறது. அதே நேரத்தில், சாணம் கிடைப்பது தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே, எலும்பும் தோலுமாக இருக்கும் ஒரு காய்ந்த கிழட்டுப் பசு, ஏன் ஒரு விவசாயிக்கு அழகாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜெபு மாடுகளுக்கு சிறிய உடல்கள். அவைகளுக்கு முதுகில் கொழுப்பு சேர்த்து வைக்கும் திமில்கள் இருக்கின்றன. இவைகளுக்கு எவ்வளவு நாள் சாப்பிடாமல் இருந்தாலும் மீண்டும் சாப்பாடு கிடைத்ததும், மீண்டும் வலிமை பெரும் குணம் இருக்கிறது. இந்தக் குணங்கள் இந்திய விவசாயத்துச் சூழ்நிலைகளுக்கு அழகாகக் பொருந்துகின்றன. இந்தியாவின் இந்த ஜெபு மாடுகள், எந்த நீண்டகாலப் பஞ்சத்தையும் மிகச் சிறிய அளவு நீர் குடித்துக் கொண்டும், சிறிய அளவு உணவு உண்டுகொண்டும் கடத்தும் வல்லமை பெற்றவை. பூமத்தியக்கோடு பிரதேசங்களில் வரும் பல வியாதிகளை எதிர்த்து வாழும் திறமை பெற்றவை. ஜெபு காளை மாடுகள் மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும் கடைசிக் காலம் வரை உழைக்கும் திறமை பெற்றவை. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் விலங்குமருத்துவராக இருந்த ஸ்டூவர்ட் ஓடொன்னால் இந்தியக் கால்நடைகளை பிணப்பரிசோதனை செய்திருக்கிறார். இந்த மிருகங்கள் சாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் கூட நன்றாக வேலை செய்து கொண்டிருந்தன. ஆனால் இதன் உள்ளே முக்கியமான உடலுறுப்புகள் மிகுந்த சேதம் அடைந்திருந்தன. இந்த விலங்குகளின் ஏராளமான தன்னுடலை சரிசெய்துகொள்ளும் திறமையால், இந்த மிருகங்களை எந்தக்காலத்திலும் வீண் என்று உதறிவிடமுடியாது.

ஆனால், ஒருவழியில் இந்த விலங்குகள் பிரயோசனமே இல்லாமல், ஏன் சாணம்கூட கிடைக்காமல் போகும் முதுமையை அடைந்து விடலாம். இருந்தும் அப்போதும், இந்த விவசாயி அந்த விலங்கைக் கொல்லவோ, அல்லது அதனை மாட்டுக்கறி பண்ணும் இடத்துக்கு விற்கவோ செய்வதில்லை. பசுக்கொலைக்கும், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும் எதிரான மூடத்தனமான மதசிந்தனையால் விளைந்த தீய பொருளாதாரச் சிந்தனையின் எதிர்க்கமுடியாத தடயம் என்று சொல்லமில்லையா ?

பசுக்கள் மீது அன்பு செலுத்துவது, மாட்டுக்கறிக்கு எதிரானவர்களாகவும், பசுக்கொலைக்கு எதிரானவர்களாகவும் ஒன்று சேர்க்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், பசுக்கொலை, மாட்டுக்கறி எதிர்ப்பு என்பது மனித உயிர்ப்புக்கும், சிறப்பான வாழ்க்கைக்கும் எதிரானது என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. முதுமை அடைந்த, எலும்பும் தோலுமான மாடுகளை விற்பதன் மூலம், ஒரு விவசாயிக்கு கொஞ்சம் காசு கிடைத்து தன் குடும்பத்துக்கு இன்னும் கொஞ்சம் காலம் சோறு போடலாம். ஆனால், முதுமை அடைந்த மாட்டை கறி போட்டு விற்காத விவசாயியின் மறுப்பு, நீண்ட கால நோக்கில், நல்ல விளைவுகளைக் கொண்டிருக்கலாம். சராசரியான நிலைமைகளுக்கல்லாமல், தீவிரமான நிலைமைகளுக்கே, உயிர்களின் சமூகங்கள் தங்களை மாற்றிக்கொள்கின்றன என்பது நன்றாக நிறுவப்பட்ட சூழ்நிலை ஆராய்ச்சிகள் சொல்வது. இந்தியாவைப் பொறுத்த வரை இந்த தீவிரமான நிலைமை என்பது நீண்டகாலங்கள் பருவமழை பொய்ப்பதும், இவ்வாறு பருவமழை பொய்ப்பது அடிக்கடி நடப்பதும். மாட்டுக்கறி சாப்பிட இருக்கும் எதிர்ப்பையும், பசுக்கொலை எதிர்ப்பையும், நாம் பொருளாதார ரீதியில் ஆராய, அடிக்கடி வரும் வறட்சியையும் பஞ்சத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜெபு மாடுகளின் சின்ன உடலும், அவைகளது அட்டகாசமான உடல்தேறும் திறமையும் எப்படி இயற்கைத் தேர்வின் உற்பத்தியோ, அதுபோல, பசுக்கொலை எதிர்ப்பும், மாட்டுக்கறி உண்ணாத சமுதாயத்தடையும் இயற்கைத் தேர்வின் (Natural Selection) உற்பத்தியாக இருக்கலாம். பெரும் வறட்சியும் பஞ்சமும் வரும்போது, விவசாயிகள் தங்களிடமிருக்கும் பசுக்களைக் கொன்று தின்பதற்கு ஆசைப்படுவது இயற்கைதான். இந்த ஆசைக்கு இணங்குபவர்கள் தங்கள் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கிறார்கள். ஏனெனில் பஞ்சம் முடிந்ததும், அவர்களது நிலத்தை உழ மாடுகள் இருக்காது. நான் இன்னும் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். நல்ல காலங்களில் சில விவசாயிகள் தங்கள் குறுகிய கால எண்ணப்படி மாடுகளின் உபயோகத்தை தப்புக்கணக்குப் போடுவதை விட, பஞ்ச காலத்தில் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் கால் நடைகள், எல்லோருக்கும் பொதுவான நன்மைக்கு எதிரியாக இருக்கின்றன. இப்போது பசுக்கொலையை மாபெரும் பாவம் என்று சொல்வதன் ஊற்றுக்கண், நீண்டகால நோக்கில் மனிதக் குலம் வாழ்வதற்கும், குறுகியகால பிரயோசனத்துக்கும் இடையேயான முரண்பாட்டில் இருக்கிறது. பசுவின் மீது அன்பும், அதனை புனிதமாக்கும் மத சம்பிரதாயங்களும், விவசாயியை குறுகியகால ‘பகுத்தறிவின் ‘ விளைவுகளிலிருந்து காப்பாற்றுகின்றன.

மேற்கத்திய நிபுணர்களுக்கு இது ‘இந்திய விவசாயி பஞ்சத்தில் தானே இறந்தாலும், அவனது பசுவைக் கொல்லமாட்டான் ‘ என்று தோன்றும். இதே நிபுணர்கள் ‘புரிந்து கொள்ள முடியாத இந்திய மனம் ‘ என்றும், ‘உயிர் என்பது கிழக்கத்தியர்களுக்கு முக்கியமானதாக இல்லை ‘ என்றும் பேசுவதற்கு எளியதாக இருக்கிறது. இந்திய விவசாயி பசி வந்திட அந்தப் பசுவையும் தின்பான் என்றும், அப்படி அந்தப் பசுவைத் தின்றால், அவன் இன்னமும் பசியால் இறப்பான் என்றும் இவர்களுக்குத் தெரியாது.

மதச் சம்பிரதாயங்களும், பாரம்பரியமும் பசுவின் மீது அன்பும் இருந்தாலும், கொடுமையான பஞ்ச காலத்தில் மாட்டுக்கறியை தின்ன இந்திய விவசாயி முனைவது தவிர்க்க முடியாதது. இரண்டாம் உலகப்போரின் போது, வறட்சியாலும், பர்மாவை ஜப்பானியர்கள் பிடித்ததனாலும், வங்காளத்தில் மிகப்பெரும் பஞ்சம் வந்தது. 1944இல் பசுக்களைக் கொல்வதும், காளை மாடுகளை மாட்டுகறி பண்ணுவதும் ஒரே அதிகமாகி உச்சத்தை அடைந்து, பிரிட்டிஷ் ராணுவம் தனது துருப்புக்களைக் கொண்டு பசுவதைத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்றியது.

1967இல் நியூயார்க் டைம்ஸ் இதழ் கீழ்வருமாறு செய்தி வெளியிட்டது.

பீகாரில் இந்துக்கள் பெரும் பட்டினி பஞ்சத்தில் சிக்கி பசுக்களையும் காளை மாடுகளையும், இந்துமதத்தில் இவ்விலங்குகள் புனிதமாக கருதப்பட்டாலும், கொன்று தின்கிறார்கள்.

பார்வையாளர்கள் இதனை ‘கற்பனைக்கும் எட்டாத கொடும் துயரம் ‘ என்று வர்ணித்தார்கள்.

நல்ல காலங்களிலும் கிழடான, வரண்ட பசுக்களை கொல்லாமல் இருப்பது என்பது, கெட்டகாலங்களில் பசுக்கொலையை தடுக்க வேண்டி நாம் கொடுக்கும் விலையில் ஒரு பகுதி. பசுக்கொலையை தடுப்பதன் மூலமும், மாட்டுக்கறி சாப்பிடாததன் மூலமும் உண்மையிலேயே எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது என்று நான் யோசிக்கிறேன். மேற்கத்திய விவசாய தொழிற்துறையின் பார்வையில், இந்தியாவில் மாட்டுக்கறி உற்பத்திச் செய்யும் ஒரு தொழிற்சாலை என்பது இல்லாமல் இருப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது போலத் தோன்றும். ஆனால், அப்படிப்பட்ட தொழிற்சாலைக்கு இந்தியாவில் வாய்ப்பு குறைவு. மாட்டுக்கறி உற்பத்தி அதிகமாக்குவது இந்தியாவின் சுற்றுச்சூழலையே (eco system) பாதிக்கும். அதற்குக் காரணம் பசுக்களின் மீதுள்ள அன்பு அல்ல, வெப்ப இயங்கியல் விதிகள் (Laws of thermodynamics) காரணமாக. ஒரு சுற்றுச்சூழலில், நிறைய விலங்குகளைச் சேர்ப்பது என்பது, உணவு உற்பத்தியின் திறமையை குறைக்கிறது. ஒரு விலங்கு சாப்பிடும் உணவு, அதன் மூலம் கிடைக்கும் உணவை விட கலோரிக்கணக்குப் படி குறைவு. அதாவது, ஒரு உணவை விலங்குகளுக்குக் கொடுத்து, அந்த விலங்குகளை உண்பதை விட, அந்த உணவை நேரடியாக மனிதர்கள் உண்ணும் போது அதிகமாக உணவு கிடைக்கும்.

அமெரிக்காவில் அதிகமாக மாட்டிறைச்சி உண்பதன் மூலம், அமெரிக்காவின் வயல்களில் நாலில் ஒரு பங்கு, மனிதர்களுக்கு அல்லாமல், இந்த மாடுகளுக்கு உணவு அளிக்கவே விளைக்கப்படுகிறது. இந்தியாவின் சராசரி உணவு கொள்ளும் அளவு, ஏற்கெனவே குறைவு என்பதை யோசித்தோமானால், இந்தியாவின் வயல்கள் மாடுகளுக்கு உணவளிக்க திசை திருப்பப் படுமேயானால், உணவின் விலை இன்னும் அதிகரிக்கும். இதனால், ஏழைகளது வாழ்க்கைத் தரம் இன்னும் கீழிறங்கும். அவர்கள் பசுக்களின் மீது அன்பு செலுத்துகிறார்களா இல்லையா என்பதை விட்டுவிட்டால், சுமார் 10 சதவீதம் இந்திய மக்களே மாட்டிறைச்சியை தினசரி சாப்பிடும் அளவுக்கு பணக்காரர்களாக இருப்பார்கள்.

வயதான வரண்ட விலங்குகளை, கசாப்புக் கடைகளுக்கு அனுப்பினால், அதன் மூலம், உண்மையிலேயே சக்தி தேவைப்படும் மக்களுக்கு ஆதாயம் கிட்டுமா என்பதிலும் எனக்குச் சந்தேகம்தான். இவைகளை கசாப்புக் கடைக்கு அனுப்பாமல் இருந்தாலும் இவைகள் தின்னப்பட்டு விடுகின்றன. ஏனெனில், இந்தியா முழுவதும், இறந்த கால்நடைகளை துப்புரவு செய்யும் உரிமை உள்ள கீழ்சாதி மக்கள் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு வழியில், சுமார் 2 கோடி கால்நடைகள் வருடாவருடம் இறக்கின்றன. இந்த விலங்குகளின் பெரும்பாலான பகுதிகள், மாட்டிறைச்சி சாப்பிடும் கீழ்சாதி மக்களால் சாப்பிடப்பட்டு விடுகின்றன.

என் நண்பர், டாக்டர் ஜோன் மென்செர் மானுடவியலாளராக பலவருடம் இந்தியாவில் வேலை செய்தார். அவரது கூற்றின் படி, இருக்கும் கசாப்புக் கடைகள் பெரும்பாலும் நகரத்திய மத்தியதர வர்க்க இந்து அல்லாதவர்களுக்கே பயன்படுகின்றன. ‘கீழ்சாதியினர் தங்களது உணவை பல வழிகளில் பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கீழ்சாதியினரைப் பொறுத்த வகையில், ஒரு விலங்கு கிராமத்தில் இறப்பது என்பது, அந்த விலங்கு நகரத்திய கசாப்புக்கடைக்கு அனுப்பப்பட்டு அந்த விலங்கு கிரிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் விற்கப்படுவதை விட நல்லது. ‘ டாக்டர் மென்செர் அவர்களுக்கு விஷயங்கள் சொன்னவர்கள், முதலில் எந்த இந்துவும் மாட்டுக்கறி சாப்பிடமாட்டார்கள் என்று அடித்துப் பேசினார்கள். பின்னர் ‘மேல்சாதி ‘ அமெரிக்கர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டதும், தங்களுக்கும் மாட்டிறைச்சி ருசி பிடிக்கும் என்று ஒப்புக்கொண்டார்கள்.

நான் விவாதத்தில் எடுத்துக்கொள்ளும் மற்ற விஷயங்கள் போலவே, கீழ்சாதிமக்கள் மாட்டிறைச்சி உண்பதும் நடைமுறைக்காரணங்களோடு ஒத்துப் போவது. இந்த மாட்டிறைச்சி உண்ணும் சாதியினர், அவர்களுக்கு இறந்த கால்நடைகளை துப்புரவு செய்யும் தொழிலில் இருப்பதால், தோல்தொழில் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே, இந்த பசுவின் மீது அன்பு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவில் பெரிய தோல்வேலை தொழில்துறை இருக்கிறது. இறந்த பின்னர் கூட இந்த ‘பிரயோசனமற்ற ‘ விலங்குகள், மனிதர்களின் சுயநலத்துக்காக உபயோகப்படுத்தப்படுகின்றன.

கால்நடைகள் எப்படி வண்டி இழுக்கவும், எரிபொருளுக்கும், பாலுக்கும், தரை மெழுகவும், உரமாகவும், மாமிசமாகவும், தோலாகவும் பயன்படுகிறது என்பது பற்றிச் நான் சொன்னது சரியாகவே இருந்தாலும், சுற்றுச்சூழல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நான் இந்த சிக்கலான அமைப்பை தவறாகவே எடை போட்டிருக்கலாம். வேறுவழிகளில் இதே பொருளாதார பயனை அடைய எவ்வளவு இயற்கைச் செல்வங்களும் மனித உழைப்பும் செலவாகும் என்பதைப் பொறுத்தே நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த செலவுகள் பெரும்பாலும் இந்த கால்நடைகள் என்ன சாப்பிடுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். பல நிபுணர்கள் மனிதனும், பசுவும் ஒரே உணவுக்கு அடித்துக் கொள்கிறார்கள் என்று அனுமானம் செய்கிறார்கள். அமெரிக்க விவசாய தொழில்நுட்பவியலாளர்களை பின்பற்றி இந்திய விவசாயியும் மனிதன் சாப்பிடும் உணவை மாடுகளுக்குக் கொடுத்தால் இது உண்மையாக இருக்கலாம். வெட்கமில்லாத உண்மை என்னவென்றால், இந்த புனிதப் பசு என்பது தோல்வியடையாத தெருப்பொறுக்கி என்பதுதான். மிக மிகக் குறைவான உணவே மனிதனும், மாடும் இணையாகச் சாப்பிடக்கூடிய உணவு.

தெருவெங்கும் அலைந்து, போக்குவரத்தை நிறுத்தும் மாடுகளைப் பார்த்து இந்த உண்மை தெளிவாகி இருக்க வேண்டும். மார்க்கெட்டுகளிலும், ரயில் தண்டவாளங்களிலும், சாலைகளிலும் ஏன் மாடுகள் அலைகின்றன ? எங்கெங்கோ சிதறிக்கிடக்கும் புற்களையும், குப்பையையும், மனிதனால் சாப்பிடமுடியாத அழுகிய காய்கறிகளையும் உண்டு பாலாகவும் இன்னும் மற்ற பயனுள்ள பொருட்களாகவும் மாற்றித் தருகின்றன! டாக்டர் ஓடென்ட்ஹால் கண்டுபிடித்ததுபோல, கால்நடைகளின் முக்கியமான உணவு மனிதன் சாப்பிடமுடியாத உணவுகளின் மிச்சங்கள்தான். உதாரணமாக, வைக்கோல், கோதுமை வைக்கோல், உமிகள் போன்றவை. ஃபோர்ட் பெளண்டேஷன் இந்தியாவின் கால்நடைகளில் பாதி கிடைக்கும் மாட்டுத்தீவனத்துக்கு அதிகமானவை என்று சொன்னது. சொல்லியிருக்க வேண்டியது, பாதி கால்நடைகள் மாட்டுத்தீவனங்கள் இல்லாமலேயே உயிர்வாழ்கின்றன என்பதுதான். இதுவும் குறைந்த மதிப்பீடுதான். சுமார் 20 சதவீத கால்நடைகளே மனிதனால் உண்ணக்கூடியப் பொருட்களை உண்டு வாழ்கின்றன. இதுவும் எருமைக்கும், வேலைசெய்யும் காளை மாடுகளுக்குமே செல்கின்றன. காய்ந்த மாடுகளுக்கும் வயதான பசுக்களுக்கும் செல்வதில்லை. மனிதனுக்கும், கால்நடைகளுக்கும், இடத்துக்கோ, உணவுக்கோ, எந்த வித போட்டியும் இல்லை என்பதையும் கண்டறிந்தார் டாக்டர் ஓடென்ட்ஹால். ‘அடிப்படையில், கால்நடைகள், மனிதனுக்கு நேரடியாக பிரயோசனமில்லாத பொருட்களை உண்டு மனிதனுக்கு நேரடியாக பிரயோசனமாகும் பொருட்களைத் தருகின்றன ‘

பசுவின் மீது அன்பு என்பது அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதன் ஒரு காரணம், இதன் விளைவு எப்படி பணக்காரர்களாலும் ஏழைகளாலும் பார்க்கப்படுகின்றது என்பது. ஏழை விவசாயிகள் மாடுகள் தெருப்பொறுக்க கிடைக்கும் அனுமதிச்சீட்டாக இந்த பசு அன்பைப்பார்க்கிறார்கள். பணக்கார விவசாயிகள் இதனை ஏமாற்று வேலையாகப் பார்க்கிறார்கள். ஏழை விவசாயிக்கு பசு புனிதமான பிச்சைக்காரன். பணக்கார விவசாயிக்கு பசு திருடன். சில காலங்களில் பசு மற்றவர்கள் தோட்டத்தில் புகுந்து அவர்களது வயல்களையும் தோட்டத்தையும் அழித்துவிடுகிறது. பணக்கார விவசாயிகள் குற்றம் சொல்கிறார்கள். ஆனால் ஏழை விவசாயிகள் தான் அப்பாவி என்று கூறி, பசுவின் மீதுள்ள அன்பை உபயோகித்து பசுக்களை திரும்பப் பெற்றுக் கொள்கிறார்கள். போட்டி இருந்தால், அது மனிதனுக்கும் மனிதனுக்கும்தானே தவிர மனிதனுக்கும் விலங்குக்கும் அல்ல.

நகரத்து பசுக்கள் கூட இவ்வாறு பகல் முழுவதும் தெருப்பொறுக்கவும், இரவில் கூட்டிக்கொண்டுவந்து பால்கறக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

நகரத்தில் பால் வாங்குவதற்கு சிறந்த உபாயம், மாட்டை வீட்டின் முன் கொண்டுவந்து நேரடியாகக் கறந்து அங்கெயே பெற்றுக்கொள்வதுதான். இதுதான் சில சமயங்களில் தண்ணீர் கலக்காத பால் பெற வழி.

இவைகளை வீணான, பொருளாதாரத்துக்கு எதிரான இந்துப் பழக்க வழக்கங்களாகப் பார்ப்பது என்பதை விட ஆச்சரியமானது, இந்தப் பழக்கங்கள் ‘ப்ரொடெஸ்டெண்ட் ‘ வழி சேமிப்பும், கால்நடைப் பராமரிப்பைவிடவும் மிகவும் சிக்கனமானவை, அதிகமான சேமிப்புள்ளவை என்பதுதான். பசுக்களின் மீது பாசம் என்பதும், இரக்கமின்றி (உண்மையிலேயே) மாட்டின் கடைசிச் சொட்டுப்பாலை உறிஞ்சி எடுப்பதும் ஒன்றுக்கொன்று நெருங்கியவை. மாட்டை எடுத்துக்கொண்டு வரும் மனிதன் ஒரு சின்ன கன்றுக்கு வைக்கோல் அடைத்து எடுத்துக் கொண்டுவந்து அதை நிறுத்தி பால் கறக்கிறான். அதுவும் வேலை செய்யவில்லை என்றால், இன்னும் சில் கொடுமையான வேலைகளைச் செய்து பால்கறக்கிறான். ‘உலகத்தின் வேறெந்த நாட்டை விடவும் இந்தியாவில்தான் பசுக்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகின்றன ‘ என்று காந்தி நம்பினார். ‘எப்படி அவளிடமிருந்து கடைசிச் சொட்டுப் பாலையும் ரத்தத்தையும் உறிஞ்சி எடுக்கிறோம் ‘ என்று புலம்பினார். ‘எப்படி அவளை பட்டினி போட்டு வற்ற அடிக்கிறோம். எப்படி கன்றுகளை மோசமாக நடத்துகிறோம். எப்படி அந்தக் கன்றுகளுக்குச் செல்லவேண்டிய பாலை கவர்ந்து கொள்கிறோம். எப்படி கொடுமையாக காளைகளை நடத்துகின்றோம்.எப்படி அவைகளை காயடிக்கிறோம். எப்படி அவைகளை அடிக்கிறோம், எப்படி அவைகள் மீது அதிகப் பாரம் ஏற்றுகிறோம் ‘ என்றும் புலம்பினார்.

பசுவின்மீது அன்பு என்பது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் வெவ்வெறு விதமான பாதிப்புகளைக் கொண்டது என்பதை காந்தியைவிட வேறுயாரும் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவை உண்மையான தேசமாக விழித்தெழ வைப்பதற்கான அவரது போராட்டத்தில், மைய குவியமாக பசு இருந்தது. பசு அன்பு என்பது சிறு பண்ணை விவசாயம், கைத்தறியில் பருத்தி நூல் நூற்பது, தரையில் கால் மடித்து உட்கார்வது, பருத்தியாடையை இடுப்பில் கட்டுவது, சைவ உணவு, உயிர்கள் மீதான மரியாதை, நிச்சயமான அஹிம்சை என்பதோடு இணைந்திருந்தது. மாபெரும் ஏழை விவசாயிகள், நகரத்து ஏழைகள், தீண்டத்தகாதவர்கள், கீழ்சாதிகள் மத்தியில் அவருக்கு இருந்த பெரும் செல்வாக்குக்கும் பின்பற்றுதலுக்கும் இந்தக் கருத்துக்களே காரணம் என்பதை அறிந்திருந்தார். தொழில்மயமாக்குதலின் தீய விளைவுகளிலிருந்து, அவர்களைக் காப்பாற்ற அவர் இந்த முறைகள் மூலமே முயன்றார்.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இருந்த அஹிம்சையின் வித்தியாசமான பாதிப்புகளை பொருளாதார நிபுணர்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். அவர்கள் இந்தியாவின் உபரி விலங்குகளை கொன்று விவசாயத்தை ‘efficient ‘ ஆக்க முனைகிறார்கள். பேராசிரியர் ஆலன் ஹெஸ்டன், உதாரணமாக, கால்நடைகள் செய்யும் வேலைகளை வேறு முறைகள் மூல செய்ய போதுமான பதில் காரணிகள் இல்லை என்று கூறுகிறார். ஆனால் அவர் 3 கோடி பசுக்களை எடுத்துவிட்டால் மீதமிருக்கும் பசுக்களே போதும் என்றும் கூறுகிறார்.

இன்றைய தேதிக்கு இருக்கும் 100 காளைகளை திரும்பப் பெற 40 பசுக்களே போதும் என்று கணக்குப் போடுகிறார். ஏற்கெனவே 7.2 கோடி காளைகள் இருப்பதால், இந்தக் கணக்குப் படி 2.4 கோடி பசுக்கள் இருந்தால் போதும். உண்மையில் 5.4 கோடி பசுக்கள் இருக்கின்றன. 2.4 கோடியை 5.4 இல் கழித்தால் மீதம் சுமார் 3 கோடி பசுக்கள் தேவையற்றவையாக இருக்கின்றன. இவைகளை கொன்று விடலாம். இந்தப் பசுக்களுக்குச் செல்லும் உணவை மீதமிருக்கும் பசுக்களுக்குக் கொடுத்தால், அவை நன்றாக புஷ்டியாகவும் வளரும் நன்றாகவும் பால் கொடுக்கும்.

ஆனால் யாருடைய பசுக்கள் தியாகம் செய்யப்படும் ? சுமார் 43 சதவீத கால்நடைகள் சுமார் 62 சதவீத பண்ணைகளில் இருக்கின்றன. இந்த பண்ணைகள் சுமார் 5 ஏக்கருக்கும் குறைவானவை. இந்த நிலங்கள் சுமார் 5 சதவீத வயல் மற்றும் மேய்ப்பு நிலங்களையே கொண்டிருக்கின்றன. அதாவது காய்ந்த வற்றிப்போன பசுக்களும் காளைகளும், ஏழைகளிடமும், சிறிய பண்ணை வைத்திருப்பவர்களிடமே இருக்கின்றன. ஆகவே இந்தப் பொருளாதார நிபுணர்கள் பேசும் கொல்லவேண்டிய அதிகப்படி 3 கோடி மாடுகள் ஏழை விவசாயிகளுடையவை. பணக்காரர்களின் மாடுகளை அல்ல. மிகவும் பெரும்பாலான ஏழைக்குடும்பங்கள் ஒரே ஒரு பசுவையே வைத்திருக்கின்றன. ஆகவே இந்த 3 கோடி பசுக்களைக் கொல்வது என்பது கோடிக்கணக்கான மக்களை தத்தாரியாக்கி நிலங்களைப் பிடுங்கிக் கொண்டு நகரங்களுக்குத் துரத்தும் வேலைதான்.

பசுவை கொல்லும் ஆர்வத்தில் இருப்பவர்கள் அவர்களது ஆலோசனைகளை புரிந்துகொள்ளக்கூடிய தவறின் மீது கட்டுகிறார்கள். விவசாயிகள் விலங்குகளைக் கொல்ல மறுக்கிறார்கள்; காரணம் கொல்லக்கூடாது என்று மதக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆகவே இந்த மதக்கட்டுப்பாடே தேவைக்கு அதிகமான பசுக்கள் இருப்பதற்குக் காரணம். சுமார் 70 பசுக்களுக்கு 100 காளைமாடுகள் இருக்கின்றன. பசுவின் மீது இருக்கும் அன்புதான் அதிகமான பசுக்கள் இருப்பதற்குக் காரணம் எனில் எப்படி 30 சதவீதம் குறைவாக பசுக்கள் இருக்கின்றன ? ஏறத்தாழ சரிசமமாகவே பசுக்களும், காளைகளும் பிறப்பதால், பசுக்கன்றுகள் இறப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். இதற்குக் காரணம், விவசாயி கத்தி எடுத்து அல்லது கோடாலி எடுத்து பசுக்கன்றைக் கொல்வதில்லை என்றாலும், மறைமுகமாக தனக்குத் தேவையில்லாத பசுக்கன்றுகளை கொல்ல வழிகள் வைத்திருக்கிறார். சின்ன பசுக்கன்றுகள் கழுத்தில் முக்கோண மரச்சட்டம் கட்டப்படுகிறது. கன்று பால்குடிக்க பசுவின் மடியை முட்டும்போது இந்த மரச்சட்டம் பசுவை காயப்படுத்த அது ஒரு உதை விட பசுக்கன்று உதை பட்டுச் சாகின்றது. வயதான பசுக்கள் சின்ன கயிற்றால் வயலில் கட்டப்பட்டு பட்டினி போட்டு சாகடிக்கப்படுகின்றன. ஏற்கெனவே வயதாகி நோயுற்ற பசு இப்படி இறப்பதற்கு நேரம் பிடிக்காது. முஸ்லீம், கிரிஸ்தவ இடைத்தரகர்கள் மூலம் ரகசியமாக பசுக்கள் விற்கப்பட்டு நகரத்து கசாப்புக்கடைகளுக்குச் செல்கின்றன.

காளைகளுக்கும் பசுக்களுக்கும் இடையேயான சரியான விகிதாச்சாரம் பார்க்க வேண்டுமெனில் நாம் மழை, காற்று, தண்ணீர், நிலம் பயிர்பண்ணும் முறைகள் போன்றவற்றையே ஆராயவேண்டும். பசுவின் மீதான அன்பை அல்ல. இந்திய விவசாயத்தின் முறை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அதே போல, காளைகளுக்கும் பசுக்களுக்கும் இருக்கும் விகிதாச்சாரமும் அதற்க்கேற்றாற்போல மாறுபடுகிறது. முக்கியமான விஷயம், நெல் பாசனத்துக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது; எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது என்பது. எங்கெல்லாம் அதிகமான அளவு தண்ணீர் இருக்கும் ஈர நெற்வயல்கள் இருக்கிறதோ, அங்கு தண்ணீரில் இருக்கும் எருமையே அதிகம் விரும்பப்படும் விலங்கு. அங்கு பெண் எருமை, ஜெபு பசுவுக்கு பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வடக்கில் வற்றாத நதியான கங்கை ஓடும் வயல்வெளிகளில் 47 பசுக்களுக்கு 100 காளைமாடுகள் இருக்கின்றன. இந்தியப் பொருளாதார நிபுணர் கே என் ராஜ், வருடம் முழுவதும் நெல் பயிரிடக்கூடிய கங்கை பள்ளத்தாக்கில் பசுவுக்கும் காளைக்கும் இருக்கும் விகிதாச்சாரம் லட்சிய விகிதாச்சாரத்தை தொடுகிறது என்று சொல்கிறார். இந்த இடமே இந்து மதத்தின் முக்கியமான இடமாகவும் முக்கியமான கோவில்கள் இருக்கும் இடமாகவும் இருப்பதால், இந்த உண்மை இன்னும் வலுப்பெறுகிறது.

மதமே பசுக்களுக்கும் காளைகளுக்கும் இருக்கும் அசாதாரணமான விகிதாச்சாரத்துக்குக் காரணம் என்னும் எண்ணம், இந்து இந்தியாவையும், முஸ்லீம் பாகிஸ்தானையும் ஒப்பிடும்போது இன்னும் தெளிவாகிறது. மேற்கு பாகிஸ்தானில், மாட்டிறைச்சியை சாப்பிடுபவர்களாகவும், பசுவின் மீது அன்பை உதறித்தள்ளுபவர்களாகவும் இருந்தாலும், அங்கே 60 பசுக்களுக்கு 100 காளைமாடுகள் இருக்கின்றன. இது தீவிர இந்து பகுதியாக இருக்கும் உத்தரபிரதேசத்தை விட அதிகமான பசுக்களை கொண்டிருப்பது தெளிவு. எந்த அளவுக்கு தண்ணீர் எருமைகள் இருக்கின்றன, எந்த அளவு கால்வாய் பாசனம் இருக்கிறது என்ற வகையில் சில மேற்குபாகிஸ்தானைச் சேர்ந்த மாவட்டங்களையும் உத்தர பிரதேச மாவட்டங்களையும் சரியாக தேர்ந்தெடுத்தால் இந்த மாவட்டங்களில் பசுக்கள்-காளைகள் சதவீதம் ஒரே அளவில் இருப்பதையும் காணலாம்.

பசுவின் மீதான் அன்பு என்பது எந்த வகையிலும் காளைமாடு-பசு விகிதாச்சாரத்தையோ, மற்ற விவசாய அமைப்பையோ பாதிக்கவில்லை என்று சொல்கிறேனா ? இல்லவே இல்லை. பசுவின் மீதான அன்பு என்பது மிகவும் சிக்கலான, நுண்ணிய பொருளாதார, கலாச்சார அமைப்பின் ஒரு முக்கியமான தேவையான அங்கம். பசுவின் மீதான அன்பு மனிதர்களை சிறிய அளவு சக்தி செலவிடும், பொருள்களை வீணாக்காத, ஆடம்பரமற்ற சுற்றுச்சூழலை தக்கவைக்க மனிதர்களை உந்துகிறது. பசுவின் மீதான அன்பு, காய்ந்து போன உதவாததாகக் கருதப்படும் விலங்குகளை உயிரோடு தக்கவைக்க உதவுகிறது. மிகவும் சக்தி தேவைப்படும் மாட்டிறைச்சி தொழிற்சாலைகள் வராமல் தடுத்து நிறுத்துகிறது. பொதுவில் உண்டு கொழுக்கும் பசுக்களையும், பணக்கார பண்ணைகளில் புகுந்து தின்னும் பசுக்களையும் பாதுகாக்கவும் உதவுகிறது. பஞ்ச காலத்தில் பசுக்களை கொல்லாமல் காப்பாற்றி பருவமழை வரும்போது வெகுவிரைவில் தேவைப்படும் பசுக்களையும் காளைகளையும் உற்பத்திசெய்துகொள்ளவும் பயன்படுகிறது. எந்த ஒரு இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்பைப் போலவே, இந்த அமைப்பிலும், சில தவறுகளும், சில உரசல்களும், சில வீண்களும், சிக்கலான கொடுக்கல் வாங்கல்களில் நடக்கலாம். 50 கோடி மக்கள் (மொ.கு: அப்போது), விலங்குகள், நிலம், உழைப்பு, அரசியல் பொருளாதாரம், மண், தட்பவெப்பம் ஆகிய அனைத்தும் இதில் பங்கு பெறுகின்றன. பசுக்கொலை செய்யும் ஆர்வமுள்ளவர்கள், பசுக்களை அளவுக்கடங்காமல் கன்றுகளை பிறக்கவைத்து, அந்தக் கன்றுகளை கவனிக்காமல் கொன்று, பஞ்சத்தில் அடித்து கொலை செய்வது வீணானது என்றும், திறனற்றது என்றும் வாதிடலாம். குறுகிய மற்றும் முக்கியமற்ற நோக்கில் இது சரியானதாக இருக்கலாம். பசுவின் மீதான அன்பு இல்லாமல் போயிற்றென்றால், பெரும் பட்டினி பஞ்சம் வரும்போது, விளிம்பு நிலை விவசாயிகள் தாங்கக்கூடிய அழிவை கணக்கெடுக்கும் போது, விவசாய பொறியியலாளர் தேவையில்லாத பசுக்களைக் கொன்று பெறும் திறனான விவசாயத்தின் மூலம் கிடைக்கும் பயன் குறைவானதாகவே இருக்கும்.

ஒரு அமைப்பின் உள்மனத்தை தாக்குவதன் மூலம், முழு அமைப்புமே மிகவும் திறமையாக வேலை செய்ய வைக்கலாம் என்று கருதுவது அறைகுறைத்தனமும், ஆபத்தானதும் ஆகும். பெரும்பாலான இந்தியாவின் பிரச்னைகளை, அதன் மனித மக்கள் தொகையை நிலைப்படுத்துவதன் மூலமும், நிலங்களையும், தண்ணீரையும், மாடுகளையும், எருமைகளையும் நிறைய அளவில் நிறையப்பேருக்கு சமமான அளவில் கிடைக்கும்படிச் செய்வதன் மூலமும் குறைக்கலாம். அதற்குப் பதில், இருக்கும் இன்றைய அமைப்பை முழுமையாக அழித்து, புதிய தொழில்நுட்பத்தையும், புதிய அரசியல் பொருளாதார உறவுமுறைகளையும், சொல்லப்போனால் புதிய சுற்றுச்சூழலை உருவாக்குவதன் மூலம் செய்வது.

இந்துமதம் சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு தக்கவைக்கும் சக்தி(conservation force). இது ‘முன்னேற்ற ‘ நிபுணர்களும், ‘நவீனப்படுத்தும் ‘ நிபுணர்களும் பழைய அமைப்பை உடைத்து, வீணான அதிக சக்தி சாப்பிடும், விவசாய வியாபார தொழிற்சாலை அமைப்பை புகுத்துவதை அது கடினமாக்குகிறது.

ஆனால் நீங்கள் அதிக சக்தி சாப்பிடும், விவசாய வியாபார தொழிற்சாலை அமைப்பு ‘பகுத்தறிவு ‘க்கு ஒப்பானது என்றும் ‘திறனானது ‘ என்றும் நீங்கள் கருதுவீர்களேயானால் அது போன்ற தவறு இருக்க முடியாது.

எதிர்பார்ப்புக்கு மாறாக, சக்திக்கான செலவையும், அது கொடுக்கும் சக்தியையும் ஒப்பிட்டால், இந்தியா தனது கால்நடைகளை அமெரிக்காவை விட அதிக திறனான முறையில் உபயோகப்படுத்துகிறது என்று பார்க்கலாம். ஒரு மாடு சாப்பிடும் உணவில் இருக்கும் கலோரிகளையும், அதனிடமிருந்து கிடைக்கும் உபயோகப்பொருள்களின் கலோரிகளையும் கணக்கிட்டுப் பார்த்தால், அது 17 சதவீதமாக இருக்கிறது என்று டாக்டர் ஓனென்ஹால் கூறுகிறார். இது அமெரிக்க மாட்டிறைச்சி மாடுகளை ஒப்பிட்டால் அது 4 சதவீதம் எனத் தெரியும். இந்த சிறப்பான திறனான மாடுகள் மிகவும் அதிகமான பால்தருவதால் அல்ல, மனிதர்கள் மிகவும் அதிகமாக சிக்கனமாகவும் வீண் செய்யாமலும் இருப்பதால் வருகிறது என்று கூறுகிறார். ‘கிராமங்கள் மிகவும் பயனீட்டுகின்றன. இங்கு எதுவும் வீணடிக்கப்படுவதில்லை ‘

வீணடிப்பது என்பது நவீன விவசாய வியாபார கூட்டமைப்பின் குணாம்சம். அது கிராம விவசாயப் பொருளாதாரத்தில் கிடையாது. அமெரிக்காவில் இருக்கும், இயந்திரமயமாக்கப் பட்ட தீவனம் கொடுக்கும் மாட்டுக்கறி தொழிற்சாலைகளில் மாட்டுச் சாணம் உபயோகப்படுத்தப்படாமல் போவது மட்டுமல்ல, அந்த சாணம் மலை போலக் குவிந்து நிலத்தடி நீரையும் பாழ்படுத்துகிறது. இதனால் தூரத்தில் இருக்கும் நீர்நிலைகள் கூட பாதிக்கப்பட்டு குடிதண்ணீர் கெட்டுப்போகின்றது.

தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் இருக்கும் உயர்ந்த வாழ்க்கைத்தரம், குறைந்த செலவில் அதிகமான உற்பத்தித்திறனின் காரணமாக அல்ல. ஒவ்வொரு ஆளுக்கும் செல்விடப்படும் சக்தியின் அளவு மிக அதிகமாக இருப்பதால்தான். 1970இல் அமெரிக்கா, ஒவ்வொரு பிரஜைக்கும் சுமார் 12 டன் அளவுள்ள நிலக்கரி வெளியிடும் சக்தி செலவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு பிரஜைக்கும் சுமார் 1/5 டன் அளவு தான் செலவிடப்பட்டது. இந்த வழியில் அமெரிக்க பிரஜை வீணாக்கும் சக்தியின் அளவு இந்தியப் பிரஜை வீணாக்கும் சக்தியின் அளவை விட பல மடங்கு அதிகம். கார்களும், விமானங்களும், ஒரு மாட்டு வண்டியைவிட, வெகு விரைவில் ஒரு இடத்துக்குச் சென்று விடலாம். ஆனால் அவை மிகத்திறனான முறையில் எரிபொருளை உபயோகிப்பதில்லை. அமெரிக்காவில் ஒரு நாளில் போக்குவரத்து நெரிசலிலும், சாலைத்திருப்பங்களிலும் நிற்கும் வண்டிகள் மட்டும் புகையாக செலவிடும் சக்தி, ஒரு வருடம் முழுவதும் இந்தியாவின் பசுக்கள் வீணாக்கும் சக்தியை விட அதிகம். நின்ற இடத்தில் சக்தியை வீணாக்கும் இந்த வாகனங்கள் செல்விடும் சக்தி, பல கோடிக்கணக்கான வருடங்களாக பூமிக்குள் சேமிக்கப்பட்ட பெட்ரோல் என்னும்போது, இந்த ஒப்பிடல் இன்னும் மோசமாகிறது.

உண்மையான ஒரு புனிதப்பசுவைப் பார்க்க வேண்டுமென்றால், வீட்டுக்கு வெளியே நிற்கும் குடும்பத்து காரைப் பாருங்கள்.

Series Navigation