எலிமருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் – அருண் கொலட்கர்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

தமிழில் இரா.முருகன்


—-
1

எலிமருந்து விளம்பரம் எழுதிய
ஒற்றைக்கால் பலகையை
ஓட்டல் சுவரில் சார்த்திவிட்டு
எலி நஞ்சு விற்பவன்
நடைபாதையில்
மதியச் சாப்பாட்டுக்கு
உட்கார்ந்து விட்டான்.

விளம்பரப் பலகைக்கு
முதுகைக் காட்டிக்கொண்டு,
சத்தம் கூடி எழும்
அரசமர நிழலில் அவன்.

விரக்தியடைந்த பலகை
சுவரை வெறித்துக்கொண்டு
தண்டிக்கப் பட்டதுபோல
நிற்கிறது.

மனதில் உள்ளதை
மறைத்துவிட்டு
வடிவமில்லாத
எதையும் அறிவிக்காத
வெறுமையான பின்புறத்தைப்
போகிறவன் வருகிறவனுக்குக் காட்டியபடி.

மரச் சட்டகத்தில் பரந்து கிடக்கும்
சலனமில்லாத கோணல் சதுர
வெள்ளைத் தார்ச்சீலை.

நடுவில் ஒரு மரக்கட்டை அதை
இரண்டு சமபங்காகப் பிரித்துக்
கீழே இறங்கி
மொண்ணையான குட்டைக் காலாக
விரிந்து ஊன்றியிருக்கிறது.

பிடுங்கி நட்ட
மூன்றங்குல விட்டச்
சக்கரம் ஒன்று
காலுக்கடியில்.

நட்டமாக நிற்கிற
சராசரி இந்திய ஆண்மகனுக்குச்
சவால் விடுகிற கட்டுமானம்
இல்லை இது.

2
விளம்பரப் பலகையில்
பத்துப் பனிரெண்டு எலிகள்
பழுப்புநீல வயலில்
வரைந்து வைத்தபடிக்கு.

சில இறந்துவிட்டன.
மற்றவை பலதரத்தில்
துன்பம் அனுபவித்தபடி
செத்துக் கொண்டிருக்கின்றன.

கருப்பு, பழுப்பு, சாம்பல் எலிகள்.
வலது ஓரத்தில் அதிசயமாக
ஒன்று மட்டும் நீலம்.

சில எலிகளுக்கு வாலில் சுழி
இன்னும் சிலவோ
துளைக்கும் வாலோடு.

நீண்ட முன்பற்கள்
ஒரு வழியாக
ஓய்ந்து விட்டன.
(அல்லது சாவுக்கு அப்புறமும்
வளருமோ அவை ?)

விஷம் தடவிய ஊசிமுனை போல்
அவற்றின் முகத்தில் நீண்ட ரோமம்.

மின்நீல வண்ணத்தில்
ஒளிரும் எலி எல்லாம்
கதிரியக்கச் சமாதி நிலையில்.

3

முன்நெற்றி சுவரில் தொட
அவை பயங்களைப்
பரிமாறிக் கொள்கின்றன.

ஏனென்று கொஞ்சமும் விளங்காத
ஆவலை, நம்பிக்கையை,
நல்லெண்ணத்தை, பழங்கதையை,
எதிர்பார்ப்பை எல்லாம்
பகிர்ந்து கொள்கின்றன.

சுண்ணாம்பும் காரையும்
உதிரும் ஓட்டல் சுவர்
தன்னால் முடிந்த அளவு
ஆறுதல் சொல்கிறது.

ஆனாலும் அதற்கு
வெறுப்பால் நிறைந்த
எலிப்பாஷாண விளம்பர
உலகம் புரியவில்லை.

மலிவான நிறங்களும்
உயிர்க்கொல்லி ஆயுதங்களும் கொண்டு
அடையாளம் காணப்பட்ட எதிரியும்
துல்லியமாக வகுக்கப்பட்ட செயல்திட்டமுமாக
இரு பரிமாணத்தில்
நன்மைக்கும் தீமைக்கும் இடையே
தீவிரமாக நிகழும்
இறுதிப் போராட்டம் பற்றிய
அந்த உலகத்தின் லட்சியக் கனவும்.

சாவில் அதற்கு ஈடுபாடு
என்ற சத்தியம் மட்டும்
சுவருக்குத் தெரியும்போல.

4

எப்போதோ மூடிய ஒரு
அந்தக்காலத் தொப்பிக்கடை பற்றி
சுவருக்குப் பேசமுடியும்.

சிவந்த சதுரமாக விரிந்த
உற்சாகமாக மேசை விரிப்புகள் பற்றி,
பீங்கான் கோப்பைகள் பற்றி,
அழகான மர ஜன்னல்கள் பற்றி
அதற்குத் தெரியும்.

காடி வைத்த, வட்ட மூடி போட்ட
கண்ணாடி போத்தல்கள்,
வெள்ளித் தகடு பதித்து
போத்தல்கள் நிறைத்த
புராதன ஸ்டாண்டுகள் பற்றியும்.

ஓட்டல் ஓரத்து மேசையில்
பையன்களும் பெண்களும்
சந்தித்துக் கொண்டது குறித்து
வாய் ஓயாமல் பேசமுடியும்.

சைகால், பெஸ்ஸி ஸ்மித் என்று
முப்பதுகளின் தொடங்கி
‘துப்பாக்கிகளும் ரோஜாப்பூக்களும் ‘ வரை
பழைய பாட்டெல்லாம்
அதற்கு நினைவிருக்கிறது.

இசைத்தட்டு விற்கும்
பக்கத்துக் கடையிலிருந்து
புதிது புதிதாக இறங்கி வழிந்து
சுவரின் சிமிட்டி வழியே
நரம்புமண்டல நினைவுப் பாதைகள்
பிறப்பித்த பாட்டுகள் அவை.

தேநீர்க் கோப்பையும்
காகிதக் கத்தையும்
துணிச்சலான பென்சிலுமாக
ஓட்டல் மேசைக்கு முன்
தனியாக அமர்ந்து
சாதிசமயம் பிரிக்காத
சமுதாயம் பற்றிக் கனவு கண்ட
பாபாசாகேப் அம்பேத்கரை
அது நினைவு வைத்திருக்கிறது.

ஈரப் பீப்பாயில் உயிர்விடும்
எலிகள் பற்றி நினைத்தபடி
முயல்கறி சாப்பிட்ட
பெயர் தெரியாத ஒரு கவிஞனையும்.

எலிமருந்து விளம்பரப் பலகைக்கு
சுவரின் இந்தக் கடைசி நினைவுதான்
புரிகிறது. மற்றதை எல்லாம்
ஒதுக்கித் தள்ளும் அது
பழைய ஞாபகத்தில்
சொதசொதவென்று ஊறிய சுவருக்கு
எலிகள் மேல்
பாசம் உண்டோ என்று
சந்தேகப் படுகிறது.

5

‘ஆகாசத்தில் இருக்கான் ஆண்டவன் ‘
பாட்டை மெல்ல முனகியபடி
வக்கீல் ஒருவர்
ஓட்டலுக்குள் நுழைகிறார்.

அவருக்குப் பிரியமான மேசை
காலியாக இருக்கும் மகிழ்ச்சி.
பியர் கொண்டு வரச்சொல்லி
ஒரு மடக்கு குடிக்கிறார்.
மேலுதட்டில் நுரையைத் துழாவியபடி
நாற்காலியில் சாய்கிறார்.

அவர் தலை வழுக்கை
சுவரில் படும் இடத்துக்கு
வெளியேதான்
எலிமருந்து விளம்பரப் பலகை
சாய்ந்து நிற்கிறது.

அவர் முணுமுணுக்கும் பாட்டுக்கு
அடுத்த அடி
எடுத்துக் கொடுக்கிறது சுவர்.
மறந்து போய்
நாள்முழுக்க நினைவுக்குக் கொண்டுவர
முயன்ற அடி அது.

சாவில் விருப்பத்தை
அவர் மனதில்
ரகசியமாக விதைக்கிற
விளம்பரப் பலகைக்கு சந்தோஷம்.
விதை முளைத்துக் கிளைவிட
நாளாகும். ஆனாலும் முளைக்கும்.

6

அவன் சுண்டுவிரலின்
அலட்சியமான அசைவொன்று
சோற்றுக் குன்றை
உச்சியில் செதுக்கித் தள்ளுகிறது.
விரல்கள் விரைவாகப் பறிக்க
அவன் முன்னால்
பள்ளம் குழிகிறது.

சிவப்பு நைலான் புடவையும்
பொருத்தமான ரவிக்கையும்
தலையில் பிச்சிப்பூவுமாக
இருக்கிறவள்
மண்ணெண்ணெய் ஸ்டவில் இருத்திய
அடிப்புறம் கரிப்பிடித்த
அலுமினியப் பாத்திரத்தில்
அகப்பையை அமிழ்த்தி
ஆவி பறக்கும் பள்ளத்தில் கவிழ்க்கிறாள்.

எரிமலைக் குழம்பாகச் சாம்பார்
அடிவாரத்தில் பீறிட்டு ஒழுகச்
சோற்றுமலை தானே சரிகிறது.

*

வீட்டுக்காரனோ, கூட்டிக் கொடுக்கும்
மாமனோ, மச்சானோ
அவனிடம் பேச
அந்தப் பெண்ணுக்கு
நிறைய விஷயம் இருக்கிறது.

அரச மரத்தடியில்
சோற்று வட்டிலுக்கு
இருபுறமும் எதிரும் புதிருமாக
அமர்ந்திருக்கும் இருவரில்
அவள் மட்டும்தான்
பேசிக்கொண்டே இருக்கிறாள்.

அவ்வப்போது அவன்
தலையாட்டியபடி
ஆவிபறக்கும் சோற்றை
உருண்டை உருண்டையாக
வாய்க்குள் எறிகிறான்.

விரல் உருட்டியதுமே
கையிலிருந்து நழுவிய
சோற்றுருண்டை
வேகம் கொண்டு மேலே எழுந்து
தாடித் தடையைத் தாண்டி
முகத்தில் துளையாகத்
திறந்த வாயில் வெடித்து
நாவில் கரைகிறது.

*

இன்னும் இன்னும் சோறு
அவன் வயிற்றில் போக,
தன்னையறியாமல் அவனைப்
போலி செய்து
சோற்று வட்டிலும்
அவன் கூடத்
தலையாட்டுகிறது.
முதலில் மெல்ல அப்புறம்
வேகவேகமாக.

அந்தப் பெண் சொல்வதைக் கேட்க
வட்டிலுக்கும் ஈடுபாடு
வந்திருக்கலாம்.
அல்லது, பரத்தி இருந்து
அதை நிலையாக வைத்த சோறு
மறைந்துகொண்டிருப்பதால்
பலமின்றி இருக்கலாம்.

சாப்பிட்டு முடிக்கும்போது
அது ஆடுகிற ஆட்டத்தை
ஒருகையால் பற்றி நிறுத்தியபடி
மறுகையால் முழுத் தட்டையும்
வழிக்கிறான் அவன்.

*

வட்டிலிலேயே கைகழுவ
அவள் குவளையிலிருந்து
கொஞ்சம் தண்ணீர் ஊற்றுகிறாள்.
அது விழும் சத்தம்
அவன் சாப்பாடு முடிந்ததை
முரசறைந்து தேய்கிறது.

இருவரும் எழுகிறார்கள்.
அவன் ஏதோ சொல்கிறான்.
வட்டிலை எடுக்கக் குனியும்போது
பிரியமாக அவள் பின்புறம் தட்டுகிறான்.

எலிமருந்து விளம்பரப் பலகையைத்
திரும்பவும் கைப்பற்ற நடக்கிறான்.
அதைக் கவசம் போல் முன்னால் பிடித்தபடி
உலகைத் திரும்ப எதிரிடத் தயாராகிறான்.

தனக்குள் மறைக்க ஓர் ஒற்றை உண்மை
இருக்கும் மகிழ்ச்சி திரும்பவும் அவனுக்கு.

அருண் கொலட்கர் -காலா கோடா பொயம்ஸ் – ‘The Rat Poision Man ‘s Lunch Hour –
தமிழில் இரா.முருகன் நவம்பர் 11 ’04

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்