என் கதை – 1

This entry is part [part not set] of 9 in the series 20001210_Issue

கே டானியல்


எழுத்து எனக்குத் தொழில் அல்ல. பொழுது போக்குமல்ல. ஏறக்குறைய நான் எழுதத் தொடங்கிய காலத்தை 35 வருடங்களுக்கு உட்படுத்தலாம். இந்த 35 வருட கால எல்லக்க்குள் சுமார் 10 ஆண்டு காலத்தைச் சிறு சிறு மன ஆசைகளுக்காகவும், விளம்பர மோகத்துக்காகவும் சொல்வு செய்தேன் என்று சொல்வதில் வெட்கப் பட வேண்டியதில்லை.

கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்த எனக்கு கிராமப் புறங்களையும், கிராமப் புறமக்களையும் சந்தித்துப் பேசிப் பழகிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. அத்துடன் சுமார் 20 வயது வரையிலே நான் ஏற்றுக் கொண்ட அரசியல் வேலைகள், கிராமப் புறங்களுக்கு இன்றியமையாததாயும் இருந்தமையால் எனது பெரும் பகுதி கவனத்தையெல்லாம் அதில் வைத்திருக்க வேண்டியதாயிற்று. அது கிராமப் புறங்களில் நண்பர்களையும் தேடிக் கொள்ள உதவியாக இருந்தது.

கிராமப் புறத்துமக்களிடம் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ இருந்தன. அரசியலைப் பொது மக்களிடமிருந்தே கற்றுக் கொள்ளவும் அவர்களிடமே அவைகளைப் பரிசோதனை செய்து சரியானவைகளை ஏற்று தவறானவைகளை நிராகரித்தும் தான் அரசியல் அனுபவங்களைப் பெறவும் வேண்டும். அன்று தேசிய்ய ரீதியாகவும், சர்வ தேசிய ரீதியாகவும் சரியான அரசியல் போதனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான தமிழ் நூல்கள் மிகவும் அருந்தலாகவே இருந்தது. இந்த நிலைமை , நாட்டையும், மக்களையும், கிராமங்களையும் பார்த்து அதன் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவங்களையே அரசியல் முதலீடாகக் கொள்ள எனக்கு ஏற்பட்ட வாய்ப்பு, என்னை மேலும் மேலும் கிராமப் புறங்களை ஊடுருவிப் பல்வேறு பட்ட அனுபவங்களை மேலும் மேலும் சம்பாதித்துக் கொள்வதற்கு உற்சாகத்தைத் தந்தது எனலாம். ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியினுடைய நூல்கள் பல தமிழில் வந்திருந்தமையால் அவைகளில் சிலவற்றை நான் படித்தேன். முதன் முதலில் கார்க்கியின் ‘தந்தையின் காதலி ‘ என்ற நாவலையும், ‘அமெரிக்காவிலே ‘ என்ற அவருடைய கட்டுரை நூலையும் படித்தேன். விஷயங்களைச் சொல்லும் போது கார்க்கியால் ஆளப்பட்ட முறைகள், அவைகளில் இருந்த எளிமை எனக்கு மிகவும் விருப்பமாக இருந்தது. ‘தந்தையின் காதலி ‘என்ற அவரின் நாவலைப் படித்த போது ஏற்பட்ட உந்துதலினால் ‘வீராங்கனைகளில் ஒருத்தி ‘ என்ற சிறுகதை ஒன்றை எழுதினேன். இதுவரை அக்கதை நான்கு தடவைகள் மறு பிரசுரமாகியுள்ளது. என்னுடைய சிறுகதைகளில் எனக்குப் பிடித்தமான முதல் கதை அது. அக்கதையில் என்னால் பாவிக்கப் பட்ட சொல் பிரயோக முறையும், எடுத்துக் கொள்ளப்பட்ட பொருளின் புறப்பாடும் , எனது வேறெந்தக் கதையிலும் இருப்பதாக நான் கருதவில்லை.

மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய் ‘ நாவலை நான் படித்தேன். நீண்ட காலமாக அது என் மனதில் கிடந்தது. ரஷ்ய நாட்டின் விடுதலைக்கான நடைமுறைச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அந்தத் தாயைப் போன்று நமது நாட்டினதும் சமூகத்திற்குமான விடுதலைக்காக அன்றாட வாழ்க்கைஅயோடு சேர்ந்து வழி நடத்தக் கூடிய ஒரு பாத்திரம் ஏன் பிறக்கக் கூடாது என எண்ணினேன்; தேடினேன்; சம்பவங்களைச் சேகரித்தேன். அதே தாய் போன்று எனது கண்ணுக்கு முன்னால் நடமாடித் திரிந்த ஒரு மனிதரையும் பிடித்து விட்டேன். அவரின் பேசும் சொல்முறைகளைச் சேகரிக்க , உடை நடை பாவனைகளை அறிந்துகொள்ள , மொத்தத்தில் அவரைச் சரியான படி நான் படித்துக் கொள்ள சுமார் மூன்று ஆண்டு காலத்தைக் கழித்தேன். அவருடைய யாழ்ப்பாண நடைமுறை வாழ்க்கையோடு மாக்ஸிம் கார்க்கியின் ‘தாயை ‘யும் சேர்த்துக் கணக்கிட்டுச் சமப் படுத்தி , நான் கற்றுக் கொண்ட அனுபவங்களையும் சேர்த்து ‘இராசாண்ணர் ‘ என்ற அவரை ‘ஐயாண்ணர் ‘ ஆக்கினேன். ‘பஞ்சமர் ‘ என்ற நாவல் பிறந்து விட்டது.

யாழ்ப்பாணத்து வாழ்க்கை முறை , யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கு, யாழ்ப்பாணத்துச் சம்பிரதாயங்கள், யாழ்ப்பாணத்து உடை நடை பாவனை , யாழ்ப்பாணத்து வீடு வாசல் அமைப்பு , யாழ்ப்பாணஹ்து விவசாய வாழ்க்கை வளர்ச்சி, யாழ்ப்பாணத்து அரசியல் நடைமுறைகள், யாழ்ப்பானத்து மண்ணின் அவலங்கள், வீழ்ச்சிகள் , எழுச்சிகள் அகியவற்றில் எதையுமே பிற நீங்கலாகி நிற்க விடாமல் பஞ்சமரில் சகலத்தையுமே உள்ளடக்கியதில் நான் கார்க்கியையே வலிநடத்தல் காரனாக ஏற்றுக்கொண்டுள்ளேன். ஆயினும் பஞ்சமரில் என்னால் பிறப்பிக்கப் பட்ட பாத்திரங்களீல் யாழ்ப்பாண மண்ணின் இயல்புகளுக்கு மாறான பல குறைபாடுகள் இருப்பதை இப்போது என்னால் உணர முடிகிறது. இதற்குப் பின்னாலும் எனக்கு இப்படி ஒரு நாவல் எழுதும் வாய்ப்புக் கிட்டுமோ என்ற ஐயப் பாட்டால் , யாழ்ப்பாண மண்ணில் நடந்த , நான் பார்த்த நான் அறிந்த , என்னால் அறியப் பட்டவர்கள் அறிந்த பல சம்பவங்களைத் திணித்ததன் மூலம் , நாவல் என்ற உருவத்துக்கப்பால் ‘ பஞ்சமர் ‘ ஒரு சம்பவக் கோர்வை என்ற குற்றச் சாட்டை மற்றவர்கள் சுமத்த வாய்ப்பளித்திருக்கிறேன் என்றே கூற வேண்டும். இந்தப் பஞ்சமர் நூலுக்குப் பின்பு, உருவம் என்பது எடுத்துக் கொள்ளப் படும் கருப் பொருளாலும், அதை வெளிக் கொணர்வதற்கான ஆள்வினாலும், தன் போக்கினாலேயே தான் அமைவதாகும் , இவைகள் தன்னிச்சையாகவே இந்த உருவம் என்பதனை அமைத்துக் கொள்கின்றன ‘ என்ற கருத்துக்கு நான் வந்து விட்டேன்.

Series Navigation

கே டானியல்

கே டானியல்