என்ன உலகமடா இது

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

அழகர்சாமி சக்திவேல்


ஏழைஆனான் பரமஏழை பணக்காரன் கொழுக்கின்றான்

இடைவெளியைக் கூட்டியதே இச்சகத்தின் சாதனையா ?

கீழைநாடு மேலைமீது கொண்டகொள்கை முரண்பாட்டால்

மனித வெடிகுண்டு மாறிமாறி வெடிக்குதையா.

உலக அமைதியென்னும் உருக்குலைந்த நங்கைக்கு

ஊக்க மூச்சுத்தர ஒன்றுபட்டு உழைத்திடாது

உலகப் போரென்னும் உருப்படா அரக்கிக்கு

அணுகுண்டு நகைபோட ஆவலாய்க் காத்துநிற்கும்

மனிதப் பறவைபல அறியாமைக் கூண்டில்நிற்கும்

அதுகண்ட அரசியலோ ஆதாயம் கருத்தில்கொண்டு

இனியும் பொறோம்என எழுத்துக் கரம்தூக்கி

காகித முரசடிக்கும் கண்டணக் குழலூதும்

ஆனாலும் வாக்குவங்கி அறியாதோர் கையிலென்ற

ஒருநினைப்பில் பின்வாங்கும் உரத்தகுரல் மெளனமாகும்

சனப்பறவை கூட்டுடைத்து சிறகடிக்க நினைத்தாலும்

அதனறிவுக் காலொடிக்க அடிமனதில் திட்டமிடும்

பக்திமணம் பரப்புகின்ற பகல்வேடச் சாமியார்மேல்

பெருங்காமக் களியாட்ட பிணநாற்றம் குடல்பிடுங்கும்

நாத்திக நாடகத்தில் நடமிடும் நரிகள்சில

சாதிகளைப் போற்றும் ஒருமதமே தாக்கும்

பத்திரிக்கை பத்தினிசில பணமென்ற பதிக்குமட்டும்

படுக்கை போடும் பச்சைத்தன கற்புக்காக்கும்

கொள்கைக் கணவரைக் கொன்றுவிட்டு கூத்தாடும்

அரசியல் அரம்பையர்க்கு அன்றாடம்ஒரு கட்சித்தாலி

கற்பிழப்பு ஓவியங்கள் காவலரே ஓவியர்கள்

கடத்தல் கவிதைகள் தலைவர்களே தலைப்புக்கள்

அண்ணல் காந்திபோன்றோர் அரசியலின் பகடைக்காய்கள்

அன்னை தெரசாபோல் அங்கங்கேசில நற்கனிகள்

என்றாவது ஒருநாள் இந்தநிலை மாறட்டும்

என்கவிதைக் கதறல்கள் இதயச்செவி திறக்கட்டும்

புதியதோர் உலகமொன்று புரட்சியுடன் பிறக்கட்டும்

விதியென்னும் சதியொழித்து வீறுநடை பயிலட்டும்.

அழகர்சாமி சக்திவேல்

Series Navigation

அழகர்சாமி சக்திவேல்

அழகர்சாமி சக்திவேல்