எனக்குள் ஒரு கனவு

This entry is part 31 of 49 in the series 19991203_Issue

மார்ட்டின் லூதர் கிங்


ஆகஸ்ட் 28, 1963 அன்று வாஷிங்டன் டி.சி-இல் உள்ள லிங்கன் நினைவகத்துப் படிகளில் நிகழ்த்திய உரை.

நூறு ஆண்டுகளுக்கு முன்னே, ஒரு மாபெரும் அமெரிக்கன், நாம் தற்சமயம் யாருடைய நிழலில் நிற்கிறோமோ அந்தப் பெரும் மனிதன், விடுதலை அறிவிப்பில் கையெழுத்திட்டார்.

இந்த முக்கியமான அறிவிப்பு, அநீதித் தீயிலே வெந்து நோகும் கோடிக்கணக்கான நீக்ரோ அடிமைகளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் கலங்கரை விளக்காய் அமைந்தது.

இது, நீண்ட இரவின் அடிமைத்தன இருளை அகற்றி விடும் மகிழ்ச்சியான விடிகாலையாய் இருந்தது.

ஆனால், நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, நீக்ரோ இன்னும் விடுதலையாகவில்லை எனும் கொடுமையான உண்மையை நாம் சந்தித்தே தீர வேண்டும்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நீக்ரோவின் வாழ்க்கை, பாகுபாட்டு விலங்குகளாலும், பிரிவினைச் சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டு, இன்னும் முடமாகத்தான் இருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், நீக்ரோ, ஒரு பொருளாதார வளமை எனும் சமுத்திரத்திற்கு இடையே, ஏழ்மை என்கிற தனித்தீவில் வாழ்ந்து கொன்டிருக்கிறான்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகும், அமெரிக்க சமுதாயத்தின் ஒரு மூலையில், நீக்ரோ இன்னமும் தன் சொந்த நாட்டிலேயே தான் ஒர் அகதியாய் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு வருந்திக் கொண்டிருக்கிறான்.

எனவே, ஒரு துரதிருஷ்ட நிலையை வெளிப்படுத்திக் காட்ட இங்கு நாம் வந்திருக்கிறோம்.

ஒரு விதத்தில், நாம் ஒரு காசோலையைப் பணமாக்க, இந்த தலைநகருக்கு வந்திருக்கிறோம்.

இந்த குடியரசின் சிற்பிகள் அரசியல் சட்டத்தையும் விடுதலைப் பிரகடணத்தையும் எழுதும் போது, ஒவ்வொரு அமெரிக்கனும் வாரிசாக விளங்கக் கூடிய ஒரு பத்திரத்திலும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

இந்த பத்திரம், அனைத்து மனிதர்களுக்குண்டான வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சந்தோஷமாய் வாழ்வதற்கான முயற்சி ஆகியவற்றுக்கான உரிமைகளை பறிக்க முடியாத அளவில் உறுதிப் படுத்துகிறது.

ஆனால் வெள்ளையரற்ற மக்களைப் பொறுத்தவரை அமெரிக்கா இந்த பத்திரத்தின்படி நடக்கவில்லை என்பது இன்று தெளிவாகத் தெரிகிறது.

அமெரிக்கா, இந்த புனிதமான கடமையைச் செயல் படுத்தாமல், நீக்ரோ மக்களுக்கு ‘பணமில்லாததால் திருப்பி அனுப்பப்பட்ட ‘ உபயோகமில்லாத காசோலையை கொடுத்திருக்கிறது.

ஆனால், நீதி வங்கி பணமில்லாமல் போண்டியாகிவிட்டது என்பதை நாம் நம்பத் தாயாரில்லை.

இந்நாட்டின் பேரிய தருணங்களான பேழையில், போதிய பணம் இல்லை என்பதை நம்ப மறுக்கிறோம்.

ஆகவே, இந்த காசோலையைப் பணமாக்க, நமக்கு விடுதலையின் செல்வாக்கையும் நீதியின் பாதுகாப்பையும் வேண்டிய பொழுது தரக்கூடிய இந்தக் காசோலையைப் பணமாக்க இங்கு வந்திருக்கிறோம்.

மேலும், இத்தருணத்தின் மிகுந்த அவசரத்தை அமெரிக்காவிற்கு உணர்த்த இந்தப் புனிதமான இடத்திற்கு வந்திருக்கிறோம்.

படிப்படியாய்ச் சரியாகி விடும் என்று போதையிலே ஆழ்வதற்கும், கிடப்பிலே போட்டு விட்டு ஓய்வதற்கும் இது நேரமல்ல.

இருளிலிருந்து எழுவதற்கும், பாகுபாட்டுப் பள்ளத்தாக்கினை, இன நீதியின் ஒளிப் பாதையிலே கொண்டு சேர்ப்பதற்கும், இதுதான் தருணம்.

வாய்ப்புகளின் கதவுகளைக் கடவுளின் அனைத்துக் குழந்தைகளுக்கும் திறந்து விட இதுதான் சிறந்த நேரம்.

இன அநீதிகளின் புதைமணலிலிருந்து, நம்முடைய நாட்டினை சகோதரத்துவமெனும் திடமான மலைப்பாறைகளுக்கு இட்டுச் செல்ல இதுவே தருணம்.

இத்தருணத்தின் அவசரத்தை மேலோட்டமாய்ப் பார்ப்பதும் மற்றும் நீக்ரோவின் தீர்மானத்தை குறைத்து மதிப்பிடுவதும் இந்த தேசத்திற்கு அழிவையே அளிக்கும்.

நியாயமாய் நீக்ரோ உணர்கின்ற இந்த அநீதியின் கொளுத்துகின்ற கோடைகாலம், விடுதலையும் சம உரிமையுமான இளவேனில் காலம் வரும் வரை மாறாது.

1963 ஒரு முடிவல்ல. மாறாக, அது ஒரு தொடக்கம்.

நீக்ரோ தன் மனக் கொந்தளிப்பை வெளியே கொட்டிவிட்டால் சமாதானமாகி விடுவான் என நம்பி, வழக்கம் போல மீண்டும் பழையபடியே திரும்புபவர்களுக்கு ,அதிரவைக்கும் விழிப்பு காத்திருக்கிறது.

நீக்ரோவிற்கு, இந்த மன்ணின் மைந்தனுக்குரிய உரிமைகள் அளிக்கப் படும் வரை ஓய்வும் அமைதியும் அமெரிக்காவில் இருக்காது.

நீதி பிரகாசிக்கும் நாள் வரும் வரை, புரட்சிச் சூறாவளி, இந்த நாட்டின் அடித்தளத்தை உலுக்கிக் கொண்டே இருக்கும்.

ஆனால், நீதியின் மாளிகைக்கு இட்டுச்செல்லும் வாயிலில் நிற்கும் நம் மக்களுக்கு, நான் ஒன்று கூறிக் கொள்ள வேண்டும்.

நமக்குரிய இடத்தை அடையும் முயற்சியில், நாம் தவறான பாதையை தேர்ந்தெடுக்கலாகாது.

நாம் நம்முடைய சுதந்திர தாகத்தை தணித்து கொள்வதற்காக, மனக்கசப்பினையும் வெறுப்பினையும் பருகத் தேவையில்லை.

நம்முடைய போராட்டத்தை ஓர் உயர்ந்த தளத்தில், மதிப்புடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டும்.

நம்முடைய ஆக்க பூர்வமான எதிர்ப்பு, வன்முறையாய் இழிந்து போவதை நாம் அனுமதிக்கலாகாது.

மீண்டும் மீண்டும் நம்முடைய ஆன்ம பலத்தினால், ஆள் பலத்தை எதிர்கொண்டு, மாபெரும் உயரத்திற்கு நம்மை நாமே மேலுயர்த்திச் செல்ல வேண்டும்.

நீக்ரோ சமூகத்தை ஆட்கொண்டிருக்கும் பிரமிக்கத்தக்க இந்த புதிய இராணுவத்துவம் எல்லா வெள்ளையரையும் நம்ப முடியாத நிலைக்கு நம்மை இட்டுச் செல்லலாகாது. பற்பல வெள்ளையர் சகோதரர்கள் தங்களுடைய சுதந்திரம் நம்முடைய சுதந்திரத்துடன் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதையும் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு இங்கு அவர்களின் வருகையே சாட்சி.

நாம் தனியாக நடக்க இயலாது.

நாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, மென்மேலும் முன்னோக்கிச் செல்வோம் என்று நாம் ஆணைமேற்கொள்வோம்.

நாம் இனி திரும்பிச் செல்ல இயலாது.

மனித உரிமையைப் பெரிதும் மதிப்போரிடம் , ‘எப்பொழுது நீ திருப்தி அடைவாய் ? ‘ என்று சிலர் கேட்கிறார்கள்.

பயணக் களைப்பினால் வரண்டு கிடக்கும் நம்முடைய உடல் நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள விடுதியிலும் நகரத்திலுள்ள தங்குமிடங்களிலும் களைப்பாற இடம் கிடக்கும் வரை நாம் திருப்தி அடைய முடியாது.

சிறு குப்பத்திலிருந்து பெரிய குப்பத்துக்குத் தான் நீக்ரோ செல்லமுடியும் என்கிற விதி மாறும் வரை நாம் திருப்தி அடைய முடியாது.

மிசிசிப்பியின் நீக்ரோ ஓட்டுப் போட முடியாத நிலையிலும், நியூ யார்க்கின் நீக்ரோ ஓட்டுப் போடுவதற்கு ஒன்றுமில்லாத இல்லாத நிலையிலும் இருக்கும் போது, நம்மால் திருப்தி அடைய முடியாது.

இல்லை, இல்லை, நாம் திருப்தி அடையவில்லை. நீர் பாய்வது போல் நீதி பாயும் வரை, மடை திறந்த வெள்ளமாய் நேர்மை பாயும் வரை நாம் திருப்தி அடைய மாட்டோம்.

உங்களில் சிலர், ஏராளமான சோதனைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் நடுவில் இங்கு வந்திருப்பது எனக்குத் தெரியாமலில்லை.

உங்களில் ஒரு சிலர் அந்தக் குறுகிய அறைகளிலிருந்து நேரே இங்கு வந்திருக்கிறீர்கள்.

உங்களின் சுதந்திர தாகத்தால், தண்டனைப் புயலால் தாக்கப் பட்டும் போலீஸ் அராஜகக் காற்றால் உருட்டப் பட்டும் கூட உங்களில் சிலர் இங்கு வந்திருக்கிறீர்கள்.

நீங்கள் நூதனமான துன்பங்களில் உழன்று காய்ப்பேறி இருக்கிறீர்கள்.

தேவையில்லாமல் தேடி வந்த துன்பம், நம்மைக் கடத்தேற்றவல்லது என்ற நம்பிக்கையுடன், தொடருங்கள் உங்கள் உழைப்பை.

திரும்பிச் செல்லுங்கள் மிசிசிப்பிக்கு, திரும்பிச் செல்லுங்கள் அலபாமாவிற்கு, திரும்பிச் செல்லுங்கள் ஜியார்ஜியாவிற்கு, திரும்பிச் செல்லுங்கள் லூசியானாவிற்கு, திரும்பிச் செல்லுங்கள் வடக்கு நகரங்களின் பட்டி தொட்டிகளுக்கு, எப்படியாவது இந்த நிலை மாறியே தீரும், மாற்றியே தீருவோம் என்பதை அறிந்து கொண்டு.

பரிதாபமெனும் பள்ளத்தாக்கிலே, நாம் கிடந்து உருள வேண்டாம்.

இன்று உங்களிடம் கூறிக் கொள்கிறேன் நண்பர்களே,! எவ்வளவுதான் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்தாலும் எனக்குள் ஒரு கனவு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இது அமெரிக்காவைப் பற்றிய கனவில் மிக ஆழமாய்ப் பதிந்த கனவு.

ஒரு நாள், இந்த தேசம் உயர்ந்து நின்று ‘அனைத்து மனிதர்களும் சரிசமமாய் உருவாக்கப்பட்டார்கள் என்பது நிரூபணம் வேண்டாத உண்மையெனப் புரிகிறோம் ‘ எனும் கொள்கைக்கேற்றபடி வாழுமென, அதன் உண்மையான பொருளைப் புரிந்து கொண்டு விடுமென எனக்குள் ஒரு கனவு.

ஒரு நாள், ஜியார்ஜியாவின் சிவப்பு மலைக்குன்றுகளில் முன்னாள் அடிமைகளின் பிள்ளைகளும், முன்னாள் அடிமைகளின் எஜமானர்களின் பிள்ளைகளும் ஒரு சகோதரத்துவ மேசையில் சரிசமமாய் உட்கார முடியுமென எனக்குள் ஒரு கனவு.

ஒரு நாள், அநீதியிலும் அடக்குமுறையிலும் வெந்து காய்ந்து பாலைவனமாய் காட்சி அளிக்கும் மிசிசிப்பி மாநிலம், சுதந்திரமும் நீதியும் கொண்ட ஒரு பசுஞ்சோலையாய் மாறிவிடும் என்று எனக்குள் ஒரு கனவு.

ஒரு நாள், எனது நான்கு பிள்ளைகளும் நிறத்தை வைத்து மதிப்பிடாமல் குணத்தை வைத்து மதிப்பிடும் தேசத்தில் வாழப்போகிறார்கள் என எனக்குள் ஒரு கனவு.

எனக்குள் ஒரு கனவு இன்று.

அர்த்தமற்ற வார்த்தைகளை வீணாய்க் கொட்டிக்கொண்டிருக்கும் ஆளுனரைக் கொண்ட அலபாமா மாநிலத்தில், கருப்பு சிறுவர் சிறுமியருடன் வெள்ளை சிறுவர் சிறுமியர்கள் ஒன்றாய் கை கோர்த்து சகோதர சகோதரிகளாய் உலவி வரும் மாநிலமாய் ஒரு நாள் மாறிவிடும் என எனக்குள் ஒரு கனவு.

எனக்குள் ஒரு கனவு இன்று.

ஒரு நாள், ஒவ்வொரு பள்ளத்தாக்கும் மேம்படுத்தப்படும், ஒவ்வொரு மலையும், குன்றும் சரிக்கப்படும், கரடுமுரடான பகுதிகள் சீர்படுத்தப்படும், வளைவுகளும் நெளிவுகளும் நேர் படுத்தப்படும், இறைவனின் பெருமை வெளிப்படுத்தப்படும், எல்லா உயிர்களும் இவற்றை ஒன்றிணைந்து பார்க்கும்.

இதுதான் நமது எதிர்பார்ப்பு.

இந்த நம்பிக்கையுடன் நான் தெற்கே திரும்பிச் செல்கிறேன்.

இந்த நம்பிக்கையுடன் ஒரு பெரிய மலை போன்ற அவநம்பிக்கையிலிருந்து, ஒரு சிறு கல் போன்ற எதிர்பார்ப்பை நம்மால் உருவாக்க முடியும்.

இந்த நம்பிக்கையுடன் தாறுமாறாய் காதில் ஒலிக்கும் நமது தேசத்தின் சத்தங்களை இனிமையான சகோதரத்துவ சங்கீதமாய் நம்மால் மாற்ற முடியும்.

இந்த நம்பிக்கையுடன் நம்மால் ஒன்று கூடி உழைக்க முடியும், ஒன்று கூடி பிரார்த்திக்க முடியும், ஒன்று கூடி கஷ்டங்களை எதிர் நோக்க முடியும், ஒன்று கூடி சிறை செல்ல முடியும், ஒன்று கூடி விடுதலைக்குப் போராட முடியும், என்றாவது ஒரு நாள் விடுதலையாவோம் என்ற தெளிவுடன்.

அந்த நாளிலே, இறைவனின் எல்லாக் குழந்தைகளும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய அர்த்தத்துடன் இந்த பாடலை பாட முடியும், ‘எனது நாடே, நீ இனிமையான சுதந்திர நாடு, நான் உன்னைப் பற்றிப் பாடுகிறேன். என் தந்தையர் இறந்த நாடு, பக்தர்களின் பெருமை கொண்ட நாடு, ஒவ்வொரு மலைப் பகுதியிலிருந்தும் சுதந்திர ஓசை ஒலிக்கட்டும் ‘

அமெரிக்கா ஒரு உயர்ந்த தேசமாக வேண்டுமெனில், இது உண்மையாக வேண்டும்.

எனவே, சுதந்திர ஓசை, நியூ ஹாம்ப்ஷைரின் சிறப்பு மிக்க குன்றுகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, நியூ யார்க்கின் பலம் வாய்ந்த மலைகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, பென்சில்வேனியாவின் உயரிய அல்லெஜீனி மலைகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, கொலொராடோவின் பனி மூடிய பாறைகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, நியூ ஹாம்ப்ஷைரின் சிறப்பு மிக்க குன்றுகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, கலிபோர்னியாவின் வளைவுகள் கொண்ட முகடுகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, டென்னிசியின் ஏறி நின்று பார்க்கக் கூடிய மலைகளிலிருந்து ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, மிசிசிப்பியின் ஒவ்வொரு மலை மற்றும் குன்றிலிருந்தும் ஒலிக்கட்டும்.

சுதந்திர ஓசை, ஒவ்வொரு மலைபகுதியிலிருந்தும் ஒலிக்கட்டும்.

நாம் இப்படி சுதந்திர ஓசை ஒலிக்கச் செய்யும் போது, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், பட்டி தொட்டிகளிலிருந்தும் ஒலிக்கச் செய்யும் போது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், ஒவ்வொரு நகரத்திலிருந்தும் ஒலிக்கச் செய்யும் போது, கடவுளின் எல்லாக் குழந்தைகளும், கருப்பர்களும் வெள்ளையர்களும் உட்பட, யூதர்களும் ஜென்டில்ஸ்களும் உட்பட, புராடஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்கர் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து கை கோர்த்துப் பாட முடியும், பழைய நீக்ரோ தெய்வீகப் பாடலை. ‘விடுதலை இறுதியில்! விடுதலை இறுதியில்! எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி, நாம் அனைவருக்கும் இறுதியில் விடுதலை!! ‘

– Translation : Pari Boopalan, Gopal Rajaram

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< மார்ட்டின் எபனேசர் கவிதைகள்Boycott of Mission Schools <BR>மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல் >>

Scroll to Top