எனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் ? ‘

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

பாவண்ணன்


எங்கள் முகாமில் இரண்டு உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் திருமணமானவர். அதே ஊர்க்காரர். சொந்த வீடும் இருந்தது. அதனால் வீட்டிலிருந்தே தினமும் வேலைக்கு வந்துகொண்டிருந்தார். மற்றொருவர் திருமணமாகாதவர். அதனால் எங்களோடேயே கூடாரத்தில் தங்கியிருந்தார். பஸவண்ணர் வசனங்கள் பல அவருக்கு மனப்பாடம். ஓய்வான வேளைகளில் அவற்றை எனக்குப் பாடிக்காட்டுவார். வீணான பேச்சுகளில் அவர் துளியும் அக்கறை காட்டுவதில்லை. தமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளில் துளியும் பிழையில்லாமல் செய்து முடித்துவிடுவார். ஓய்வு நேத்தில் தமக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்தபடி கூடாரத்திலேயே இருப்பார். எப்போதாவது உலவச் செல்வார். புத்தகங்கள்தாம் எங்கள் இருவருக்குமிடையே உறவுப் பாலத்தை உருவாக்கின.

ஒருநாள் இரவு உறங்கப்போகும் முன்னர் மறுநாள் விடிவதற்கு முன்னர் தன்னோடு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சொல்லிவைத்ததைப்போல அதிகாலையில் என் கூடாரத்துக்கு வந்து அழைத்தார். சில நிமிடங்களில் நான் தயாராகிவிட்டேன். இருவரும் நடக்கத் தொடங்கினோம். துங்கபத்ரா கால்வாயைத் தாண்டி செண்டூர் செல்லும் பாதையில் ஒரு குன்றைநோக்கி அழைத்துச்சென்றார் அவர். வழக்கமாக நடப்பதற்கு நான் அப்பாதையைப் பயன்படுத்தியதில்லை. செண்டூர் அருகே மாங்கனிசு தாது எடுக்கும் சுரங்கங்கள் உண்டு. அங்கிருந்து நாள் முழுக்க வந்துகொண்டிருக்கும் வாகனங்களின் புழுதியைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை. பத்துப்பதினைந்து நிமிடங்களில் உடைகள் எல்லாம் செவ்வண்ணமயமாகிவிடும். மூக்கில் புழுதி அப்பிக்கொள்ளும். இதனால் வாகன நடமாட்டம் இல்லாத திசையையே நான் தேர்ந்தெடுப்பேன். ‘எதுக்கு இந்தப் பக்கம் ? ‘ என்று நான் சற்றே தயங்கியதும் ‘வாங்களேன், சொல்றேன் ‘ என்றபடி விறுவிறுவென்று நடக்கத்தொடங்கினார். நானும் பேசாமல் அவர் பின்னால் நடந்தேன்.

அரைமணிநேரத்துக்குப் பிறகு குன்றில் உட்கார்வதற்கு வாகான ஒரு பாறையை அடைந்தோம். இருவரும் அருகருகே உட்கார்ந்தோம். சில நிமிடங்களில் கீழ்வானம் சிவக்கத் தொடங்கியது. சூரியன் மெதுவாக முகம்காட்டியது. அதன் செம்மையையும் ஒரு பூவின் இதழ் மலர்வதைப்போல அதன் உருவம் படிப்படியாக மாறிய கோலத்தையும் பரவசத்தோடு பார்த்தேன். அழகான சூரியோதயம் அது. அது உருண்டு விண்ணிலேறும்வரை பேச்சில்லாமல் வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். யாரோ ஒரு அரசன் அரண்மனைக்கதவைத் திறந்து வெளியே வந்து சிறிது தொலைவு நடந்து தனக்காகக் காத்திருக்கும் தேரில் ஏறிச்சென்றதைப்போல இருந்தது. அன்று நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. மனம் ஒருவிதப் போதையில் பொங்கியபடி இருந்தது. திரும்பும்போது அவர்தான் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார். இரண்டு நாள்களுக்கு முன்னர் ஒரு மாறுதலுக்காக இந்தப் பக்கம் நடந்துவந்தபோது இக்காட்சியைக் கண்டு மகிழ்ந்ததாகவும் அப்போதே அந்த உதயக்காட்சியை எனக்கும் காட்டவேண்டும் என்று நினைத்ததாகவும் சொன்னார். வழிநெடுகப் புழுதி பறக்கும் அவஸ்தையைப் பெரிய விஷயமாக நினைத்து ஆனந்தம் மிகுந்த ஒரு காட்சியை எவ்வளவு காலமாகப் பார்க்காமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது. அதை அவரிடம் சொல்லவும் செய்தேன். அவர் சில நொடிகள் எதுவும் பேசவில்லை. பிறகு மெதுவாக கம்மிய குரலில் ‘எல்லா ஆனந்தங்களும் ஆரம்ப அவஸ்தைகளுக்குப் பிறகுதான்போலும் ‘ என்றார். பிறகு சிறிது நேரம் கழித்து ‘புரிய வேண்டிய வயதில் எதுவும் புரிவதில்லை. புரியும்போது நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் இருப்பதில்லை ‘ என்றார்.

எனக்கு அவரைப்பற்றி முழு விவரமும் தெரியாது என்றாலம் ஒரளவு மட்டுமே தெரிந்திருந்த சமயம் அது. அவர் மிகச் சிறிய வயதில் தன் தந்தையோடு பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியவர். ஐம்பது மைல்கள் நடந்துசென்று கண்ணில் தென்பட்ட ஒரு ஆசிரமத்தில் தன்னை அனாதை என்று சொல்லிக்கொண்டு சேர்ந்துகொண்டார். அங்கேயே சின்னச்சின்ன வேலைகளைச் செய்தபடி பள்ளியில் சேர்ந்து படிக்கவும் செய்தார். படித்த பள்ளியில் பதினோராவது வகுப்பில் முதல் மாணவனாகத் தேறினார். பிறகு அரசு உதவித்தொகையோடு கல்லுாரியில் சேர்ந்து படித்தார். பட்டம் பெற்றார். வேலையிலும் சேர்ந்தார். முதல் சம்பளம் வாங்கியதும் ஏதோ மனஉந்துததால் சொந்த ஊருக்குச் சென்றார். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகான பயணம் அது. வீடு இருந்தது. தாயார் இருந்தார். ஆனால் தந்தையார் உயிருடன் இல்லை. தன் முதல் சம்பளத்தை அவரிடம் கொடுத்துத் தானும் பொறுப்பான ஒரு ஆளாகிவிட்டதை காட்டிக்கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்த அவர் ஆவல் நிறைவேறாமல் போய்விட்டது. சம்பளத்தைத் தன் தாயிடம் கொடுத்துவிட்டுத் திரும்பிவிட்டார். அப்பாவின் பிரிவு அவரைப் பெரிதும் அதிர்ச்சிக்கும் துக்கத்துக்கும் ஆளாக்கிவிட்டது. அந்த நிமிடம் வரை தன் மனத்தில் அப்பா என்றதுமே பொங்கிக் குமைந்த வெறுப்பு முழுக்க அன்பாக மாறிவிட்டது. உண்மையில் தன் அப்பாவை எந்த அளவுக்கு நேசித்திருக்கிறோம் என்பதை அவரே அக்கணத்தில்தான் உணர்ந்திருக்கிறார். சம்பந்தமில்லாமல் அவர் சொன்ன வார்த்தைகள் அவரது தந்தையாரைக் குறித்தவை என்று தாமதமாகப் புரிந்துகொண்டேன்.

அன்று நள்ளிரவு அவர் கூடாரத்திலிருந்து வந்த விசும்பலொலியைக் கேட்டு விழிப்பு வந்துவிட்டது. பதற்றத்துடன் அக்கூடாரத்தை நெருங்கினேன். வழித்திரையை விலக்கி நுழைந்தேன். லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில் ஒரு பழைய நோட்டோடு சேர்த்து ஒட்டப்பட்ட படத்திலிருந்த தன் தந்தையைப் பார்த்து அவர் தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தார். அவரை உடனே வெளியே அழைத்துவந்தேன். வழியெல்லாம் அவர் ‘பெத்த அப்பாவை புரிஞ்சிக்க முடியாத பாவி சார் நான். எனக்கெல்லாம் இந்த உலகத்துல விமோசனமே இல்ல சார் ‘ என்று திரும்பத் திரும்பச் சொன்னபடி வந்தார். ‘அப்படியெல்லாம் ஒன்னுமில்ல, பேசாம வாங்க ‘ என்றபடி சிறிது தொலைவு அழைத்துச்சென்று இரண்டாம் ஆட்டம் முடிந்துவருபவர்களுக்காக பரோட்டாக்களுடன் திறந்திருந்த கடையொன்றில் தேநீர் அருந்தினோம். பிறகு அவரை ஆறுதல் படுத்தினேன்.

திரும்பும்போது ‘மனம் திருந்திய மைந்தன் கதை சாருக்குத் தெரியுமில்லயா ? ‘ என்று கேட்டார்.

‘தெரியுமே, அதிலென்ன விசேஷம் ? ‘ என்றேன் நான்.

‘அதுல வர அப்பாமாதிரி என் அப்பாவும் நான் திரும்பிப் போயிந்தா என்ன ஏத்துகிட்டிருப்பார் சார். ரொம்ப நல்லவர் சார் அவர். நான்தான் கெட்டவன். காலம்பூரா அவர வெறுத்துகிட்டே இருந்துட்டேன் ‘ சொல்லிவிட்டு நாக்கைச் சப்புக்கொட்டினார். பிறகு லேசாக என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் காட்டிய சூரியோதத்தைப்போலவே அவரது அந்தச் சிரிப்பும் மறக்காமல் நெஞ்சில் ஒட்டிக்கொண்டது.

அந்த ஊரைவிட்டு நான் வந்தபிறகும் பல சமயங்களில் அவரை நான் நினைத்துக்கொள்வேன். என் திருமணத்துக்கு அவர் வாழ்த்து அனுப்பியிருந்தார். ஒரு சூரியோதமும் அழகான புறாக்களையும் கொண்ட படம். அந்தப் படம் எனக்குள் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. என் மனைவி அமுதாவிடம் அந்த நண்பரின் கதையைச் சொன்னேன். ஆர்வத்துடன் கதையைக் கேட்டபிறகு ‘அவர் போவாம இருந்ததுதான் நல்லது. போயிருந்தா அவருக்கும் பிரச்சனை, அவரு அப்பாவுக்கும் பிரச்சனயாதான் ஆகியிருக்கும் ‘ என்றாள். அமுதாவின் பேச்சு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘ஏன் அப்படிச் சொல்கிறாய் ? ‘ என்றேன். ‘அது அப்படித்தாங்க. ஒருதரம் விரிசல்விட்ட உறவு மறுபடியும் பழையநிலைமையில ஒன்னா சேர அவ்வளவா வாய்ப்பில்லங்க ‘ என்று பேச்சை முடித்துக்கொண்டாள்.

எதிர்பாராத ஒரு கணத்தில் மலையாள எழுத்தாளர் கேசவதேவ் எழுதிய ஒரு கதையையும் நண்பருடைய வாழ்க்கையையும் அப்போது ஒப்பிட்டுப்பார்த்தது மனம். அக்கதையிலும் இதேபோல வீட்டைவிட்டு வெளியேறியவன் ஒருவன் இடம்பெறுகிறான். இறுதியில் தன்னை வீடு ஏற்றுக்கொள்ளுமா தள்ளுமா என்கிற சஞ்சலமும் அவன் மனத்தில் இடம்பெறுகிறது.

பசி தாங்காமல் நள்ளிரவில் ஒரு கடைத்திண்ணைமீது உட்கார்ந்திருக்கும் சிவதாஸ் என்னும் இளைஞன் தன் சொந்த வாழ்வில் நடந்த சில சம்பவங்களைச் சொல்வதைப்போல அமைக்கப்பட்டிருக்கிறது கதை. கள்ளச்சந்தை வணிகத்தில் பெரும்பணக்காரரான அப்பாவுக்கும் அன்பு மிகுந்த அம்மாவுக்கும் பிறந்த மூன்று பிள்ளைகளில் மூத்தவனாகப் பிறந்தவன் சிவதாஸ். மற்றவர்கள் பாமினி, செளதாமினி என்னும் பெண்குழந்தைகள். அளவுகடந்த பணமும் செல்லமும் அவனைப் பிழையான வழிகளில் இறங்கவைக்கிறது. ஒன்பதாம் வகுப்பில் படிக்கிற காலத்திலேயே பெண்பிள்ளைகளிடம் பேசுவதையும் அவர்களுக்குக் காதல் கடிதங்கள் கொடுப்பதையும் பொழுதுபோக்காகச் செய்யத் தொடங்கினான். வகுப்பில் படிக்கிற பெண்களுடன் குறும்புகளில் ஈடுபடுகிறான். பெண்பிள்ளைகளிடம் பழகிக் காதல் கடிதங்கள் கொடுப்பதை ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாகக் கருதுகிறது அவன் மனம்.

ஒருநாள் தன் தகப்பனாரின் கூலியாளின் மகளுக்குக் காதல் கடிதம் கொடுத்துவிடுகிறான். அதன்பிறகு ஒரு டாக்கடைக்காரரின் புதல்விக்குக் கடிதம் கொடுக்கிறான். இருவரும் பள்ளி வளாகத்திலேயே பள்ளி தொடங்கும் ஒன்பது மணிக்கு முன்னரேயே சந்தித்து உரையாடுவதைப் பழக்கமாகக் கொள்கிறார்கள். காவல்காரனுக்கும் கூட்டுபவளுக்கும் கையூட்டுத் தரப்படுகிறது. இரண்டு நாள்கள் அவர்களுடைய காதல்நதி தடையின்றிப் பாய்கிறது. மறுநாள் அவனும் கோமளமும் காதல் மயக்கத்தில் லயித்துக் கிடந்த தருணத்தில் பாத்துப் பன்னிரண்டு மாணவர்கள் கதவைத் திறந்துகோண்டு உள்ளே புகுந்துவிடுகிறார்கள். இருவரையுமே பள்ளி நிர்வாகம் நீக்கிவிடுகிறது.

சிவதாஸின் தந்தையார் திருவனந்தபுரத்தில் தன் மாமாவீட்டில் தங்கிப் படிக்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால் அதில் அவனுக்கு விருப்பமில்லை. எனினும் தந்தையின் நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு அங்கே செல்கிறான். ஆனால் கூடியவிரைவில் அவர்களிடம் வம்புசெய்து தனியாக அறையெடுத்துத் தங்கிக்கொள்கிறான். செலவுக்கு மாதாமாதம் பணம் வருகிறது. அறைக்கு எதிர்வீட்டில் வசிக்கும் பெண்ணோடு அவனுடைய சிநேகிதம் வளர்கிறது. படிப்பெல்லாம் காற்றில் கரைகிறது. சதாகாலமும் காதல் மயக்கத்தில் கிடக்கிறார்கள் இருவரும். ஊரிலிருந்து வரும் பணம் முழுசையும் சிவதாஸ் அவளிடம் கொடுத்துவிடுகிறான். ஆண்டுக்கணக்கில் இந்த உறவு தொடர்கிறது. அவன் சகோதரி செளதாமினியின் திருமணம் நடக்கவிருப்பதாகவும் விடுப்பெடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றும் அவன் தந்தை கடிதம் எழுதியனுப்புகிறார். அவனோ காதலியின் மயக்கும் அணைப்பிலிருந்து விடுபட விருப்பமில்லாமல் உடல்நலம் குன்றிப் படுத்திருப்பதாகத் தந்தயடித்துவிட்டு அவளுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறான். திருமணம் முடிந்த மறுநாளே அவன் தந்தை அவனுடைய இடத்துக்கு வந்துவிடுகிறார். அவருக்கு எல்லா விஷயங்களும் விளங்குகின்றன. உடனே அந்த இடத்திலிருந்து அவனை அழைத்துச் செல்லவேண்டுமென்று துடிக்கிறார். அவனோ அவளில்லாத வாழ்வைக் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியாது என்ற நிலையில் அவருடன் செல்வதில் விருப்பமின்றி இருக்கிறான்.

ஊரிலிருந்து பணவரவு நிற்கிறது. தன் வசமிருந்த தங்கச் சங்கிலி, கைக்கடிகாரம் எனச் சில பொருள்களை விற்று நெருக்கடிகளிலிருந்து மீள்கிறான். அப்போதும் ஊருக்குச் செல்லும் எண்ணம் அவன் மனத்தில் எழுவதில்லை. ஒருநாள் அவனுடைய தாயார் இறந்துவிட்டதாகத் தந்தி வருகிறது. ஆனால் காதலி மறுநாள் போய்க்கொள்ளலாமே என்று சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அவளுடன் திரைப்படம் பார்க்கப்போகிறான். மறுநாள் எட்டுமணிவரை துாங்கிவிட்டு ஊரைநோக்கிக் கிளம்புகிறான்.

ஊரில் ஈமக்கிரியைகள் எல்லாம் முடிவடைந்துவிடுகின்றன. யாரும் அவனுடன் முகம்கொடுத்துப் பேசவில்லை. எல்லாரும் உறங்கியபின்னர் திருட்டுத்தனமாகத் தன் அப்பாவின் அறைக்குள் நுழைந்து அலமாரியைத் திறந்து அதில் சேமித்துவைக்கப்பட்டிருந்த தங்கநகைகளையும் பணக்கட்டுகளையும் சுருட்டி எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறான். முதலில் தன் காதலியின் நினைவுதான் வருகிறது. ஆனால் விடிந்ததும் நகைகள் காணாததைக் கண்டதும் திருவனந்தபுரத்துக்கு அவனைத் தேடிவரும் ஆபத்து இருப்பதை உணர்ந்து சென்னைக்குச் செல்ல முடிவெடுத்து ரயிலேறுகிறான். சென்னைக்குச் சென்றதும் தன் காதலிக்குத் தந்தியடித்து வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே அவனிடம் முதலில் உருவாகிறது. ஆனால் வண்டியில் ஏறியதும் தன்னுடன் முதல்வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த அழகான ஒரு மங்கையைப் பார்த்ததும் காதல் வசப்பட்டுவிடுகிறான். இரவெல்லாம் அவளிடம் காதல்மொழி பேசியபடி வருகிறான் அவன்.

காதல் பித்தேறிய மயக்கத்தில் பெட்டியைத் திறந்து கொண்டுவந்திருக்கும் நகைகளையும் பணத்தையும் அவளுக்கே கொடுக்கவிருப்பதாகச் சொல்கிறான். இருவரும் காதல் மயக்கத்தில் லயித்திருக்கிறார்கள். சென்னையை நெருங்கும்போது அவனை அவள்தான் எழுப்புகிறாள். அவன் பைத்தியம் பிடித்தவனாகத் தன்வசம் இருக்கும் நகைகளையும் பணத்தையும் அவளிடம் உண்மையிலேயே தந்துவிடுகிறான். முதலில் தான் மட்டும் தனியாக வீட்டுக்குச் சென்று சேர்ந்ததும் காரைத் திருப்பியனுப்புவதாக அன்பு வார்த்தைகள் சொல்லிவிட்டு மாயமாகிவிடுகிறாள். நகரில் தனிமையில் நெடுநேரம் நின்றபிறகுதான் அவனுக்கு உண்மை புரிபடுகிறது.

இதுதான் சிவதாஸ் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிற கதை. நடந்துபோன எந்த விஷயத்துக்காகவும் வருத்தப்படும் தொனியோ அல்லது கூட இருந்து சுகம்தந்த பெண்கள்மீது புகார் சொல்லும் தொனியோ சிறிதும் இல்லாமல் அவன் இக்கதையைச் சாமர்த்தியமாக முன்வைக்கிறான்.

கதையின் தொடக்கத்தில் குப்பைத் தொட்டியொன்றின் அருகில் நிகழும் இரண்டு நாய்களின் காதல் நாடகத்தைப்பற்றிய குறிப்பையும் அவனே சொல்கிறான். கபில நிறமுடைய கழுத்துப் பட்டையை அணிந்த ஆண்நாயும் தெருநாய் ஒன்றும் அந்த நாடகத்தில் பங்கு வகிக்கின்றன. அந்த நாடகத்தை இரண்டு நாள்களாகத் தொடர்ந்து பார்ப்பதாக அந்தப் பாத்திரம் சொல்கிறது. முதலில் பெண்நாயைச் சுற்றி ஏராளமான நாய்கள் அலைகின்றன. கபில நிற நாய் களத்தில் இறங்கியதும் அனைத்தும் ஓடிவிடுகின்றன. உடனே பெண்நாய் கபில நிற நாயின் வசப்பட்டுவிடுகிறது. காதல் ஜோடி அங்கிருந்து ஓடிச்சென்று விடுகின்றது. மறுநாள் காலையில் ஒரு வாலிபன் கபில நிற நாயின் அடையாளங்களைச் சொல்லித் தெருவெல்லாம் விசாரித்தபடி போகிறான். அன்றிரவும் அக்காதல் ஜோடி குப்பைத் தொட்டி அருகில் வருகிறது. பெண் நாய் வழக்கம்போலத் தொட்டிக்கள்ளேயும் வெளியேயும் சுற்றிக் கிடக்கிற எச்சில் இலைகளையெல்லாம் நக்கித் தீர்க்கிறது. அதுவரை கபிலநிறநாய் காத்து நிற்கிறது. பிறகு இரண்டும் அங்கிருந்து ஓடிவிடுகின்றன. மறுநாளும் அதேபோல நாய்களின் ஜோடி குப்பைத் தொட்டியருகில் காணப்படுகின்றன. வழக்கம்போல பெண்நாய் எச்சில் இலைகளை நக்குகின்றது. காத்திருந்த ஆண்நாய் அதன்பிறகு அழைத்துச் செல்கிறது. ஆண்நாயின் உடல் காயமடைந்திருக்கிறது. வழியும் ரத்தத்துடன் அந்த ஆண் நாய் நொண்டிநொண்டிப் பின்தொடர்கிறது. அந்தக் கோலத்தைக் கண்டதும்தான் சிவதாஸனுக்குத் தன் கதைகள் அனைத்தும் நினைவுக்கு வருகின்றன. அவற்றையெல்லாம் ஒருமுறை சொல்லித் தீர்த்துவிட்டால் மனஆறுதல் கிட்டும் என்கிற நம்பிக்கையில்தான் தன் கதையை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்குகிறான்.

கதையின் இறுதியில் மீண்டும் அந்த கபிலநிற நாயைப்பற்றிய குறிப்பையும் முன்வைக்கிறான் அவன். அந்நாய்கள் இரண்டுமே மீண்டும் குப்பைத் தொட்டிக்கருகே வந்து சேர்கின்றன.

ஆண்நாய் மிகவும் களைப்படைந்திருக்கிறது. பெண்நாய் தொட்டிக்கருகே படுத்துக்

கொள்கிறது. தலையைக் குனிந்தவண்ணம் தன் வீட்டைநோக்கிச் செல்லும் வழியை மோப்பம் பிடித்தபடி செல்லத்தொடங்குகிறது. திரும்பிச் செல்ல அந்த நாய்க்காவது ஓரிடம் இருக்கிறது, தான் என்ன செய்யமுடியும் என்கிற கேள்வி அவன் மனத்தில் எழுகிறது.

*

மலையாளக் கதையிலக்கியத்தின் வளர்ச்சியில் பொதுவுடைமை இயக்கத்தோடு தொடர்புடைய எழுத்தாளர்களின் பங்களிப்பு கணிசமான அளவில் உண்டு. அவ்வணியைச் சேர்ந்த முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் கேசவதேவ். இவர் எழுதிய கண்ணாடி, ஓடையில் நின்னு, நடிகை ஆகிய சில நாவல்கள் தமிழல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ‘நான் ? ‘ என்னும் நீள்கதை, அதே தலைப்பில் தனிநுாலாக சி.ஏ.பாலனுடைய மொழிபெயர்ப்பில் கலைஞன் பதிப்பகத்தின் வெளியீடாக 1969 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

————————————————————————————————————————————-

Series Navigation