எண்ணச் சிதறல்கள் – மும்பை குண்டுவெடிப்புகள்

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

நேச குமார்


கடந்த 11ம் தேதி மாலை தொலைபேசி வந்தது நண்பரிடமிருந்து – மும்பையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துவிட்டதாக. இரவு வீடு திரும்புவதற்குள் சாவு எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிட்டது. எங்கும் பதட்டம், கவலை. எனக்கு உடனடியாக கவலை மும்பை வாழ் நண்பர்களைப் பற்றியும், அவர்களது குடும்பத்தாரைப் பற்றியும்தான். தொடர்பு கொண்டு அனைவரும் நலம் என தகவல் கிடைத்தவுடன் தூங்கப் போனேன் – தூக்கம் வர மறுத்தது.

***
யார் நிகழ்த்தியிருப்பார்கள் என்ற சந்தேகமெல்லாம் எனக்கில்லை. இது போன்ற திட்டமிட்ட, துல்லியமான குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் நெட்வொர்க், மோட்டிவேஷன், கொள்கை எல்லாம் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளுக்கே உள்ளது. உலக இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல்-அமெரிக்காவைத் தவிர தற்போது இந்தியாவும் ஷைத்தானாக தோற்றமளிக்கத் துவங்கிவிட்டது. ரா(RAW)வில் கூடுதல் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற திரு.பி.இராமன் அவர்கள் இது சம்பந்தமாக எழுதும்போது முன்பு இஸ்லாத்துக்கெதிரான கிறித்துவ-யூதச் சதி பற்றிப் பேசிவந்த அல்-கய்தா தற்போதெல்லாம் கிறித்துவ-யூத-இந்துச் சதி பற்றிதொடர்ந்து பேச ஆரம்பித்துள்ளதை நினைவுபடுத்தியுள்ளார். 1993ல் மும்பையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் சில இஸ்லாமியர்களால் நிகழ்த்தப்பட்டன என்றும், இந்தக் குண்டுவெடிப்புகளும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளால் நிகழ்த்தப்பட்டிருக்கக் கூடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான்.
***
மும்பை தாக்கப்படலாம் என்பதும் அனைவரும் எதிர்பார்த்த ஒரு விஷயம்தான். தற்போது கூட இரு மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிரத்தில், நிறைய ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்து பிடித்தனர் போலீஸார். ஆனால், விசாரணை முழுவதும் முடிந்து அனைவரையும் பிடிப்பதற்குள்ளாகவே இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துவிட்டன. தற்போது லஷ்கரீ கஹார் என்ற அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. 16 இஸ்லாமியப் போராளிகள்(முஜாஹித்தீன்கள்) இதில் பங்கு பெற்றனர் என்றும், ஒருவர் மட்டும் உயிரிழந்துவிட்டார் என்றும் மற்ற அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தாம் தான் இதை நிகழ்த்தினோம் என்பதை நிரூபிக்கும் வகையில் விரைவில் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை வெளியிடப் போவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது லஷ்கர்-இ-தொய்பாதான் என்றும், உலகின் கவனம் அதன் மீது திரும்பிய நிலையில், தொய்பா என்ற பெயரை கஹார் என்று மாற்றிக் கொண்டு அதே குழு இயங்குகிறது என்றும் உளவுத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
***
லஷ்கரீ தொய்பா(தமிழில்: தூய்மையானவர்களின் புனிதப்படை) மற்ற காஷ்மீர ஜிகாதி அமைப்புகளிலிருந்து வேறுபட்டது. இந்த அமைப்பின் நோக்கம், இந்தியாவை இந்துக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் சட்டமான ஷரீயத்தை அமல்படுத்தும் ஒரு இஸ்லாமிய அரசை இங்கு ஸ்தாபிப்பதுதான். காஷ்மீர் தமக்கு நுழைவுப்படிதான் என்றும், ஒட்டுமொத்த இந்தியாவையும் இஸ்லாத்தின் குடையின் கீழ் கொண்டுவருவதுதான் தமது நோக்கம் என்றும் வெளிப்படையாகவே இந்த அமைப்பு அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் முரிட்கியிலிருந்து இயங்குகின்றது இந்த அமைப்பு. ஜமாத்துத்தா·வா என்ற அமைப்பின் போராளிகள் பிரிவாக இருந்த இந்த அமைப்பு பாகிஸ்தானில் (பெயரளவில்) தடை செய்யப்பட்டது. அமெரிக்காவும் இதை தடை செய்தபிறகு தாய் அமைப்பான ஜமாத்துத்தா·வா இந்த அமைப்புக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று (பெயரளவில் ) அறிவித்துவிட்டது. சவுதி பணத்தில் இயங்கும் பயங்கரவாதப் பிரச்சார அமைப்புகளில் முதன்மையானது இந்த ஜமாத்துத்தா·வா அமைப்பு. இதன் தலைவர் ஹ·பீஸ் முகம்மது சயீத்தின் சவுதிப் பயணம் அவரது மனதை தா·வா பணியில் ஈடுபடும்படி மாற்றி, பிறகு லஷ்கரீ தொய்பாவின் தலைவராகவும், தற்போது ஜமாத்துத்தா·வாவின் தலைவராகவும் மாற்றியுள்ளது. சவுதிப் பணம் இருப்பதால், இவர்கள் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு சாமான்ய முஸ்லிம்களின் வரவேற்பைப் பெற்றுள்ளனர். உதாரணமாக பாகிஸ்தானில்(பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர்) சென்றவருடம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கியதில் இவர்கள் மற்றும் இவர்களின் துணை அமைப்புகளே முன்னனியில் நின்றன(நில நடுக்கத்தை அல்லாஹ் ஏற்படுத்தியதற்கு ஹ·பீஸ் முகம்மது சயீத் தெரிவித்த காரணங்களுள் ஒன்று, இந்தியாவுடன் பாகிஸ்தான் நட்பு பாராட்ட விழைந்தது. பார்க்க – அடியில் தரப்பட்டுள்ள அவரது ரீடி·ப் பேட்டி). பாகிஸ்தானில் பல இடங்களில் மதராஸாக்களையும், பொதுவான பாடசாலைகளையும் நடத்திவருகிறது இந்த அமைப்பு. அவற்றில் தற்போது 20,000 மாணவர்கள் பயின்றுகொண்டிருப்பதாக அவர்களது வலைத்தளம் தெரிவிக்கின்றது.

***
இந்தத் தீவிரவாதத் தாக்குதலைவிட, இவர்களது கருத்தியலைவிட, தீவிரவாதத்தை நமது சமுதாயம் எதிர்கொள்ளும் விதம்தான் கவலையளிக்கிறது. தொடர்ந்து இப்படியான தாக்குதல்கள் நிகழ்ந்தும் அதை எதிர்கொள்ள ஒரு நீண்டகாலத் திட்டம் நம்மிடம் இல்லை. அப்போதைக்கு பொருமுகிறோம், கோபப் படுகிறோம், சில நாட்கள் சென்றதும் மறந்துவிட்டு சொந்தக் கவலைகள், சந்தோஷங்களில் மூழ்கிவிடுகிறோம். தனிமனிதர்களை நான் குறிப்பிடவில்லை இங்கு – சமுதாயமாக நமக்கு குறைந்த ஞாபகம் இருப்பதுதான் கவலையளிக்கின்றது. இந்த குறைந்த ஞாபகசக்திதான் நமது பின்னடைவிற்குக் காரணம்.
***
இந்தியாவெங்கும் இப்படியான தீவிரவாதச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்ற நிலையில், இவற்றை எதிர்கொள்வதற்கு ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு நம்மிடம் இல்லை. சட்டம் ஒழுங்கு மாநிலங்கள் கையில் இருப்பதால், தகவல் பரிமாற்றம், உடனடியாக எச்சரிப்பது, ஒருங்கிணைந்த செயல்பாடு நமது நாட்டில் இல்லை. இதற்காக சட்டம் ஒழுங்கை மத்திய அரசு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நான் சொல்லவில்லை. மாநிலங்கள் கையில் அது இருப்பதுதான் நல்லது. நீள்நோக்கில் மேலும் மேலும் மாநிலங்களுக்கு அதிகாரம் கொடுப்பதுதான் நல்லது என்று கருதுபவன் நான். ஆனால், வருத்தத்தையளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று இவ்வளவு தொழில்நுட்பங்கள், வசதிகள் இருந்தும் நாடு தழுவிய ஒரு தீவிரவாதத்திற்கெதிரான நெட்வொர்க்கிங்கைச் சரியான முறையில் நாம் செய்யவில்லை என்பதுதான் அது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தகவல் தொழில்நுட்பத்தை நாம் இன்னும் நல்ல முறையில் பயன்படுத்தலாம். ஒரு மாநில காவல்துறை மற்றொரு மாநிலத்தைத் தொடர்பு கொள்ளவும், தகவல் பரிமாற்றங்களுக்கும், நாடு தழுவிய தகவல் களஞ்சியத்தை உருவாக்குதல் போன்றவற்றிற்கும் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியை நாடினால் நமது பாதுகாப்பு பலப்படும்.
***
சட்டம் ஒழுங்கு என்றவுடன் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. இந்த ஜிகாத்தை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டுமே பார்ப்பது மிகவும் தவறு. இது போன்ற தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கம் அளிப்பது, அவர்கள் உண்மையென்று நம்பும் சில நம்பிக்கைகளே. அந்த நம்பிக்கைகளோ, அவர்கள் படும் துயரங்கள், தண்டனைகள் ஆகிய அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் மனவுறுதியை அவர்களுக்கு தந்துவிடுகிறது. உதாரணமாக, மும்பை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று மகாராஷ்டிர மாநில காவல்துறையினர் சந்தேகிக்கும் சிமி( SIMI) யின் தலைவர் ஷாஹித் பத்ர் ·பலாஹி,” நீங்கள் எல்லாம் கா·பிர்கள். நீங்கள் எங்களை எதிர்ப்பீர்கள் என்று திருக்குரானில் சொல்லியுள்ளது. எனவே நீங்கள் எங்களைக் குற்றம் சாட்டும்போதெல்லாம் நாங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்ற உறுதி எங்களுக்கு வலுப்பெறுகின்றது” என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்ததை, யோகிந்தர் சிக்கந்த் தமது சிமி பற்றிய சமீபத்தய கட்டுரையில் தெரிவித்திருந்தார். எனவே, இவர்களுக்கு மரணமும் ஒரு பொருட்டல்ல. பஞ்சாபில் தீவிராவாதிகளை என்கவுண்டர் என்ற பெயரில் சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளி, தீவிரவாதத்தை அடக்கிய கில்லின் யுத்தி, இஸ்லாமியத் தீவிரவாதிகள் விஷயத்தில் சரிப்பட்டு வராது. செத்தால் சந்தோஷமாகச் சாவார்கள், ஷஹீதானார்கள் என்று குடும்பத்தினரும், சுற்றத்தாரும் குதூகலிப்பார்கள். இப்படி ஷஹீதானவர்கள் ஜன்னத்தில்(ஜன்னத் – கண்ணழகியர் நிறைந்துள்ள இஸ்லாமிய சுவனம்) சுகம் காண்கின்றனர் என்று நம்பும் மற்றவர்களும் இவர்களைப் பின்பற்றி ஜிகாத் போரிட முன்வருவார்கள். எனவே, இஸ்லாமியத் தீவிரவாத விஷயத்தில் மற்ற மருந்துகளெல்லாம் சரிபட்டு வராது.
***
வேறு என்னதான் இதற்குத் தீர்வு என்ற கேள்வி உடனடியாக எழுகிறது. இன்று அமெரிக்கா, ருஷ்யா, சீனா போன்ற வல்லரசுகளே இஸ்லாமியத் தீவிரவாதத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கும் நிலையில், நாம் இதை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இருக்கும் ஒரே வழி, கருத்து ரீதியாக இந்த வன்கோட்பாடுகளை எதிர்கொள்வதுதான். எமர்ஜென்ஸி காலத்தில் இந்திராகாந்தி ஒரு யுத்தியை கையாண்டார். அதாவது அரசாங்கமே பல பிரசுரங்களை வெளியிட்டு தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் கருத்தியல் அடிப்படையை தகர்க்க முயற்சி செய்தது. மேற்கு வங்கத்தில் அப்போது பிரபலாக இருந்த ஒரு ஆன்மீகக் குழுவை தடை செய்ததோடு மட்டுமல்லாது, அவர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நாடுகள், அவர்களால் விளையக்கூடிய ஆபத்துகள் என்று விரிவான பிரசுரங்கள் டி.ஏ.வி.பியால் வெளியிடப்பட்டு அரசு சார்ந்த நூலகங்களுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகிக்கப் பட்டன. இவற்றில் உண்மையுடன் கொஞ்சம் பொய்-புரட்டுக்களும் நிறைந்திருந்தன என்பது உண்மைதான். இது போன்று இன்று அரசே இதைச் செய்யவேண்டும் என்று நான் விரும்பவில்லை என்றாலும், குறைந்த பட்சம் தம்மிடம் இருக்கும் தகவல்களையாவது ஊடகங்களோடு அரசு பகிர்ந்து கொள்ளவேண்டும். தனியார் ஊடகங்கள் இந்தப் பணியை அரசு நிறுவனங்களைவிட சிறந்த முறையில் செய்யும் – அதற்கு நம்பகத்தன்மையும் அதிகம் இருக்கும். சாமான்யர்கள் இதை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக குற்றவாளியாக்குவது தவறு என்றாலும், உண்மையை நாம் இன்று உரத்துப் பேசாமல் விட்டால் அந்த சமுதாயத்திற்குள் இருக்கும் நல்லவர்கள் கூட தமது குரலை உயர்த்திப் பேசமுடியாது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி பகிரங்கமாகப் பேசுவது, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நாளடைவில் இஸ்லாமியர்களுக்கே நல்லது செய்யும்.
***
இதெல்லாம் ஒரு புறமிருந்தாலும், இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான பொது சமூகங்களின், சாமான்யர்களின் போராட்டம் நீண்டகாலம் பிடிக்கும் என்றுதான் தோன்றுகிறது. அதற்குள் எதாவதொரு இன்னும் பயங்கரமான செயல்களில் தீவிரவாதிகள் ஈடுபடாமல் இருக்கவேண்டுமே என்கிற கவலையும் ஏற்படுகிறது. சமீபத்தில் அவுட்லுக்கில் வெளியாகியுள்ள கட்டுரையில் இந்தோனேசிய இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாங்கள் அணுஆயுதங்களையும் கா·பிர்களுக்கு எதிராக பயன்படுத்துவோம் என்றும், அப்படிப் பயன்படுத்தும்போது அதில் இஸ்லாமியர்கள் இறந்தாலும் அதுபற்றித் தமக்குக் கவலையில்லை, ஏனெனில் அப்படி மரணிக்கும் இஸ்லாமியர்கள் கா·பிர்களை அழித்தொழிக்கும் ‘புனித’ப் பணியில் இறப்பதால் அந்த இழப்பு தமக்கு ஒப்புமையானதே என்று தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் போன்ற அரைத்தாலிபான் அரசுகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில், இப்படியான விபரீதங்கள் அதீதக் கற்பனை என்று நாம் ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது.

– நேச குமார் –
சுட்டிகள்:

சிமி பற்றி யோகிந்தர் சிக்கந்த் :
http://timesofindia.indiatimes.com/articleshow/1778902.cms

மும்பை குண்டு வெடிப்புகள் பற்றி பி.இராமன் –
http://www.rediff.com/news/2006/jul/12raman.htm

லஷ்கர்-இ-தொய்பா : http://en.wikipedia.org/wiki/Lashkar-e-Toiba

மார்க்கதுத்தா·வா : http://www.jamatuddawa.org/

மார்க்கத்துதா·வா தலைவரின் பேட்டி: http://in.rediff.com/news/2005/oct/24inter1.htm

Series Navigation