எங்கே மகிழ்ச்சி ?

This entry is part 23 of 49 in the series 19991203_Issue

பாரி பூபாலன்


உள்ளத்தின் அடித்தளத்திலே ஒர் உன்னத நோக்கம். நம்மை நாமே ஒரு நீண்ட இரயில் பயணத்தில் செல்வதாய் பார்க்கிறோம். ஜன்னலின் வழியாக பக்கத்து சாலையிலே விர்ரென்று செல்லும் கார்களையும், ஆங்காங்கே கையசைக்கும் குழந்தைகளையும், மலையடிவாரத்திலே மேய்ந்து திரியும் மாட்டு மந்தைகளையும், தூரத்திலே புகையை கக்கி கொண்டிருக்கும் தொழிற்சாலை கூண்டுகளையும், பட்டணத்து கூட கோபுரங்களையும், கிராமத்து குடிசைகளையும் பார்க்கிறோம், பருகுகிறோம்.

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நம் மனதிலே இருப்பது நம்முடைய குறிக்கோள், நாம் கடைசியாய் போய்ச்சேர வேண்டிய இடம். ஒரு குறிப்பிட்ட தினத்திலே, ஒரு குறிப்பிட்ட மணித்துளியிலே, நம்முடைய புகை வண்டி, நிலையத்தை வந்தடையும். அப்பொழுது, உன்னதமான கனவுகள் உண்மையாகும். நம்முடைய வாழ்க்கையின் சிறு சிறு துண்டுகள் மிக அழகாய் ஒன்று சேரும், தாறுமாறாக கிடக்கும் துண்டுகளை ஒன்று சேர்க்கும் வினாவிற்கான விடையைப்போல. எப்படி பொறுமையில்லாமல் நாம், புகைவண்டி ஜன்னல்களை எண்ணிக்கொண்டு, மெல்லமாய் நகரும் நிமிடங்களை திட்டிக்கொண்டு, காத்திருந்து, காத்திருந்து….

‘நான், நிலையத்தை அடைந்தவுடன், அப்பாடா… ‘ நமக்கு நாமே சொல்லிக்கொள்கிரோம். ‘நான் 25 வயதை அடைந்தவுடன்,… ‘, ‘நான் வீடு வாங்கும் பொழுது,… ‘, ‘எனக்கு திருமணம் முடிந்தவுடன்,… ‘, ‘நான் வங்கி கடனை அடைத்தவுடன்,… ‘, ‘நான் அந்த மிகப்பெரிய பதவி உயர்வு பெரும் பொழுது,… ‘, ‘நான் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், நான் மிக சந்தோஷமாக வாழப்போகிறேன் மிகுதி நாட்களெல்லாம் ‘

வெகு சீக்கிரமாய் அல்லது நீண்ட நாட்கள் கழித்து, புகைவண்டி நிலையமே இல்லை என்று உணர்கிறோம். கடைசியாய் போய்ச்சேர இடம் என்று எதுவும் இல்லை. வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி, இந்த பிரயாணம் தான். நிலையம் என்பது ஒரு கனவு, எப்பொழுதுமே நம்மை விட்டு ஒரு தூரத்திலே இருக்கும் ஓர் உணர்வு.

‘சந்தோஷமாய் அனுபவியுங்கள், இந்த இனிய தருணத்தை ‘ என்பது ஒரு நல்ல குறிக்கோள். எனவே, ஜன்னல்களை எண்ணுவதையும், நிமிடங்களை திட்டுவதையும் விட்டு விடுங்கள். மாறாக, மலை ஏறி இறங்குங்கள் இன்னும் அதிகமாய். சிறிது கூட சர்க்கரை போட்டு தித்திப்பாய் உண்ணுங்கள். காலணி இல்லாமல், கண்டபடி திரியுங்கள். குளம், குட்டையிலெ கும்மாளம் அடியுங்கள். அதிகமாய் சிரியுங்கள், அதிகமாய் அன்பு காட்டுங்கள். வாழுங்கள் வாழ்க்கையை அதன் போக்கிலேயே.

எப்பொழுதோ ஒரு முறை படித்த கட்டுரை இது. இந்த கட்டுரை கனவுகளை பற்றியும், உணர்வுகளை பற்றியும், எண்ணங்களை பற்றியும் அங்கங்கே தொட்டு செல்கிறது. சில சமயம், முட்டாள்தனமாகக் கூட தோன்றுகிறது, எதிர்கால எண்ணமே வேண்டாம் என்று கூறுவதாக. இந்த கட்டுரை தொட்டு செல்லும் விஷயங்களை, நாமும் கொஞ்சம் உற்று பார்க்கலாமே என்று தோன்றியது. விளைவு, இந்த ஆரம்பம். இன்னும் வளரும்.

       

Thinnai 1999 December 3
திண்ணை

Series Navigation<< சருகுத் தோட்டம்சூறை >>

Scroll to Top