உள்ளங்கைச் சூடு

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

சமீலா யூசுப் அலி


இயல் கவிதை1

எனக்குள் தவிக்கும்
உன்
இதயத்தில்
முகம் பதிக்கிறேன்!

இனியவனே!!!
அழக்கூடத்திராணியற்று
நிலம் பார்க்கிறது
வெட்கம் கெட்ட விழிகள்…

உயிர் நிரம்பிய
உன்
உதடுகளின் மௌனம்
பேரிரைச்சலாய்…

நீ
படர்ந்த
மஞ்சள் சோறு ஞாயிறுகள்…

குளியலறைக்குள் தவிக்கும்
உன்
பாடல்களின் சிணுங்கல்…

மரணம்…
மௌனமாய்…
மிக மௌனமாய்…
வந்து
எனக்குள் அதிர்ந்தது!
;

உலர்ந்து
நீலம் பாரித்த
பூமி
தாகித்திருக்கிறது
மழைத்துளியின் ஈரலிப்பிற்காய்…

உன்
காலடி பதிகையில்
கால் இடற நானோடி வரும்
கதவுகளில்…
துக்கத்தின் கர்ப்பம்!!!

துவைத்து மடித்த
உன்
சேர்ட்டுக்குள்
இதயம் அடம்பிடிக்கிறது…

ஜன்னலின் இடுக்கால்
உன்
துப்பலின் ஓசைகளைத்
தேடுகின்றேன்!!!

இதோ நீ
எழும்பப்போகிறாய்…
ஊடலில் தோற்றதான
பொய்க் கோபத்துடன்…

மரணம்…
மௌனமாய்…
மிக மௌனமாய்…
வந்து
எனக்குள் அதிர்ந்தது!

என் விரல்சிறைக்குள்
கடைசி மட்டும்
உன்
உள்ளங்கைச் சூடு
கைதியாய்…

நாம்
நிலாத்தின்ற
எச்சங்கள்…
மொட்டை மாடியில்

தோட்டா துளைத்த
உன்
பிறை நுதலை…
நம்பமறுக்கிறது மனசு!!!

கொடியவர்களே
கொன்று விடுங்கள்!!!
அடம்பிடித்தழும் …
என் இதயத்தையும்
கொன்று விடுங்கள்!!!

சமீலா யூசுப் அலி
மாவனல்லை
இலங்கை.


shabnamfahma@gmail.com

Series Navigation