உறைந்த தேவதைகள்

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

ஹெச்.ஜி.ரசூல்பல நூறு இறக்கைகளோடு

முகமெல்லாம் வியர்க்க

தூரங்களை பறந்து தாண்டிய

களைப்பெதுவுமின்றி

என் வாசல் முற்றத்தில்

வந்திறங்கின தேவதைகள்

மிகுந்த அச்சத்தோடு

தாளிடப்பட்ட கதவுகளைத் தட்டின.

நரகத்தீயின் வெக்கைத் தாங்காமல்

படபடத்து கரிந்த சிறகுகளின்

அடையாளம் சிறிது தெரிந்தது.

முற்றுகையிடப்பட்ட கதவுகளின் பின்னால்

எந்த வரிகளிலும் நுழையமுடியாத

துயரங்களின் சுயசரிதைக் குறிப்புகள்

சிதறிக் கிடந்திருக்க கூடும்.

தன்னிருப்பை அழிக்கவிரும்பாது

பூட்டிய கதவின் முன்பு நின்ற

தேவதைகள் குழப்பமடைந்திருந்தன

இரவு மாறிச் சுழன்றோய

உறுமிக் கொண்டு திரும்பிய மேகத்தினுள்ளே

கிழிபட்ட தெவதைகள் சிந்திய ரத்தம்

உறைந்து கிடந்தது.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்