உறவினர்கள்

This entry is part [part not set] of 14 in the series 20010115_Issue

அழகிய சிங்கர்


அந்த வருடம் பாட்டி செத்துப் போய்விடுவாள் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். பாட்டி அப்படி இருந்தாள். பாட்டிக்கு எப்போதும் இரத்தக் கொதிப்பு நோய் உண்டு. மே–ஜூன் மாதங்களில் இந்த நோயின் கடுமை நன்றாகவே தெரியும். ஆகஸ்ட் மாதம் நெருங்கியும் பாட்டியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

பெரியப்பா பையன் பாபுவின் கல்யாணத்திற்கு குடும்பம் முழுவதும் சுவாமிமலைக்குக் கிளம்புவதாக இருந்தோம். தனியாக பஸ் ஏற்பாடு செய்திருந்ததால் போய் வருவதில் சிரமம் எதுவுமில்லை. ஆனால் பாட்டியின் நிலைதான் கவலைப்படும்படியாக இருந்தது. டாக்டர் சங்கர நாராயணன் பாட்டியை யாராவது ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென்று சொல்லி விட்டார். டாக்டர் அப்படிச் சொல்லும்போது, பாட்டிக்கு ஏதாவது புரிந்ததா என்று தெரியவில்லை…கண்கள் லேசாகக் செருகிக்கிடந்தன. வாய் தானாக எதையோ உளறிக்கொண்டிருந்தது. டாக்டர் எதையோ கேட்க, பாட்டி, ‘ராமுவுக்குக் கல்யாணம் ஆயிடுத்து…குழந்தை இருக்கிறது ‘ என்றாள். ராமு மாமா பையன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.

‘பாட்டிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை…இப்படித் தான் உளறிண்டிருக்கா ‘ ‘

‘லோ…ப்ளட்பிரஷர்னா அப்படித்தான் இருக்கும். மூளையிலே ப்ளட் சர்குலேஷன் குறைஞ்சு போயிருக்கும். மூளை ஒழுங்கா வேலை செய்யாது. ‘

‘டாக்டர், நீங்க என் பையன் மாதிரி, நல்லா இருக்கணும்…பெரிசும் சின்னதும் என்னைப் பாக்க வரலை…கறுப்புப் பெட்டியைப் பாத்தீங்களா ? ‘

‘யேய்…பாட்டி… கொஞ்சம் சும்மாயிரேன்…நடிக்கிறியா ? ‘

‘நோ…சார்…நடிக்கலை அவுங்க…உண்மையிலே நோயின் கடுமைதான்…யாரு பெரிசும், சின்னதும் ? ‘

‘பாட்டி அவ பிள்ளைகளைப் பத்திச் சொல்றா… ‘

‘டாக்டர் ஒங்களுக்குப் பணம் எடுத்துக் கொடுப்பேனே, அந்தக் கருப்புப் பெட்டியைக் காணோம் ‘

‘சம்படம் மாதிரி மடியிலே வெச்சிருப்பீங்களே, அதைச் சொல்றீங்களா… ? ‘

‘ஆமா அதைத்தான் சொல்றேன். பிரேமா எடுத்துண்டுப் போயிருப்பா… ‘

‘பாட்டி பிரேமாவைப் பத்தி அப்படிச் சொல்லாதே… அவ காதில விழுந்தா வேலைக்கு வரமாட்டா…. ? ‘

‘கருப்புப் பெட்டியைப் பாத்தீங்களா ? ‘

‘பாருங்க, டாக்டர். அந்த எவர்சில்வர் சம்படத்தை கருப்புப் பெட்டின்னு சொல்றா… ‘

‘மேலே கருப்பு கலர் போட்ட ‘கவர் ‘ இருக்கும். ‘

‘பாட்டிக்கு நடிப்புப் பாதி…ஒடம்பு பாதி ‘ என்று சொல்லிச் சிரித்தார் டாக்டர்.

‘நீங்க நல்லா இருக்கணும் டாக்டர்…என்னைப் பாக்க வந்தீங்களே ? ‘

டாக்டர் அசடு வழிய சிரித்தார். அவருக்குப் பாட்டியைப் பார்க்க வருவதால் கூடுதல் வருமானம் வருகிறது. அரிசி மண்டி பக்கத்தில் அவர் மருத்துவமனை இருந்தது, ஒரு சிறிய அறையில் சில நாற்காலிகள், ஒரு பென்ச், ஒரு சிறு தடுப்பு. அந்தப் பகுதியில் டாக்டர்கள் அதிகம். கூட்டம் அதிகமாக அவரிடம் வராத காரணத்தினால் தான், பாட்டியை அங்கு அழைத்துப் போய் காண்பிக்க எங்களுக்கு செளகரியமாக இருந்தது. கூடவே நாங்கள் இருந்த தெருவிற்கு அருகிலே அவர் மருத்துவமனை இருந்தது.

அதற்குமேல் ஒன்றும் பேச முடியவில்லை பாட்டியால். கண்கள் செருக ஆரம்பிக்க, தூங்கிக் கொண்டிருந்தாள்.

‘பாட்டிக்கு இந்த மருந்தைக் கொடுத்துட்டு வாங்க…..எதுக்கும் சீரியஸ்னா எனக்குப் போன் பண்ணுங்க…ஈஸிஜி, யூரின், மலம் டெஸ்டெல்லாம் எடுக்கணும். ‘

‘நாங்களெல்லாம் கல்யாணத்துக்குக் கட்டாயம் போகணும். அதான் ஒங்களை அழைச்சிட்டு வந்தோம்…சாதாரணமா நாங்க பாட்டியைப் பாத்துண்டு இருப்போம்…ஆனா இப்ப என்ன செய்யறதுன்னு புரியலை… ‘

‘பாட்டியைப் பாத்துக்க ஒருத்தர் கட்டாயம் வேணும். ‘

நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போதிலிருந்து, பாட்டி எங்களுடன்தான் இருந்து வருகிறாள். அம்மா செத்துப்போன பிறகு பாட்டி அவள் பிள்ளைகளைப் பார்க்கக்கூட போவதில்லை. அவர்கள் பாட்டியைப் பார்த்துவிட்டுப் போவார்கள். இதெல்லாம் ஒரு சடங்கு மாதிரிதான் நடந்துகொண்டிருக்கும். அவர்களுக்கு அம்மாவைப் பார்க்க வேண்டுமென்கிற பாசம் என்பதெல்லாமில்லை.

‘நான் வேணும்னா கல்யாணத்துக்கு வரலை ‘ என்றாள் என் மனைவி வித்யா.

‘எப்படிம்மா நீ வராம இருக்க முடியும்… ? முக்கியமான கல்யாணம்…வேணும்னா நீங்க எல்லோரும் போங்க…நான் இங்கே இருக்கேன் ‘ என்றார் அப்பா.

‘எதுக்கு எல்லோரும் போகாம இருக்கணும்… ? பாட்டியை பிள்ளைங்ககிட்டே கொண்டுபோய் விட்டுடலாம். அவங்க பாத்துக்கட்டும். இந்த சமயத்திலகூட பாட்டியைப் பாத்துக்கலைன்னா, எதுக்குப் பிள்ளைங்களா இருக்காங்க, அவுங்க ? ‘……என்று நான் கூறியதை எல்லோரும் ஆமோதித்தார்கள்.

‘என்னை அங்கக் கொண்டு போய் போட்டுடுங்க…அந்திமக் காலத்துலே அவுங்கதான் எனக்குச் செய்யணும். எனக்குக் கடைசிக் காலம் வந்துடுத்து ‘ என்றாள் பாட்டி திடாரென்று.

‘நாங்க பேசிண்டிருக்கிறதெல்லாம் ஒனக்குக் கேட்டுண்டிருக்கா… ‘

பாத்ரூம் போவதாகச் சைகை காட்டினாள் பாட்டி. மெதுவாக பாட்டி கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனேன். நாலு தப்படி நடப்பதற்குள் கீழே விழுந்து விடுவதுபோல் வந்தாள்.

பாட்டியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், எனக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்தன. இத்தனை வருடங்கள் எங்களை வளர்த்தாள் என்பதைவிட, இதுமாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் பாட்டியை விட்டுவிட்டுச் செல்வதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இப்போதெல்லாம் பாட்டியைப் பார்க்கும்போது, எப்போதும் தோன்றும் அலட்சியங்களை வெளிக்காட்டாமல், அக்கறையுடன் அவள் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று தோன்றும். இதெல்லாம் இந்தக் கணத்தில் பாட்டி இல்லாமல் போய்விடுவாளோ என்கிற பயத்தால் ஏற்படும் நடுக்கம். பாட்டி இல்லாமல் போய்விடுகிற வெறுமையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

பாட்டியை பெரிய மாமா வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் விட்டுவிடலாமென்று நினைத்தோம். இதைப்பற்றி மாமாவிடம் தெரிவித்தபோது, அவரால் மறுப்பு எதுவும் தெரிவிக்க முடியாவிட்டாலும், ஆர்வம் காட்டவில்லை.

‘பிள்ளைகளா இவுங்க… பாசமே இல்லாதவங்க இரண்டு நாள் பாத்துக்கிறதுக்கு, என்னமோ இதுப் பண்ணிக்கிறாங்களே ‘ என்றான் ஜெயராமன்.

அவன் என் தம்பி. ஒரு கம்பெனியில் சீனியர் அக்கெளன்ட்ஸ் ஆபீஸராக வேலை பார்க்கிறான்.

‘நாம எல்லோரும் பாட்டியை இவுங்க கிட்டத்தான் கட்டாயமா விட்டுட்டு கல்யாணத்துக்குப் போகணும் ‘

‘பாட்டியை நினைச்சாத்தான் பாவமா இருக்கு. ‘

‘பாட்டிக்கும் பிள்ளைங்க வீட்டுக்குப் போனாத்தான் இந்த வீட்டு அருமை புரியும் ‘ ஜெயராமன் பேசுவது கடுமையாக இருப்பதுபோல் தோன்றினாலும், அதில் உண்மை இருக்கும். வித்யா பாட்டியின் தேவைகளைப் புரிந்துகொண்டு நன்றாக கவனித்துக்கொண்டாலும், ஏதாவது குறை சொல்லாமல் இருக்க மாட்டாள் பாட்டி. கொஞ்ச மாதங்களாக, உடம்பு முடியாத இந்த சமயத்தில், யாருடனும் எந்த வம்பிற்கும் போவது, கிடையாது பாட்டி.

ஒரு வழியாக எல்லோரும் கல்யாணத்திற்குப் போக தீர்மானம் செய்து கொண்டோம். கல்யாணம் முடிந்த உடனே, பஸ்ஸைப் பிடித்துக்கொண்டு வந்துவிட வேண்டுமென்று ஜெயராமன் நினைத்திருந்தான்.

கல்யாணத்துக்குக் கிளம்புவதற்கு முதல்நாள் வரை பாட்டி எழுந்து போக முடியாமல் இருந்தாள். நினைவு தப்பிப் போயிருந்தது. படுத்துக்கொண்டே இருந்தாள். இடுப்பில் புடவைகூட கட்ட முடியவில்லை. அதனால் பாவாடை மாதிரி புடவையைச் சுற்றிக் கொண்டிருந்தாள், யாராவது பாட்டியைப் பிடித்துக்கொண்டு நிறுத்தினால், பிடித்துக் கொண்டிருப்பவர்களையும் தள்ளிக்கொண்டு விழுந்து விடுவாள். அப்படி தள்ளாமை. முகம் காலெல்லாம் வீங்கி இருந்தன. எதைச் சாப்பிட்டாலும் சாப்பிடமுடியாமல் துப்பி விடுவாள். டாக்டர் சங்கர நாராயணன் கொடுத்த மாத்திரையினால் எந்தவித முன்னேற்றமும் தென்படவில்லை.

இந்தப் பரிதாப நிலையில் இருக்கும் பாட்டியை மாமா வீட்டில் விட்டுவிட்டு கல்யாணத்திற்குப் போவது அவசியமா என்கிற மாதிரி எனக்குத் தோன்றாமலில்லை. மனம் வேறுவிதமாக சமாதானம் செய்து கொண்டது. பாட்டியின் நிலையைப்பற்றி எதுவும் சொல்ல முடியாது. பாட்டிக்கு எது வேண்டுமானாலும் நிகழலாம். இது எல்லாத்துக்கும் முடிவு மரணம்தான். அது நிகழ்வதற்கு முன், பாட்டிக்கு நினைவு தப்பிப் போகலாம். அல்லது யாராவது ஒருவர் பாட்டிக்கு வேண்டியதைச் செய்து கொண்டு இருக்க வேண்டும். அது நிரந்தரமாகிவிட்டால், இருப்பதைவிட போய்ச் சேரலாம் என்று தோன்ற ஆரம்பித்துவிடும்.

கல்யாணத்திற்குக் கிளம்புவதற்கு முதல்நாள் மாலை பாட்டியை மாமா வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டோம். டாக்டர் சங்கரநாராயணனிடம் பெரிய மாமா வீட்டு முகவரியைக் கொடுத்திருந்தோம். போய்ப் பார்க்கச் சொன்னோம். அவரும் போய்ப் பார்ப்பதாகச் சொன்னார். அன்று இரவு என் மனநிலை சரியாக இல்லை. யாரும் சுரத்தாகப் பேசவில்லை. பாட்டியைப்பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் காலையில் தி.நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனியார் பஸ் ஒன்று நிற்க ஏற்பாடு ஆகியிருந்தது. கல்யாணத்திற்கு வேண்டியவைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

குறிப்பிட்ட நேரத்தில் பஸ் தயாரான நிலையில் நின்றிருந்தது. பஸ் முழுவதும் கல்யாணக்களை கட்டியிருந்தது. எங்களைப் பார்த்தவுடன் பெரியப்பா கையைப் பிடித்துக் குலுக்கினார். அப்பா, பாட்டி நிலையைப்பற்றிப் பேச ஆரம்பித்தார்.

‘வயசாச்சு…போக வேண்டியதுதான் ‘ என்றாள் பெரியப்பாவின் நாலாவது பெண் கல்பனா.

‘பிள்ளைகளெல்லாம் அம்மாவைப் பத்திக் கவலைப்படறதில்லை. ‘

‘மாப்பிள்ளையா நீ எத்தனை நாள்டா பாத்துக்க முடியும் ? பேசாம அவங்க பிள்ளைங்க கிட்டே விட்டுடு பாட்டியை ‘ என்றார் பெரியப்பா.

‘அப்படியெல்லாம் விட்டுடுட முடியாது…எங்களுடன் 25 வருஷமா இருக்கா ‘ என்றேன் நான்.

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, பாட்டியின் சுறுசுறுப்பை நினைத்தாலே வியப்பாக இருக்கும். சென்னையில் எந்தக் கோடிக்கும் யார் துணையுமின்றி பஸ் பிடித்துச் சென்றுவிடுவாள். அவளுடைய பால்ய காலத்தில், கிராமத்திலுள்ள வீட்டை விட்டு நகர்ந்ததில்லை.

ஒரு சமயம் பாட்டியின் பெரிய பெண் பரோடாவிலிருந்தாள். பெரிய பெண்ணிற்குப் பாட்டியின் உதவி வேண்டியிருந்தது. அவளிடமிருந்து உதவி கோரி கடிதம் வந்ததிலிருந்து கிளம்ப வேண்டுமென்று உறுதியாக இருந்தாள் பாட்டி. பாட்டியின் சின்னப்பெண்ணான என் அம்மா போக வேண்டாமென்று தடுத்தும், கேட்கவில்லை. பெரிய பெண்ணிற்குக் கடிதமெழுதிவிட்டுக் கிளம்பிவிட்டாள். ஆனால் அங்கு போய் ஒருமாதம் கூட இருக்க முடியவில்லை. திரும்பவும் இங்கு வந்து விட்டாள்.

பாட்டி ஆசாரம் பார்க்க மாட்டாள். அவளால் முடியாது. இதனாலே ஆசாரம் பார்க்கும் பேர்வழிகளுக்கு பாட்டியைக் கண்டால் பிடிக்காது. பாட்டியைப்போல் நடிப்பதற்கு யாராவது பிறந்துதான் வரவேண்டும். ஆசாரம் பார்ப்பவர்கள் யாராவது வீட்டிற்கு வந்துவிட்டால் போதும், பாட்டி அன்று மட்டும் சீக்கிரமாகக் குளித்துவிட்டு, விபூதி பூசி, சாமி படங்களுக்குமுன் நின்று, ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்து விடுவாள். எங்கள் தலைகளைக் கண்டால் ஆசாரம் பார்க்கும் நபர்களின் காதுகளுக்கு விழுகிற மாதிரி ‘மேலப் படாதே ‘ ‘ என்று சத்தம் போடுவாள். வந்தவர்களும் பாட்டியை முழுவதுமாக நம்பமாட்டார்கள். அது மாதிரி சந்தர்ப்பங்களில் பாட்டியின் நடிப்பை நாங்கள் அம்பலப்படுத்தி விடுவோம்.

‘ஆசாரமெல்லாம் பாக்க முடியுமா…. ? இதுகளெல்லாம் புறப்பட்டு வர்ற இடத்திலே ? ‘ என்று போலியாய் புலம்புவாள் அவர்களிடம்.

அம்மா செத்துப் போன பிறகு, மாம்பலத்தில் நாங்கள் பெரிய மாமா இருக்குமிடத்திற்கு அருகில் குடிவந்தோம். அப்படி குடிவந்ததற்குக் காரணம், பெரிய மாமா மூலம் எங்களுக்கு எல்லா உதவிகளும் கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்த்துதான். மாமா வீட்டிற்கும், எங்களுக்கும் அடிக்கடி நடந்து வந்த போக்குவரத்துகள் முதல் சில வருடங்கள் கழித்து படிப்படியாகக் குறைந்துபோய் இன்று முற்றிலும் அஸ்தமனமாகி விட்டது. அப்பா வெளியூருக்கு மாற்றல் ஆகிவிட்டதால், நாங்கள் சென்னையிலே எங்கள் படிப்பைத் தொடர்ந்தோம். பாட்டிதான் எங்களைக் கவனித்துக்கொண்டு வந்தாள். அப்பா மாதத்திற்கு இரண்டு முறை வீட்டிற்கு வருவார். நாங்கள் இருந்த இடம் புறாக் கூண்டு மாதிரி இருக்கும். அப்பாவிற்குக் கிடைத்த ஊதியத்தில், அந்த மாதிரி இடத்தில் தான் குடியிருக்க முடிந்தது.

பெரிய பிரச்சினை என்று எதையும் நாங்கள் எதிரி கொள்ளவில்லை. நடுத்தர வாழ்க்கைச் சூழ்நிலை. அப்பா அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற போது, அவருடைய பி.எஃப், கிராஜ்ஊட்டி பணத்தைக் கொண்டு இப்போது நாங்கள் இருக்கிற இடத்தை வாங்கினோம். எனக்கும் ஒரு வேலை கிடைத்தது. இந்தக் கட்டத்தில் பெரிய மாமாவின் தொடர்பெல்லாம் போய்விட்டது. மதுரையிலிருந்த சின்ன மாமா குடும்பம் சென்னைக்கு வந்த பிறகும், பாட்டி அங்கு போய் இருந்து விடவில்லை. அவள் பிள்ளைகளின் பல பிரச்சினைகளில் தலையிடுவதுமில்லை. எங்களுடனே இருந்து வந்தாள்.

தாத்தாவின் திவசத்தின்போதுமட்டும், பாட்டி பெரிய மாமா வீட்டிற்குப் போவாள். சின்னப் பிள்ளை கூப்பிட்டாலும் போக மாட்டாள். இரண்டு மாமாக்களும் எங்களைப் பார்க்கும்போது பாட்டி எங்கள் குடும்பத்தைப் பற்றியே அதிகமாகப் பேசுவதாகக் குறைபட்டுக் கொள்வார்கள்.

பாபு கல்யாணத்திற்காக, பாட்டியை இரண்டு மூன்று நாட்கள் பெரிய மாமா வீட்டில் கொண்டு போய் விடுகிற தீர்மானத்தை அவர்களால் முழு மனதாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. முடியாது என்று மறுக்கவும் துணியவில்லை. ஆதி காலத்திலிருந்து பெரிய மாமாவிற்கும், சின்ன மாமாவிற்கும் உறவுகள் சரிப்பட்டு வரவில்லை. பெரிய மாமா வீட்டிலாவது பாட்டியைக் கொண்டு போய்விடலாம். சின்னவர் வீட்டில் அதுகூட முடியாது. ஊருக்குக் கிளம்பும்போது, சின்ன மாமாவிடம் பாட்டியைப் பற்றிக் கூறியபோது, ‘நான் பாத்துக்கிறேன். அம்மா எங்க இருக்கணும்னு ஆசைப்படறாளோ அங்கே இருக்கட்டும் ‘ என்றார்.

பஸ் இன்னும் கிளம்பவில்லை. எல்லோரும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்பா ஏதோ ஜோக் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். வித்யா கூட சிரித்தாள்.

‘ஏன் பஸ் இன்னும் கிளம்பலை… ? ‘ என்று பெரியப்பாவைப் பார்த்துக் கேட்டேன்.

‘பாபு பிரண்ட்ஸ் இங்கு வர்றதாகச் சொன்னார்கள் இன்னும் வரலை ‘என்றார் பெரியப்பா.

பாபு சி.ஏ. படித்திருந்தான். ஒரு பெரிய கம்பெனியில் அதிகாரியாக இருந்து வருகிறான். பஸ் முழுவதும் கல்யாணத்திற்கு பெண்வீட்டார் செலவு செய்யும் விபரத்தைப் பற்றியே பேச்சு. பெண் வீட்டார் வசதி படைத்தவர்கள். வைர தோடு, வைர மூக்குத்தியுடன் ஐம்பது பவுன் நகைகளும் மூன்றுகிலோ வெள்ளிப் பாத்திரங்களும் ஏற்கனவே கல்யாண சீராக வைப்பதாக ஒப்புக் கொண்டனர். அதைத் தவிர கையில் பத்தாயிரம் ரூபாய் பணமும், சுவாமிமலையில் கல்யாணமும் நடத்த, போக வர பஸ்ஸ்உம் ஏற்பாடு செய்திருந்தனர். இப்படி ஒரு இடம் கிடைத்தது குறித்து, பெரியப்பா வீட்டிலுள்ள எல்லோருக்கும் தலைகால் புரியாத சந்தோஷம்.

‘சும்மா சொல்லக்கூடாது, சித்தப்பா…பாபுவிற்குக் கிடைச்சது பெரிய இடம்தான், ஊர்ல அவாளுக்கு பல ஏக்கர் நிலம் இருக்கு ‘ என்று கல்பனா ஆரம்பித்தாள்.

‘அந்த மாமி புடவை கட்டிண்டு வர்ற அழகும், உடம்பெல்லாம் நகை போட்டுண்டு வர்ற அழகும், பார்த்தாலே போதும்…அவ்வளவு தேஜஸ்……… முகமெல்லாம் பணக்கார களை சொட்டும் ‘ என்று பெரியம்மாவின் குரலும் கேட்க ஆரம்பித்தது.

உடனே பெரியப்பா, ‘பாபு மாமனார் என்னைப் பார்த்து, ‘என் பெண்ணுக்கு என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். நீங்க ஒண்ணும் என்னைக் கேட்காதீங்க ‘ ன்னு சொல்லிட்டார். அதிலிருந்து நான் மூச்சே விடலை… அவர்தான் எல்லாம் செய்து கொண்டு வருகிறார், ‘என்றார்.

பெரியப்பாவிற்கு நான்கு பெண்கள். பாபுதான் ஒரே பையன். நான்கு பெண்களுக்கும் கல்யாணம் முடித்து அனுப்புவதற்குள் அவர் பட்டபாடு எங்களுக்கெல்லாம் தெரியும். மூன்றாவது பெண் மாலதி கல்யாணத்தின்போது, அவருக்கு ஏகப்பட்ட பிரச்சினை. அவர் கை மீறி பிள்ளை வீட்டார் ஒவ்வொன்றாய் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ‘வேண்டாம் இந்த வரன் ‘ என்று உதறி விடத்தான் நினைத்தார் பெரியப்பா.

அந்தக் கல்யாணம் எப்படியோ நடந்து விட்டது. கல்யாணத்தின்போது பெரிய சண்டை. சம்பந்தி வீட்டார், மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடு செய்திருந்த காரில் பூ அதிகமாக வைக்கவில்லை என்ற காரணத்தை வைத்துக்கொண்டு சண்டையை ஆரம்பித்தார்கள். கல்யாணத்திற்குப் பிறகு மாலதி, பெரியப்பா வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டாள். பெரியப்பா மூன்றாவது மாப்பிள்ளையைத் திட்டாமல் இருக்கமாட்டார். பாபு கல்யாணத்திற்குக்கூட, அவர்கள் இந்த பஸ்ஸில் வராமல், தனியாக சுவாமிமலைக்கு வரப்போகிறார்கள். மாலதி என்று பேச்செடுத்தால் போதும், பெரியம்மா கண் கலங்கிவிடும். மாலதிக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்கிறகுறை வேறு அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கல்யாணம் நடந்து முடிந்து ஐந்தாறு வருடங்கள் ஓடி விட்டன.

‘பத்மா பையன் எத்தனாவது படிக்கிறான் ? ‘

‘ப்ளஸ் டூ படிக்கிறான்….அவனுக்கு இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்கிறதான்னு பாக்கணும். ‘

பெரியப்பாவின் முதல் பெண் பத்மா. வண்டியின் முதல் சீட்டில் தன் குடும்பத்துடன் அமர்ந்திருந்தாள். அவளைப்பற்றி பேச்செடுக்கும்போது எங்களைப் பார்த்துக் கை அசைத்தாள்.

பத்மா கல்யாணம் எங்கள் பூர்வீக கிராமத்தில் நடந்தது. இன்னும் பெரிய பெரியப்பா இந்த மூன்று குடும்பங்களுக்கும் சொந்தமான பரம்பரை நிலத்தைப் பாதுகாத்துக்கொண்டு வருகிறார். எங்கள் குடும்பங்களுக்கு வருஷாவருஷம் அரிசி வந்து விடும். பத்மா கல்யாணம் நடக்கும்போது, நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுவன். கிராமத்திலுள்ள எங்கள் வீட்டிலிருந்து பாதி தெரு முழுவதும் பந்தல் போட்டிருந்தார்கள். அது மாதிரியான வீட்டை பார்க்க முடியாது. வாசலிலிருந்து கொல்லைவரை, ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்குப் போகிற வழி மாதிரி இருந்தது. பெரியப்பாவிற்கு அதிகம் செலவு கொடுக்காத கல்யாணம் அது.

பெரியப்பாவிற்கும் அப்பா மாதிரி சாதாரண அரசாங்க உத்தியோகம். ஆனால் பெரியப்பா மருத்துவத் துறையில் இருந்தார். பல அரசாங்க மருத்துவ மனைகளில், செவிலியர்களின் கண்காணிப்பாளராகப் பணி புரிந்த அனுபவத்தால் அவரே ஒரு குட்டி மருத்துவராகக் காட்சியளிப்பார். வருடத்திற்கு ஒரு முறையாவது அவர் கிராமத்திற்குப் போகாமல் இருக்க மாட்டார். கூடவே அப்பாவும் செல்வார். தாத்தாவிற்கோ பாட்டிக்கோ நடக்கும் திவசம்போதெல்லாம் அவர்கள் இருவரும் ஒரு முறையாவது கிராமத்திற்குப் போக வேண்டிய அவசியம் ஏற்படும். அப்பா, பெரியப்பா, பெரிய பெரியப்பா மூவரும் ஒன்றாகத்தான் திவசம் செய்வார்கள். இவர்கள் இருவரும் ஊருக்கு வரமுடியாத சமயத்தில் பெரிய பெரியப்பா சென்னைக்கு வந்துவிடுவார்.

ஒவ்வொரு முறையும் கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம், பெரியப்பாவைச் சுற்றி கிராமத்திலுள்ளவர்கள் வியாதிகளைச் சுமந்துகொண்டு வந்து விடுவார்கள்.

வண்டி ஒரு வழியாகப் புறப்பட்டது. பாபு நண்பர்களில் ஒருவரைத் தவிர, எல்லோரும் வந்திருந்தார்கள். பாபு என்னைப் பார்த்து கை ஆட்டினான். வித்யாவைப் பார்த்து விசாரித்தான். ஜெயராமன் பக்கத்தில் போய் அமர்ந்தான்.

என் கல்யாணத்தின்போது, பாபு காசியாத்திரைக் குடையைப் பிடித்துக்கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தது இன்னும்கூட ஞாபகத்திற்கு வருகிறது. கல்யாணம் முழுவதும் என்கூடவே இருந்தான். பாட்டியை என் கல்யாணத்தின்போது யாரும் கவனிக்கவில்லை. அவள் ஏதாவது ஒரு மூலையில் ஆசாரம் பார்க்கும் அவளைப் போன்றவர்களுடன் போராடிக் கொண்டிருந்திருப்பாள். பெரிய பெரியப்பாதான் கல்யாணத்தை நடத்தி வைத்தார். பெரிய மாமா குடும்பத்திலிருந்து எல்லோரும் ஒவ்வொரு முறை வந்து விட்டுப் போனார்கள்.

உறவு முறைகளில் எனக்கு எல்லாச் சந்தேகங்களும் எப்போதும் ஏற்படாமலிருப்பதில்லை. ஒரே வயிற்றில் பிறந்தவர்கள், குழந்தைகளாக இருக்கும் வரை எந்தவிதப் பிரிவினையும் இல்லாமல் வளர்க்கப்படுகிறார்கள். வளர வளர பக்குவம் ஏற்படுவதற்குப்பதில், பல மாற்றங்களுக்கு உள்ளாகி விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படையான காரணம் என்னவாக இருக்க முடியும் ?

பஸ்ஸில் இருந்த கலகலப்பில் பாட்டியை மறந்திருந்தோம்.

‘பணம்…பணம்னு ஒங்க மனுஷா இப்படி அலையறாளே ? ‘ என்று முணுமுணுத்தாள் வித்யா.

‘அப்படிச் சொல்லாதே. பெரியப்பா நாலு பெண்களுக்குக் கல்யாணம் பண்ணியிருக்கார். எப்படிக் கஷ்டப்பட்டிருப்பார்னு கொஞ்சம் யோசித்துப் பாரு ? பிள்ளை மூலம் ஓரளவு சரிசெய்யப் பாக்கிறார். இதில் என்ன தப்பு இருக்கு ? ‘

‘பெண்களுக்கு இப்படிக் கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக் கொடுத்தவங்கதான் பிள்ளை கல்யாணத்தின்போது, எதையும் எதிர்பார்க்காம இருக்க வேண்டும். ‘

‘இரைஞ்சு பேசாதே ‘….எல்லார் காதிலும் விழப்போறது. ‘

‘இப்படிப்பட்ட பணக்கார மனுஷாளுக்கு ஒரு பையன் கிடைக்காமப் போயிடமாட்டான். ஆனா நம்ம மாதிரி நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணுக்குத் தான் பாபு மாதிரி படித்தப் பையன் கிடைக்காமப் போயிடுவான். ‘

‘அதைப்பத்தி நானும், நீயும் பேசி என்ன பிரயோசனம் ? ‘

‘அது சரி ‘

‘வித்யா தேறாமல் அப்படியே இருக்காளே ? ‘ என்று பெரியம்மா அப்பாவிடம் விசாரித்துக்கொண்டிருந்தாள்.

‘கல்யாணத்திலிருந்து அப்படியே தான் இருக்கா. கொஞ்சங்கூட மாறலை. ‘

பெரியம்மா எதைச் சொன்னாலும் அதில் உறுதியாக இருப்பாள். பிள்ளைக்கு நல்ல வரன் கிடைத்த சந்தோஷம், பிள்ளை எல்லோரையும் விட நன்றாகப் படித்திருக்கிறான் என்கிற பெருமை, இதெல்லாம் தாங்க முடியாத பெரியம்மா, அடிக்கடி என்னைப் பார்த்துக் கேட்கிற கேள்வி, ‘உன் சம்பளம் எவ்வளவுடா ? ‘ என்பது. பெரிய படிப்பு படித்திருக்கும், அவள் பிள்ளையைவிட, நான் அதிகமாக சம்பளம் வாங்கிவிடக்கூடாது என்கிற கவலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் பெரியம்மாவிற்கு.

பஸ் சுவாமிமலையில் உள்ள அந்தச் சத்திரத்தை மாலை 3 மணிக்கு அடைந்தது. எல்லோருக்கும் சாப்பாடு தயாராக இருந்தது. பாபுவின் மாமனார் சாம்பசிவம் எல்லோரையும் உபசரித்தார். பெரிய வாழை இலையில் எல்லோருக்கும் சாப்பாடு. சாப்பிடும் இடத்திற்கு வந்து, ‘நிதானமாகச் சாப்பிடுங்கள். அவசரப் படாதீர்கள், ‘ என்று எல்லோரையும் விசாரித்தார்.

‘சாப்பாடு பிரமாதம். ‘ என்றார் அப்பா சாம்பசிவத்தைப் பார்த்து.

‘எல்லாம் என் கையில் இல்லை ‘ என்றார் சாம்பசிவம். அவர் நெற்றியில் விபூதி பட்டையாக இருந்தது. தூய்மையான சட்டை அணிந்திருந்தார். கையில் மோதிரங்கள். புது பட்டு வேஷ்டி கட்டியிருந்தார்.

ஒரு வழியாக சாப்பிட்டுவிட்டு, கல்யாண மண்டப கூடத்திற்கு வந்தோம். பெரிய சத்திரம். கூட்டம் அவ்வளவாய் இல்லை. நாங்கள் வந்த கூட்டத்தை விட, பாபு மாமனார் வீட்டு மனிதர்கள் குறைவாகவே தென்பட்டார்கள்.

சாம்பசிவம் பெரியப்பாவைப் பார்க்க வந்தார்.

‘சார், ஒரு விஷயம் ? ‘

‘என்ன ? ‘ என்று கேட்டபடியே அடக்கமாக அவர்முன் போய் நின்றார் பெரியப்பா.

‘ஒங்களுக்கு ரொம்பவும் நெருக்கமா இருக்கிறவா, அதாவது பையனோட அக்கா, அக்கா குடும்பம், ஒங்க குடும்பம் எல்லாம் இங்கயே தங்கலாம். மத்தவாளுக்கு நான் வேற இடத்திலே தங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்… அவாளை வரச் சொன்னீங்கன்னா, நான் இடத்தைக் காட்டுவேன். ‘

பெரியப்பா எல்லோரிடமும் இதைக் கூறினார். கல்பனா அப்பாவைப் பார்த்து, ‘சித்தப்பா, அவர் இடத்தைக் காட்டுவார். நீங்கள் போங்கள் ‘ என்றாள்.

இதுவரை பஸ்ஸில் ஒன்றாக வந்த உறவினர் கூட்டம், இப்போது நெருங்கிய உறவினர், நெருங்காத உறவினர் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. பாபு, பெரியப்பா, பெரியம்மா, பாப் அக்காள்கள், அக்காள்களின் கணவர்கள், அவர்கள் குழந்தைகள், கல்யாணம் பண்ணிவைக்கப் போகிற பெரிய பெரியப்பா, பெரிய பெரியம்மா இவர்களெல்லாம் நெருங்கிய உறவினர்கள். கல்யாண மண்டபத்திலேயே அவர்களுக்கென்று நவீன வசதிகள் கொண்ட அறைகள்.

எங்களுக்கெல்லாம் தனி வீடு ஏற்பாடு செய்திருந்தார் சாம்பசிவம். கல்யாண மண்டபத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அந்த இடம். சித்தப்பா பையனாகிய நான், என் மனைவி, என் தம்பி, பாபுவின் நண்பர்கள், பாபுவின் மாமாக்களின் குடும்பங்கள் என்று நாங்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டோம்.

அன்று மாலை ஜானவாசம் எல்லாம் அமர்களமாய் ஏற்பாடு ஆகி இருந்தது. மாப்பிள்ளை காரே தோரணையாக இருந்தது. வீடியோவில் எல்லாவற்றையும் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் பிரபலமாயிருக்கும் நாதஸ்வர வித்வான்களின் கச்சேரி. தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்திருந்த சமையல்காரர்கள் விதம் விதமாய் வேளாவேளைக்குச் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். அப்பா சமையல் கூடத்திலிருந்து வெளியே வரவில்லை. வித்யாவும் மலைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சாம்பசிவத்திற்கு மூன்று பெண்கள். ஒரு பையன். பாபு கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண், மூன்றாவது பெண். முதல் இரண்டு பெண்களுக்கும் இதே மாதிரியான ஆடம்பரமான கல்யாணம்தான். கல்யாணத்தில் எந்தவிதக் குறையுமில்லை. ஆனால் மூன்றாவது மாப்பிள்ளை ‘சி ஏ ‘ படித்திருப்பதால், சீர்வரிசை கொஞ்சம் அதிகமாகவே செலவழித்தார். முதல் பெண்ணிற்கு மாத்திரம் ஒரு பெண் குழந்தை. இரண்டாவது பெண்ணின் கணவர் ஒரு வங்கியில் குமாஸ்தா. முதல் மாப்பிள்ளை ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு இடத்தில் வேளையில் இருப்பான். அவன் வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு, சீட்டாடும் கூட்டத்துடன் சேர்ந்து இருந்தான். அவன் இந்தக் கல்யாணத்தைப்பற்றி கவலைப்படவில்லை. சாம்பசிவத்தை மதிக்கவுமில்லை. அவன் வீட்டிலிருந்து அவனுடைய உறவினர்ளென்று யாரும் வரவில்லை. இரண்டாவது மாப்பிள்ளையோ சாம்பசிவத்தையே சுற்றிக்கொண்டிருந்தான். எப்பவாவது தோன்றும்போது, சாம்பசிவம் இரண்டாவது மாப்பிள்ளையுடன் பேசிக்கொண்டிருப்பார்.

சாம்பசிவம் எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தார். துரிதமாக எல்லாக் காரியங்களும் நடந்து கொண்டிருந்தன. கோவிலில் கல்யாணம் முடிந்த அன்று தங்க ரதம் இழுக்க ஏற்பாடு செய்திருந்தார்.

‘அவருக்குக் கோபம் அடிக்கடி வரும். ‘ என்று சம்பந்தி அம்மாள் பெரியம்மாவிடம் அளந்து கொண்டிருந்தாள்.

பெண்கள் எல்லோரும் பட்டுப்புடவைகளில் தங்களை நுழைத்துக் கொண்டிருந்தனர். வீடியோவில் படம் பிடிக்கப்போவதால், எல்லோரும் தனிப்பட்ட முறையில் அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

பெரியம்மா பெண்களுடன் வித்யா அவ்வளவாய் நெருங்கிப் பழக முடியவில்லை. இந்தக் கல்யாணத்தைப் பற்றி அவர்களுக்குள் ஏகப்பட்ட பெருமை. வித்யாவுடன் பேசுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை. வித்யாவிற்கும் ஆள் கிடைக்காமலில்லை. எப்போதும், எந்தக் கல்யாணத்திலும் ஒதுக்கப்பட்ட சில பேர்கள் கிடைப்பார்கள். அதே மாதிரி, இந்தக் கல்யாணத்திலும் ஒதுக்கப்பட்ட பாபுவின் மாமாபெண்கள் வித்யாவுடன் நன்றாகப் பழகிக் கொண்டு வந்தார்கள்.

ஒரு வழியாக மாப்பிள்ளை அழைப்பு முடிந்தது. நாதஸ்வர கச்சேரி இசைத்துக் கொண்டிருக்க இரவு சாப்பாடும் முடிந்தது. அப்பா ஜெயராமனைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார் சாம்பசிவத்திடம்.

‘சார், அவனும் காஸ்டிங் முடிச்சிருக்கான். ‘

‘அப்படியா ‘ என்று விசாரித்தபடியே ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தார் சாம்பசிவம். எங்கோ போய்க் கொண்டிருந்த ஜெயராமனைக் கூப்பிட்டு சாம்பசிவத்திடம் அறிமுகப்படுத்தினார். பொதுவாக அவன் யாரிடமும் அதிகமாகப் பழக மாட்டான். கல்யாணத்திற்கு அவன் வந்த சுவடுகூடத் தெரியாமல் எங்காவது இருப்பான், வெறுமனே சாம்பசிவத்தைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, அந்த இடத்திலிருந்து நகர்ந்தான்.

கொஞ்ச நேரம் கழித்து, அவன் என்னைப் பார்க்கும்போது, அப்பாவிற்கு என்ன ஆச்சு… ? ஏன் இப்படி உளறிண்டிருக்கார் ‘ என்று கேட்டான்.

‘இது மாதிரி தனக்கும் சம்பந்தி கிடைக்கவேண்டுமென்று நினைச்சுண்டிருக்காரோ என்னமோ ? ‘ என்றேன் சிரித்துக்கொண்டு.

‘கல்யாணம் முடிஞ்ச உடனே, ஊருக்குக் கிளம்பணும். பாட்டி எப்படி இருக்காளோ ? ‘

பாட்டியைப்பற்றி பேச்செடுத்ததும், எனக்கு இந்தக் கல்யாணத்தைப் பற்றிய நினைப்பு மறந்து விட்டது. உடனே ஊருக்குப் போக வேண்டும்போல் தோன்றியது.

சாம்பசிவத்துடன் பேசிக்கொண்டிருந்த அப்பா, அலுத்துப்போய் சீட்டாடும் இடத்திற்குப் போய் அமர்ந்தார். சாம்பசிவத்தின் மூத்த மாப்பிள்ளையுடன், பெரியப்பாவின் மூன்றாவது மாப்பிள்ளையும் சேர்ந்து பெரிய கூட்டத்தையே உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்.

‘ராத்திரிக்கு வீடியோவில் சினிமாப் படங்களைக் காட்டப் போகிறார்களாம் ‘ என்றபடி வித்யா ஒரு செய்தியைச் சுமந்து கொண்டு வந்தாள்.

‘ராத்திரியெல்லாம் முழிச்சிருந்து பாத்தா, நாளைக்குக் கல்யாணத்தைக் கோட்டை விடுவோம். ‘

‘சும்மா கொஞ்ச நேரம்தானே ‘ ‘

‘எல்லார்கிட்டேயும் போய் வம்பளத்தாச்சா ? ‘

‘எனக்கு வம்பளக்கிற புத்தியே கிடையாது. ஒங்க பெரியப்பா பெண்கள் முன் போய் நின்னாக் கூடப் பேசமாட்டேங்கறாங்க…என்னத்தை வம்பளக்கிறது ? ‘

வித்யா இதைச் சொல்லும்போது வருத்தப்படுவதுபோல் தோன்றியது.

‘ஏன் இந்தக் கல்யாணத்துக்கு வந்தேன்னு தோணுது… ?பாட்டியை நான் பாத்துண்டிருந்திருப்பேன்… ‘

‘நீ அவர்கள் பேசணும்னு எதிர் பார்க்கிரே…நீயே அவங்களோட பேச ஆரம்பிச்சா, எல்லாம் சரியாய்ப் போயிடும்… ‘

‘நீங்க வேற. அவுங்ககிட்டே போய் பல்லைக் காட்டிண்டுருக்க முடியாது. இந்த வீடியோ காமிரா முன்னாலகூட அவுங்களே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வருகிறமாதிரி நின்னாங்களே தவிர. வேறயாரையும் விடலை. பாபுவின் மாமாப் பொண்ணுங்க ரொம்பக் குறைப்பட்டாங்க… ‘

‘நாமெல்லாம் வீடியோவில விழாம இருந்தா நல்லாத்தானே இருக்கும் ‘

‘எனக்கு ஒண்ணும் அதெல்லாம் ஆசை கிடையாது ‘

வித்யா போய் விட்டாள். அன்று இரவு எல்லோரும் வீடியோவில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். பாபு மாப்பிள்ளை கோலத்தில் லட்சணமாய் இருந்தான்.

காலையில் எல்லாம் துரிகதியில் நடக்க ஆரம்பித்தது. பாபு கல்யாணம் முழுவதும் வீடியோவில் பதிவாகியது. ஜெயராமன் கல்யாணம் முடிந்த உடனே, கிளம்பிவிட்டான். அவன் அலுவலகத்தில் வேலை பளு அதிகமாக இருந்ததால், அவனுக்குப் போக வேண்டிய நிர்பந்தம். பெரிய பெரியப்பா கல்யாணம் முடிந்த அசதியில் இருந்தார். அவர் மாயூரத்திலிருந்து கல்யாணத்திற்காக எங்கள் பஸ் வருவதற்குமுன் வந்து விட்டார். பொதுவாக அவர் யாரிடமும் பேசமாட்டார். எண்பது வயதிலும் ஆரோக்கியமாகத் தென்பட்டார். சாப்பாடு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பார். அப்பா நேர் எதிர். கல்யாணம் என்றாலே சாப்பாடுதான் அவருக்கு ஞாபகத்திற்கு வரும். பெரிய பெரியப்பாவிற்கு ஒரே பையன். அறுவடை நேரத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கல்யாணத்திற்கு அவனால் வரமுடியவில்லை, கிராமத்திலேயே அவர்கள் வளர்ந்து விட்டார்கள். அவனுக்குக் கல்யாணம் பண்ண வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாள் பெரிய பெரியம்மா. பெரிய பெரியம்மாவிற்கு தன் பிள்ளை சரியாகப் படிக்கவில்லை என்கிற குறை உண்டு. எங்களையெல்லாம் பார்க்கும்போது, அந்தக் குறைபெரிதாகத் தெரியும்.

‘அவன் கெட்டிக்காரத்தனத்திற்கு எங்கள் படிப்பெல்லாம் ஒன்றும் கிடையாது ‘ என்று சமாதானம் பண்ணுவேன் நான்.

அத்தை, கல்யாணத்தன்று காலையில் வந்தாள். யாரும் அவள் இருப்பதைப்பற்றி கவலைப்படவில்லை. கல்யாணத்திற்கு அத்தைப் பையன்கள் யாரும் வரவில்லை. நன்றாக வாழ்ந்து, நொடிந்த குடும்பம். எப்போது பார்த்தாலும் பெரிய துக்கத்திலிருப்பது போலிருப்பாள் அத்தை.

அன்று மாலை கோயிலில் தங்க ரதம் இழுக்க ஏற்பாடாகி இருந்தது. கோயிலில் கல்யாண கூட்டம் அலை மோதியது. அப்பாவிற்கு தாங்க முடியாத சந்தோஷம். அவரும் தங்க ரதத்தை இழுத்தார்.

ஒருவழியாக கோயில் விழா முடிந்து, எல்லோரும் சத்திரத்திற்குத் திரும்பும்போது, இரவு எட்டாகியிருந்தது. அப்பா சாம்பசிவத்தின் கையைப் பிடித்து கொண்டாட ஆரம்பித்தார்.

‘ஒங்கப் புண்ணியத்திலே எங்களுக்கெல்லாம் இந்தச் சந்தர்ப்பம் கெடைச்சது… முருகன் கோயில்ல இதுமாதிரியான சந்தர்ப்பம் கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்…. ‘

‘எல்லாம் என்னுடைய புண்ணியமில்லை வோய்… அவன் அனுக்கிரகத்தினால்தான் நடக்குது. ‘

‘அதுவும் ஒங்க வழியாத்தான் எங்களுக்குக் கிடைச்சிருக்கு ‘

‘திரும்பத்திரும்ப அதையே சொல்லீண்டுருக்கீரே ‘… எல்லாம் அவன் கருணைதான்… என்னால ஆகறதில்லை ‘ அவர் குரல் சப்தமாக ஒலித்தது.

அவர் குரலின் கடுமையை உணர்ந்து, எல்லோரும் வினோதமாய் பார்த்தோம். அப்பாவிற்கு திகைப்பாக இருந்தது. வேறு எதுவும் பேசமுடியாமல் அமர்ந்திருந்தார். சாம்பசிவம் ஏதோ காரியமாக எழுந்து போய்விட்டார்.

நான் அப்பாவைத் தனியாகக் கூப்பிட்டு, அவரிடம் அதிகமாகப் பேசாதே என்று எச்சரித்தேன்.

அப்பா இதையெல்லாம் புரிந்துகொண்ட மாதிரி தெரியவில்லை. இரவு ஒன்பது மணி சுமாருக்கு நடந்த சம்பவம் இதைவிட மோசமாக இருந்தது.

‘நாளைக்குக் கட்டுச் சாதம் வெச்சு அனுப்பறதுக்கு முன்னாடி, டிபனுக்குப் பதிலா எல்லோருக்கும் சாப்பாடு போட்டா நல்லாயிருக்கும் ‘ என்று சாம்பசிவத்திற்கு ஐடியா கொடுத்தார் அப்பா.

உடனே சாம்பசிவம், ‘நீ யார்யா அதுமாதிரி சொல்ல, நான் டிபன்தான் போடுவேன்…இல்லாட்டி சாப்பிடாமப் போயேன்… ஏதோ சம்பந்தி தம்பின்னு பாக்கறேன்.. அளவுக்கு மீறிப் போயிண்டுருக்கே.. ‘ என்று சத்தம் போட்டார். அவர் குரலில் மரியாதை குறைந்து ஆணவம் மிகுந்திருந்தது.

அப்பா அதிர்ச்சி அடைந்து விட்டார். எல்லார் முன்னாலும் அவமானம் அடைந்துவிட்டோமென்று கூனி குறுகிப் போய்விட்டார். எனக்கு அப்பாவை அழைத்துக்கொண்டு ஊருக்குப் போக வேண்டும்போல் தோன்றியது. அப்பா செய்வதறியாமல் பெரியப்பாமு போய் நின்றார்.

‘ஒனக்கு வாயைப் பொத்திண்டு சும்மா இருக்கத் தெரியாது…ஏதோ போடறான்…ஏன் இது மாதிரி விஷயத்துக்கெல்லாம் தலை இடறே ‘ என்று சேர்ந்து சத்தம் போட்டார்.

‘சித்தப்பா மேல என்ன தப்பு இருக்கு…அந்த ஆளுக்கு ஏன் மூக்குமேல கோபம் வருது ‘ என்று பரிந்துகொண்டு வந்தாள் கல்பனா, அப்பாவிற்காக.

‘நம்ம சித்தப்பா சும்மா இருக்கணும். நாம நினைச்சுண்டு வந்ததற்குமேல அவர் இந்தக் கல்யாணத்தில ஒரு குறையும் வெக்காம செஞ்சுண்டு வந்திருக்கிறார் ‘ என்றாள் மாலதி.

‘இருக்கட்டுமே…சித்தப்பா என்ன பெரிசா கேட்டுட்டா… ? இத சீரியஸ்ஸா எடுத்துண்டு அந்த ஆள் சண்டைக்கு வரணுமா… ? ‘

பெரியப்பா மேல்தான் எனக்கு இப்போது கோபம் ஏற்பட்டது. இவ்வளவு பேர் முன்னால், இவர் தம்பியை இப்படி அவமானப்படுத்தி இருக்கார், அதைக் கேட்டுட்டு சும்மா இருக்காரே, என்று. இவர் தன் பிள்ளையை பணத்துக்கு விற்று விட்டார். இனிமேல் இவரால் எதுவும் பேசமுடியாது. தம்பிக்கு இவர் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்….. ?

அப்பா அந்த இடத்தை விட்டு நகர்ந்து எங்கோ சென்று விட்டார். எனக்கு இந்தக் கல்யாணம் கசப்பான அனுபவமாகப் பட்டது. இனிமேல் இங்கே இருக்க வேண்டாமென்று தோன்றியது.

அப்பாவைத் தனியாகச் சந்தித்து, ‘நாம ஊருக்குப் போகலாம்… இனிமேல் இங்கே இருக்க வேண்டாம் ‘ என்றேன். அப்பா அதற்குப் பதில்பேசவில்லை. சென்னை போவதற்கும் அங்கிருந்து பஸ் ஏற்பாடு செய்திருந்ததால், அப்பா அதைப்பற்றி யோசனை செய்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது.

அப்பாவைவிட நான் அவமானப்பட்டு நிற்பது போல் தோன்றியது. கூடவே, வித்யாவும் சேர்ந்து வருத்தப்பட்டாள். இந்தக் கல்யாணத்திற்கு எல்லோரும் இப்படிக் கிளம்பி இருக்கக் கூடாதென்றும் தோன்றியது. ஜெயராமன் இருந்திருந்தால், இந்த சமயத்தில் பெரிய கலாட்டா செய்திருப்பான்.

நான் உடனே ஊருக்குப் போக வேண்டுமென்று சொன்னது, பெரியப்பா குடும்பத்திற்குத் தெரிந்தாலும், அதைப் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. அப்பாவை விட்டுவிட்டு நானும், வித்யாவும் போவது அவ்வளவு உசிதமாகத் தோன்றவில்லை. அவளும் இதை ஒப்புக் கொள்ளவில்லை.

அன்று இரவு நான் சரியாக தூங்கவில்லை. காலையில் எழுந்தவுடன், ஊருக்குப்போக வேண்டுமென்கிற நினைப்பே எனக்கு இருந்தது. அப்பா கண்ணில் படவில்லை.

இதைப் பற்றியெல்லாம் பெரிதுபடுத்தாமல், காலையில் அவர்களுடனே கிளம்பி விடுவதாகத் தீர்மானித்தோம். டிபன் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் கிளம்பத் தயாராய் இருந்தோம். ஆனால் நாங்கள் புறப்பட வேண்டிய பஸ் வரவில்லை. சாம்பசிவம் பொறுமை இழந்து தவித்துக் கொண்டிருந்தார். இந்த முறை கல்பனாவின் கணவர் ஸ்ரீனிவாசன் சாம்பசிவத்திடம் மாட்டிக் கொண்டார். ஸ்ரீனிவாசன் செய்த ஒரே தவறு போக வர சென்னையிலிருந்து சுவாமிமலைக்கு நாங்கள் வந்த தனியார் பஸ்ஸை ஏற்பாடு செய்ததுதான். காலையில் குறிப்பிட்டபடி 8 மணிக்கு வரவேண்டிய பஸ் இன்னும் வரவில்லை. ஸ்ரீனிவாசன் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.

சாம்பசிவம் அவரைப் பார்த்து, ‘என்ன சார் ‘ இந்தக் கல்யாணத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் எப்படிச் செய்திருக்கேன் தெரியுமா… ? ஏதாவது குறை வெச்சிருக்கேன்னா… ? வண்டியை ஏற்பாடு செய்றேன்னு நீங்கதானே சொன்னீங்க…. வண்டி இன்னும் வரலை ‘ ‘… என்று ஆரம்பித்தார்.

‘எனக்கும் அதான் புரியலை வண்டி வந்துடும் ‘

‘ஒரு காரியத்துல ஈடுபடணும்னா எப்படியெல்லாம் திட்டம் போட வேண்டியிருக்கு. ஒரு மாசத்துக்கு முன்னாலிருந்து நான் ரயில்வே அட்டவணையை வாங்கி வெச்சிருக்கேன். அப்படித்தான் இருக்கணும். இன்னிக்கு சத்திரத்தைக் காலி பண்ணிக் கொடுத்துடணும். ராத்திரி கல்யாணம் நடந்த இடத்தில் தங்கக் கூடாதுன்னு ஐதிகம். ஒரு சுபகாரியம் இப்படித் தடங்கல் ஆவது என் மனசுக்குச் சரியாப் படலை… ‘

‘நீங்க பதட்டப்படாதீங்க சார். வண்டி வந்துடும். ‘

அன்று வண்டி பகல் 2 மணிவரை வரவில்லை. சாம்பசிவம் பெரிதாகச் சத்தம் போட ஆரம்பித்தார். ஸ்ரீனிவாசனுக்கு அவமானமாய் போய் விட்டது. அவர் உடனே ஏற்பாடு செய்திருந்த பஸ் கம்பெனிக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு பஸ் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க பத்மாவின் கணவர் ரகுவுடன் சென்று விட்டார்.

சாம்பசிவம் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். கல்யாணத்திற்கு வந்திருந்த ஸ்ரீனிவாசனின் அப்பா அழ ஆரம்பித்து விட்டார். ஸ்ரீனிவாசனை சாம்பசிவம் திட்டுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாமனார் அழுவதை கல்பனாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

‘இவர் பணத் திமிரெல்லாம் இவரோடு இருக்கட்டும். இந்த அப்பா ஏன் இதெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கணும்… நேத்திக்கு சித்தப்பா. இன்னிக்கு இவர். நாம பிள்ளை வீட்டுக் கல்யாணத்திற்கு வந்திருக்கோமா பெண் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருக்கோமா பயப்படறதுக்கு ‘ என்று அவளும் சத்தம் போட்டபடி அழ ஆரம்பித்தாள்.

இவ்வளவும் நடந்தபிறகுதான் பெரியப்பாவிற்கு சாம்பசிவம்மேல் கோபம் வந்தது. சாம்பசிவத்தைப் பார்த்து பெரிதாகச் சத்தம் போட ஆரம்பித்தார். சாம்பசிவம் ஏதோ சொல்ல, பெரியப்பா ஏதோ சொல்ல, பெரிய சண்டை உருவாயிற்று.

சாம்பசிவம் மனைவி ஓடிவந்து பெரியப்பாவை சமாதானம் பண்ண வந்தாள்.

‘அவர் முன்கோபக்காரர். இதைப் பெரிசா எடுத்துக்காதீங்க… ‘

‘அவர் கோபம் அவர்கிட்டே இருக்கட்டும்… மத்தவங்ககிட்டே எதுக்குக் காட்டணும் ‘ என்று பதிலுக்கு இரைந்து கத்தினாள் கல்பனா.

‘சாம்பசிவம் மனைவி மெதுவாக அவரை அந்த இடத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் விட்டாள்.

மாலை ஆறு மணிக்குமேல் சத்திரத்தில் வேறு ஒரு சுபகாரியம் ஏற்பாடு ஆகியிருந்ததால் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. எல்லோரும் பஸ்ஸிற்காக வாசலில் காத்துக் கொண்டிருந்தோம்.

ஸ்ரீனிவாசனும் ரகுவும் திரும்பி வந்தார்கள். வண்டி தஞ்சாவூரில் ஒரு விபத்தில் சிக்கி விட்டது. வராது என்று தீர்மானம் ஆகிவிட்டது.

சாம்பசிவம் இந்தச் செய்தியைக்கேட்டு, ‘ருத்ர தாண்டவம் ‘ ஆட ஆரம்பித்தார். ஸ்ரீனிவாசனும் ரகுவும் விட்டு வைக்கவில்லை. அவர்களும் சாம்பசிவத்தைப் பார்த்து சத்தம்போட ஆரம்பித்தார்கள். இந்த அமளியில் பெரியப்பாவும் சேர்ந்து ஏச ஆரம்பித்தார். தம்பியைவிட மாப்பிள்ளைகளுடன் சாம்பசிவம் சண்டை போடுவதை பெரியப்பாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அப்பாவைத் திட்டும்போது சாம்பசிவத்தைக் கண்டிக்காத பெரியப்பாவின் குடும்பம், இப்போது சாம்பசிவத்துடன் ஏகப்பட்ட குழப்பத்துடன் மோதிக் கொண்டிருந்தது.

நேற்று இரவு நடந்த சம்பவத்திற்குப் பிறகு அப்பா யாருடனும் அதிகமாகப் பேசவில்லை. பகல் முழுவதும் அவர் எந்த விஷயத்திலும் தலை இடாமல், ஒதுங்கியே இருந்தார். அப்பாவைப் பார்க்கும்பொழுது, எனக்கு சங்கடமாகவும், மற்ற உறவினர்களைப் பார்க்க அருவருப்பாகவும் இருந்தது.

இந்தக் கலவரங்களில் சம்பந்தப்படாமலிருந்த ஒரு நபர் பாபுதான். மாமனாரை எதிர்த்துப் பேச வேண்டியவன் பேசாமலிருந்தான்.

சித்தப்பாவிற்காக அவன் சாம்பசிவத்துடன் சண்டைக்குப் போவான் என்பதை நான் நம்பத் தயாராகயில்லை. ஆனால் அக்காள்களின் கணவர்களுக்காவது அவன் அவருடன் சண்டைக்குப் போயிருக்க வேண்டும். அவனோ அவரைப் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை. அவர் கூப்பிட்ட இடமெல்லாம் போய் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தான். மணப்பெண்ணிற்கோ தாங்க முடியாத மனவருத்தம். எல்லாவற்றையும் வெளிப்படுத்திக் கொள்ளாதிருந்தாள்.

சண்டை முற்றிய நிலையில் அப்பா பெரியப்பாவைப் பார்த்து, ‘எனக்குத்தான் புத்தி மழுங்கிப் போயிடுத்து. நீ சொன்னதுகூடச் சரிதான். நான் எதுக்கு தலை இடணும். நான் நல்ல எண்ணத்திலதான் சொன்னேன். ‘ என்றார்.

‘எப்போதுமே பட்டும்படாமலும் இருக்கணும்… ஏதோ போறான்னு விட்டுடணும்… எந்தச் சாப்பாடு போட்டால் என்ன… ? கல்யாணத்தை நல்லா செஞ்சு முடிச்சான், ஒரு குறையுமில்லை… ‘

‘உனக்குக் கோபம் வருமே ? நீ இப்படிப் பேசறது ஆச்சரியமாய் இருக்கு. ‘

‘ஏதோ கல்யாணம் நல்லப்படியா நடந்துடுத்து. இனிமே அவன் யார்… ? அந்தப் பொண்ணும் நல்ல மாதிரி. அப்பா சண்டை போடறதைப் பாத்து அழறது…நமக்கு இது மாதிரி…அசிங்கமா சண்டை போடறது பிடிக்கலை… ஒரு சுபகாரியம் நடக்கிற இடத்தில, பிரச்சனையை வளர்த்தாமப் போயிடணும்னு பொறுமையாய் இருந்தேன். ஆனா எல்லாம் மீறிப் போயிடுத்து ‘ ‘

‘வாஸ்தவம்தான் ‘

அப்பாவும், பெரியப்பாவும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க ஆத்திரமாக இருந்தது. அப்பாவுடைய இயலாமையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது. அப்பாமேல் எந்தவிதத் தவறுமில்லை. அவரை அவமானப்படுத்துகிற மாதிரி சாம்பசிவம் பேசியது சரியில்லை. தம்பிமேல் தவறு இல்லை என்று தெரிந்தும் சாம்பசிவத்தின்மீது கோபத்தைக் காட்டமுடியாத பெரியப்பாவின் இயலாமை. வேறு வழியில்லாமல் மாப்பிள்ளைக்காக தன்னை மாற்றிக் கொண்டது. எல்லாம் பணம். ஐம்பதுபவுன் தங்க நகைகள், மூணு கிலோ வெள்ளிப் பாத்திரங்கள், பத்தாயிர ரூபாய். சி.ஏ. படித்த தன் பையனுக்கு நினைத்துப் பார்க்க முடியாத பெரிய இடத்துச் சம்பந்தம்.

சாம்பசிவத்தின்மீது அப்பாவிற்கு ஏன் முதலில் ஈடுபாடு ஏற்பட்டது ? அவருடைய செல்வ செழிப்பா ? வாழ்க்கைத் தரத்தில் அவர் எல்லாவற்றிலும் மிஞ்சி இருக்கிற காரணமா ? தன் பையனுக்கு இது மாதிரி ஒரு வரன் கிடைக்கவில்லை என்றுகூட தோன்றி இருக்கும்.

பாபு கல்யாணம் நிச்சயமான தேதியிலிருந்து, அப்பா சாம்பசிவத்தைப்பற்றி ஏதாவது சொல்லாமலிருப்பதில்லை. இந்தக் கல்யாணம் நடப்பதற்குமுன் ஒரு முறை சாம்பசிவத்தை அவர் வீட்டில் போய்ப் பார்த்து விட்டு வந்தார். அவர் பார்த்துவிட்டு வந்த மறுவினாடியிலிருந்து சாம்பசிவத்தின் வீட்டைப் பற்றி ஒரே அளப்பு.

‘ஊர்ல கூட அவருக்கு ரெண்டு மூணு வீடு இருக்காம். ‘

‘எதுக்கு நீ அவர் வீட்டுக்கெல்லாம் போறே ? ‘ என்று நாங்கள் அப்பாவுடன் சண்டைக்குப் போனோம்.

சாம்பசிவத்திற்கு அப்பாவின் அந்தத் தலையீடு எரிச்சலைத் தந்திருக்கும்.

சாம்பசிவம் ஒரு காரை எடுத்துக்கொண்டு வந்தார். மாப்பிள்ளையையும், பெண்ணையும் அதில் ஏற்றிக் கொண்டு செல்ல ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். பெரியப்பா வீட்டிலுள்ளவர்கள் அதில் அவர்களை அனுப்பத் தயாராய் இல்லை.

‘பெண்ணையும் பிள்ளையையும் எங்களுக்கு எப்படி அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்று தெரியும். நீங்கள் கவலைப்பட வேண்டாம் ‘ என்று சத்தம் போட்டார்கள்.

‘மாப்பிள்ளையை நான் அழைச்சிட்டுப் போவேன்… நீங்க தடுக்காதீங்க. முதல்ல இந்த இடத்தை விட்டுக் கிளம்பணும். இல்லாட்டிப் பெரிய சகுனத் தடையாப் படறது எனக்கு ‘ என்று பெரிதாக சத்தம் போட்டார் சாம்பசிவம்.

‘நாங்க கிளம்பின பிறகுதான் அவங்களை கிளம்ப அனுமதிப்போம் ‘ என்று பெரியப்பா குடும்பத்திடமிருந்து எதிரொலி வந்தது. நாங்கள் யாரும் மாப்பிள்ளையையும், பெண்ணையும் அவருடன் அனுப்பவில்லை.

ஸ்ரீனிவாசன் கஷ்டப்பட்டு எல்லோரும் செல்வதற்கு ஒரு வண்டியை ஏற்பாடு செய்துகொண்டு வந்தார். நாங்களெல்லாம் கிளம்ப இரவு பத்து மணி ஆகிவிட்டது. ஊருக்குப் போனால் போதுமென்றே எங்களுக்குத் தோன்றியது.

அடுத்த நாள் காலை நாங்கள் வீட்டிற்கு வந்தபோது பாட்டி வீட்டிலிருந்தாள். உடம்பு சரியாக இருந்தது. பிள்ளையைக் கண்டபடித் திட்டிக் கொண்டிருந்தாள். சுய நினைவோடு பேச ஆரம்பித்து விட்டாள். பிள்ளை வீட்டில், பாட்டி நினைவில்லாமல் போயிருந்தபோது புடவையைக் கட்டிவிடக்கூட யாரும் வரவில்லையாம்.

‘பென்சன் வர்றதே ‘…எதாவது பெட்டியிலே சேர்த்து வெச்சுண்டுருக்கியா ? ‘ என்று கேட்டபடி பாட்டி கொண்டுவந்த பெட்டியைத் திறந்து பார்த்து அவமானப்படுத்தினார்களாம்.

‘நீங்களெல்லாம் கல்யாணத்திற்குப் போகலைன்னா, நான் அங்கே போயிருக்கவே மாட்டேன் ‘ என்றாள் பாட்டி. அவள் குரலில் துக்கம் இழைந்தோடியது.

நாங்கள் கல்யாணத்திற்கு சென்று பட்ட அவமானங்களை பாட்டியிடம் பிரஸ்தாபிக்கவில்லை.

எல்லா உறவு முறைகளிலும் அடிப்படையில் ஏதோ தவறு இருக்கிறது. இதெல்லாம் மீறி நாமெல்லாம் ஒருவருக்கு ஒருவர் உறவினர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம்.

இந்தச் சம்பவத்திற்குப்பிறகு அப்பா ஒருமுறை கூட சாம்பசிவத்தைப் பற்றிப் பேசுவது கிடையாது. வீட்டில் நாங்கள் மட்டும் பல மாதங்கள், இந்தச் சம்பவத்தை ஞாபகப்படுத்தி அப்பாவைக் கிண்டல் செய்து கொண்டிருப்போம். நாங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தாலும், எல்லாருடைய நிராசைகளின், மொத்த வடிவமாய் சாம்பசிவம் இருந்து கொண்டிருக்கிறார் என்று மட்டும் புரிந்தது.

பாபுவின் திருமணம் நடந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. ஏதாவது விசேஷமென்றால், பெரியப்பா பெரியம்மாவுடன் பாபுவின் மனைவி கலந்து கொள்ள தவறமாட்டாள். இன்னும் நாங்கள் எல்லோரும் உறவினர்கள். பாட்டிக்கு இப்போதெல்லாம் உடம்பு வருவதில்லை.

Series Navigation