உரையாடும் சித்திரங்கள் – பெருமாள் முருகனின் “நீர் மிதக்கும் கண்கள்” -(கவிதைத்தொகுப்பு அறிமுகம்)

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

பாவண்ணன்


பெருமாள் முருகனுடைய கவிதைகளில் வெளிப்படும் உரையாடல் காட்சிகள் ஓவியங்களுக்குரிய நுட்பத்தையும் ஆழத்தையும் கொண்டுள்ளன. இந்த உரையாடலைக் கட்டமைப்பதில்தான் பெருமாள்முருகனுடைய கவித்துவம் ஒளிர்கிறது. கவிதைகளில் அவர் கையாளும் உரையாடல்களின் வகைமைகள் படிக்கத் து¡ண்டும்வகையில் உள்ளன. குழந்தையுடன் உரையாடுதல், மழையுடன் உரையாடுதல், நிலவுடன் உரையாடுதல், வாசகர்களுடன் உரையாடுதல், முதல் முத்தம்போல இனிக்கும் சாலைக்காற்றுடன் உரையாடுதல், கடவுளுடன் உரையாடுதல் என வெவ்வேறு வடிவங்களில் உரையாடல்கள் வெளிப்படுகின்றன. உரையாடலின் தொடர்ச்சியைக் காட்சிப்படுத்தியவாறு நீளும் அச்சித்திரங்கள் ஒரு முக்கியமான கணத்தில் அப்படியே உறைந்து நின்று முடிவடைகின்றன. உறையும் அக்கணமே கவிதையின் தரிசனப்புள்ளி.

தொகுப்பின் தலைப்புக் கவிதையான “நீர் மிதக்கும் கண்கள்” துயர் கலந்த ஒரு சித்திரத்தை வாசகனுக்குத் தீட்டிக்காட்டுகிறது. இந்தத் துயரத்துக்கும் கண்களில் மிதக்கும் நீருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஓர் இணைப்பு கவிதை முழுக்கப் பின்னப்பட்டிருக்கிறது. அழுகை அல்ல, கண்களில் மிதக்கும் அந்த நீர். அழுகையின் தொடக்கம். ஒரு விதக் கலக்கம். ஏமாற்றத்தை மீண்டும்மீண்டும் சந்தித்ததால் விளைந்த துயரால் உருவான கலக்கம். இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லையே என்கிற ஆதங்கத்தாலும் பதற்றத்தாலும் உடைந்து பெருக்கெடுத்துவிட்ட கலக்கம். ஆனாலும் உள்ளூர இன்னும் வற்றிவிடாத ஒரு துளி நம்பிக்கை அந்தக் கலக்கத்தை முழுக்க உடைய அனுமதிக்கவில்லை. உடைந்து நிற்கும் கண்ணீர்த்துளிகள் விழியோரம் படர்ந்திருக்க, அந்தக் கலக்கம் தடுக்கப்பட்ட அணையாக மறுபுறம் அடங்கிவிடுகிறது. உடைந்த துயருக்கும் உடையாத நம்பிக்கைக்கும் சாட்சியாக கண்களில் மிதக்கிறது நீர் .

ஏன் இந்த நீர் என்று அசைபோடுவதில்தான் கவிதை கூடுதலான சிறப்பைப் பெறுகிறது. எதையாவது விட்டுச் செல்வதே வழக்கமான ஓர் ஆண் அல்லது பெண்ணைப்பற்றிய மனத்தாங்கலோடு தொடங்குகிறது இக்கவிதை. பலமுறை சுட்டிக்காட்டியும் மாற்றிக்கொள்ளப்படாத ஒரு பழக்கத்தைப்பற்றிய ஆதங்கமும் வருத்தமும் அக்குரலில் தன்னைமீறி ஒலிக்கிறது. சொற்கள், நிழல், மெளனம், கனவுகள் என ஒவ்வொரு சந்திப்பின்போதும் விட்டுச் சென்றதையெல்லாம் பாதுகாப்பாக வைத்திருந்து திருப்பித் தரும் ஆண் அல்லது பெண்ணின் முன் மீண்டும் விட்டுச் செல்லப்பட்டிருக்கின்றன நீர் மிதக்கும் கண்கள். எந்திரத்தனமாக ஒவ்வொரு முறையும் எடுத்ததைத் திருப்பித் தரும் மனம் முதன்முறையாக ஒரு மதீப்பீட்டுமுறைக்குள் இறங்குகிறது. நிகழ்ந்தவை அனைத்தையும் மீண்டும் பட்டியலிட்டு சம்பவங்களை இணைத்துப் பார்க்கிறது. ஏன் ஒவ்வொன்றும் விட்டுச் செல்லப்பட்டிருக்கின்றன? விட்டுச்சென்ற செயல் தற்செயலானதுதானா அல்லது வேண்டுமென்றே நடந்த செயலா? விட்டுச் செல்வதற்கு என்ன பொருள் இருக்கமுடியும்? உனக்காக விட்டுச் செல்கிறேன், ஏற்றுக்கொள் என்பதா? அது புரியாததால்தான் மீண்டும் மீண்டும் அந்தத் தற்செயல் நிகழ்ந்ததா? அந்தக் கோணத்தில் புரிந்துகொள்ளும் விவேகமோ ஆர்வமோ இல்லாமல் எடுத்த எடுப்பில் சலிப்பும் வருத்தமும் தோன்ற திருப்பித் தருவதையே கடமையாக கடந்த காலத்தில் எப்படி இயங்க முடிந்தது? புரிந்துகொள்ளப்படவில்லை அல்லது புறக்கணிக்கப்படுகிறோம் என்பது எவ்வளவு பெரிய துயரம்? இந்தத் துயரம்தான் கண்களில் மிதக்கும் கண்ணீருக்குக் காரணமா? வழக்கப்படி இயங்க முற்பட்டு, கண்டெடுத்த கண்களைத் திருப்பித் தருவது பேரிழப்பைக் கொடுக்கலாம் அல்லது முதன்முறையாக ஏற்றுக்கொள்வதன்மூலம் எதிர்பாராத மகிழ்ச்சியை அடையலாம். என்ன செய்யும் மனம்? இன்னும் எந்த முடிவையும் எடுக்காத மனம் அசைபோட்டபடி உள்ளது.

“அழைப்பு” என்னும் கவிதையில் தீட்டிக்காட்டப்படும் சித்திரமும் உரையாடலும் வித்தியாசமானவை. அழைக்கப்பட்டவன் ஒருபுறம். அவனுக்கு உருவமுள்ளது. உருவமே இல்லாத அழைப்பு இன்னொரு புறம். இங்கும்கூட புறக்கணிப்பின் வேதனைகளே அடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வேனிற்காலத்திலும் அவன் அந்த இடத்துக்கு அழைக்கப்படுகிறான். ஆவல் சுமந்த மனத்துடன் செல்லும் அவனுக்குக் காணக்கிடைப்பவை எல்லாம் இலைகள் உதிர்ந்த மரங்கள், காய்ந்த புற்கள், துருத்திய முன்பற்களென விளங்கும் மலைப்பாறைகள், வெம்மைக்காற்று மட்டுமே. இவையே தனக்குப் பொருத்தமானவை அல்லது இவற்றுக்கே தான் பொருத்தமானவன்போலும் என்ற எண்ணத்தில் மனம்சுருங்கித் திரும்பும் அவனுடன் முதன்முறையாக அழைப்பு உரையாடத் தொடங்குகிறது. அவனுடைய துக்கத்தை ஆற்றும் விதமாக மென்மையான குரலில் பேசுகிறது. அங்கு நிரம்பிய வறட்சி பசுமையாக மாற்றமடைவதற்குக் காரணமே அவன் அங்கே வந்துபோன மகிழ்ச்சிதான் என்று உரைக்கிறது. புறக்கணிக்கப்படுவதாக அவன் உணரும்எண்ணம் தேவையற்ற ஒன்றென உணரவைத்து அவன் மனக்கலக்கத்தை அகற்றுகிறது.

பெருமாள் முருகனுடைய கவிதைகளில் காணப்படும் குழந்தைகளுடனான உரையாடல் சித்திரங்கள் மிகமுக்கியமானவை. ஒரு தந்தையாக உரையாடி அவர் கண்டடையும் உண்மை நம் மனவிரிவுக்கு உதவக்கூடியவை. குழந்தைகள் மனம் ஒரே சமயத்தில் பூப்போல மென்மை மிகுந்ததாகவும் எளிமையாக நெருங்க முடிந்ததாகவும் கடல்போல ஆழம் காண இயலாததாகவும் உள்ள விசித்திரம் ஆச்சரிய்முட்டும் உண்மையாகும். “அப்போதிருந்து” என்னும் கவிதை ஒரு பொம்மையை முன்வைத்து தந்தைக்கும் மகனுக்கும் நிகழும் உரையாடலாக வளர்கிறது. பொம்மையைக் குறித்து தந்தையின் மனமும் குழந்தையின் மனமும் கொள்ளும் மாறுபட்ட சித்திரங்கள் அடுத்தடுத்து இணைகளாக அடுக்கப்பட்டு விவரிக்கப்படுகின்றன. தந்தையின் மனம் எதார்த்தத்தின் வெப்பத்தால் இறுகித் தட்டையாகி காணப்படுவதையும் குழந்தையின் மனம் தாய்மையும் கருணையும் கற்பனையும் நிரம்பி விரிவுற்றதாகக் காணப்படுவதையும் ஒவ்வொரு உரையாடலிலும் நம்மால் உணரமுடிகிறது. ஒரு பொம்மையை உயிரற்ற ஒரு திடப்பொருளாக தந்தைமனம் பார்ப்பதும் அதையே உயிருள்ள இன்னொரு குழந்தையாக குழந்தைமனம் பார்ப்பதும் கவிதையில் முக்கியமான ஒரு கணம். கண்டடையும் கணம். இந்தப் பார்வையின் வழியாகவே ஒரு தந்தைமனம் உலகில் காணும் ஒவ்வொன்றையும் பார்த்திருக்கும். இந்த உலகம் தன்னைப் புறக்கணிக்கிறது என எண்ணுவது ஒரு பார்வை. இந்த மண்ணில் ஆதரவுக்கோ அன்புக்கோ இடமில்லை எனக் கருதுவது இன்னொரு பார்வை. இந்த உலகம் தனக்கு வழங்கிய அனைத்தும் ஆறாத காயங்களையும் தோல்விகளையும் தவிர வேறெதுவும் இல்லை என்பது மற்றொரு பார்வை. இவை அனைத்தும் பொம்மையைக் காணும் பார்வையின் நீட்சி அல்லவா? குழந்தையின் மனக்கோணத்தில் பார்த்திருந்தால் உயிரோட்டம் மிகுந்த உலகைக் கண்டிருக்கக்கூடும் என்னும் உண்மையை முதன்முதலாகக் கண்டடைகிற சூழல் உருவாகிறது. இப்புள்ளி மிகப்பெரிய ஒரு திறப்பு.

குழந்தையும் தந்தையும் உரையாடும் காட்சி இடம்பெறும் இன்னொரு கவிதை “சிருஷ்டி”. பள்ளியைப்பற்றிய அதீத கவனமுள்ள ஒரு தந்தையும் பள்ளியே இல்லாத ஒரு நகரத்தை உருவாக்கிக்கொள்ளும் குழந்தையும் இக்கவிதையில் இடம்பெறுகிறார்கள். கட்டிடம், சாலை, விளையாட்டுத்திடல் என எல்லாற்றுக்கும் இடமொதுக்கி நகரத்தை உருவாக்கும் சிறுவன் தன் கற்பனை நகரத்தை பள்ளி இல்லாத நகரமாக அறிவிக்கும் குரலில் தொனிக்கும் உற்சாகமும் மகிழ்ச்சியும் முக்கியமானவை. ஒரு குழந்தைக்கு உற்சாகமும் ஆனந்தமும் தரக்கூடியவை என்னென்ன என்று துல்லியமாகக் கணக்கிட்டு பெரியவர்கள் வைத்திருக்கும் பட்டியலுக்கும் குழந்தைகள் வைத்திருக்கும் பட்டியலுக்கும் எந்தத் தொடர் புமில்லை என்பது மிகப்பெரிய முரண். இந்த முரணைக் கண்டடையும் புள்ளியில் கவிதை திகைத்து நின்றுவிடுகிறது. இதுவும் ஒருவிதக் கண்டடைதல்தான். கல்வி என்பதை ஏட்டுக்கல்வி என்பதும் கற்கத்தக்கவை பள்ளிக்கூடங்களுக்குள் சொல்லித்தரப்படுபவை மட்டுமே என்பதும் மரபான ஒரு மனத்தின் நம்பிக்கை. இந்த உலகமே ஒரு கல்விக்கூடம் என்பதும் வானம், நிலம், நீர், மலை, புல், பூங்கா, காடு, பாதைகள் மரங்கள், காற்று அனைத்துமே நமக்குக் கற்பிப்பவை என்பதும் இன்னொரு விதமான மாற்றுப் பார்வை. அந்த நம்பிக்கையை ஒவ்வொரு கணந்தோறும் உணர்த்தியபடியே நகர்கிறது வாழ்க்கை. உள்ளூர அதை ஏற்றுக்கொள்ளும் நம்மால் அதன்படி உறுதியாக நிற்கமுடிவதில்லை என்பதுதான் விசத்திர முரண்.

“சாமந்தியும் செவ்வந்தியும்” கவிதையில் தீட்டிக்காட்டப்படும் சித்திரம் கோழிக்குஞ்சுவுடன் தொடர்புடையதைப்போன்ற தோற்றத்தைத்தான் முதலில் தருகிறது. தன்னைக் கண்டெடுத்து பெயரிட்டு ஆசையுடன் வளர்ப்பவனுடைய தட்டிலேயே சேர்ந்து உண்ணும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது. அவன் மடியில் உறங்குகிறது. அவன் தோளில் ஏறிக்கொள்கிறது. அவன் செலுத்தும் திசையில் சென்று திரும்பி வருகிறது. அவனுடைய விளையாட்டுத் துணையாக இருக்கிறது. அவனுடைய ஆனந்தத்தின் மையப்புள்ளியாகவும் இருக்கிறது. அவன் நீட்டும் சுட்டுவிரலில் நிற்கப் பழகுகிறது. நிற்கமுடியாமல் விழும்போது அவனுடைய கைகளிடையே அடைக்கலமாகிறது. இறகை விரிக்கத் தெரிந்த கணத்தில் தற்செயலாக அது தன்னுடைய திறமையை, தன்னுடைய பழக்கத்தை, தன்னுடைய எல்லையை அறிந்துகொள்கிறது. தன்னுடைய அறிதல்முறை வேறு என்பதை அது உணர்ந்துகொள்ளும்போது அவனுக்கும் அக்குஞ்சுவுக்கும் இடையே ஒரு விலகல் உருவாகிவிடுகிறது. தன் வழியில் மனம் தளராத மனிதன் இன்னொரு குஞ்சுவை வளர்க்கத் தொடங்கி அதைப் பழக்கும் தன் வழிமுறைகளில் மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறான். அவனுடைய அறிதல்முறை அதுவாக இருக்கிறது. கோழிக்குஞ்சு / வளர்ப்பவன் என்னும் தளத்தை தந்தை / குழந்தை உறவுக்குரிய தளமாக மாற்றிப் பார்க்கும்போது கவிதை இன்னும் கூடுதலான வெளிச்சத்தோடு காணப்படுவதை உணரமுடியும். குழந்தையின் அறிதல்முறை வேறாகவும் தந்தையின் அறிதல்முறை வேறாகவும் இருக்கும் சூழலுக்கு என்ன காரணம்? நேற்றைய குழந்தைதானே இன்றைய தந்தை. தந்தை என்கிற நிலைக்கு மாறியதுமே ஏன் அவனுடைய அணுகுமுறையும் அறிதல்முறையும் மாறுகின்றன? இவை ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்.
பெருஞ்சுமை, நாற்காலி, உடைபடும் கட்டடம், கல் மலிந்த ஊர் என உயிர்ப்புள்ள பல சித்திரங்கள் தொகுப்பில் உள்ளன. வாசிக்கவும் அசைபோடவும் தகுதியான சித்திரங்கள்.

(நீர் மிதக்கும் கண்கள் – கவிதைகள், பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை. நாகர்கோயில். விலை. ரூ50)


Series Navigation